Thursday 29 August 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                                           தொடர்- 46

1996ம்ஆண்டில் தினகரன் பத்தரிகையில் ஒரு விளம்பரம்.
‘இளம் எழுத்தாளர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம். 1000 ரூபாய் இருந்தால் போதும் நீங்களும் புத்தகம் போடலாம். ‘

விளம்பரத்தை தந்தவர் அக்காலத்தில் ஜும்ஆ பத்தரிகையின் ஆசிரியர் பலப்பிட்டி அரூஸ் என்பவர். அதனைப்படித்து விட்டு ஆயிரங்களையும் ஆக்கங்களையும் அனுப்பியவர்களில் நானுமொருவன்.அச்சில் நமது படைப்பு தொகுப்பாக வெளிவருவதென்றால் சும்மாவா? திருமணம் முடித்து பல வருடங்கள் கடந்தும் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகள் போல் ஓர் எழுத்தாளின் ஏக்கம் பெரும்பாலும் ‘தொகுதி போடல்’ தானே !

நான் கொழும்பில் இருந்ததால் என்னை சந்திக்க விரும்புவதாக வேறு  அரூஸ் அஞ்சலிட்டிருந்தார். ஒரு சனிக்கிழமை என்று நினைக்கின்றேன். பலப்பிட்டிக்கு பஸ் ஏறிப்போய்விட்டேன்.

தென்னிலங்கைக்கான முதல் விஜயம் அது. சென்ற பின்புதான் அவரிடம் பலர் பணத்தை கட்டி ஏமாந்து நின்றது தெரியவந்தது.எங்கள் கவிதைகளை டைப் செய்து புரூப் பார்க்க மட்டும் தந்தார்.புருப் பார்க்கும் போதே புத்தகம் கையிலிருப்பதான மகிழச்சியில் திளைத்திருக்கின்றோமம் என்பது வேறு விடயம்.

ஜாமிஆ நளீமிய்யாவின் மாணவர்கள் சிலர் கல்வி தொடர்பான நூல்களை தொகுப்பாக கொண்டு வர 6000.00 ரூபாய் வரை கொடுத்திருந்தனர்.இலக்கிய நண்பர்கள் பலரும் பணத்தையும் ஆக்கத்தினையும் கொடுத்திருந்தனர்.நண்பர் மைக்கல் கொலின் திருகோணமலை தற்போது மகுடம் சஞ்சிகை ஆசிரியர்.பஹீமா ஜஹான் போன்றோரும் இதில் அடக்கம்.

பணத்தையும் ஆக்கத்தையும் அனுப்பி விட்டு எங்களுடைய புத்தகம் அச்சில் வரும் செய்தியை நண்பர்களிடம் பீற்றித்திரிந்ததில் வெறும் கேலி மட்டும்தான் ஈற்றில் மிஞ்சியது.

தான் நடாத்தும் ஜும்ஆ பத்திரிகைக்கு ஆயுள் சந்தா திரட்டியுள்ளார். என்பதை பிற்காலத்தில் அறிந்து அதிர்ச்சியடைந்தோம்.ஆயிரம் ரூபாய் இழப்பு என்பது பெரிதல்ல .எம்மை நம்ப வைத்து ஏமாற்றி மோசடி செய்தது மகா தவறு .அதற்காக அரூஸ் இன்று வரை யாரிடமும் வருத்தமோ மன்னிப்போ கேட்டதாக இல்லை.

ஏமாற்றி பிழைப்பவர்களிடமிருந்து அப்படியொரு நல்ல வார்த்தைகளை நாம் எதிர்ப்பார்ப்பதும் கூடாதுதானே. இந்த மோசடி குறித்த எனது ஆதங்கத்தை 1997 ஜுன் 18ம்திகதி சரி நிகரில் இப்படி எழுதித்தீர்;த்தேன் “ புத்தகம் போடலியோ புத்தகம் !”

இப்போதும் சிலர் பதிப்பகம் நடாத்துகின்றோம்,புத்தகம் போடுகிறோம் என்று அப்பாவி எழுத்தாளர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் கறக்கும் இழி தொழிலை கச்சிதமாக செய்து வருகின்றனர்.

‘என்ன சுகமா மச்சான்?’ என்று கேட்பதை விடுத்து நண்பர்களும் தெரிந்தவர்களும் ‘கவிதப் புத்தகம் வந்திட்டா?’ என்று நச்சரிக்கத் தொடங்கிவிட்டனர்.

புத்தகம் போட்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எம்மை ஆட்கொண்டு விட்டது.கையில் பணம் இல்லை.என்ன செய்ய யோசித்துப்பார்த்தேன்.1000 புத்தகம் போட 24000. ரூபாய் கேட்டார்கள். அப்போது நான் கள் எலியாவில் பணி புரிந்து கொண்டிருந்தேன்.

திஹாரியில் இருக்கும் அங்கவீனர் நிலையம் நடாத்தும் அச்சகத்தில் புத்தக வேலைகளை பாரம் கொடுப்பதென்று தீர்மானித்தாயிற்று.கள் எலிய சியாத் மாஸ்ரரின் நண்பர் ஜெம்சீத் ஆசிரியர்தான் திஹாரியில் அச்சகத்திற்குப்பொறுப்பாக இருந்தார்.

சியாத் மாஸ்ரர் மூலம் அச்சகத்தில் புத்தகத்தை கொடுத்து அட்வான்சும் கொடுத்தேன். மிகுதிப்பணம் வேண்டுமே. அக்காலத்தில் சம்பளம் வெறும் 6000.ரூபாய் இக்காலத்தில் அது 60.000.00 ஆயிரத்திற்கு சமன்.

உம்மா எனது பதற்றத்தை பார்த்து விட்டு கழுத்தில் கிடந்த ஒரு மாலையை கழற்றி விற்றுவிட்டு 10000.00 பத்தாயிரம் தந்தார்கள்.புத்தகம் போட்டாயிற்று. இது முதல் பிரசவம். அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அது திருப்தியாக விற்றுத்தீர்ந்தது.

ஊஞ்சல் இன்னும் ஆடும்..

Thursday 15 August 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்.

                                                 தொடர்- 45

எனது எழுத்துலகில் நிறைய சுவாரஸ்யங்கள் உண்டு.
91.06.15ம்திகதி எழுச்சிக்குரல் பத்திரிகையில் ‘மச்சானே அழைத்திடுங்க’ என்ற கவிதை வெளிவந்தபோது ஒரு சம்பவம்.பத்திரிகையை தூக்கிக்கொண்டு ஒரு ஆசிரியர் ஓடிவந்தார்.நான் சைக்கிளை உழத்திக்கொண்டு ஓட்டமாவடி மையவாடிக்கு பக்கத்து தெருவில் போய்க்கொண்டிருந்தேன்.

அவர் மூச்சுவாங்க என்னெதிரே நின்றார்.நான் சைக்கிளை நிற்பாட்டி என்னவென்றேன்.விடுமுறையில் வந்து நின்ற என்னிடம் சுகம் விசாரிப்பார் என்று நினைத்திருந்தேன்.எழுச்சிக்குரலை உயர்த்திப்பிடித்தபடி
‘இந்தக்கவிதய நீங்களா எழுதினது ?’
‘ஓம்’ என்றேன்.
‘என்னத்துக்கு இந்தக்கவிதயெல்லாம். இதெல்லாம் விட்டுப்போட்டு வேலையப்பாருங்க என்றார்.ஒர் ஆசிரியராக இருந்தும் எழுத்தில் தடம் பதிக்க ஆரம்பித்துள்ள என்னை அவர் ஊக்கப்படுத்தவில்லை.நெஞ்செல்லாம் கருகியது.

 முஸ்லிம்களுக்கெதிரான பிரபாகரனின் பாசிசத்தை பகிரங்கமாகவே எதிர்;த்து எழுதியபோது உண்மையில் என் மீது அக்கரையுடன் சிலர் புத்தி சொன்னதுண்டு.இப்படி பகிரங்கமாக சொந்தப்பெயரில் எழுதாமல் புனைப்பெயரிலாவது எழுதுங்களேன் என்று. அவர்களின் அன்பையும், கரிசனையையும் இன்றும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கின்றேன்.அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

அந்த ஆசிரியர் படித்து விட்டு இதயெல்லாம் எழுதாதீங்க என்று புத்தி சொன்ன அந்த நெடுங் கவிதையிலிருந்து சில வரிகள்.

……….. சின்னனவள் சாமத்தில்
உங்களை கேட்டழுதாள்.
‘இத்தா’வுக்குள் ‘இரி’யென்று ஏன் மறந்து போனீங்க?
இருட்டான என் வாழ்வில்
இனி வருமா விடிவெள்ளி?

பிள்ளைகள் அடம் பிடித்தால்
பிடிச்சோறு ஊட்டிட
தொல்லைகள் அதிகரித்தால் / தோளில் கிடத்தி உலாத்திட
ஏந்திழை நான் காத்திருந்தேன்.
கனவுகளை கபனிட்டு
என் நினைவை புதைத்திட
புலி அடித்துக்கொன்றதோ ?

பள்ளிக்குள் துப்பாக்கி / படபடத்து தீ கக்க
நெஞ்செல்லாம் அனல் அடிச்சி  /   எதிர்காலம் சாம்பலாச்சி
பட்ட கடன் தீர்க்க நான்  /  அப்பம் சுட்டு வாழுறன்
பார்ப்பதற்கு யாருண்டு?
பாரினிலே அழுகிறேன்.
கண்மனிகள் இருவரும் பட்டினியால் வாடுவதை
என் விழியால் பார்த்திட்டு /  எப்படி நான் துயில் கொள்வேன்.?
…………………………………………

இரண்டு வருடத்திற்கு முன் அதே ஆசிரியர் என் முன் நிற்கிறார்.எனக்கு ஒரு கவிதை எழுதித்தாங்க நான் ஒரு அமைச்சர வாழ்த்த வேண்டும்.
எனக்கு அழுவதா சிரிப்பதா? தெரியவில்லை.எனக்கு அப்படிக்கவிதை எழுதிப்பழக்கமில்லை என்கிறேன்.நிஜமாகத்தான் சொன்னேன்.

இது வரை யாரையும் வாழ்த்தியும் தூற்றியும் எழுதவே இல்லை.நிச்சயம் அவர் பழி தீர்த்திருக்கின்றேன் என்று நினைத்திருப்பார்.இயலாத ஒன்றை எழுதப்போய் வம்பில் மாட்டுவதை விட இயலாது என்று ஒப்புக்கொள்வது வாத்சல்யம்.

அரசியல்வாதிகளுக்கு சாமரம் வீசுவது  இலேசுப்பட்ட  காரியமா? அதற்கென்று பச்சோந்திக் கவிஞர்கள் நிறையப்பேர் இருக்கின்றார்கள்.

எனது ‘வேட்டைக்குப்பின்…’ கவிதைத்தொகுதிக்குப்பின் கவிதை எழுதுவதை முற்றாக நிறுத்திவிட்டேன். நல்ல கவிதைகளை படிப்பதுடன் நின்றுவிடுவதுண்டு. பிற்காலங்களில் சிறுகதையில் மட்டுமே கவனம் குவித்து வந்தேன்.அதுதான் எனக்கு இலகுவாக வசியப்படுகிறது. (கவிதையை இலகுவான கலை என்பவர்கள் மன்னிக்க வேண்டும் )

வேட்டைக்குப்பின்…என்றவுடன் அந்த தொகுதி தொடர்பான சில அனுபவங்கள் நினைவில் வந்து தொலைக்கின்றன.என்னை புத்தகம் போடும் அளவிற்கு வளர்த்து விட்டது ஒருவரின் துரோகமே என்றால் ஆச்சரியமாக இருக்கும் இல்லையா?



ஊஞ்சல் இன்னும் ஆடும்..

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...