Tuesday 13 December 2011

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

எங்கள் தேசம் பத்திரிகையில் தொடராக வெளிவரும் நினைவுக்குறிப்புகள் 
 
தொடர்  3
 
ளமைக்கால ட்ரக்டர் பயணம் என்றவுடன் நினைவில் சட்டென எழுவது எங்களது கத்னா ஊர்வலம்.

உம்மாவும் வாப்பாவும் சொந்த பந்தம் அயலவர்கள் எல்லோருக்கும் அழைப்பு விடுத்தனர். சூறாவளி அடிப்பதற்கு முதல் மாதம்.மூத்தாப்பா தன் பங்குக்கு ஒரு நாம்பனை வீட்டு முற்றத்தில் கட்டியிருந்தார்.அரிசியும் துணைக்கறிகளும் மாமாமார்கள் கொண்டு வந்திருந்தனர்.வெற்றிலை பாக்கு வகையறாக்களை வாப்பாதான் வாங்கி வந்தார். திகதி குறிக்கப்பட்ட வியாழன் மாலை சுன்னத்து செய்வதென நிச்சயிக்கப்பட்ட அன்றைய காலைப்பொழுது எனக்கும் தம்பிக்கும் கரிநாள்.

அதிகாலையில் கிணற்றிடியில் கொண்டு போய் உம்மாவும் சாச்சிமாரும் தண்ணீரை அள்ளி அள்ளி இரண்டு பேருக்கும் ஊற்றினர். பின் புதிய ஆடைகள் அணிவித்தனர். வெள்ளை சாரனும்,குங்குமக்கலரில் இரண்டு பேருக்கும் சேர்ட், தொப்பி.

 காலையில் ஓட்டமாவடி பெரிய பள்ளிக்கு அழைத்துச்சென்று வாப்பா சில்லறைகளை தந்து ஊண்டியலில் போடச்சொன்னார்.மௌலவி வந்து பாதிஹா ஓதிய பின் ஊர்வலம் ஆரம்பமானது. பைத் படிப்பதற்கென லெப்பையும் மோதினாரும் ஏறிக்கொண்டனர்.
 
அலங்கரிக்ப்பட்ட மெசின் பெட்டிற்குள் நான்கைந்து கதிரைகள் மாப்பிள்ளைமார் நாங்களும் குடை பிடிக்க ஒருவரும் .கழுத்து நிறைய சருகுத்தாள் மாலை.ஊர்வலம் ஊர்முழுக்க சுற்றி ஈற்றில் பகல் நேரம் வீட்டில் முடிய வேண்டும்.

ஊரார்கள் விருந்துக்கு வந்திருந்தனர்.வட்டாவில் வெள்ளை விரித்து வெற்றிலை வகையறாக்கள் இருந்தன.பந்தலின் கீழ் குருத்து மண் கொட்டப்பட்டிருந்தது. பொரியலும் விருந்தும் மணக்க மணக்க (சுன்னத்து) மாப்பிள்ளைமார்களுக்கு விருந்துப்படையல் நடைபெறும். உணவு தொண்டைக்குள் அடைபட்டு நின்ற முதற்தருணம் அதுதான்.

மாலை ஒய்த்தா மாமா  வந்து விட்டார்.என்ற செய்தி காற்றிலேறி எம் காதுகளுக்குள் தீயாய் விழுந்தது.எங்களை பகலுணவுக்குப்பின் வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைத்து காவலிருந்தனர். சில பிள்ளைகள் ஓடி ஒளித்து விடுவதால் இந்த முன் ஏற்பாடு.

நடு வாராந்தாவில் பெரிய உரல் தலைகீழாக குத்தப்பட்டுக்கிடந்தது. அதை வெள்ளைத்துணியால் முடி வைத்திருந்தனர். பாவாமார்கள் உரலைச்சுற்றி ரபானுடன் காத்திருந்தனர். அவர்களின் பணி சுன்னத் மாப்பிள்ளையை உரலில் ஏற்றும் போது தொடங்கும். ஹழராவை உச்சஸ்தாயில் நிறுத்தி வைத்து முடிக்கும் போது உஸ்தா மாமா கைகளை கழுவ வெளியே போவார். வாப்பா ஸ்பீக்கர் எடுக்கவில்லை.சில போடிமாரின் பிள்ளைகளுக்கு சுன்னத் செய்வதென்றால் ஏழு நாளும் ஸ்பீக்கர் கூவும்.

பலியிடும் தருணத்திற்காக காத்திருக்கும் ஆடுகள் போல் தம்பியும் நானும்.வீட்டு அறைக்குள் ஆளையால் அச்சத்தில் பார்த்தபடி இருந்தோம்.சாச்சா வந்து என்னை முதலில் கிணற்றிடிக்கு கொண்டு போய் தண்ணீரை ஊற்றி குளிக்கச்சொன்னார்.

தலையை நனைக்காமல் கழுவியபின் வெள்ளைத்துணி ஒன்றை தந்து கட்டச்சொன்னார். வேட்டிபோல் சுருட்டிக்கொண்டேன்.தம்பியையும் அப்படியே செய்தார்கள். உரலுக்கு நடாத்திச்செல்லுகையில் அழுகை வெடித்து விட்டது. மாமா அதட்டினார்.

 உரலில் இருத்தி கால்களிரண்டையும் ஒருவர் பிடிக்க கைகளை இன்னொருவர் பிடிக்க கழுத்தையும் பின்னிருந்து ஒருவர் திருப்ப ஹழரா ஆரம்பமானது. சுன்னத் செய்யபவர்களின் வேதனைக்குரல் மற்றவர்களுக்கு கேட்காமல் இருக்க ஹழராவின் தொனி உயர வேண்டும்.

 ஒய்த்தா மாமா கைகளை கழுவிக்கொண்டு ‘ஆள் என்ன கஸ்டம்’  என்றார். அலாக்காக தூக்கிக்கொண்டு போய் உள்வீட்டிற்குள் படுக்க வைத்து மச்சான் விசிரியால் வீசிக்கொண்டிருந்தார்.உம்மாவும் வாப்பாவும் கண் கலங்கியபடி வந்து பார்த்துவிட்டுச்சென்றனர்.

மூத்தம்மா மட்டும் தலைமாட்டில் குந்திக்கொண்டு தலையை தடவினார். சற்று நாழிகைக்குப்பின் தம்பியையும் அலாக்காக தூக்கி வந்து பக்கத்தில் படுக்க வைத்தார்கள்.ஹழரா நின்று வீடு களை கட்டியது.

கிழக்கின் சுன்னத் வீடுகள் அக்காலத்தில் களை கட்டியிருக்கும்.சிலர் ‘விருத்த சேதன அழைப்பு’ கொடுப்பதுண்டு. உறவினர் தெரிந்தவர்களின் வீடுகளுக்குச்சென்று அழைப்பு விடுப்பர்.அழைக்கப்பட்டவர் விருந்துக்கு வரும்போது அன்பளிப்புக்களும் கொண்டு வருவர். 
 
பெரும்பாலும் பணம்தான் கொடுப்பார்கள்.என்வலப்பில் வைத்து சுன்னத்து மாப்பிள்ளையின் உம்மாவின் கையில் பொத்தி விட்டு விடைபெறுவர்.கூடிய தொகை வைத்தவர்கள் என்வலப்பில் உள்ளே தங்கள் பெயரை எழுதியிருப்பர். இது மொய்யை நிகர்த்த வழமை. தற்போது இதில் எந்தப்பழக்கமும் மரபும் இல்லாமல் அருகிவிட்டது.

 7வது நாள் ‘அசரு’ கழற்று மட்டும் திருமண வீடுகள்  கலகலப்பாக இருக்கும்.வாடகைக்கு லைட் மெசின் எரியும். கலர் கலரான பல்புகள்.பந்தலில் வெற்றிலை வட்டா சகிதம் 101 விளையாட ஆட்கள் குழுமியிருக்கும்.
 
சதா தேனீரும் பலகாரமும்.உணவும் பரிமாறப்பட்டுக்கொண்டிருக்கும். காயத்தை பிள்ளைகள் காலால் உதைத்து விடுவார்கள் என்பதற்காக சுன்னத்து வைக்கப்பட்டவர்களின் படுக்கையருகே முறைவைத்து விடிய விடிய ஆட்கள் விழித்திருப்பர்.முகட்டில் உயர்த்திக்கட்டிய வெள்ளைத்துணி கூட காயத்தில் பட்டுவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கை.

எங்கள் தேசம் இதழ் : 210

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...