Monday 28 February 2011

காற்றின் விலங்கு

எனக்குள் கவிழ்கிறது 
இருள்.
பொண்ணி வண்டு முட்டையுள் 
மூர்ச்சித்துக்கிடப்பதான வலி.

மரவட்டையைப்போல் 
எனது தேசம்
மிகச்சுருங்கிற்று.

காலாற நடக்கையில் 
ஒரு முரட்டுக்குரல்.
என் கனவைக்குதறிப்போடும்.

அதிஷ்டலாபச்சீட்டில் 
மறைந்திருக்கும் 
வெற்றி எண்களைப்போல்
வாழ்க்கை 
எப்போதாகிலும் 
ஒரு ஓரத்தில் துளிர்த்து
பின் மறைகிறது.

சொல்வதற்கும்>எழுதுவதற்கும் 
இங்கு ஏதுமற்ற அந்தரம்.

மரணத்தின் இடைவிடாத 
உக்கிரப்பார்வை
''விடுதலை""களின் பெயர் கூவி 
தினம் எமை அழைக்கிறது.

சுவாசிப்பதற்கான காற்று காட்டுமே 
என் தேசத்தில் 
சுதந்திரமாக தெரிகிறது எனக்கு.

அதுவும் நீ வரமாட்டாய் என
நிச்சயித்து நான் தூங்கும் 
பகலில் மட்டும்.


25-09-2001 - கீறல் - நிந்தவூர்.

Wednesday 23 February 2011

எமிலி டிக்கின்சன்

 அமெரிக்க இலக்கியத்தின் மிகச்சிறந்த கவிஞர்களுள் ஒருவராகப் பரவலாகக் கருதப்படுபவர் எமிலி டிக்கின்சன்.
அவரது தனித்தன்மை வாய்ந்த விலை மதிப்பற்ற கவிதைகள் ஆழமான உணர்வுகளின் அசலான அறிவின் வடிகட்டிய தூய வடிவமாய் அமைந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் அமெரிக்க இலக்கியத்தின் மையப்போக்கிற்கு வெளியே நிற்பவை.
நாம் நிறைய மாயைகளை நம்மைச்சுற்றி உருவாக்கி வைத்துள்ளோம்.
நம்மை சுற்றி ஏற்படுத்தியுள்ள ஒளி வட்டம் பிறர் நெருங்கிப்பார்த்து விடாதிருக்க நாம் போட்டுக்கொண்ட ஒரு மாயை.
 மாயத்தோற்றங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வாழ்வை எளிமையான வார்த்தைகளால் எமிலி டிக்கின்சன் சாடுகிறார். அது நமது முகத்தில் அறைவது போல் இருக்கிறது.

......ஒரு புல் வெளியை உருவாக்கத் தேவை
ஒரு பூச்செடியும் ஒரு வண்டும்
 ஒரு பூச்செடி ஒரு வண்டு
கூடவே ஒரு மாயத்தோற்றமும் .
வண்டுகள் ஒரு சிலவேயெனில்
மாயத்தோற்றம் மட்டுமே போதுமானது...

                         'கண்ணாடியில் மிதக்கும் பிம்பம்.'
எமிலி டிக்கின்சன் கவிதைகள் , பனிக்குடம் பதிப்பகம்.

Wednesday 9 February 2011

உமாவரதராஜனின் பார்வையில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'

"......மெலுக்குத்தளுக்கான நடுத்தர வாழ்க்கைப் பொம்மை மானிடர்களையோ, உலக இன்பங்களை ஏக போகமாக அனுபவிக்கும் மாளிகை மனிதர்களையோ ிஜயகாந்தன் கதைகளிலே காண முடியாது. அப்படி யாராவது ஒன்றிருவர் தோன்றினாலும் , அவர்கள் உப பாத்திரங்களாகத்தான் இருப்பார்கள்.
கோடிக்கணக்கான மக்களின் வாழ்வைச்சித்தரித்தால் அது மனித வர்க்கத்தின் சித்திரமாகுமா..? " இந்தக்கருத்தை எழுத்தாளர் தி.ஜ.ர.அவர்கள் இரசிகர் ஸ்தானத்தில் இருந்து, ஜெயகாந்தனின் 'ஒரு பிடிச்சோறி' ன் முகவுரையில் தெரிவித்திருந்தார்.
தி.ஜ.ர.வுக்கு இப்போது ஜெயகாந்தனின் இலக்கியம் புரிந்திருக்கும் .பொறுக்கிய சில மனிதர்களை ,ஆசிரியர் ''சில நேரங்களில் சில மனிதர்களி" ல் உலாவ விட்டிருக்கிறார். ஆனால் இந்த "உயர்ந்த" படைப்பை பராட்டாமல் இருக்க முடியாது. அருமையான படைப்பு !

இந்த நாவல் மூலம் கங்காவுக்கு நடந்த அந்த "இளமை விபத்தை" அறியுமாறு அமைத்த விதமும் (அக்கினிப்பிரவேசம் சிறுகதை ), ஜெயகாந்தனே ஆர்.கே.வி.ஆக இருந்து கதையில் "சில நேரங்களில்'' தலை நீட்டுவதும் தமிழ் வாசகர்களாகிய எங்களுக்கு புதிது ! இனிமை ! நாவல் போகும் விதம்தான் பாராட்டும் வகையில் இருக்கிறது.

இதில் வரும் பிரபாகர் ,கங்கா, கனகம், பத்மா,மஞ்சு , வெங்கு மாமா போன்ற முக்கிய பாத்திங்களை சுட்டிக்காட்டும் வித்திலும் ,ஒருவரை மட்டும் குறிக்க வேண்டும் என்னிறில்லாமலும் அமைந்துள்ள கவர்ச்சியான தலைப்பு "சில நேரங்களில் சில மனிதர்கள் '' ஆக இருக்கலாம் என நம்புகிறேன்.
வெங்கு மாமா பாத்திரம் சற்று ஓவர் ! வயதுக்கேற்ற  இயல்புகள் அவரிடமில்லை என்பது என் எண்ணம். பத்தோ, அல்லது பதினைந்து வயதையோ குறைத்திருக்கலாம். இருந்தும் " லேடிவித் எ டாக் " (Lady with a dog) " "லேடி வித் எ டைகர்" பதங்களை  ஆசிரியர் உபயோகிக்கும் போது வெங்குமாமாவின் தன்மையை நாம் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. மஞ்சு என்னும் கல்லூரிப்பெண்ணின் வாயைச்சற்றுக்குறைத்திருக்கலாம். அவள் வரும் இடம் படு Bore.
கனகம் என்ற தாய்ப் பாத்திரந்தான் என்னைக்கவர்ந்த பாத்திரம் . இருதலைக்கொள்ளி எறும்பாக, உருக்கமாகப் படைத்திருப்பது நெஞ்சைத்தொடுகிறது .
எந்தத்தாயும், தன் மகள் கெட்டு வந்து நிற்பதை சகிக்கமாட்டாள்.கனகமும் சகிப்புத்தன்மை இல்லாமல் நடந்து கொண்டதால் , வாழ் நாள் பூரா அவஸ்தைப்படுவதாகக் கூறப்படுகிறது. நல்ல  பாத்திரம், கனகமும், கங்காவும் சம்பந்தப்பட்ட இடங்களில் கங்காவின் தன்மை கொடூரமானது. ஓரிண்டு பாத்திரங்களைத் தவிர மற்றப்பாத்திரங்கள் அவ்வளவு தூரம் கவரவில்லை.
ஜெயகாந்தனின் சிறு கதைகளைப்போல அவரது நாவல்கள் சிறப்புற அமைவதில்லை எனும் என் கருத்தை மாற்றிக்கொண்டு விட்டேன். காரணம் , "சில நேரங்களில் சில மனிதர்கள்"தான்...

எம் வரதராஜன்
இலங்கை
' தீபம்'       இதழ்   -- 1973.

Monday 7 February 2011

 பொன் முட்டையிடும் தங்க வாத்துகள்.

வெள்ளத்தில் கப்பலோட்டும் கதையை மட்டக்களப்பில் ஓடும் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள்.
வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்புக்கு இருநூறு ரூபா.ஏனென்று கேட்டால் வெள்ளம் பாய்கிறது என்று கத்துகிறான் நடத்துனர்.
சில்லரை கேட்டால் 'இப்ப என்ன எடுதுட்டு ஓடவா  போறன்'எனச்சசீறுகின்றான். கடைசியில் இறக்கிவிட்டு எடுத்துக்கொண்டு ஓடுவது பலரின் சில்லறையை என்றால் நம்பவா கஸ்டம்.
சில நடத்துனர்கள் வாயால் கேட்டு மீதிப்பணத்தை தருவது அவர்களின் பிறப்பிலே உள்ள நிறை.

இப்படித்தான் வாழைச்சேனை ஓட்டமாவடிப்பகுதியில் இருந்து புறப்படும் தனியார் பஸ்கள்.' பாட்டா விலை 'போல் டிக்கட்டில் சதக்கணக்கு இருக்கும். எடுப்பதோ நான்கு நூறு நோட்டுக்கள்.
கடைசியில் நான் அறிந்தவரை பஸ் முதழாளியை விட கண்டருக்கு தனி வேனும் கடையும் சொத்துக்களும் ஊர் முழுக்க மலிந்து அவரும் 'ஒரு சின்ன பொஸ்'

மத்திய கிழக்கிலிருந்து வரும் பணிப்பெண்களின் பெட்டிகளுக்கு தனிக்கவனமும் பாதுகாப்பும். அவர்களிடம் பெட்டிக்கு அறவிடும் கணக்கு 'பொஸ்சி'ன் கைகளுக்கு வராத சிறு மீன்.நான்காயிரம். இரண்டாயிரம். ரேட்டுகள் பல......
பெட்டி கொண்டு வரும் மைனாக்கள் 'கண்டக்டர் ரைவரை' தனிக் கவனிப்பு !

தனியார் பஸ்சில் கண்டக்டராய் கிடப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்.
உளுத்துப்போன கடைகளில் இரவு பகல் உணவு.அவர்களுக்கோ தனிக்கவனிப்பு. கொக்,பிறிஸ்டல் வெற்றிலை,வாய்க்கு மெல்ல சுவிங்கயம்,அப்பப்பா என்ன உபசரனை.சில கடைகளிலோ தண்ணியும் கொடுப்பதாக அரசல் புரசலாக காதில் விழுந்தது.
ஏஜென்னசி கொண்டு வரும் பெண்மான்களுக்காகவே பஸ் முறுக்கேறும்.பின்னர் என்ன  பாட்டும் கூத்தும் சப்புக்கொட்டும்

அறபிக்கிளிகளின் கிணுகிணு ஒலியும் ,ஒரு ரியாலுக்கு வாங்கிப்பீச்சியடித்த "சென்டும்" ஆ ஓட்டமாவடி பஸ்சுக்குள் அமர்க்களம் பார்க்கனுமே...காட்டுக்குள் விறகெது ,திறாய் சுண்டி காலத்தை கடத்திய  கிளிகளின் உதடுகளில் என்ன  பாட்டு என்ன கூத்து நெஞ்சு பொறுக்கதில்லயே !

'சப்புகள் 'நடந்து வரும் அழகே தனி. கருப்பு பெட்டி (சினிமாவில் கடத்தல்காரர்கள் பாவிக்கும் இனம்.) தலையில் சில பேர் தொப்பி அணிந்திருப்பர்.சாரமும் சேர்ட்டும். கொஞ்சம் படித்தவன் களிசன் போட்டிருப்பான்.
ஒரு மணி நேரம் தாமதித்தே பஸ்சில் ஏறுவர். கேட்டால் மெடிக்கல் முடியல்ல அல்லது இன்ன பிற........காரணங்கள் இல்லாவிட்டாலும் அவரின் காரணம் எடுபடத்தான் வேண்டும்

அவருக்குப்பினால் பெண் சிங்கங்கள் .அறபு நாட்டை தூய்மையாக வைத்திருக்கும் அருள் பணி வழங்கப்பட்ட "ஹீருள் ஈன்கள்"                   'சப்புகள்'   தனியார் பஸ்களுக்கு  .பொன் முட்டையிடும் தங்க வாத்துகள்.

தனியா பஸ் அரக்கர்களின் கொடுமையிலிருந்து இந்த தேசத்தை காக்க பாதுகாப்புச்  செயலரே ஏதாவது செய்யுமய்யா !

Sunday 6 February 2011

உமா வரதராஜனின் முதல் எழுத்து.

ஈழத்து இலக்கிய உலகில் உமா வரதராஜனின் வருகை காத்திரமானது. கலாபூர்வமான அவரது பதிவுகள் அனைத்துமே நம்மை களிப்படையச்செய்வது மடடுமல்ல, கணதியாக சிந்திக்கச் செய்பவையும்.....
அண்மையில் ஒரு சிலர் அவர் பற்றிய கற்பனை அவதூறுகளை கதை விட்ட போது நான் மீண்டும் உமாவரதராஜனைத் தேடினேன். அவரது முதல் படைப்பை கண்டடைவதற்காக ஒரு பத்து வருடங்களுக்குரிய நூற்றி இருபது  இதழ்களுக்குள் பயணித்த போது நான் அடைந்த பரவசம் சொல்லில் மாளாது.
1972 ல் ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற நாவலுக்கு சாஹித்திய அகடமியினர் பரிசளித்து கெளரவித்த போது அந்த நாவல் பற்றிய விமர்சனங்களை "தீபம்" ஆசிரியர் கேட்டிருந்தார்.
க.பொ.த.உயர்தரம் படித்துக் கொண்டிருந்த வரதராஜன் ஜெயகாந்தனின் நாவல் பற்றிய பார்வையை தனது பதினேழாவது வயதிலேயே பதிவு செய்திருக்கின்றார். 
1973 மார்ச் மாத தீபம் இதழில் ஐந்து விமர்சனக் கட்டுரைகள் இடம் பெறுகின்றது.
ராஜமார்த்தாண்டன்
சு.கிருஸ்ணன்
எம்.வரதராஜன்
இரா.மோகன்.எம்.ஏ
எம்.சுப்பிரமணியன்
முதலியோர் எழுதியுள்ளனர். நமது வரதராஜனே வயதில் மிக இளையவன்
என்கிறார் எஸ்.எல்எம். ஹனீபா அவரின் தலைப்பிரசவத்தை இந்த வலைப்பதிவில் விரைவில் ஏற்றுகின்றேன்.

Saturday 5 February 2011

அஸ்தஃபிருள்ளாஹ் திருடர்கள்

சுனாமி வந்து சிலர் செல்வந்தராகினர்.ஆழிப்பேரலையில் அகப்பட்டதை  சுருட்டிக்கொண்டது  இருக்க,உயிருடன் இருக்கையில் சொந்த மனைவியை அலையடித்துக் கொண்டு போனதாக கதை விட்டு புதுப்பொண்டாட்டி தேடி அனுபவித்தவர்களின் கதையும் உண்டு. காணி நிலம் கடலில் போய்விட்டதென்று கடிதம் எழுதி பிச்சை எடுத்து   வாழ்ந்தவர்களும் உண்டு. எல்லோரும் கண் முன்னே குத்துக்கல்லாய் நிற்கின்றனர்.
அனர்த்தங்களை தமக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கும் ஒரு சாமர்த்தியம் வேண்டும்.
சுனாமியில் சிக்குண்டு உயிருக்கு போராடியவர்களின் நகைகளை பிய்த்தெடுத்ததும் மனதாபிமான செயலென்று   சொன்னவர்களையும் இந்த சமூகம் மன்னித்து விட்டதொன்றும் பெரிய விசயமல்ல. குற்றுயிராய்க்கிடந்த சில பெண்களின் நிர்வாண உடல்களை புசித்துப்பார்த்த மனித வெறியர்களையும் இந்த சமூகம் தான் மன்னித்து மறந்துவிட்டது.
இப்போது வெள்ள அனர்த்தம் வந்துள்ளது. முதலாவது வெள்ளம் அள்ளிக்கொண்டு போன உயிர்களும் பொருளாதார சேதங்களும் சொல்லில் மாளா. நாட்டில் உள்ள பரோபகாரிகள் அள்ளிக் கொடுத்தார்கள். அரசாங்கமும் கணக்கற்ற நிவாரணங்களை வழங்கியது.  "நடுக்கடலில் விட்டாலும் நாய் நக்கித்தான் குடிக்கும" என்பது போல் ஆபத்திலும் திருடி வாழ்ந்த நரிக்கூட்டம் திருடிக்கொண்டு தான் இருந்தது.
கல்குடாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் நிவாரணம் வழங்கப்படாமலே நிவாரணம் வழங்கப்பட்டதாக சில கிராம சேவகர்கள் அறிக்கை விட்டு கணக்குக்குக் காட்ட சில பிரதேச செயலாளர்கள் அதற்கு காசு எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
தவித்து வந்த மக்களுக்கு இஸ்லாமிய இயக்கங்களும், பள்ளிவாயல் நிருவாகிகளும் சமைத்த உணவு வழங்கி முகாம்களை கவனித்து வந்தன. திருடிப் பழகிய சில குறு நில மன்னர்களான விதானைக்கூட்டம் தாங்கள் சமைத்த உணவு வழங்கியதாக கணக்கெழுதிக் காட்ட சில பிரதேச செயலாளர்கள் காசை கறப்பதில் குறியாக இருக்கின்றனர்.
தொகையைக் கேட்டால் நமக்கு தலை சுற்றுகிறது. முப்பது இலட்சம் .
ஐந்து லீற்றர் தண்ணீர் போத்தல்களைக் கூட கடையில் விற்றுத்தின்ற மார்க்கம் பேசுகின்ற ஒரு ஜி.எஸ் அஸ்தஃபிருல்லாஹ் கள்ளன் என்றால் கோபிக்கவா போறார்.? தவிச்ச முயல அடிச்சுத்தின்னுகின்ற ஹராமிகள் இருக்கும் வரை சுனாமிக்கும் வெள்ளத்திற்கும் கொண்டாட்டம் தான்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...