Tuesday, 19 March 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

35
கிழக்கு வெளுத்தபின் ஆமி வீதிக்கு இறங்கி குண்டு இருக்குதா என்று பரிசோதனை செய்த பின்புதான் பொது மக்களை பயணிக்க அனுமதிப்பர். மக்களில் அவ்வவு அக்கரை. மன்னம்பிட்டி வீதியில் ஒரு மைல் தூரத்திற்கு வாகனங்கள் நிற்கும் ‘பெட்சீட்டை’ விரித்து தார் ரோட்டில் படுத்து உறங்குவோம். இது பல வருடங்கள் வலாயப்பட்ட வாழ்க்கை ஆனது.
 
வெளிநாட்டிலிருந்து  ஊர் திரும்புவர்களின் பொருட்களில்தான் பொலிசாரினதும் ஆமியினதும் கவனம் குவிந்திருக்கும். இதற்கென நம்மவர்கள் கொழும்பில் ‘பேமன்டில’; 100 ரூபாய்க்கு ‘குலோன்’ வாங்கிக்கொண்டு வருவார்கள் . மேலே ஏறி பெட்டியை பிரிக்கும் போது ‘சேரி’ன் கையில் அந்த ‘குளோனை’ திணித்தால் போதும் ‘இப்பதான் நாட்டுக்கு வாரது’ என்று இளித்து விட்டு  பொதிகளை பிரிக்காமல் இறங்கி விடுவார்கள்.
 
எல்லோரும் இவ்வாறு செய்வது இல்லை. என் பயணங்களில் இப்படி சிலரைப் பார்த்திருக்கின்றேன். ‘செக் பொயின்ற்று’களில் சிங்கள சகோதரர்கள் இறங்காமல் இருப்பர். அவர்களை வலிந்து இறங்கும் படி கத்தமாட்டாகள்.  இது இனக்குற்றம் ஆகி விடும் என்ற பயம்.

ஓட்டமாவடியில் பஸ் ஏறி சரியாக நான்கு நிமிடங்களுக்கிடையில் ஓட்டமாவடி பாலம் வந்து விடும். அங்கு இறங்கி பொதிளை பிரித்துக் காட்டி அடுக்கி வைத்துக் கொண்டு ஏறினால் புணானை, வெலிக்கந்தை, மன்னம்பிட்டி, பொலன்னறுவ,மின்னேரி,அலவ்வ நிட்டம்புவ, களனி, இது தவிர இடையில் ஏகப்பட்ட ஊர்களில் திடீர் செக்கின்கள். பயணங்கள் வெறுத்துப்போன காலமது.

இராணுவம் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகள் போதாதென்று எங்கள+ர் பஸ்களின் அட்டகாசங்கள் தாங்க முடியாமல் இருக்கும்.சும்மா சொல்லக்கூடாது சில நல்ல விடயங்களையும் அந்த பஸ் பயணங்கள் கற்றுத்தந்தன

பீடியும், சிகரெட் புகையும் எனக்கு எப்போதும் ஒவ்வாமைக்குரியன. ’அரை சொகுசு’ என்ற பெயரில் ஓடும் எங்களுர் பஸ் வண்டிகளில் மிக நெருக்கமாக இருக்கைகளை போட்டிருப்பார்கள். நடமாடும் இடைவெளிகளில் கூட சிறிய ஸ்டூல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். 

சாய்வதற்கும் அங்குமிங்கும் நகர்வதற்கும் நினைத்துப்பார்க்கமுடியாமல் ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பென நாங்கள் ஒன்பது மணிநேரம்  அல்லது அதற்கு மேலும் உட்கார்ந்து பயணிப்போம். கால்களுக்கிடையில் ‘பென்சி அய்ட்டங்களும்’ கணரக பார்சல்களும் கால்களை நீட்டவிடாமல் மலைபோல் கிடக்கும்.

சும்மா சொல்லக்கூடாது வெளிநாட்டு ‘பெட்டி’ கிடைத்துவிட்டால் போதும் கண்டக்டருக்கும் ரைவருக்கும் அன்று பெருநாள்தான்.ஒரு பெட்டியை கார்கோவுக்குப்போய் ஏற்றி வீட்டு வாசலுக்கு சிரத்தையாக கொண்டு வந்து இறக்கி விடுவதற்கு ஆறு ஏழு ஆயிரங்கள்.

சில நேரங்களில் இதுவெல்லாம் முதலாளிகளின் வரவேட்டில் எழுதப்படாத சங்கதிகள். வெளிநாட்டிலிருந்து வரும் எங்களுர் பெண்களின் அட்டகாசங்களை சகித்துக்கொண்டால் போதும் அல்லாஹ் மறுமையில் பொறுமையாளர்களுக்கு தலைவனாக்கி விடுவான்.

அப்படியொரு அட்டகாசம்.கொச்சை அரபியில் பேசுவதும் சிரிப்பதும்,கமெராவை எடுத்து படம் பிடிப்பதும் இருக்கின்றவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்பது போலவும் உலகத்தின் உச்சிக்கு சென்று வந்த இறுமாப்பும் அவர்களின் பேச்சின் இடையே அறுந்து விழும்.
 இடைவிடக்கொடுமை என்ன தெரியுமா எங்கள் பஸ்களில் ஒலிபரப்பாகும் பாடல்கள். ஏறியவுடன் பைலாப்பாடல்கள். கேட்டுக்கேட்டு புளித்துப்போன தேவாவின் ‘அய்தலக்காவை’ எத்தனை வருடத்திற்குத்தான் கேட்பது.

அல்குர்ஆன் வசனம் என்றாலும் எத்துனை முறை கேட்டாலும் நன்மை கிடைக்கும். நடு நிசியில் மெத்தையில் மல்லிகைப்பூத்தூவி அம்பு விடும் பாடல்கள். சற்றைக்கெல்லாம் அது சலித்துவிடும். பீ.சுசீலா சிறீனிவாசின் இடைக்காலப்பாடல்கள். 

வெளிநாட்டிலிருந்து திரும்பிவரும் மகளிருக்கென இளையராஜாவின் சில பாடல்கள் தயாராக இருக்கும். ‘ஆறு அது ஆழமில்ல….அது போகும் இடமும் ஆழமில்ல ஆழம் எது ஐயா அந்த பொம்புள மனசுதாய்யா’ என்று இளைய ராஜா மூக்கால் அழும் போது ரைவரின் பார்வையும் இன்னும் சிலரின் பார்வையும் அந்தப்பெண்கள் மீது மேயும்.இதழ் கோடியில் எள்ளலாய் ஒரு புன்னகை.

‘பொம்பளங்க காதலத்தான் நம்பி விடாதே…. ஒரே வகைப்பாடல்களும் பார்வைகளும் தொடர்ந்த வண்ணம் பஸ் ஓடிக்கொண்டே இருக்கும் .இப்போது ஒரு சின்ன மாற்றம்.செக்பொயின்ற் இல்லாத பயணம். சொகுசு பஸ் என்று பெயரளவில் இல்லாமல் நிஜமாகவே விண்ணைத்தொடும் அளவிற்கு பிரமாண்ட குளு குளு பஸ்கள். ஏறி அமர்ந்தாலே அலுப்புத்தட்டாத சௌகரியங்கள்.

பாடல்களை பார்த்துக்கோண்டோ,அல்லது முழு நீள சினிமாக்களை இரசித்துக்கொண்டோ பயணம் செய்யும் வசதிகள்.மனித மனங்களில் குடியிருக்கும் வக்கிரங்களை தவிர மற்றதெல்லாம் மாறிவிட்டன என்பது கசப்பான நிஜம்.


எங்கள் தேசம் - 241


Saturday, 16 March 2013

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும் எதிர் கொள்ளும் சவால்களும்


15.03.2013ம் திகதி மீராவோடை எம்.பி.சி.எஸ். வீதியில் அமைந்துள்ள  தாருஸ்ஸலாம்  பள்ளிவாயலில் என்னால் நிகழ்த்தப்பட்ட குத்பா பிரசங்கத்தின் சுருக்கக்குறிப்புகள்.


இலங்கை முஸ்லிம்கள் வெறும் 300 வருட கால வரலாறு கொண்டவர்கள் என்பது வரலாற்றை திரவுபடுத்தம் முயற்சியாகும். 1000 வருடங்களையும் மிஞ்சிய வரலாற்றுப்பரம்பரை கொண்டவர்கள் . இலங்கையில் முஸ்லிம்கள் வருகை கி.பி 628 ஹிஜ்ரி 6 ம் வருடத்திற்கு சரியாக இடம் பெற்றது.

கரையோரங்களில் ஆரம்ப கால குடியேற்றங்கள் இடம் பெற்றன. அரேபியர்களின் வர்த்தக தொடர்பால் இலங்கையிலுள்ள சுதேசிப்பெண்களை மணம் முடித்தும் வாழ்ந்தனர்.

இலங்கை மன்னன் 2 ஆம் தாதோபதிஸ்ஸ கி.பி.700 ஆண்டில் இலங்கையில் காலம் சென்ற அரேபியியர்களின் விதவை மனைவியரை அரேபியாவுக்கு கப்பலில் அனுப்பி வைத்தான்.

தனக்கு அறிமுகம் இல்லாத பரிச்சயமில்லாத தேசத்திற்கு விதவைப்பெண்கள் பயணம் செய்ய விரும்பியிருக்க மாட்டார்கள். ஏற்கனவே அங்கு பரிச்சயமாக கனவனின் வழித்தோன்றல்களின் அரவணைப்பினாலேயே அங்கு செல்ல விரும்பியிருப்பர்.

ஹிஜ்ரி 337 இல் பதிக்கப்பட்ட நடுகல் ஒன்று கொழும்பு மையவாடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இது சமய மேம்பாட்டுக்காக அப்பாசிய கலீபாவால் கொழும்புக்கு அனுப்பப்பட்டஇப்னு பஹாயாவினஞாபகார்த்தமாக நடப்பட்டது.இதில் உள்ள அறபு வாசகங்களின் படி ஹி. 337  ரஜப் மாதம் பிறை ஐந்து என்ற குறிப்புகள் காணப்படுகின்றன.

கலீபாவால் அனுப்பபட்டவர் இறந்தபின் மற்றொருவரை அவர் அனுப்பியிருப்பார்.அவரே இவரின் நினைவாக கல்லை நட்டியிருப்பார்.இதை டச்சு உத்தியோகத்தர் ஒருவர் கி.பி 1787 இல் கண்டுபிடித்தார்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் கி;.பி. 1920 இல்  புளியந்தீவில் ஒரு நடுகைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ள குறிப்பும் كل نفس ذائقة الموت    எல்லா ஆத்மாக்களும் மரணத்தை சுகித்தே தீரும்என்ற குர்அன் வசனம்  ஹி.5.7 ம்நூற்றாண்டில்  பழக்கத்திலிருந்த கூபி எழுத்து வடிவம் என்று இனம் காணப்பட்டுள்ளது..
இரண்டாம் மகா யுத்த காலத்தில் கல்லறை நடு கள் ( மீசான் கட்டை ) காழி நீதிபதியாக கடமையாற்றிய அபீப் அப்துல்லாஹ் இபுனு அப்துர்ரஹ்மான் இப்னு முஹம்மது யூசுப் என்பவருடையது இது ஹி. 6ம் நூற்றாண்டை சேர்ந்தது. 

இவை போன்று ஏராளமான சான்றுகளை நாம் சுட்டிக்காட்ட முடியும் இவை கி.பி. 10 -14 ம்நூற்றாண்டு கால கட்டத்தில் இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு வலுவான ஆதாரங்களாகும். 

1976 இல் ஹெம்மாதகம மடுள்போவ மையவாடியில் கண்டெடுக்கப்பட்ட மூன்று மீசான் கட்டைகளின் எழுத்துகள் ஹி 1305 குறிக்கின்றது என்பதே ஆய்வு.

கி.பி.13 ம்நூற்றாண்டில் களுத்துறை மாவட்டத்தில் பேருவளையில் வாழ்ந்த முஸ்லிம் ஒருவரை இந்தியாவுக்கு அனுப்பி புடவை நெய்யும் கலையை அறிந்து வர சிங்கள மன்னன் அனுப்பினான் என்ற குறிப்பை அலெக்சான்டர் ஜோன்ஸ்டன் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அந்த முஸ்லிமுக்கு மன்னன் பரிசளித்த பட்டயத்தின் நகல் ஒன்று தம்மிடமிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

கொழும்பு முதுராஜவெல எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட புதையல் கிடைத்த நாணயங்களில் கி.பி. 705-715 கால ஆட்சி செய்த கலீபா வலீதின் நாணயம் ஒன்றும்,அப்பாசிய கலீபா ஹாருன் ரசீதின் நாணயம் ஒன்றும், கி.பி. 11.12,13 நூற்றாண்டுகளை சேர்ந்த அறபு,நாணயங்கள் நீர் கொழும்பு,வத்தளை ,கம்பளை, சப்ரகமுவ வேலகதெர ,ஆகிய பிரதேசங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

1200 வருடத்திற்கு முன் அறபிகள் இலங்கைக்கு வந்து காலி முதல் பேருவளை வரை குடியிருந்து வியாபாரம் செய்தனர்.முஸ்லிம்கள் இன்று எதிர்கொள்ளும் இன வன்முறை என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டதாகும்.
ஒல்லாந்தரும் போர்த்துக்கீசரும் முஸ்லிம்களின் வர்த்தகத்தில் பல கட்டுப்பாடுகளை விதித்தனர்.
என்றாலும் முஸ்லிம்கள் வர்த்தகத்தில் செழிப்பாக வளர்ந்தனர்.

இதனை சிங்கள முதலாளிமார்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தப்பகையுணர்வு ஆங்காங்கே வெளிப்படலானது.1880 1900 ஆண்டுகளில் சிங்கள பௌத்த தேசியவாத எழுச்சியின் முழு வடிவத்தையும் பெற்றது.

கிராமப்புற,நகர்ப்புற சிங்கள  மக்களை  சுரண்டுகின்ற அநியாயக்கார கும்பலாகவே முஸ்லிம்கள் சித்தரிக்கப்பட்டனர்.

1900ம்ஆண்டு அநாகரீக தர்பால என்ற கடும்போக்கு சிங்கள தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட சிங்கள மகாபோதி சபைமுஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டது.சிங்களவர்களை சிங்கஎனவும் அவர்கள் கலாச்சாரம் மட்டுமே இலங்கைக்குரியது என்றும் அவர் பிரச்சாரம் செய்தார். அந்தப்பிரச்சாரத்தில் பல புத்தி ஜீவிகள்,பௌத்த பிக்குகள் இளைஞர்கள் கவரப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிரான பேரணிகள் உருவாக்கப்பட்டன.

அவரது கடிதத்தொகுப்புகக்கள் அடங்கிய தர்பால லிபிநூலில் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம்  மேலோங்கியுள்ளதை பார்க்கலாம்.

இதன் வரலாற்று தொடரில்தான் ஜாதிக சிந்தனய,ஹெல உறுமய,வீரவிதான,சிஹல உருமய,பொது பள சேனா போன்ற தீவிரவாத இயக்கங்கள் உருப்பெற்று வந்துள்ளன.

இவர்களது பிரச்சாரம் இரண்டு முக்கிய விடயங்களை உள்ளடக்கியது. 

 1. ஐரோப்பிய மற்றும் இந்திய தமிழர்களுக்கு எதிரானது.
2. இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரானது.

1948 இல் இலங்கை பிரதமராக தெரிவு செய்யப்பட்ட டி.எஸ். சேநாயக்க இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை பரம்பலை மட்டுப்படுத்த சிங்கள குடியேற்றங்களை முஸ்லிம்கள் வாழு;ந்த பிரதேசங்களில் அமுல்படுத்தினார் .1970 பாணந்துறை காலி மஹியங்கண, புத்தளம் போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சூரையாடி பல உயிர்சேதங்களையும் ஏற்படுத்தினர்.

1976 இல் புத்தளத்தில் பள்ளிவாயில் புகுந்து ஏழு முஸ்லிம்களை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.1974 இல் மஹியங்கன  பங்கரகம்மனஎனும் முஸ்லிம் கிராமத்தில் கடைகள் பள்ளிவாயல்கள் வீடுகள் எரிக்கப்பட்டன
.
1980 கெபம்பனித்தெரு பள்ளிவாயலில் ஒரு முஸ்லிம் சுட்டுக்கொல்லப்பட்டார்.1982 இல் காலி துவ வத்தையில் முழுக்கிராமமே விரட்டியடிக்கப்பட்டது. 

1990 ஆண்டுக்குப்பிறகு இவர்கள் ஒரு நிறுவன மயப்பட்டவர்களாக இயங்கத்தொடங்கினர்.
இலங்கையின் இன நெருக்கடி வரலாற்றில் முதலாவது மதக் கலவரமாக கம்பளை கலவரத்தை குறிப்பிடலாம்;.1915 ம்ஆண்டு பெரஹராவைக் கொண்டாட பௌத்தர்கள் தீர்மானித்திருந்தனர். கம்பளை பள்ளிவாயலுக்கு முன்னால் செல்லும் போது பெரஹாரவில் வாசிக்கப்படும் மேளவாத்திளங்களை இசைக்காமல் செல்ல வேண்டும் என முஸ்லிம்கள் பொலிசாருக்க முறைப்பாடு செய்தனர்.

ஆங்கிலேயரின் காலப்பகுதி என்பதால் கண்டியின் பொலிஸ் பொறுப்பதியாகவும், அரசாங்க அதிபராகவும் ஆங்கிலேயர் ஒருவரே இருந்தார் 

அவர் முஸ்லிம்களின் இந்த வேண்டுகோளை ஏற்று  பௌத்த விகாரை பஸ்நாயக நிலமேவுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த வேண்டுகோளை கேட்டு பௌத்த விகாரை ஆத்தரமடைந்தது. அரசாங்க அதிபரின் இந்த தடையை எதிர்த்து கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. எனினும் நீதிமன்றம் பௌத்தர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது 

நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசாங்க அதிபர்மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தார்.அது பரீசிலிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

 1915 மே 28 இல் கண்டி தலதா மாளிகையை முஸ்லிம்கள் தாக்க வருகின்றார்கள் என்ற வதந்தியைப் பரப்புகின்றார்கள்.

சிங்களப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் கற்பழிக்கின்றார்கள்
சிங்கள மக்களை கொல்கின்றார்கள் இதனால் ஆத்திரமடைந்த ஏற்கனவே கட்டமைக்கப்ட்டிருந்த சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தொடங்கினர்.கம்பளையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இனக்கலவரம் முழு தேசத்திற்கும் பரவியது. 
இதனால் முஸ்லிம்களின் பலகோடி பொருளாதார வளங்கள் சூரையாடப்பட்டு அழிக்கப்பட்டன.

இக்கலவரத்தில் தீக்கிரையாக்கப்ட்ட பள்ளிவாயல்கள் -  17
 கலவரத்தில் முற்றாக சேதமாக்கப்பட்ட் பள்ளிவாயல்கள் - 86
 கொள்ளையிடப்பட முஸ்லிம்களின் கடைகள் 4076
 கொல்லப்பட்ட முஸ்லிம்கள்- 35
 காயடைந்த முஸ்லிம்கள் 189
 மானபங்கப்படுத்தப்பட்ட முஸ்லிம்பெண்கள் 04
 இதன் தொடர்ச்சியில் 1982 இல் காலி கலவரம்
 1999 பன்னல அலபட வன்முறைகள்
 2001 மாவனல்ல தாக்குதல்கள்
2002 இல் பேருவளை மோதல்கள் இடம் பெற்றன.

 மாவனல்லை அனர்த்தத்தில் 14 பேர் காயமடைய ,ஒருவர்  கொல்லப்பட்டார்.

 மேலும் கடைகள்,பள்ளிவாயல்கள் ,காமன்ட்ஸ்,வீடுகள்,வாகனங்கள்  பெற்றோல் நிரம்பும் நிலையம்,வாகனங்கள்  என பல மில்லியன் கணக்கில் சேதம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியில்தான் அண்மைய இனவாதக்கும்பலின் அட்டுழியங்களை நோக்க வேண்டும்.
அவற்றினை பின்வரும் அடிப்படையில் தொகுத்து தரலாம் என நினைக்கின்றேன்.

.2011செப்டம்பர் : அநுராதபுரம் மாவட்டம் ஒட்டுப்பள்ளம் பகுதியிலிருந்த பல நூற்றாண்டு பலமைவாய்ந்த முஸ்லிம்களுக்கச் சொந்தமான இஸ்லாமிய பெரியாரின் அடக்கஸ்தலம் உள்ளிட்ட நினைவு சின்னங்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் இடித்து தகர்க்கப்பட்டது.

02. 2012 எப்ரல் 20: மாத்தளை மாவட்டம் தம்புள்ள நகரில் அமைந்துள்ள ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் தாக்குதலுக்கு உள்ளானது. தம்புள்ள ரங்கிரி ரஜமகா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவ சுமங்கள தேரரின் தலைமையிலான குழுவொன்று பேரணியாக வந்து இத்தாக்குதலை நடத்தியது.

03. 2012 மே 25: கொழும்பு மாவட்டம்  தெஹிவளை கல்விஹாரை வீதியில் உள்ள தாருர் ரஹ்மான் பள்ளிவாசலை அகற்றுமாறு கோரி பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு பள்ளிவாசலை தாக்கும் முயற்சியும் மேற் கொள்ளப்பட்டது.

04. 2012 மே 28 : குருநாகல் மாவட்டம்இ ஆரிய சிங்களவத்தையில் அமைந்துள்ள உமர் இப்னு கத்தாப் குர்ஆன் மதரஸாவில் தொழுகை நடத்துவதை நிறுத்துமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு அங்கு தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டது.

05. 2012 ஜுலை 24: குருநாகல் மாவட்டம்இ தெதுரு ஓயாகம தாருல் அக்ரம் தக்கியாவில் இரவு நேரத் தொழுகையை நிறுத்துமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு தொழுகை நடத்தவது நிறுத்தப்பட்டது.

06. 2012 ஜுலை 26: கொழும்பு மாவட்டம்இ தெஹிவளை பீரிஸ் மாவத்தையிலுள்ள தாருல் அக்ரம் குர்ஆன் மத்ரஸாவில் தொழுகை நடாத்தவதை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக நிறுத்தியது.

07. 2012 ஜுலை 29: கொழும்பு மாவட்டம்இ ராஜகரிய ஒபே சேகரபுரயிலுள்ள ஜாமிஉத் தாருல் ஈமான் பள்ளிவாசலில் இரவு நேரத் தொழுகை நடாத்துவதற்கு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு அங்கு தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டது

08. 2012 ஆகஸ்ட் 30: கொழும்பு மாவட்டம்இ வெல்லம்பிட்டி கொகிலாவத்தை பள்ளிவாசலினுள் நுழைந்த சில பௌத்தர்கள் பள்ளிவாசலை தாக்கப் போவதாக எச்சரித்தனர்.

09. 2012 ஒக்டோபர் 27: அநுராதபுரம் மாவட்டம்  மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசலுக்கு பௌத்த தீவிர வாதிகளினால் தீவைக்கப்பட்டது.

10. 2012 நவம்பர் 30: கொழும்பு மாவட்டம் மஹரகம நாவின்ன ரஜமகா விகாரையில் முஸ்லிம்களுக்கு எதிரான பேரணியொன்று இடம்பெற்றது. கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதிகளினால் பௌத்த மரபுச் சின்னங்கள் அழிக்கப்படுவதாகக் கூறியே இப்பேரணி இடம்பெற்றது.

11. 2012 டிசம்பர் 03: கண்டி மாவட்டம் குண்டகசாலை விவசாய கல்லூரியில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு பன்றி இறைச்சி கறி பரிமாறப்பட்டது.

12. 2012 டிசம்பர் 08: கண்டி மாவட்டம் கண்டி மாநகரத்தில் முஸ்லிம் வியாபரிகளுக்கெதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு கைபேசிகள் வழியாக குறுங்செய்திகளும் அனுப்பப்பட்டன.

13. 2012 டிசம்பர் 23  இரத்தினபுரி மாவட்டம் எம்பிலிபிட்டியவில் இரு முஸ்லிம் வர்த்தகர்கள் பௌத்த தீவிர வாதிகளினால் தாக்கப்பட்டனர். அதே இடத்தில் 24ஆம் திகதி முஸ்லிம்களுக்கெதிராக ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

14. 2012 டிசம்பர் 24  பதுளை மாவட்டம் மஹியங்கனையில் அமைந்தள்ள பள்ளிவாசலை மீள் நிர்மாணம் செய்ய வேண்டாம் என்று பௌத்த தீவிரவாதிகளினால் சுவரொட்டி ஒட்டப்பட்டதோடு துண்டுப் பிரசுரமும் வெளியீடு செய்யப்பட்டது.

15. 2013 ஜனவரி 07: அநுராதபுரம் மாவட்டம் மல்வத்து ஓயா லேனில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்பாட்டம் செய்யப்பட்டது.

16. 2013 ஜனவரி 07: கொழும்பு மாவட்டம் சட்டக் கல்லுரிக்கு தெரிவான் முஸ்லிம் மாணவர்களை குறைக்குமாறு கோரி கொழும்பு சட்டக்கல்லூரிக்கு முன்னாள் ஆர்பாட்டம் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் இடம்பெற்றது.

17. 2013 ஜனவரி 19: கொழும்பு மாவட்டம் மஹரகம நகரில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான நோலிமிட்வர்த்தக நிலையத்தை மூடுமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அதனை தாக்கி அழிப்பதற்கும் முயற்சி மேற் கொள்ளப்பட்டது.

18. 2013 ஜனவரி 20: அநுராதபுர மாவட்டம் புதிய நகரத்தில் முஸ்லிம்களுக்கெதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடுஇ துண்டுப்பிசுரமும் வெளியிடப்பட்டது. முஸ்லிம் ஹோட்டல்களில் சிங்களவர்களக்கென தயாரிக்கப்படுகின்ற உணவுகளில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் இரசாயனம் சேர்க்கப்படுவதாகவும் ஆதலினால் முஸ்லிம் ஹோட்டல்களில் உணவருந்துவதை அவசியம் நிறுத்துமாறும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

19. 2013 ஜனவரி 22: கொழும்பு  புதிதாக நிர்மாணிக்கப்படும் அனைத்துப் பள்ளிவாசல்களும் ஜிஹாதின் பாசறைகளென பொது பலசேனா அமைப்பினால் எச்சரிக்கப்பட்டது.

20. 2013 ஜனவரி 23: களுத்துறை மாவட்டம் பேருவளையில் அமைந்துள்ள முஸ்லிம் ஹோட்டலில் பௌத்த குருமார் தாக்குதலை மேற்கொண்டு சேதப்படுத்தினர்.

21. 2013 ஜனவரி 24: குருநாகல் மாவட்டம்  குளியாபிட்டியில் முஸ்லிம்களுக் கெதிரான ஆர்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. இதன் போது பன்றியின் உருவத்தில் அல்லாஹ் என்ற வரைந்து எடுத்துச் செல்லப்பட்டது.

22. 2013 பெப்ரவரி 01: கண்டி மாவட்டம் இகண்டி சித்தி லெப்பை மாவத்தை ( பெயர் பலகை மைபூசி அழிக்கப்பட்டு) வித்தியார்த்த மாவத்தைஎன பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

23. 2013 பெப்ரவரி 07: 2013ஆம் ஆண்டைஹலால்ஒழிப்பு ஆண்டாக பிரகடனப் படுத்தியுள்ளதாக பொது பலசேனா அமைப்பு அறிவித்தது. தமது செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுவதற்கு இலங்கை ஜனாதிபதி ஆசிர்வாதம் வழங்கியதாகவும் தெரிவித்தது.

24. 2013 பெப்ரவரி 09: குருநாகல் மாவட்டம்இ வரக்காபொலயில் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆர்பாட்டம் செய்யப்பட்டது.
25. 2013 பெப்ரவரி 10: குருநாகல் மாவட்டம்இ நாரம்மலஇ ஹொரம்பாவ பகுதியில் ஸுபஹ் தொழுகைக்காகச் சென்ற ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானது.

26. 2013 பெப்ரவரி 11: குருநாகல் மாவட்டம் இரம்புக்கனை பிரதேசத்தில் ஹலால்எதிர்ப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

27. 2013 பெப்ரவரி 11: குருநாகல் மாவட்டம் நாரம்மல நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு பர தம்பியாவுக்கு மார்ச் மாதத்திற்குள் மரணம்என்னும் தலைப்பில் அச்சுறுத்தல் கடிதம் கிடைக்கப்பெற்றது. இக்கடிதம் பௌத்த அமைப்புக்களின் ஒன்றியம் என்னும் பெயரில் அனுப்பப்பட்டிருந்தது.

28. 2013 பெப்ரவரி 12: கொழும்பு சிங்கள பௌத்தர்களை இறப்பர் தோட்டத்திலுள்ளஇறப்பர் மரங்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம்களை அத்தோட்டத்தில் வளர்க்கப்படும் சிறிய செடிகளுக்கு ஒப்பிட்டு பொது பல சேனா கருத்து தெரிவித்தது.

29. 2013 பெப்ரவரி 13: குருநாகல் மாவட்டம் நாரம்மல பொலிஸ் பரிவில் சியம்பலாகஸ்கொடுவஇ கிளின்பொலயில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் உடைக்கப்பட்டுள்ளன.

30. 2013 பெப்ரவரி 14: கொழும்பு எதிர்வரும் புத்தாண்டிற்கு முன்பு ஹலால்அங்கீகாரம் ஒழிக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பௌத்த புரட்சி வெடிக்கும் என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக்க ரணவக்கயினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

31. 2013 பெப்ரவரி 14: கண்டி மாவட்டம் திகனப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கெதிரான துண்டுப் பிரசுரம் பொது பலசேனா அமைப்பினால் விநியோகிக்கப்பட்டது.

 32- 4.3.2013 மஹர சிறைச்சாலை வளாகத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது இன்று திங்கட்கிழமை காலை வேளையிலும் ஓப்பநாயக்க பள்ளிவாசல் மீது நேற்றிரவு இனந்தெரியாதோரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

.2013 மார்ச் 11 முஸ்லிம்களின் வாழ்வில் ஒருமுக்கிய நாள் கருப்பு நாள்  ஹலால் உள்நாட்டுக்கு இல்லை .வெளிநாட்டுக்கு மட்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிவித்தது.
17.03.2013 கண்டியில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டம் பர்தாவுக்கு எதிரானது

அவர்களின் அடுத்த போராட்டம் தாடிஇகாதி நீதி மன்றம்இ |~ஷரீஆ சட்டம், இஸ்லாமிய வங்கி அமைப்பு 

இவ்வளவு நடந்தும் முஸ்லிம் அரசியல் வாதிகள் 18 பேரும் வாய் திறக்காத நிலை.நமது பிரச்சனைகளை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வரவில்லை பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் ஒரு கவனயீர்ப்பு பிரேரனையைக்கூட பாராளுமன்றத்தில் கொண்டுவரவில்லை.தேர்தல் காலங்களில் குர்ஆன் ஹதீது முழக்கம் செய்யும் முஸ்லிம் கட்சிகள் இவ்வளவு நடந்தும் மௌனமாக இருப்பதன் மர்மம் என்ன?

மனநோயால் பீடிக்கப்பட்டுள்ள இந்த காவி உடை தரித்த பயங்கரவாதிகளின் அட்டகாசத்தினால் நமது பொறுமைய இழந்து செயற்படாமல் விவேகமாக காய் நகர்த்துவோம்.அல்லாஹ்விடம் பொறுமை, தொழுகையின் மூலம் உதவி தேடுவோம். கட்சி இயக்க வேறுபாடுகள் கடந்து ஒன்று படுவோம். அல்லாஹ் நம்மனைவருக்கும் வெற்றியைத்தருவானாக

Tuesday, 5 March 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                                              தொடர்  -34

எல்லாம் முடிந்தவுடன் இரண்டு நாய்கள் பஸ்சுக்குள் ஏறி மோப்பம் பிடித்து ‘குண்டு இல்லை’ என்று அறிக்கைவிடும். இதற்குள்ளும் சில சுவாரஸ்யங்கள் நடக்கும்.

இருக்கைக்கு மேலே உள்ள பொதிகளை இறக்கி ‘செக்’ பண்ணாமல் இருக்க பொலிசாரின் கைகளில் சில்லறைகள் திணிக்க வேண்டும். திணித்து விட்டால் வேலை இலகுவில் முடிந்து விடும். இல்லையென்றால் இழுத்தடிப்பு.

மன்னம்பிட்டியில் இறங்கி நடக்க இயலாதவர்கள் அக்காலத்தில் ஒரு யுக்தியை கையாண்டனர்.'கரணம் தப்பினால் மரணம்' என்பதற்குச்சமன்.  இந்த தந்திரோபாயம். நீருக்குள் நெருப்புக்கொண்டு செல்வதில் நம்மவர்கள் கில்லாடிகள் அல்லவா ?

கால்களுக்கு ‘பெண்டேஜ்’ துணியை சுற்றிவிட்டு அதற்கு மேல் ‘பெட்டாடின்’ மருந்தை தடவிவிடுவார்கள். எந்த ‘செக்பொயின்று’களிலும் இறங்காமல் இருக்க இதுவொரு வழி. எப்பேர்ப்பட்ட செக்பொயின்றுகளுக்கும் டாட்டா காட்டிவிட்டு இருந்து விடுவார்கள்.

கொழும்பிலிருந்து வரும் போது வெலிக்கந்தையில் ஒரு ‘செக்பொயின்ற்' சரியாக மூன்று மணியளவில் தூக்க கலக்கத்தில் இறங்கி நடக்க வேண்டும். ஆமி உள்ளுக்குள் ஏறும் போது சீட்டில் அமர்ந்திருக்கக்கூடாது. சிலர் தூங்குவது போல் நடித்துக்கொண்டிருப்பர். ஆமிக்கு நடிப்பும் தெரியும் நாடகமும் தெரியும் .

தோளில் தட்டி எழுப்பி ‘பேக்க தூக்கிட்டு நடக்கிறது” என்பார்கள். சிலருக்கு உண்மையில் தூக்கம் மிகைத்திருக்கும் என்ன செய்ய யானைகள் நடாத்தும் போரில் இடையில் நசுபடும் பற்றைகளாக எமது நிலை.
‘செக் பொயின்ற்’ பக்கத்தில் விடிய விடிய ‘லாந்தர்’ விளக்கெரிய கடையொன்று திறந்து கிடக்கும் . 

நாய்கள் முற்றத்தில் சுருண்டு படுத்திருக்க சுடு தண்ணிப்பானை வெளிச்சத்தில் முதலாளி அம்மாவின் தூக்கம் தெரியும் .ஆச்சி ‘பிளேன்றீ’ என்றவுடன் ஆச்சியின் அகன்ற வாய் பிளந்து பெருத்த கொட்டாவி பறக்கும்.பின்பு ஆவி பறக்கும் ‘பிளேன்றீ’ அர்த்த சாமத்தில் அமிர்தமாய் இருக்கும் .

மழைக்காலங்கள் அற்புதமானவை.அதுவும் ‘செக்பொயின்ற்றை’ அண்மிக்கும் போது ஓவென்று பெய்யும் மழையை அதிகம் ஆராதிருத்திருந்தோம் அக்காலத்தில். இறங்கி நடக்கும் சிரமம் இல்லை.அவர்கள் ஏறி வந்து ‘ஐடின்டி’ பார்த்து கிண்டிக்கிளறி அனுப்புவார்கள்.

பெருத்த மழையாயின் ஆமி பஸ்சை நிறுத்தாது.பஸ்சிற்குள் பொடுபொடுத்த மழை பெய்யும்.யுத்தத்தை வென்ற மனக்கிலேசம் ஏற்படும்.

குளிர்காலங்களில் முற்றத்தில் தீ வைத்திருப்பார்கள். எங்களுடைய பஸ் வரும் வரை அதைச்சுற்றி வளையமிட்டிருப்போம்.சில நேரங்களில் தூக்க முடியாத பொதிகளை பஸ்சின் இருக்கையில் பிரித்து  வைத்து விட்டு சிலர் வந்து விடுவார்கள். ஆமிக்காரன் கிண்டிப்பார்த்துவிட்டு விட்டுவிடுவான் . 

எனினும் அனேகர்  அப்படி இல்லை    உரியவர்களை வரச்சொல்லி அவர்களாவே கிண்டிக்காட்ட வேண்டும். உள்ளாடைகளை தூக்கிக்காட்டி அவசரமாக பேக்கினுள் திணிப்பதுதான் சங்கடமாய் இருக்கும். ‘ட்ரவலின் பேக்கை’ திறந்து காட்டும் போது மற்றவர்களின் பார்வை நமது பொதிக்குள் ஊடறுத்து நிற்கும் .ஆமிக்காரரை விட மோப்பமிடும் கழுகுக்கண்கள் நம்மவர்களுடையது.

 நம்மிடம் எனனென்ன பொருட்கள் இருக்குது என்ற ‘லிஸ்ட்டை’ சிலர் ஒப்புவித்து விடுவதில் சமர்த்து. அடுத்தவர் விவகாரத்தில் அவ்வளவு கண்காணிப்பு. இந்த கெடுபிடியால்; பயணங்கள் தாமதமடைவதுண்டு.
ஏக காலத்தில் நிறைய பஸ்கள் வந்து வரிசையில் நிற்கும். முதல் வந்த பஸ் சில நேரம் கடைசியில் செல்வதற்கு காரணம் சிலரால் பஸ்ஸிலேயே விட்டு விட்டுப்போன பொதிகள்தான். ‘ரைவரும்‘, நடத்துநரும் கர் புர்ரென்று கத்துவார்கன் .

‘எல்லாரும் பேக்கை தூக்கிட்டு கெதியா வாங்கே, அடுத்த பஸ் வந்திட்டு.’
அதிலும் முண்டியடித்துக்கொண்டு பாய்ந்து செல்ல, சிலர் ஓட்ட ஓட்டமாய் ஓடுவர். வரிசையில் நின்று பிரித்துக்காட்டி முதல் ஏறி அவசரமாக போகத்தான் ஆசை.என்ன செய்ய மன்னம்பிட்டியில் விட வேண்டுமே!

அதிலும் மகா கொடுமை வழி நெடுக  ஓ வென்று பெய்யும்  கணத்த மழை ‘செக்பொயின்றி’ல் தூறல் போடுமே  அந்த மன அவஸ்தையை  எழுதுவதற்கு வார்த்தைகளே இல்லை!


எங்கள் தேசம்.240                                                                                                  ஊஞ்சல் இன்னும் ஆடும்....