Tuesday, 19 March 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

35
கிழக்கு வெளுத்தபின் ஆமி வீதிக்கு இறங்கி குண்டு இருக்குதா என்று பரிசோதனை செய்த பின்புதான் பொது மக்களை பயணிக்க அனுமதிப்பர். மக்களில் அவ்வவு அக்கரை. மன்னம்பிட்டி வீதியில் ஒரு மைல் தூரத்திற்கு வாகனங்கள் நிற்கும் ‘பெட்சீட்டை’ விரித்து தார் ரோட்டில் படுத்து உறங்குவோம். இது பல வருடங்கள் வலாயப்பட்ட வாழ்க்கை ஆனது.
 
வெளிநாட்டிலிருந்து  ஊர் திரும்புவர்களின் பொருட்களில்தான் பொலிசாரினதும் ஆமியினதும் கவனம் குவிந்திருக்கும். இதற்கென நம்மவர்கள் கொழும்பில் ‘பேமன்டில’; 100 ரூபாய்க்கு ‘குலோன்’ வாங்கிக்கொண்டு வருவார்கள் . மேலே ஏறி பெட்டியை பிரிக்கும் போது ‘சேரி’ன் கையில் அந்த ‘குளோனை’ திணித்தால் போதும் ‘இப்பதான் நாட்டுக்கு வாரது’ என்று இளித்து விட்டு  பொதிகளை பிரிக்காமல் இறங்கி விடுவார்கள்.
 
எல்லோரும் இவ்வாறு செய்வது இல்லை. என் பயணங்களில் இப்படி சிலரைப் பார்த்திருக்கின்றேன். ‘செக் பொயின்ற்று’களில் சிங்கள சகோதரர்கள் இறங்காமல் இருப்பர். அவர்களை வலிந்து இறங்கும் படி கத்தமாட்டாகள்.  இது இனக்குற்றம் ஆகி விடும் என்ற பயம்.

ஓட்டமாவடியில் பஸ் ஏறி சரியாக நான்கு நிமிடங்களுக்கிடையில் ஓட்டமாவடி பாலம் வந்து விடும். அங்கு இறங்கி பொதிளை பிரித்துக் காட்டி அடுக்கி வைத்துக் கொண்டு ஏறினால் புணானை, வெலிக்கந்தை, மன்னம்பிட்டி, பொலன்னறுவ,மின்னேரி,அலவ்வ நிட்டம்புவ, களனி, இது தவிர இடையில் ஏகப்பட்ட ஊர்களில் திடீர் செக்கின்கள். பயணங்கள் வெறுத்துப்போன காலமது.

இராணுவம் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகள் போதாதென்று எங்கள+ர் பஸ்களின் அட்டகாசங்கள் தாங்க முடியாமல் இருக்கும்.சும்மா சொல்லக்கூடாது சில நல்ல விடயங்களையும் அந்த பஸ் பயணங்கள் கற்றுத்தந்தன

பீடியும், சிகரெட் புகையும் எனக்கு எப்போதும் ஒவ்வாமைக்குரியன. ’அரை சொகுசு’ என்ற பெயரில் ஓடும் எங்களுர் பஸ் வண்டிகளில் மிக நெருக்கமாக இருக்கைகளை போட்டிருப்பார்கள். நடமாடும் இடைவெளிகளில் கூட சிறிய ஸ்டூல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். 

சாய்வதற்கும் அங்குமிங்கும் நகர்வதற்கும் நினைத்துப்பார்க்கமுடியாமல் ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பென நாங்கள் ஒன்பது மணிநேரம்  அல்லது அதற்கு மேலும் உட்கார்ந்து பயணிப்போம். கால்களுக்கிடையில் ‘பென்சி அய்ட்டங்களும்’ கணரக பார்சல்களும் கால்களை நீட்டவிடாமல் மலைபோல் கிடக்கும்.

சும்மா சொல்லக்கூடாது வெளிநாட்டு ‘பெட்டி’ கிடைத்துவிட்டால் போதும் கண்டக்டருக்கும் ரைவருக்கும் அன்று பெருநாள்தான்.ஒரு பெட்டியை கார்கோவுக்குப்போய் ஏற்றி வீட்டு வாசலுக்கு சிரத்தையாக கொண்டு வந்து இறக்கி விடுவதற்கு ஆறு ஏழு ஆயிரங்கள்.

சில நேரங்களில் இதுவெல்லாம் முதலாளிகளின் வரவேட்டில் எழுதப்படாத சங்கதிகள். வெளிநாட்டிலிருந்து வரும் எங்களுர் பெண்களின் அட்டகாசங்களை சகித்துக்கொண்டால் போதும் அல்லாஹ் மறுமையில் பொறுமையாளர்களுக்கு தலைவனாக்கி விடுவான்.

அப்படியொரு அட்டகாசம்.கொச்சை அரபியில் பேசுவதும் சிரிப்பதும்,கமெராவை எடுத்து படம் பிடிப்பதும் இருக்கின்றவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்பது போலவும் உலகத்தின் உச்சிக்கு சென்று வந்த இறுமாப்பும் அவர்களின் பேச்சின் இடையே அறுந்து விழும்.
 இடைவிடக்கொடுமை என்ன தெரியுமா எங்கள் பஸ்களில் ஒலிபரப்பாகும் பாடல்கள். ஏறியவுடன் பைலாப்பாடல்கள். கேட்டுக்கேட்டு புளித்துப்போன தேவாவின் ‘அய்தலக்காவை’ எத்தனை வருடத்திற்குத்தான் கேட்பது.

அல்குர்ஆன் வசனம் என்றாலும் எத்துனை முறை கேட்டாலும் நன்மை கிடைக்கும். நடு நிசியில் மெத்தையில் மல்லிகைப்பூத்தூவி அம்பு விடும் பாடல்கள். சற்றைக்கெல்லாம் அது சலித்துவிடும். பீ.சுசீலா சிறீனிவாசின் இடைக்காலப்பாடல்கள். 

வெளிநாட்டிலிருந்து திரும்பிவரும் மகளிருக்கென இளையராஜாவின் சில பாடல்கள் தயாராக இருக்கும். ‘ஆறு அது ஆழமில்ல….அது போகும் இடமும் ஆழமில்ல ஆழம் எது ஐயா அந்த பொம்புள மனசுதாய்யா’ என்று இளைய ராஜா மூக்கால் அழும் போது ரைவரின் பார்வையும் இன்னும் சிலரின் பார்வையும் அந்தப்பெண்கள் மீது மேயும்.இதழ் கோடியில் எள்ளலாய் ஒரு புன்னகை.

‘பொம்பளங்க காதலத்தான் நம்பி விடாதே…. ஒரே வகைப்பாடல்களும் பார்வைகளும் தொடர்ந்த வண்ணம் பஸ் ஓடிக்கொண்டே இருக்கும் .இப்போது ஒரு சின்ன மாற்றம்.செக்பொயின்ற் இல்லாத பயணம். சொகுசு பஸ் என்று பெயரளவில் இல்லாமல் நிஜமாகவே விண்ணைத்தொடும் அளவிற்கு பிரமாண்ட குளு குளு பஸ்கள். ஏறி அமர்ந்தாலே அலுப்புத்தட்டாத சௌகரியங்கள்.

பாடல்களை பார்த்துக்கோண்டோ,அல்லது முழு நீள சினிமாக்களை இரசித்துக்கொண்டோ பயணம் செய்யும் வசதிகள்.மனித மனங்களில் குடியிருக்கும் வக்கிரங்களை தவிர மற்றதெல்லாம் மாறிவிட்டன என்பது கசப்பான நிஜம்.


எங்கள் தேசம் - 241


No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.