Friday, 25 November 2011

சிறுகதை - துறவிகளின் அந்தப்புரம்


1
ங்கையான நிலா! நடுவானில் நின்று கும்மாளமடிக்கின்றது. நட்சத்திரங்களின் மின்மினி கூச்சலில் பூமி அதிர்கிறது. பூவிதழ்களின் ஓரத்தில் பனி இறங்கி சொட்டும் அழகு கொள்ளை.

மௌனம் புதைந்த முற்றத்தில் குளிர் சிலிர்க்கிறது.ஒரு பறவை ஏகாந்தமாக கூவிக்கூவி அவளை வட்டமிட்டு தன் துயரத்தை பகிர்ந்து கொள்கிறது.

 அதன் கரிய நிழல் அவளில் படியுமாற் போல் தாழப்பறந்து தன் நெகிழ்ச்சியை தெரிவிக்கின்றது. வீட்டுக் கூரையின் மேல் பூனைகளின் புனர்ச்சிக்கலவரம். வளவின் கோடியில் நிற்கும் கிடாயின் முயங்கும் எத்தனிப்பு.கடல் குமுறி அலையடிக்கிறது மனசுக்குள்.

உள்ளே வயதான உம்மாவின் இருமல் கதவிடுக்கில் எகிறி அவள் காதுக்குள் நசிகிறது. நடமாட  முடியாத வாப்பா இந்நேரம்  கொட்டக்கொட்ட விழித்திருக்கக்கூடும்.

பொங்கும் தேகத்தின் திணவுகள் கொதிக்கின்றன. நெற்றி புடைக்க அவள் கரைந்து வடிகிறாள் திண்னையில்! கொதிக்கும் உலை விழிகளின்  இடுவலில் ஆவி பறக்கிறது. கடந்த பல இரவுகளாய் இந்த அவசம்.

சாச்சாவை இம்முறை ஏமாற்ற விரும்பவில்லை.உம்மாவின் நச்சரிப்பு வேறு.
“மாப்புள்ள நல்ல பேணுதல்.தீனுன்றா நல்ல உசிரு, உன்ன நல்லா பாத்துக்குவாரு”  சாச்சா அவள் காதில் ஓத ஓத சர்ப்பம் படுத்துவிட்டது.

அவர் மகுடியில் உம்மாவும் சரண்.

வாப்பாவின் பாரிசவாதத்தின் பின் காலம் சாச்சாவாகி அவரின் நிழலில் தரிக்கும்படியான தரித்திரம் தொற்றிக்கொண்டது.

அழகின் மதர்ப்பில் அவள் பெண்மை தர்க்கம் கண்டது மெய்! வாழ்வு பற்றிய சௌந்தர்ய வர்ணங்கள் கனவுகளில் விழுந்து இன்பமூட்டின. கற்பனைத்திடலில் திமிர்பிடித்த குதிரைகள்
.
அவளைச்சுற்றி ஒளிவட்டம்.அவள் ஓர் ஆணின் மார்பில் ஒதுங்கும் வண்ணத்துப்பூச்சியாகி சிறகடித்தாள்.

“மாப்புள்ள இசுலாமிய முறப்படிதான் நிகாஹ் செய்வாராம், பொண்ணு வூட்டுலேர்ந்து  செப்புக்காசும் வேணாமின்னுட்டாரு, செலவு சாத்தும் வானாமாம்”

சாச்சாவின் செய்தி அரசல் புரசலாய் அயல் வீடுகளில் பரவிற்று.
 
”பாருங்க லைலாட காலத்த சும்மா மாப்புள்ள கிடச்சிருக்கான்,அப்ப ஏதோ சம்சயம் இருக்கு, நாம கையில காசோட பெரிய்ய வூட்டயும்  வச்சிட்டு மாப்புள்ளமாருட காலுல வுழனும்,இவளுக்கு பழம் நழுவி பாலுலலுவா வுழந்திரிச்சி எல்லாம் வெள்ளத்தோலுக்குத்தான் ”

அவள் சம்பந்தந்தில் ஊர் கூடி அதிசயப்பட்டது. கர்வப்பட்டது.

லைலாவின் மிடுக்கும் மிகைத்து விட்டது. ”என்ட அழகுக்கு, வாரவன் குடுத்து வக்கனும்டி” தோழிகளுடன் ஆனந்தித்தாள்.

பெண் பார்க்கும் படலம். பெண்னும் மாப்பிள்ளையை பார்க்கத்தானே வேண்டும். அந்த சுன்னத் ஹயாத்தாக்கப்பட்ட ஓர் மாலைப்பொழுதில்தான் அவள் கனவுகள் சிதறின.அதன் உடைவுகளில் இடறி இரத்தம் சொட்டச்சொட்ட நடந்து போனாள்.

முஹம்மது நபிக்கு  வஹீ இறங்கிய வயதிருக்கும் மாப்பிள்ளைக்கு. முழங்காலிடை நீன்டிருக்கும் உடை. அழகுபடுத்தப்படாத தாடி. கையிலொரு துண்டு. அவள் இராஜகுமாரனின் தலைப்பாகைக்குள் நறுமணம் இல்லை.கம்பீரமும் இல்லை.பனிக்குடம் உடைகிறது.

உம்மாவின் மடிக்குள் புதைந்து கிடக்கும் அவள் முதுகு அதிர்கிறது. லைலாவின் மனத்துடிப்பு தாய்க்கு புரிகிறது.என் குஞ்சு நான் என்னடி செய்வேன் என்பது போல் ஆதுரமாக மகளின் முதுகை நீவிக்கொண்டிருந்தாள். அந்தர சௌஜன்யம் தந்த தகிப்பில் லைலா ஓவென்று கதறுகின்றாள்.

வாப்பாவின் பாரிசவாதம்,உம்மாவின் நோயும் தனிமையும், குடும்பத்தின் கையறு நிலை சாச்சாவால் மீட்டி ஓதப்படுகிறது.அடிமேல் அடி அவள் மனமென்ற அம்மி மெல்ல நகர்த்தப்படுகிறது. மிகச்சாதுர்யமான நிர்ப்பந்த நகர்த்தல் அது.

லைலாவின்  நீரோடை கலங்கி விட்டது. அவளுக்கேயுரிய பளிங்கு ஓடையில்  எருமைகள் உழல்கின்றன.  முதலிரவில் பலத்த குறட்டை ஒலிக்குள் அவள் மன வெக்கை அடங்கிச்சிறுத்தது.இன்பத்தின் படித்துறைக்கு அழைத்துச்செல்வான் என்ற வல்லமையான கனவுகள் அவள் மஞ்சத்தில் உதிர்ந்து கிடந்தன.

தன்னை ஆசுவாசப்படுத்தி வாழ வேண்டுமென்று அவள் தீர்மானித்துக்கொண்டாள். வாழ்க்கை கனவு கண்டது போல் இல்லை.ஓர் ஆணின் திணவு பற்றி அவள் கொண்டிருந்த பிரமைகள் வானவில்லாகின.ஆகிருதியுள்ள உடலை சுமக்கும் வல்லமை தனக்கு வரமாக வாய்க்கவில்லை என்ற ஆதங்கம்.

அவள் முன் எதிர்காலம் கோரப்பற்களுடன்  ஆவென்று நின்றது.கவிழ்ந்து விழும் இரவுகளும் கும்மிருட்டும் அவளை அச்சமூட்டின.சல்லாபங்கள் அற்ற இயந்திரத்தனமான வாழ்க்கை அவளை வாழ் என்று சாபமிட்டு சென்று விட்டது.

மணம் புரிந்து ஒரு வாரம் உருண்டு விட்டது.அவரின் உள்ளே கனன்று கொண்டிருந்த ஆன்மீக ஊற்றின் கண்களை யாரோ காலால் கெந்தியிருக்க வேண்டும்.

”இஞ்செ புள்ள நான் இந்த வெள்ளிக்கிழமை வக்துல போகனும்,பேரு குடுத்து கிழமையாயிட்டு, வாரதுக்கு சுணங்கும் இந்தாங்க இத செலவுக்கு வச்சிக்கிங்க” ஆயிரம் நோட்டுக்கள் இரண்டு அவள் கைகளுக்குள் திணிக்கப்பட்டது.

 ”அப்ப நான் போய்ட்டு வாரன். ”

அவள் முகத்தை பார்க்காமலே மீரான் வெளியேறிச்சென்றான். லைலா திக்பிரமை பிடித்தவளாய் உறைந்திருக்கின்றாள். அடிமேல் அடி அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

மருமகனின் பக்தி ரசம் லைலாவின் உம்மாவை கனிய வைக்கின்றது.

”நீ ஏன்புள்ள யோசிக்கிறா அவரென்ன கள்ளுக்கடக்கா போறாரு பொம்புள புடிக்கியா போற. அல்லாட பாதயில போறாரு, ஒரு நாப்பது நாள் கண்ண மூடி திறக்குறதுக்குள்ள பறந்திடும் ”

தாயின் வார்த்தைகள் தீயாய் உருகி  மனதை பொசுக்கின.

நாற்பது இரவுகள் நாற்பது மாலைபொழுது நாற்பது பகல்கள் அவள் இத்தா இருக்க வேண்டும். கனன்றெரியும் தீயை ஊதி ஊதி அணைக்க வேண்டும். சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டு செல்லும் கிருக்கனாக அவன் செல்வதை அவள் வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

விம்மித்தணிந்த மார்புகளுக்குள் இன்னும் ஏமாற்றம் இறங்கிக்கொண்டிருந்தது.

”மனைவிக்கு செலுத்த வேண்டியகடமைகள் உண்டு கொடுத்து விடுங்கள். ”

”உங்கள் மனைவி உங்களுக்காக அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது போல், நீங்கள் உங்கள் மனைவிக்காக உங்களை  அழகுபடுத்துங்கள். ”

”உங்கள் மனைவியிடம் இன்பம் பெறுவதும் தர்மம் ”

”அவள் வாயில் ஆசையுடன் ஊட்டிவிடும் ஒரு கவளச்சோறும் வணக்கம்”;
ஹதீஸ் கலரியில் கேட்ட பயான்கள் காதுக்குள் நிறைகின்றன.

 ஓ நாயகமே! நீங்கள் மகான். பெண்ணின் உணர்வுகளை சொல்லிச்சொல்லி புரிய வைத்த பொக்கிஷம். என்ன செய்ய அவை சில ஆண்களால் பள்ளிவாயல்களில் மட்டும் படிக்கும் மந்திரங்களாகி விட்டதே !

2

வக்தில் வந்து ஐந்தாவது நாள். மலை நாட்டின்  செழிப்பான கிராமத்தில் பணிகள் தொடர்கின்றன.சுற்றிலும் பசுமை குளிப்பதற்கு நீரோடை.

 கொளுந்து மணம் மாறா தேனீர். கால்களை பிடித்து விட விடலைகள். மாலை நேர நறுக்குத்தீனி வட்டிலப்பம்,மிக்சர்,லெவரியா,முறுக்கு இத்தியாதி.

ஐந்தாவது நாள் மீரானின் முறை.ஜமாஅத்துக்கு”ஹித்மத்”செய்ய வேண்டும். காலையில் பள்ளி வராந்தாவில் ஒரு கூட்டம் தஃலீம் வாசித்துக்கொண்டிருந்தது.

புது மாப்பிள்ளை மீரானை சீண்டியபடி இரண்டு இளைஞர்கள் தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தனர். குளிருக்கு வாகான மெதுவென்ற ஸ்வெட்டர்கள். மீரான் லைலாவை நினைப்பது பாவமென்ற தோரணையில் ஸ்வெட்டருக்குள் உடலை புதைத்து இறைச்சி வெட்டிக்கொண்டிருந்தான்.

”புள்ளயால் என்ன கத கதக்கிறிங்க, நான் வக்துலலியா நிக்கிறன்.ஸஹாபாக்கள் கலியாணம் முடிச்சி மறுநாளே யுத்தத்திற்குப்போய் ஷஹீதாகலியா? ” மீரான் அல்லாஹ்வை கண்டது போல் பரவசப்பட்டான். அந்தக்கிராமத்தின் தெருத்தெருவாய் அவன் கால்கள் அலைந்தன.

அவன் முற்றிய ஆன்மீகவாதி  முக்தியின் விளிம்பு வரை வந்துவிட்டான்.அவன் பாதையில் மலக்குகள் நிறைகின்றனர். வலீமார் கைலாகு கொடுக்கின்றனர்.

நாதாக்கள் அவன் திருப்பாதங்களில் பன்னீர் தெளிக்கின்றனர். மூசாவுக்கு மட்டுமா கடல்  பிளக்கும் ?  ஆபிரிக்கக்கடல்கள் அவனது குழாத்திற்கு பளிங்குத்தரையாகின்றது.

 இஸ்ரேல் அவர்களை கட்டியணைத்து முத்துகிறது.அமெரிக்காவின் சந்து பொந்துகளில் அவர்கள் முதன்மை மனிதர்கள்.

அந்தரத்தில் அலையும் பாவம் சுமந்த ஆன்மாக்களை  மர்கஸில் அடைத்து சுவர்க்கத்திற்கு அனுப்பும் பணி மீரான் போன்ற இளம் துறவிகளால் ஈடேறுகின்றது.

செல்லுமிடமெல்லாம் ”ஹித்மத்”. அட்சயப்பாத்திரங்களில் கோழிகள் விழுந்தன. கிடாய்கள் கனத்தன.நபியின் வாரிசுகள் வயிறு புடைக்கவும் உண்ணலாம்.

உண்டி சுருங்குதல் பெண்டிருக்கு மட்டும்தான். உண்டி மட்டுமா இவர்களால் சுருங்குகின்றது?

வனாந்திரங்களில்  ஏகனைத் தேடியலையும் பிரம்ம ரிஷிகள் இமயமலைச்சரிவில் நித்ய நிம்மதிக்கு கரையும் சன்னியாசிகள். பாரத கங்கையோரங்களில்  தியானத்திலிருக்கும் முனிகள் .

மீரானும் தெருத்தெருவாய் அலைவதன் ஊடே அல்லாஹ்வைக் காண்கிறான். அழியும் உடல் பற்றி அவனுக்கு கவலையில்லை.

இந்த உலகம் மூமின்களின் சிறை கூடம்.சிறைக்குள் தன்னை வருத்திக்கொள்ளும் கடவுளின் ஆயுள் கைதி மீரான். அவன் கூண்டருகே லைவாவால் அண்மிக்கவே முடியாது.

ஈமானின் முழு ஜோதியும் அவனைச்சூழவும் பரிவட்டம் போட்டுள்ளது.

”ரசூலுல்லாவே! நீங்கள் ஆடு மேய்த்திருக்கின்றீர்கள்,வியாபாரம் செய்திருக்கின்றீர்கள்,குடும்பத்தை காப்பாற்ற கூலியாகவும் வாழ்ந்திருக்கின்றீர்கள். உங்கள் உம்மத்துக்களால் முடியவில்லையே! ”

பால்மாவுக்கு ஏங்கும் குழந்தைகள். ஆலிங்கனத்திற்குத் துடிக்கும் மனைவிகள். நோயுற்றிருக்கும் வயதான அன்னையர்,கடன்தாரிகள், தந்தையில்லை என்ற ஓர்மத்தில் ஊர் சுற்றும் பிள்ளைகள்,

காதலித்து கழுவேறும் குமருகள்,வேலிதாண்டும் ஆடுகள் இந்த துன்பங்களிலிருந்து விடுதலை பெற நாயகமே நீங்களா காட்டினீர்கள் வக்தையும், பக்தியையும் ?

”மேலான பெரியார்களே! அல்லாட தீனில சம்பூர்ணமாக நுழஞ்சி கொள்ளுங்க”
மீரான் பள்ளியின் மத்தியில் அமர்ந்து கொண்டு உபந்நியாசம் செய்து கொண்டிருந்தான்.

மர்கஸ் அவனுக்கு ”அமீர்” பட்டம் சூடிவிட்டது. இனி அவனுக்கு கவலையில்லை. கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் செல்லும் குழுவில் அவனும் அடக்கம். அவன் பயானில் பள்ளி நெக்குறுகி கரைகின்றது.அவனை கூர்ந்து பர்ர்த்தபடி ஜனப்பிரளயம் ஆனந்திக்கின்றது.

”அமீர் ஷாஹிப் ” என்ற பட்டம் பெற எத்துனை தியாகம் வேண்டும்.இனி இந்த அழியும் உடல் தீனுக்குத்தான். இன்னும் வக்த கூட்ட வேண்டும் அமீர் சாப் நாற்பது நாளில் வீடு திரும்புவதா ?

3

லைலாவின் மனசுக்குள் கடற்பாறை இறங்கியது.வாப்பாவின் பென்சன் அவரின் மருந்துக்கும் உம்மாவின் இருமலுக்கும் போதுமாயிருந்தது. திணித்து விட்டுப்போன இரண்டாயிரத்திற்கும் பசி தெரியுமா விலை வாசி தெரியுமா மூன்று கிழமைதான் அது தாக்குப்பிடித்தது.

”எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்துக்கொள்வான்,தவக்குள் வையுங்க மீரான் ஷாப் இன்னும் நாப்பது நாள் பேரு குடுத்திருக்காரு.முடிஞ்சிதான் வருவாராம் ”

 ஊர் மர்கஸிலிருந்து செய்தி வந்தது. அது செய்தியல்ல மரணம்.

லைலா தான் ஏது செய்;கிறேன் என்றில்லாமல் இலக்கற்றுதிரிந்தாள். தூங்காத இரவுகள் முற்றத்தில் கழிந்தன.நிலவில் தோய்ந்தாள்.இருளுடன் இருளாய் கரைந்தாள்.பனியில் இளகினாள். கிளர்ந்தெழும் அலையடங்க உச்சந்தலையில் நீரை ஊற்றினாள்.

நடுங்கும் தேகத்தை அடித்து அடக்கினாள்.ஊழித்தாண்டமாவடிய மனசை தேற்ற எதிர்வீட்டில் புத்தகங்கள் வாங்கினாள்.வாசித்தாள்.

கெம்பஸ் முடித்து விட்டு, வேலை பார்க்கும் பால்ய வயதுத் தோழன் நியாஸ் நல்ல புத்தகங்களை தந்தான். அவளை உற்சாகப்படுத்தினான். உரையாடினான்.

”லைலா குடும்பத்த கவனிக்கிறதும் இபாதத் என்று அவருகிட்ட சொல்லுங்க. ”

”ஓம் நியாஸ் என்ர வாழ்க்க காட்டில எரிகிற நிலாவாப்பெய்த்து அழகிருந்து என்ன செய்ய பாழாய்போன ஏழ்ம  என்ர வாழ்வ தின்னுட்டு”

பந்தலற்ற   கொடி தன் வழியில் ஒரு மிலாரைப்பற்றிக்கொண்டது போல் லைலாவுக்கு நியாஸின் ஆறுதல் தேவைப்பட்டது.

காலங்கள் சடுதியாக மறைந்தன. லைலா இப்போது இழந்த வாழ்வின் வசந்தங்களை அடைந்தவள் போல் துள்ளித்திரிந்தாள். அவள் ஜன்னல்கள் ஊடே இதமான காற்று வந்தது.

எதிர்வீட்டு ஜன்னல்களும் விரிந்தே கிடந்தன.அதற்குள்ளிருந்து மொய்க்கும் இரு விழிகளுக்காகவே லைலா தன்னை அலங்கரிக்கதொடங்கினாள்.

இரவுகளில் அவளின் முற்றத்தில் நட்ஷத்திரம் பொழிந்தது.ஒரே பாயில் அருகருகே அமர்ந்தபடி அவர்கள் விவாதித்துக்கொண்ருந்தார்கள்.நெடிய வாழைமரத்தின் நிழல் விழும் ஓரத்தில் அவர்களின் நிழல்கள் கவிந்திருக்கும்.

வீட்டுக்குள் பாவும் அவன்  பார்வைகள் மொழிகளற்று அலைகின்றன.

4

மீரானின் கியாதி ஊரெல்லாம் பரவியது.தியாகம் என்ற கம்பளியால் அவனைப்போர்த்தி மர்கஸ் அவனை அழகு பர்hத்தது. ”மீரான் ஷாப பாருங்க எவ்ளவோ தியாகம் சுபுஹானல்லா! ”

மீரானின் பிரார்த்தனைக்காய் ஜமாஅத் ஏங்கிக்கிடந்தது. அவன் கடைக்கண் கடாட்சம் கிடைத்து விட்டால் போதும் மோட்சம் பெறலாம் என்ற நப்பாசை. புறப்படும் ஜமாஅத்துக்களுக்கு ஆசி வழங்கும் கைங்கரியம் மீரானுக்கு மட்டுமே வாய்த்திருந்தது.

அவன் உருகி வழியும் மொழுகு வர்த்தி. அல்லாஹ்வின் சந்நிதியில் மாபெரும் பக்தன்.இனி அவனுக்காக ஓடும் பஸ் நிற்கும்.விமானங்கள் இறங்கும். விலங்குகள் அடிபணியும். காட்டாறு அடங்கும். திமிர்பிடித்த சிறுத்தை கூட பணியும்.

அவன் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட  முனி. அவன் தோட்டத்தில் ஏவாளின் கனி இல்லை ஆதாமின் சாத்தானும் இல்லை. அவனுக்கு நிகர் அவன். அல்லாஹ்வின் அர்ஷில் அவன் மூச்சுக்காற்று முட்டும்.ஜிப்ரயீல் வந்து அவனுக்கு தூது சொல்லுவார்.சித்ரதுல் முன்தஹாவில் அவன் ரூஹீம் தங்கும்.

தேவகன்னியரின் கொங்கைகளை பற்றியபடி தேனாற்றில் அவன் குளிப்பான். மது ரசம் ஏந்தி நிற்கும் சொர்க்கலோக கன்னியரின் இடைகளில் முகம் புதைத்தபடி கஸ்தூரியின் வாசத்தை நுகர்வான் புனரப்புனர முடிவுறா இன்பத்தில் அவனை கன்னியர் மூழ்கடிப்பர்.

மேலான பெரியார்களே! பெண்களுக்கு வீட்டுத் தஃலீம் முக்கியம் .இஷாவுக்குப்பின் ஒரு மணி நேரம் வாசியுங்க. தீனுக்காக பாடுபடுவது இந்த துன்யா,துன்யாவுடைய வஸ்துக்களை விட மேலானது. ” மீரான் சிறகடித்தான்


5

”உம்மா தேடுவாக நான் போய்ட்டு வாரன், சொன்னது நெனப்பிருக்கட்டும் செல்லமாக லைலாவின் முகத்தை கிள்ளி விட்டு  நெடு நேரமாக கதைத்துக்கொண்டிருந்த நியாஸ் விடைபெற்றுச்சென்றான்.

மௌனமாய் எரிந்த திரியை தூண்டிவிட்டுச் செல்கிறான் பாதகன்.அவள் குழப்பங்களின் மொத்த உருவாய் மாறிப்போனாள்.

நள்ளிரவு நெருங்கும் தருணம் அவள் இதயம் அடித்துக்கொண்டது.கணத்த நெஞ்சுடன் உள்ளறைக்குள் சென்றாள்.

வெகு நாளாய் படுக்காத மஞ்சத்தை தட்டி சரிந்து கொண்டாள்.சிமினி விளக்கின் பிஞ்சு ஒளி அறை முழுக்க வழிந்திருந்தது.வீட்டின் மூலைக்கு மூலை ஒட்டடைகள் அடைந்திருந்தன.ஒழுங்குபடுத்தப்படாத பொருட்கள் வீடு முசிய இரைந்து கிடந்தன.படுக்கயறை அவளுக்கு மூச்சுமுட்டியது. கதவு சாத்தப்படாத வெளிவாசல் மௌனமாய்  அடைந்திருந்தது.அதில் அவள் விழிகள் ஆர்வமுடன் மொய்த்து நின்றன.

தூரத்தே நாய்கள் குறைக்கின்றன.புறவளவில் நின்ற ஆடுகள் அரவம் கண்டு மிரள்வது தெரிகிறது.மரக்கிளைகளில் அடைந்த கோழிகள் சலனத்துடன் அசைகின்றன. அவள் செவிப்பறை நுண்ணிய ஒலிகளுக்கும் வசியமாயிருந்தது.வாப்பா புரண்டு படுக்கின்றார் நார்க்கட்டில் கீச்சிடுகிறது.

உம்மாவுக்கு மாத்திரை மயக்கம் தீரவில்லை. மெலிந்த குறட்டை ஒலி வாப்பாவுடன் பொருதுகிறது.வாசலில் ஆளரவம்.கூதலில் கொடுவும் குஞ்சுப்புறாவாக தேகம் நடுங்கியது.ஏறி இறங்கும் மார்பின் துடிப்பு கணத்துக்கதிக்கிறது.

ஜிவ்வென உடல் அதிர்ந்து அலற, லைலா வாசக்கதவில் கண் பதிக்கிறாள். மோகன இருள் அறை முசியப் பரவுகிறது. திண்ணைக்குள் ஊரும் நிழல் நெருங்க நெருங்க லைலா நடுக்கத்துடன் எழுந்து நின்றாள்.


2006.‏‏-‏02‏‏-28‏
பிரசுரம் வீரகேசரி உயிர் எழுத்து 03.07.06