Tuesday 17 April 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                                      
                                                     தொடர்- 12

இயக்கத்தில் இணைந்து இணையற்ற கதாநாயகர்களாக ஊருக்குள் நாட்டாமை செய்து வந்த புஹாரியும்,உமரும் முஸ்லிம் பிரதேச குறுநில மன்னர்களாக அரசோட்சிய காலம்.உமர் நல்ல வசீகரமான இளைஞன்.நான் விடுதியிலிருந்து விடுமுறையில் வீட்டுக்கு வரும்போதெல்லாம் முள்ளிவெட்டவானில் இருக்கும் வாப்பாவின் கடைக்கு வந்து விடுவேன். 

இப்படி வரும்போதெல்லாம் இயக்கப்பொடியன்களில் கண் விழிப்பதுண்டு. பார்த்துப்பழகிய முகங்கள்.கூடிக் குலாவிய நண்பர்கள்.உருவத்திற்கு மிஞ்சிய துவக்குப்பிடிகள் சதா அவர்களை துன்புறுத்தியபடி துருத்தி நிற்கும்.சிரிக்க மறந்த விழிகள் எதையோ வெறித்தபடி கனவுகளை தொலைத்துவிட்ட பரிதாபமாய் இன்று என்னுள் அந்த விழிகளின் கரிய நிழல் ஊஞ்சலாடுகிறது.

ஒரு மதிய நேரம் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன்.நீர் பம்பியின் வட திசையில் குளக்கட்டின் ஓரத்தில் உமர் இருந்தார்.அடர்ந்த பனை மரங்களின் கீழ் வலது கையை கன்னத்தில் வைத்து ஊன்றியபடி அவர் படுத்திருந்தார்.

நான் அவரைக்கண்டதும் சைக்கிளைவிட்டு இறங்கி அருகில் சென்றேன்.அவர் துவக்கு பனை மரத்தில் சாத்தப்பட்டிருந்தது. இடுப்பில் ஒரு பட்டி. அதற்குள் குண்டுகளும் ரவைகளும்.நிரப்பட்டிருந்தன.கையில் வாக்கிடோக்கி உறுமியபடி இருந்தது.என்ன மருமகன் வாப்பாட கடைக்கா என்றார். ஓம் மாமா என்றேன்.பின்பு எனது படிப்பு,இன்ன பிற விசயங்கள் பற்றியெல்லாம் கேட்டார்.

அவர் சகோதரியின் மகனும் என்னுடன்தான் படித்தார். நானும் அவனும் நல்ல நண்பர்கள்.அயல் வீடும் கூட. அவனைப்பற்றியும் விசாரித்தார்.இடைநடுவில் அவன் படிப்பை முடித்து விட்டு மாமாவுக்கு எதிராக பொலிசில் போய் சேர்ந்து துவக்குடன் திரிந்தது வேறு கதை.

ஓவ்வொரு கேள்விக்குப்பின்பும் நிதானமாக ஓய்வெடுப்பார்.ஆற்றுப்பக்கம் பார்வை விழும்.

அமைதியாகவே சிரிப்பார்.பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு படித்து என்ன செய்யப்போறிங்க, பேசாம இயக்கத்துல சேருங்க என்றார். அந்தச்சிரிப்பு அப்படியே அவர் உதட்டில் அப்பிக்கொண்டு ஈரலித்தது.கிரிக்கெட் மட்டைக்குப்பதிலாக துவக்குகள் அரசோட்சிய யுகம் அது. 

இப்படித்தான் இயக்கத்திற்கு ஓடி ஓடி ஆள் சேர்த்தவர்களை அந்த இயக்கம் தலை கீழாக வெட்டிப் புதைத்த காலம் வந்தது. 90ம்ஆண்டு யாழ்ப்பாணத்தை விட்டும் முஸ்லிம்களை விரட்டிய பின் இயக்கத்துல இருந்த முஸ்லிம் போராளிகளையும் ஓரங்கட்டியது. ஓரமென்றால் சுட்டுக்கொன்று தலை கீழாக மண்ணில் புதைத்தது.

உமர் மாமாவையும் இப்படித்தான் வாகநேரிக் காட்டில் புதைத்து விட்டதாக பார்த்தவர்கள் சொல்லக்கேட்டு அதிர்ந்திருக்கின்றேன். சக தோழனை இயக்கத்திற்காக ஆள் திரட்டியவனை இயக்கமே தஞ்சமென நம்பியவனை,தன் சொந்த உறவுகளை வெறுத்து தலைவனை நேசித்து சமயத்தையும் சமுதாயத்தையும் தூக்கி எறிந்துவிட்டு இயக்கமே மூச்சு என நம்பி வந்தவனை ஒரே காட்டில் உறங்கி, ஒன்றாக வாழ்ந்தவனை உயிருடன் சுட்டுக்கொன்று புதைப்பதற்கு எப்படி மனசு வந்தது. 

பிரபாகரன் என்ற கொடுங்கோலனால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதை உமர் மாமாவை நிகர்த்த பலரின் மரணங்கள் எனக்கு உணர்த்திக்காட்டின.

மாவீரர் இல்லங்களுக்கு பெட்டிகள் செல்வது போல் ஓட்டமாவடிக்கும், வாழைச்சேனைக்கும் புலிக்கொடி போர்த்திய சந்தூக்குகள் வந்தன.ஏன் போராடினோம், யாருக்காகப் போராடினோம், எதற்காகப் போராடினோம் என்ற தத்துவங்கள் தெரியாமல் அந்த ஜனாஸாக்கள் அடக்கப்பட்டன. போரின் இழப்பு எங்களையும் அதிகமாகப் பாதித்தது. வெளியே வராத இழப்புகள், பதியப்படாத இழப்புகள் அனந்தம்.

மாவீரர் இல்லத்தின் கல்வெட்டுக்களில் முஸ்லிம்களும்; தமிழீழத்திற்காக தன்னை தியாகம் செய்து உறங்குகிறார்கள் என்றால் இந்தப் போராட்டம் எமக்கு என்னதான் பெற்றுத்தந்து. சரி அதை விடுங்கள்.பின்வரும் அத்தியாயங்களில் பேசலாம்.

இரண்டாவது தடவையாக காடு என்னை வரவேற்றது. சாச்சா திரும்பிப்பார்த்து கஸ்டமா என்றார். இல்லை என்றேன். என் தோளில் சில சாமான்கள்.

நடக்க நடக்க காடு எங்களை ஆவென்று விழுங்கத்தொடங்கியது.சருகுகள் சரசரவென்று அழுந்த நடப்பது திகிலாக இருந்தது. கிளைக்குக்கிளை தாவும் மந்திகளின் அட்டகாசம். காட்டின் விலாவை உரசியபடி ஓடும் ஆற்றின் சலசலப்பு.சாச்சா காட்டிற்கு வசியப்பட்டவர் போல் அவர் பாட்டில் நடந்தார்.

சூரியன் உச்சியில் இருந்ததை சில பொட்டல் வெளிகள் வெளிச்சமாய்க் காட்டின. நடுவனத்தில் திருவிழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தாயிற்று.சாச்சா எப்படி இந்த இடத்தையெல்லாம் கண்டு பிடித்தார்.

கோதுமை மாவில் இந்த நூற்றாண்டின் இணையற்ற உணவுப்பண்டமாம் பராட்டாவையும் சம்முசாவையும் கொத்து ரொட்டியையும்,தயிர் வடையையும்,டேஸ்ட் கிழங்கையும் கண்டு பிடித்த நமக்கு இதுவொரு பொருட்டா? 

மைதானத்திற்குள் திடீரென தூக்கி வீசப்படதான உணர்வு. இது வரை தாங்கி வந்த காடு காறித்துப்பியது போல் இருந்தது. ஏழாம் நாள் குழந்தைக்கு முடி சிரைத்தது போல் வனத்தின் ஒரு பகுதி நன்றாக துப்பரவாக்கப்பட்டிருந்தது.

புற்களற்ற தரையைப் பார்க்க எனக்கு அருவருப்பாக இருந்தது.ஓங்கி வளர்ந்திருந்த சில மரங்களின் கிளைகள் குடைபோல் வளைந்து நிழல் பிடித்து நின்றன. கந்துகளின் வகிடில் நழுவி வெளிச்சம் கீழே பாவியது.ஆல மரங்களின் இராட்ச விழுதுகள் பூமியை தொட்டபடி பெருமரமாய் ஆடிக்கொண்டிருந்தன.



ஊஞ்சல் இன்னும் ஆடும் .........
எங்கள் தேசம் 219



Wednesday 4 April 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

தொடர்- 11
தமிழ் முஸ்லிம் உறவுகள் மனத்தூய்மையுடன் பூத்துக்குலுங்கிய காலமது.கருகருவென்ற கும்மிருட்டிலும்,அடர்ந்த வனாந்தரங்களிலும் விட்டேத்தியாக சுற்றித்திரியவும், அவர்களுடன் கூடவே நடைபோடவும் மனம் பயங்கொள்ளாத காலம்.எனது பதின்மூன்றாவது வயதில் அப்படியொரு பொற்காலம் வாய்த்தது.

ஒரு மாலைப்பொழுதில் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த என்னிடம் சாச்சா வந்து 'தம்பி காலையிலை திருவிழாவுக்குப் போவம் ரெடியாயிரு" என்றார்.

எனக்கு தலைகால் புரியாத குதிப்பு.மறுநாள் காலை வரை நெஞ்சு பொறுக்கவில்லை.எப்போது தூங்கினேன் என்பது நினைவிலில்லை. அதிகாலை சேவல் கூவுவதற்கு முன்.. பொலபொலவென்று விடிவதற்கு முன்... எனது உம்மாவும் கண்விழித்து அப்பம் சுடுவதற்கு முன் கண் திறந்தேன்.

திண்ணையின் நடுவில் தனியே குந்திக்கொண்டு இருண்ட வானத்தையே வெறித்திருந்தது நினைவில் ஆடுகிறது.

சாச்சாவுடன் திருவிழா நடைபெறும் வனத்திற்குச் சென்ற போது பரவசம் தொற்றிக்கொண்டது.

ஆதிவாசிகளின் திருவிழா என்பது நடுக்காட்டில்தான்.வாகநேரிக்குளம் ஆரம்பிக்கும் தளத்திற்கு முன் சரிவில் சரசரவென்று இறங்கினோம். பனைமரங்கள் அடர்ந்த முதற்காடு வரவேற்க, சூரியன் நன்றாக பூமியில் விழுந்தது.கால்கள் நகர நகரப் பெருங்காடு வாவென்று வரவேற்றது.

காட்டின் அடர்த்தியில் கிளர்ச்சி கொண்ட முதல் அனுபவம் இதற்கு முந்திய வருடத்தில் கிட்டியது.இயக்கத்தில் இருந்த சின்னவன் அண்ணாச்சி தலைவர்ர படம் போடப்போறம் வாரியளா என்றவுடன் காடேகியது நினைவில் உள்ளது.

ஒற்றையடிப்பாதையில் கும்மிருட்டில் தீப்பந்தத்தை கையிலேந்தி அண்ணாச்சி வழி நடத்திச்சென்றார். இருள் நதிக்குள் மூர்ச்சையாகி விடுவோனோ என்ற பதைபதைப்பு. என்னுடன் நிறைய நண்பர்கள்.இன்று போல் கிரிக்கெட்டும்.புலமைப்பரீட்சை சிறையும் இல்லாத விடுதலைக் காலம்.

தமிழ்,முஸ்லிம் என்ற வேறுபாடற்ற பயணம்.யாருடனும் பேசாமல் வரும்படி அண்ணர் வனத்தின் தலைவாசலில் வைத்து அறிவுரை கூறினார் ஒரு மைல் தூரம் ஆவலுடன் நடந்தோம்.தலைவரின் உரையை கேட்கும் பரவசம். இன்னதென்று விபரிக்கவியலா இன்ப அதிர்ச்சியுடன் நடந்தோம்.அவர் பிற்காலத்தில் எம்மையெல்லாம் அதிர்ச்சியடையவைப்பார் என்பதை அறியாத பருவம்.

அடர்ந்த காட்டின் மையப்பகுதியில் ஒளி வெள்ளம் பரவியிருந்தது. இது எப்படி சாத்தியம் என்ற ஆவலும் திகைப்பும். வாண்டுகளான எங்களுக்குப் புரியவே இல்லை. துவக்குப் பிடித்திருக்கும் அண்ணாக்களை வித்தைக்காரர்களாகவும் சாகசங்கள் நிகழ்த்தும் அற்புதமானவர்களாகவும் மனம் பதியத்தொடங்கிற்று. 

இருளைக்கிழித்து அரை மைல் தூரம் ஒளிக்கடல் பொங்கிப்பூரித்தது. சின்ன டி.வியை தூக்கிக்கொண்டு வந்து சின்னவர்தான் மேசையில் வைத்தார். 'டெக்கும்" அதனுடன் இருந்தது. படக்கொப்பியை போட்டு விட்டு வெற்றிச்சிரிப்புடன் எமை நோக்கித் திரும்பினார்.தலைவர் பேச்சக்கேளுங்க தம்பிமாரு,கேட்டுப்புட்டு நீங்களும் போராட வரனும்,இப்ப இல்ல பிறகு கூப்பிடுவம் அப்ப வந்தாச் சரி என்றார்.

அக்காலத்தில் ஒரு சில வீடுகளில்தான் டி.வி இருக்கும்.ஒவ்வொரு புதன்கிழமையும் செட்டியார் தெரு லலிதா நகைமாளிகையின் கிருபையால் தமிழ்படம் போடுவார்கள். கருப்பு வெள்ளைப்படங்கள். டி.வி உள்ளவர்கள் அதை முற்றத்தில் தூக்கி வைத்து வாசலில் வந்து குவியும் கூட்டத்திற்கு இலவச சேவை செய்வார்கள். சிலர் அதை பொத்திப்பொத்தி குமர் பிள்ளையைப்போல் வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பார்கள். முஸ்தபா போடியாரின் மகள் மர்யம் மாமியின் வீட்டுமுற்றத்தில் மணலில் குந்திக்கொண்டு டிவியில் படம் பார்த்த அனுபவத்திற்குப்பின் இப்போது அண்ணரின் கடாட்சத்தால் டிவியில் வீர காவியம் பார்த்தோம்.

இன்று டி.வி இல்லாத வீடு சவம் இல்லாத மயானம் போல ஆகிவிட்டது.ஹோம் தியேட்டர்களும் சட்டலைடுக்களும் கேபிள் டிவிகளும் வண்ண மயம்.முதன் முதலில் வாழைச்சேனை வெளிங்டன் தியேட்டர் அகன்ற திரையில் ஆயிரம் ஜென்மங்கள் பார்த்தது நினைவில் வந்து தொலைக்கிறது. எங்களுக்கு நடுக்காட்டில் அந்த டிவியும்,தலைவரின் வீர உரையும் பரவசம்தான்.

எனக்கும் அந்த துவக்கில் மனம் தொற்றிக்கொண்டது. சொக்லட்,பிஸ்கட்டுக்கு ஆசைப்படுவது போல் அதனையும் பக்கத்தில் வைத்திருக்க பிரியப்பட்டது மனம். 

இடையில் தேனீர் ஊற்றித் தந்தார்கள்.நிறைய அண்ணாக்கள் கையில் துவக்குடன் இருந்து பக்திப் பரவசத்துடன் தலைவரின் உரையை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

யாரும் பேசவில்லை. அன்று அடர்ந்த வனத்தில் அமர்ந்தபடி பிரபாகரனின் மாவீரர் தின உரையைத்ததான் கேட்டிருக்கின்றேன் என்பதை பிற்காலத்தில் நினைத்து அதிசயப்பட்டதுண்டு.   

அதைவிட ஆச்சரியம் அவர்களுடன் அங்கேயே உறங்கி,விடியற்காலையில் சின்ன அண்ணாச்சி வீதிக்கு அழைத்துக்கொண்டு விட்டார் என்பது எவ்வளவு அற்புதமான காலம் அது.யாருக்கும் எந்தச்சேதாரமும் இல்லாமல் உறவுகள் துளிர்த்த காலம்.

இரவில் கடித்து இரத்தம் குடித்த நுளம்புகளையும்,வழியில் கால்களை கீறிக்கிழித்த தொட்டாச்சிணுங்கி முற்களையும் தவிர எங்கள் இரத்தங்கள் மதிப்பாகவும் பெறுமதியாகவும் ஏன் கௌரவமாகவும் இருந்தது .இரண்டாயிரம் ரூபாயை பையில் போட்டுக்கொண்டு தொழிலுக்குச் சென்றால் கழுத்தில்லாமல் கிடக்கும் 'குடு' காலமல்ல அது. எந்தக்காட்டிலும் உயிர்ப்பயமின்றி விசுவாசமாக உறங்கி எழும் அற்புத காலங்கள் அவை. 

அண்ணாச்சியின் இயக்கத்துக்கு வரனும் என்ற வேண்டுகோளுடன் வாகனேரிக்குளக்கட்டும் உமர் மாமாவும் நினைவில் ஊஞ்சலாடுவதை தவிர்க்க முடியவில்லை. 

ஊஞ்சல் இன்னும் ஆடும் 
.........
எங்கள் தேசம் 218


  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...