Tuesday 22 November 2011

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

 
தொடர்  2
சண்டை சச்சரவற்ற ஆனந்த வாழ்க்கை.அன்று ஒரு வீட்டிலிருந்து வரும் கறி கோப்பை இன்று பத்துப் பேருக்குப் போதும்.

உம்மா அவவின் மச்சி முறையான ராவியாப்பெரியம்மாவிடம் குர்ஆன் ஓதுவதற்கு கொண்டு போய்விட்டா. ஊரில் பெரும்பாலானவர்கள் அவவிடம் ‘அலிப்பே’ கற்றிருப்பார்கள். குர்ஆன் மீதான வெறுப்பை பிஞ்சு மனங்களில் சின்ன வயதிலிருந்தே விதைப்பதில் பல பின்புலங்களை நான் இனங்கண்டிருந்தேன்.

 ஒன்று ராவியாப்பெரியம்மாவிடம் இருந்த குற்றி. சங்கிலியால் பிணைக்கப்பட்ட அதில் காலை கட்டி விட்டால் ஓடாமல் இருந்து குர்ஆன் ஓதுவார்கள். பெரிய ‘தல தெரிச்சவர்’களுக்குத்தான் இந்தக்குற்றி. மற்றது பிரம்பு.மூன்றாவது சதா கொலை வெறியுடன் அலையும் சில லெப்பைமாரும் சில மௌலவிகளும்.

 எங்கள் வீட்டிற்கு முன் தரிசாகக்கிடந்த வெற்றுக்காணியில் குர்ஆன் மதரசா ஒன்றை கட்டுவதற்கான முஸ்தீபுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஹனீபா மௌலவிதான் அதைக்கட்டினார். சீனிச்சுருளும் சந்தணக்குச்சியும், கற்கண்டும், மிளகும், காணிக்கையும் தந்து உம்மா ‘ஓதுர பள்ளிக்கூடத்’தில் சேர்த்து விட்டா.

 அதுதான் அன்று வழமை.குர்ஆன் மதரசாவில் சேர்த்து ஓதி முடித்து வெளியேறுவதற்குள் ஒவ்வொரு ஜுஸ்வுக்கும் மௌலவிமார்களுக்கு ஹதியா கொடுத்தனுப்புவதும் ஒரு பர்ளு போல பின்பற்றப்பட்டது.

ஆறு மாதத்தில் குர்ஆனை ஓதி முடித்தாயிற்று.மௌலவியை வீட்டுக்கு அழைத்து பாதிஹா ஓதி, சாப்பாடும் கொடுத்து பெரிய காணிக்கையும் கொடுத்ததார்கள்.

வெளியேற்று விழாவில் அவர் எழுதித்தந்த சொற்பொழிவை மனனமிட்டு தொண்டை கிழிய கத்தினேன்.மீரா சவுன்ட ஸ்பீக்கரில் அது ஊருக்கெல்லாம் போய் சேர்ந்தது. எனது சாச்சியை மட்டும் அந்தப்பயான் சென்று சேரவில்லை.

அவவின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க மறுபடியும் மேடைக்கு அழைத்து அதே ஆவேசம் ததும்பிய. பேச்சு மீரா சவுன்ட் ஸ்பீக்கர் தாபனத்தாரின் குழல் அடைப்புகள் அன்றுடன் நிவர்த்தியாயிருக்கலாம் யார் கண்டார்.

விழா முடிந்த கையுடன் மௌலவி உச்சவட கல்லுக்கு சுற்றுலா சுட்டிப்போனார்.ஒர் அதிகாலை ‘ட்ரக்டர்’ வந்து மதரசா முற்றத்தில் நின்றது. விடிய விடிய தூங்காத நாங்கள் குய்யோ குய்யோ வென்று கும்பலாக மெசினில் ஏறிக்கொண்டோம்.

 கடாரம்,சட்டிபானை சகிதம்  வாப்பாமார்கள் எல்லாம் ஒரு மெசினில்.
மெசின் கிளம்பும் போது தேய் பிறை அடிவானத்தில் மின்னியது. வயலுக்குச்செல்லும் வண்டில்கள் ,சைக்கிள்களை நாங்கள் முந்திச்செல்கையில் ஒரு குய்யோ. மௌலவி அதட்டினார். ‘பைத்த’ படிங்கடா என்றார். அவர் யா நபி ஸலாம் அலைக்கும்….. அடி எடுத்து முடிப்பதற்குள் நாங்கள் யா ஹபீபில் தொடங்கி  முழு பைத்தையும் பாடி முடித்தோம்.

‘அல்லாஹீ காலி குணாவை ‘பைசால் தொடங்கினான். கோரசாக குணா குணா என்று வாண்டுகள் கூச்சலிட்டன.இஸ்ஸதீனுடன் நான் பைசாலும் அடுப்புக்கல்லாக மெசின் பெட்டிக்குள் இருந்தோம்.

இஸ்ஸதீன் எங்களுக்கு மட்டும் கேட்குமாற்போல்  ‘உங்கம்மா உன்னப்பெத்தா எங்கம்மா என்ன பெத்தா மவ்லாகி மன்னப்பெத்தா’ என்றான். மூவரும் உரத்துச்சிரித்தோம். சிரிப்புக்கு காரணம் இருக்கவில்லை.சும்மா சிரிப்பு வெடிக்கும்.வீதியில் நிற்கும் மாடுகள் வாலைக்கிளப்பி சாணமிட்டாலும் சிரிப்பு.கன்றுக்குட்டி முலையை இடித்து இடித்து குடிப்பதைக்கண்டாலும் சிரிப்பு.நாயைக்கண்டாலும் சிரிப்பு இப்படி சிரிப்புக்கு பஞ்சம் இருக்கவில்லை.மௌலவியின் தாடியைப்பார்த்தும் சிரிப்பு வந்தது.

 மௌலவி என்னடா என்றார். ஒன்றுமில்ல என்பது போல் அவன்தான் குணா குணா வென்று கூட்டத்துடன் இணைந்து கத்தினான்.

‘உச்சவடக்கல்லு சியாரம்’ என்பது வாகநேரிக்குளத்துடன் பொருதி நிற்கும் மலையடிவாரத்தில் உள்ளது. மலையின் உச்சியில் சேர்குட் பங்களா. ஒரு ஹோட்டலும் இருந்தது. வெள்ளைக்காரர்கள் வந்து தங்கிப் போவார்கள். குளத்தில் படகு சவாரியும் உண்டு.

பிற்காலத்தில் அது புலிகளின் வாசஸ்தலமாக இருந்தது. தற்போது இராணுவத்தின் படைப்பிரிவொன்று மலை உச்சி பங்களாவில் நிலை கொண்டுள்ளது. முஸ்லிம் மக்களின் வயல் நிலங்கள் அதிகம் உள்ன இடம் முள்ளிவெட்டவான்,வாகநேரி.மீன்பிடித்தொழில்,கல்வாடி,சேனைப்பயிர்ச்செய்கை,
விவசாயம் என பெரும்பாலான முஸ்லிம்களின் ஜீவனோபாயங்களின் உறைவிடமாக இந்தப்பகுதி இருந்தது.

உச்சவடக்கல்லு சியாரத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் மில்க்போர்ட் (பால் சேகரிப்பு நிலையம்) இருந்தது.நசீர் மச்சான்தான் மனேஜராக இருந்தார்.அண்மையில் தான் ஹார்ட் அட்டாக்கில் மரணடைந்தார்.
ஹனீபா மௌலவி எங்களை எல்லாம் இறக்கி சியாரத்தை சூழவும் நிற்பாட்டி பாதிஹா ஓதினார்.சியாரத்தின் தலைப்பக்கம் ஒரு ஊண்டியல் இருந்தது.
எட்டிப்பார்த்தேன்.சில்லறைக்காசுகள் தேங்கிக்கிடந்தன.பாதிஹா ஓதுர ஆக்கள் மட்டும் எடுக்கலாம் மற்ற ஆக்கள் எடுத்தா கை அழுவிப்போகும் .ஒரு வயதானவர் சொன்னார். மௌலவியின் முகத்தில் முழு நிலவைக்கண்டேன்.

நானும் பாதிஹா மனனம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது.கபுறு வணக்கத்தின் விபரீதம் புரியாத வயது. (பிற்காலத்தில் அவ்லியாக்களால் ஒன்றும் செய்யமுடியாது என்ற பேருண்மை புரிந்தவுடன் சில்லறைகளை பாதிஹா ஓதாமலே அள்ளிச்சென்றோம்.) 
 
உச்சவடக்கல்லு மலைச்சரிவின் குளத்தில் இறங்கி கும்மாளமிட்டது இன்னும் நீங்காத முதல் குளத்து நீச்சல்.மூக்கைப்பொத்தியபடி நீரில் மூழ்குவதும் தாப்புக்காட்டுவதுமாக பகல் பொழுதுகள் கழிந்தன.உடுத்தியிருந்த சாரத்தை  விரித்து சிறிய மீன்களைப்பிடிப்பதும், குளத்தில் விடுவதுமாக இருந்தோம்.

பாசி படர்ந்து குளத்தில் இறங்கிச்சரிந்த பாறைகளில் வழுக்கி விழுந்து நீரில் மிதந்தோம். பிரமாண்டமான இந்தக்குளம்  என்னுடைய பிற்கால வாழ்க்கையின் அச்சாணியாக இருந்தது.

சியாரத்தை அண்டி எங்களுக்கான உணவு தயாரிப்பதில் வாப்பாமார்கள் மும்முரமாக இருந்தார்கள்.தேக்க இலையில் ஆவி பறக்க உணவு உண்டது அமிர்தம். சுற்றியிருக்கும் வேடுவ இன மக்களும் இலைகளுடன் வந்துவிட்டனர்.பெரியவர்கள் அந்த இலைகளில் சோற்றையும், கறியையும் அள்ளி ஊற்றினார்கள். 
 
முதுகை வளைத்து வணக்கம் சொல்லிவிட்டுப் போனார்கள்.முஸ்லிம் ஆக்கள் கவுரடிக்கு வந்தா எங்களுக்கு நல்ல சோறு கறி என்றார்கள்.முகங்களில் மலர்ச்சியும்,திருப்தியும்.

 மாலை ட்ரக்டரில் ஏற்றப்பட்டு மறுபடியும் அதே பாட்டு சளைக்காத கூச்சல்களுடன் வீட்டுக்கு வந்தோம்.

எங்கள் தேசம் இதழ் : 209

ஊஞ்சல் இன்னும் ஆடும்......

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...