Thursday, 1 May 2014

சிறுகதைஏவாளின் தோட்டத்தில் கனிகள் இன்னும் மிச்சமிருக்கின்றன.

இரவு விளக்கின் அணுங்கலான வெளிச்சம் சயன அறையில் கவிந்திருந்தது.
கனவின் அனுகூலங்கள் ஒரு இருண்ட வீதியில் பேரிரைச்சலுடன் பயணிக்கின்றன.கதவின் தாழ்ப்பாள் விலகுகின்றது. நான் சைக்கிளை உலத்திக்கொண்டு வெளியே வருகிறேன்.பச்சை பசேலென்ற புல்வெளிகள். கதிர்; முற்றிய வயல் வெளிகள் நிறைமாத கர்ப்பிணியாய் ததும்பி நின்றன.நடுவாய்க்காலில் நாரைகள் இரைக்கான தியானத்தில் ஒற்றைக்காலில் தவமாய் நின்றன. இடிந்த ஒரு கட்டடத்தின் ஓரத்தில் களை பிடுங்கிச்சவுத்த இரு பெண்கள் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தனர்.அவர்களின் நாய் நாக்கை தொங்கபோட்டபடி தலைமாட்டில் குந்தியிருந்தது. மூடாத மார்புகளின் மதர்ப்பில் களத்துச்சூடு குவிந்திருந்தது.

நேரே சைக்கிள் சக்கரம் சுழல்கிறது. ஒரு குளக்கட்டில் ஏறி செம்மண் புழுதி படர்ந்த தரையில் அழுந்திச்செல்கிறது.இரு மருங்கிலும் பனை மரங்கள் நொங்கும் காயுமாக காய்த்துத்தொங்கின. சைக்கிளை நிறுத்திவிட்டு குளத்தின் அழகில் சொக்குகிறேன். அலைகளின் முதுகு மினுக்கம் கரையில் முட்டி உடைகிறது.ஆட்காட்டி முட்டையிட்டு; கற்கள் கொண்டு மூடி அடையாளப்படுத்திய இடத்தை தவறவிட்டு அதைத்தேடித்தேடி தாழப்பறந்து கத்திக்கொண்டிருந்தது.

 இரு மைனாக்கள்  மஞ்சோனா மரக்கிளையில் சாவகாசமாக உட்கார்ந்தபடி அலையாடும் குளத்தைப்பார்த்தபடி இருந்தன.ஆணின் இறகில் சொண்டு வைத்து கோதிக்கொண்டிருந்தது பெண் மைனா. குளக்கரையின் வட திசையில் ஒரு நாவல் மரம்  விழுது பரப்பி ஆகிருதியாய் சடைத்து நின்றது. கொத்துக்கொத்தாக கரிய நாவல் பழங்கள் அடர்ந்திருந்தன. கிளை விட்டு கிளைதாவிய குரங்குகளின் அட்டகாசத்தில் பழங்கள் சில போது  கீழே சிதறவும் செய்தன.

என்னை நாவல் மரம் ஒரு காந்தம் போல்  அதனன்டை ஈர்க்கத்தொடங்கியது. அதன் அடர்ந்த வசீகரத்தில் கிளை கொள்ளா சௌந்தர்யத்தில் மனம் மயங்கித்தவித்தது. கரிய கனிகள் வாவென்று வசியம் செய்தன.சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்தி விட்டு மரத்தை நோக்கி நடக்கத்தோடங்கினேன். நாவல் மரத்தின்  கணதியான கொப்புக்களிலிருந்து இரு கண்கள் என்னை தீட்சண்யமாக பார்த்துக்கொண்டிருந்தன.தீப்பிழம்பின் ஜ்வலிப்பு. தகதகவென மின்னும் அதன் பிரகாச விழிகள்  கருமை படர்ந்த வானத்தில் இரு நட்ஷத்திரங்களைப்போல் ஒளி சிந்தின.

கண்ணிமைக்கும் நேரத்தில் அது  கொத்துக்குள்ளிலிருந்து  கிளைக்கு நழுவியது. பின் அந்தரத்தில் நின்றபடி  தன் கருமுகத்தை விரித்து குவிமயமாய் என்னைச்சுட்டி கூர்நாவால் துழாவி சமிக்ஞை செய்தது. கருநாகத்தின் உடல் மினுக்கத்தின் தகிப்பில் என் விழிகள் கிறங்கி நின்றன. வாழ்வின் நித்யத்தில் இது முதல் அனுபவம். மிக அருகில் நான் கருநாகமொன்றின் அண்மையில் நிற்கிறேன். துளியேனும் அச்சம் முகிழவில்லை.ஆதியந்தமாய் ஓர் உறவின் நீட்சி உணர்வில் கசிகிறது.

அதன் மேல் பாந்தம் கமழ அருகில் செல்கிறேன்.பொறுக்குவாரற்ற நாவல் பழங்கள் சிதறிக்கிடந்த மரத்தின் நிழலை மிதித்தபடி  பாதங்கள் நகர்ந்தன.
கரு நாகம் கீழே இறங்கி மரத்தினடியில் நின்றது.அதன் கூர் நா உள்ளேயும்,வெளியேயுமாக சொடுக்குப்போட்டு மீண்டது. அதன் பார்வையின் உக்கிரம் நெஞ்சின் ஆழத்தை தீண்டிவிட்டு சென்றது.மேனி எங்கும் குளிர்ச்சியின் ஆகர்சிப்பு. நாகத்தின் கரிய நிழல் தரை முசியப்  படர்ந்தது.

 வள வளப்பான அதன் உடம்பை தொட்டுப்பார்க்க கரங்கள் துறுதுறுத்தன. காருண்யத்துடன் எழுந்து நிற்கும் அதன் விழிகளில் அன்பின் ஆழம் கசிந்தது. புகையிலை போன்ற விரிந்த முகத்தை சுருக்கிக்கொண்டது.பூமியில் தலை அழுத்தி என்னை தீவிரமாக பார்க்கத்தொடங்கியது. அதன் சௌந்தர்ய லாகிரி என்னைக்கட்டிப்போட்டது. 

அழகின் நுட்பங்களை மனம் ஆர்வத்துடன் தேடத்தொடங்கியது.அலை முதுகில் ஆரோகணித்து வந்த சீதளக்காற்று என்னைச்சீண்டச்சீண்ட நான் விழிகள் சொக்க நாவல் மரத்தின் அடியில் சாய்ந்து கொள்கிறேன். நாகம் என்னருகே ஊர்ந்து வரும் ஓசை என் செவிகளில் நிறைய மனம் பூத்துக்குலுங்கி நறுமணம் வீசியது. அதன் கதகதப்பு என் விலாவில் தகித்துக்கொண்டிருந்தது. 

அது தன் நாவால் என்னை துழாவத்தொடங்கியது. முத்தமிட்டுக்கவ்விய உதடுகள் வலியில் துடித்தன.நான் எழ முயற்சித்தேன்.முடியவில்லை என்னைச்சுற்றி ஒரு கொடிபோல அது படர்ந்திருந்தது.  அது ஆவேசத்துடன் நடனமிட்டது. கள்வெறி நீங்கிய களி நடனம் .அதன் விழிகள் ஆனந்தத்தில் மிதந்தன. சிவந்த அதரங்களில் இள நகை முகிழ்ந்திருந்தது. 

 நடனத்தின் உக்கிரத்தில் அதன் விழிகளின் வசீகரம் பிரளயமாய் கதித்தது. முகாந்திரங்களற்ற பச்சை வெளியில் அது நீந்நிச்சென்றது.

உச்சங்களைத்தொட்டுவிட்ட திளைப்பு. நரம்புகள் அதிர்ந்து வெடிக்கும் தருணம் விழிப்புத்தட்டியது. உடல் பிசுபிசுவென வியர்த்துக்கொட்டியது.

மறுநாள் என் வீட்டின் முகப்பை மாற்றியமைத்தேன்.புற்றுக்களால் காணியை நிறைத்தேன்.கனிதரும் மரங்களில் கருப்புத்துணிகளை கட்டிவிட்டேன். அது காற்றிலாடி நர்த்தனம் புரிகையில் கருநாகத்தின் பிம்பமே நெஞ்சில் நிறைந்தது. நான் பாவிக்கும் எல்லாப்பொருட்களும் கருப்பாக மாறின. 

ஆடைகளும் கருப்பு நிறத்தில்.இன்ப விஷம்  எனக்குள் ஊறத்தொடங்கியது.அறை முழுக்க கருப்பின் பிரகாசம் வீசியது. நாகத்தின் அசுர விழிகள் மனதின் ஆழத்தில் மினுங்கத்தொடங்கின.  பிரியமாக என் தங்கை வளர்த்த வெள்ளைப்புறாக்களை திறந்து விட்டேன். அதன் கூட்டுக்குள் மைனாக்களையும் காகங்களையும் கொணர்ந்து விட்டேன். அவள் என்னுடன் பிணங்கிக்கொண்டு மூஞ்சை தூக்கிவைத்தபடி போனாள்.காகத்தை அடைத்து வைத்து சோறு போடும் “லூசி ” என்பதுபோல் என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.அவள் கருப்பு நிற மார்புக்கச்சை உள்ளாடைகளை மட்டுமே வெளியே கொடியில் காயப்போடச்சொன்னதற்கு மூளை பிசகிற்றா என்று என்னை வைதுவிட்டு அம்மாவிடம் ஓடினாள். 

கரிய நிழல் மீது பாந்தம் பெருகியது.வெளிச்சம் விழும் நேர் திசையில் உட்கார்ந்து எழுதும் போது தாளில் விழும் பேனா முனையின் கரிய நிழலுக்காகவே எழுதத்தொடங்கினேன். 

என் கருப்புத் தோழியை இறுக அணைத்து முத்தமிட்டேன். அவள் திணறிப்போய் உனக்கு என்ன பிடித்து விட்டது என கண்களால் குறும்பு கேட்டாள். அவள் கன்னங்கள் நாவற் பழம் போல் மினுங்கித்தளும்பின. நிலவு முக்காடிட்டுச்சரியும் பின்னிரவுக்காலங்களில் நிழல்வாகை மரத்தினடியில் அந்தக்கருப்பு நிலா என் மடியில் கம்பீரமாய் உதிக்கத்தொடங்கியது.

 நாக தரிசனங்களுக்காக இரவுகளும், கனவுகளும் ஏங்கித்தவித்தன. தவிக்கும்போது ஆசைப்பட்டது எளிதில் வாய்த்துவிடுகிறதா? அது ஒரு பித்தன் போல் என்னை மாற்றிவிட்டது. கருப்பில் தோய்ந்த ஒரு நோயாளியாகிவிட்டேன். மருந்துகள் பயனற்றுப்போயின. 

மினுங்கும் அந்த வசீகர விழிகளுக்காக புற்றுக்களின் அருகிலிருந்து புல்லாங்குழல் வாசிக்கத்தொடங்கினேன். கருப்பு ரோஜாக்கள் வீட்டு முற்றத்தில் நீரின்றி வாடின.என் பிரிய நாய்க்குட்டி காலை சுற்றியபடி விலாவில் உரசித்திரிந்தது பிரிவின் துயரம் என்னை முழுமையாக விழுங்கி அரிக்கத்தொடங்கியது. என்னைத்தவிர உலகில் , எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர். எல்லோரிலும் கோபமாய் எரிந்து விழுந்தேன். 

அதன் கூர்நாவும் குறுகுறுப்பார்;வையும் என் மேனி தழுவிய வளவளப்பும் உயிரின் மர்மக்குகையுள் சிதறி என்னை திகிலூட்டின.
அடர்ந்த வனங்களில் தேசாந்திரியாய் அலையத்தொடங்கினேன்.கோவணம் தரித்த சன்னியாசியாய் ஆகிவிட்டது வாழ்க்கை.

நீர் விழும் ஆறுகள்,அலை தரும் குளங்கள், பேரலை எகிறும் கடற்கரை,பாம்புகள் ஊரும் அடர்வனம், மரங்கள் என தேடல்;கள் தொடர்ந்தன முடிவிலாப்பயணங்கள். கவிதைகள் ஈரத்துடன் பெருகின.அதன் குரலின் ஏக்கம் பெரும் ஒப்பாரியாக வனங்களில் சுற்றித்திரிந்தது.ஆதாமின் தோட்டத்திள் ஏவாள் இல்லை.ஏவாள் கடித்த கனிகள் தோட்டமெங்கும் சிதறிக்கிடந்தன. துயரங்கள் பேரலைபோல் முகடு தட்டி எம்பி என்னை துன்பக்கடலில் மூழ்கடித்தன.

நான் நாவல் மரத்தின் புத்தனாகிவிட்டேன் .தியானங்கள் மௌனத்துடன் நீண்டன.தியானத்தின் வலிமையில் அது என் முன் தோன்றி களிநடனம் புரியாதா? உள் மனம் ஏக்கத்துடன் கேவித்திரிந்தது.சொற்கள் உதிர்ந்த இடத்தில் மௌனம் ஒரு மலைபோல் குவிந்தது.மூடிய விழிகளுள் கருமை மட்டுமே கவிந்திருந்தது.

திறக்க மறுக்கும் விழிகள் இருளுக்கு வசியப்பட்டன. 

இப்படித்தான் ஒரு மழைக்காலம். கொழும்பில் டர்ணர் வீதியில் பணி நிமித்தம் நடந்து கொண்டிருந்தேன். பரிச்சயமான வழி. மழை இலேசாக தூறிக்கொண்டிருந்தது.வீதியை இருள் வந்து போர்த்தத்தொடங்கியது. வீதியின் குறுக்குப்பாதையில் எப்போதும் வெளிச்சம் விழாத சந்தில் நடக்கின்றேன்.அரிதாக அவ்வழியே வரும் வாகனங்களின் வெளிச்சத்தில் மறைந்திருக்கும் ஒதுக்குப்புரங்கள் நன்றாகவே தெரியும்.  பழைய இடிந்த கட்டடச்சுவருடன் சாய்ந்திருக்கும் நாகங்களில் சாரைகள் ஊர்வதை முதன் முதலில் கண்டு அதிர்ச்சியாக இருந்தது. 

இன்ப அதிர்வு என்பது இதுதானா?நாடி நரம்பில் இரத்தம் தீவிரமாக ஓடியதையும் அது உறைந்து பின் நெகிழ்ந்து தாபமாய் துடிப்பதையும் அனுபவித்தபடி நின்றேன்.இருளுக்குத்தான் எத்துனை வசீகரம்.சாரையும் நாகமும் ஒவ்வொரு முடுக்கிலும் முக்கி முயங்கும் காட்சி விழிகளில் மின்னி மறைந்தது. ஒரு நாகத்தின் இடுப்பில் தொங்கியபடி சாரை அதி வேகமாக முயங்கி சுய பிரக்ஞையற்றுக்கிடந்து.காமத்தின் உச்சத்தில் ஈருடலின்  மூசு;சுக்கள் மெழுகு போல் உருகி தகித்தோடின.

நாகத்தின் ஸ்தூல வாசம் என் நாசியில் விடைத்தது.மழை வேறு இலேசாக தூபமிட்டுக்கொண்டிருந்தது. இருளுக்கு வசியப்பட்ட பாதங்கள் ஊர்ந்தபடி நகர்ந்தன. புற்றினடியில் அழகின் சாற்றைப்பிழிந்து தன் முகத்தில் பூசியபடி ஒரு நாகம் நின்றது. அதனன்டை என் கால்கள் இழுபட்டு சென்றன. வெட்டிமறைந்த மின்னல் கீற்றில் இரு விழிகள் என்னில் மொய்த்து மீண்டன.நாக ரசம் நாவில் ஊறித்திளைத்தது.உடம்பு உலையில் விழுந்து தகித்தது. நாகத்தின் உடல் மொழி அருகே வாவென்ற அதன் இரகசிய அழைப்பு நடனத்தில் நீந்தியது. 

“உன் திசைநாடி ஊர்ந்த என் கால் நடுக்கம் இன்னுமிருக்குநெஞ்சுக்குள்“ எழுதிய கவிதை மனசின் மடிப்பில் குறுக்கே விழுந்தது. கிளைவிடும் ஆசையில் நாவுகள் கிளர்ந்து உயர்ந்தன. என்னைச்சுற்றிலும் புற்றுக்கள் முளைக்க நான் ஆழங்களுக்குள் மூழ்கிப்போகிறேன். ஒவ்வொரு துளையிலும் வசீகர நாகங்கள் படம் விரித்து சீறி நின்றன.பிளந்த நாவுகள் ஒரு வீரனின் கரங்களில் சுழலும் வாள் சமராய் எடுப்புக்காட்டின.வாளின் முனை வீச்சு உள்ளொடுங்கி பின்  துடிப்புடன் வெளியே எகிறின.தளைகள் மூடிய மரத்தினடியில் உடல் மறைந்துகிடந்த நாகங்கள் ஆரத்தழுவலில் அமுங்கிக்கிடந்தன. வாழ்க்கை கருணையற்றது. முதற்தரமாக மனசில் கசப்பு முகிழ்ந்தது.

கனவுகளில் எதிர்படும் நாகங்கள் திடுமென என்னை ஆச்சரியத்திலாழ்த்தி விட்டு மறைந்தும் விடுகின்றன. அவை என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றன. என் பருவத்தின் பள்ளத்தாக்குகளில் காம நீர் நிரம்பித்ததும்பின. கருப்பின் அழகில் என் இளமை அழியத்தொடங்கியது,கனவும் கனவின் சன்னமான முடிவும் என் படுக்கைகளில் நிரம்பி வழிந்தன. 

கால நதியின் அதி வேக ஓட்டத்தில் நான் பணி செய்யவென  மலைநாட்டிற்கு தூக்கிவீசப்பட்டேன். சுவர்க்கத்திலிருந்து வீசப்பட ஆதாமாய் என் பாதங்கள் ஒரு மலையில் ஊன்றி சுற்றித்திரிந்தன. எனக்குரிய ஏவாள் இந்தத்தோட்டத்திலேனும் மறைந்துளளோ?

பசுமை குடிகொண்ட பூவனமாய் வாழ்க்கை மாறிற்று. காலை பனியில் முங்கிக்குளித்தபடி எனை நோக்கி கையசைத்து சிலிர்க்கும் மலர்களும், அகன்று விரிந்த தேயிலை தோட்டங்களும்  அற்புதம்.அற்புதம்! தவமாய் தவமிருந்து பெற்றவளின் வயிறும் குளிரத்தொடங்கியது.

நடுநிசியில் விழிப்புத்தட்டிவிடும் தருணங்கள் அவஸ்தைமிக்கது. நாகத்தின் நினைவுகள் என்னை பிழிந்தெடுத்தன.முகட்டை வெறித்தபடி படுத்திருக்கும் கடுமையான குளிர் இரவுகள் மகா அவஸ்தை!கனவு சுரக்கும் உடல் தகிப்பில் அதரங்கள் உலர்ந்து வியர்ர்த்துக்கொட்டும். இடம்பெயர்வு அல்லது சூழலை மாற்றல் என்னளவில் சில பொழுதில் பொய்த்துத்தான் போகிறது.மௌனமாக இரகசிய அறைகளில் அமுங்கிக்கிடக்கும் அவை ஒரு சிறு பொறிக்காக காத்திருந்து மனதை  உதிர்க்கும் விந்தையை என்னவென்பது?

நான் தங்கியிருக்கும் வீட்டில் ஒரு தோட்டமிருந்தது. கராம்பு, ஏலம்,மிளகுக்கொடி, பாக்கு, வெற்றிலைக்கொடி, சாதிக்காய் என ஏகப்பட்ட மரங்கள் அடர்ந்த தோட்டம். சதா நிழலையும் இலேசான இருளையும் கொடுத்துக்கொண்டே இருக்கும்.தோட்டத்தின் முடிவில் ஒரு வயல்.பீலித்தண்ணீர் ஊடறுத்துச்செல்லும் அது பார்க்கும்போதெல்லாம் செழித்துக்கொண்டே தலையாட்டும். பீலியும் ,பீலியை அண்டினாற்போல் ஒரு கிணறும் வாய்க்கப்பெற்ற அத்தோட்டம் என்னை வசீகரித்ததில் வியப்பேதுமில்லை.

பாம்புகளற்ற அத்தோட்டத்தில் சாவகாசமாக உட்கார்ந்து படிப்பதும்,சிந்திப்பதுமாக என் மாலைகள் மயங்கின. ஆரம்பத்தில் அட்டைகள் மட்டும் இரத்தம் குடித்து மயங்கி வீழ்ந்தன. பாதங்களை கவ்வி உதடு பொருத்தி இரத்தம் குடிக்கையில் அவைகளை பிரித்தெடுக்கவே பிரயத்தனமெடுக்க வேண்டியிருக்கும். பின் சவர்க்கார நீரில் பாதங்களை அமுக்கி நனைத்தபடி தோட்டத்திற்கு வருவேன். அட்டைகளின்  தொல்லை இருக்காது.

எனினும் அண்மைக்காலமாக  எனது அறையின் ஜன்னோலரத்திலிருந்து இரு விழிகள் என்னில் மொய்த்து விளையாடுவதை உள்ளுணர்வு சுட்டிக்காட்டியது. திடீரென அறையை அதிரடியாக செக் பண்ணிப்பார்த்தேன்.நாட்கள் நகர நகர என்னை உற்றுப்பார்க்கும் விழிகளின் உக்கிரம் வலுக்கத்தொடங்கியது. நாகங்கள்தான் எனைத் தேடி வந்து விட்டதோ? ஐயங்கள் வலுக்க தோட்டத்தின் கரிய நிழல்களுக்கிடையில் என் கால்கள் உற்சாகமாகவும் ,பதட்டத்துடனும் அலைந்தன. வயதான வீட்டுரிமையாளர்களிடம் கேட்டாயிற்று. “தம்பி எங்கட தோட்டத்துல பாம்புத்தொல்ல இல்ல,அட்ட மட்டும்தான் இரிக்கி”  ஏன் பாட்டி உங்கட வூட்டுக்குள்ள எப்பயாச்சுமம் பாம்பு வந்திரிக்கா?  நான் இன்ப அச்சத்துடன்தான் கேட்டேன் அதற்கு அவ சிரித்துக்கொண்டே இப்ப புதிசா வாரண்டாத்தான் பாம்பு வரனும்.ஆனா இரண்டு நாளக்கு முதல்ல எங்கட மகள்தான் ஹொஸ்டலேர்ந்து வந்திரிச்சி”  “அவவும் ஒரு அடைகாக்குற பாம்பு போலதான் மூலைக்குள்ள சுருண் படுத்தா வெளியே வரமாட்டா”

இரவு படுக்கைக்குச்செல்லுமுன் பாட்டி தந்த டீயை உறிஞ்சிக்கொண்டிருந்த போது இரு விழிகள் திரைச்சீலைக்குப்பின்னிருந்து என்னை உற்றுப்பார்த்தன. கருவிழிகளின் அழகும் நளினமும் அது இருளில் மினுங்கிய அற்புதமும் என்னை ஏவாளின் தோட்டத்திற்கு அழைத்துச்சென்றன. சுவரின் உத்திரத்தில் அதன் கரிய நிழல் பரவிச்சென்றது. 

பின் வந்த இரவொன்றில் அறையில் தொலைக்காட்சி பார்த்தபடி உறங்கிப்போகிறேன். நடுநிசியில் வழக்கம் போல் விழிப்பு தட்டியது.தொலைக்காட்சித்திரையில் புள்ளிகள் இரைந்தபடி வெளிச்சம் காட்டின. அணைத்து விட எழுந்த என்னை இறுக்கிப்பிடித்து நிறுத்தியது வளவளப்பான தேகம். என்னருகே மூச்சிறைக்க அது படுத்திருந்தது. 

இரவு விளக்கின் மௌன ஒளி அறை முழுக்க பரவியிருந்தது.அதன் உடல் மினுக்கத்தில் நான் திகைத்து நின்றேன். அழகின் பிரமாண்டத்தின் முன் நான் சிறு புழுவென நெளிந்தேன். செக்க செவேலென பிழந்த நாவால் அது என்னை துழாவத்தொடங்கியது என்பாதங்களை அது வாலால் சுற்றி என்னில் படர்ந்து மேலேகியது.பளபளக்கும் அதன் விழிகள் தாபத்தில் கிறங்கி நின்றன. நான் எழுந்து விடாதபடி அது என்னை இறுக்கத்தொடங்கியது. மூச்சு முட்ட  நெஞ்சு அடித்துக்கொண்டது. குளிர்ச்சியான அதன் நாவால் என்னைத்தீண்டத்தீண்ட உடல் முழுக்க திகுதிகுவென பொறிகள் எரிந்தன.  கதவிடுக்கால் நழுவிச்செல்லும் அச்சத்தை திருப்பியழைக்க மனமின்றி நாகத்தின் உடலை தழுவத்தொடங்கினேன்.ஆல காலம் எனக்குள் பரவத்தொடங்கியது.

27.08.08
இரவு 8.45