Friday 14 September 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


  தொடர்- 23


இப்படித்தான் ஒரு நாள் வாப்பாவையும் மாந்துறை ஆற்றில் கொண்டு போய் நீரில் அமுக்கி அமுக்கி விசாரித்தார்கள்.தண்ணீருக்குள் தலையை அமிழ்த்தி தோளில் ஏறி நின்று சித்திரவதை செய்தார்கள். புலிகளுக்கு கடையில் தேனீர் ஊற்றிக்கொடுத்த ஒரேயொரு பாவம்தான் வாப்பா செய்த பாவம்.

தேனீர் ஊற்றிக்கொடுக்காவிட்டால் அவர்கள் கொல்வார்கள். ஊற்றிக்கொடுத்தால் இவர்கள் கொல்வார்கள். ஏறச்சொன்னால்  எருதுக்கு கோபம்.இறங்கச்சொன்னால் முடவனுக்கு கோபம் என்பது முஸ்லிம்களின் விடயத்தில் மிகப்பொருத்தமாக இருந்தது.

அவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் போதும் வீதியில் செல்லும் எங்களை அழைத்து முழங்காலில் நிற்க வைத்து வராத புலி வந்ததாக விசாரணை செய்து அடிப்பார்கள். 

அவர்களையும் நண்பர்களாக்கி சில சலுகைகளை நாங்கள் பெற்றுக்கொண்டோம்.குண்டு சட்டிக்குள் குதிரை ஓடுவதில் நம்மை விட கில்லாடிகள் யார்.

இருக்கவே இருந்தது சையது பீடி. அதில் ஒரு கட்டை வாங்கி வழியில் இருக்கும் செக் பொயின்ட்களில் நிற்கும் ஜாவானுக்கு நீட்டினால் போதும் "அச்சா அச்சா ஜலோ ஜலோ என்பான் சிரிப்புடன்.

ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமிற்கிடையில் தொடர்பாடலுக்காக நீண்ட வயர்களை இழுத்துக்கொண்டு போவார்கள்.அந்த வயர்களை இடையில் கட் பண்ணி நம்மவர்கள் சுருட்டிக்கொண்டு போவார்கள். அது நல்ல கணதியான வயர். கார் பற்றரியிலிருந்து கனெக்ஷன் எடுத்து சின்ன குண்டு பல்புகளை எரிய விட அந்த வயரை பயன்படுத்துவோம்.

மின்சாரம் இல்லாத பகுதிகளுக்கு அந்த வயரின் மூலம் மின்சாரமுள்ள இடத்திலிருந்து மின்சாரத்தைக் கடத்தலாம். அல்லது கார், லொறி பற்றரியிலிருந்தும் மின்சாரத்தை அந்த வயர் மூலம் இலகுவாகப்பெறலாம்.

பெற்றோல் செட் சந்தியிலிருந்து பேப்பர் பெக்டரியில் இருக்கும் இந்தியன் ஆமியின் கேம்புக்கு தொடர்பாடலுக்காக  சாவன்னாட சந்தியை தாண்டி வரும் புகையிரத பாதையை ஊடறுத்துச்செல்லும் உள் பாதையால் வயர் இழுக்கப்பட்டிருந்தது.

ஓர் இரவு நானும் நண்பர் நியாசும் அந்த வயர்களில் கொஞ்சம் வெட்டுவதென்று தீர்மானித்தோம். “ கொறட்டு ” டன் நியாஸ் வந்தார். நான் இந்தியன் வருகிறானா என்று ஒழுங்கையில் நின்று வேவு பார்த்தேன். 20 அடி இருக்கும் வயரை நறுக்கிக்கொண்டு அதை முள்ளிவெட்டவானுக்கு கொண்டு சென்றோம்.

 நான் ஒரு சையது பீடி கட்டு வாங்கிக்கொண்டேன்.ஓட்டமாவடி பாலத்தடியில் இருக்கும் ஒரு 'சென்ரிப்பொயின்ட்.' பின்பு இடையில் சில முகாம்கள் எல்லேரையும் ஒரு பீடி கட்டால் சமாளிக்க வேண்டும்.வயரை இரண்டு பேரும் பிரித்து தொடையில் சுற்றினோம். பதற்றம் இல்லாமல் துவிச்சக்கர வண்டியில் ஏறி உழத்தினோம் .பாலத்தடியில் இரண்டு சையது பீடி. ஜலோ என்றான்.

இடையில் அகப்பட்டவர்களுக்கு நாங்களாகவே மனமுவந்து அன்பளிப்புச் செய்தோம். என்னே அக்கரை. 'அச்சா அச்சா பலே பலே' என்றார்கள். எப்படியோ இருபது யார் வயரும் முள்ளிவெட்டவானுக்கு போய்விட்டது.

அக்காலத்தில் சில பொருட்களை வயலுக்குச்செல்பவர்கள் கொண்டு செல்ல முடியாது. புலிகளுக்கு அது தேவைப்படும் என்ற முன்னேற்பாடு. எங்களுக்கு சிரிப்பாய் வரும். அரசாங்கமும்,இந்திய இரானுவமும் எதையெல்லாம் அவர்களுக்கு இலகுவில் கிடைக்கக்கூடாது என்று தடைவிதித்ததோ அந்தப்பொருட்கள் புலிகளிடம் மிகத்தாரளமாக இருக்கும். ஒரு கிராமத்திற்கே வினியோகிக்கக்கூடியதாக குவிந்திருக்கும்.

விவசாயிகளுக்கு டோர்ச்சும் பெற்றரியும் இல்லாவிட்டால் இரவில் காவலுக்கு நிற்க நாதியில்லை.அதனால் பொயின்ட்டுகளில் சையது பீடிகளும்,லக்ஸ்,சந்தண சவர்க்காரமும் பரிமாறப்பட்டன. பொதியில் என்ன இருக்குது என்பதைக்கூட பிரித்துப்பார்க்க மாட்டார்கள்.

இப்படித்தான் புலிகளும் சில சாமான்களை கடத்திப்போவார்கள்.

இந்தியன் ஆமி அவர்களை அண்டிய முகாம்களில் சகாய விலைக்கடைகளையும் அமைத்தனர்.இந்திய சாமான்களை சகாய விலையில் சனங்கள் வாங்கிச்செல்வதுண்டு.அப்போது நாங்கள் இரண்டு ரூபாயக்கு 10 சிகரெட் வாங்கியது நினைவில் உள்ளது.இந்திய இராணுவம் சென்றாலும் அவர்கள் விட்டுச்சென்ற கடையை இலங்கை இரானுவம் தொடர்ந்து செய்கிறது.மஹரகமயில் மரக்கறி வியாபாரமும்,கட்பீசும் சில நேரங்களில் பெற்றோல்,டீசலும் சலுகை விலையில்  கிடைப்பதுண்டு.

இந்திய இராணுவம் எங்கள் மண்ணில் மறக்க முடியாத வரலாற்றை இரத்தத்தால் எழுதிச்சென்றது.


எங்கள் தேசம் - 228                                                                                                           ஊஞ்சல் இன்னும் ஆடும்......


  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...