Saturday 21 November 2015

எரியும் சமவெளி !

மாஞ்சோலைக்கிராமம் :


கல்குடா தொகுதியில் முஸ்லிம்கள் இரண்டு நூறு்றாண்டு காலம் வாழ்ந்து வரும் பூர்வீக மண் மாஞ்சோலை, மீராவோடை, பதுரியா நகர் கிராமங்களாகும். இந்தக்கிராமத்து மக்களின் ஜீவனோபாய தொழில் விவசாயம், மீன் பிடி, தோட்டப்பயிர்ச்செய்கை,மட்பாண்டத்தொழில் மற்றும் கூலித்தொழில் உள்ளிட்ட கைவினைத்தொழில்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

1917ம்ஆண்டிக்கு முன்னரே அரச அங்கீகாரத்துடன் இம்மக்கள் தங்கள் காணிகளில் நிரந்தரமாக குடியமர்த்தப்பட்டதற்கான ஆதார பூர்வமான சான்றுகள் இம்மக்களிடம் ஆவணமாக இன்றும் உள்ளன.

தமது பராம்பரிய மண்ணில் வாழ முடியாத அச்சுறுத்தலை விடுதலையின் பெயரால் ஆயுதமேந்திய தமிழ் ஆயுதக்குழுக்கள் இம்மக்களுக்கும்  ஏற்படுத்தினர். மாஞ்சோலைக்கிராமம் என்பது கிழக்கே கருவாக்கேணி தமிழ் கிராமம்,தென்பகுதியில் மீராவோடை தமிழ் கிராமம்,மேற்கில் மீராவோடைவிளிம்பு நிலை மக்களான சலவைத்தொளிலாளர்கள் சூழ அமைந்துள்ள ஓர் அழகிய முஸ்லிம் கிராமமாகும்.இக்கிராமம் முன்பு ஓடைக்கரை, மாவடிவளவு போன்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டு வந்தது. எல்லையில் தமிழ்மக்களுடன் அன்னியோன்னியமாக வாழ்ந்து வந்த இக்கிராமத்தை, அரசியல்வாதிகளின் சுய நலன்களும் ஆயுதக்குழுக்களின் இனசம்ஹார நடவடிக்கைகளும் நிரந்தர எதிரிகளாக பார்க்கும் அளவிற்கு மாற்றியுள்ளன.

சுந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் சகோதர தமிழ் மக்களை ஏறிட்டு பார்க்க வைத்த தீய சக்திகளின் கனவு நிறைவேறியுள்ளதாகவே அண்மைக்கால கசப்பான நிகழ்வுகள் நமக்கு படம் பிடித்துக்காட்டுகின்றன. 90ம்ஆண்டிக்கு முன் மாஞ்சோலைக்கிராமத்தின் எல்லையில் 500 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். 90களுக்குப்பின் ஏற்பட்ட ஈழப்போராட்டத்தின் வடுக்கள் இம்மக்களையும் வெகுவாக பாதித்தன.

இவர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டும் இடம் பெயர்ந்து உறவினர்கள் மற்றும் தனியார், அரச காணிகளில் தற்காலிகமாக கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வந்தனர். 90 இல் எல்லைப்பகுதியில் பாதுகாப்பரண்களை அமைத்த இலங்கை இராணுவம் இம்மக்களின் வாழ்வியல் ஆதாரமான குடியிருப்புக்களையும் தோட்டங்களையும் பாதுகாப்பை காரணம் காட்டி இடித்து தரைமட்டமாக்கியது.

இம்மக்கள் வாழ்ந்தற்கான எவ்வித தடயங்களுமின்றி மாஞ்சோலை எல்லைக்கிராமம் அழிக்கப்பட்டது. மரத்தாhல் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையானது. கொடிய யுத்தத்தில் நமது மக்களும் தம் இருப்பிடங்களையும் ,பொருளாதார வளங்களையும்; உயிர்களையும் இழந்ததுடன் இரு பக்கமும் அடிபடும் மத்தளம் போலாகி ஓர் அகதி வாழ்வுக்கு நிர்ப்பந்தமாக தள்ளப்பட்டனர். இதற்கு அரசும் விடுதலைக்காக போராடும் ஆயுதக்குழுக்களும் முஸ்லிம் கட்சிகளும், அமைச்சர்களும் பதில் சொல்லியாக வேண்டும். முஸ்லிம்கள் போராட்டத்திற்கு எதுவும் செய்யாமல் சொகுசாக இருந்து கொண்டு வெண்ணை திரண்டு வருகையில் தாழியை உடைக்கிறார்கள் என குற்றம் சாட்டும் தமிழ் பேரினவாதம் முஸ்லிம்களும் தமிழர் போராட்டத்திற்காக பலகோடி இழப்புக்களை சந்தித்து மாண்டுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் சுயகௌரவத்துடன் அரசியல் தீர்வு பெற்று வாழ எல்லா வகையிலும் மிகப்பொருத்தமான ஒரு பாதிக்கப்பட்ட சமூகம் என்பதை உணர்த்தவே இதை குறிப்பிடுகின்றேன்.

78ம்ஆண்டில் கிழக்கில் வீசிய சூறாவளிப்புயலுக்கு முன் இப்பிரதேசம் மரமுந்திரிதோப்பாகவும் தென்னந்தோப்பாகவும் இருந்தற்கான சான்றுகள் உள்ளன. முன்பு அடிக்கடி வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படும் இப்பிரதேசத்தில் வீடு கட்டுவதற்கு நிலத்தை அகழ்ந்த போது  வெளிவந்த மனித மண்டையோடும் கட்டடத்தின் சில சிதிலங்களும் எல்லையில் மாஞ்சோலை பெரிய பள்ளியும் மையவாடியும் இருந்ததற்கான சான்றுகளாகும் என வயதில் மூத்தவர்கள் சாட்சி சொல்கின்றனர்.

 அக்காலம் எல்லையில் ஓடைக்கரை இருந்தது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொழுதெல்லாம் பள்ளிவாயலும் மையவாடியும்  பெரிதும் பாதிக்கப்பட்டன. ஊரார் பள்ளிவாயலை ஊரின் மத்திக்கு மாற்றியதுடன் மையவாடியையும் மாற்றினர் என்பதே வரலாற்று உண்மையாகும். இவ்வுண்மைகளை குழிதோண்டி மறைத்து விட்டு இம்மண்ணை தமிழர்களின் பூமி என சொந்தங்கொண்டாடுவது ஆதாரமற்ற வாதமாகும்.

95 இல் இம்மக்களின் கணிசமானோர் தமது சொந்த இடங்களில் குடியேறிய போதும் தொடர்ந்தும் வாழ முடியாத நெருக்குவாரங்கள் ஏற்டவே மறுபடியும் அகதிகளாக்கப்பட்டனர்,

கிழக்கு மாகாணம் தமிழ் விடுதலைப்புலிகளிடமிருந்து அரசாங்கத்தின் கட்டுபாட்டில் முழுமையாக வந்ததையிட்டு இம்மக்களும் மகிழ்ச்சியுடன் தமது பூர்வீக மண்ணில் வாழ்வைத்தொடங்கும் பொருட்டு தமது காணிகளில் தற்காலிக குடிசைகளை அமைத்து குடியேறினர்,

எனினும் மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதையாக முஸ்லிம் மக்களின் நிலை மாறிவிட்டது. சட்டிக்குள்ளிலிருந்து அடுப்பில் விழுந்த மாதிரி கிழக்குத்தான் விடுதலை பெற்றதே தவிர அதில் வாழும் முஸ்லிம்கள் அல்ல என்பதை கிழக்கு விடுவிப்புக்குப் பின் நிகழ்ந்த  அண்மைய நிகழ்வுகள் நிலைமையின் விபரீதத்தை சுட்டுகின்றன.

நடுக்கடலில் நின்றாலும் நாய் நக்கித்தான் குடிக்கும் என்பதை ஜனநாயக நீரோட்டத்திற்குள் வந்து விட்டதாக உலகிற்கு முரசறிவிக்கும் தமிழ் ஆயுதக்குழுக்கள் மீளக்குடியேறிய மாஞ்சோலைக்கிராமத்து எல்லைப்புரத்து மக்களின் குடிசைகளை இரவோடு இரவாக கடந்த 2007  மழைக்காலத்தில் தீ வைத்து துவம்சம் செய்தனர். மட்டுமன்றி இது தமிழர் தாயக மண்ணென்ற கட்டுக்கதையையும் பரப்பி முஸ்லிம்கள் தமிழர்களின் காணிகளில் அத்துமீறுகின்றார்கள் என்ற பொய்ப்பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர். 2007 தீவைப்பு சம்பவத்தில் 60க்கும் மேற்பட்ட குடிசைகள் முற்றாக எரிந்து சாம்பராயின. பாதுகாப்புக்காரணங்களுக்காகவும் தமிழ் ஆயுதக்குழுக்களின் உயிர் அச்சுறுத்தலுக்காகவும் மாஞ்சோலை எல்லைக்கிராமத்து மக்கள் இரவில் உறவினர் வீடுகளில் தங்கும் சமயம் பார்த்து தமிழ்ப்பேரினவாதம் தனது வஞ்சத்தை தீர்த்துக்கொண்டது.

 அத்துடன் அது நிறுத்திக்கொள்ளவில்லை.இரவில் யாருமற்ற கிராமத்திற்கு வந்து பயிர்களை துவம்சம் செய்து தென்னங்கன்று உள்ளிட்ட பெரும்பயிர்களைபிடுங்கியும் முஸ்லிம்களை தம் வாழ்விடங்களில் இருந்து விரட்டியக்க பலத்த நெருக்குவாரங்களை உண்டாக்கியது. கிண்ணையடியிலிந்து வடிகால்கள் ஊடாக மாஞ்சோலைக்கிராத்திற்கு மழைநீரை திருப்பி விட்டு அக்கிராமத்தை சென்ற வருடம் முற்றாக நீரில் மூழ்கடித்து மக்களை வரலாற்றில் முதல் தடவையாக பாடசாலைகளில் அகதிகாக அனுப்பி தன் குரூரத்தை தீர்த்துக்கொண்டது.

 இம்மக்களின் வாழ்வியல் இருப்பிடப்போராட்டத்திற்கு முன்னின்னு உழைத்த சமூக முன்னோடிகளை முஸ்லிம் தீவிரவாதிகளாக சித்தரித்து பிரச்சாரம் செய்து வழக்கொன்றையும் தாக்கல் செய்தனர். வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கானது முஸ்லிம்கள் தமிழ்மக்களின் மண்ணில் அத்துமீறிக்குடியேறியுள்ளதை தடை விதிப்பதற்கான வழக்காக பதிவு செய்யப்பட்டது. உண்மையில் தமிழ் மக்களின் குடியேற்றத்திற்கு பல இலட்சக்கணக்காண ஏக்கர் நிலங்கள் தரிசாக இருக்கும் போது முஸ்லிம்களின் எல்லைகளில் வந்து வேண்டுமென்றே தணகும் இந்த ஆக்கிரமிப்பை சொரணையுள்ள  யாராயினும் கைகட்டி வாய் பொத்தி நிற்க முடியாது.(சில முஸ்லிம் அமைச்சர்கள் போல)
இத்தொடரில்தான்  இம்மக்களின் மீது ஜனநாயக நீரோட்டத்திற்குள் நுழைந்த ஆயுததாரிகள் நிராயுதபாணியான அப்பாவிகளின் குடிசைகளில் தங்கள் வீரத்தை தீயாகக் காட்டியுள்ளனர்.

முஸ்லிம்களின் எல்லைக்குள் தமிழ்மக்களுக்கான குடிசையினை அமைத்து இது தமிழ்மக்களின் காணி என முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போட எத்தனித்துள்ளனர், வரலாறு அறியாத கற்றுக்குட்டிகளின் அவசர நிலையால் துளிர்விட்டு தளைத்து வந்த தமிpழ் முஸ்லிம் உறவில் விரிசல்கள் ஏற்பட்டு விடுமோ என்;ற அச்சம் நியாயமான மனித நேயமுள்ளவர்களை கலவரப்படுத்துகின்றது.

கடந்த 02.08.08ம்திகதி இரவு 9.30 மணியளவில் இப்பிரதேச மக்கள் அச்சம் காரணமாக உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்த தருணம் பார்த்து சுமார் இருபது குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. உடுதுணி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான சொத்துக்களும் தீயில் எரிந்து சாம்பராகியுள்ளன. மீண்டும் இம்மக்கள் தம் சொந்த மண்ணில் அகதிளாக்கப்பட்டு சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

முன்பு தமிழ் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல் இருக்கிறது பாதுகாப்பு தாருங்கள் என பொலிசாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதெல்லாம் உதாசீனம் செய்தவர்கள் தீ வைப்பு சம்பவத்திற்குப்பின் நீதிமன்றத்தின் கட்டளையை ஏற்று எல்லையில் பாதுகாப்புக்கு அரண் அமைத்து நிற்பது வேடிக்கையிலும் வேடிக்கை. முஸ்லிம்கள் கிள்ளுக்கீரையாக பயன்படுத்தும் சில அரசியல் சக்திகளும் ஆபத்தில் கைநழுவிப்போகும் செயலால் மக்கள் விசனமுற்றுள்ளனர்.
 கிழக்கு மீட்புக்குப்பின் முஸ்லிம்கள் மீது இழைக்கப்பட்ட பாரிய அத்துமீறலாகவும், இன உயிர் அச்சுறுத்தலாகவும் இவ்வாறான சம்பவங்கள் அமைந்து விடுகின்றன. கிழக்கு மீட்பு என்பது அப்பாவி முஸ்லிம்களை தமிழ்பேரினவாதத்திற்கு தாரை வார்த்த ஒரு கொண்டாட்டமாகவே ஆகிவிட்டது,

 மேற்படி தீவைப்பு சம்பவத்திற்கு பின் சம்பவத்தை விசாரித்த வாழைச்சேனை மாவட்ட நீதி மன்ற நீதிபதி இரு தரப்பினரையும் அழைத்து ஒரு இனக்கக்குழுவொன்றை நியமித்திருப்பதாக தெரிய வருகிறது. இரு தரப்பாரும் தங்கள் எல்லைகளை ஆதாரபூர்வமாக நிரூபிக்கும்படி நீதி மன்றம் கோரலாம்.

எனினும் முஸ்லிம்களின் எல்லைகள் குறித்த வரைபடங்களும் மோசடி செய்யப்பட்டு பிரதேச செயலகங்களில் இருந்த பழைய வரைபடங்களுக்கு பதிலாக புதிய பிரதேச எல்லை நிர்ணய வரைபடங்கள் தமிழ் பேரினவாதிகளால் சொருகப்பட்டிருப்பதும் அண்மைய விசாரணைகளின் போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் எல்லைகளை வெறும் சதுப்பு நிலங்களாகவும் குடியேற்றமற்ற வயல்வெளிகளாகவும் வரைபடம் வரைந்தவர்கள், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளை தமிழ் பிரதேச நிருவாக அலகுடன் இணைத்து விட்டபுத்திசாலித்தனத்தை நமது சமூகம் கண்டும் காணாமல் ஒதுங்கிப்போனால் நமக்கு சிறு நீர் கழிப்பதற்கும் ஒரு கையளவு மண்ணும் இருக்காது என்பதே நிஜம்.

2008-08-13ம்திகதி  எங்கள் தேசம் பத்திரிகையில் எழுதிய கட்டுரை தகவலுக்காக  எனது வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்கின்றேன்

மான்புறும் மாற்றுத்திறனாளிகள்

ஊனமுற்றவர்கள் என் பதத்தை விட  “மாற்றுத் திறனாளிகள்“  என் சொல் மிகப்பொருத்தமானது. சில சமயங்களில் அவர்களின் “செயல்திறன்“ பிரமிக்க வைக்கிறது.சாதாரண மனிதர்கள் செய்வதைப் போலவே விரைவாகவும் பிழையின்றியும் அவர்கள் கருமங்கள் ஆற்றும் போது நம்மை ஆச்சர்யப்படுத்த வைக்கிறது.

நம்மை சுற்றிலும் தினந்தோறும் பல மாற்றுத் திறனாளிகளை கடந்துதான் போகிறோம். அவர்களை கிண்டலாகவும் கேலியாகவும் பார்த்த சமூகத்தில் இன்று மாற்றம் ஏறபட்டுள்ளது. ஆனாலும் திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் மாற்றுத் திறனாளிகளின் குறைபாட்டை கேலி ஆக்குகின்றன. மாற்றுத் திறனாளிகளாக பிறந்தது சாபம் என்ற எண்ணம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது குடும்பத்தாரின் கடமை மட்டுமல்ல.சமூகம் மற்றும் அரசாங்கத்தின் கடமையும் கூட. 

"மாற்றுத்திறனாளி" என்பவர் உடலிலோ அல்லது மனதிலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக அவரால் சில செயல்களை செய்யமுடியாமல் போய்விடுகிறது இதனால்  நாம் மாற்றுத்திறனாளி என அழைக்கிறோம். அது பின்வரும் வழிகளில் வகைப்படுத்தப்படுகிறது:
·         மரபனுவினால் பிறப்பிலேயே ஏற்படும் மாற்றங்கள்
·         தாயின் கருவில் இருக்கும் பொழுது அல்லது பிறந்த பின்னர் ஏற்படும் நோய்கள் நோயினாலோ அல்லது விபத்தினாலோ ஏற்படுத்திக்கொண்டது

தெரியாத காரணங்களால் குறைபாடுகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்
உடல் ஊனம்,புலன் குறைபாடு, பார்வைக் குறைபாடு, கேள்விக் குறைபாடு,நுகர்ச்சி மற்றும் சுவைசார் குறைபாடு,மனவளர்ச்சிக் குறைபாடு, உளப்பிறழ்வுக் குறைபாடு

மனவளர்ச்சிக் குறையை பலரும் மன நோய் எனத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் மனவளர்ச்சிக் குறைபாடு வேறு; மன நோய் வேறு. அடையத்தவறிய மனதின் நிலையே மனவளர்ச்சிக் குறை என்பது உளவியலாளர்களின் கருத்தாகும் உளப்பிறழ்ச்சி அல்லது உள நோய் அல்லது மன நோய் என்பது தனிப்பட்ட மனிதரில் உண்டாவதும் வழமையான பண்பாட்டு வளர்ச்சியில் எதிர்பார்க்கப்படாத துன்பத்தை அல்லது இயலாமையை உண்டாக்கும் உளவியல் அல்லது நடத்தைக் கோலம் ஆகும். உளப் பிறழ்ச்சியை அடையாளம் காணலும் அது தொடர்பான புரிதலும் காலத்துக்குக் காலமும் பண்பாட்டுக்குப் பண்பாடும் மாற்றமடைந்து வந்திருக்கிறது.

உடலளவில் பலவீனமாக இருந்தாலும் மனதளவில் தைரியமாக இருப்பவர்கள் தான் மாற்றுத் திறனாளிகள். அனைத்து துறைகளிலும் இவர்கள் திறமையை வெளிக்காட்டுகின்றனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடைக்கின்றன. உடல் குறைபாடு என்ற ஒரே காரணத்தை வைத்து அவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்க இந்த சமூகம் மறுக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் டிச. 3ம்திகதி சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 உலக மக்கள் சனத்தொகையில் 15 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகள். இதில் 80 சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாகவும் உள்ளனர். வளரும் நாடுகளில் உள்ள மாற்றுத் திறனாளியாக உள்ள குழந்தைகளில் 90 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்வதில்லை என "யுனெஸ்கோ' அமைப்பு தெரிவிக்கிறது

சங்கங்களுக்கு பெயரிடும் போது விழிப்புலனற்றோர் ஊனமுற்றோர் என்ற எதிர்மறை செற்பதங்களை பிரயோகிக்காது சார்பான சொற்களையே பயன்படுத்த வேண்டும். விசேடதேவைக்குட்பட்டோர் என்றோ மாற்றுத்திறனாளிகள் என்றோ மாற்றுவலுவுடையோர் என்றோ இவ்அமைப்புகளுக்குப்  பெயரிடுவது பொருத்தமானது. இதனை அரச நிர்வாகமும் ஏனைய அமைப்புகளும் கவனத்திற்கொள்ளல் வேண்டும்.
பொது கட்டடங்களையும் வீதிகளையும் அமைக்கும் 

போது மாற்றுத்திறனாளிகள் எவரது உதவியுமின்றி நடமாடத்தக்க வகையில் அமைக்கப்படுதல் வேண்டும். பொதுகட்டடங்களுக்கு அனுமதி வழங்குவோர் இதனை கருத்தில் கொள்ளுதல் அவசியம். வீதிகளில் விழிப்புலனற்றோர் கடக்கும் சந்தர்ப்பத்தில் ஒலி சமிக்கைகள் மூலம் அவர்களுக்கு உதவும் வழிமுறை. வீதி சட்டத்தில் உள்ளக்கப்படவேண்டும்;.

   
இவற்றை எல்லாம் அரசும் சமூகமும் கவனிக்காதவிடத்து அதற்காக குரல் எழுப்புவதற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ரீதியாக ஒன்றுபட்டு அரசியலில் ஈடுபடுதல் வேண்டும். உள்ளுராட்சி அமைப்புகளிலும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் இவர்கள் பங்குபற்ற வேண்டும். 

இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் இனிவரும் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளையும் வேட்பாளர்களாக நிறுத்துதல் வேண்டும். அரசியல் ஆளுகையில் இவர்களது குரல் அவர்களுக்காக ஒலிக்க வேண்டுமாயின் இது அவசியம். இது தொடர்பாக இவ் அமைப்பினர் கட்சிகளுக்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.

மாற்று திறனாளிகள் தமது அமைப்பின் ஏற்பாட்டில் தற்போதைய தகவல் யுகத்தில் இணையத்தளங்களை உருவாக்கி தமது தேவைகளை சர்வதேசமயப்படுத்தமுடியும். குரல் வழியான சமிக்கைகளை விளங்கும் கணணியை பயிலுதல் இன்றியமையாதது. 

இன்று சர்வதேசத்தில் பயன்படுத்தப்படுவதுபோல் இவர்களுக்கு தேவையான நவீன தொழில்நுட்ப கருவிகளை பெறுவதற்கு முக்கியமாக அரச சார்பற்ற தொண்டார்வு நிறுவனங்கள் உதவ முன்வரவேண்டும். உதாரணமாக நவீன ஒலிப்பதிவு கருவிகளை வழங்கி விழிப்புலனற்றோருக்கு உதவ முடியும்.

மாற்றுத் திறனாளிகளின் பங்களிப்பை ஏற்காமல் நம்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிவிடலாம் என நினைப்பது கனவாகவே முடியும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சமூகத்தின் இரங்கல் பார்வையை பெற்றுக்கொண்டு மாற்றுத் திறனாளிகள் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு.

நாட்டின் முன்னேற்றத்தில் அவர்களின் நியாயமான பங்கேற்பை ஏற்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு சலுகை அளிக்காவிட்டாலும் மாற்றுத் திறனாளிகள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையையும் பறிக்கக் கூடாது.இதுவே வளர்ச்சியடைந்த நாடுகளின் முன்னற்றத்திற்கு ஆரோக்கியமான செயற்பாடாகும்.


கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் 2014ம்ஆண்டு வெளியிடப்பட்ட நங்கூரம் சஞ்சிகைக்கு தொகுத்து எழுதப்பட்டது.





Saturday 14 November 2015

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

50

இப்படி அந்த எதிர்ப்பு நீண்டு செல்கின்றது.
யதீந்திரா போன்ற புலி அபிமானிகளின் பார்வையில் புலிகள் நல்லவர்கள்.அவர்கள் மனம் நோக ஒரு ‘அ’ க்கூட எழுதிவிடக்கூடாது.மற்ற இனத்தின் மீது என்னதான் அத்துமீறல் செய்தாலும் அதனை வாய் பொத்தி கைகட்டி பார்த்திருக்க வேண்டும்.இதனை மீறுபவர்கள் புலி எதிர்ப்பாளர்கள். தேசத்துரோகிகள் .
யதீந்திரா போன்றவர்களிடம் நான் கேட்பது ஒன்றுதான் 30 வருட போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு புலிகள் பெற்றுக்கொடுத்த தீர்வு என்ன?
என்னிடம் இருக்கும் மனப்பதிவு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டபின்பும்,மனநோயாளியாக மாற்றப்பட்டபின்பும்,அங்கவீனர்களாக ஆக்கப்பட்டபின்பும்,சொத்தழிவுகள் ஏற்பட்ட பின்பும், மக்கள் அலைந்துழந்து நிம்மதியிழந்தபின்பும் நீங்கள் பெற்றுக்கொண்டது ஒரு முன்னால் முதலமைச்சர், ஒரு அரை அமைச்சர்.இப்போது ஒரு முதலமைச்சர்.
பேரினவாத்தின் ஓங்கிய கரங்களை மடக்கிவிடமுடியாத இவர்களால் இன்னும் தமிழ் மக்களின் பிரகாசம் ஜொலிக்கின்றது என்ற சிலரின் கனவுகள் பலிக்க நானும் யதீந்திரா போன்றவர்களுடன் இணைந்து பிரார்த்திக்கின்றேன்.அது நிற்க!
நினைவில் மலர்ந்த மலர்கள் உங்கள் விழிகளில் மருந்தாகி ,சில நேரம் விருந்தாகி இதயங்களை தொட்டுச்சென்றிருக்கும். இந்தப்பத்தியை எழுத ஆரம்பித்த போது எங்கே ஆரம்பித்து எப்படி முடிப்பது என்ற அச்சம் எனக்குள் இருந்தது. எழுத ஆரம்பித்த போது விடயங்கள் வெள்ளம் போல் மடை திரண்ட போது எப்படி முடிப்பது என்ற அச்சம் பின்னெழுந்தது யதார்த்தம்.
தோண்டத்தோன்ட நினைவின் பெட்டகத்திற்குள்ளிலிருந்து புதையல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.அதனை தொட ஆரம்பித்தால் முடிவுறாமல் போய்க்கொண்டே இருக்கும். சொல்ல மறந்த கதைகள் எத்தனையோ இடையில் வந்து போய்விட்டன. அவற்றையெல்லாம் சொல்லி விட முடியவில்லை.
இன்னும் பல நூறு கதைகள் ,துரோகம்,ஏமாற்றம்,துயரம், மகிழ்ச்சி என ஊஞ்சலில் ஆட காத்திருக்கின்றன.இந்தப்பத்தியில் வந்த சில திகிலூட்டும் விடயங்களை நிஜமா என வியந்தும்,ஐயமுற்றும் நண்பர்களில் சிலர் கேட்கின்றனர்.எல்லாக்கதைகளும் நிஜத்திலிருந்து பிறந்தவை.கற்பனைக்கு இதில் இடமில்லை. ஒரு சமூகத்தின் கலை கலாசார அரசியல் வரலாற்றினை எனக்குத்தெரிந்த மொழியில் சொல்லியிருக்கின்றேன். எனக்கு  பட்டுக்கோட்டை பிரபாகர் போல் மர்மங்களை சொல்லி பயமுறுத்தும் தைர்யம் கிடையாது.அல்லது நமது ஈழத்தில் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் சில ரமணி சந்திரன்களைப்போல் திகிலூட்டவும் வராது.
என்னுடைய பெரும்பாலான கதைகள் என் அனுபவத்தில் வெளிப்பாடு. அது போர்க்காலமாகட்டும்,அல்லது தனிநபர் அறம், உணர்வுசார் அம்சமாகட்டும்,எதுவாகினும் அதன் பின்புலத்தில் என் மூன்றாவது கண்ணும் நுழைந்திருக்கும்.
வறுமை,அச்சம், உயிர்ப்பயம்,அகதி வாழ்வு, சுகபோகம் என எல்லா வாழ்வையும் அனுபவித்திருக்கின்றேன்.குடிசைகொட்டிலில் ‘டேஸ்ட் கிழங்கு’ம் ‘பாபத் அவியலு’ம்,  ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உயர் ரக உணவும் ருசித்துப் பார்த்திருக்கின்றேன். கஞ்சிக்கே வழியில்லாமல் இளமையில் துடித்தும் இருக்கின்றேன். ஒரே ஆடையில் ஒரு வருடம் பள்ளிக்கூடம் பொது நிகழ்ச்சி என்று கந்தையாயினும் கசக்கி கட்டியிருக்கின்றேன்.விதம் விதமாய் ஆடைகள் அணிந்தும் பார்த்திருக்கின்றேன்.
வீடற்று அலைந்ததும் குதூகலம் நிறைந்த வீட்டில் வாழ்வதும் என இரண்டு தருணங்களை வாழ்வில் இறைவன் எனக்கு தந்திருக்கின்றான். துன்பமும்,இன்பமும் என்னளவில் அல்லாஹ்வின் சோதனை அதில் துவண்டு விடாமல் பின்னயதில் துய்த்துவிடாமல் வாழ்ந்தால் வாழ்க்கை சம நிலையாக ஓடும்.
எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் சத்தியத்தை பேண நினைக்கின்றேன். அதை பின்னபற்றியொழுகவும் செய்கின்றேன். ஆணவம், அகம்பாவம்,வித்துவச்செருக்கற்ற  படைப்பின் மூலம் இந்த சமூகத்திற்கு பல விடயங்களை சொல்லியிருக்கின்றேன்.இது எனது இரட்சகன் எனக்கு தந்த அருட்கொடை.
வாழ்வில் எல்லா நிலைகளிலும் அவனின் இந்த அருட்கொடை மீது அளவில்லா நம்பிக்கை கொண்டுள்ளேன். எழுத்தாளன், திருடனாக.. கொலைகாரனாக, ஏமாற்றுபவனாக..பொய் சொல்பவனாக. .போட்டுக்கொடுப்பவனாக….ஊழல்மிகு வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக.. ஏய்த்துப் பிழைப்பவனாக இருப்பதை விட அவன் பிச்சை எடுப்பது மேல் என்பது எனது கொள்கை.
இந்த தொடரை தொடராகப்படித்து என்னை ஊக்கப்படுத்திய ஆலோசனை சொன்ன நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் இதனை பிரசுரித்து உதவிய எங்கள் தேசத்தின் ஆசிரிய குழாத்தினருக்கும்,நான் ஆடிய ஊஞ்சலின் கயிறுகள் அறுந்து விடாமல் என்னை கரை சேர்த்த இறைவனுக்கும் பல கோடி நன்றிகள்.
இனி ஊஞ்ஞல் நிற்கும்.

மழை

   நெடுநாளாய் மழை பெய்து கொண்டிருக்கின்றது.மழை எப்போதும் என் உகப்புக்குரியது,வியப்பிலாழ்த்துவது.வீட்டின்  ஜன்னலோரம் அமர்ந்தபடி மழையின் தூரல்களை வருடிக்கொண்டிருக்கின்றேன்.இந்த மழை நாள் மட்டுமே வீட்டில் என்னை கட்டிப்போடும்.பிள்ளைகளுடன் விளையாடவும்,பழைய புத்தகங்களை கிளறவும்.எனது படிப்பறையை ஒழுங்குபடுத்தவும் கொஞ்ச நேரம் தொலைக்காட்சிப்பார்த்து, ரசிக்கவும் மணிக்கணக்காக வீட்டைச்சூழ மலர்ந்திருக்கும் மலர்களை வருடியபடி நடக்கவுமான அவகாசத்தினை மழை எனக்கு தருகிறது.
மழைக்காலம் எழுதுவதற்குறிய உந்துதல் கிளறும் காலம்.அனல் காலத்தின் நசநசப்புக்கிடையில் எழுத்தும் உன்னத மனமும் கருகிப்போகும்.அழகின் வாத்சல்யங்களையும்,அதிசயங்களின் அபிநயங்களையும் ஆரோகணிக்கும் இந்த மழைக்காலத்தின் முன் ஒரு குழந்தையாகிப்போகின்றேன்.
பொடுபொடுத்துப் பெய்யும் மழை மேலும் காதலை கிளறச்செய்யும். கிளர்ச்சிகளின் மாயங்கள் முடிச்சவிழ்க்கப்படமால் என்னை தாப்புக்காட்டும்.
காமத்தின் கிளைகள் துளிர்த்துப்பசளிக்கும் வண்ணங்களையும் மழைதான் தாளித்துக்கொட்டும்
எத்துனை தாளத்துடன் மழை  இந்த  மண்னை நனைக்கின்றது. மெல்லிய தூரலில் சைக்கிளில் செல்வது எனகுப்பிடித்தமானது.நீர்த்திவளைகள் நெஞ்சிலும் முகத்திலும் அடிக்கும் அழகில் சொக்கிப்போவேன்.
மழை நாட்களில் குளத்தின் கரையில் அமர்ந்து கொண்டு குளத்தினை ஊடுறுவிப்பார்த்திருக்கின்றேன்.
குளத்தின் மையத்தில் விழும் மழைத்துளியின் வீச்சம்தான் எத்துனை ஆரவாரமாய் இருக்கும்.மழை நாளில் காடுகளுக்குள் நின்றிருக்கன்றீர்களா அது ஒரு ஆனந்த உலகம்.வனத்தின் இடுக்குகளில் பட்டுத்தெறிக்கும் மழையின் உக்கிரத்தில் ஆகாயத்தின் ஜலக்கதவுகளின் ஊடே மழை ஆக்ரோசமாய் கொட்டும். 

திடுதிடுவென காடே அதிரும்.குரங்குகள் கொடுவிக்கொண்டு அடர் கிளைகளுக்குள் பதுங்கிக்கிடக்கும்.மேய்ச்சலுக்கு வந்த மாடுகளும் வாலைச்சுருட்டி பிருஷ்டத்துக்குள் சொருகிக்கொண்டு  அசைபோட்டபடி அப்படியே நிற்கும்.இயங்கும் அத்தனை வஸ்த்துக்களையும் அதனதன் இடத்தில் நிலைத்து நிற்கச்செய்யும் மாய  மந்திரம் மழை.

மழை அழிக்கவும் ஆக்கவுமான திறவுகோளை காவிக்கொண்டு இந்த மண்ணிற்கு வருகின்றது. விருப்பமற்றவர்களை மண்ணுக்குள் இழுத்துக்கொள்கின்றது. வீடுகளுக்குள் அழைக்காமல் வரும் விருந்தாளியாய் நுழைந்து துவம்சம் செய்கின்றது. கட்டுக்கடங்காமல் அணைகளை உடைத்து குதித்துப் பாய்ந்து வெறித்தனமாய் எல்லேரையும் தாக்கி அழிக்கின்றது.

வயல்நிலங்கள் குடியிருப்புக்கள் மரம் செடிகள் குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என சகட்டுமேனிக்கு மூா்க்கத்துடன் ஏப்பமிட்டு தன்பாட்டில் போய் கடலில் தஞ்சம் புகுந்து கொள்கின்றது.

என்னைக்கிளர்ச்சியு!ட்டிய மழை ஒரு கோழை. எல்லாவற்றையும் அழி்த்து விட்டு கடலில் போய் பதுங்கிக்கொள்கின்றது.பிரித்தெடுத்து தண்டிக்க முடியாத பலசாலியிடம் தன்னை சங்கமாக்கிக்கொண்டு ஆணவமாய் சிரித்துக்கொண்டு கரையை முட்டிவிட்டுச்செல்கையில் மழையின் மீது சினம் வருகின்றது.
தொண்டர்களை ஏவிவிட்டு எதிராளியை தாக்கும் சொரணையற்ற அரசியல்வாதியைப்போல் இந்த மழை தராதரம் பார்க்காமல் எதுவும் நடக்கவில்லை என்பது போல் மீண்டும் மண்ணில் விழுகிற போது மனம் குதூகளிப்பதை என்னவென்று சொல்ல .?

Friday 4 September 2015

கதை

40 வயதிற்குப்பின் ஒன்றும் எழுத முடியாது என்றார் 1. எஸ்.எல்.எம்.அவரை மகா பொய்யராக்க வேண்டும் என்று பல தடவைகள் முயன்றும் முடியவில்லை.இன்று எல்லாம் கை கூடி வந்துள்ளது.ஒரு கதை எழுதித்தர வேண்டும் என்ற  இலக்கிய  இதழ்களின் இடைவிடாத நச்சரிப்பில் என் கணினியின் முன் அமர்ந்துள்ளேன்.
கதைக்குரிய கருவும் வந்து விழுந்து மனசுக்குள் ஊதி ஊதிப்பெருக்கெடுத்து பிரவகிக்கின்றது.வீடும் மௌனப்பரப்பில் அமைதியின் உருவாய் கிடக்கின்றது.பிள்ளைகள் விடுமுறை விளையாட்டுக்காய் திடலுக்குச் சென்றுவிட்டனர்.மனைவியின் மாலை நேர உறக்கம்.தொல்லை பேசியின் உதடுகளை தைத்து அதனையும் மௌனிக்க செய்தாகிவிட்டது.

கடவுளே இப்படியொரு தருணம் வாழ்க்கையில் லயித்து எத்துனை காலமாகிவிட்டது. எழுது எழுது என்று கைகள் வேறு பரபரக்கத்தொடங்கிற்று. 
ராஜாதி ராஜன் கதை

முன்னாரு காலத்தில் எங்கள் கிராமத்தை ஓர் சிற்றரசன் ஆண்டு வந்தான். தேசத்தின் மன்னனுக்கு ஆண்டுக்கு ஒரு தடவை திறை செலுத்தி தன் ஆட்சியை நெடுங்காலமாய் தக்கவைத்துக்கொண்டிருந்தான். அவனுக்கு இரு மந்திரிமார்கள். மகா புத்திசாலிகள். அரசனுக்கு ஒத்தோதுவது அவர்களின் பிரதான பணி. அவன் செல்லுமிடமெங்கும் நிழலைப்போல் தொடர்வதும் அவர்களின் பிறவிக்கடன். ‘ஒரோயொரு ஊரிலே ஒரோயொரு ராஜா போன்ற  தத்துவப்பாடல்களை தேடித்தேடி குழல்களில் ஊரெங்கும் ஊதி விடுவதற்கென்று ஆள்பிடிப்பது உட்பட மந்திரிமார்களின் கடமை பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. 

அரசன் இரு மாடுகளும் வளர்த்து வந்தான். கொம்புகள் சீவப்பட்ட மதர்த்த கடாய்கள்.முன்பெல்லாம் ‘மறிக்கடா’க்கள் நளமடிக்கப்பட்டு சகட்டுமேனிக்கு ஊருக்குள் உலாவிய காலமிருந்தது.அரசனின் கடாய்களுக்கு கன்னிராசி. அந்தப்புரத்தில் மந்திராலோசனைகளை நடாத்தும்படி அரசனுக்கு மதியுரைப்பதுமுண்டு. கடாய்கள் நள்ளிரவுக்குப்பின் பட்டிகளுக்குள் புகுந்து மன்மத வித்தைகளை காட்டி  விட்டு சூ+ரியோதத்திற்கு முன் தம் இருப்பிடங்களில் வந்து அசை போட்டபடி படுத்துக்கிடக்கும் மிக அப்பாவியாக. 

கதையின் பீடிகை இப்படித்தான் அமைய வேண்டும். இடைநடுவில் ஊரின் வரலாற்றிலிருந்து சில துண்டுகளைப்போட்டு கதைக்கருவின் போக்கை திசை திருப்ப வேண்டும்.பின் நவீனத்துவம் போல்  திடீரென்று கதையின் மூலக்கருவை மாற்றி அரசனை மந்திரியாக மாற்றி, மந்திரியை அரசானாக்க  வேண்டும்.அல்லது கதையில் சில விடயங்களை உட்புகுத்தி அதிரடி திருப்பங்களை உருவாக்க வேண்டும். கதையைப் படிப்பவர்கள் அரசனை விட கதாசிரியனின் அறிவினை மெச்சிப்புகழ்ந்து சிலாகிக்க வேண்டும்.இப்படியொரு கதை என் வாழ்நாளில் படிக்கவே இல்லை என்று முகத்திற்கு நேரே விரல் நீட்டி சொல்லும் பொய்களுக்காக மனம் கிடந்து தவிக்க வேண்டும். 

இனி மனக்குரங்கின் நுனி வாலில் இக்கதை தொங்கிக்கொண்டு தாவித்தாவி குதித்துப்பாவும்.பயணத்தில், தொழுகையில்,இறைவனை நெருங்கி நிற்கும் நடு நிசியில் என நீக்கமற கதை வந்து தொல்லைப்படுத்தும். அணைந்து விட்டுத்தான் ஆறுவேன் என அடம்பிடிக்கும் காமத்தீயின் தாண்டவம் கதைக்குள் வந்து விட்டது.
கதையை எழுதத்தொடங்கு முன் சில குறிப்புகள் தேவை. அரச மந்திரிகளின் மதியுரைஞர்களின் வாழ்க்கை வரலாற்றை தேடித்தேடி ஊரின் அறிவாலயங்களுக்குள் நடந்தேன். ‘நெசசல’ நிலையங்களிலும் ஒரு துரும்பும் இல்லை.இணையத்தளங்களின் இடைவிடாத தேடல்களில் சலிப்புற்றேன்.மகா வெள்ளத்தில் அள்ளுண்டு போகையில் கையில் அகப்படுமே ஒரு துரும்பு அவ்வாறாயினும் ஒரு நறுக் பந்தியாவது இல்லை என்பது என்னை சோர்வடையச்செய்துவிட்டது.கதையை  எப்படி  ஆரம்பிப்பது நகர்த்துவது உச்சத்தில் வாசகனை திக்குமுக்காட வைப்பது முற்றுப்புள்ளியிட்டு திணறடிப்பது.
மனம் அல்லாடத்தொடங்கிவிட்டது.

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட பிரபலங்களின் ஆய்வில் ஈடுபட்டுள்ள எனது நண்பன் எனக்கு  உதவுவதாக வாக்களித்தபடி வெள்ளவாய பொலிஸ் நிலையத்தில் குற்றப்புலனாய்வுப்பிரிவின் பேரேட்டிலிருந்து   நகலெடுத்து  சில குறிப்புகளை அனுப்பியிருந்தான்.

சின்ன காக்கா
மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று கல்குடா தொகுதி: சிறப்பு பெயர்: சின்ன காக்கா . இயற்பெயர் ஆதமலி சீனி முஹம்மது. தொழில். அரசனின் அந்தரங்க இணைப்புச் செயலாளர். அயல் கிராமத்திலிருக்கும் சிற்றரசர்களின் எடுபிடியாகவும் உளவாளியாகவும் அவ்வப்போது செயற்படுதல். குற்றத்தின் வகை : காரயடிப்பட்டியில் வயல்காரனின் மனைவியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தல்.கை கூடாத போது உயிர் அச்சுறுத்தல்.மேலும் மனைவியின் மீதுள்ள மோகம் கை கூடாத ஆற்றாமையால் வயல்காரனை வேலை பார்க்க முடியாதவாறு கெடுபிடிகளை ஏற்படுத்தி அவன் தாமாகவே நின்று கொள்ள தூண்டியது.
தண்டனை ஆறுமாத ஒத்திவைக்கப்பட்ட சிறை.இரண்டு சரீரப்பிணை.எனினும் அரசனின் பரிந்துரையின் பேரில் உடன் விடுதலை.

அலிமா 
பெயர் இசுமாலெப்பை அலிமாக்கண்டு பட்டப்பெயர் : இழவு வீட்டின் இல்லத்தரசி

குறிப்பு: சிறப்பு பெயருக்குரிய காரணங்கள். பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடைவிடாத புலனாய்வு மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள். இழவு வீடுகளுக்கு வரும் அலிமாக்கண்டு பேரழகி இல்லாவிட்டாலும் வசீகரமானவள்.கருப்பழகி.கருப்பி என்று கிண்டலடிப்பவர்களுக்கு ‘தொதல் கருப்பா இருந்தாலும் இனிப்பு இனிப்புதான் ’ என்று வாயை அடைத்துவிடுவதில் சமர்த்து.அப்படிச்சொல்லும் போது கிறக்கமாய் ஒரு பார்வையால் சிரித்தும் வைப்பாள். இழவு வீடுகளில் தனித்து விடும் ஆண்களை போசி;ப்பதுதான் அலிமாவின் பணி.அரசனின் விருந்தினர்களில் பாதிப்பேர் இப்படித்தான் ‘இழவு வீட்டு’க்குப்போகிறேன் என்பார்கள். சங்கேத மொழி புரிபவர்களுக்கு கொடுப்பிற்குள் சிரிப்பு முகிழும். நிறைய ஆண்களிடம் அரை மணி நேரத்திற்காக பலகோடி சொத்துக்களை கைமாறியவள் என்ற பெருமையும் அலிமாவுக்கு உண்டு.

அரசவையில் மன்னன் துதி பாடி கரகோசங்களை குவிப்பவள் 
சிலர் இந்தியாவில் மனையும் வாழ்வும் வழங்கி அலிமாவை அம்மாவாக்கி பார்த்திருக்கின்றார்கள். குற்றத்தின் வகை ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் ஏக காலத்தில் வாழ்ந்து குடும்பங்களில் கலவரங்களை தூண்டியது.
தண்டனை: ஒரு வருடத்திற்கு குறையாமல் பொதுச்சேவை செய்தல். ஐம்பதினாயிரம் தண்டப்பணம் செலுத்தல். முறையாக திருமணம் செய்து குடும்ப வாழ்வில் ஈடுபடல். 

பிற்குறிப்பு : அலிமாவை யாரும் திருமணம்  செய்ய முன்வராததால் தற்கொலைக்கு முயற்சித்து காப்பாற்றப்பட்டு தற்கொலை முயற்சிக்கான வழக்கு மாவட்ட நீதி மன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. வழக்கு எண்:  மட்/சி/என்/2331/2/  அறிக்கை: முதியான்சலகே முதுகெட்டிகம மஞ்சுள 23459.

28.4.2011 இல் ஊர்க்குருவியால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்.
யார் இந்த கொடி சுறா ?

அரசனின் கொந்தராத்து வேலைகளில் பங்கெடுக்கும் முக்கிய புள்ளி.ஊருக்குள் வரும் அபிவிருத்தித்திட்டங்களில் பாதிக்கு மேல் கொடி சுறாவின் வங்கிக்கணக்கில் ஏறும்.மிச்சமிருப்பதில் அபிவிருத்தி என்ற பெயரில் பணிகள் தொடரும்.உதாரணமாக கிறவல் வீதிக்கு ‘கிறவள் துகள்’களை பரவுதல்;,தார் வீதிக்கு ‘தார் தெளித்தல்’,கொங்கிறீட் வீதிகளுக்கு சீமெந்து கற்களான கலவயினை தெளித்து கொங்கிறீட் வீதியாக மாற்றம் செய்தல் செப்பனிடப்படாத சிற்றொழுங்கைகளின் பெயரில் காசோலைகளை எழுதி எடுத்தல்.கமிசனாக கிராமிய அபிவிருத்திச்சங்கங்களின் தலைவர்களுக்கும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களுக்கும் ரூபாய்களை வீசுவதன் மூலம் அடுத்த ஆண்டுக்குரிய கொந்தராத்துக்களையும் முற்பதிவு செய்தல்.இவர்தான் இந்தக்கிராமத்தின் அபிவிருத்தியின் பிதா மகன்.ஊர் மக்களின் பணத்தில் அவர் சேகரித்துள்ள சொத்துக்கள்.

கட்டுவன்விலயில் 50 மாடுகள் காரமுனையில் 125 ஆடுகள்,குப்புழாக்கொடியில் 75 ஏக்கர் நெற்காணி,ரெஜிதென்னயில் 5 ஏக்கர் காணி (இரு போகம் விளைச்சல்) ஒரு ஹைப்பிரட் கார். ஒரு உழவு இயந்திரம்,மனைவியின் பெயரில் காத்தான்குடி கடற்கரையில் ஒரு வீடு.இது போக வங்கிகளில் நிரந்தர வைப்புகள்.

இது மட்டுமா இந்த கொள்ளைக்காரன் இவ்வருடமும் நமது ஊரின் வடிகானை கொந்தராத்து எடுத்துள்ளான்.இதை தடுத்து நிறுத்த ஒன்றுபடுவோம்.அரசனின் இந்த எடுபிடியை விரட்டியடிப்போம்.இன்று மாலை நலன்விரும்பிகளால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.பாதுகாப்பு காரணங்களுக்காக இடம் குறிப்பிடவில்லை.கூட்டம் ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடங்குளுக்கு முன் முக நூலை பாருங்கள்.நாரே தக்பீர் அல்லாஹ அக்பர்.

இதைத்தவிர வேறொன்றும் கதைக்குரிய குறிப்புகளாக கிடைக்கவில்லை.
மேற்குறித்த குறிப்புகளை வைத்துக்கொண்டு பின்நவீனத்துவக்கதையை வீச்சாக எழுதி முடிக்கலாம் என்று தெரியவில்லை.அரசனின் வரலாற்றை தனியொரு அத்தியாயமாக சேர்க்க வேண்டும். அதற்கு குறைந்தது இரண்டு வாரங்கள் தேவை. நெடுங்கதையாகவும்  எழுதலாம்.

மந்திரிகளின் பிரதானியின் வாய்மூலக் கதைகளை சேகரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

பல் தேய்க்கப்போய் ‘கறள்’ பிடித்த கதையாகப்போய் விட்டது.வாய்மொழி சாட்சியம் கூற யாரும் முன்வரமாட்டேன் என்கிறார்கள். 

இடை விடாத நைச்சியத்தில் கலந்தர் சாஹிப் என் பிடிக்குள்.
தம்பி அங்க இஞ்ச பேசி எழுதிப்போடாதீங்க…நாம ஏன் தம்பி வேலில போற ஓணானப்புடிச்சி காதுக்குள்ள உடுவான் நீங்க கேட்டிங்க நான் சொல்லுரன்.
நம்மட உசன்ட மகள் நேத்து பிள்ளயப்பெத்து கண்டியில வித்துப்போட்டு வயித்த கழுவிட்டு வந்திரிக்காள். ஆறு வாப்பான்டுதானே கேக்குறீங்க? நம்ட ராசாட எடுபிடிதான். 

ஆள் வெள்;ளயும் சுள்ளயுமா இருக்கான் எண்டு இவளும் புடவய தூக்கி காட்டினா வுடுவானா ? ருசி கண்ட பூன.

இது மட்டுமா தம்பி.  என்ட பேரனுக்கிட்ட ரெண்டு இலட்சம் சுளையா வாங்கிட்டு இன்னும் வெளிநாட்டுக்கு அனுப்பல்ல.கரியாவோ கிரியாவோ என்ன நாடோ வாய்க்கு வரனுமே தம்பி. கொரியா என்றேன். அதான் தம்பி அதான் .ஒரு நாளக்கி அஞ்சு ஆறு புள்ளயள் வந்து போகுதுகள். இவன தேடி எல்லாருக்கிட்டயும் லட்சக்கணக்கில்தான் வாங்கி இருக்கான், எல்லாம் ‘அவரு’ குடுக்குற இழக்காரம்தான் சலித்துக்கொண்டார்.
கலந்தர் சாஹிபின் கதையில் சுவாரஸ்யம் இல்லை.மனிதர்களின் அந்தரங்க இடுக்குகளில் தாவித்தாவிப்பாயும் புலிகள் வேண்டும். உள் மனதில் வக்கிர நகங்களால் கிழித்து கீறி காயப்படுத்த வேண்டும். கலந்தரின் கதையில்  என்னதான் உண்டு.

வாய் மூலக்கதைகளும் அருகி விட்டதா? கதைப்பதையும் சிந்திப்பதையும் முகநூலும், வாட்ஸ்அப்பும் கையகப்படுத்;தி விட்டதா?இல்லை ஓயாமல் கதைக்கும் அலங்காரிகளும்,வாய் ஜால மன்னர்களும் இந்த மண்ணில் ஒரு மூளையில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

ஒரு பகற்பொழுதில் முற்றத்து ஊஞ்சலில் நான் சாவகாசமாக அமர்ந்திருந்து ஓரான் பாமூக்கின் ‘பனி’ யில் நனைந்து கொடுவிக்கிடந்தேன். இபெக் போலொரு நாயகி கிடைத்தால் இரண்டாம் தாரமாக மஹர் கொடுக்க வங்கி இருப்பு இருக்கின்றதா என மனக்கணக்குப் போட்டுப்பார்த்தேன். பரவாயில்லை. சமாளிக்கலாம். நானும் இஸ்தான்புல்லின் பனிமலைகளில் உலாவிக் கொண்டிருக்கும் தருணம்  வீட்டுக்கு வீடு நாட்டு மரக்கறி விற்கும் அக்காவின் குரல் முற்றத்தில் ஓங்கி விழுந்தது. ‘புடலங்கா வேணுமய்யா’?
‘புடலங்கா, தோடங்கா எல்லாம் இருக்கட்டும் உங்கட ஊரு கதைகள சொல்லுங்க வாங்க க்கா! என்றேன் .

‘தம்பி கதை கேக்குர நேரத்தப்பாரு ‘ என மறுகி விட்டு 
எங்கய்யா அம்மா, அக்கா வந்திருக்கன் என்டு சொல்லு. உள்ளே இருந்த மகனை நோக்கி  அக்கா கூவினாள்.

அக்கா அந்த காஞ்சிலங்குடா வீட்டப்பத்தி சொல்லுகங்களேன். வீட்டுக்காரி வரும் வரை அக்காவிடம் கதை கேட்கலாம்.

‘இப்ப அது பாழடைந்து கிடக்குது தம்பி. ஆமி இருந்து விட்டுட்டு பொய்த்தானுகள். அதுக்கு முதல் இயக்கம்.இயக்கம் வராதுக்கு முதல் இந்தியன் ஆமி.நல்ல ராசியான இடமென்று எங்கட ஊருல சொல்லுவாங்க.ராசின்டா கொலை ராசி.எலும்புக்கூடுகளின் பிரலாபங்கள் இடைவிடாமல் ஒலித்த வீடு. கற்புக்கரசிகளின் கெஞ்சல்களாலும் கேவல்களாலும் முலாம் பூசப்பட்ட அந்த வீட்டில் உயிர்களின் கசிவை இப்போதும் கேட்கின்றோம்.பூசாரி கந்தவர்மாவின் மனைவியும் அங்கதான் தூக்கில் தொங்கினவ. அவ்வளவு பாதுகாப்பான வீட்டுக்குப்போய் அவ தூக்கில் தொங்கிய மர்மம் துலங்கவே இல்லை.

இந்தியன் ஆமி சடலத்தை பூசாரியிடம் கொடுத்த போது முகம் நிறைய நகக்கீறல்களை கண்டதாகவும் சப்பித்துப்பிய கரும்புச்சக்கையென அவள் கசங்கியிருந்ததாகவும் கதையுண்டு தம்பி.இதுகள் பழைய கதை.இப்ப புதிசா உலாவும் கதைகள் நிறைய இருக்கு.பாழடைந்த வீட்டில் இளவட்டங்களின் களியாட்டம் நடக்குதாம். இயக்கத்துல இருந்து துவக்க தூக்கிப்போட்டுட்டு வந்த முன்னாள் பொடியன்களின் கூட்டங்களும் இங்கதான் தம்பி நடக்குதெண்டு எங்கடவரு சொன்னவரு. 

காசி கைமாறுவதும்,வேலை கொடுப்பதும் கொடுத்த வேலைய பிடுங்கி எடுப்பதும்,ஆளை மாற்றுவதும், தூக்கி தண்ணி இல்லாத காட்டுக்குள் அனுப்பவுதும் கள்ளப்பொஞ்சாதியோட மணிக்கணக்காக பேசுவதும் என்டு பத்துக்கும் பலதுக்கும் இந்த வடுதான் தம்பி அடைக்கலம்.அக்கா மேற்கொண்டு கதை சொல்லும் மனோ நிலையில் இல்லை. கதையை நிறுத்தி விட்டு புடலங்காயுடன் மல்லுக்கட்டப்போய்விட்டா.

இந்தக்குறிப்புகளை வைத்துக்கொண்டு எந்தக்கதையும் எழுத முடியாது.கதையை இம்மியளவும் நகர்த்தும் எண்ணமும் இல்லை.அரசனின் கதையை முழுமையாக எழுதும் முஸ்தீபுகளில் இனி இறங்க வேண்டும்.எழுதி வைத்த குறிப்புகளை படிக்கத்தொடங்கினேன்.புதிதாக தகவல்கள் மனதில் முளைவிட வேறொரு புத்தகத்தில் குறிப்பெடுத்துக்கொண்டேன்.குறுந்தகடுகளை பிளேயரில் ஓடவிட்டு அரசனின் இறந்தகால நடவடிக்கைகளை அவதானிக்கத்தொடங்கினேன்.

பழைய சஞ்சிகைகள்,புத்தகங்கள்,பத்திரிகை குறிப்புகள், நேர்காணல்கள்,       நினைவுமலர்கள், கையெழுத்து சஞ்சிகைகள், ஒலி நாடாக்கள், நினைவுக் குறிப்புகள்,கடிதங்கள்,அரச அபிமானிகளால் அவ்வப்போது வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் என அனைத்தையும் திரட்டி என்னைச்சூ+ழவும் பரத்தி வைத்துக் கொண்டேன்.இனி கதையை எழுதலாம் என்ற ஓர்மம் வந்து விட்டது. 

40க்குப்பின் கூடவே இருக்கும் வியாதிகளில் ஒன்று மறதி. கைப்பேசியை மூடி வைத்த நான் ‘ஐ பேட்டை’ மூடவில்லை.வைபரில் இலண்டனிலிருந்து நண்பர் அழைத்தார். ஒரு மணி நேரம் பேசுவார். தவிர்க்க முடியாது. ஏக காலத்தில் வீட்டின் அழைப்பு மணியும் ஒலித்தது. இனி அரசனின் கதை பாதியில் நிற்கப்போகிறது. பதற்றத்தில் கால்கள் தள்ளாடின.

மனதில் இருந்த கதை கதவிடுக்கால் எனக்கு முன் நழுவிச்செல்வதைப்பார்த்தபடி வாசலை நோக்கி நடந்தேன். 

1. எஸ்.எல்எம். ஹனீபா பிரபல மூத்த எழுத்தாளர்.ஓட்டமாவடி

Friday 22 May 2015

விசித்திர மனிதர்கள்.


எனக்கு சில வித்தயாசமான நண்பர்கள் வாய்த்திருந்தார்கள்.
அவர்களின் எதிராளிகளுடன் நான் நட்புடன் இருக்கக்கூடாது என்கிற ரகம்.
அவர்களின் நண்பர்களை நான் எதிராளியாக பார்க்க கூடாது என்கிற ரகம்.
யாரையாவது சகட்டு மேனிக்கு விமர்சித்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிற ரகம்.
இந்த விசித்திர மனிதர்களின் மனங்களில் கொட்டிக்கிடப்பதென்ன வக்கிரமா ? மன வியாதியா ? மனப்பிறழ்வா ? என்பதில் எனக்கு இன்னும் தெளிவில்லை. ஒருவரை காட்டமாக விமர்சிக்கும் போது அதில் நியாயத்தன்மை பேணப்படல் வேண்டும். நண்பர்களாக இருந்து விட்டு போகட்டுமே. அதனால் என்ன குறைந்துவிடப்போகின்றது.
ஓவ்வொருவருக்கும் தனித்தன்மை குணாதிசயங்கள் என்பதில் மாறுபட்ட சிந்தனைகள் இருப்பது மறுதலிக்க முடியாது.
இன்று ஐக்கியப்பட்டுள்ளவர்கள் நாளை கருத்து வேற்றுமையால் பிரிந்து செல்வதற்கும், பிரிந்து நிற்பவர்கள் சேர்ந்து பழகுவதற்கும் நிறைய சந்தர்ப்பங்கள் உருவாகும் கட்டமைப்பில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்ந இடைவெளியில் அவசரமாக விமர்சனங்களை அள்ளி வீசுவதும்,இடைவெளிகளில் மலத்தினை தெளித்து குரூரமாக அழகுபார்ப்பதும் ஜீரணிக்கமுடியாத விடயங்கள்.
நீண்ட நாள் நட்பின் பிரதிபலனை  இவ்வாறான வக்கிரமான சிந்தனைகள் சின்னாபின்னமாக்கி சீரழித்து விடுகின்றது.
கருத்துப்பரிமாற்றத்தில் நாகரீகமான வார்த்தைகளை கையாளத்தெரியாதவர்களின் அந்தரங்கள் அசிங்கங்களின் மொத்த வடிவமாக இருப்பது அவர்களுக்கே தெரிவதில்லை. பூனை கண்மூடிக்கொண்டு பாலை அருந்துகையில் உலகுக்கே தெரியாமல்தான் நான் அருந்துகின்றேன்.என்று நினைப்பதுண்டு அவ்வாறுதான் எனது நண்பர்களும் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிந்து பார்த்து மூக்குடையப்போவதை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு விடயத்தை விமர்சிப்பதற்கும் கருத்து சொல்வதற்கும் எல்லோருக்கும் உரிமையுள்ளதைப்போல் அதனை மறுதலித்து மாற்றுக்கருத்துக்களை சொல்வதற்கும் மற்றவர்களுக்கு உரிமை உண்டு.சொல்லப்படும் மொழிதான் இங்கு முக்கியம்.சொல்பவர்கள் யாராகவும் இருந்து விட்டு போகட்டும்.ஒரு முஸ்லிமின் பண்பின் சிகரமே இந்த இதமான  வார்த்தைகள்தான்.

மடியில் கணமில்லாதவனுக்கு வழியில் பயமில்லை என்பதற்கொப்ப  நமது வாழ்க்கை  ஓரளவு மற்றவர்களுக்கு பொல்லாப்பு இல்லாமலும் பொல்லாங்கு இல்லாமலும் ஓடிக்கொண்டிருக்கின்றது.அப்படி வாழத்தெரியாமல் சாக்கடையில் இருப்பவர்கள் மற்றவர்களின் விடயத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்காமல் தன் பிழைகளை திருத்தி வாழப்பழகிக்கொள்ள வேண்டும்.

எனக்கு மனிதர்களின் அந்தரங்களை தோண்டி எடுத்து வைத்துக்கொண்டு விமர்ச்சிக்கும் ஆற்றலில்லை.அவ்வாறான பண்பாட்டிலும் வளர்ந்தவனல்ல.நல்லதை தடடிக்கொடுத்து தீயதை நாகரீகமாக சுட்டிக்காட்டிக்கொண்டு என் பயணம் தொடர்கின்றது.

பிரபாகரன் வெற்றியின் உச்சத்திலிருந்த 95 காலப்பகுதியிலும் பத்திரிகைகளில் அவருக்கு பகிரங்க கடிதங்களை எழுதியவன்.என் எழுத்துக்களுக்காக பல கொலை மிரட்டல்களை சந்தித்தவன்.இடுப்பில் முதுகெலும்பில்லாதவர்கள் செய்வது போல் முகம் மூடிக்கொண்டு அடையாளங்களை மறைத்துக்கொண்டு எதனையும் செய்து பழக்கமில்லை.நிறைய நண்பர்கள் எனக்கு சம்பந்தமில்லாவற்றை என்னுடன் பொருந்திப்பார்த்து பொருமிக்கொண்டிருக்கின்றார்கள்.அது அவர்களின் அறியாமை.
ஒருவர் நல்லது செய்கின்றார் என்பதற்காக அவரை தலையில் வைத்துக்கொண்டு ஆடி மகிழவும்,பின்னர் பிடிக்கவில்லை என்பதற்காக திரைமறைவில் நின்று கொண்டு அவருக்கு கல்லெறிவதையும் குலத்தொழிலாக கொண்டு ஆற்றுபவர்களைப்போல் நம்மால் வாழமுடியாது. உண்மையான நட்பு என்பது குற்றம் செய்யும் போது தவறிழைக்கும் போது கூடவே இருந்து திருத்துவது. இன்று திருத்துவதற்கு பதில் ஆஹா போட்டு கூஜா தூக்கும் நக்குப்பிழைப்புத்தான் மலிந்துள்ளது.

இந்த செஞ்சோற்றுக்கடன்தான் நமது கண்களை குருடாக்கி மற்றவர்களின் மானத்தையும் கடைவிரித்து கூவி விற்கும் அளவிற்கு மாறிவிட்டது.
இத்தகைய செயல்கள் நட்புடன் பழகுவதற்கு உகந்தது அல்ல என்பதை அறிந்துதான் ஒழுக்கமற்றவர்களை என் நண்பர்களாக ஏற்றுக்nhள்வதில் தயக்கம் காட்டுவதுடன்,அவர்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஆற்றுப்படுத்தவும் முயற்சிக்கின்றேன்.

நடுக்கடலில் விட்டாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்  என்றால்  நாமென்ன செய்வது ?

நாற்றமடிக்கும் வலைப்பூக்கள்

     ண்மைக்காலமாக முக நூலில் படித்தவர்களின் பண்பாடுகள் பொது வெளியில் வயிற்றைக் குமட்டுவதை அவதானிக்க முடிகின்றது.
உயர் பதவியில் இருப்போர்,படித்தவர்கள் என மக்களால் நம்பப்படும் நபர்கள் போலி முகநூல் பக்கங்களில் வந்து நாற்றம் வீசும் சொற்களை விதைப்பது நல்ல பண்பாட்டின் குணாதிசயமாக தெரியவில்லை.இஸ்லாத்தின் நிழலில் வளர்ந்த இத்தகையவர்கள் எழுதுவதற்கு முன் தன் எழுத்துக்களை பொது வெளியில் எல்லோரும் படிக்க நேர்கின்றது என்பதை வசதியாக மறந்து விடுகின்றார்கள்.
புடிப்பதற்கு அருவருத்தக்க விடயங்களையும் ,புகைப்படங்களையும் இடுவதன் மூலம் எதனை சாதிக்கலாம் என அவர்கள் நினைக்கின்றார்கள் என தெரியவில்லை. தனி மனிதனின் மானம் கௌரவம் பாதுகாக்கப்படல் வேண்டும் என்று நபிகளார் தனது இறுதி ஹஜ்ஜின் அறபாப்பெருவெளியில் பிரகடனம் செய்ததை சற்று நினைவில் கொண்டால் எழுதுவதற்கு முன் அல்லாஹ்வைப்பயந்து கொள்வார்கள்.

‘நீங்கள் நன்மையின்பாலும் இறையச்சத்தின்பாலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து கொள்ளுங்கள்.தீமைக்கும் பகைமை பாராட்டுவதிலும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்க வேண்டாம்’ என அல்குர்ஆன் போதிக்கின்றது.
நமது கிராமத்திற்கு ஒரு நல்ல திட்டம் வரும் போது அதனை யார் செய்தால் என்ன  ஆதரித்து , கொண்டு வந்து சேர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர , அதனுடன் சம்பந்தப்பட்டவர்களின் அந்தரங்களை தோண்டி முக நூலில் வீசுவதென்பது நபிகளார் காட்டித்தராத பண்பாடாகும்.

எல்லாத்திட்டங்கிளலும் குறைகள் இருக்கத்தான் செய்யும்.குறைகளை நாகரீகமாக சுட்டிக்காட்டி சீர் செய்ய பங்களிப்பு செய்வதனை விடுத்து திட்டங்களை முன் மொழிந்து நடைமுறைப்படுத்தும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் அவர்களின் படுக்கறையறைக்குள் புகுந்து நிர்வாணப்படுத்தி அழகுப்பார்ப்பது நமது வக்கிர மனத்தின் உச்ச கிறுக்குத்தனத்தை காட்டும் கோழைத்தனமான செயல்.

அல்லாஹ்வால் அறிமுகுப்படுத்தப்படாத நபிகளாரால் அமுல்படுத்தப்படாத எந்த திட்டத்திலும் மனிதர்கள் என்ற வகையில் குறைகள் இருக்கத்தான் செய்யும்.அதனை சுட்டிக்காட்டி திருத்தும் நடைமுறையில் அநாகரீகம் பேணப்படுகின்றது என்பதே நமது வருத்தமாகும்.
ஈஸ்ட்மிரர் ,கல்குடா ஜேர்னல் உள்ளிட்ட அநாமேதைய வலைப்பூக்களை நடாத்துபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.அநியாயம்,ஊழல், இவற்றிக்கெதிராக குரல் கொடுக்கின்ற போது தனிமனிதர்களின் அந்தரங்களை கிளறி அதனுள் குளிர்காய்வதை விடுத்து ஆக்கபூர்வமான காத்திரமாக கருத்துக்களை முன் மொழிந்து சமூக மாற்றத்திற்கு உங்களின் பங்களிப்பை வழங்குங்கள்.

இன்று சக மனிதனின் மானத்தினை கப்பலேற்றும் உங்களுக்கு நாளை ஒருவன் உங்களின்  அந்தரங்களை அரங்கேற்ற  ஒரு சந்தர்ப்பத்தினை வழங்க நீங்களே வழியமைத்துக்கொடுத்து விடாதீர்கள். 
தவிர ஒரு முஸ்லிமின் குறைகளை இம்மையில் மறைத்தால் மறுமையில் அல்லாஹ் உங்களின்குறைகளை மறைத்து விடுவான்.என்ற நபிகளாரின் பொன் மொழியை நினைத்துப்பாருங்கள். நமது பொது வாழ்வில் பல்லாயிரம் குறைகளுடன் நாற்றத்துடன் வாழ்ந்து கொண்டு ‘இறாலை’ப்போல்  மற்றவர்களை நோக்கி மூக்கைப்பொத்திக்கொண்டு உன்னிடம் துர்நாற்றம் வீசுகின்றது என சொல்லும் போது நமது மனசாட்சியை எங்கே அடகு வைத்து விட்டு சொல்கின்றோம்.
பாதிக்கப்பட்டவர்களின் மனம் நொந்த துஆக்கள்  உங்கள் பிள்ளைகளை மனைவியை எச்சந்தர்ப்பத்திலேனும் தாக்கம் செலுத்தாது என்பதற்கு எந்ந உத்திரவாதமும் இல்லை.ஏனெனில் அது யாராக இருந்தாலும் திரையின்றி அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படும்.

பொது வெயில் எழுத்துக்களை பதியும் போது அதனை எல்லோரும் விரும்பிப்படிப்பதற்கும் அதிலுள்ள உண்மைத்தன்மையை  பிரஸ்தாபிப்பதற்கும் விவாதிப்பதற்குமான நாகரீகம் கற்றவர்களிடம் இருக்க வேண்டும் 

சமூக சீர்திருத்தம் பற்றி எழுதுவதற்கும் சிந்திப்பதற்கும் எவ்வளவோ விடயங்கள் உள்ள இத்தருணத்தில் முட்டையில் மயிர் பிடுங்கும் இழிச்செயல்கள் தேவைதானா?  என்பதை போலி முகவரியில் போலி பெயர்களில் இயங்கும் அனைத்து வலைப்பூ மற்றும் முகநூல் சகோதரர்களையும் சிந்திக்குமாறு தயவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
ஆன்மீக வறுமை,கலாச்சார சீரழிவு வழிகெட்ட சீஆசிந்தனை என  இந்தக்கிராமத்தின் தலைவிதியை மாற்றிக்கொண்டு வரும் கொடிய நோய்களை இனங்கண்டு அவற்றிக்கெதிராக உங்கள் எழுத்துக்களைப் பயன்படுத்துங்கள். ஆரோக்கியமாக அரசியல் தலைமைத்துவங்களை கட்டியெழுப்பவும் அதனை ஸ்திரப்படுத்தவுமான நியாயமான காரணங்களை மக்களுக்கு நடுநிலையாக முன் வையுங்கள். கடந்த காலங்களில் அரசியல் அநாதைகளாக இருந்த போது நிகழ்ந்த அசம்பாவிதங்களை மக்கள் முன் தெளிவு படுத்துங்கள்.இருக்கின்ற தலைமைகள் விடுகின்ற தவறுகளையும் செய்ய வேண்டிய பணிகளையும் இடித்துரையுங்கள்.

இதனை விடுத்து மற்றவர்களின் மனைவியை சகோதரியை நீங்கள் இழுத்து வைக்க அவர்களோ  உங்களின் மனைவியை இழுத்து வைத்து துகிலுரிக்க …….. 
இதுவா இன்றைய தேவை

தயவு செய்து இணையத்தளங்களில் இத்தகைய இழிவான வார்த்தைகளை நீக்கிவிடுங்கள். எழுதுவதற்கும் பேசுவதற்கும் இஸ்லாம் நாகரீகமான வார்த்தைகளை சொற்களை கற்றுத்தந்துள்ளது.அதனை தத்தெடுத்து எழுதிப்பாருங்கள் உங்கள் எழுத்தில் சத்தியத்தின் ஜீவ ஒளி வீசத்தொடங்கும்.

   

Wednesday 20 May 2015

வட்டியின் அதிகாரம்.

வட்டிக்கு  வம்பிழுக்கும் கூட்டம்

வட்டியின் கொடிய கரங்கள்  அனைவரினதும் வீட்டின் கதவுகளையும் வேகமாக தட்டிக்கொண்டிருக்கின்றது.சமூர்த்தி என்ற பெயரில் வீட்டுக்கடன் என்ற பெயரில் மானியம் என்ற பெயரில் போர்வைகளை மாற்றிக்கொண்டு வட்டியின் நிழல் பின் தொடர நாம் அதன் குளிர்ச்சியில் சுகம் காணத்தொடங்கிவிட்டோம்.
வட்டிக்கு விண்ணப்பித்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளதாதவர்கள் அதிகாரிகளிடம் வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கு நின்று வம்புக்கிழுத்து சமர் செய்யத்துணிந்து விட்டனர்.
வட்டி நம் சமூகத்தின் கண்களை குருடாக்கியது போல் வேறொன்றும் குருடாக்கவில்லை.
குளிர்சாதனபெட்டி,எல்சி. டிவி.கையடக்க தொலைபேசி,சோபா செட் அலுமாரி,மின்சார உபகரணங்கள் என அனைத்திற்கும் வட்டியின் பெயரால் கடன் வழங்கப்படுகின்றது.
பழைய வாகனங்களை  விற்றுத்தொலைத்து விட்டு புதிதாக வாங்கிப்பயணம் செய்ய கம்பனிகள் தயாரா ஆள்பிடிக்க காத்திருந்து கவ்விக்கொண்டு ஓடுகின்றன.
வட்டியில்லாமல் மூச்சுவிடமுடியாத அளவிற்கு வட்டி நம்மை நரகத்தின் குகைக்குள் தள்ளிவிட்டு தீ மூட்டியுள்ளதை அறிந்தும் விழுந்து எரிவதற்கு நாம் தயாராகியுள்ளதை விதி என்பதா அல்லது சதி என்பதா ?

Monday 19 January 2015

சிறுகதை

முற்றுகை


கந்தளாயில் கால்  புதைத்தபோது இலேசான பனி மூட்டம் ஊரை மூடிக்கிடந்தது.நள்ளிரவின் மவுனத்தை உசுப்பியபடி மனிதக்குரல்களின் அவலமே மிகைத்து நி;ன்றது.வீதியின் இரு மருங்கிலும் வெட்டிச்சாய்க்கப்பட்ட வாழைகளாய் மூதூர்,தோப்பூர் கிராமங்கள் சரிந்து கிடந்தன.பாடசாலை பள்ளி முற்றம்,கடைத்தெருவென ஹோவென்ற இரைச்சலுடன் மனிதக்கடல் அலையலையாய் தகித்துக்கொண்டிருந்தது.

மைதானத்தின் பற்றைகளுக்குள்ளிலிருந்து மழலைகளின் அழுகுரல்கள் உயரப்பறந்து காற்றிலாடின. சீதளக்காற்றின் ஊசிக்கரங்கள் பிஞ்சுகளை சீண்டவிடாமல் மார்புடன் அணைத்துக்கொண்ட அன்னையரின் பிரலாபம் மனங்களை கரைத்தது.

போரின் பெயரால் துரத்தியடிக்கப்பட்ட கிராமங்கள் கால் பதியும் தெருவெல்லாம் சிதறிக்கிடந்தன.மதகுடைத்த வெள்ளம் போல் தன் சொந்தங்களை தேடியலையும் மனிதர்களின் பதற்றமும் பரிதவிப்பும் ராக்குருவிபோல் அலைந்து திரிந்தது.

ராகிலா தன்  எட்டு மாதக்குழந்தையையும், கணவனையும் தேடி அலையும் பிச்சி. 69 இடைத்தங்கள் முகாம்களில் அவள் ஏறி இறங்கி ஒரு தபசி போல் அலைந்து திரிந்தாள். வாரிவிடப்படாத புழுதி அடர்ந்த பரட்டைத்தலையும்,அழுக்கடைந்த தேகமும், உருக்குலைந்த அவள் தோற்றமும் அழகியான அவளை ஒரு பைத்தியம் போலாக்கியிருந்தது.

அத்தாரிக்  முகாம் டீ பிரிவின் தூணுக்கு தன்முதுகை முட்டுக்கொடுத்தபடி ராகிலா உட்காந்திருக்கின்றாள். புதிய ஆடைகள், மருத்துவ சேவைகள், சமைத்த உணவு, உளவள ஆலோசனை எதுவும் அவள் இருப்பை தகர்த்துவிடவில்லை.அர்ஷை ஊடுருவிச் செல்லுமோ என மனங்கொள்ளுமளவிற்கு அவள் விழிகள் ஆகாயத்தில் குத்திட்டு நின்றன.

பால் முட்டிய இளமார்புகளில் வலி எடுத்தது.உஹது மலைபோல் தன் நெஞ்சில் கணக்கும் முலைகளின் ரணம் தினம் அடர்ந்து கொண்டிருந்தது.

“ பால பீச்சி வெளியால உடு புள்ள, மார்புல நோவு குறயும்” ஒரு அனுபவக்காரியின் நச்சரிப்பில் தன் மகள் குடித்துப்பெருக்கும் பால், அகதிகள் தரித்த மண்ணில் விழுந்து ஊறியது.

“ஓ..என் மகள் “ நினைக்க நினைக்க அவள் நெஞ்சு கேவியது.

ராகிலா தன் நினைவின் நுனியில்  அந்த துயர நாளை இழுத்து வந்து பார்;த்தாள்.

“முஸ்லிம் ஆக்கள் எல்லாம் ஒரு மணி நேரத்துள்ள ஊர விட்டு வெளியேறவும். நாங்க ஆமியோட சண்ட புடிக்கப்போறம்,”

  அறிவித்தல் தெருவெங்கும் இடி முழக்கமாய் விழுந்து செவிகளில் தீப்பிழம்பாய் உருகியது.பூர்வீக மண்னை, வியர்வை சிந்தி உழைத்த சொத்துக்களை, சிறுகச்சிறுக கட்டிய வீடுகளை,தன்மானத்தை பிறந்து தவழ்ந்து மூச்சுடன் கலந்திருக்கும் இந்தக்கிராமத்து மரங்களில் வாசம் செய்யும் காற்றை, ஒரே மணி நேரத்தில் கழற்றி விட்டு செல்ல வேண்டும். காலில் பட்ட தூசியை துடைத்தபடி வீட்டுக்குள் நுழைவது போல் இத்துனை ஆணி வேர்களையும் பிடுங்கி எறிந்து விட்டு இலகுவில் எப்படி செல்வது?

 திசையறியா இலக்குகளை நோக்கி விழும் ஷெல்கள்; கிராமத்திற்குள் விழுந்து வெடித்தன. வீடுகளை அது சல்லடை போட்டது. மக்கள் பள்ளிவாயல் மதரசாக்களில் உயிரை பாதுகாக்க அடைக்கலம் தேடினர்.

பல ஜனாஸாக்கள் அடக்கம்செய்யப்படாமல்  உப்பிப்பெருத்து அழுகிக்கிடந்தன.காகங்கள் வட்டமிடும் திக்கில் ஜனாஸாக்கள் கிடப்பதாக பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். ஒரு பானைக்கஞ்சி குழந்தைகள் மட்டும் உள்ளங்கைளில் நக்கிக்கொள்ளும் படி இருந்தது. கடைகளை திறந்து உணவு எடுக்க முடியாத முற்றுகைக்குள் ஊர் மூச்சுத்திணறியது.

தொழிலுக்குச்சென்றவர்கள்,அக்கரை சென்றவர்கள், ஆடுமாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றவர்கள் ,வண்டில் மாட்டுடன் வனத்திற்குச்சென்றவர்கள் இந்த அறிவித்தலால் ஊருக்குள் திரும்ப முடியாத பரிதாபத்திற்குள் கிராமம் தகித்துக்கொண்டிருந்தது.

ஊரின் மானம் காத்த திணவெடுத்த இளைஞர்கள் இனங்கானப்பட்டு அவர்கள் முழங்காலில் நிற்க வைத்து சுடப்பட்டார்கள். பெற்றவரின் முன்னிலையில் தவமிருந்து பெற்ற குருத்துக்கள் கருக, சிலர் நெஞ்சு வெடித்து சாய்ந்தார்கள். உம்மாவினதும்,, பி;ள்ளையினதும் ஜனாஸாக்கள் அருகருகே அமைதிகொண்டன.

ஒரு வீட்டுப்பி;ள்ளைகளாய் உறவு கொண்டு, ஒரேபாயில் படுத்துறங்கி, ஒரே தட்டில் சோறுண்ட தோழர்கள், தனது கரங்களில் துப்பாக்கிகளுடன் வந்தனர். அவர்களின் புன்னகை பூத்த முகங்களில் மரண வெறி இருந்தது. வன்மம் படர்ந்த விழிகள் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன.

சேர்ந்து விளையாடிய நண்பர்களை அவர்கள்தான் காட்டிக்கொடுத்தார்கள். இறுகப்பற்றிய கரங்களுடன் உலா வந்தவர்கள், பின் புறத்தே சேர்த்து வைத்து இறுகக்கட்டிய கரங்களுடன் எங்கள் இளவல்களை பலி பீடத்திற்கு சாய்த்துக்கொண்டு போனார்கள். நடக்க மறுத்தவர்களை “நடடா சோனி” என தூசித்தபடி இழுத்துக்கொண்டு போனார்கள்

புல் வெளியை நோக்கி விரட்டப்படும் ஆட்டு மந்தைகளைப்போல் அப்பாவி சனங்களையும் விரட்டினார்கள். சரளைக்கற்கள் விரவிக்கிடக்கும் காட்டுப்பாதை,முற்கள் கீறிக்கிழித்த பாதங்களிலிருந்து இரத்தம் சொட்டச்சொட்ட நடந்தது ஊர். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு மலை இடுக்கில் உருகி ஒடும் அக்கினி நதியென மனித வெள்ளம் பிரவகித்தது. கபட நாடக அரங்கில் பலியிடப்போவதை அறியா மந்தைகளாய் அவர்கள் களைத்து விழுந்து தவழ்ந்து விடாகித்த நாவுக்கு  ஒரு சொட்டு நீரின்றி நடந்தனர்.

தன் சிசுவை சுமந்திருக்கும் மனைவியை தோளில் காவியபடி செல்லும் கணவர்கள்,வயதான தாயையும் பிள்ளைகளையும்  தூக்கியும் நடாத்தியும் நகர்த்திச்செல்லும் பெரியவர்கள், நோயாளிகளை இருவர் சுமந்து செல்ல கிராந்தி மலை நடுக்கமுற்றது.
தண்ணீர் கேட்டழுத குழந்தைகளின் அழுகுரல் வனாந்திரத்தை உறையச்செய்தது.

“உம்மா தன்னி,” 
குரல்கள் வறண்டு நீருக்கு ஏங்கின.

“தம்பிமார எங்கட புள்ளயளுக்கு ஒழுப்பம் தண்ணி குடுங்க சீதேவியாள். வெயில் தாங்க முடியாம கத்துதுகள்.”

 உலர்ந்த உதடுகள் யாசகம் கேட்டன.

 “டேய் வாய மூடுங்கடா “ பதிலுக்கு அவர்கள் கத்தினர்.

ராகிலா கால் துவண்டு சரிய ஓடினாள். அறிவித்தல் விடுத்து ஒரு மணி நேரம் முடிந்து விட்டது. வயலுக்கு சென்ற கணவன் வீடேகவில்லை.அவள் மனப்பறவை நடுக்கமுற்றது. 
இந்தப்பிரளயத்தில் ஒரு சருகாகவேனும் அவன் அடித்து வரப்படாதா ?. அவள் கால் விரல் நுணியில் நின்று எம்பி எம்பி பார்த்தாள்.அவள் விழிகளுள் சுமைகள் ஏறிய தோள்களே தெரிந்தன.

 ராகிலா அறிவித்தலை தொடர்ந்து வீதிக்கு வந்தாள். வீட்டில் உம்மாவும் வாப்பாவும் மகளும். கணவன் குறித்து அறிவதற்காக வந்தவள், பக்கத்தில் விழுந்து வெடித்த ஷெல்லில் அதிர்ந்து அரபுக்கல்லூரிக்கு ஓடினாள். அங்கிருந்துதான் அவர்களை துப்பாக்கி மனிதர்கள் சாய்த்துக்கொண்டு போனார்கள். தொட்டிலில் உறங்கிய மகளை வாப்பாவும் உம்மாவும் தூக்கிக்கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை அவள் மனத்தில் உறைந்திருந்தது.

 அந்திம நேரத்தில்  அவர்களிடம் மன்றாடி தோற்றுப்போனாள்.

“தம்பிமாரே என்ர பச்ச மண் தொட்டிலில, எடுத்து வாரன் வுடுங்க ராசா “காலில் விழாக்குறையாக அழுது மன்றாடிப்பார்த்தாள். கரையவில்லை.

அவள் சிறு வயதில் தோழியருடன் விறகு பொறுக்கி விளையாடிய காடு, நாவற்பழமும், இலந்தையும் இலுப்பைப்பூவும் தந்து அவளை கிளர்ச்சியூட்டிய காடு. மருங்கப்பழம் உசுப்பிய மரக்கந்துகள் அவளை வாஞ்சையுடன் பார்த்தபடி சும்மா நின்றன. துப்பாக்கிகள் முன் அவைகளால் என்னதான் செய்ய முடியும்.?

ராகிலா மரணத்தை போர்த்திக்கொண்டு கடும் வனத்தை தாண்டினாள். நீருக்கு அழுது களைத்த குழந்தைகள் தாய்மாரின் தோளில் சரிந்து கிடந்தனர்.பரிதாபத்தில் நீர் புகட்டியவர்கள்,  துப்பாக்கியால் அடித்து தூசித்;து விரட்டப்பட்டனர். மேய்ச்சல் தரையில் நின்ற மாடுகள் தலை நிமிர்த்தி பார்த்து விட்டு மவுனமாக அசைபோட்டன. 

யார் வீட்டு நாயோ தன் எஜமானைத்தேடி கூட்டத்தில்  அலைந்து சென்றது.சரிந்து விழுந்த அதன் நாவு வறட்சியில் உலர்ந்திருந்தது. தனது மோப்ப சக்தி தோற்று விட்ட வெட்க உணர்வில் அது ஒரிடம் நில்லாமல் சகட்டு மேனிக்கு ஓடித்திரிந்தது. 

2

ராகிலா தன் தாயை கண்டு பிடித்து விட்டாள்.அகதி முகாமிற்கு வந்து ஒரு வாரத்திற்குப்பின் முள்ளிப்பொத்தானை முகாம் ஒன்றில் உணர்வற்றுக்கிடந்த தாயை அவள் கட்டிக்கொண்டு கதறியபோது தமிழீழக்கனவுகள் தீப்பிடித்து எரிந்தன.

தனது தோழி ஒருத்தி முகாமிற்குள் உடை மாற்ற எத்தனிக்கும் அவஸ்தையை கவனித்தபடி வெறித்திருக்கின்றாள். ஒரு கூடாரத்திற்குள் மூன்று குடும்பங்கள். வயது வந்த  குமரிகள்,இளைஞர்கள்,வாப்பா,உம்மா அவளை வெட்கம் பிடுங்கித்தின்றது.

இரவில் ஆண்கள் பள்ளிவாயல், கடை முற்றம் என தன் படுக்கையை பகிர்ந்து கொள்ள பெண்களோவெனில்  நேர் வரிசையாக முகாமிற்குள் தூங்கியும் விழித்தும் இரவுகளை கடத்தினர்.

ராகிலாவுக்கு பொறுக்க முடியவில்லை. கால் வீசி நடக்கும் உள்வீடு, துள்ளிக்குதித்தாட விசாலித்த  முற்றம் காற்றை வடிகட்டி அனுப்பும் சுகந்தரும் மரங்கள், ஊரில்  ஆன்மீகத்தை அள்ளி வீசும் மினாராக்கள், மடியில் தவழும் குழந்தை, வெற்றிலை சொதப்பிய வாயுடன் அருகில் உரசியபடி  ; குறும்பு வெய்யும் கணவன், நிலாப்பொழியும் இரவுகளில் அவள் ரசித்துப்பார்த்த வானம் எல்லாமே இந்த இருண்ட கூடாரத்திற்குள்  கரும்புள்ளிகளாக ஓடிக்கொண்டிருந்தன.

என்.ஜீ.ஓக்கள் ஓடி ஓடி செய்தன. முழு சமூகமும் காலடியில் வந்து சேவகம் செய்தது. ராகிலாவின் வாப்பாவையும் குழந்தையையும் யாருமே அவளுக்கு தேடித்தரவில்லை.அவர்கள் ஒரு முகாமிலுமில்லை. பொல்ஹகவெல, வாழைச்சேனை,நீர் கொழும்பு, பெரியமுள்ள, பஸ்யால என எல்லா மினி முகாம்களையும் விசாரித்தாகி விட்டது. முலை அழுத்தும் பாலை பீச்சி விட்டபடி ராகிலா தினம் தெருவை வெறித்திருக்கின்றாள்.

என்.ஜீ.ஓக்களின் வாகனம் முகாமிற்கு வரும்போதெல்லாம் அவள் மண்ணில் கால்பாவாது அவ்விடம் விரைவாள். 
“சேர் என்ட புள்ளட தகவல் தெரியுமா, வாப்பா எங்க விசாரிச்சிங்களா?

 அவர்களால் என்ன செய்யமுடியும். கனிவு ததும்ப ஆறுதல் சொல்வார்கள் “இன்னும் விசாரிச்சிக்கிட்டுதான் இருக்கம் சிஸ்டர்.’

 “சில ஆட்கள் இன்னும் மூதூருக்க அகப்பட்டிருக்கினம்.  இப்ப அங்க போக அனுமதியில்ல. சந்தர்ப்பம் கிடச்சா உங்கட வாப்பாவ அங்க தேடிப்பாக்கலாம். “

குறிப்பு புத்தகத்தில் வாப்பாவின் பெயர் பி;ள்ளையின் பெயர், வீட்டு விலாசம் எல்லாவற்றையும் குறித்துக்கொள்வார்கள்.

“ஊருல வாப்பா இருப்பாக, அவக எத்துண காண்டம் தப்பி புழச்சவங்க,அவனுகள் கடத்திப்போன ஒரு தரம் காலால உதச்சிப்போட்டு இரால்குளி சேத்துக்குள்ள விடிய விடிய கிடந்து வந்த வீரன், மூதூர் கடலுக்குள்ள படகு கவிழ்ந்தபோது நீச்சலடிச்சு கர சேர்ந்த அவங்க,  அவகட பேத்திய சும்மாவா வுடுவாங்க” அவள் மனம் கூவியது. மனத்தின்  உள்ளறையில் எறும்பூறும் குறுகுறுப்பு.

மூன்று வாரத்தில் அவள் காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது. “மூதூருக்கு பஸ் போட்டிருக்கி போர ஆக்கள் காலயில வாங்க” அறிவித்தல் கேட்டவுடன்  இன்றைய இரவை சபித்தபடி விழித்துக்கழித்தாள். இரவு நகர மறுத்து தன்னை சீண்டிப்பார்ப்பதாக நினைத்து ஆத்திரமுற்றாள்.நிலவும், வெண் உடுக்களும் சிதறிக்கிடக்கும் வானம் அவள் நெஞ்சில் தீ மூட்டியது. சுருக்கா விடியனும்.


3

அவள் ஊருக்குள் கால் வைத்த போது தலைகீழாக புரட்டப்பட்ட லூத் நபியின் வரலாற்றுக்கிராமமாய் கோரமாய் தெரிந்தது ஊர். சாம்பூரை இரானுவம் கைப்பற்றியபின் சூறையாடப்பட்ட மூதூர் ஒரு மூளி போல கிடந்தது. உடைக்கப்பட்ட கடைகள் வாய் பிழந்து கிடந்தன.குறிப்பிட்ட கடைகள் மட்டுமே இலக்கு வைத்து தகர்க்கப்பட்டிருந்தன. இலக்ரோனிக்கடைகள், புடவைக்கடைகள், நகைக்கடைகள், சைக்கிள் கடைகள்.

 விடுமுறையில் திரும்பும் வீரர்களின் கரங்களை  புதிய வாட்ச்,கைச்செயின் அலங்கரிக்க அவர்களின் கழுத்துகளிலோ தங்க மாலைகள் மின்னின. 

வெறி பிடித்த குரங்குகள் தூக்கனாங் குருவிக் கூட்டை பிய்த்தெறிந்ததைப் போல்  அவள் அழகிய கிராமம் சிதறிக்கிடந்தது. 

ஷெல் குத்திய வீடுகளும், கடைகளும் சிதிலமாகிக்கிடந்தன.மின்சாரமற்ற தெரு மரணத்தை போர்த்தியபடி பயமுறுத்தியது. வீடுகளில் மனிதர்கள் இல்லை.  ஊரை துர் நாற்றம் ஆக்கிரமித்திருந்தது.  அடக்கம் செய்ய இயலுமான உப்பிப்பெருத்த ஜனாஸாக்களை ஊரார் தேடித்தேடி அடக்கம் செய்தனர். மழை விட்டும் தூவானம் ஓயவில்லை என்பது போல் இடை வெளி விட்டு தூரத்தே ஷெல்கள் விழுந்து குமுறிக்கொண்டிருந்தன.

அவளுக்கு வயிற்றை குமட்டிக்கொண்டு வந்தது. அறபுக்கல்லூரிக்கு ஓடினாள். அங்கு வாப்பா இல்லை. ஏவி விட்ட வேட்டை நாயைப்போல் எல்லாத்தெருக்களிலும் பள்ளிவாயல் பாடசாலைகள் என குறிவைத்து ஓடினாள். 

அவள் வீட்டு முற்றத்தை காணும் வரை ஓடினாள்;. இளமையும்,இனிய கனவும் சௌந்தர்யங்களுடன் மிகைத்த தாம்பத்தயமும்  மலர்ந்து சுகந்தம் தந்த வீடு. ஒரு பக்கம் கருகிக்கிடந்தது. ஷெல் உரசிய தென்னையும், மாவும் கரிபிடித்து வாடி நின்றன. இனி பிழைக்கும் முகாந்திரமில்லை. 

அவள் பிரியமாக நிரூற்றி பசளையிட்டு வளர்த்த மாமரம், மூன்று மாதம் மசக்கையாக வாழ்ந்த காலத்தில் மாம்பிஞ்சுகளை தந்து பூளியூட்டிய மாமரம் இளமையை இழந்து கருக்கிடக்கிறது. ஓட்டுத்துண்டுகள், செங்கற்கள், மரத்துண்டுகள், உடைந்த கண்ணாடிச்சில்லுகள், முற்றம் முழுக்க சிதறிக்கிடந்தன.

மாலை மங்கிய ஊர் இருளை இழுத்து போர்த்திக்கொண்டது. ஒரோயொரு பள்ளியிலிருந்து மெலிதான பாங்கொலி காற்றில் மிதந்து அவளைக்கடந்து சென்றது. காடேகும் பறவைகள் கீச்சிட்டபடி  பறந்து கொண்டிருந்தன . அவள் வீட்டுக்கோழி ஒன்று செக்களுக்கு பழக்கப்பட்டு கருகிய மாமரத்தின் அடியில் வந்து ஒண்டிக்கிடந்தது.


கிணற்று நீர் தூசடைந்து கிடந்தது. பூமிக்குள் புதைந்து கிடக்கும் மகளின் பொம்மையின் கால் வெளியே துருத்திக்கொண்டு கிடந்தது.பாய்ந்து சென்று அதை உருவி எடுத்தாள். வீட்டுக்குள் செல்ல மனம் தகித்தது. ஆவல் உந்த எட்டிப்பார்த்தாள். மண்;டபத்தின் நடுவே கட்டப்பட்ட தொட்டிலின் கயிறு படிக்கட்டில் தெறித்துக்கிடந்தது.

இடிபாடுகளிடை வாப்பாவின் சாரம் மக்கித்தெரிந்தது.புழுக்கள் நெளியும் சுவரோரம் துர்நாற்றம் கசிந்து வந்தது.

ராகிலா ஓங்காரித்தபடி முற்றத்தில் பாய்ந்து விழுந்தாள். வாசற்படியில் மகளின் உடைந்த கொலுசுகள் சிதறிக்கிடந்தன. 

பொம்மையை  மடியிலமர்த்தி கொளுசுகளை மிக கவனமான பொறுக்கத்தொடங்கினாள்.அவள் அரவங்கண்டு வீட்டுக்குள்ளிலிருந்த நாயொன்று கடைவாயை நக்கியபடி மிரட்சியுடன் வெளியே பாய்ந்தது. 


ராகிலா உடைந்த கொலுசுகளை பொம்மையின் மட்கிப்போன கால்களில் வைத்து அழுத்திப்பார்த்தாள். பின் அதை தன் மார்போடு இறுக்கி அணைத்துக்கொண்டு ரவிக்கையின் கொக்கிகளை விடுவித்தாள். 

அவள் விழிகள் பொம்மையில் நிலை குத்தி நின்றன.



ஓட்டமாவடி அறபாத்
26.07.07
பகல் 1.46

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...