Friday 22 May 2015

விசித்திர மனிதர்கள்.


எனக்கு சில வித்தயாசமான நண்பர்கள் வாய்த்திருந்தார்கள்.
அவர்களின் எதிராளிகளுடன் நான் நட்புடன் இருக்கக்கூடாது என்கிற ரகம்.
அவர்களின் நண்பர்களை நான் எதிராளியாக பார்க்க கூடாது என்கிற ரகம்.
யாரையாவது சகட்டு மேனிக்கு விமர்சித்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிற ரகம்.
இந்த விசித்திர மனிதர்களின் மனங்களில் கொட்டிக்கிடப்பதென்ன வக்கிரமா ? மன வியாதியா ? மனப்பிறழ்வா ? என்பதில் எனக்கு இன்னும் தெளிவில்லை. ஒருவரை காட்டமாக விமர்சிக்கும் போது அதில் நியாயத்தன்மை பேணப்படல் வேண்டும். நண்பர்களாக இருந்து விட்டு போகட்டுமே. அதனால் என்ன குறைந்துவிடப்போகின்றது.
ஓவ்வொருவருக்கும் தனித்தன்மை குணாதிசயங்கள் என்பதில் மாறுபட்ட சிந்தனைகள் இருப்பது மறுதலிக்க முடியாது.
இன்று ஐக்கியப்பட்டுள்ளவர்கள் நாளை கருத்து வேற்றுமையால் பிரிந்து செல்வதற்கும், பிரிந்து நிற்பவர்கள் சேர்ந்து பழகுவதற்கும் நிறைய சந்தர்ப்பங்கள் உருவாகும் கட்டமைப்பில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்ந இடைவெளியில் அவசரமாக விமர்சனங்களை அள்ளி வீசுவதும்,இடைவெளிகளில் மலத்தினை தெளித்து குரூரமாக அழகுபார்ப்பதும் ஜீரணிக்கமுடியாத விடயங்கள்.
நீண்ட நாள் நட்பின் பிரதிபலனை  இவ்வாறான வக்கிரமான சிந்தனைகள் சின்னாபின்னமாக்கி சீரழித்து விடுகின்றது.
கருத்துப்பரிமாற்றத்தில் நாகரீகமான வார்த்தைகளை கையாளத்தெரியாதவர்களின் அந்தரங்கள் அசிங்கங்களின் மொத்த வடிவமாக இருப்பது அவர்களுக்கே தெரிவதில்லை. பூனை கண்மூடிக்கொண்டு பாலை அருந்துகையில் உலகுக்கே தெரியாமல்தான் நான் அருந்துகின்றேன்.என்று நினைப்பதுண்டு அவ்வாறுதான் எனது நண்பர்களும் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிந்து பார்த்து மூக்குடையப்போவதை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு விடயத்தை விமர்சிப்பதற்கும் கருத்து சொல்வதற்கும் எல்லோருக்கும் உரிமையுள்ளதைப்போல் அதனை மறுதலித்து மாற்றுக்கருத்துக்களை சொல்வதற்கும் மற்றவர்களுக்கு உரிமை உண்டு.சொல்லப்படும் மொழிதான் இங்கு முக்கியம்.சொல்பவர்கள் யாராகவும் இருந்து விட்டு போகட்டும்.ஒரு முஸ்லிமின் பண்பின் சிகரமே இந்த இதமான  வார்த்தைகள்தான்.

மடியில் கணமில்லாதவனுக்கு வழியில் பயமில்லை என்பதற்கொப்ப  நமது வாழ்க்கை  ஓரளவு மற்றவர்களுக்கு பொல்லாப்பு இல்லாமலும் பொல்லாங்கு இல்லாமலும் ஓடிக்கொண்டிருக்கின்றது.அப்படி வாழத்தெரியாமல் சாக்கடையில் இருப்பவர்கள் மற்றவர்களின் விடயத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்காமல் தன் பிழைகளை திருத்தி வாழப்பழகிக்கொள்ள வேண்டும்.

எனக்கு மனிதர்களின் அந்தரங்களை தோண்டி எடுத்து வைத்துக்கொண்டு விமர்ச்சிக்கும் ஆற்றலில்லை.அவ்வாறான பண்பாட்டிலும் வளர்ந்தவனல்ல.நல்லதை தடடிக்கொடுத்து தீயதை நாகரீகமாக சுட்டிக்காட்டிக்கொண்டு என் பயணம் தொடர்கின்றது.

பிரபாகரன் வெற்றியின் உச்சத்திலிருந்த 95 காலப்பகுதியிலும் பத்திரிகைகளில் அவருக்கு பகிரங்க கடிதங்களை எழுதியவன்.என் எழுத்துக்களுக்காக பல கொலை மிரட்டல்களை சந்தித்தவன்.இடுப்பில் முதுகெலும்பில்லாதவர்கள் செய்வது போல் முகம் மூடிக்கொண்டு அடையாளங்களை மறைத்துக்கொண்டு எதனையும் செய்து பழக்கமில்லை.நிறைய நண்பர்கள் எனக்கு சம்பந்தமில்லாவற்றை என்னுடன் பொருந்திப்பார்த்து பொருமிக்கொண்டிருக்கின்றார்கள்.அது அவர்களின் அறியாமை.
ஒருவர் நல்லது செய்கின்றார் என்பதற்காக அவரை தலையில் வைத்துக்கொண்டு ஆடி மகிழவும்,பின்னர் பிடிக்கவில்லை என்பதற்காக திரைமறைவில் நின்று கொண்டு அவருக்கு கல்லெறிவதையும் குலத்தொழிலாக கொண்டு ஆற்றுபவர்களைப்போல் நம்மால் வாழமுடியாது. உண்மையான நட்பு என்பது குற்றம் செய்யும் போது தவறிழைக்கும் போது கூடவே இருந்து திருத்துவது. இன்று திருத்துவதற்கு பதில் ஆஹா போட்டு கூஜா தூக்கும் நக்குப்பிழைப்புத்தான் மலிந்துள்ளது.

இந்த செஞ்சோற்றுக்கடன்தான் நமது கண்களை குருடாக்கி மற்றவர்களின் மானத்தையும் கடைவிரித்து கூவி விற்கும் அளவிற்கு மாறிவிட்டது.
இத்தகைய செயல்கள் நட்புடன் பழகுவதற்கு உகந்தது அல்ல என்பதை அறிந்துதான் ஒழுக்கமற்றவர்களை என் நண்பர்களாக ஏற்றுக்nhள்வதில் தயக்கம் காட்டுவதுடன்,அவர்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஆற்றுப்படுத்தவும் முயற்சிக்கின்றேன்.

நடுக்கடலில் விட்டாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்  என்றால்  நாமென்ன செய்வது ?

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...