Friday 22 May 2015

நாற்றமடிக்கும் வலைப்பூக்கள்

     ண்மைக்காலமாக முக நூலில் படித்தவர்களின் பண்பாடுகள் பொது வெளியில் வயிற்றைக் குமட்டுவதை அவதானிக்க முடிகின்றது.
உயர் பதவியில் இருப்போர்,படித்தவர்கள் என மக்களால் நம்பப்படும் நபர்கள் போலி முகநூல் பக்கங்களில் வந்து நாற்றம் வீசும் சொற்களை விதைப்பது நல்ல பண்பாட்டின் குணாதிசயமாக தெரியவில்லை.இஸ்லாத்தின் நிழலில் வளர்ந்த இத்தகையவர்கள் எழுதுவதற்கு முன் தன் எழுத்துக்களை பொது வெளியில் எல்லோரும் படிக்க நேர்கின்றது என்பதை வசதியாக மறந்து விடுகின்றார்கள்.
புடிப்பதற்கு அருவருத்தக்க விடயங்களையும் ,புகைப்படங்களையும் இடுவதன் மூலம் எதனை சாதிக்கலாம் என அவர்கள் நினைக்கின்றார்கள் என தெரியவில்லை. தனி மனிதனின் மானம் கௌரவம் பாதுகாக்கப்படல் வேண்டும் என்று நபிகளார் தனது இறுதி ஹஜ்ஜின் அறபாப்பெருவெளியில் பிரகடனம் செய்ததை சற்று நினைவில் கொண்டால் எழுதுவதற்கு முன் அல்லாஹ்வைப்பயந்து கொள்வார்கள்.

‘நீங்கள் நன்மையின்பாலும் இறையச்சத்தின்பாலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து கொள்ளுங்கள்.தீமைக்கும் பகைமை பாராட்டுவதிலும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்க வேண்டாம்’ என அல்குர்ஆன் போதிக்கின்றது.
நமது கிராமத்திற்கு ஒரு நல்ல திட்டம் வரும் போது அதனை யார் செய்தால் என்ன  ஆதரித்து , கொண்டு வந்து சேர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர , அதனுடன் சம்பந்தப்பட்டவர்களின் அந்தரங்களை தோண்டி முக நூலில் வீசுவதென்பது நபிகளார் காட்டித்தராத பண்பாடாகும்.

எல்லாத்திட்டங்கிளலும் குறைகள் இருக்கத்தான் செய்யும்.குறைகளை நாகரீகமாக சுட்டிக்காட்டி சீர் செய்ய பங்களிப்பு செய்வதனை விடுத்து திட்டங்களை முன் மொழிந்து நடைமுறைப்படுத்தும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் அவர்களின் படுக்கறையறைக்குள் புகுந்து நிர்வாணப்படுத்தி அழகுப்பார்ப்பது நமது வக்கிர மனத்தின் உச்ச கிறுக்குத்தனத்தை காட்டும் கோழைத்தனமான செயல்.

அல்லாஹ்வால் அறிமுகுப்படுத்தப்படாத நபிகளாரால் அமுல்படுத்தப்படாத எந்த திட்டத்திலும் மனிதர்கள் என்ற வகையில் குறைகள் இருக்கத்தான் செய்யும்.அதனை சுட்டிக்காட்டி திருத்தும் நடைமுறையில் அநாகரீகம் பேணப்படுகின்றது என்பதே நமது வருத்தமாகும்.
ஈஸ்ட்மிரர் ,கல்குடா ஜேர்னல் உள்ளிட்ட அநாமேதைய வலைப்பூக்களை நடாத்துபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.அநியாயம்,ஊழல், இவற்றிக்கெதிராக குரல் கொடுக்கின்ற போது தனிமனிதர்களின் அந்தரங்களை கிளறி அதனுள் குளிர்காய்வதை விடுத்து ஆக்கபூர்வமான காத்திரமாக கருத்துக்களை முன் மொழிந்து சமூக மாற்றத்திற்கு உங்களின் பங்களிப்பை வழங்குங்கள்.

இன்று சக மனிதனின் மானத்தினை கப்பலேற்றும் உங்களுக்கு நாளை ஒருவன் உங்களின்  அந்தரங்களை அரங்கேற்ற  ஒரு சந்தர்ப்பத்தினை வழங்க நீங்களே வழியமைத்துக்கொடுத்து விடாதீர்கள். 
தவிர ஒரு முஸ்லிமின் குறைகளை இம்மையில் மறைத்தால் மறுமையில் அல்லாஹ் உங்களின்குறைகளை மறைத்து விடுவான்.என்ற நபிகளாரின் பொன் மொழியை நினைத்துப்பாருங்கள். நமது பொது வாழ்வில் பல்லாயிரம் குறைகளுடன் நாற்றத்துடன் வாழ்ந்து கொண்டு ‘இறாலை’ப்போல்  மற்றவர்களை நோக்கி மூக்கைப்பொத்திக்கொண்டு உன்னிடம் துர்நாற்றம் வீசுகின்றது என சொல்லும் போது நமது மனசாட்சியை எங்கே அடகு வைத்து விட்டு சொல்கின்றோம்.
பாதிக்கப்பட்டவர்களின் மனம் நொந்த துஆக்கள்  உங்கள் பிள்ளைகளை மனைவியை எச்சந்தர்ப்பத்திலேனும் தாக்கம் செலுத்தாது என்பதற்கு எந்ந உத்திரவாதமும் இல்லை.ஏனெனில் அது யாராக இருந்தாலும் திரையின்றி அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படும்.

பொது வெயில் எழுத்துக்களை பதியும் போது அதனை எல்லோரும் விரும்பிப்படிப்பதற்கும் அதிலுள்ள உண்மைத்தன்மையை  பிரஸ்தாபிப்பதற்கும் விவாதிப்பதற்குமான நாகரீகம் கற்றவர்களிடம் இருக்க வேண்டும் 

சமூக சீர்திருத்தம் பற்றி எழுதுவதற்கும் சிந்திப்பதற்கும் எவ்வளவோ விடயங்கள் உள்ள இத்தருணத்தில் முட்டையில் மயிர் பிடுங்கும் இழிச்செயல்கள் தேவைதானா?  என்பதை போலி முகவரியில் போலி பெயர்களில் இயங்கும் அனைத்து வலைப்பூ மற்றும் முகநூல் சகோதரர்களையும் சிந்திக்குமாறு தயவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
ஆன்மீக வறுமை,கலாச்சார சீரழிவு வழிகெட்ட சீஆசிந்தனை என  இந்தக்கிராமத்தின் தலைவிதியை மாற்றிக்கொண்டு வரும் கொடிய நோய்களை இனங்கண்டு அவற்றிக்கெதிராக உங்கள் எழுத்துக்களைப் பயன்படுத்துங்கள். ஆரோக்கியமாக அரசியல் தலைமைத்துவங்களை கட்டியெழுப்பவும் அதனை ஸ்திரப்படுத்தவுமான நியாயமான காரணங்களை மக்களுக்கு நடுநிலையாக முன் வையுங்கள். கடந்த காலங்களில் அரசியல் அநாதைகளாக இருந்த போது நிகழ்ந்த அசம்பாவிதங்களை மக்கள் முன் தெளிவு படுத்துங்கள்.இருக்கின்ற தலைமைகள் விடுகின்ற தவறுகளையும் செய்ய வேண்டிய பணிகளையும் இடித்துரையுங்கள்.

இதனை விடுத்து மற்றவர்களின் மனைவியை சகோதரியை நீங்கள் இழுத்து வைக்க அவர்களோ  உங்களின் மனைவியை இழுத்து வைத்து துகிலுரிக்க …….. 
இதுவா இன்றைய தேவை

தயவு செய்து இணையத்தளங்களில் இத்தகைய இழிவான வார்த்தைகளை நீக்கிவிடுங்கள். எழுதுவதற்கும் பேசுவதற்கும் இஸ்லாம் நாகரீகமான வார்த்தைகளை சொற்களை கற்றுத்தந்துள்ளது.அதனை தத்தெடுத்து எழுதிப்பாருங்கள் உங்கள் எழுத்தில் சத்தியத்தின் ஜீவ ஒளி வீசத்தொடங்கும்.

   

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...