Friday, 25 November 2011

சிறுகதை - துறவிகளின் அந்தப்புரம்


1
ங்கையான நிலா! நடுவானில் நின்று கும்மாளமடிக்கின்றது. நட்சத்திரங்களின் மின்மினி கூச்சலில் பூமி அதிர்கிறது. பூவிதழ்களின் ஓரத்தில் பனி இறங்கி சொட்டும் அழகு கொள்ளை.

மௌனம் புதைந்த முற்றத்தில் குளிர் சிலிர்க்கிறது.ஒரு பறவை ஏகாந்தமாக கூவிக்கூவி அவளை வட்டமிட்டு தன் துயரத்தை பகிர்ந்து கொள்கிறது.

 அதன் கரிய நிழல் அவளில் படியுமாற் போல் தாழப்பறந்து தன் நெகிழ்ச்சியை தெரிவிக்கின்றது. வீட்டுக் கூரையின் மேல் பூனைகளின் புனர்ச்சிக்கலவரம். வளவின் கோடியில் நிற்கும் கிடாயின் முயங்கும் எத்தனிப்பு.கடல் குமுறி அலையடிக்கிறது மனசுக்குள்.

உள்ளே வயதான உம்மாவின் இருமல் கதவிடுக்கில் எகிறி அவள் காதுக்குள் நசிகிறது. நடமாட  முடியாத வாப்பா இந்நேரம்  கொட்டக்கொட்ட விழித்திருக்கக்கூடும்.

பொங்கும் தேகத்தின் திணவுகள் கொதிக்கின்றன. நெற்றி புடைக்க அவள் கரைந்து வடிகிறாள் திண்னையில்! கொதிக்கும் உலை விழிகளின்  இடுவலில் ஆவி பறக்கிறது. கடந்த பல இரவுகளாய் இந்த அவசம்.

சாச்சாவை இம்முறை ஏமாற்ற விரும்பவில்லை.உம்மாவின் நச்சரிப்பு வேறு.
“மாப்புள்ள நல்ல பேணுதல்.தீனுன்றா நல்ல உசிரு, உன்ன நல்லா பாத்துக்குவாரு”  சாச்சா அவள் காதில் ஓத ஓத சர்ப்பம் படுத்துவிட்டது.

அவர் மகுடியில் உம்மாவும் சரண்.

வாப்பாவின் பாரிசவாதத்தின் பின் காலம் சாச்சாவாகி அவரின் நிழலில் தரிக்கும்படியான தரித்திரம் தொற்றிக்கொண்டது.

அழகின் மதர்ப்பில் அவள் பெண்மை தர்க்கம் கண்டது மெய்! வாழ்வு பற்றிய சௌந்தர்ய வர்ணங்கள் கனவுகளில் விழுந்து இன்பமூட்டின. கற்பனைத்திடலில் திமிர்பிடித்த குதிரைகள்
.
அவளைச்சுற்றி ஒளிவட்டம்.அவள் ஓர் ஆணின் மார்பில் ஒதுங்கும் வண்ணத்துப்பூச்சியாகி சிறகடித்தாள்.

“மாப்புள்ள இசுலாமிய முறப்படிதான் நிகாஹ் செய்வாராம், பொண்ணு வூட்டுலேர்ந்து  செப்புக்காசும் வேணாமின்னுட்டாரு, செலவு சாத்தும் வானாமாம்”

சாச்சாவின் செய்தி அரசல் புரசலாய் அயல் வீடுகளில் பரவிற்று.
 
”பாருங்க லைலாட காலத்த சும்மா மாப்புள்ள கிடச்சிருக்கான்,அப்ப ஏதோ சம்சயம் இருக்கு, நாம கையில காசோட பெரிய்ய வூட்டயும்  வச்சிட்டு மாப்புள்ளமாருட காலுல வுழனும்,இவளுக்கு பழம் நழுவி பாலுலலுவா வுழந்திரிச்சி எல்லாம் வெள்ளத்தோலுக்குத்தான் ”

அவள் சம்பந்தந்தில் ஊர் கூடி அதிசயப்பட்டது. கர்வப்பட்டது.

லைலாவின் மிடுக்கும் மிகைத்து விட்டது. ”என்ட அழகுக்கு, வாரவன் குடுத்து வக்கனும்டி” தோழிகளுடன் ஆனந்தித்தாள்.

பெண் பார்க்கும் படலம். பெண்னும் மாப்பிள்ளையை பார்க்கத்தானே வேண்டும். அந்த சுன்னத் ஹயாத்தாக்கப்பட்ட ஓர் மாலைப்பொழுதில்தான் அவள் கனவுகள் சிதறின.அதன் உடைவுகளில் இடறி இரத்தம் சொட்டச்சொட்ட நடந்து போனாள்.

முஹம்மது நபிக்கு  வஹீ இறங்கிய வயதிருக்கும் மாப்பிள்ளைக்கு. முழங்காலிடை நீன்டிருக்கும் உடை. அழகுபடுத்தப்படாத தாடி. கையிலொரு துண்டு. அவள் இராஜகுமாரனின் தலைப்பாகைக்குள் நறுமணம் இல்லை.கம்பீரமும் இல்லை.பனிக்குடம் உடைகிறது.

உம்மாவின் மடிக்குள் புதைந்து கிடக்கும் அவள் முதுகு அதிர்கிறது. லைலாவின் மனத்துடிப்பு தாய்க்கு புரிகிறது.என் குஞ்சு நான் என்னடி செய்வேன் என்பது போல் ஆதுரமாக மகளின் முதுகை நீவிக்கொண்டிருந்தாள். அந்தர சௌஜன்யம் தந்த தகிப்பில் லைலா ஓவென்று கதறுகின்றாள்.

வாப்பாவின் பாரிசவாதம்,உம்மாவின் நோயும் தனிமையும், குடும்பத்தின் கையறு நிலை சாச்சாவால் மீட்டி ஓதப்படுகிறது.அடிமேல் அடி அவள் மனமென்ற அம்மி மெல்ல நகர்த்தப்படுகிறது. மிகச்சாதுர்யமான நிர்ப்பந்த நகர்த்தல் அது.

லைலாவின்  நீரோடை கலங்கி விட்டது. அவளுக்கேயுரிய பளிங்கு ஓடையில்  எருமைகள் உழல்கின்றன.  முதலிரவில் பலத்த குறட்டை ஒலிக்குள் அவள் மன வெக்கை அடங்கிச்சிறுத்தது.இன்பத்தின் படித்துறைக்கு அழைத்துச்செல்வான் என்ற வல்லமையான கனவுகள் அவள் மஞ்சத்தில் உதிர்ந்து கிடந்தன.

தன்னை ஆசுவாசப்படுத்தி வாழ வேண்டுமென்று அவள் தீர்மானித்துக்கொண்டாள். வாழ்க்கை கனவு கண்டது போல் இல்லை.ஓர் ஆணின் திணவு பற்றி அவள் கொண்டிருந்த பிரமைகள் வானவில்லாகின.ஆகிருதியுள்ள உடலை சுமக்கும் வல்லமை தனக்கு வரமாக வாய்க்கவில்லை என்ற ஆதங்கம்.

அவள் முன் எதிர்காலம் கோரப்பற்களுடன்  ஆவென்று நின்றது.கவிழ்ந்து விழும் இரவுகளும் கும்மிருட்டும் அவளை அச்சமூட்டின.சல்லாபங்கள் அற்ற இயந்திரத்தனமான வாழ்க்கை அவளை வாழ் என்று சாபமிட்டு சென்று விட்டது.

மணம் புரிந்து ஒரு வாரம் உருண்டு விட்டது.அவரின் உள்ளே கனன்று கொண்டிருந்த ஆன்மீக ஊற்றின் கண்களை யாரோ காலால் கெந்தியிருக்க வேண்டும்.

”இஞ்செ புள்ள நான் இந்த வெள்ளிக்கிழமை வக்துல போகனும்,பேரு குடுத்து கிழமையாயிட்டு, வாரதுக்கு சுணங்கும் இந்தாங்க இத செலவுக்கு வச்சிக்கிங்க” ஆயிரம் நோட்டுக்கள் இரண்டு அவள் கைகளுக்குள் திணிக்கப்பட்டது.

 ”அப்ப நான் போய்ட்டு வாரன். ”

அவள் முகத்தை பார்க்காமலே மீரான் வெளியேறிச்சென்றான். லைலா திக்பிரமை பிடித்தவளாய் உறைந்திருக்கின்றாள். அடிமேல் அடி அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

மருமகனின் பக்தி ரசம் லைலாவின் உம்மாவை கனிய வைக்கின்றது.

”நீ ஏன்புள்ள யோசிக்கிறா அவரென்ன கள்ளுக்கடக்கா போறாரு பொம்புள புடிக்கியா போற. அல்லாட பாதயில போறாரு, ஒரு நாப்பது நாள் கண்ண மூடி திறக்குறதுக்குள்ள பறந்திடும் ”

தாயின் வார்த்தைகள் தீயாய் உருகி  மனதை பொசுக்கின.

நாற்பது இரவுகள் நாற்பது மாலைபொழுது நாற்பது பகல்கள் அவள் இத்தா இருக்க வேண்டும். கனன்றெரியும் தீயை ஊதி ஊதி அணைக்க வேண்டும். சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டு செல்லும் கிருக்கனாக அவன் செல்வதை அவள் வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

விம்மித்தணிந்த மார்புகளுக்குள் இன்னும் ஏமாற்றம் இறங்கிக்கொண்டிருந்தது.

”மனைவிக்கு செலுத்த வேண்டியகடமைகள் உண்டு கொடுத்து விடுங்கள். ”

”உங்கள் மனைவி உங்களுக்காக அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது போல், நீங்கள் உங்கள் மனைவிக்காக உங்களை  அழகுபடுத்துங்கள். ”

”உங்கள் மனைவியிடம் இன்பம் பெறுவதும் தர்மம் ”

”அவள் வாயில் ஆசையுடன் ஊட்டிவிடும் ஒரு கவளச்சோறும் வணக்கம்”;
ஹதீஸ் கலரியில் கேட்ட பயான்கள் காதுக்குள் நிறைகின்றன.

 ஓ நாயகமே! நீங்கள் மகான். பெண்ணின் உணர்வுகளை சொல்லிச்சொல்லி புரிய வைத்த பொக்கிஷம். என்ன செய்ய அவை சில ஆண்களால் பள்ளிவாயல்களில் மட்டும் படிக்கும் மந்திரங்களாகி விட்டதே !

2

வக்தில் வந்து ஐந்தாவது நாள். மலை நாட்டின்  செழிப்பான கிராமத்தில் பணிகள் தொடர்கின்றன.சுற்றிலும் பசுமை குளிப்பதற்கு நீரோடை.

 கொளுந்து மணம் மாறா தேனீர். கால்களை பிடித்து விட விடலைகள். மாலை நேர நறுக்குத்தீனி வட்டிலப்பம்,மிக்சர்,லெவரியா,முறுக்கு இத்தியாதி.

ஐந்தாவது நாள் மீரானின் முறை.ஜமாஅத்துக்கு”ஹித்மத்”செய்ய வேண்டும். காலையில் பள்ளி வராந்தாவில் ஒரு கூட்டம் தஃலீம் வாசித்துக்கொண்டிருந்தது.

புது மாப்பிள்ளை மீரானை சீண்டியபடி இரண்டு இளைஞர்கள் தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தனர். குளிருக்கு வாகான மெதுவென்ற ஸ்வெட்டர்கள். மீரான் லைலாவை நினைப்பது பாவமென்ற தோரணையில் ஸ்வெட்டருக்குள் உடலை புதைத்து இறைச்சி வெட்டிக்கொண்டிருந்தான்.

”புள்ளயால் என்ன கத கதக்கிறிங்க, நான் வக்துலலியா நிக்கிறன்.ஸஹாபாக்கள் கலியாணம் முடிச்சி மறுநாளே யுத்தத்திற்குப்போய் ஷஹீதாகலியா? ” மீரான் அல்லாஹ்வை கண்டது போல் பரவசப்பட்டான். அந்தக்கிராமத்தின் தெருத்தெருவாய் அவன் கால்கள் அலைந்தன.

அவன் முற்றிய ஆன்மீகவாதி  முக்தியின் விளிம்பு வரை வந்துவிட்டான்.அவன் பாதையில் மலக்குகள் நிறைகின்றனர். வலீமார் கைலாகு கொடுக்கின்றனர்.

நாதாக்கள் அவன் திருப்பாதங்களில் பன்னீர் தெளிக்கின்றனர். மூசாவுக்கு மட்டுமா கடல்  பிளக்கும் ?  ஆபிரிக்கக்கடல்கள் அவனது குழாத்திற்கு பளிங்குத்தரையாகின்றது.

 இஸ்ரேல் அவர்களை கட்டியணைத்து முத்துகிறது.அமெரிக்காவின் சந்து பொந்துகளில் அவர்கள் முதன்மை மனிதர்கள்.

அந்தரத்தில் அலையும் பாவம் சுமந்த ஆன்மாக்களை  மர்கஸில் அடைத்து சுவர்க்கத்திற்கு அனுப்பும் பணி மீரான் போன்ற இளம் துறவிகளால் ஈடேறுகின்றது.

செல்லுமிடமெல்லாம் ”ஹித்மத்”. அட்சயப்பாத்திரங்களில் கோழிகள் விழுந்தன. கிடாய்கள் கனத்தன.நபியின் வாரிசுகள் வயிறு புடைக்கவும் உண்ணலாம்.

உண்டி சுருங்குதல் பெண்டிருக்கு மட்டும்தான். உண்டி மட்டுமா இவர்களால் சுருங்குகின்றது?

வனாந்திரங்களில்  ஏகனைத் தேடியலையும் பிரம்ம ரிஷிகள் இமயமலைச்சரிவில் நித்ய நிம்மதிக்கு கரையும் சன்னியாசிகள். பாரத கங்கையோரங்களில்  தியானத்திலிருக்கும் முனிகள் .

மீரானும் தெருத்தெருவாய் அலைவதன் ஊடே அல்லாஹ்வைக் காண்கிறான். அழியும் உடல் பற்றி அவனுக்கு கவலையில்லை.

இந்த உலகம் மூமின்களின் சிறை கூடம்.சிறைக்குள் தன்னை வருத்திக்கொள்ளும் கடவுளின் ஆயுள் கைதி மீரான். அவன் கூண்டருகே லைவாவால் அண்மிக்கவே முடியாது.

ஈமானின் முழு ஜோதியும் அவனைச்சூழவும் பரிவட்டம் போட்டுள்ளது.

”ரசூலுல்லாவே! நீங்கள் ஆடு மேய்த்திருக்கின்றீர்கள்,வியாபாரம் செய்திருக்கின்றீர்கள்,குடும்பத்தை காப்பாற்ற கூலியாகவும் வாழ்ந்திருக்கின்றீர்கள். உங்கள் உம்மத்துக்களால் முடியவில்லையே! ”

பால்மாவுக்கு ஏங்கும் குழந்தைகள். ஆலிங்கனத்திற்குத் துடிக்கும் மனைவிகள். நோயுற்றிருக்கும் வயதான அன்னையர்,கடன்தாரிகள், தந்தையில்லை என்ற ஓர்மத்தில் ஊர் சுற்றும் பிள்ளைகள்,

காதலித்து கழுவேறும் குமருகள்,வேலிதாண்டும் ஆடுகள் இந்த துன்பங்களிலிருந்து விடுதலை பெற நாயகமே நீங்களா காட்டினீர்கள் வக்தையும், பக்தியையும் ?

”மேலான பெரியார்களே! அல்லாட தீனில சம்பூர்ணமாக நுழஞ்சி கொள்ளுங்க”
மீரான் பள்ளியின் மத்தியில் அமர்ந்து கொண்டு உபந்நியாசம் செய்து கொண்டிருந்தான்.

மர்கஸ் அவனுக்கு ”அமீர்” பட்டம் சூடிவிட்டது. இனி அவனுக்கு கவலையில்லை. கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் செல்லும் குழுவில் அவனும் அடக்கம். அவன் பயானில் பள்ளி நெக்குறுகி கரைகின்றது.அவனை கூர்ந்து பர்ர்த்தபடி ஜனப்பிரளயம் ஆனந்திக்கின்றது.

”அமீர் ஷாஹிப் ” என்ற பட்டம் பெற எத்துனை தியாகம் வேண்டும்.இனி இந்த அழியும் உடல் தீனுக்குத்தான். இன்னும் வக்த கூட்ட வேண்டும் அமீர் சாப் நாற்பது நாளில் வீடு திரும்புவதா ?

3

லைலாவின் மனசுக்குள் கடற்பாறை இறங்கியது.வாப்பாவின் பென்சன் அவரின் மருந்துக்கும் உம்மாவின் இருமலுக்கும் போதுமாயிருந்தது. திணித்து விட்டுப்போன இரண்டாயிரத்திற்கும் பசி தெரியுமா விலை வாசி தெரியுமா மூன்று கிழமைதான் அது தாக்குப்பிடித்தது.

”எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்துக்கொள்வான்,தவக்குள் வையுங்க மீரான் ஷாப் இன்னும் நாப்பது நாள் பேரு குடுத்திருக்காரு.முடிஞ்சிதான் வருவாராம் ”

 ஊர் மர்கஸிலிருந்து செய்தி வந்தது. அது செய்தியல்ல மரணம்.

லைலா தான் ஏது செய்;கிறேன் என்றில்லாமல் இலக்கற்றுதிரிந்தாள். தூங்காத இரவுகள் முற்றத்தில் கழிந்தன.நிலவில் தோய்ந்தாள்.இருளுடன் இருளாய் கரைந்தாள்.பனியில் இளகினாள். கிளர்ந்தெழும் அலையடங்க உச்சந்தலையில் நீரை ஊற்றினாள்.

நடுங்கும் தேகத்தை அடித்து அடக்கினாள்.ஊழித்தாண்டமாவடிய மனசை தேற்ற எதிர்வீட்டில் புத்தகங்கள் வாங்கினாள்.வாசித்தாள்.

கெம்பஸ் முடித்து விட்டு, வேலை பார்க்கும் பால்ய வயதுத் தோழன் நியாஸ் நல்ல புத்தகங்களை தந்தான். அவளை உற்சாகப்படுத்தினான். உரையாடினான்.

”லைலா குடும்பத்த கவனிக்கிறதும் இபாதத் என்று அவருகிட்ட சொல்லுங்க. ”

”ஓம் நியாஸ் என்ர வாழ்க்க காட்டில எரிகிற நிலாவாப்பெய்த்து அழகிருந்து என்ன செய்ய பாழாய்போன ஏழ்ம  என்ர வாழ்வ தின்னுட்டு”

பந்தலற்ற   கொடி தன் வழியில் ஒரு மிலாரைப்பற்றிக்கொண்டது போல் லைலாவுக்கு நியாஸின் ஆறுதல் தேவைப்பட்டது.

காலங்கள் சடுதியாக மறைந்தன. லைலா இப்போது இழந்த வாழ்வின் வசந்தங்களை அடைந்தவள் போல் துள்ளித்திரிந்தாள். அவள் ஜன்னல்கள் ஊடே இதமான காற்று வந்தது.

எதிர்வீட்டு ஜன்னல்களும் விரிந்தே கிடந்தன.அதற்குள்ளிருந்து மொய்க்கும் இரு விழிகளுக்காகவே லைலா தன்னை அலங்கரிக்கதொடங்கினாள்.

இரவுகளில் அவளின் முற்றத்தில் நட்ஷத்திரம் பொழிந்தது.ஒரே பாயில் அருகருகே அமர்ந்தபடி அவர்கள் விவாதித்துக்கொண்ருந்தார்கள்.நெடிய வாழைமரத்தின் நிழல் விழும் ஓரத்தில் அவர்களின் நிழல்கள் கவிந்திருக்கும்.

வீட்டுக்குள் பாவும் அவன்  பார்வைகள் மொழிகளற்று அலைகின்றன.

4

மீரானின் கியாதி ஊரெல்லாம் பரவியது.தியாகம் என்ற கம்பளியால் அவனைப்போர்த்தி மர்கஸ் அவனை அழகு பர்hத்தது. ”மீரான் ஷாப பாருங்க எவ்ளவோ தியாகம் சுபுஹானல்லா! ”

மீரானின் பிரார்த்தனைக்காய் ஜமாஅத் ஏங்கிக்கிடந்தது. அவன் கடைக்கண் கடாட்சம் கிடைத்து விட்டால் போதும் மோட்சம் பெறலாம் என்ற நப்பாசை. புறப்படும் ஜமாஅத்துக்களுக்கு ஆசி வழங்கும் கைங்கரியம் மீரானுக்கு மட்டுமே வாய்த்திருந்தது.

அவன் உருகி வழியும் மொழுகு வர்த்தி. அல்லாஹ்வின் சந்நிதியில் மாபெரும் பக்தன்.இனி அவனுக்காக ஓடும் பஸ் நிற்கும்.விமானங்கள் இறங்கும். விலங்குகள் அடிபணியும். காட்டாறு அடங்கும். திமிர்பிடித்த சிறுத்தை கூட பணியும்.

அவன் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட  முனி. அவன் தோட்டத்தில் ஏவாளின் கனி இல்லை ஆதாமின் சாத்தானும் இல்லை. அவனுக்கு நிகர் அவன். அல்லாஹ்வின் அர்ஷில் அவன் மூச்சுக்காற்று முட்டும்.ஜிப்ரயீல் வந்து அவனுக்கு தூது சொல்லுவார்.சித்ரதுல் முன்தஹாவில் அவன் ரூஹீம் தங்கும்.

தேவகன்னியரின் கொங்கைகளை பற்றியபடி தேனாற்றில் அவன் குளிப்பான். மது ரசம் ஏந்தி நிற்கும் சொர்க்கலோக கன்னியரின் இடைகளில் முகம் புதைத்தபடி கஸ்தூரியின் வாசத்தை நுகர்வான் புனரப்புனர முடிவுறா இன்பத்தில் அவனை கன்னியர் மூழ்கடிப்பர்.

மேலான பெரியார்களே! பெண்களுக்கு வீட்டுத் தஃலீம் முக்கியம் .இஷாவுக்குப்பின் ஒரு மணி நேரம் வாசியுங்க. தீனுக்காக பாடுபடுவது இந்த துன்யா,துன்யாவுடைய வஸ்துக்களை விட மேலானது. ” மீரான் சிறகடித்தான்


5

”உம்மா தேடுவாக நான் போய்ட்டு வாரன், சொன்னது நெனப்பிருக்கட்டும் செல்லமாக லைலாவின் முகத்தை கிள்ளி விட்டு  நெடு நேரமாக கதைத்துக்கொண்டிருந்த நியாஸ் விடைபெற்றுச்சென்றான்.

மௌனமாய் எரிந்த திரியை தூண்டிவிட்டுச் செல்கிறான் பாதகன்.அவள் குழப்பங்களின் மொத்த உருவாய் மாறிப்போனாள்.

நள்ளிரவு நெருங்கும் தருணம் அவள் இதயம் அடித்துக்கொண்டது.கணத்த நெஞ்சுடன் உள்ளறைக்குள் சென்றாள்.

வெகு நாளாய் படுக்காத மஞ்சத்தை தட்டி சரிந்து கொண்டாள்.சிமினி விளக்கின் பிஞ்சு ஒளி அறை முழுக்க வழிந்திருந்தது.வீட்டின் மூலைக்கு மூலை ஒட்டடைகள் அடைந்திருந்தன.ஒழுங்குபடுத்தப்படாத பொருட்கள் வீடு முசிய இரைந்து கிடந்தன.படுக்கயறை அவளுக்கு மூச்சுமுட்டியது. கதவு சாத்தப்படாத வெளிவாசல் மௌனமாய்  அடைந்திருந்தது.அதில் அவள் விழிகள் ஆர்வமுடன் மொய்த்து நின்றன.

தூரத்தே நாய்கள் குறைக்கின்றன.புறவளவில் நின்ற ஆடுகள் அரவம் கண்டு மிரள்வது தெரிகிறது.மரக்கிளைகளில் அடைந்த கோழிகள் சலனத்துடன் அசைகின்றன. அவள் செவிப்பறை நுண்ணிய ஒலிகளுக்கும் வசியமாயிருந்தது.வாப்பா புரண்டு படுக்கின்றார் நார்க்கட்டில் கீச்சிடுகிறது.

உம்மாவுக்கு மாத்திரை மயக்கம் தீரவில்லை. மெலிந்த குறட்டை ஒலி வாப்பாவுடன் பொருதுகிறது.வாசலில் ஆளரவம்.கூதலில் கொடுவும் குஞ்சுப்புறாவாக தேகம் நடுங்கியது.ஏறி இறங்கும் மார்பின் துடிப்பு கணத்துக்கதிக்கிறது.

ஜிவ்வென உடல் அதிர்ந்து அலற, லைலா வாசக்கதவில் கண் பதிக்கிறாள். மோகன இருள் அறை முசியப் பரவுகிறது. திண்ணைக்குள் ஊரும் நிழல் நெருங்க நெருங்க லைலா நடுக்கத்துடன் எழுந்து நின்றாள்.


2006.‏‏-‏02‏‏-28‏
பிரசுரம் வீரகேசரி உயிர் எழுத்து 03.07.06

Tuesday, 22 November 2011

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

 
தொடர்  2
சண்டை சச்சரவற்ற ஆனந்த வாழ்க்கை.அன்று ஒரு வீட்டிலிருந்து வரும் கறி கோப்பை இன்று பத்துப் பேருக்குப் போதும்.

உம்மா அவவின் மச்சி முறையான ராவியாப்பெரியம்மாவிடம் குர்ஆன் ஓதுவதற்கு கொண்டு போய்விட்டா. ஊரில் பெரும்பாலானவர்கள் அவவிடம் ‘அலிப்பே’ கற்றிருப்பார்கள். குர்ஆன் மீதான வெறுப்பை பிஞ்சு மனங்களில் சின்ன வயதிலிருந்தே விதைப்பதில் பல பின்புலங்களை நான் இனங்கண்டிருந்தேன்.

 ஒன்று ராவியாப்பெரியம்மாவிடம் இருந்த குற்றி. சங்கிலியால் பிணைக்கப்பட்ட அதில் காலை கட்டி விட்டால் ஓடாமல் இருந்து குர்ஆன் ஓதுவார்கள். பெரிய ‘தல தெரிச்சவர்’களுக்குத்தான் இந்தக்குற்றி. மற்றது பிரம்பு.மூன்றாவது சதா கொலை வெறியுடன் அலையும் சில லெப்பைமாரும் சில மௌலவிகளும்.

 எங்கள் வீட்டிற்கு முன் தரிசாகக்கிடந்த வெற்றுக்காணியில் குர்ஆன் மதரசா ஒன்றை கட்டுவதற்கான முஸ்தீபுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஹனீபா மௌலவிதான் அதைக்கட்டினார். சீனிச்சுருளும் சந்தணக்குச்சியும், கற்கண்டும், மிளகும், காணிக்கையும் தந்து உம்மா ‘ஓதுர பள்ளிக்கூடத்’தில் சேர்த்து விட்டா.

 அதுதான் அன்று வழமை.குர்ஆன் மதரசாவில் சேர்த்து ஓதி முடித்து வெளியேறுவதற்குள் ஒவ்வொரு ஜுஸ்வுக்கும் மௌலவிமார்களுக்கு ஹதியா கொடுத்தனுப்புவதும் ஒரு பர்ளு போல பின்பற்றப்பட்டது.

ஆறு மாதத்தில் குர்ஆனை ஓதி முடித்தாயிற்று.மௌலவியை வீட்டுக்கு அழைத்து பாதிஹா ஓதி, சாப்பாடும் கொடுத்து பெரிய காணிக்கையும் கொடுத்ததார்கள்.

வெளியேற்று விழாவில் அவர் எழுதித்தந்த சொற்பொழிவை மனனமிட்டு தொண்டை கிழிய கத்தினேன்.மீரா சவுன்ட ஸ்பீக்கரில் அது ஊருக்கெல்லாம் போய் சேர்ந்தது. எனது சாச்சியை மட்டும் அந்தப்பயான் சென்று சேரவில்லை.

அவவின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க மறுபடியும் மேடைக்கு அழைத்து அதே ஆவேசம் ததும்பிய. பேச்சு மீரா சவுன்ட் ஸ்பீக்கர் தாபனத்தாரின் குழல் அடைப்புகள் அன்றுடன் நிவர்த்தியாயிருக்கலாம் யார் கண்டார்.

விழா முடிந்த கையுடன் மௌலவி உச்சவட கல்லுக்கு சுற்றுலா சுட்டிப்போனார்.ஒர் அதிகாலை ‘ட்ரக்டர்’ வந்து மதரசா முற்றத்தில் நின்றது. விடிய விடிய தூங்காத நாங்கள் குய்யோ குய்யோ வென்று கும்பலாக மெசினில் ஏறிக்கொண்டோம்.

 கடாரம்,சட்டிபானை சகிதம்  வாப்பாமார்கள் எல்லாம் ஒரு மெசினில்.
மெசின் கிளம்பும் போது தேய் பிறை அடிவானத்தில் மின்னியது. வயலுக்குச்செல்லும் வண்டில்கள் ,சைக்கிள்களை நாங்கள் முந்திச்செல்கையில் ஒரு குய்யோ. மௌலவி அதட்டினார். ‘பைத்த’ படிங்கடா என்றார். அவர் யா நபி ஸலாம் அலைக்கும்….. அடி எடுத்து முடிப்பதற்குள் நாங்கள் யா ஹபீபில் தொடங்கி  முழு பைத்தையும் பாடி முடித்தோம்.

‘அல்லாஹீ காலி குணாவை ‘பைசால் தொடங்கினான். கோரசாக குணா குணா என்று வாண்டுகள் கூச்சலிட்டன.இஸ்ஸதீனுடன் நான் பைசாலும் அடுப்புக்கல்லாக மெசின் பெட்டிக்குள் இருந்தோம்.

இஸ்ஸதீன் எங்களுக்கு மட்டும் கேட்குமாற்போல்  ‘உங்கம்மா உன்னப்பெத்தா எங்கம்மா என்ன பெத்தா மவ்லாகி மன்னப்பெத்தா’ என்றான். மூவரும் உரத்துச்சிரித்தோம். சிரிப்புக்கு காரணம் இருக்கவில்லை.சும்மா சிரிப்பு வெடிக்கும்.வீதியில் நிற்கும் மாடுகள் வாலைக்கிளப்பி சாணமிட்டாலும் சிரிப்பு.கன்றுக்குட்டி முலையை இடித்து இடித்து குடிப்பதைக்கண்டாலும் சிரிப்பு.நாயைக்கண்டாலும் சிரிப்பு இப்படி சிரிப்புக்கு பஞ்சம் இருக்கவில்லை.மௌலவியின் தாடியைப்பார்த்தும் சிரிப்பு வந்தது.

 மௌலவி என்னடா என்றார். ஒன்றுமில்ல என்பது போல் அவன்தான் குணா குணா வென்று கூட்டத்துடன் இணைந்து கத்தினான்.

‘உச்சவடக்கல்லு சியாரம்’ என்பது வாகநேரிக்குளத்துடன் பொருதி நிற்கும் மலையடிவாரத்தில் உள்ளது. மலையின் உச்சியில் சேர்குட் பங்களா. ஒரு ஹோட்டலும் இருந்தது. வெள்ளைக்காரர்கள் வந்து தங்கிப் போவார்கள். குளத்தில் படகு சவாரியும் உண்டு.

பிற்காலத்தில் அது புலிகளின் வாசஸ்தலமாக இருந்தது. தற்போது இராணுவத்தின் படைப்பிரிவொன்று மலை உச்சி பங்களாவில் நிலை கொண்டுள்ளது. முஸ்லிம் மக்களின் வயல் நிலங்கள் அதிகம் உள்ன இடம் முள்ளிவெட்டவான்,வாகநேரி.மீன்பிடித்தொழில்,கல்வாடி,சேனைப்பயிர்ச்செய்கை,
விவசாயம் என பெரும்பாலான முஸ்லிம்களின் ஜீவனோபாயங்களின் உறைவிடமாக இந்தப்பகுதி இருந்தது.

உச்சவடக்கல்லு சியாரத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் மில்க்போர்ட் (பால் சேகரிப்பு நிலையம்) இருந்தது.நசீர் மச்சான்தான் மனேஜராக இருந்தார்.அண்மையில் தான் ஹார்ட் அட்டாக்கில் மரணடைந்தார்.
ஹனீபா மௌலவி எங்களை எல்லாம் இறக்கி சியாரத்தை சூழவும் நிற்பாட்டி பாதிஹா ஓதினார்.சியாரத்தின் தலைப்பக்கம் ஒரு ஊண்டியல் இருந்தது.
எட்டிப்பார்த்தேன்.சில்லறைக்காசுகள் தேங்கிக்கிடந்தன.பாதிஹா ஓதுர ஆக்கள் மட்டும் எடுக்கலாம் மற்ற ஆக்கள் எடுத்தா கை அழுவிப்போகும் .ஒரு வயதானவர் சொன்னார். மௌலவியின் முகத்தில் முழு நிலவைக்கண்டேன்.

நானும் பாதிஹா மனனம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது.கபுறு வணக்கத்தின் விபரீதம் புரியாத வயது. (பிற்காலத்தில் அவ்லியாக்களால் ஒன்றும் செய்யமுடியாது என்ற பேருண்மை புரிந்தவுடன் சில்லறைகளை பாதிஹா ஓதாமலே அள்ளிச்சென்றோம்.) 
 
உச்சவடக்கல்லு மலைச்சரிவின் குளத்தில் இறங்கி கும்மாளமிட்டது இன்னும் நீங்காத முதல் குளத்து நீச்சல்.மூக்கைப்பொத்தியபடி நீரில் மூழ்குவதும் தாப்புக்காட்டுவதுமாக பகல் பொழுதுகள் கழிந்தன.உடுத்தியிருந்த சாரத்தை  விரித்து சிறிய மீன்களைப்பிடிப்பதும், குளத்தில் விடுவதுமாக இருந்தோம்.

பாசி படர்ந்து குளத்தில் இறங்கிச்சரிந்த பாறைகளில் வழுக்கி விழுந்து நீரில் மிதந்தோம். பிரமாண்டமான இந்தக்குளம்  என்னுடைய பிற்கால வாழ்க்கையின் அச்சாணியாக இருந்தது.

சியாரத்தை அண்டி எங்களுக்கான உணவு தயாரிப்பதில் வாப்பாமார்கள் மும்முரமாக இருந்தார்கள்.தேக்க இலையில் ஆவி பறக்க உணவு உண்டது அமிர்தம். சுற்றியிருக்கும் வேடுவ இன மக்களும் இலைகளுடன் வந்துவிட்டனர்.பெரியவர்கள் அந்த இலைகளில் சோற்றையும், கறியையும் அள்ளி ஊற்றினார்கள். 
 
முதுகை வளைத்து வணக்கம் சொல்லிவிட்டுப் போனார்கள்.முஸ்லிம் ஆக்கள் கவுரடிக்கு வந்தா எங்களுக்கு நல்ல சோறு கறி என்றார்கள்.முகங்களில் மலர்ச்சியும்,திருப்தியும்.

 மாலை ட்ரக்டரில் ஏற்றப்பட்டு மறுபடியும் அதே பாட்டு சளைக்காத கூச்சல்களுடன் வீட்டுக்கு வந்தோம்.

எங்கள் தேசம் இதழ் : 209

ஊஞ்சல் இன்னும் ஆடும்......

Wednesday, 16 November 2011

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

எங்கள் தேசம் பத்திரிகையில் தொடராக வெளிவரும் நினைவுக்குறிப்புகள்  'நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்' எனும் தலைப்பில் எழுதுகின்றேன்.
 
தொடர் 01


இத் தொடரில் என் குதியான் பருவத்து குஞ்சு நினைவுகள் சிலதை மீட்டிப்பார்க்கும்  எண்ணமுண்டு.வாழ்வின் சாசுவதம் என்பது அசை போடுதல்தானே!

நினைவுப்படிகளில் தேங்கி நிற்கும் ஒரு சொட்டு நீரும் திரும்பிப்பார்க்கையில் என்னமாய் தகதகவென்று ஜொலிக்கிறது.

இதில் விபரிக்கும் சில காட்சிகள்,மாந்தர்கள் என் சிறுகதைகளிலும் வந்து போயிருக்கின்றார்கள். கூறியது கூறல் குற்றம் கண்டுபிடித்து என்னை கூண்டிலேற்றி விசாரிக்க வேண்டாம் என எழுத்தின் பெயரால் கௌரவ விமர்சகர்களை கேட்டுக்கொள்கின்றேன்.

நான் பிறந்து வளர்ந்த மண் வீட்டை நினைத்துப்பார்க்கிறேன்.இரண்டு அறை ஒரு நீண்ட வராந்தா. வரிச்சுகளால் பிண்ணப்பட்டு களிமண்ணினால் நிறைக்கப்பட்ட சுவர்.

கிடுகு மேயப்பட்ட முகடு. முற்றத்தில் பெரிய மாமரம்.சற்றுத்தொலைவில் கிணறு. கிணற்றைச்சூழவும் கமுகு மரங்கள்.தண்ணீர் அள்ள துலா.வீட்டைச்சுற்றி அடைக்கப்பட்ட கிடுகு வேலி. அக்கம் பக்கம் சாச்சிமார்களும்,மூத்தம்மாவும் ஒவ்வொரு வீட்டிற்கும் போய் வர கோடியில் ஒரு நுழைவு வாயில்.

1978இல் அடித்த சூறாவளி எங்கள் வீட்டையும் அடித்து நொறுக்கியது.
வியாழன் இரவு ஆரம்பித்த காற்று.வேகம் கொண்டு மூர்க்கமானது.தென்னை மரங்கள் தலை விரித்தாடின.இடி மின்னல் வேறு அச்சுறுத்தியது.குடிசைகளை அநாயாசமாக அள்ளிக்கொண்டு ஆகாயத்தில் சுற்றி விட்டு பூமியில் தொப்பென போட்டது காற்று.கூரைத் தகரங்கள் ஜிவ்வென பறப்பதை பார்த்தபடி நின்றோம்.

பள்ளிவாசல் ஒலி பெருக்கிகள் அலறித்துடித்தன.ஆபத்து ஆபத்து பொது மக்கள் பள்ளிக்கு வாருங்கள் என்று கூவின.நேரம் செல்லச்செல்ல காற்றின் வேகம் ஊழித்தாண்டவமாடிற்று.எங்கள் வீட்டின் கிடுகுகள் இறகுகள் உதிர்வதைப்போல கழன்று பறந்தன. சருகுகளைப்போல் தென்னை ஓலைகளும் பச்சையாக பிடுங்கப்பட்டு பறப்பதைப்பார்த்தேன்.

வராந்தைக்குள் இருந்தவர்கள் உள்ளறைக்குள் சென்று ஒடுங்கிக்கிடந்தோம் அந்த அறைக்குள்ளும் மண் திட்டுக்கள் கழன்றுவிழ அடுத்த அறைக்குள் வாப்பா மாற்றினார்.சற்று நேரத்தில் அதுவும் கரையத்தொடங்க அயல் வீடு முஸ்தபா போடியாரின் வீடு. எங்கள் பகுதியில் அதுதான் கல்வீடு.வாப்பா பொலிதீன் பையினால் ஒவ்வொருவரையும் மூடிக்கொண்டு  அந்த வீட்டில் கொண்டு போய் விட்டார்.

அதிகாலைக்கு சற்ற முன் புயல் தன் கடமையை முடித்துக்கொண்டு அயர்ந்து தூங்கியிருக்க வேண்டும்.நாங்கள் அச்சத்துடன் அழிக்கப்பட்ட தெருவுக்கு வந்தோம்.

எங்கள் வீடு இருந்த இடத்தில் மண் திட்டுக்கள் குவிந்திருந்தன.வளவு முழுக்க மரங்கள் முறிந்து காடு போல் காட்சி தந்தது. இடி விழுந்த தென்னைகள் கருகி கழுத்து முறிந்து தொங்கின. மாமரத்திலிருந்து கிளிகளும் காகங்களும் செத்து விழுந்திருந்தன.கிழக்கின் புயல் பல ஊர்களை இப்படித்தான் தின்று விட்டுச் சென்றிருந்தது.

பிரதான வீதியாலோ உள் வீதியாலோ வாகனங்கள் செல்ல முடியாத நிலை. சூறாவளி அடித்து நொறுக்கிய உடல்களை தேடியொடுத்து அடக்கம் செய்வதிலும் பாதையில் குறுக்கே விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றுவதிலும் ஊர் ஈடுபட்டிருந்தது.

சந்து பொந்தெல்லாம் நானும் தம்பியும் சுற்றினோம். அழிவின் இழப்பு புரியாத வயது. வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருந்தது.பாடசாலைக்கு செல்லமுடியாது என்ற பேருவகைவேறு களிப்பூட்டியது. ஊரே அழிந்து கிடந்தது.

எல்லோரும் முற்றத்தில் அழுதபடி குந்தியிருப்பதைக்கண்டோம்.விழுந்து கிடந்த மாம்பிஞ்சுகளை பொறுக்கி தின்றபடி கால் போன திக்கில் நடந்து ஈற்றில் பாடசாலை மைதானத்திற்கு வந்தோம்.நாம் வருவதற்கு முன் ஊரே கூடி நின்றது.பாடசாலை களஞ்சியசாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிஸ்கட்டுக்கள், திரிபோஷ பக்கற்றுக்கள் சிலரின் கரங்களில் இருப்பதைக்கண்டோம்.

 களஞ்சியசாலை புயலில் உடைந்ததா அல்லது உடைக்கப்பட்டதா அறியோம். எனினும் என் வகுப்புத்தோழன் ஒருவன் ஒரு சுரங்கை பிஸ்கட்டுக்களை கையில் திணித்து விட்டு ஓடினான். மதிய  உணவுக்கு அக்காலத்தில் ஐம்பது சத உருவிலான் பிஸ்கட்தான் தருவார்கள்.

கைகொள்ளாத பிஸ்கட்டுக்கள் அதன் நறுமணமும் மொறுமொறுவும் தூக்கல். நாங்கள் பிஸ்கட் வாரச்சீட்டுப்போடுவதுமுண்டு.முறை வைத்து சீட்டுக் குலுக்கி  பத்து பிஸ்கட்டுக்கள் தலைக்கு சேகரித்து ஒருவருக்கு வழங்கப்படும்.

 ஹொலிகப்படரில் பான் போடுவதாக பொடியன்மார் கூவிக்கொண்டு மைதானத்தில் நின்று கொண்டு வானத்தைப்பார்த்துக்கொண்டிருந்தனர். அது பொய்யில்லை நிஜமாகவே வானத்திலிருந்து பான் மழை பொழிந்தது.

மாபெரும் கூட்டத்திற்குள் வாண்டுகளான எங்கள் கைகளில் எப்படி இந்தப்பான் சிக்குப்பட்டது என்பது இன்னும் அவிழ்க்கப்படாத புதிர்.

எங்கள் தேசம் இதழ் : 208
ஊஞ்சல் இன்னும் ஆடும்....

Monday, 7 November 2011

சிறு கதை : ஏவாளின் தோட்டத்தில் கனிகள் இன்னும் மிச்சமிருக்கின்றன.இரவு விளக்கின் அணுங்கலான வெளிச்சம் சயன அறையில் கவிந்திருந்தது.
கனவின் அனுகூலங்கள் ஒரு இருண்ட வீதியில் பேரிரைச்சலுடன் பயணிக்கின்றன.கதவின் தாழ்ப்பாள் விலகுகின்றது. நான் சைக்கிளை உலத்திக்கொண்டு வெளியே வருகிறேன்.பச்சை பசேலென்ற புல்வெளிகள். கதிர் முற்றிய வயல் வெளிகள் நிறைமாத கர்ப்பிணியாய் ததும்பி நின்றன.
நடுவாய்க்காலில் நாரைகள் இரைக்கான தியானத்தில் ஒற்றைக்காலில் தவமாய் நின்றன. இடிந்த ஒரு கட்டடத்தின் ஓரத்தில் களை பிடுங்கிச்சவுத்த இரு பெண்கள் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தனர்.அவர்களின் நாய் நாக்கை தொங்கபோட்டபடி தலைமாட்டில் குந்தியிருந்தது. மூடாத மார்புகளின் மதர்ப்பில் களத்துச்சூடு குவிந்திருந்தது.

நேரே சைக்கிள் சக்கரம் சுழல்கிறது. ஒரு குளக்கட்டில் ஏறி செம்மண் புழுதி படர்ந்த தரையில் அழுந்திச்செல்கிறது. இரு மருங்கிலும் பனை மரங்கள் நொங்கும் காயுமாக காய்த்துத்தொங்கின. சைக்கிளை நிறுத்திவிட்டு குளத்தின் அழகில் சொக்குகிறேன். அலைகளின் முதுகு மினுக்கம் கரையில் முட்டி உடைகிறது.ஆட்காட்டி முட்டையிட்டு கற்கள் கொண்டு மூடி அடையாளப்படுத்திய இடத்தை தவற விட்டு அதைத்தேடித்தேடி தாழப்பறந்து கத்திக்கொண்டிருந்தது.

 இரு மைனாக்கள்  மஞ்சோனா மரக்கிளையில் சாவகாசமாக உட்கார்ந்தபடி அலையாடும் குளத்தைப்பார்த்தபடி இருந்தன.ஆணின் இறகில் சொண்டு வைத்து கோதிக்கொண்டிருந்தது பெண் மைனா. குளக்கரையின் வட திசையில் ஒரு நாவல் மரம்  விழுது பரப்பி ஆகிருதியாய் சடைத்து நின்றது. கொத்துக்கொத்தாக கரிய நாவல் பழங்கள் அடர்ந்திருந்தன. கிளை விட்டு கிளைதாவிய குரங்குகளின் அட்டகாசத்தில் பழங்கள் சில போது  கீழே சிதறவும் செய்தன.

என்னை நாவல் மரம் ஒரு காந்தம் போல்  அதனன்டை ஈர்க்கத்தொடங்கியது. அதன் அடர்ந்த வசீகரத்தில் கிளை கொள்ளா சௌந்தர்யத்தில் மனம் மயங்கித்தவித்தது.
கரிய கனிகள் வாவென்று வசியம் செய்தன.சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்தி விட்டு மரத்தை நோக்கி நடக்கத்தோடங்கினேன். நாவல் மரத்தின்  கணதியான கொப்புக்களிலிருந்து இரு கண்கள் என்னை தீட்சண்யமாக பார்த்துக்கொண்டிருந்தன.
தீப்பிழம்பின் ஜ்வலிப்பு. தகதகவென மின்னும் அதன் பிரகாச விழிகள்  கருமை படர்ந்த வானத்தில் இரு நட்~த்திரங்களைப்போல் ஒளி சிந்தின.

கண்ணிமைக்கும் நேரத்தில் அது  கொத்துக்குள்ளிலிருந்து  கிளைக்கு நழுவியது. பின் அந்தரத்தில் நின்றபடி  தன் கருமுகத்தை விரித்து குவிமயமாய் என்னைச்சுட்டி கூர்நாவால் துழாவி சமிக்ஞை செய்தது. கருநாகத்தின் உடல் மினுக்கத்தின் தகிப்பில் என் விழிகள் கிறங்கி நின்றன. வாழ்வின் நித்யத்தில் இது முதல் அனுபவம். மிக அருகில் நான் கருநாகமொன்றின் அண்மையில் நிற்கிறேன். துளியேனும் அச்சம் முகிழவில்லை.ஆதியந்தமாய் ஓர் உறவின் நீட்சி உணர்வில் கசிகிறது.

அதன் மேல் பாந்தம் கமழ அருகில் செல்கிறேன்.பொறுக்குவாரற்ற நாவல் பழங்கள் சிதறிக்கிடந்த மரத்தின் நிழலை மிதித்தபடி  பாதங்கள் நகர்ந்தன.

கரு நாகம் கீழே இறங்கி மரத்தினடியில் நின்றது.அதன் கூர் நா உள்ளேயும்,வெளியேயுமாக சொடுக்குப்போட்டு மீண்டது. அதன் பார்வையின் உக்கிரம் நெஞ்சின் ஆழத்தை தீண்டிவிட்டு சென்றது.மேனி எங்கும் குளிர்ச்சியின் ஆகர்ஷிப்பு. நாகத்தின் கரிய நிழல் தரை முசியப்  படர்ந்தது.

 வள வளப்பான அதன் உடம்பை தொட்டுப்பார்க்க கரங்கள் துறுதுறுத்தன. காருண்யத்துடன் எழுந்து நிற்கும் அதன் விழிகளில் அன்பின் ஆழம் கசிந்தது. புகையிலை போன்ற விரிந்த முகத்தை சுருக்கிக்கொண்டது.பூமியில் தலை அழுத்தி என்னை தீவிரமாக பார்க்கத்தொடங்கியது. அதன் சௌந்தர்ய லாகிரி என்னைக்கட்டிப்போட்டது.

அழகின் நுட்பங்களை மனம் ஆர்வத்துடன் தேடத்தொடங்கியது.அலை முதுகில் ஆரோகணித்து வந்த சீதளக்காற்று என்னைச்சீண்டச்சீண்ட நான் விழிகள் சொக்க நாவல் மரத்தின் அடியில் சாய்ந்து கொள்கிறேன். நாகம் என்னருகே ஊர்ந்து வரும் ஓசை என் செவிகளில் நிறைய மனம் பூத்துக்குலுங்கி நறுமணம் வீசியது. அதன் கதகதப்பு என் விலாவில் தகித்துக்கொண்டிருந்தது.

அது தன் நாவால் என்னை துழாவத்தொடங்கியது. முத்தமிட்டுக்கவ்விய உதடுகள் வலியில் துடித்தன.நான் எழ முயற்சித்தேன்.முடியவில்லை என்னைச்சுற்றி ஒரு கொடிபோல அது படர்ந்திருந்தது.  அது ஆவேசத்துடன் நடனமிட்டது. கள்வெறி நீங்கிய களி நடனம் .அதன் விழிகள் ஆனந்தத்தில் மிதந்தன. சிவந்த அதரங்களில் இள நகை முகிழ்ந்திருந்தது.

 நடனத்தின் உக்கிரத்தில் அதன் விழிகளின் வசீகரம் பிரளயமாய் கதித்தது. முகாந்திரங்களற்ற பச்சை வெளியில் அது நீந்நிச்சென்றது. உச்சங்களைத்தொட்டுவிட்ட திளைப்பு. நரம்புகள் அதிர்ந்து வெடிக்கும் தருணம் விழிப்புத்தட்டியது. உடல் பிசுபிசுவென வியர்த்துக்கொட்டியது.

மறுநாள் என் வீட்டின் முகப்பை மாற்றியமைத்தேன்.புற்றுக்களால் காணியை நிறைத்தேன்.கனிதரும் மரங்களில் கருப்புத்துணிகளை கட்டிவிட்டேன். அது காற்றிலாடி நர்த்தனம் புரிகையில் கருநாகத்தின் பிம்பமே நெஞ்சில் நிறைந்தது.
நான் பாவிக்கும் எல்லாப்பொருட்களும் கருப்பாக மாறின. ஆடைகளும் கருப்பு நிறத்தில்.இன்ப விஷம்  எனக்குள் ஊறத்தொடங்கியது. அறை முழுக்க கருப்பின் பிரகாசம்.
நாகத்தின் அசுர விழிகள் மனதின் ஆழத்தில் மினுங்கத்தொடங்கின.  பிரியமாக என் தங்கை வளர்த்த வெள்ளைப்புறாக்களை திறந்து விட்டேன். அதன் கூட்டுக்குள் மைனாக்களையும் காகங்களையும் கொணர்ந்து விட்டேன். அவள் என்னுடன் பிணங்கிக்கொண்டு மூஞ்சை தூக்கிவைத்தபடி போனாள்.காகத்தை அடைத்து வைத்து சோறு போடும் “லூசி ” என்பதுபோல் என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.அவள் கருப்பு நிற மார்புக்கச்சை உள்ளாடைகளை மட்டுமே வெளியே கொடியில் காயப்போடச்சொன்னதற்கு மூளை பிசகிற்றா என்று என்னை வைதுவிட்டு அம்மாவிடம் ஓடினாள்.

கரிய நிழல் மீது பாந்தம் பெருகியது.வெளிச்சம் விழும் நேர் திசையில் உட்கார்ந்து எழுதும் போது தாளில் விழும் பேனா முனையின் கரிய நிழலுக்காகவே எழுதத்தொடங்கினேன்.

என் கருப்புத் தோழியை இறுக அணைத்து முத்தமிட்டேன். அவள் திணறிப்போய் உனக்கு என்ன பிடித்து விட்டது என கண்களால் குறும்பு கேட்டாள். அவள் கன்னங்கள் நாவற் பழம் போல் மினுங்கித்தளும்பின. நிலவு முக்காடிட்டுச்சரியும் பின்னிரவுக்காலங்களில் நிழல்வாகை மரத்தினடியில் அந்தக்கருப்பு நிலா என் மடியில் கம்பீரமாய் உதிக்கத்தொடங்கியது.

 நாக தரிசனங்களுக்காக இரவுகளும், கனவுகளும் ஏங்கித்தவித்தன. தவிக்கும்போது ஆசைப்பட்டது எளிதில் வாய்த்துவிடுகிறதா? அது ஒரு பித்தன் போல் என்னை மாற்றிவிட்டது. கருப்பில் தோய்ந்த ஒரு நோயாளியாகிவிட்டேன். மருந்துகள் பயனற்றுப்போயின.

மினுங்கும் அந்த வசீகர விழிகளுக்காக புற்றுக்களின் அருகிலிருந்து புல்லாங்குழல் வாசிக்கத்தொடங்கினேன். கருப்பு ரோஜாக்கள் வீட்டு முற்றத்தில் நீரின்றி வாடின.என் பிரிய நாய்க்குட்டி காலை சுற்றியபடி விலாவில் உரசித்திரிந்தது பிரிவின் துயரம் என்னை முழுமையாக விழுங்கி அரிக்கத்தொடங்கியது. என்னைத்தவிர உலகில் , எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர். எல்லோரிலும் கோபமாய் எரிந்து விழுந்தேன்.

அதன் கூர்நாவும் குறுகுறுப்பார்வையும் என் மேனி தழுவிய வளவளப்பும் உயிரின் மர்மக்குகையுள் சிதறி என்னை திகிலூட்டின.
அடர்ந்த வனங்களில் தேசாந்திரியாய் அலையத்தொடங்கினேன்.கோவணம் தரித்த சன்னியாசியாய் ஆகிவிட்டது வாழ்க்கை.

நீர் விழும் ஆறுகள்,அலை தரும் குளங்கள், பேரலை எகிறும் கடற்கரை,பாம்புகள் ஊரும் அடர்வனம், மரங்கள் என தேடல்கள் தொடர்ந்தன முடிவிலாப்பயணங்கள். கவிதைகள் ஈரத்துடன் பெருகின.அதன் குரலின் ஏக்கம் பெரும் ஒப்பாரியாக வனங்களில் சுற்றித்திரிந்தது.ஆதாமின் தோட்டத்திள் ஏவாள் இல்லை.ஏவாள் கடித்த கனிகள் தோட்டமெங்கும் சிதறிக்கிடந்தன. துயரங்கள் பேரலைபோல் முகடு தட்டி எம்பி என்னை துன்பக்கடலில் மூழ்கடித்தன.

நான் நாவல் மரத்தின் புத்தனாகிவிட்டேன் .தியானங்கள் மௌனத்துடன் நீண்டன.தியானத்தின் வலிமையில் அது என் முன் தோன்றி களிநடனம் புரியாதா? உள் மனம் ஏக்கத்துடன் கேவித்திரிந்தது.சொற்கள் உதிர்ந்த இடத்தில் மௌனம் ஒரு மலைபோல் குவிந்தது.மூடிய விழிகளுள் கருமை மட்டுமே கவிந்திருந்தது.திறக்க மறுக்கும் விழிகள் இருளுக்கு வசியப்பட்டன.

இப்படித்தான் ஒரு மழைக்காலம். கொழும்பில் டர்ணர் வீதியில் பணி நிமித்தம் நடந்து கொண்டிருந்தேன். பரிச்சயமான வழி. மழை இலேசாக தூறிக்கொண்டிருந்தது.வீதியை இருள் வந்து போர்த்தத்தொடங்கியது.

வீதியின் குறுக்குப்பாதையில் எப்போதும் வெளிச்சம் விழாத சந்தில் நடக்கின்றேன்.அரிதாக அவ்வழியே வரும் வாகனங்களின் வெளிச்சத்தில் மறைந்திருக்கும் ஒதுக்குப்புரங்கள் நன்றாகவே தெரியும்.  பழைய இடிந்த கட்டடச்சுவருடன் சாய்ந்திருக்கும் நாகங்களில் சாரைகள் ஊர்வதை முதன் முதலில் கண்டு அதிர்ச்சியாக இருந்தது.

இன்ப அதிர்வு என்பது இதுதானா?நாடி நரம்பில் இரத்தம் தீவிரமாக ஓடியதையும் அது உறைந்து பின் நெகிழ்ந்து தாபமாய் துடிப்பதையும் அனுபவித்தபடி நின்றேன்.இருளுக்குத்தான் எத்துனை வசீகரம்.சாரையும் நாகமும் ஒவ்வொரு முடுக்கிலும் முக்கி முயங்கும் காட்சி விழிகளில் மின்னி மறைந்தது. ஒரு நாகத்தின் இடுப்பில் தொங்கியபடி சாரை அதி வேகமாக முயங்கி சுய பிரக்ஞையற்றுக்கிடந்து.காமத்தின் உச்சத்தில் ஈருடலின்  மூச்சுக்கள் மெழுகு போல் உருகி தகித்தோடின.

நாகத்தின் ஸ்தூல வாசம் என் நாசியில் விடைத்தது.மழை வேறு இலேசாக தூபமிட்டுக்கொண்டிருந்தது. இருளுக்கு வசியப்பட்ட பாதங்கள் ஊர்ந்தபடி நகர்ந்தன. புற்றினடியில் அழகின் சாற்றைப்பிழிந்து தன் முகத்தில் பூசியபடி ஒரு நாகம் நின்றது. அதனன்டை என் கால்கள் இழுபட்டு சென்றன. வெட்டிமறைந்த மின்னல் கீற்றில் இரு விழிகள் என்னில் மொய்த்து மீண்டன.நாக ரசம் நாவில் ஊறித்திளைத்தது.உடம்பு உலையில் விழுந்து தகித்தது. நாகத்தின் உடல் மொழி அருகே வாவென்ற அதன் இரகசிய அழைப்பு நடனத்தில் நீந்தியது.

“உன் திசைநாடி ஊர்ந்த என் கால் நடுக்கம் இன்னுமிருக்குநெஞ்சுக்குள்“ எழுதிய கவிதை மனசின் மடிப்பில் குறுக்கே விழுந்தது. கிளைவிடும் ஆசையில் நாவுகள் கிளர்ந்து உயர்ந்தன. என்னைச்சுற்றிலும் புற்றுக்கள் முளைக்க நான் ஆழங்களுக்குள் மூழ்கிப்போகிறேன்.
ஒவ்வொரு துளையிலும் வசீகர நாகங்கள் படம் விரித்து சீறி நின்றன.பிளந்த நாவுகள் ஒரு வீரனின் கரங்களில் சுழலும் வாள் சமராய் எடுப்புக்காட்டின.வாளின் முனை வீச்சு உள்ளொடுங்கி பின்  துடிப்புடன் வெளியே எகிறின.தளைகள் மூடிய மரத்தினடியில் உடல் மறைந்துகிடந்த நாகங்கள் ஆரத்தழுவலில் அமுங்கிக்கிடந்தன. வாழ்க்கை கருணையற்றது. முதற்தரமாக மனசில் கசப்பு முகிழ்ந்தது.

கனவுகளில் எதிர்படும் நாகங்கள் திடுமென என்னை ஆச்சரியத்திலாழ்த்தி விட்டு மறைந்தும் விடுகின்றன. அவை என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றன. என் பருவத்தின் பள்ளத்தாக்குகளில் காம நீர் நிரம்பித்ததும்பின. கருப்பின் அழகில் என் இளமை அழியத்தொடங்கியது,கனவும் கனவின் சன்னமான முடிவும் என் படுக்கைகளில் நிரம்பி வழிந்தன.

கால நதியின் அதி வேக ஓட்டத்தில் நான் பணி செய்யவென  மலைநாட்டிற்கு தூக்கிவீசப்பட்டேன். சுவர்க்கத்திலிருந்து வீசப்பட ஆதாமாய் என் பாதங்கள் ஒரு மலையில் ஊன்றி சுற்றித்திரிந்தன. எனக்குரிய ஏவாள் இந்தத்தோட்டத்திலேனும் மறைந்துளளோ?

பசுமை குடிகொண்ட பூவனமாய் வாழ்க்கை மாறிற்று. காலை பனியில் முங்கிக்குளித்தபடி எனை நோக்கி கையசைத்து சிலிர்க்கும் மலர்களும், அகன்று விரிந்த தேயிலை தோட்டங்களும்  அற்புதம்.அற்புதம்! தவமாய் தவமிருந்து பெற்றவளின் வயிறும் குளிரத்தொடங்கியது.

நடுநிசியில் விழிப்புத்தட்டிவிடும் தருணங்கள் அவஸ்தைமிக்கது. நாகத்தின் நினைவுகள் என்னை பிழிந்தெடுத்தன.முகட்டை வெறித்தபடி படுத்திருக்கும் கடுமையான குளிர் இரவுகள் மகா அவஸ்தை!கனவு சுரக்கும் உடல் தகிப்பில் அதரங்கள் உலர்ந்து வியர்ர்த்துக்கொட்டும். இடம்பெயர்வு அல்லது சூழலை மாற்றல் என்னளவில் சில பொழுதில் பொய்த்துத்தான் போகிறது.மௌனமாக இரகசிய அறைகளில் அமுங்கிக்கிடக்கும் அவை ஒரு சிறு பொறிக்காக காத்திருந்து மனதை  உதிர்க்கும் விந்தையை என்னவென்பது?

நான் தங்கியிருக்கும் வீட்டில் ஒரு தோட்டமிருந்தது. கராம்பு, ஏலம்,மிளகுக்கொடி, பாக்கு, வெற்றிலைக்கொடி, சாதிக்காய் என ஏகப்பட்ட மரங்கள் அடர்ந்த தோட்டம். சதா நிழலையும் இலேசான இருளையும் கொடுத்துக்கொண்டே இருக்கும்.
தோட்டத்தின் முடிவில் ஒரு வயல்.பீலித்தண்ணீர் ஊடறுத்துச்செல்லும் அது பார்க்கும்போதெல்லாம் செழித்துக்கொண்டே தலையாட்டும். பீலியும் ,பீலியை அண்டினாற்போல் ஒரு கிணறும் வாய்க்கப்பெற்ற அத்தோட்டம் என்னை வசீகரித்ததில் வியப்பேதுமில்லை.

பாம்புகளற்ற அத்தோட்டத்தில் சாவகாசமாக உட்கார்ந்து படிப்பதும்,சிந்திப்பதுமாக என் மாலைகள் மயங்கின. ஆரம்பத்தில் அட்டைகள் மட்டும் இரத்தம் குடித்து மயங்கி வீழ்ந்தன. பாதங்களை கவ்வி உதடு பொருத்தி இரத்தம் குடிக்கையில் அவைகளை பிரித்தெடுக்கவே பிரயத்தனமெடுக்க வேண்டியிருக்கும். பின் சவர்க்கார நீரில் பாதங்களை அமுக்கி நனைத்தபடி தோட்டத்திற்கு வருவேன். அட்டைகளின்  தொல்லை இருக்காது.

எனினும் அண்மைக்காலமாக  எனது அறையின் ஜன்னோலரத்திலிருந்து இரு விழிகள் என்னில் மொய்த்து விளையாடுவதை உள்ளுணர்வு சுட்டிக்காட்டியது. திடீரென அறையை அதிரடியாக செக் பண்ணிப்பார்த்தேன். நாட்கள் நகர நகர என்னை உற்றுப்பார்க்கும் விழிகளின் உக்கிரம் வலுக்கத்தொடங்கியது.
நாகங்கள்தான் எனைத் தேடி வந்து விட்டதோ? ஐயங்கள் வலுக்க தோட்டத்தின் கரிய நிழல்களுக்கிடையில் என் கால்கள் உற்சாகமாகவும்,பதட்டத்துடனும் அலைந்தன. வயதான வீட்டுரிமையாளர்களிடம் கேட்டாயிற்று.
“தம்பி எங்கட தோட்டத்துல பாம்புத்தொல்ல இல்ல,அட்ட மட்டும்தான் இரிக்கி” 
ஏன் பாட்டி உங்கட வூட்டுக்குள்ள எப்பயாச்சுமம் பாம்பு வந்திரிக்கா?  நான் இன்ப அச்சத்துடன்தான் கேட்டேன் அதற்கு அவ சிரித்துக்கொண்டே 
இப்ப புதிசா வாரண்டாத்தான் பாம்பு வரனும்.ஆனா இரண்டு நாளக்கு முதல்ல எங்கட மகள்தான் ஹொஸ்டலேர்ந்து வந்திரிச்சி”  “அவவும் ஒரு அடைகாக்குற பாம்பு போலதான் மூலைக்குள்ள சுருண் படுத்தா வெளியே வரமாட்டா”

இரவு படுக்கைக்குச்செல்லுமுன் பாட்டி தந்த டீயை உறிஞ்சிக்கொண்டிருந்த போது இரு விழிகள் திரைச்சீலைக்குப்பின்னிருந்து என்னை உற்றுப்பார்த்தன. 
கருவிழிகளின் அழகும் நளினமும் அது இருளில் மினுங்கிய அற்புதமும் என்னை ஏவாளின் தோட்டத்திற்கு அழைத்துச்சென்றன. சுவரின் உத்திரத்தில் அதன் கரிய நிழல் பரவிச்சென்றது.

பின் வந்த இரவொன்றில் அறையில் தொலைக்காட்சி பார்த்தபடி உறங்கிப்போகிறேன். நடுநிசியில் வழக்கம் போல் விழிப்பு தட்டியது.தொலைக்காட்சித்திரையில் புள்ளிகள் இரைந்தபடி வெளிச்சம் காட்டின. அணைத்து விட எழுந்த என்னை இறுக்கிப்பிடித்து நிறுத்தியது வளவளப்பான தேகம். என்னருகே மூச்சிறைக்க அது படுத்திருந்தது.

இரவு விளக்கின் மௌன ஒளி அறை முழுக்க பரவியிருந்தது.அதன் உடல் மினுக்கத்தில் நான் திகைத்து நின்றேன். அழகின் பிரமாண்டத்தின் முன் நான் சிறு புழுவென நெளிந்தேன். செக்க செவேலென பிழந்த நாவால் அது என்னை துழாவத்தொடங்கியது என்பாதங்களை அது வாலால் சுற்றி என்னில் படர்ந்து மேலேகியது.பளபளக்கும் அதன் விழிகள் தாபத்தில் கிறங்கி நின்றன. நான் எழுந்து விடாதபடி அது என்னை இறுக்கத்தொடங்கியது.
மூச்சு முட்ட  நெஞ்சு அடித்துக்கொண்டது. குளிர்ச்சியான அதன் நாவால் என்னைத்தீண்டத்தீண்ட உடல் முழுக்க திகுதிகுவென பொறிகள் எரிந்தன.  கதவிடுக்கால் நழுவிச்செல்லும் அச்சத்தை திருப்பியழைக்க மனமின்றி நாகத்தின் உடலை தழுவத்தொடங்கினேன். ஆலகாலம் எனக்குள் பரவத்தொடங்கியது.

27.08.08
இரவு 8.45