Wednesday, 16 November 2011

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

எங்கள் தேசம் பத்திரிகையில் தொடராக வெளிவரும் நினைவுக்குறிப்புகள்  'நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்' எனும் தலைப்பில் எழுதுகின்றேன்.
 
தொடர் 01


இத் தொடரில் என் குதியான் பருவத்து குஞ்சு நினைவுகள் சிலதை மீட்டிப்பார்க்கும்  எண்ணமுண்டு.வாழ்வின் சாசுவதம் என்பது அசை போடுதல்தானே!

நினைவுப்படிகளில் தேங்கி நிற்கும் ஒரு சொட்டு நீரும் திரும்பிப்பார்க்கையில் என்னமாய் தகதகவென்று ஜொலிக்கிறது.

இதில் விபரிக்கும் சில காட்சிகள்,மாந்தர்கள் என் சிறுகதைகளிலும் வந்து போயிருக்கின்றார்கள். கூறியது கூறல் குற்றம் கண்டுபிடித்து என்னை கூண்டிலேற்றி விசாரிக்க வேண்டாம் என எழுத்தின் பெயரால் கௌரவ விமர்சகர்களை கேட்டுக்கொள்கின்றேன்.

நான் பிறந்து வளர்ந்த மண் வீட்டை நினைத்துப்பார்க்கிறேன்.இரண்டு அறை ஒரு நீண்ட வராந்தா. வரிச்சுகளால் பிண்ணப்பட்டு களிமண்ணினால் நிறைக்கப்பட்ட சுவர்.

கிடுகு மேயப்பட்ட முகடு. முற்றத்தில் பெரிய மாமரம்.சற்றுத்தொலைவில் கிணறு. கிணற்றைச்சூழவும் கமுகு மரங்கள்.தண்ணீர் அள்ள துலா.வீட்டைச்சுற்றி அடைக்கப்பட்ட கிடுகு வேலி. அக்கம் பக்கம் சாச்சிமார்களும்,மூத்தம்மாவும் ஒவ்வொரு வீட்டிற்கும் போய் வர கோடியில் ஒரு நுழைவு வாயில்.

1978இல் அடித்த சூறாவளி எங்கள் வீட்டையும் அடித்து நொறுக்கியது.
வியாழன் இரவு ஆரம்பித்த காற்று.வேகம் கொண்டு மூர்க்கமானது.தென்னை மரங்கள் தலை விரித்தாடின.இடி மின்னல் வேறு அச்சுறுத்தியது.குடிசைகளை அநாயாசமாக அள்ளிக்கொண்டு ஆகாயத்தில் சுற்றி விட்டு பூமியில் தொப்பென போட்டது காற்று.கூரைத் தகரங்கள் ஜிவ்வென பறப்பதை பார்த்தபடி நின்றோம்.

பள்ளிவாசல் ஒலி பெருக்கிகள் அலறித்துடித்தன.ஆபத்து ஆபத்து பொது மக்கள் பள்ளிக்கு வாருங்கள் என்று கூவின.நேரம் செல்லச்செல்ல காற்றின் வேகம் ஊழித்தாண்டவமாடிற்று.எங்கள் வீட்டின் கிடுகுகள் இறகுகள் உதிர்வதைப்போல கழன்று பறந்தன. சருகுகளைப்போல் தென்னை ஓலைகளும் பச்சையாக பிடுங்கப்பட்டு பறப்பதைப்பார்த்தேன்.

வராந்தைக்குள் இருந்தவர்கள் உள்ளறைக்குள் சென்று ஒடுங்கிக்கிடந்தோம் அந்த அறைக்குள்ளும் மண் திட்டுக்கள் கழன்றுவிழ அடுத்த அறைக்குள் வாப்பா மாற்றினார்.சற்று நேரத்தில் அதுவும் கரையத்தொடங்க அயல் வீடு முஸ்தபா போடியாரின் வீடு. எங்கள் பகுதியில் அதுதான் கல்வீடு.வாப்பா பொலிதீன் பையினால் ஒவ்வொருவரையும் மூடிக்கொண்டு  அந்த வீட்டில் கொண்டு போய் விட்டார்.

அதிகாலைக்கு சற்ற முன் புயல் தன் கடமையை முடித்துக்கொண்டு அயர்ந்து தூங்கியிருக்க வேண்டும்.நாங்கள் அச்சத்துடன் அழிக்கப்பட்ட தெருவுக்கு வந்தோம்.

எங்கள் வீடு இருந்த இடத்தில் மண் திட்டுக்கள் குவிந்திருந்தன.வளவு முழுக்க மரங்கள் முறிந்து காடு போல் காட்சி தந்தது. இடி விழுந்த தென்னைகள் கருகி கழுத்து முறிந்து தொங்கின. மாமரத்திலிருந்து கிளிகளும் காகங்களும் செத்து விழுந்திருந்தன.கிழக்கின் புயல் பல ஊர்களை இப்படித்தான் தின்று விட்டுச் சென்றிருந்தது.

பிரதான வீதியாலோ உள் வீதியாலோ வாகனங்கள் செல்ல முடியாத நிலை. சூறாவளி அடித்து நொறுக்கிய உடல்களை தேடியொடுத்து அடக்கம் செய்வதிலும் பாதையில் குறுக்கே விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றுவதிலும் ஊர் ஈடுபட்டிருந்தது.

சந்து பொந்தெல்லாம் நானும் தம்பியும் சுற்றினோம். அழிவின் இழப்பு புரியாத வயது. வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருந்தது.பாடசாலைக்கு செல்லமுடியாது என்ற பேருவகைவேறு களிப்பூட்டியது. ஊரே அழிந்து கிடந்தது.

எல்லோரும் முற்றத்தில் அழுதபடி குந்தியிருப்பதைக்கண்டோம்.விழுந்து கிடந்த மாம்பிஞ்சுகளை பொறுக்கி தின்றபடி கால் போன திக்கில் நடந்து ஈற்றில் பாடசாலை மைதானத்திற்கு வந்தோம்.நாம் வருவதற்கு முன் ஊரே கூடி நின்றது.பாடசாலை களஞ்சியசாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிஸ்கட்டுக்கள், திரிபோஷ பக்கற்றுக்கள் சிலரின் கரங்களில் இருப்பதைக்கண்டோம்.

 களஞ்சியசாலை புயலில் உடைந்ததா அல்லது உடைக்கப்பட்டதா அறியோம். எனினும் என் வகுப்புத்தோழன் ஒருவன் ஒரு சுரங்கை பிஸ்கட்டுக்களை கையில் திணித்து விட்டு ஓடினான். மதிய  உணவுக்கு அக்காலத்தில் ஐம்பது சத உருவிலான் பிஸ்கட்தான் தருவார்கள்.

கைகொள்ளாத பிஸ்கட்டுக்கள் அதன் நறுமணமும் மொறுமொறுவும் தூக்கல். நாங்கள் பிஸ்கட் வாரச்சீட்டுப்போடுவதுமுண்டு.முறை வைத்து சீட்டுக் குலுக்கி  பத்து பிஸ்கட்டுக்கள் தலைக்கு சேகரித்து ஒருவருக்கு வழங்கப்படும்.

 ஹொலிகப்படரில் பான் போடுவதாக பொடியன்மார் கூவிக்கொண்டு மைதானத்தில் நின்று கொண்டு வானத்தைப்பார்த்துக்கொண்டிருந்தனர். அது பொய்யில்லை நிஜமாகவே வானத்திலிருந்து பான் மழை பொழிந்தது.

மாபெரும் கூட்டத்திற்குள் வாண்டுகளான எங்கள் கைகளில் எப்படி இந்தப்பான் சிக்குப்பட்டது என்பது இன்னும் அவிழ்க்கப்படாத புதிர்.

எங்கள் தேசம் இதழ் : 208
ஊஞ்சல் இன்னும் ஆடும்....

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.