நூல் விமர்சனம்


இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

ஆசிரியர் 
அஷ்ஷெய்க் .எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி
ஸ்லாத்தின் பெயரால் உலகில் பல்வேறு பிரிவுகள் பல்கிப்பெருகியுள்ள இத்தருனத்தில் காலத்தின் தேவை உணர்ந்து எழுதப்பட்ட ஆய்வு நூல்.
நூலாசிரியர் ஏற்கனவே தமிழ்கூறும் உலகிற்கு ஆய்வு நூல்களைத் தந்து இஸ்லாமிய வாசகரிடையே பிரபல்யம் மிக்கவர். 'ஸலவாத் ஓதுவோம் வாருங்கள்',  'ஷாபி மத்ஹபின் சட்டங்களை அவமதிக்கலாமா?'   'யாரிந்த போராக்கள் '  போன்ற ஆசிரியரின் நூல்கள் வாசகரிடையே அதிகம் பேசப்பட்டது.

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் என்ற நூலில் மொத்தம் நாற்பத்தி ஆறு தலைப்புக்களில்  பல உட்பிரிவுகள் ஆராயப்பட்டுள்ளன.  இருநூற்றி நாற்பது பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலை தமிழ்நாட்டில் முன்னணி புத்தக நிலையமான சாஜிதா புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது.

இஸ்லாத்தின் பெயரால் தோன்றியுள்ள முக்கியமான வழி கெட்ட இயக்கங்களானகாதியானிகள்,ஹவாரிஜீன்கள்,ஷீஆக்கள்,அஷ்அரீய்யாக்கள், ஜஹ்மீய்யாக்கள்,  முஃதஸிலாக்கள், போராக்கள். போன்ற பிரிவுகள் இந்நூலில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியே அதன் தோற்றம்,இயக்கம்,செயற்பாடுகள் தொடர்பான புள்ளி விபரங்களுடன் மிகத்துல்லியமாக ஆராயப்பட்டுள்ளன. குறிப்பாக ஷீஆக்கள் நிறுவன மயப்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றனர். இராஜதந்திர முயற்சியின் ஊடாக அவர்களின் அரசியல் மற்றும் கொள்கை பரப்பும் பிரச்சார முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நூலில் ஷீயாக்களின் இரட்டை வேடத்தை தோலுரித்துக்காட்ட பல் வேறு சான்றாதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அல்குர்ஆன்  அஸ்சுன்னாவை மையப்படுத்திய முக்கிய ஆதாரங்களுடன், ஷீயாக்களின் தகிடுத்தத்தங்களை வெளிச்சமிட்டுக்காட்டும் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருப்பது நூலுக்கு கணம் சேர்க்கும் முயற்சியாகும்.

 இஸ்லாமிய வரலாற்றுச்சான்றாதாரங்களும், ஆசிரியரின் ஆய்வு நிலை முயற்சியும் நூலின் வாசிப்புக்கு வலிமை சேர்க்கின்றன.
ஏனைய வழிகெட்ட அமைப்புக்கள்,பிரிவுகளை விட, ஷீயா என்பது  சர்வதேச வலைப்பின்னலைக்கொண்ட பிரிவாகும். கிராமங்கள் தோறும் கலாச்சாரப்புரட்சி ,இஸ்லாமிய அட்சி, அமெரிக்க எதிர்ப்புணர்வுக்கொள்ளை,இஸ்ரேலுக்கெதிரான அறிக்கைகள். போன்ற சில சில்லறை விடயங்களை கையில் எடுத்துக்கொண்டு முஸ்லிம்களை மூளைச்சலவை செய்வதில் ஷீயாக்கள் கைதேர்ந்தவர்கள்.இவர்களின் இந்த தீராத விளையாட்டுக்களை நூலாசிரியர் மிக தெளிவான சான்றுகளுடன் இந்நூலில் முன்வைக்கின்றார்.

இந்நூலின் மற்றொரு சிறப்பம்சம், சாதாரண வாசிப்பறிவும், தேடலும் உள்ளவர்களும் வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய மொழியாகும். வழிகெட்ட பிரிவுகளை இனங்காட்டி சாதாரண பொது வாசகனும்,தீவீர வாசகனும் புரிந்து கொள்ளும் மொழி மிக முக்கியமானது. இதனை நூலாசிரியர் கச்சிதமாகவே செய்துள்ளார்.

மொழியின் இறுக்கம் தளர்கின்ற பொது  ,கருத்துக்கள் அதிக வாசகரிடையே ஆதிக்கம் செலுத்துகின்றது. அது நுலூக்கு கிடைக்கும்  மகத்தான வெற்றி.
சில இயங்கங்களின் பொது வேலைத்திட்டங்களிலும்,ஏகாதிபத்திய எதிர்ப்புக்கொள்கை கூச்சலிலும் மயங்கும் படித்த பாமர முஸ்லிம்கள் மிக எளிதாகவே வழிகெட்ட இயக்கங்களின் நடவடிக்களை நியாயப்படுத்த முனைகின்றனர். அவர்களுக்கு கூஜா தூக்கி நல்லவர்கள் என்ற 'லேபலை' வேறு குத்திவிடுகின்றனர்.
உண்மையில் இத்தகைய ஆய்வு நூல்கள் மூலம்  போலி லேபல்கள் கிழிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
ஒரு ஆவணப்படத்தொகுப்பைப்போல் இந்த ஆய்வு  நூல் கடின உழைப்பின் பின் நமது கரங்களை அலங்கரிக்கின்ற போது முழுத்தகவல்களையும் ஒரு சேரப்படித்த திருப்தியை நூல் தருகின்றது.
அவசியம்  படித்து பாதுகாக்க வேண்டிய தொகுப்பு.

மறைந்திருக்கும் குருவியின் மறையாத குரல்

இலக்கியத்தளத்தை காலம் நிச்சயித்து வந்திருக்கின்ற காலத்தில்,காலத்தின் பெறுமானத்தை இலக்கியங்கள் விம்பங்களாக்கி விடுகின்றன.காலத்திக் மகா பிரதிநிதியாக இயங்குபவன் இலக்கியக்காரன். அவன் உணர்வும், உவகையும் இலக்கியடமும் தாகமும் கொண்ட உயிரி.
மண் புழுவொன்று மண்ணைத்துளைத்துக்கொண்டு உள் நுழைந்து செல்வது போல மானுட தாகத்தால் உணர்வு பொங்க வாழ்வின் குறுக்கு முகத்தில் பயணிப்பவன் இலக்கியக்காரன்.
அத்தகைய பயணிப்பின் பிரதிபலிப்புத்தான் படைப்பு.படைப்புக்களில் சிறுகதை ஒரு மகா வடிவம். இது தனக்கென புதிய புதிய வடிவத்தைத்தேடித்தேடி திளைக்கிறது.
பழைய கதை மரபுகளை உடைத்துக்கொண்டு கதையின் கட்டுமானங்கள்,நுட்பம் இழையோடும் மொழியாட்சி,கருயுதி என வடிவமற்ற வடிவமாய் கதை வெளி விரிவு பெறுவதனை தமிழ் மொழிச்சிறுகதைப்பரப்பிலும் கானுகிறோம்.
கதை சொல்லி முக்கியமான ஆளுமையாக நம் மன் முகம் காட்டுகிறான்.நமது முஸ்லிம் கதை சொல்லிகளில் இத்தகைய நவீன பரப்புக்குள் இயங்குகின்ற சிலரில் சிலாகிக்கத்தக்கவராக மேற்கிளம்புகிறவர் ஓட்டமாவடி அறபாத்.
அறபாத் எண்பதுகளுக்குப்பின்னரான எழுத்துத்தளத்தில் முனைப்போடு வெளிப்படுபவர்.கவிதை,கதை,விமர்சனம்,ஆன்மீகம், என பல தளங்களில் செயற்படுபவர்."எரி நெருப்பிலிருந்து",    "வேட்டைக்குப்பின்" ,இவர் கவிதையில் ஓய்ந்து விட்டாரோ என ஊகிக்கத்தக்தெனினும்,கதை சொல்லலி்ல் அறபாத் புதிய குரலோடு பரிமளிக்கின்றார். 'நினைந்தழுதல்', "ஆண்மரம்' , திரட்டுக்களின் வழியே உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி யாக புதிய தொனியுடன் வெளிக்கிளம்புகிறார் அறபாத்.
அறபாத்தின் எழுத்து வீச்சார்ந்தது.உணர்வு பொங்கிப் பிரவகிப்பது.சொல் நுட்பத்தால் வாசகரை இழுக்கும் மந்திரம் மிகுந்தது,யதார்த்தமானது: தொய்வற்ற நகர்ச்சித்தனம் உடையது. இத்தகைய கட்டிறுக்க மொழியூடாக அறபாத் சொல்ல முற்படும் கதைப்பொருள் நமது சமூகத்தின் பிரதி விம்பமாக இருக்கின்றது. எனவேதான் அறபாத் முஸ்லிம் கதைப்பரப்பில் நவீன கதை சொல்லியாக தெரிபடுபவர்களில் முக்கியமானவராக நமது கவனிப்பை ஈர்க்கின்றார்.
உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி- அடையாளம் பதிப்பகத்தால் அடையாளம் காணப்பட்டது.முஸ்லிம் சமூக முன்னோடி வாப்பிச்சி மரிக்காயருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூலில்  'கழுதைகளில் விஜயம்' முதலாக 'ஏவாளின் தோட்டத்தில் கனிகள் இன்னும மிச்சமிருக்கின்றன.' வரையான 32 கதைப்பிரதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே வாசிக்கப்பட்ட கதைகள் இதனுள் அடங்கினும் மீள வாசிக்கின்ற போது மேலும் புதிய வாசிப்புத்தளம் விரிவடைகின்றது என்ற வகையிலும் இப்பிரதிகள் அவதானத்திற்குட்படுகின்றன.
உள்நிலை அரசியல் சின்னத்தனங்கள்,வன்முறையின் கொடூரமான அடையாளங்கள்.பெண்ணிலை வாழ்க்கை ,சமூக வாழ்வின் அன்றாட அவலங்களின்  கோலம், அன்பி்ன் அடைய முடியாத ஆழம், கனவுகள் ,ஏக்கங்கள்,பரவசங்கள் என சமூக வாழ்வின் கதைப்பொருள்கள் அமைகின்றன.
 ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் உடைந்த கண்ணாடியாய்த்தான் இருக்கிறது.அந்தக்கண்ணாடியில் ஏதோ ஒரு விதத்தில் அவனது இயக்கம் மறைந்திருக்கிறது என்பதானாலோ என்னவோ அறபாத்தின் கதை மாந்தர்களும் உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவியான நமது வாசிப்பில் வெளிப்படுகிறார்கள்.
அறபாத் தேர்ந்த வாசிப்புடையவர்.தீராத தேடலுடையவர்,நுட்பம் மிக்க இலக்கிப்பார்வை மிக்கவர். என்பதனை அவரது கதகளை தொகுத்து வாசிக்கும் போது இனங்கான முடிகிறது என்பதனால் நமது முஸ்லிம் கதைப்பரப்பில் இன்னுமு புதிய பாய்ச்சல்களை அறபாத் ஏற்படுத்துவார் என நம்பிக்கை கொள்வது வீணாகப்போவதில்லை.
-மர்யம்.

நன்றி : விடி வெள்ளி மார்ச் 31

சொல்ல மறந்த கதை............

கல்குடாமுஸ்லீம் (www.kalkudahmuslims.com) இணையதளத்தில் வெளிவந்த சகோதரர் ஜிஃப்ரி ஹாஸன் அவர்களால் வழங்கப்பட்ட எனது  சொல்ல மறந்த கதைகள் - என்னும் சிறுகதைப் பிரதிநூல் மதிப்பீடு.

மனித வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் எழுத்துக்குள் கொண்டுவந்துவிட முடியுமா? என்பது படைப்பாளிகளின் முன்னால் எப்போதும் இருந்து வரும் கேள்வியாகும். அதுவும் போர்-வன்முறை-ஜனநாயகமற்ற சமூக அரசியற் சூழல்- குறைந்தளவான சகிப்புத்தன்மை- வறுமைக்குள்ளான வாழ்வு என பொதுமக்களுக்கும்-படைப்பாளிகளுக்கும் பெருத்த சவாலாக விரியும் அசாதாரண சூழலுக்குள் வாழும் மக்கள் குழுமம் ஒன்றினது வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் ஒரு படைப்பாளியினால் தனது எழுத்துக்குள் கொண்டு வந்து விட முடியுமா?
‘உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி’ என்ற தனது தொகுப்பிலுள்ள சிறுகதைகளுக்குள்ளால் அறபாத் இது மாதிரியான கேள்விகளுக்கு பதிலளிக்கப் பிரயாசப்படுகிறார் என நினைக்கிறேன்.
அடையாளம் வெளியீடாக வந்திருக்கும் இச்சிறுகதைத் தொகுதி அறபாத்தின் இதுவரை வெளிவந்த சிறுகதைகளின் தொகையாக வெளிவந்துள்ளது. ஏற்கனவே இலங்கையில் தொகுப்பாக வெளிவந்த “நினைந்தழுதல்”, “ஆண்மரம்” ஆகிய சிறுகதைத் தொகுதிகளிலுள்ள கதைகளையும் மற்றும் ஏனைய கதைகளையும் இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது. யுத்தத்துக்குள் அகப்பட்டுக்கொண்ட இலங்கை முஸ்லிம்களின் போர் மற்றும் சமய வாழ்வின் பல்வேறு தருணங்கள் இங்கு கதைகளாக்கப்பட்டுள்ளன.
அறபாத்தின் ஒட்டுமொத்தக் கதைகள் குறித்தும் ஓர் ஆழமான மறுவாசிப்பைச் செய்யவேண்டுமென்ற உந்துதல் எழும்புகின்ற போதிலும் தொடர்ந்தும் அது கைகூடாமல் வெறும் தொகுதிரீதியான வாசிப்பாக மட்டுமே சுருங்கிப்போய்விடுகிறது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், அறபாத்தின் கதைகள் எந்தப் பொல்லாப்புமில்லாமல் நமது மக்களைப் பற்றிப்பேசுகின்றன. இதனால் மக்களது வாழ்வுக்கும் இவரது எழுத்துக்குமிடையில் எந்தத் திரைகளும் இருப்பதில்லை. தனது நிஜமான வார்த்தைகளினாலும் அழகான சொற்றொடர்களினாலும் இந்த மக்களின் கதையை அலங்கரித்திருக்கிறார் அறபாத். துயர் நிறைந்த பிடிப்புக்கள் எதுவுமற்ற வாழ்வின் உண்மையான பிரதிபலிப்புகளாக மட்டுமே அவையுள்ளன. இதனை எல்லா எழுத்தாளர்களாலும் சாத்தியப்படுத்த முடியுமா?
பலதரப்பட்ட மனிதர்களும் பலதரப்பட்ட சம்பவங்களும் அறபாத்தின் கதைகளுக்குள் புனைவாக்கப்பட்டுள்ளனர். அதிலுள்ள பலதரப்பட்ட மனிதர்களும் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளிகளைத் தேடுபவையல்ல இவரது எழுத்துக்கள். அந்த மனிதர்களின் நிலமைகளுக்கு ஒரு காட்சியை, அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கான குரல்களை-தள்ளாடும் அந்த மனிதர்களுக்கான ஊன்றுகோளை வழங்குபவையாக அறபாத்தின் எழுத்துக்கள் உள்ளன.
அறபாத்தின் கதைகளுக்குள் அரசியல் இருக்கிறது-வரலாறு இருக்கிறது-கலாசாரம் இருக்கிறது-காரசாரமிருக்கிறது- சினேகம்-எதிர்பார்ப்பு-ஏமாற்றம்-புன்னகை-அழுகை ஏன் காமம் கூட இக்கிறது. எனினும் அவை எல்லாம் இருப்பதனால் வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் எழுத்துக்குள் கொண்டு வந்ததாக ஆகிவிடுமா? இவை எல்லாம் இருப்பதனால் ஒரு படைப்பு உயிர்ப்புடையதாகி விடுமா?
உண்மையில், ஒரு கதையின் ஆன்மா அதுவல்ல சத்துள்ள ஆரோக்கியமுள்ள ஒரு கதையின் ஆன்மாவாக ஒருபோதும் கருப்பொருட்கள் இருப்பதில்லை. இங்கும் அறபாத்தின் கதைகளின் மைய விடயங்களாக மட்டுமே அவை உள்ளன. ஆனால் அவையே அவரது கதைகளாகிவிடுவதில்லை. அந்தவகையில் இவரது கதைகள் ஆரோக்கியமற்ற சத்தற்ற ஒரு நோயாளியைப் போல அலைபவையல்ல, அறபாத்தின் கதைகள் ஒவ்வொன்றுக்குள்ளும் துயர் நிறைந்த மனிதர்களின் கூட்டு வாழ்க்கை குமுறிக் கொண்டிருக்கிறது. புறக்கணிக்கப்பட்ட, கண்டுகொள்ளப்படாத மனிதர்களின் குரல்கள், ஒவ்வொரு கதையினுள்ளும் ஒலிக்கிறது.
அறபாத்தின் இந்தத் தொகுதியிலுள்ள கதைகள் இந்த மக்களின் மூன்றுவித வேறுபட்ட வாழ்நிலைமைளை அமரத்துவமுடைய இலக்கியப் பொருளாக்கியுள்ளன.

1. யுத்தத்துக்குள் அகப்பட்டுக் கொண்ட ஓர் மக்கள் திரளின் துயரம்.
2. சமூக அரசியல் போராட்டம் குறித்த மறு விசாரணை
3. உள்ளக கலாசாரப்பன்மைத்துவத்தை எதிர்த்தல் (Anti-Internal Cultural Diversity)

ஆனால் காலச்சுவட்டில் அறபாத்தின் கதைகளைப் பற்றி எழுதிய அனார் அறபாத்தின் கதைகள் எந்த சட்டகத்துக்குள்ளும் உள்ளடங்குவதில்லை என எழுதுகிறார். அதுவும் ஒரு வகையில் உண்மைதான். இந்த மூன்று சட்டகங்களுக்கப்பாலும் அறபாத்தின் கதைகள் நீள்கின்றன என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஏனெனில், ஒரு கதையில் வரும் மனிதர்கள் இன்னொரு கதையிலும் வருகின்றனர். ஏல்லாக் கதைகளிலும் ஒரே வகையான முரண்பாடுகளும் பிரச்சினைகளும் இருப்பதை அந்த மனிதர்கள் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஒரு கதையின் தொடர்ச்சியாக இன்னொரு கதை எழுதப்பட்டிருப்பது போன்று நம்மை உணரவைத்து விடுகிறது. எனினும் பெரும்பாலான கதைகள் இந்த சட்டகத்துக்குள் உள்ளடங்குகின்றன என்பதைக்காட்டிலும் அறபாத்தின் கதைகளுக்குள் இந்த சட்டகங்களும் உள்ளடங்குகின்றன என்று சொல்வதே பொருத்தமானது.
நான் மேலே கூறியதைப் போன்று முதலாம் வகைக் கதைகளையே இப்பிரதி அதிகமாகக் கொண்டிருக்கின்றபோதிலும் ‘ரயில்வே ஸ்டேசன்’, ‘வேட்டை’, ‘கப்பம்’, ‘நினைந்தழுதல்’ போன்ற கதைகள் போரின் வாழ்வையும் வலியையும் வெவ்வேறு கோணங்களில் பேசுபவை.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் போராட்டம் குறித்த மறுபரிசீலனையை இதற்குள் சில கதைகள் முன்வைக்கின்றன. அவை வெறும் கட்சிகளுக்கிடையிலான பரஸ்பர எதிர்ப் பிரச்சாரங்களைப்போலன்றி ஓர் எதிர்க் கருத்துநிலையை முன்வைப்பவை. ஏமாற்றப்பட்ட தோற்றுப்போன மக்களின் எதிர்க்கதையாடல்களாக அவை எழுந்து நிற்கின்றன. முஸ்லிம் அரசியல் போராட்டம் இன்று அடைந்திருக்கும் கோமா(ளி) நிலையை அடையாளப்படுத்த முனையும் இக்கதைகள் நமது அரசியல் தலைமைகள் சுயவிசாரணைக்கு தயாராக வேண்டும் என உரத்துக் கூறுபவை. இந்த வகைக் கதைகளுக்கு இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் ‘கழுதைகளின் விஜயம்’, ‘தேர்தல் காலக்குறிப்புகள்’, ‘ஓணான்கள்’ போன்ற கதைகளை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
இலங்கை கலாசாரப் பன்மைத்துவத்தைக் கொண்ட நாடு என்பதைப்போலவே இங்கு வாழும் முஸ்லிம்களும் தங்களுக்குள் பல கலாசார உட்கூறுகளைக் கொண்ட இனக்குழுவினராவர். அறபாத்தின் சில கதைகள் சமயரீதியான இந்த இயக்கப்பல்வகைமையை அங்கீகரிப்பவையல்ல இவ்வாறான சக இயக்கங்கள் மீது எந்த சகிப்புத்தன்மையையும் காட்டாதவை இவரது எழுத்துக்கள். எனினும் இவரது கதைகளில் வெளிப்படும் இந்த விமர்சனரீதியான பார்வை சமய இயக்கங்களின் பலவீனத்தை அடையாளப்படுத்தும் முனைப்பைக் கொண்டிருப்பதையும் அத்தகைய இயக்கங்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். இதிலிருந்து இஸ்லாமிய இயக்கங்கள் சில விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். ‘துறவிகளின் அந்தப்புரம்’, ‘ஜின்’ போன்ற கதைகளுக்குள் நாம் இத்தகைய செய்திகளைக் காணலாம்.
அதேநேரம் வாழ்க்கையை லேசாக எடுத்துக்கொள்கிற கேலியும் கிண்டலும் நிறைந்த மனிதர்களும் இந்த உடைந்த கண்ணாடிகளுக்குள் குருவிகளைப்போல மறைந்திருப்பதை நீங்கள் காணலாம். ‘அரங்கம்’ கதையில் வரும் பெத்தா, ‘ஓணான்கள்’ கதையில் வரும் கஸ்ஸா மூத்தம்மா போன்றவர்களோடு இன்னும் பலர் இதற்குள் உள்ளனர்.
சில கதைகளைத் தவிர பெரும்பாலான கதைகளின் தொடக்கமும் முடிவும் ஒரே புள்ளியில் தொடங்கி ஒரே புள்ளியில் முடிவடைவதால் கதைக்குள் கதை கூறல் இவரது எழுத்துக்குள் இல்லாமல்போய்விடுகிறது. இன்று சிறுகதை அடைந்திருக்கும் வடிவ மாற்றங்களை அறபாத் ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது மறுதலிக்கிறாரா? அறபாத்தின் புனைவுக்குள் வாழும் அந்த சாமான்ய மக்களின் பிரச்சினைகளை இன்னொரு தளத்துக்கும் எடுத்துச் செல்லும் திறன் படைத்த படைப்பாளியான அறபாத் கதையின் ஏனைய வடிவங்களையும் பரீட்சித்துப்பார்ப்பது பயனுள்ளது என்று சொல்லத்தோனுகிறது. எனினும் சில மாதங்களுக்கு முன் எனக்கு வாசிக்கக்கிடைத்த அவரது சிறுகதை ஒன்று (மூன்று பூனைகள் பற்றிய ஏழு குறிப்புகள்- என்று நினைக்கிறேன்) குறிப்பிடத்தக்க முயற்சியாக இருந்தது. அத்தகைய புதிய மாற்றங்களையும் சேர்த்துக்கொள்வது இலக்கியத்தில் ஒன்றும் ‘பித்அத்’ இல்லையே!
அறபாத் எனும் கதைசொல்லி கதையினைச் சொல்லும் பாங்கில் வெளிப்படும் அழகியல் ஒரு கதையிலிருந்து ஏனைய கதைகளுக்கும் ஊடுறுவி விடுகிறது. கதைசொல்லியின் விவரணம் ஓவ்வொரு கதையிலும் ஒரேமாதிரியாக அமைந்திருப்பது போன்ற உணர்வுக்கு வாசகன் உள்ளாகும் நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்குரியதே. இது ஒரு வகையான அருட்டுணர்வை ஏற்படுத்தக் கூடியது என்பதை ஒரு வாசகனாக நின்று நான் உணர்கிறேன்.
‘எழுத்தாளர்களான நாங்கள் பயன்படுத்தும் கற்கள் வார்த்தைகள். அவற்றை எங்கள் கைகளில் ஏந்தி எவ்வொன்றும் மற்றொன்றுடன் இணைந்திருக்கும் வழிவகைகளை உணர்ந்து சில நேரங்களில் அவற்றைத் தூர வைத்துப் பார்த்து சில வேளைகளில் எங்கள் விரல்களாலும் பேனாக்களின் முனைகளாலும் ஏறக்குறைய தட்டிக்கொடுத்து, சீராட்டி அவற்றை எடைபோட்டு, அங்குமிங்கும் நகர்த்தியமைத்து வருடவருடமாகப் பொறுமையோடும், நம்பிக்கையோடும் புதிய உலகங்களை உருவாக்குகிறோம்’ என்று ஒரு முறை ஓரான் பாமுக் எழுதியதாக ஞாபகம். எழுத்தாளர்கள் தமது கதைகளை பொது அரங்குக்கு கொண்டு வருமுன் இத்தகைய நிலைகளைத் தாண்டியே ஆகவேண்டியுள்ளது. இந்த தடைதாண்டலில் எல்லா எழுத்தாளர்களும் துரதிஸ்டவசமாக வெற்றி பெறுவதில்லை. கதையாக்கத்தில் ஓரான் பாமுக் சொல்லும் இந்தப் படிமுறைகளை அறபாத்தும் தாண்டுகின்றபோதிலும் ஓரான் பாமுக் கடைசியாகச் சொல்லும் ‘புதிய உலகங்களை உருவாக்குகிறோம்’ என்பது இங்கு அறபாத்துக்குச் சாத்தியமில்லாததாகப் போய்விடுகிறது.
நமது சூழலில், எழுத்தாளர்களாகிய நாங்கள் புதிய உலகங்களைக் கட்டியெழுப்புவதில்லை, புதிய மனிதர்களை உருவாக்குவதில்லை, புதிய கனவுகளைப் படைப்பதில்லை, ஏற்கனவே இருந்த உலகங்களையே புனர்நிர்மாணம் செய்கிறோம், ஏற்கனவே உள்ள மனிதர்களையே செப்பனிடுகிறோம், ஏற்கனவே பேசப்பட்ட வார்த்தைகளுக்கு, நம்பிக்கைகளுக்கு புதிய வடிவங்களைக் கொடுக்கிறோம், தூர்ந்துபோன கனவுகளுக்கு புதுத்தெம்பூட்டுகிறோம். இதுதான் எங்களால் இப்போது செய்ய முடியுமான பணியாகவுள்ளது. இந்த மண்ணிலிருந்து கொண்டு அறபாத்தாலும் எப்படித்தான் புதிய உலகங்களை உருவாக்க முடியும்?
ஓர் அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டு எழுதத்தொடங்கும் போது அந்த அறை வியாபகம் கொள்கிறது. அந்த அறை முழுதும் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் எல்லாவிதமான கதைகளும் அறபாத்தின் இந்த உடைந்த கண்ணாடிகளுக்குள் மறைந்துகிடப்பதைப் போல அவரது அறைக்குள் கிடக்கின்றன. அதை பொறுக்கி எடுத்து ஒட்டி நேர்த்தியாக்கி அவர் தருகிறார். உடைந்த கண்ணாடிகளாயினும் அறபாத்தின் குருவிகள் உயிருள்ளவை. சிறிய இறக்கைகளேயாயினும் உலகை வலம் வர முனைபவை.


ரெயில்வே ஸ்ரேஷன் பற்றி.......
ஆபிதீனின்  பக்கத்தில்....

அண்ணாந்து பார்க்க வைத்த அறபாத் கதை

மரத்தில் ஏறி நிற்கும் பிட்டுக்காரி சரஸாவைப் பார்த்து ராஹலாமி கத்துகிறான் : ‘ ஏய் சரஸா , உன்ர அது தெரியுதுடி!’. போரின் வலிகளைச் சொல்லும் சீரியஸான கதையில் இப்படியொரு ‘சீன்’ பார்த்தும் என்னையறியாமல் அண்ணார்ந்து விட்டேன்!
தமாஷ் இருக்கட்டும், என் மரியாதைக்குரிய ஹனீஃபாக்கா அறிமுகப்படுத்திய இளைஞர் அறபாத் அற்புதமான எழுத்துக்கு சொந்தக்காரரராக இருக்கிறார். குருவை மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது. ‘எதிரியாகியிருந்த எதிரி, நண்பன் என்றிருந்த எதிரி, இனத்தான் என்றிருக்கும் எதிரி’ என மும்முனைத் தாக்குதலுக்கு உள்ளான இலங்கை முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை இதற்கு மேல் கலாபூர்வமாக சித்தரிக்க இயலுமா என்று சந்தேகமாக இருக்கிறது. பல இலக்கிய விருதுகள் வென்ற இவரைப்பற்றி இத்தனை நாள் தெரியாமலிருந்ததற்கு வெட்கப்படுகிறேன். ‘அடையாளம்’ வெளியிட்ட இவரது சிறுகதைத் தொகுதிக்கான (உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி) தேர்ந்த விமர்சனங்களை அனார் ,  பாயிஸா அலி , றியாஸ் குரானா செய்திருக்கிறார்கள். நான் விமர்சகன் அல்ல. முதலில் , எழுத்தாளனே அல்ல. என்ன காரணத்தாலோ என்னைப்போன்ற புண்ணாக்கிற்கு தன் புத்தகத்தை அனுப்பிய (இதுவரை கிடைக்கவில்லை. சிங்கள சதி!) அறபாத்தின் அன்புக்கு நன்றி கூறுகிறேன். மோதிரக் கையால் குட்டு வேணுமாம்! இந்த கிண்டல்தானே வேண்டாங்குறது , நானா ஒரு  முடவனாயிற்றே தம்பி..!
தொகுதியின் மிகச்சிறந்த கதையாக ‘ரெயில்வே ஸ்ரேஷன்’ கதையை ஹனீஃபாக்கா தேர்ந்தெடுத்து, ஆபிதீன் பக்கங்களில் பதியவும் சொன்னார். இதோ! மற்ற கதைகள் பற்றி பிறகு. இந்தக் கதை யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, இணையற்ற பல ‘அப்பங்களை’ இணையத்தில் தொடர்ந்து பார்க்கும் ‘இளைஞர்’ ஹமீது ஜாஃபர் நானாவுக்கு ரொம்பவும் பிடிக்கும். ஏனெனில் ‘வண்டப்பம் வண்டப்பம்’ என்று கோமதி கூவி விற்கும்போது ‘ஆ என்டப்பம் என்டப்பம்’ என சத்தம் வைக்கிறார் குத்தூஸ்!
‘அக்காலத்திற்கென ஒரு ஐஸ்வர்யம் இருந்தது..’ என்ற ஒற்றைவரியில் எல்லா வேதனைகளையும் சொல்லிவிட இயல்கிற அறபாத்தின் எழுத்துக்கு ஒரு சல்யூட்.
நீங்களும் அண்ணார்ந்து பார்க்கலாம்!
***

ஹமீது ஜாஃபர் சொன்னது,

அக்டோபர் 28, 2010 இல் 6:48 மாலை
புலி எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடிப் பாயும் என்பார்கள். ஹனிபாக்கவோட சிஷ்யபிள்ளை எப்படி இருப்பார்? அருமையான ஒரு கதை. எதார்த்தத்தை எளிமையாக சித்தரிக்கிறார் அறபாத். உண்மையின் வலியை மகிழ்ச்சியுடன் சித்தரிப்பது சாமானிய காரியமல்ல. அதில் வெற்றியும் கண்டுவிட்டார் மிஸ்டர் அறபாத். வாழ்த்துக்கள்.
ஆபிதீன் இணையத்துலெதானே அப்பத்தோட வரலாறு தெரியுது. அதுலெ சொல்றபடி செஞ்சு திண்டுபாருங்க, அப்புறம் மறக்கமாட்டீங்க. ஞான் கழிக்கும் அப்பன்னு பரஞ்சா, வெள்ளப்பம், நெய்யப்பம், பாலப்பம், பின்னே வைகு நேரம் பழம்பூரி. அப்புறம் நம்மப் பக்கம் சாதா ஆப்பம், ப்ராஸாப்பம், தேங்காப்பாலாப்பம், இடியாப்பம், வட்டுலாப்பம். சாயந்தரம் வாழைக்கா பஜ்ஜி

நாகூர் ரூமி சொன்னது,

அக்டோபர் 28, 2010 இல் 10:08 மாலை
ரொம்ப சிறப்பான கதை. போகிற போக்கில் சொல்லிச் செல்கிற சிங்கள வன்முறை பதற வைக்கிறது.

 பார்க்க: 

அண்ணாந்து பார்க்க வைத்த அறபாத் கதை

---------------------------------------------------------
நூல் அறிமுகம் 
றியாஸ் குரானா
கதைகள் சொல்லவும்,கேட்கவுமான சூழலில் இருக்கிறோம்.ஏதோ ஒருவகையில் ஒழுங்கு படுத்தி அல்லது ஒழுங்கின்மையை உருவாக்கி எழுதப்படுபவைகளை மாத்திரமே கதைகளாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.எழுத்துக்கு வராதவைகள் கதைகள் என்ற பேச்சுக்குள் தவிர்க்கப்படுகின்றன.பல பிரிவுகளில் கதைகளை வைத்து வாசிப்புச் செய்வதும் பேசுவதுமான ஒரு மன அமைப்பை வரித்துக்கொண்டிருக்கிறோம்.அவைபற்றிய பேச்சுக்களை இங்கு அவசியப்படுத்த விரும்பவில்லை.
அறிவியல் வெளி மற்றும் பிற சமூகவெளி எல்லாமே கதைகளால் நிரம்பியவைகளே.கதைகளால் உருப்பெற்றும் கதைகளால் அழிந்தும் பெருகிவரும் நினைவுகளின் நீட்சியில் மனிதனுக்கான இருப்பு அமையப்பெறுகிறது என்பது நாமறிந்ததே.
கதைகளை உண்மையின் இடத்தில் வைத்து வாசிக்கப்படும் ஒரு சிந்தனை அமைப்பு இன்றும் தமிழில் கவன ஈர்ப்பை பெற்றுக்கொண்டுதானிருக்கின்றது.அல்லது உண்மையை எள்ளளவும் குறைவின்றி பிரதிபலிக்கும் ஆற்றல் கதைகளுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது.ஒரு அனுபவத்தின் சாரமாக தாங்கிச் செயற்படும் திறன் கதைகளிடம் இருக்கின்றன என்று நம்பும் எழுத்துச் செயற்பாட்டாளர்கள் அதிகரித்தபடிதான் இருக்கிறார்கள்.
90களுக்குப்பின் ஈழத்து இலக்கியப்பரப்பில் கதை சொல்லத்தொடங்கியவர் ஓட்டமாவடி அறபாத். பலமுனைகளிலுமிருந்து முஸ்லிம்கள் நெருக்குவாரத்திற்குள் உட்படும்போது,அதன் எதிர்க்குரலாக உரத்து ஒலிக்கத்தக்க கதைகளை அதிகம் எழுதியவர்.
நேரடி நிகழ்வின் அவதானங்களையும்,துயரச் சம்பவங்களையும் கொண்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்திவிடுபவைதான் இவரது கதைகளின் பணி.ஏதோ ஒரு உண்மையை சொல்லுவதாக உணர்த்தும் தன்மையில் பேசிக்கொண்டிருப்பவை இவரின் கதைகள்.
இவருடைய கதைகளில் வசிக்கும் மனிதர்கள் பெரும்பாலும் ஒழுக்கத்தை நம்புபவர்களாகவும், அதன் பிரதிநிதிகளாகவும் தம்மை அடையாளப்படுத்த எத்தனிப்பவர்கள்.ஒழுக்கத்திற்கு எதிரானவற்றை புறமொதுக்கும் மனிதர்களும் அவர்களுக்கிடையிலான உறவுகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட உலகம் இவருடைய கதைகள்.
தினசரிப் பத்திரிகையின் செய்தி போன்று நேரடித்தன்மையும் எளிமையும் நிரம்பிய மொழியை கொண்டு கதைகளை பேசுவன.இந்த மொழியமைப்பைக் கொண்டு கதை சொல்லுதலை சாத்தியப்படுத்தியிருப்பதே இவரின் உழைப்பும் அதன் வெற்றியுமாகும்.புனைவுகளின் பல்வகைச் சாத்தியங்களை இவர் முயற்ச்சிக்கவில்லை.
அவலங்களும்,அச்சங்களும்,துயரங்களும் நிரம்பிய சமூகப்பரப்பில்,புனைவுச் சாத்தியங்களை முயற்ச்சிப்பதைவிட ஒரு களப்பணியாளரின் வேலையைச் செய்வதே உசிதம் என தனது செய்தியை தெளிவாக வெளிப்படுத்துகிறது இவருடையகதைகள்.
போர்க்காலங்களில் ஈழத்து முஸ்லிம்கள் மத்தியில் மிகப் பிரதானமான போராயுதமாகவும்,தற்காப்பு உத்தியாகவும்,மக்களை விழிப்பூட்டும் பணியாளாகவும் செயற்பட்டது- துண்டுப்பிரசுரங்களும்,சுவர்ப்பத்திரிகைகளும்தான்.இவை உடனடி உணர்வூட்டலையும்,இதனால் நிகழக்கூடிய விளைவுகளையும் கோருபவையாக இருந்தன.துண்டுப்பிரசுரங்களின் இவ்வகைப் பணியை மிக நேர்த்தியாக கதை சொல்லலின் உத்தியாக மாற்றியிருப்பது,இவருடைய கதைகளுக்கென்று ஒரு தனித்த வெளியை உருவாக்கித்தந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
எதிர்பாராமல் பெய்த மழையால் பெருக்கெடுக்கும் வெள்ளம் மிக மெதுவாக வடிந்து செல்லுவதைப்போன்ற ஒரு வேலையை வாசிக்கும் கணங்களில் ஏற்படுத்தும் தனித்த வெளியை உருவாக்கியிருக்கிறது இவருடைய கதைகள்.
எளிமை ததும்பும் நேரடியான மொழி,கதைகளை சிலநேரங்களில் செய்திகளைப்போன்று உருமாற்றியும் விடுகின்றன.அதற்கு உதவியாக இவருடைய கதைக்குள் அறிவுரை கூறும் ஒரு குரல் மறைந்திருந்து கதைநெடுகிலும் ஓயாமல் பேசியபடியே இருக்கின்றது.
உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி: செய்திகளாகவும் கதைகளாகவும்; உரு மாறி மாறி பெருக்கெடுப்பவை.

உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி
சிறுகதைத் தொகுப்பு
ஓட்டமாவடி அறபாத்
வெளியீடு:அடையாளம் பதிப்பகம். 
பார்க்க:
மாற்றுப்பிரதி இணையம்


 -----------------------------------------------------------------------------
காலச்சுவடு இணையத்தளத்தில் வெளிவந்த மதிப்புரை 



உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி
அனார்
வாழ்க்கையால் எழுத்தை அர்த்தப்படுத்திக்கொள்வதும் எழுத்தால் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவதும் நேர்மை மிக்க எழுத்தாளர்களின் முக்கியப் பணியாக அமைந்து வந்திருக்கிறது. திட்டமிடல்களால் உருவாகக்கூடியதன்று இலக்கியச் செயற்பாடு. ஓர் எழுத்தாளனுக்குள் இயல்பாகவே அது உருவாகி இருக்கக்கூடியது. வெறும் கனவுகளில் மாத்திரம் மிதக்கின்ற எழுத்து வகைகளுக்கும் வாழ்வைப் படைத்தளிக்கின்ற இலக்கியத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் இருக்கின்றன. இங்கே எழுத்துப் பணியின் சாரங்களில் ரசனை நுகர்ச்சியாக ஒன்றும் உன்னதமான நீடித்த அனுபவச் சாரம் மற்றொன்றுமாக நம்மிடையே எஞ்சுகின்றன.
உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி
(ஈழத்துச் சிறுகதைகள்)
ஆசிரியர்:
ஓட்டமாவடி அறபாத்
பக்.: 207 விலை: ரூ. 130
முதற்பதிப்பு: 2008
வெளியீடு:
அடையாளம்
1205/1, கருப்பூர் சாலை
புத்தாநத்தம் - 621 310
அனுபவங்களிலிருந்து தோன்றுகின்ற படைப்புகளே நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன. பதிவாகவும் பின் வரலாறுகளாகவும் மாறுகின்றன. காலத்தின் சாட்சியாகவும் தோன்றி நிலைக்கின்றன. உண்மையினது அசல் பிரதிகள் என்பவையின் உயிர்ப்பான உலகம் காலத்தைச் சுற்றி வருகின்ற மங்காத சூரிய ஒளியாக என்றுமிருக்கும். அது பிரிக்க முடியாமல் எம்முடனேயே இறுகிவிடும். எழுத்தாளன் பிரதிபலிப்பாளனாக இருக்கின்றான். வாசகர்களைக் கற்றுக்கொள்பவர்களாக மாற்றுகின்றான் அல்லது அதற்குத் தூண்டுகிறான்.
உணர்வு என்பது அறிவை முந்திக்கொண்டு பீறிடுகின்றது. அறபாத்தின் நோக்கம் மனிதர்களை நோக்கி உயர்ந்துள்ளது. அவருடைய உணர்வுகளே முதலில் முந்திக்கொள்வதை, அவரது கதைகள் காட்டி நிற்கின்றன. என்னைப் பொறுத்தவரை மனிதர்களுடைய அந்தரங்கத்தை, மனச்சாட்சியைப் பிறாண்டிக்கொண்டிருக்கக் கூடிய கூர்விரல்கள் அவரது எழுத்துக்களுக்கிருக்கின்றன. அவருக்கு எதைச் சொல்ல வேண்டும் எவ்விதம் சொல்ல வேண்டும் எனத் தெளிவாகத் தெரிகின்றது. அத்தகைய எழுத்து வடிவங்களின் வெவ்வேறு மாதிரிகள் இத் தொகுப்பில் உள்ளன. அவரது அரசியல், சமூகம், சமயம், இலக்கியம் ஆகிய கண்ணோட்டங்கள் தனித்தனியாக, அதனதன் தனித்தன்மைகள் மற்றும் தெளிவுகளோடு அமைந்துள்ளன. அதுவே எழுத்தின் மிகச் சரியான, வலுவான தருணம்.
அறபாத்தின் எழுத்துக்கள் அவரை நிறுத்தியிருக்கும் இந்தப் பருவகாலம் மிகுந்த அழகான கார்காலம் என நான் நினைக்கின்றேன். எழுத்துச் செயற்பாட்டின் மிக முக்கியத் தருணங்களை அவர் தவறவிடாமல் அவற்றை முறையாகக் கையாண்டுமிருக்கின்றார்.
சகமனிதனையும் அவனது மன அடுக்குகளையும் துல்லியமாகப் பார்க்கத் தெரிந்து வைத்திருக்கின்றார். மனித மனத்தின் அனைத்து விவகாரங்களும் அதன் கவர்ச்சியான லயங்களும் அறபாத்தின் எழுத்துக்களில் ஆரவாரமில்லாமல் வந்து அமர்ந்துள்ளன. எப்போதும் தனக்கு இசைவான செல்லப் பிராணியைப் போல் கதைகளை அவர் வளர்க்கின்ற அல்லது பராமரிக்கின்ற பக்குவம், அதன் கலைத்தன்மை பாராட்டத் தகுந்தது.
சமூகத்தின் நிறைவு அதன் திருப்தி என்பது தனிமனித வாழ்வின் அமைதியில்தான் தொடங்குகின்றது. ஒவ்வொரு வாழ்வும் ஒவ்வொரு உலகம். அன்பும் தோல்வியும் வெடிப்பும் விரிசலும் ஏமாற்றமும் துரோகமும் சிதைவும் இசையும் கொண்டதாகவே வாழ்வு இருக்கின்றது.
இங்கு ஓர் எழுத்தாளனின் பணி தீர்வு சொல்வதல்ல, யாருக்கு எதை உணர்த்த முடியுமோ அதை உணர்த்துவது. மேலும் ஒருபடி உயர்ந்து “தீமை எங்கே தொடங்குகின்றது?” என்ற கேள்வியைக் கேட்பது.
இத்தகைய சில கேள்விகளையும் இவரது எழுத்தின் அரசியல் வெளிப்படுத்தியிருக்கிறது. எந்தவொரு சட்டகங்களுக்குள்ளும் நுழைந்து பிதுங்காமல், கிராமத்து ஆற்று நீரோடையைப் போன்று அறபாத்தின் கதை வெளிப்பாடுகள் மிக மிக இயற்கையானவை. நீரில் விழுந்து மிதக்கின்ற பூக்களும் இலைகளுமான ரம்மியங்களும் கரைகளில் சேர்ந்திருக்கும் அழுகலும் துர்நாற்றங்களும் அருகருகிலேயே இருக்கின்றமை இதன் முக்கியமான அம்சம்.
அறபாத்தின் படைப்புலகைக் கவனித்துவந்த கடந்த காலங்களுக்கும் இனி வரும் காலங்களில் பெறப்பட இருக்கின்ற கவனிப்புகளுக்கும் அவை கொண்டிருந்த அர்த்தங்களுக்கும் முற்றிலும் வெவ்வேறு அர்த்தங்கள் இருக்க முடியும். இனி வரும் காலங்களில் இதைக் கண்டடைய வாய்ப்பிருக்கின்றது.
வாழ்வின் திருப்பங்களில் அடிபட்டுப் போகின்றவர்கள்மீதான அக்கறைகளைவிட எது முதன்மையாக முடியும் ஒரு படைப்பாளிக்கு? வாழ்வுதானே கதை, கவிதை, கலை எல்லாம் நாம் அனைவரும் ஒரே மாதிரி இருப்பினும் அனைவரும் எப்படி ஒருவராக முடியும்? அந்தக் கேள்விக்கான விடையைத் தேடிச்செல்லும் அறபாத்தின் கதைகளில், அவரைச் சுமந்து செல்லும் மாட்டுவண்டியின் வியர்வையும் மண்ணின் “கரகர” ஒலியும் நமது காதுகளின் ஜன்னல்களைத் தட்டுகின்றன.
சோமாவின் தனிமை, துறவிகளின் அந்தப்புரம் என்ற கதைகளின் முடிவுகள்... வேட்டை, மோட்சம், ஜின், தனிமை போன்ற கதைகள் எழுதப்படுவதற்கான பின்புலங்கள், இக்கருப்பொருள் சார்ந்திருக்கும். அக்கறை என்பது கதைகளைவிட உன்னதமான ஒன்று. அந்த உன்னதம்தான் அறபாத்தின் மீதான மரியாதையை உயர்த்துவதாக எனக்குத் தோன்றுகிறது.
அடுத்து, வெளிப்படையான யுத்த கால நெருக்கடிகள் மற்றும் அதனூடான தாம் சார்ந்த சமூக, மனித அவலங்களை அரசியல் தீர்க்கத்துடன் எழுதிய கதைகளாவன: தேர்தல் காலக் குறிப்புகள், ஓணான்கள், திசைகளின் நடுவே, கழுதைகளின் விஜயம், மறுபடியும், ஆண்மரம், அரங்கம் ஆகிய அரசியல் விமர்சனரீதியிலான கதைகள். இவற்றுக்குச் சரிநிகரானதும் மற்றொரு போர்க்களமானதுமான மன உலகைப் பிரதானப்படுத்துகின்ற சிறுகதைப் பிரதிகளாகச் சாட்சியங்களாகின்றன.
அவரது எழுத்தின் அறமும் அறபாத் என்ற மனிதனும் வேறு வேறல்ல என்பதை இவ்விடத்தில் அழுத்திச் சொல்ல முடியும்.
அடுத்ததாக, சிறுகதை முன்னோடிகளின் ஆகச் சிறந்த கதைகளுடன் வைத்துப் பார்க்கத் தக்க கதைகள் என நான் கருதும் கதைகளைக் குறிப்பிட விரும்புகிறேன். இத்தொகுப்பில் முழுமையான சிறுகதைத் தன்மையைக் கொண்டிருக்கின்ற அக்கதைகள்: மூத்தப்பாவின் மாட்டுவண்டி அடுத்தது ரெயில்வே ஸ்டேசன். நினைந்தழுதல், மூத்தம்மா ஆகியன ஒரு தேர்ந்த வாசகனை ஆகர்சிக்கும் தன்மைகளைக் கொண்டமைந்தவை. இக் கதைகள் நவீன மொழியும் பாரம்பரிய மொழியும் சேர்ந்து ஒன்று கலந்துள்ள நேர்த்தியான கலை உருவம் எனலாம். கலை என்பது மிகப் பெரிய போட்டி சிருஷ்டி என்பதைப் படிப்பவன் மனத்தில் உறையவைக்கும் படைப்புகளாகும் இவை.
வித்தியாசமான புது எழுத்து முயற்சியாக ஏவாளின் தோட்டத்தில் கனிகள் மிச்சமிருக்கின்றன அமைந்துள்ளது. கனவுத் தன்மை நிறைந்த கவிதை மொழியுடனான கதை கூறல், வாசிப்பனுபவத்தை மணமாக்குகின்ற கதை இது.
பின்பொரு நாளில், அவர் திரும்பிப் பார்க்கும் ஆழ்ந்து மூச்சுவிடக்கூடிய அனேகக் கதைகளைத் தந்திருக்கின்ற ஒரு நிறைவே இப்போதைய அவரது வெற்றியுமாகும்.
முன்முடிவுகளற்றுப் பாத்திரங்களைக் கையாண்டுள்ளமை, பெண்களை “அவள்களாக” உலவவிட்டமை, இவராகச் சலுகைகளையோ கட்டளைகளையோ தராத எழுத்து நேர்மை சிறுகதைகளுக்கு வலுவூட்டியுள்ளன.
இலங்கையின் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் நிராகரிக்க முடியாத காலத்தின் பதிவுகளாக இக்கதைகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. வாழ்வின் உள் முகங்களைக் காட்டும் ஒவ்வொரு உடைந்த கண்ணாடிகளிலும் மறைந்திருக்கும் குருவி அச்ச மூட்டக்கூடியது, வன்மம் மிக்கது, அழகின் மாயம் காட்டுவது. உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி.



  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...