Wednesday, 27 April 2011

மறைந்திருக்கும் குருவியின் மறையாத குரல்

இலக்கியத்தளத்தை காலம் நிச்சயித்து வந்திருக்கின்ற காலத்தில்,காலத்தின் பெறுமானத்தை இலக்கியங்கள் விம்பங்களாக்கி விடுகின்றன.காலத்திக் மகா பிரதிநிதியாக இயங்குபவன் இலக்கியக்காரன். அவன் உணர்வும், உவகையும் இலக்கியடமும் தாகமும் கொண்ட உயிரி.

மண் புழுவொன்று மண்ணைத்துளைத்துக்கொண்டு உள் நுழைந்து செல்வது போல மானுட தாகத்தால் உணர்வு பொங்க வாழ்வின் குறுக்கு முகத்தில் பயணிப்பவன் இலக்கியக்காரன்.

அத்தகைய பயணிப்பின் பிரதிபலிப்புத்தான் படைப்பு.படைப்புக்களில் சிறுகதை ஒரு மகா வடிவம். இது தனக்கென புதிய புதிய வடிவத்தைத்தேடித்தேடி திளைக்கிறது.

பழைய கதை மரபுகளை உடைத்துக்கொண்டு கதையின் கட்டுமானங்கள்,நுட்பம் இழையோடும் மொழியாட்சி,கருயுதி என வடிவமற்ற வடிவமாய் கதை வெளி விரிவு பெறுவதனை தமிழ் மொழிச்சிறுகதைப்பரப்பிலும் கானுகிறோம்.

கதை சொல்லி முக்கியமான ஆளுமையாக நம் மன் முகம் காட்டுகிறான்.நமது முஸ்லிம் கதை சொல்லிகளில் இத்தகைய நவீன பரப்புக்குள் இயங்குகின்ற சிலரில் சிலாகிக்கத்தக்கவராக மேற்கிளம்புகிறவர் ஓட்டமாவடி அறபாத்.

அறபாத் எண்பதுகளுக்குப்பின்னரான எழுத்துத்தளத்தில் முனைப்போடு வெளிப்படுபவர்.கவிதை,கதை,விமர்சனம்,ஆன்மீகம், என பல தளங்களில் செயற்படுபவர்."எரி நெருப்பிலிருந்து",    "வேட்டைக்குப்பின்" ,இவர் கவிதையில் ஓய்ந்து விட்டாரோ என ஊகிக்கத்தக்தெனினும்,கதை சொல்லலி்ல் அறபாத் புதிய குரலோடு பரிமளிக்கின்றார். 'நினைந்தழுதல்', "ஆண்மரம்' , திரட்டுக்களின் வழியே உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி யாக புதிய தொனியுடன் வெளிக்கிளம்புகிறார் அறபாத்.

அறபாத்தின் எழுத்து வீச்சார்ந்தது.உணர்வு பொங்கிப் பிரவகிப்பது.சொல் நுட்பத்தால் வாசகரை இழுக்கும் மந்திரம் மிகுந்தது,யதார்த்தமானது: தொய்வற்ற நகர்ச்சித்தனம் உடையது. இத்தகைய கட்டிறுக்க மொழியூடாக அறபாத் சொல்ல முற்படும் கதைப்பொருள் நமது சமூகத்தின் பிரதி விம்பமாக இருக்கின்றது. எனவேதான் அறபாத் முஸ்லிம் கதைப்பரப்பில் நவீன கதை சொல்லியாக தெரிபடுபவர்களில் முக்கியமானவராக நமது கவனிப்பை ஈர்க்கின்றார்.

உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி- அடையாளம் பதிப்பகத்தால் அடையாளம் காணப்பட்டது.முஸ்லிம் சமூக முன்னோடி வாப்பிச்சி மரிக்காயருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூலில்  'கழுதைகளில் விஜயம்' முதலாக 'ஏவாளின் தோட்டத்தில் கனிகள் இன்னும மிச்சமிருக்கின்றன.' வரையான 32 கதைப்பிரதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே வாசிக்கப்பட்ட கதைகள் இதனுள் அடங்கினும் மீள வாசிக்கின்ற போது மேலும் புதிய வாசிப்புத்தளம் விரிவடைகின்றது என்ற வகையிலும் இப்பிரதிகள் அவதானத்திற்குட்படுகின்றன.

உள்நிலை அரசியல் சின்னத்தனங்கள்,வன்முறையின் கொடூரமான அடையாளங்கள்.பெண்ணிலை வாழ்க்கை ,சமூக வாழ்வின் அன்றாட அவலங்களின்  கோலம், அன்பி்ன் அடைய முடியாத ஆழம், கனவுகள் ,ஏக்கங்கள்,பரவசங்கள் என சமூக வாழ்வின் கதைப்பொருள்கள் அமைகின்றன.

 ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் உடைந்த கண்ணாடியாய்த்தான் இருக்கிறது.அந்தக்கண்ணாடியில் ஏதோ ஒரு விதத்தில் அவனது இயக்கம் மறைந்திருக்கிறது என்பதானாலோ என்னவோ அறபாத்தின் கதை மாந்தர்களும் உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவியான நமது வாசிப்பில் வெளிப்படுகிறார்கள்.

அறபாத் தேர்ந்த வாசிப்புடையவர்.தீராத தேடலுடையவர்,நுட்பம் மிக்க இலக்கிப்பார்வை மிக்கவர். என்பதனை அவரது கதகளை தொகுத்து வாசிக்கும் போது இனங்கான முடிகிறது என்பதனால் நமது முஸ்லிம் கதைப்பரப்பில் இன்னுமு புதிய பாய்ச்சல்களை அறபாத் ஏற்படுத்துவார் என நம்பிக்கை கொள்வது வீணாகப்போவதில்லை.

-மர்யம்.

நன்றி : விடி வெள்ளி மார்ச் 31

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.