Thursday, 29 December 2011

சிறுகதை - மூன்று பூனைகள் பற்றிய ஏழு குறிப்புகள்

          
24.08.2004

பூபாலசிங்கம் புத்தக நிலையத்திற்கு செல்ல வேண்டும். செட்டியார் தெருவில் நடந்துகொண்டிருந்தேன். பொன்னந்தியில் செட்டித்தெருவில் நடப்பதே பெரும்பாடு. கோயில்கள் நிறைந்த வீதி மருங்கில் ஆராதனையும் ஊதுபத்திப்புகையும், மணியோசயும் ஒரு கதம்பமாய் தெருவில் கவிந்திருந்தது. கூந்தலில் பூக்கள் மலர்ந்த பெண்கள் மகிழ்ச்சியுடனும் பக்திப்பரவசத்துடனும் கோயில் நடையில் காத்திருந்தனர். 
 
அப்போதுதான் யதேச்சையாக கவனித்தேன். இரண்டு பூனைகள் எதிரே வந்து கொண்டிருந்தன. இரண்டும் எனது கிராமத்தின் மண் வீட்டு பீலிக்குள் முன்பு வாழ்ந்தவை.ஒன்று வரண்டு மெலிந்திருந்தது. பஞ்சத்தில் பாவப்பட்ட ஜீவன். மற்றதோவெனில் மொழுமொழுவென்று கொழுத்த கடுவன். சோற்றுக்கடை பூனை என்பார்களே அதைப்போல.

செட்டிநாட் ரெஸ்டுரன் அருகில் ஓடும் வடிகாலுக்கு அண்மையில்தான் இரண்டையும் கண்டேன்.உழுந்து வடையும் பசுப்பாலும் குடித்து விட்டு கடைவாயை நாவால் துழாவியபடி  துர்நாற்றம் வீசும் ஓடையண்டையில் குந்தியிருந்தன. நீள் மீசையில் பாலின் நுரை உறைந்திருந்தது.

ஜெயகாந்தனின் அக்ரகாரத்துப்பூனைகள்போல் அளவிற்கு சுட்டியில்லாத ஆனால் விசமம் நிறைந்த பூனைகள். ஒன்று திருட்டுப்பூனை மற்றதோ கருப்புக்கடுவன். ஊரில் இளைஞர் வட்டாரத்தில் அதை 'சரக்கு மாஸ்ரர்' என்றும் அழைப்பதுண்டு.

09.10.2004

நிலா மெலிந்து போன வானத்தின் பேரழகு ஜெக ஜோதியாகத்தெரிந்தது.
வெளிநாட்டுப்பறவைகள் வானத்தில் வட்டமிட்டபடி வினோத ஒலிகளை உதிர விட்டன.

எலிகள் வீதி மருங்கில் கீச்கீச்சென சுற்றித்திரிந்தன.ஒரு நாற்பது தடவையாவது சுகாதார பரிசோதகருக்கு மனுப்போட்டிருப்பேன். எலிகளை கொல்வதற்காக அவர்கள் எதனையும் செய்யவில்லை.ஆபத்தான எலிகாய்ச்சல் போல் பூனைகளால் ஒரு வியாதி வராதா என மனம் குரூரமாய் எண்ணத்தொடங்கியது. எதிர்வீட்டு மதில்மேல் பூனையைப்பார்த்தேன். திருட்டு முழி மிகைத்த பூனை.

மதாரின் தியத்தலாவ இறப்பர் தோட்டத்தில் இறப்பர் மரங்களில் வெட்டுண்டு தேங்கிக்கிடந்த இறப்பர் பாலை,பசும்பால் என நினைத்து அருந்திவிட்டு தொண்டை இறுக தோட்டம் முழுக்க ஓடித்திரிந்தது.பின், காவலாளிகளால் நையப்புடைக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பூனை. அதனை நான் அடையாளம் கண்டு கொண்டதை அது கவனித்ததாக  தெரியவில்லை. எலி பிடிக்கத்தான் காத்திருந்தது.


நிலவு வெளிச்சத்தில் பூனையின் கண்கள் கபடமாக சுழன்று மின்னின.நட்சத்திரங்கள் சிதைந்து கிடந்த வானம் பிரகாசத்தை விசிறிக்கொண்டிருந்தது. சக்தியில் கோலங்கள் அபியின் விசும்பல் சில வீடுகளில் பிசுபிசுத்துக்கொண்டிருந்தது. தெருவில் காலாற நடக்கின்றேன்.

இரு பெண்கள் மதிலை உரசினாற்போல் வந்து கொண்டிருந்தனர். பேச்சு சுவாரஸ்யத்தில் அவர்கள் எதிரில் வந்த என்னையும் மதில்மேல் பூனையையும் பொருட்படுத்தவில்லை. “அந்தா மனுசனில பாயுர பூன பார்த்துப்போங்க” அவர்களின் முதுகுக்குப்பின் எனது குரல் காட்டமாக விழுந்திருக்க வேண்டும்.சாட்டையால் தாக்குண்டவர்களைப்போல் அவர்கள் வீதியின் நடுவே பாய்ந்து வேகமாக பூனைகளைக் கடந்து போயினர். மதில்மேல் பூனை என்னை முறைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது.


10.12.2004

மாலை அலுவலகத்திருந்து வீடு திரும்பியிருந்தேன்.முற்றத்தில் போகன்விலா இலைகள் தெரியாமல் பூத்துக்கிடந்தது. அட காலையில் புறப்படும்போது கவனிக்க மறந்த சௌந்தர்யம்.வீடு மருங்கிலும் பூக்கள் சிரித்தபடி தலையாட்டின.அவள் தேனீருடன் ஒரு கடிதத்தையும் கொண்டு வந்து நீட்டினாள்.அருகில் வந்து அமர்ந்தவளின் முகத்தில் பனியில் நனைந்த ரோஜாவின் குளிர்மை ஊறியிருந்தது. தேனீரை உறிஞ்சியபடி ஓரக்கண்ணால் அவளை இரசித்தபடி மாலையில் பூத்த மகிழம்பூ என்றேன். செல்லமாக முறைத்தபடி பெரிய கவிக்கோ என்ற நினைப்பு என்றாள். அதை இரசித்தபடி கடிதத்தைப்பிரித்தேன்.


எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறவிருக்கும் பூனைகளின் மாநாட்டுக்கான அழைப்பிதழ் . மாநாட்டு அஜன்டாவில் சில குறிப்புகளும் சேர்க்கப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு வருகை தருபவர்கள் முன்கூட்டியே அறிவிப்பதற்கென  RVS என்ற அடிக்குறிப்புடன் ஒரு தொiபேசி இலக்கமும் குறிக்கப்பட்டிருந்தது. 
 
முழுநீழ வெள்ளை சேர்ட், கருப்புக்கலரில் காற்சட்டை மற்றும் கழுத்து டை அணிந்திருக்க வேண்டும். வேட்டையாடுவதில் முன் அனுபவம்,பிறர் வீட்டில் குறிப்பாக தனக்குப்பால் வார்த்த வீடுகளில் சமயோசிதமாக திருடும் சாணக்யம் தெரிந்திருக்க வேண்டும். பெண் பூனைகள் அவசியம் அழைத்துவரல் வேண்டும். சப்தமின்றி கலவிசெய்வதற்கான கருத்தரங்கும் செய்முறைப்பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. கலவிக்கான முன் ஆயத்தங்களுடன் வருபவர்களுக்கு இரகசிய லொட்ஜ் ஏற்பாடுகள் உண்டு (இதில் சிபாரிசு, சலுகைகள் இரத்து)


ஆகக்குறைந்தது ஒரு பூனை பத்து நண்பர்களை அழைத்துவர அனுமதி வழங்கப்படும். எனினும் அனைவரும் மாநாட்டுத்தீர்மானங்களுக்கு இசைவானவர்களாகவும் விசுவாசிகளாவும் நடந்துகொள்ள வேண்டும். 
 
 
தவிர்க்கப்படவேண்டியவை: தூய்மையான கற்பு பற்றி பேசுவது. வாய்மை நேர்மை குறித்துப்பேசுவது, இலஞ்சம் ஊழலுக்கெதிரான சிந்தனை, இலக்கியத்திருட்டுக்களை ஆராய்தலும், அம்பலப்படுத்தலும். பிறருக்கு முதுகுசொரிவதை கிண்டலடித்தலும் காக்காய்பிடித்து கூஜா தூக்குவதை அயோக்கியத்தனம் என ஏளனம் செய்வதும் மற்றும் பல…
 
 
ஊர் பெயர் தெரியாத பூனைகளின் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தன. விN~ட அதிதியாக வேலையற்ற ஒரு பூனையின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அவள் வேறு சுவாரஸ்யமான கதைகளைக் சொல்லிக்கொண்டிருந்தாள்.எல்லாம் பூனைகளின் மகான்மியம்.


15.03.2005

நள்ளிரவு விழிப்புத்தட்டிவிட்டது. மனைவி அருகில் ஆழ்ந்த உறக்கம்.சீரான மூச்சில் மார்புகள் ஏறி இறங்கி அழகுகாட்டின.சின்ன மகள் அவளின் வலது கையில் முகம் புதைத்து படுத்திருந்தாள். அவளைப்பார்த்துக்கொண்டிருக்க மகிழ்ச்சி பூரித்தது. துயிலும் தருணத்திலும் முகத்தில் பாவும் சிரிப்பில் வீடே ஒரு நிலாக்காடாக ஒளியில் நனைந்து கொண்டிருந்தது.


பாத்றூம் சென்று விட்டு நீர் அருந்தினேன்.சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சப்தம் கேட்கவே எழுந்து போய் சுவிற்சைப்போட்டேன். கரிச்சட்டியை கால்களால் பிராண்டியபடி அந்தப் பூனை நின்றிருந்தது. கன்னங்கரேலென்ற கருப்புப்பூனை.அதன் விழிகள் தீக்கங்குகளாக ஜொலித்துக் கொண்டிருந்தன. வெள்ளைப்புள்ளிகள் ஏதுமற்ற சுத்தமான கருப்பு. அதனைப்பார்க்கப்பார்க்க மனசில் நடுக்கமெடுத்தது, மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. தலை விறைக்கத்தொடங்கியது. 
 
 
அது என்னையே விறைத்த விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தது. கருப்பு மீசையின் இடைவிடாத துடிப்பு மரணத்தை நினைவூட்ட நடுங்கும் கரங்களால் புசூ என்றேன்.ஒரே தாவலில் திறந்திருந்த ஜன்னல் வழியால் குதித்து ஓடியது. மிகுந்த எச்சரிக்கையுடன் பதுங்கி ஜன்னலண்டை சென்று  அதை இழுத்து மூடி கொக்கியைப்போட்டேன்.இரவு அதனை மூடாமல் படுத்த அவளின் மேல் கோபமாய் வந்தது. கருப்பு மீசையின் இடை விடாத துடிப்பு என்னை அந்தரப்படுத்தியது.


திக்குத்தெரியாமல் தனித்துவிடப்பட்ட ஒரு பூனைக்குட்டியாய் சமையலறையில் திகைத்து நின்றேன்.வீட்டுக்கூரையில் சரசரவென்று பூனைகளின் காலடித்தடங்கள் என் காதை அடைத்தது. இன்னும்  பல பூனைகள் என் ஜன்னலில் வழி நுழையக்காத்திருக்கவேண்டும். கால்கள் நடுக்கத்தில் தள்ளாடின. அசுத்தமான இடங்களில் மட்டும் பார்த்துப்பழகிய அவற்றின் விகாரம் என்னை கலவரப்படுத்தியது. கருப்பின் மீது முதற்தடவையாக அச்சம் தொற்றிக்கொள்ள உடம்பு முழுக்க வியர்வையில் பிசுபிசுத்தது.படுக்கையில் வந்து விழுந்த போது புரண்டு படுத்த மகளின் பிஞ்சுக்கரங்கள் என் மார்பில் படர்ந்தன.


26.08.2005

காலை 10.45 இருக்கும். அலுவலகத்தில் பணியில் மூழ்கியிருந்த சமயம் செல்போன் கூப்பிட்டது. என்னவென்றேன். சென்ற வாரம் பிஸ்னஸ் பார்ட்னராக என்னுடன் இணைந்து கொண்ட நண்பர்தான் லைனில் இருந்தார்.

நீங்க ஜே.பி.யா? என்றார். இல்லை என்றேன். அவருக்கு உதவும் நோக்கில் ஏதாவது சான்றிதழ் உறுதிப்படுத்த இன்னார் இன்னார் ஊருக்குள் ஜே.பி. என்ற தகவலை சொன்ன போது அவர் சப்தமாக சிரித்தார்.ஏன் சிரிக்கிறீர்கள் என்றேன்?  அப்படி ஒன்றுமில்லை உங்களுக்கு ஒரு ஜே.பி பட்டம் எடுத்து தரத்தான் என்றார்.


ஓல் ஐலன்ட ஜே.பி கொழும்பிலேர்ந்து ஒருத்தர் எடுத்து கொடுக்கிறாரு ஒரு ஐந்து இலட்சம் இருந்தா போதும் என்றார். சும்மா கிடைத்தாலும் வேணாம் என்றேன்.பின் சில தகவல்களை சொன்னார் நம்மட ஊருல ஒரு பூனைதான் இதெல்லாம் செய்து குடுக்கிறதாக அரசல் புரசலாக கதை.


ஜே.பிக்கு ஒரு ரேட், பெற்றோலியம் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு ரேட்;,ஹாபருக்கு ஒரு ரேட். கொரியாவுக்கு மட்டும் கொஞ்சம் கூடயாம். ப+னைகளின் திரு விளையாடல் குறித்து நிறையவே சொன்னார். முகத்தில் மயிரடர்ந்த கடுவன் பூனையின் விழிகள் நினைவின் நுனியில் எழுந்து மறைந்தது. எனக்கும் பரிச்சயமான பூனைதான். இந்தப்பூனையுமா  பால் குடிக்கும்? நம்ம மறுத்த எனக்கு ஆதாரங்களை அள்ளி வீசினார்.


 திருட்டுப்பூனைகள் எல்லாம் ஒன்றிணைந்து ஊரையோ ஒருவழி பண்ண சபதம் செய்திருப்பதாகத்தோன்றிற்று. பூனைகளின் பூர்வீகம் குறித்து ஆராயத்தொடங்கினேன்.பாலை காய்ச்சி இந்த சனங்கள் பூனைகளல்லவா காவல் தெய்வங்களாக்கியுள்ளனர்? கிராமத்து வீட்டில் தொந்தரவு செய்யும் பூனைகளை பெரிய சாக்கில் கட்டிக்கொண்டு போய் காட்டில் விடுவதை பார்த்திருக்கின்றேன்.

 தந்திரமுள்ள சில பூனைகள் கூர் நகங்கால் கோணிகளைப்பிறாண்டி வழியெடுத்து மறுபடியும் வீட்டிற்கே திரும்பி விடும்.நண்பர் குறிப்பிட்ட ஜே.பி வியாபாரியான பூனையும் அக்காலத்தில் காட்டில் கொண்டு போய்விடப்பட்ட தறுதலைப்பூனைதான் எப்படியோ தலை நகரத்தில் குடியேறி இப்போது தரகு வியாபாரம் செய்யும் அளவிற்கு வந்து விட்டது. பூனைகளைக்கொண்டு எங்கு வைத்தாலும் அவைகளின் திருட்டுப்புத்தியை ஒழிக்கவா முடியும்?;


08.10.2005

எனது வீட்டின் கூரையில் கடுவனின் முனகல். கலவிக்கான தகிப்பில் ஊரையே அழைத்துக்கொண்டிருந்தது. பெண்ணோவெனில் பிகு பண்ணியபடி கூரையில் அழுந்திக்கிடந்தது.விடுமா கடுவன் குரலை தாழ்த்தி ஆசையில் நெகிழ்ந்தலைத்தது. ஆணின் தேவை உணர்ந்த பெண் பூனை மறுபடியும் பிகு பண்ணி மறுகியது.விடுப்புக்காட்டக்காட்ட மோகம் வெகுண்டெழுந்தது. உள்@ர கிளர்ச்சியுடன் நெருங்கி வரட்டுமே என்ற தவிப்புடன் பெண் பூனை நிலத்தில் தவழ்ந்தபடி மெலிதாக முணங்கியது.சம்போகத்திற்கான ஆனந்த அழைப்பு.

நிலவில் நனைந்த பூமி குளிர்ச்சியாக இருந்தது. தூரத்Nது வாகனங்களின் இடைவிடாத ஹோர்ன் ஒலிகள் காதை அடைத்தன. நடு வீதியில் அசைபோட்டு படுத்திருக்கும் மாடுகளை விரட்டுவதற்கான பிரயத்தனம்தான் அந்த ஒலிகள். கடுவன் மெல்ல நகர்ந்து அதனண்டை ஊர்கிறது. உச்சங்களை தொட விழையும் அதன் இன்பக்கதறலில் அவள் விழித்து விட்டாள். நாணம் பூத்த முகத்தில் அழகு வழிந்து என் நரம்பை நனைத்தது. சப்தமில்லாமல் எனக்குள் ஆயிரம் கடுவன்கள் தவழத்தொடங்கின அவளின் மயங்கிய விழிகளில் வசீகரம் பொழிந்தது.


26.02.2006


ஜே.பி விற்கும் பூனைக்கும் ஏஜென்சி பூனைக்கும் ஒத்துவரவில்லை. வியாபாரத்தில் விசுவாசம் இல்லை என்பதைக்காரணம் காட்டி இரண்டும் ஒன்றை ஒன்று கடித்துக்குதறி விரட்டியபடி விலகிப்போயின.


நான் பூனைகள் பற்றி அதிகம் குறிப்புக்கள் எழுதுவதையும், ஆராய்வதையும் அவதானித்த மனைவி ஏளனம் செய்ய ஆரம்பித்து விட்டாள். இணையத்தில் பூனைகள் பற்றி ஆய்வில் இருந்த நான் அவளின் ஏளனங்களை பொருட்படுத்தவில்லை.
 
தூக்கம் வராத இரவுகளில் பூனைகளின் அரவம் கேட்டு உடம்பு சில்லிடத்தொடங்கும். இணையத்தில் உலா வந்தபோதுதான் சில பூனைகளின் திருட்டுக்கள் அம்பலமாகின. கண்களை மூடிக்கொண்டு பாலை அருந்தினால் பூலோகம் இருண்டு விடும் என்று யாரோ இந்த அசட்டுப்பூனைகளுக்கு சொல்லியிருக்க வேண்டும். பெரும்பாலும் களவிலும்,கலவியிலும் பூனைகளின் இயல்பை மாற்றவே முடியாது என்பதை என் ஆய்வில் கண்டு பிடித்திருந்தேன்.
 
 
எனது ஆய்வுகளை பல்கலைக்கழக பேராசிரியர்  ஒருவர் தனக்கு சமர்ப்பிக்கும் படி கடிதம் அனுப்பியிருந்தார். பூனைகள் பற்றி நான் விஷேடமாக ஆற்றிய சொற்பொழிவுகள் பிரபல்யம் பெற்றன. ஆய்வு மாணவர்களின் கவனத்திற்கு எனது கட்டுரைகள்  சத்தூட்டியதாக சொன்னார்கள்.


எனக்கு இம்முறை விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என  அவள் வேறு நக்கலடித்தாள். அப்படியென்றால் உனக்கு பூனை பொம்மைகள் இரண்டு வாங்கித்தருவேன் என்று அவள் வாயை மூடினேன். அவள் ம்கூம் என மறுகியபடி விலகிச்சென்றாள்.

இந்த நினைவுக்குறிப்புகளை எழுதும் தருணமும் நான்கு பூனைகள் ஒருங்கே இணைந்து ஒழுங்கையில் வெகு அநாயசமாக அணைந்தபடி செல்கின்றன. ஜன்னலிடுக்கால் பார்த்துக்கொண்டிருந்தேன். அவைகளின் முகத்தில் திருட்டுக்களை மிகைத்திருந்தது.எதிர்வீட்டில் புதிதாக கோழிகள் வாங்கி வளர்ப்பதை நினைத்துக்கொண்டேன். அந்தக்கோழிகள் அழகானது.

மொசு மொசுவென்று அடர்ந்த இறகுகள் கொண்டது. இந்தபூனைகளின் பார்வை எதிர்வீட்டில் நிலைகுத்தி நின்றதையும் அவாதானித்தேன்.பாவம் அந்தக்கோழிகள். மாமியிடம் எச்சரிக்க வேண்டும். 
 
அவைகள் அதிகார மிடுக்கு கொண்ட பூனைகள் நிச்சயம் மாமியை பயமுறுத்தும். அதுவும் அந்தக்கருப்புக்கடுவன் மகா முசுறு. கதிரையில் சாய்ந்தபடி சிந்தனையில் மூழகினேன்.இந்தப்பூனைகளை என்ன செய்யலாம். தலைவலிக்கத்தொடங்கியது.விழிகளை மூடினேன். தூக்கம் என்னை கவ்வத்தொடங்கியது.

பொட்டல் வெளி. நான் தனியனாய் நிற்கிறேன்;,பூனைகள் கூட்டமாக இணைந்து என்னைத்துரத்தத்தொடங்கின. ஓடிச்சவுத்த கால்கள் இருண்ட குகையுள் தரிபட்டு நின்றது. அதிர்ச்சியில் உறைந்து போக குகையை பார்க்கிறேன். எல்லாப்பூனைகளும் குகைக்குள் கூடியிருந்தன. 
 
 
மினுங்கும் கங்குள் விழிகள்,இடைவிடாத மீசைகளின் துடிதுடிப்பு,மரணத்தை வெல்லவே முடியாத பொறியில் மூடப்பட்ட குகைவாயில். நான் குகையைச்சுற்றிச்சுற்றி ஓடுகிறேன். கருப்புக்கடுவன் சீற்றத்துடன் விரட்டத்தொடங்கியது.உயிர் பிய்ந்து தொங்க  குகையில் தலை முட்ட விழுந்து வீறிட்டேன்.அவள் வந்து உலுக்கி என்ன என்றாள். உடல் வியர்வையில் தெப்பமாயிருந்தது. ‘அந்தக்கருப்பு பூனை அந்தா…’என் நாக்குளறியது.


‘என்ன இது சின்னப்புள்ள போல எப்ப பாத்தாலும் பூன பூன..’ஆதுரமாய் என் தலையை கோதிவிட்டாள்.மனம் நடுங்கிக்கொண்டிருந்தது.
 

 
23.05.09


பிரசுரம் :  காலம் (கனடா) இதழ் 33 அக்டோபர்- டிசம்பர் 2009

Thursday, 22 December 2011

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

எங்கள் தேசம் பத்திரிகையில் தொடராக வெளிவரும் நினைவுக்குறிப்புகள் 
 
தொடர்  4
சுன்னத்து வீடுகளில் காவலிருப்பவர்கள் தூங்கக்ககூடாது. மீறித்தூங்கிவிட்டால் விழித்திருப்பவர்கள் அவர்களுக்குச் செய்யும் சில்மிசங்கள் நகைப்புக் கிடமானவை. சுன்னத்து மாப்பிள்ளைக்கு கட்டுவதைப்போல் வெள்ளைத்துணியால் தூங்குகின்ற பெரியவர்களுக்கும் கட்டி விட்டு ஒருவர் வீச மற்றவர் கால்களை பிடித்துக்கொண்டிருப்பர்.

முகத்தில் சுண்ணாம்பால் குத்தி வேடிக்கை பார்ப்பதுமுண்டு. கூடியிருந்து பெண்கள் சிரிப்பார்கள். கண்விழித்ததும் அசடு வழிய சிலர் ஓடுவதுமுண்டு.சிலர் சண்டையிட்டுக்கொண்டு போவதுமுண்டு. சில நேரங்களில் வேடிக்கைகள் வினையிலும் பகையிலும் முடிவதுமுண்டு.

சுன்னத்து வைத்திருப்பவர்களுக்கு தாகத்திற்கு தண்ணீர் தரமாட்டார்கள். உதட்டை நனைத்துக்கொள்ள கொஞ்சம் தண்ணீர் கிடைக்கும். சாப்பாடும் அப்படித்தான்.காயம் ஆறாது என்ற ஜதீகம். சிறு நீர் முட்டிக்கொண்டு வரும் எழுந்து செல்வதற்கு தடை .ஓரிரு நாட்கள் மண்சட்டி வைத்து பாயில் போகச்சொல்வார்கள். அப்படியொரு பத்தியம்.சுன்னத்து மாப்பிள்ளை பெயரால்  வந்திருப்பவர்களுக்கு விருந்தோ விருந்து.

ஒவ்வொரு நாளும் ஒய்த்தா மாமா வந்து காயத்தைப்பார்த்து மருந்து தூவிப்போவார்.வருகை தரும் நாட்களில் அவரின் கணக்கில் கணதி ஏறிவிடும்.ஏழாவது நாள் தண்ணீர் ஊற்றி பெண்டேஜை கழற்றி குளிக்க வைப்பார்கள். அத்துடன் கலகலப்பு முடிந்துவிடும்.

 பின்னர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒய்த்தா மாமா மட்டும் அதை பார்த்து மருந்து தூளை கொட்டி விட்டுப்போவார். விரல் நுணியால் சாரத்தை கிள்ளிப்பிடித்தபடி முற்றத்தில் நடை பழகுவோம். நிலைமை சீரானதும் மறுபடியும் பள்ளிவாயலுக்கு அழைத்துப்போய் பாதிஹாவுடன் சடங்குகள் இனிதே நிறைவுறும்.

எல்லாம் சரியாக ஒரு மாதம். சுன்னத்து செய்யாதவர்கள் பள்ளிவாயலுக்கு தொழுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு.ஆசாரம் பார்க்கும் சில பெரிசுகள் இவர்களை பள்ளிவாயலுக்குள் நுழைய அனுமதிக்கமாட்டார்கள். எனது இரண்டு ஆண் மக்களுக்கும்  முறையே முப்பதாவது நாள்,நாற்பதாவது நாளில் டாக்டரிடம் கொண்டு போய் சுன்னத்தை செய்து விட்டு வந்துவிட்டேன்.அயலாருக்கு தெரிய வந்தது இரண்டாவது நாள்.


சுன்னத்து வைத்தவர்களையும், முப்பதும் ஓதி முடித்தவர்களையும் மௌலவி விராத்துக் கத்தம் (பராஅத்) கத்தம் ஓத அனுப்புவார். மதரசாவிலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு நான்கைந்து பேர் ஜோடியாக அனுப்புவது வழக்கம். நானும் நண்பர் இஸ்ஸதீனும்  ஜோடி சேர்க்கப்ட்டோம். வயிற்றுப்பாடு எங்களுக்கு. வசூல் மௌலவிக்கு.இது ஊர் வழமை.

இஸ்ஸதீனும் நானும் வீடுவீடாக சென்று கத்தம் ஓதுரயா என்போம். அரிசிமா ரொட்டி,கொட்டப்பாணி,இறைச்சிக்கறி. சாப்பிடும் வயது. சாப்பிட்டோம். ஒரே நாளில் சில வீடுகள்.மாலை மௌலவியிடம் சில்லறைகளை கொடுத்து விட்டுப்போய் விடுவோம்.இஸ்ஸதீன்தான் என் பால்ய காலத்தில் நெருக்கமான தோழனாக இருந்தான்.
இப்படித்தான் யாசீன் பாவாட தோட்டத்திற்குள் விளையாடிக் கொண்டிருந்தோம். இப்போது பெரிய மாடி வீடுகளும் கடைத்தெருவும் கொண்ட பஜார்.   ‘மட ‘வச்சிரிக்கிரா என்றான்.

பச்சத்தண்ணி மௌலானா என்ற ஒருவர் யாசீன் பாவாட தோட்டத்தின் கடைக்கோடியில் இருந்தார். அவரிடம் பேய்களை விரட்டும் சக்தி இருப்பதாக நம்பிய பருவம். தூரத்திலிருந்தெல்லாம் தமிழ் ஆக்களும்  குறிச்சுப்பார்க்க வருவார்கள்.

 அச்சிலம் (தாயத்து) போட நூல் கட்ட,வீடு காவல் பண்ண,கழிப்புக்கழிக்க, தண்ணி ஓத என்று ஒரே கூட்டமாக இருக்கும். அவர் வீட்டு முற்றத்தில் ஒரு வேப்பமரமிருந்தது. அதன் கீழ் பலியிடுவதற்கு வந்த கோழிகள் கால்கள் கட்டப்பட்டு துடித்துக்கிடக்கும். பகல் காலங்களிலும் என் வயதொத்தவர்கள் அந்த வழியே செல்வதில்லை.


கணுக்கால் புதையும் அளவிற்கு மணல் வீதி.அவர் வீட்டிலிருந்து ஒரு ஐம்பதடி தூரத்தில் கொட்டில் போட்டு தொழில் செய்து வந்தார். அவர் முகட்டிலிருந்து சதா சாம்பிராணிப்புகை கிளம்பிக்கொண்டிருக்கும்.அவர் பேயை விரட்டினாரா நாயை விரட்டினாரா?  அயலவர்கள் பிற்காலத்தில் ஊரை விட்டும் விரட்டியது, அவர் விரண்டோடியது அனைத்தையும் நாமறிவோம்.

இஸ்ஸதீனும் நானும் பசியை விரட்டினோம். ‘மட‘யில் இருக்கும் இளநீரும் வாழைப்பழமும் எங்களை குளிர்வித்தன. எங்களை விதி விரட்டியது. வறுமை விரட்டியது.

இளமையில் வறுமை எத்துனை கொடுமை என்பதை அனுபவித்தீர்களா? கண்கள் நிறையக்கனவும், வயிறு நிறைய காற்றும் சுமந்து திரிந்த பால்ய காலங்கள் கொடுமையிலும் கொடுமை.

அதிகாலை ஐந்து மணிக்கு மட்டக்களப்பிலிருந்து வரும் உதய தேவி வாழைச்சேனை ஸ்ரேஷனில் தரித்துப்போகும். உம்மா பனிப்புகார் விட்டுப்பிரியா முற்றத்திலிருந்தபடி என்னை வழியனுப்பி வைப்பா.நான் கிறவல் வீதயில் மறையும் வரை அவவின் விழிகள் என் முதுகில் மொய்த்தபடி பின் தொடரும்.
என் தலையின் மேல் ஆவி பறக்கும் அப்பப்பெட்டி.குடும்பத்தின் வறுமையை விரட்ட ரெயில்வே ஸ்ரேஷனில் இளமைக்காலம் கழிந்தது.காலையில் ஏழு மணிக்குள் விற்றுத்தீர்த்து விட்டு வீடு வந்து குளித்து உடை மாற்றி பாடசாலைக்குச்செல்ல வேண்டும் மாலை மறுபடியும் வறுத்த கடலை,வடையுடன் மறுபடியும் ரெயில்வே ஸ்ரேஷன்.என் சக நண்பர்களும் இதே வறுமையுடன் தண்டவாளங்களில் போராடித்திரிந்தார்கள்.

பொலனறுவையிலிருந்து வாழைச்சேனையில் தரித்து நின்ற ரெயிலில் சனக்கூட்டம் அதிகமிருந்தது. பெட்டிகளுக்குள் நாங்கள் ஏறிக்கொண்டு ஒவ்வொரு முகங்களாக ஏக்கத்துடன் பார்த்துப்பார்த்து கூவிக்கொண்டு போனோம். ஐயா வடை,   .....    அம்மா வடை…

வாங்கமாட்டார்களா என்ற ஏக்கம். வியாபார நெருக்கடியில் ரெயில் கூவியதும்,நான் புறப்படப்போகிறேன் இறங்கிவிடுங்கள் பசங்களே என்று அலாரம் அடித்ததும் புலப்படவில்லை. கல்குடா தாண்டும்போதுதான் விபரீதம் புரிந்தது.அடுத்தது பாரதிபுரம்.பின்வழியால் இறங்கி ஸ்ரேஷன் பென்ஜில் அமர்ந்திருந்தேன்.


டிக்கட் இல்லாமல் பயணம் செய்தால் ஐம்பது சதம் அபராதம். அப்போது அது பெரிய தொகை.மாஸ்டரிடம் அகப்பட்டுக்கொண்டேன்.அவர் பிடித்துப்போய் அவர் அறையில் அடைத்துவைத்தார்.விசாரணைகள் ஆரம்பமாகின.

காலையில் ஏழு மணிக்கு இறங்கிய என்னை 10 மணி வரை விசாரித்து விட்டு என்ன நினைத்தாரே இனி மே டிக்கற் இல்லாம வரப்படாது. எச்சரித்து அறை டிக்கற் அவரே தந்து வாழைச்சேனைக்கு ஏற்றி விட்டார்.அவரின் மனிதாபிமானம் என்னை இன்றும் மெய்சிலிர்க்க வைக்கின்றது. நிறைய வடை வாங்கி விட்டு பணத்தையும் தந்தனுப்பினார்.

தண்டவாளத்தில் ஆரம்பித்த வாழ்க்கை.பல்லாயிரம் வாழ்பனுவங்களை கற்றுத்தந்தது. அதை விபரிக்கவில்லை. என்னுடைய ‘ரெயில்வே ஸ்ரேஷன்’ கதை பேசப்படுவதற்கு அதில் நடமாடும்  உயிர்ப்பசையுள்ள மாந்தர்களும் கதையில் மின்னும் உயிர்ப்புமே காரணம் என்பேன். இளமையில் அந்த அனுபவங்கள் எனக்கு கிடைக்கவில்லை எனில் அந்தக்கதையும் காத்திரமாக வந்திருக்காது.

இப்படித்தான் வறுமை என்னை பிடரி நரம்பிலிருந்து கொண்டு விரட்டியது.பதினெட்டு பத்தொன்பது வயது வரை தேசம் தேசமாக விரட்டியது.

அனுராதபுரம்,கண்டி,கள்எளிய,கொழும்பு,என அலைந்து திரிந்தேன். வாழ்க்கை விரட்டத்தொடங்கினால் ஒரு கட்டத்தில் விசர் நாயைப்போல் விரட்டிக்கொண்டே இருக்கும்.நின்று நிதானிக்க அவகாசமிருக்காது. ஓடியே ஆக வேண்டும். அந்த ஓட்டத்தில்தான் உயிர் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும்.


இந்திய இரானுவத்திற்கும்,தமிழ் துணைப்படைகளுக்கும்,ஏன் புலிகளுக்கும் தப்பி ஓடியது நினைவை விட்டும் அகல மறுக்கின்றது.காடுகள், வயல்கள் கடந்து களனிகளில் மூழ்கி எழுந்தோடிய பல கதைகள் பின்வரும் அத்தியாயங்களில் பகிரப்படலாம். 
ஊஞ்சல் இன்னும் ஆடும்......

எங்கள் தேசம் இதழ் : 211
 

Sunday, 18 December 2011

கவிதை

பிரசுரிக்கப்படாத கவிதைகள் 

என்னுடைய இரு கவிதைத்தொகுப்பிலும் இது வரை பிரசுரிக்கப்படாத சில கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆனந்தம்.தவிர்க்க முடியாத இந்தப்பதிவுகள் யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல.இது ஒரு கரை படிந்த காலத்தின் துயரம்.


01

இன்றுமென் கிராமத்திற்கு
நரிகள் வந்தன .
ஆங்கிலத்தில்
ஊளையிடும் கொளுத்த நரிகளின்
அறிக்கைகளில்
சிறு நீர் கழித்தபடி
என் குடி மகனை கடித்துச்சப்பின.

வேட்டை பல் முறிந்த
தனித்துவச்சிங்கங்களோ
சிம்மாசனப் பித்னாவில்.

நாணிச்சிறுத்ததென்
போர் நெஞ்சு.
ஒரு முட நரியை எதிர்க்கவியலா
என்னினத்தின் துயர்கண்டு
வெட்கமேவக்கேவினேன்.

சல்லடையாக்கப்பட்ட
என் சகோதரனே
என்னை மன்னித்து விடு.
மறுநாள்  உன் உம்மாவையும்
கொன்று விட்டார்கள் .
எனினும்-
நாம் மௌனமாகத்தான் இருந்தோம்.


 2002- ரமழான் 27 ம்  இரவு புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட காவத்தமுனை என்ற கிராமத்தைச் சேர்ந்த எஸ்.எம்.ஏ. அஸீஸ் என்ற அப்பாவி இளைஞனின் நினைவாக....   091202
இன்னும் சில பதிவுகள் வரும்....

Tuesday, 13 December 2011

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

எங்கள் தேசம் பத்திரிகையில் தொடராக வெளிவரும் நினைவுக்குறிப்புகள் 
 
தொடர்  3
 
ளமைக்கால ட்ரக்டர் பயணம் என்றவுடன் நினைவில் சட்டென எழுவது எங்களது கத்னா ஊர்வலம்.

உம்மாவும் வாப்பாவும் சொந்த பந்தம் அயலவர்கள் எல்லோருக்கும் அழைப்பு விடுத்தனர். சூறாவளி அடிப்பதற்கு முதல் மாதம்.மூத்தாப்பா தன் பங்குக்கு ஒரு நாம்பனை வீட்டு முற்றத்தில் கட்டியிருந்தார்.அரிசியும் துணைக்கறிகளும் மாமாமார்கள் கொண்டு வந்திருந்தனர்.வெற்றிலை பாக்கு வகையறாக்களை வாப்பாதான் வாங்கி வந்தார். திகதி குறிக்கப்பட்ட வியாழன் மாலை சுன்னத்து செய்வதென நிச்சயிக்கப்பட்ட அன்றைய காலைப்பொழுது எனக்கும் தம்பிக்கும் கரிநாள்.

அதிகாலையில் கிணற்றிடியில் கொண்டு போய் உம்மாவும் சாச்சிமாரும் தண்ணீரை அள்ளி அள்ளி இரண்டு பேருக்கும் ஊற்றினர். பின் புதிய ஆடைகள் அணிவித்தனர். வெள்ளை சாரனும்,குங்குமக்கலரில் இரண்டு பேருக்கும் சேர்ட், தொப்பி.

 காலையில் ஓட்டமாவடி பெரிய பள்ளிக்கு அழைத்துச்சென்று வாப்பா சில்லறைகளை தந்து ஊண்டியலில் போடச்சொன்னார்.மௌலவி வந்து பாதிஹா ஓதிய பின் ஊர்வலம் ஆரம்பமானது. பைத் படிப்பதற்கென லெப்பையும் மோதினாரும் ஏறிக்கொண்டனர்.
 
அலங்கரிக்ப்பட்ட மெசின் பெட்டிற்குள் நான்கைந்து கதிரைகள் மாப்பிள்ளைமார் நாங்களும் குடை பிடிக்க ஒருவரும் .கழுத்து நிறைய சருகுத்தாள் மாலை.ஊர்வலம் ஊர்முழுக்க சுற்றி ஈற்றில் பகல் நேரம் வீட்டில் முடிய வேண்டும்.

ஊரார்கள் விருந்துக்கு வந்திருந்தனர்.வட்டாவில் வெள்ளை விரித்து வெற்றிலை வகையறாக்கள் இருந்தன.பந்தலின் கீழ் குருத்து மண் கொட்டப்பட்டிருந்தது. பொரியலும் விருந்தும் மணக்க மணக்க (சுன்னத்து) மாப்பிள்ளைமார்களுக்கு விருந்துப்படையல் நடைபெறும். உணவு தொண்டைக்குள் அடைபட்டு நின்ற முதற்தருணம் அதுதான்.

மாலை ஒய்த்தா மாமா  வந்து விட்டார்.என்ற செய்தி காற்றிலேறி எம் காதுகளுக்குள் தீயாய் விழுந்தது.எங்களை பகலுணவுக்குப்பின் வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைத்து காவலிருந்தனர். சில பிள்ளைகள் ஓடி ஒளித்து விடுவதால் இந்த முன் ஏற்பாடு.

நடு வாராந்தாவில் பெரிய உரல் தலைகீழாக குத்தப்பட்டுக்கிடந்தது. அதை வெள்ளைத்துணியால் முடி வைத்திருந்தனர். பாவாமார்கள் உரலைச்சுற்றி ரபானுடன் காத்திருந்தனர். அவர்களின் பணி சுன்னத் மாப்பிள்ளையை உரலில் ஏற்றும் போது தொடங்கும். ஹழராவை உச்சஸ்தாயில் நிறுத்தி வைத்து முடிக்கும் போது உஸ்தா மாமா கைகளை கழுவ வெளியே போவார். வாப்பா ஸ்பீக்கர் எடுக்கவில்லை.சில போடிமாரின் பிள்ளைகளுக்கு சுன்னத் செய்வதென்றால் ஏழு நாளும் ஸ்பீக்கர் கூவும்.

பலியிடும் தருணத்திற்காக காத்திருக்கும் ஆடுகள் போல் தம்பியும் நானும்.வீட்டு அறைக்குள் ஆளையால் அச்சத்தில் பார்த்தபடி இருந்தோம்.சாச்சா வந்து என்னை முதலில் கிணற்றிடிக்கு கொண்டு போய் தண்ணீரை ஊற்றி குளிக்கச்சொன்னார்.

தலையை நனைக்காமல் கழுவியபின் வெள்ளைத்துணி ஒன்றை தந்து கட்டச்சொன்னார். வேட்டிபோல் சுருட்டிக்கொண்டேன்.தம்பியையும் அப்படியே செய்தார்கள். உரலுக்கு நடாத்திச்செல்லுகையில் அழுகை வெடித்து விட்டது. மாமா அதட்டினார்.

 உரலில் இருத்தி கால்களிரண்டையும் ஒருவர் பிடிக்க கைகளை இன்னொருவர் பிடிக்க கழுத்தையும் பின்னிருந்து ஒருவர் திருப்ப ஹழரா ஆரம்பமானது. சுன்னத் செய்யபவர்களின் வேதனைக்குரல் மற்றவர்களுக்கு கேட்காமல் இருக்க ஹழராவின் தொனி உயர வேண்டும்.

 ஒய்த்தா மாமா கைகளை கழுவிக்கொண்டு ‘ஆள் என்ன கஸ்டம்’  என்றார். அலாக்காக தூக்கிக்கொண்டு போய் உள்வீட்டிற்குள் படுக்க வைத்து மச்சான் விசிரியால் வீசிக்கொண்டிருந்தார்.உம்மாவும் வாப்பாவும் கண் கலங்கியபடி வந்து பார்த்துவிட்டுச்சென்றனர்.

மூத்தம்மா மட்டும் தலைமாட்டில் குந்திக்கொண்டு தலையை தடவினார். சற்று நாழிகைக்குப்பின் தம்பியையும் அலாக்காக தூக்கி வந்து பக்கத்தில் படுக்க வைத்தார்கள்.ஹழரா நின்று வீடு களை கட்டியது.

கிழக்கின் சுன்னத் வீடுகள் அக்காலத்தில் களை கட்டியிருக்கும்.சிலர் ‘விருத்த சேதன அழைப்பு’ கொடுப்பதுண்டு. உறவினர் தெரிந்தவர்களின் வீடுகளுக்குச்சென்று அழைப்பு விடுப்பர்.அழைக்கப்பட்டவர் விருந்துக்கு வரும்போது அன்பளிப்புக்களும் கொண்டு வருவர். 
 
பெரும்பாலும் பணம்தான் கொடுப்பார்கள்.என்வலப்பில் வைத்து சுன்னத்து மாப்பிள்ளையின் உம்மாவின் கையில் பொத்தி விட்டு விடைபெறுவர்.கூடிய தொகை வைத்தவர்கள் என்வலப்பில் உள்ளே தங்கள் பெயரை எழுதியிருப்பர். இது மொய்யை நிகர்த்த வழமை. தற்போது இதில் எந்தப்பழக்கமும் மரபும் இல்லாமல் அருகிவிட்டது.

 7வது நாள் ‘அசரு’ கழற்று மட்டும் திருமண வீடுகள்  கலகலப்பாக இருக்கும்.வாடகைக்கு லைட் மெசின் எரியும். கலர் கலரான பல்புகள்.பந்தலில் வெற்றிலை வட்டா சகிதம் 101 விளையாட ஆட்கள் குழுமியிருக்கும்.
 
சதா தேனீரும் பலகாரமும்.உணவும் பரிமாறப்பட்டுக்கொண்டிருக்கும். காயத்தை பிள்ளைகள் காலால் உதைத்து விடுவார்கள் என்பதற்காக சுன்னத்து வைக்கப்பட்டவர்களின் படுக்கையருகே முறைவைத்து விடிய விடிய ஆட்கள் விழித்திருப்பர்.முகட்டில் உயர்த்திக்கட்டிய வெள்ளைத்துணி கூட காயத்தில் பட்டுவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கை.

எங்கள் தேசம் இதழ் : 210

Wednesday, 7 December 2011

சிறுகதை - முற்றுகை

ந்தளாயில் கால்  புதைத்தபோது இலேசான பனி மூட்டம் ஊரை மூடிக்கிடந்தது.நள்ளிரவின் மவுனத்தை உசுப்பியபடி மனிதக்குரல்களின் அவலமே மிகைத்து நின்றது.

வீதியின் இரு மருங்கிலும் வெட்டிச்சாய்க்கப்பட்ட வாழைகளாய் மூதூர்,தோப்பூர் கிராமங்கள் சரிந்து கிடந்தன.பாடசாலை பள்ளி முற்றம்,கடைத்தெருவென ஹோவென்ற இரைச்சலுடன் மனிதக்கடல் அலையலையாய் தகித்துக்கொண்டிருந்தது.

மைதானத்தின் பற்றைகளுக்குள்ளிலிருந்து மழலைகளின் அழுகுரல்கள் உயரப்பறந்து காற்றிலாடின. சீதளக்காற்றின் ஊசிக்கரங்கள் பிஞ்சுகளை சீண்டவிடாமல் மார்புடன் அணைத்துக்கொண்ட அன்னையரின் பிரலாபம் மனங்களை கரைத்தது.

போரின் பெயரால் துரத்தியடிக்கப்பட்ட கிராமங்கள் கால் பதியும் தெருவெல்லாம் சிதறிக்கிடந்தன.மதகுடைத்த வெள்ளம் போல் தன் சொந்தங்களை தேடியலையும் மனிதர்களின் பதற்றமும் பரிதவிப்பும் ராக்குருவிபோல் அலைந்து திரிந்தது.

ராகிலா தன்  எட்டு மாதக்குழந்தையையும், கணவனையும் தேடி அலையும் பிச்சி. 69 இடைத்தங்கள் முகாம்களில் அவள் ஏறி இறங்கி ஒரு தபசி போல் அலைந்து திரிந்தாள். வாரிவிடப்படாத புழுதி அடர்ந்த பரட்டைத்தலையும், அழுக்கடைந்த தேகமும், உருக்குலைந்த அவள் தோற்றமும் அழகியான அவளை ஒரு பைத்தியம் போலாக்கியிருந்தது.

அத்தாரிக்  முகாம் டீ பிரிவின் தூணுக்கு தன்முதுகை முட்டுக்கொடுத்தபடி ராகிலா உட்காந்திருக்கின்றாள். புதிய ஆடைகள்,மருத்துவ சேவைகள், சமைத்த உணவு, உளவள ஆலோசனை எதுவும் அவள் இருப்பை தகர்த்துவிடவில்லை. அர்ஷை ஊடுருவிச் செல்லுமோ என மனங்கொள்ளுமளவிற்கு அவள் விழிகள் ஆகாயத்தில் குத்திட்டு நின்றன.

பால் முட்டிய இளமார்புகளில் வலி எடுத்தது.உஹது மலைபோல் தன் நெஞ்சில் கணக்கும் முலைகளின் ரணம் தினம் அடர்ந்து கொண்டிருந்தது.

“ பால பீச்சி வெளியால உடு புள்ள, மார்புல நோவு குரயும்” 
 
ஒரு அனுபவக்காரியின் நச்சரிப்பில் தன் மகள் குடித்துப்பெருக்கும் பால், அகதிகள் தரித்த மண்ணில் விழுந்து ஊறியது.

“ஓ..என் மகள் “ நினைக்க நினைக்க அவள் நெஞ்சு கேவியது.

ராகிலா தன் நினைவின் நுனியில்  அந்த துயர நாளை இழுத்து வந்து பார்த்தாள்.

“முஸ்லிம் ஆக்கள் எல்லாம் ஒரு மணி நேரத்துள்ள ஊர விட்டு வெளியேறவும். நாங்க ஆமியோட சண்ட புடிக்கப்போறம்,”

  அறிவித்தல் தெருவெங்கும் இடி முழக்கமாய் விழுந்து செவிகளில் தீப்பிழம்பாய் உருகியது.பூர்வீக மண்னை, வியர்வை சிந்தி உழைத்த சொத்துக்களை, சிறுகச்சிறுக கட்டிய வீடுகளை,தன்மானத்தை பிறந்து தவழ்ந்து மூச்சுடன் கலந்திருக்கும் இந்தக்கிராமத்து மரங்களில் வாசம் செய்யும் காற்றை, ஒரே மணி நேரத்தில் கழற்றி விட்டு செல்ல வேண்டும். காலில் பட்ட தூசியை துடைத்தபடி வீட்டுக்குள் நுழைவது போல் இத்துனை ஆணி வேர்களையும் பிடுங்கி எறிந்து விட்டு இலகுவில் எப்படி செல்வது?

 திசையறியா இலக்குகளை நோக்கி விழும் ஷெல்கள் கிராமத்திற்குள் விழுந்து வெடித்தன. வீடுகளை அது சல்லடை போட்டது. மக்கள் பள்ளிவாயல் மதரசாக்களில் உயிரை பாதுகாக்க அடைக்கலம் தேடினர்.

பல ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படாமல்  உப்பிப்பெருத்து அழுகிக்கிடந்தன.காகங்கள் வட்டமிடும் திக்கில் ஜனாஸாக்கள் கிடப்பதாக பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். ஒரு பானைக்கஞ்சி குழந்தைகள் மட்டும் உள்ளங்கைளில் நக்கிக்கொள்ளும் படி இருந்தது. கடைகளை திறந்து உணவு எடுக்க முடியாத முற்றுகைக்குள் ஊர் மூச்சுத்திணறியது.

தொழிலுக்குச்சென்றவர்கள், அக்கரை சென்றவர்கள்,ஆடுமாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர்கள்,வண்டில் மாட்டுடன் வனத்திற்குச் சென்றவர்கள் இந்த அறிவித்தலால் ஊருக்குள் திரும்ப முடியாத பரிதாபத்திற்குள் கிராமம்  தகித்துக்கொண்டிருந்தது.

ஊரின் மானம் காத்த திணவெடுத்த இளைஞர்கள் இனங்கானப்பட்டு அவர்கள் முழங்காலில் நிற்க வைத்து சுடப்பட்டார்கள். பெற்றவரின் முன்னிலையில் தவமிருந்து பெற்ற குருத்துக்கள் கருக, சிலர் நெஞ்சு வெடித்து சாய்ந்தார்கள். உம்மாவினதும், பிள்ளையினதும் ஜனாஸாக்கள் அருகருகே அமைதிகொண்டன.

ஒரு வீட்டுப்பிள்ளைகளாய் உறவு கொண்டு, ஒரேபாயில் படுத்துறங்கி, ஒரே தட்டில் சோறுண்ட தோழர்கள், தனது கரங்களில் துப்பாக்கிகளுடன் வந்தனர். அவர்களின் புன்னகை பூத்த முகங்களில் மரண வெறி இருந்தது. வன்மம் படர்ந்த விழிகள் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன.

சேர்ந்து விளையாடிய நண்பர்களை அவர்கள்தான் காட்டிக்கொடுத்தார்கள். இறுகப்பற்றிய கரங்களுடன் உலா வந்தவர்கள், பின் புறத்தே சேர்த்து வைத்து இறுகக்கட்டிய கரங்களுடன் எங்கள் இளவல்களை பலி பீடத்திற்கு சாய்த்துக்கொண்டு போனார்கள். நடக்க மறுத்தவர்களை “நடடா சோனி” என தூசித்தபடி இழுத்துக்கொண்டு போனார்கள்

புல் வெளியை நோக்கி விரட்டப்படும் ஆட்டு மந்தைகளைப்போல் அப்பாவி சனங்களையும் விரட்டினார்கள். சரளைக்கற்கள் விரவிக்கிடக்கும் காட்டுப்பாதை,முற்கள் கீறிக்கிழித்த பாதங்களிலிருந்து இரத்தம் சொட்டச்சொட்ட நடந்தது ஊர். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு மலை இடுக்கில் உருகி ஒடும் அக்கினி நதியென மனித வெள்ளம் பிரவகித்தது. கபட நாடக அரங்கில் பலியிடப்போவதை அறியா மந்தைகளாய் அவர்கள் களைத்து விழுந்து தவழ்ந்து விடாகித்த நாவுக்கு  ஒரு சொட்டு நீரின்றி நடந்தனர்.

தன் சிசுவை சுமந்திருக்கும் மனைவியை தோளில் காவியபடி செல்லும் கணவர்கள்,வயதான தாயையும் பிள்ளைகளையும்  தூக்கியும் நடாத்தியும் நகர்த்திச்செல்லும் பெரியவர்கள், நோயாளிகளை இருவர் சுமந்து செல்ல கிராந்தி மலை நடுக்கமுற்றது.

தண்ணீர் கேட்டழுத குழந்தைகளின் அழுகுரல் வனாந்திரத்தை உறையச்செய்தது.

“உம்மா தன்னி,”
குரல்கள் வறண்டு நீருக்கு ஏங்கின.

“தம்பிமார எங்கட புள்ளயளுக்கு ஒழுப்பம் தண்ணி குடுங்க சீதேவியாள். வெயில் தாங்க முடியாம கத்துதுகள்.”

 உலர்ந்த உதடுகள் யாசகம் கேட்டன.

 “டேய் வாய மூடுங்கடா “ பதிலுக்கு அவர்கள் கத்தினர்.

ராகிலா கால் துவண்டு சரிய ஓடினாள். அறிவித்தல் விடுத்து ஒரு மணி நேரம் முடிந்து விட்டது. வயலுக்கு சென்ற கணவன் வீடேகவில்லை.அவள் மனப்பறவை நடுக்கமுற்றது.

இந்தப்பிரளயத்தில் ஒரு சருகாகவேனும் அவன் அடித்து வரப்படாதா ?. அவள் கால் விரல் நுணியில் நின்று எம்பி எம்பி பார்த்தாள்.அவள் விழிகளுள் சுமைகள் ஏறிய தோள்களே தெரிந்தன.

 ராகிலா அறிவித்தலை தொடர்ந்து வீதிக்கு வந்தாள். வீட்டில் உம்மாவும் வாப்பாவும் மகளும். கணவன் குறித்து அறிவதற்காக வந்தவள், பக்கத்தில் விழுந்து வெடித்த ஷெல்லில் அதிர்ந்து அரபுக்கல்லூரிக்கு ஓடினாள். அங்கிருந்துதான் அவர்களை துப்பாக்கி மனிதர்கள் சாய்த்துக்கொண்டு போனார்கள். தொட்டிலில் உறங்கிய மகளை வாப்பாவும் உம்மாவும் தூக்கிக்கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை அவள் மனத்தில் உறைந்திருந்தது.

 அந்திம நேரத்தில்  அவர்களிடம் மன்றாடி தோற்றுப்போனாள்.

“தம்பிமாரே என்ர பச்ச மண் தொட்டிலில, எடுத்து வாரன் வுடுங்க ராசா “காலில் விழாக்குறையாக அழுது மன்றாடிப்பார்த்தாள். கரையவில்லை.

அவள் சிறு வயதில் தோழியருடன் விறகு பொறுக்கி விளையாடிய காடு, நாவற்பழமும், இலந்தையும் இலுப்பைப்பூவும் தந்து அவளை கிளர்ச்சியூட்டிய காடு. மருங்கப்பழம் உசுப்பிய மரக்கந்துகள் அவளை வாஞ்சையுடன் பார்த்தபடி சும்மா நின்றன. துப்பாக்கிகள் முன் அவைகளால் என்னதான் செய்ய முடியும்.?

ராகிலா மரணத்தை போர்த்திக்கொண்டு கடும் வனத்தை தாண்டினாள். நீருக்கு அழுது களைத்த குழந்தைகள் தாய்மாரின் தோளில் சரிந்து கிடந்தனர்.பரிதாபத்தில் நீர் புகட்டியவர்கள்,  துப்பாக்கியால் அடித்து தூசித்து விரட்டப்பட்டனர். மேய்ச்சல் தரையில் நின்ற மாடுகள் தலை நிமிர்த்தி பார்த்து விட்டு மவுனமாக அசைபோட்டன.

யார் வீட்டு நாயோ தன் எஜமானைத்தேடி கூட்டத்தில்  அலைந்து சென்றது.சரிந்து விழுந்த அதன் நாவு வரட்சியில் உலர்ந்திருந்தது. தனது மோப்ப சக்தி தோற்று விட்ட வெட்க உணர்வில் அது ஒரிடம் நில்லாமல் சகட்டு மேனிக்கு ஓடித்திரிந்தது.

2

ராகிலா தன் தாயை கண்டு பிடித்து விட்டாள்.அகதி முகாமிற்கு வந்து ஒரு வாரத்திற்குப்பின் முள்ளிப்பொத்தானை முகாம் ஒன்றில் உணர்வற்றுக்கிடந்த தாயை அவள் கட்டிக்கொண்டு கதறியபோது தமிழீழக்கனவுகள் தீப்பிடித்து எரிந்தன.

தனது தோழி ஒருத்தி முகாமிற்குள் உடை மாற்ற எத்தனிக்கும் அவஸ்தையை கவனித்தபடி வெறித்திருக்கின்றாள். ஒரு கூடாரத்திற்குள் மூன்று குடும்பங்கள். வயது வந்த  குமரிகள், இளைஞர்கள்,வாப்பா,உம்மா அவளை வெட்கம் பிடுங்கித்தின்றது.

இரவில் ஆண்கள் பள்ளிவாயல், கடை முற்றம் என தன் படுக்கையை பகிர்ந்து கொள்ள பெண்களோவெனில்  நேர் வரிசையாக முகாமிற்குள் தூங்கியும் விழித்தும் இரவுகளை கடத்தினர்.

ராகிலாவுக்கு பொறுக்க முடியவில்லை. கால் வீசி நடக்கும் உள்வீடு, துள்ளிக்குதித்தாட விசாலித்த  முற்றம் காற்றை வடிகட்டி அனுப்பும் சுகந்தரும் மரங்கள், ஊரில்  ஆன்மீகத்தை அள்ளி வீசும் மினாராக்கள், மடியில் தவழும் குழந்தை, வெற்றிலை சொதப்பிய வாயுடன் அருகில் உரசியபடி   குறும்பு வெய்யும் கணவன், நிலாப்பொழியும் இரவுகளில் அவள் ரசித்துப்பார்த்த வானம் எல்லாமே இந்த இருண்ட கூடாரத்திற்குள்  கரும்புள்ளிகளாக ஓடிக்கொண்டிருந்தன.

என்.ஜீ.ஓக்கள் ஓடி ஓடி சேவகம் செய்தன. முழு சமூகமும் காலடியில் வந்து பணி செய்தது. ராகிலாவின் வாப்பாவையும் குழந்தையையும் யாருமே அவளுக்கு தேடித்தரவில்லை. அவர்கள் ஒரு முகாமிலுமில்லை. பொல்ஹகவெல,வாழைச்சேனை,நீர் கொழும்பு, பெரியமுள்ள, பஸ்யால என எல்லா மினி முகாம்களையும் விசாரித்தாகி விட்டது. முலை அழுத்தும் பாலை பீச்சி விட்டபடி ராகிலா தினம் தெருவை வெறித்திருக்கின்றாள்.

என்.ஜீ.ஓக்களின் வாகனம் முகாமிற்கு வரும்போதெல்லாம் அவள் மண்ணில் கால்பாவாது அவ்விடம் விரைவாள்.

“சேர் என்ட புள்ளட தகவல் தெரியுமா, வாப்பா எங்க விசாரிச்சிங்களா?

 அவர்களால் என்ன செய்யமுடியும். கனிவு ததும்ப ஆறுதல் சொல்வார்கள் “இன்னும் விசாரிச்சிக்கிட்டுதான் இருக்கம் சிஸ்டர்.’

 “சில ஆட்கள் இன்னும் மூதூருக்க அகப்பட்டிருக்கினம்.  இப்ப அங்க போக அனுமதியில்ல. சந்தர்ப்பம் கிடச்சா உங்கட வாப்பாவ அங்க தேடிப்பாக்கலாம். “

குறிப்பு புத்தகத்தில் வாப்பாவின் பெயர் பிள்ளையின் பெயர், வீட்டு விலாசம் எல்லாவற்றையும் குறித்துக்கொள்வார்கள்.

“ஊருல வாப்பா இருப்பாக, அவக எத்துண காண்டம் தப்பி புழச்சவங்க,அவனுகள் கடத்திப்போன ஒரு தரம் காலால உதச்சிப்போட்டு இரால்குளி சேத்துக்குள்ள விடிய விடிய கிடந்து வந்த வீரன், மூதூர் கடலுக்குள்ள படகு கவிழ்ந்தபோது நீச்சலடிச்சு   கர சேர்ந்த அவங்க,  அவகட பேத்திய சும்மாவா வுடுவாங்க” அவள் மனம் கூவியது. மனத்தின்  உள்ளறையில் எறும்பூறும் குறுகுறுப்பு.

மூன்று வாரத்தில் அவள் காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது. “மூதூருக்கு பஸ் போட்டிருக்கி போர ஆக்கள் காலயில வாங்க” அறிவித்தல் கேட்டவுடன்  அன்றைய இரவை சபித்தபடி விழித்துக்கிடந்தாள். இரவு நகர மறுத்து தன்னை சீண்டிப்பார்ப்பதாக நினைத்து ஆத்திரமுற்றாள்.நிலவும், வெண் உடுக்களும் சிதறிக்கிடக்கும் வானம் அவள் நெஞ்சில் தீ மூட்டியது. சுருக்கா விடியனும்.


3

அவள் ஊருக்குள் கால் வைத்த போது தலைகீழாக புரட்டப்பட்ட லூத் நபியின் வரலாற்றுக் கிராமமாய் கோரமாய் தெரிந்தது ஊர். சாம்பூரை இரானுவம் கைப்பற்றியபின் சூறையாடப்பட்ட மூதூர் ஒரு மூளி போல கிடந்தது
 
உடைக்கப்பட்ட கடைகள் வாய் பிழந்து கிடந்தன.குறிப்பிட்ட கடைகள் மட்டுமே இலக்கு வைத்து தகர்க்கப்பட்டிருந்தன. இலக்ரோனிக்கடைகள், புடவைக்கடைகள், நகைக்கடைகள், சைக்கிள் கடைகள்.

 விடுமுறையில் திரும்பும் வீரர்களின் கரங்களை  புதிய வாட்ச்,கைச்செயின் அலங்கரிக்க அவர்களின் கழுத்துகளிலோ தங்க மாலைகள் மின்னின.

வெறி பிடித்த குரங்குகள் தூக்கனாங்குருவிக்கூட்டை பிய்த்தெறிந்ததைப்போல் அவள் அழகிய கிராம் சிதறிக்கிடந்தது.

ஷெல் குத்திய வீடுகளும், கடைகளும் சிதிலமாகிக்கிடந்தன.மின்சாரமற்ற தெரு மரணத்தை போர்த்தியபடி பயமுறுத்தியது. வீடுகளில் மனிதர்கள் இல்லை.  ஊரை துர் நாற்றம் ஆக்கிரமித்திருந்தது.  அடக்கம் செய்ய இயலுமான உப்பிப்பெருத்த ஜனாஸாக்களை ஊரார் தேடித்தேடி அடக்கம் செய்தனர். மழை விட்டும் தூவானம் ஓயவில்லை என்பது போல் இடை வெளி விட்டு தூரத்தே ஷெல்கள் விழுந்து குமுறிக்கொண்டிருந்தன.

அவளுக்கு வயிற்றை குமட்டிக்கொண்டு வந்தது. அறபுக்கல்லூரிக்கு ஓடினாள். அங்கு வாப்பா இல்லை. ஏவி விட்ட வேட்டை நாயைப்போல் எல்லாத்தெருக்களிலும் பள்ளிவாயல் பாடசாலைகள் என குறிவைத்து ஓடினாள்.

அவள் வீட்டு முற்றத்தை காணும் வரை ஓடினாள். இளமையும்,இனிய கனவும் சௌந்தர்யங்களுடன் மிகைத்த தாம்பத்தயமும்  மலர்ந்து சுகந்தம் தந்த வீடு. ஒரு பக்கம் கருகிக்கிடந்தது. ஷெல் உரசிய தென்னையும், மாவும் கரிபிடித்து வாடி நின்றன. இனி பிழைக்கும் முகாந்திரமில்லை.

அவள் பிரியமாக நிரூற்றி பசளையிட்டு வளர்த்த , மூன்று மாதம் மசக்கையாக வாழ்ந்த காலத்தில் மாம்பிஞ்சுகளை தந்து பூளியூட்டிய மாமரம் இளமையை இழந்து கருக்கிடக்கிறது. ஓட்டுத்துண்டுகள், செங்கற்கள்,மரத்துண்டுகள், உடைந்த கண்ணாடிச்சில்லுகள், முற்றம் முழுக்க சிதறிக்கிடந்தன.

மாலை மங்கிய ஊர் இருளை இழுத்து போர்த்திக்கொண்டது. ஒரோயொரு பள்ளியிலிருந்து மெலிதான பாங்கொலி காற்றில் மிதந்து அவளைக்கடந்து சென்றது. காடேகும் பறவைகள் கீச்சிட்டபடி  பறந்து கொண்டிருந்தன . அவள் வீட்டுக்கோழி ஒன்று செக்களுக்கு பழக்கப்பட்டு கருகிய மாமரத்தின் அடியில் வந்து ஒண்டிக்கிடந்தது.


கிணற்று நீர் தூசடைந்து கிடந்தது. பூமிக்குள் புதைந்து கிடக்கும் மகளின் பொம்மையின் கால் வெளியே துருத்திக்கொண்டு கிடந்தது.பாய்ந்து சென்று அதை உருவி எடுத்தாள். வீட்டுக்குள் செல்ல மனம் தகித்தது. ஆவல் உந்த எட்டிப்பார்த்தாள். மண்டபத்தின் நடுவே கட்டப்பட்ட தொட்டிலின் கயிறு படிக்கட்டில் தெறித்துக்கிடந்தது.

இடிபாடுகளிடை வாப்பாவின் சாரம் மக்கித்தெரிந்தது.புழுக்கள் நெளியும் சுவரோரம் துர்நாற்றம் கசிந்து வந்தது.

ராகிலா ஓங்காரித்தபடி முற்றத்தில் பாய்ந்து விழுந்தாள். வாசற்படியில் மகளின் உடைந்த கொலுசுகள் சிதறிக்கிடந்தன.

பொம்மையை  மடியிலமர்த்தி கொளுசுகளை மிக கவனமான பொறுக்கத்தொடங்கினாள்.அவள் அரவங்கண்டு வீட்டுக்குள்ளிலிருந்த நாயொன்று கடைவாயை நக்கியபடி மிரட்சியுடன் வெளியே பாய்ந்தது.


ராகிலா உடைந்த கொலுசுகளை பொம்மையின் மட்கிப்போன கால்களில் வைத்து அழுத்திப்பார்த்தாள். பின் அதை தன் மார்போடு இறுக்கி அணைத்துக்கொண்டு ரவிக்கையின் கொக்கிகளை விடுவித்தாள்.

அவள் விழிகள் பொம்மையில் நிலை குத்தி நின்றன.

26.07.07
பகல் 1.46