Saturday, 15 October 2011

நேர்முகம் : பகுதி 03

  • ஈழத்துச்சிறுகதையின் இரண்டாவது கட்டப்படைப்பாளிகளில் முக்கியமானவர் ஓட்டமாவடி அறபாத். சிறுகதை,கவிதை,பதிப்பு,சமூகச்செயற்பாடுகள் என்று செயற்பட்டு வருபவர்.எரி நெருப்பிலிருந்த,வேட்டைக்குப்பின் என்ற கவிதைத்தொகுப்புகளையும் நினைந்தழுதல்,ஆண்மரம் போன்ற காத்திரமான சிறுகதைத்தொகுப்புகளையும் தந்திருக்கிறார்.   தன் நிலையை,சமுதாயத்தை,தன் மண்ணின் உள் வெளிப்பக்கங்களை புற விசைகளைப் பொருட்படுத்தாது மண்ணின் பச்சையோடு தன் எழுத்துக்களில் கொண்டு வருபவர்.   முஸ்லிம் சமுதாயம்,முஸ்லிம் தமிழ் இன உறவுகள் முரண்களை தீவிரமாக எதிர்கொண்டு, 90களுக்குப்பிந்திய காலத்தில் இருந்து ,வடகிழக்குச்சூழல்,அரசியல், சமூகவியல்,ஆயதவியல் நிலைமைகளை இவரது கவிதைகள், கதைகள் பேசுகின்றன.                    -வாசுகி சிவகுமார்-

  • 6. சமூகத்தை, வாழ்வை நேராகப் பிரதிபலிப்பதன்றி, இன்றைய படைப்பு முறைமை, எழுத்து முறைமை மாறி வந்து கொண்டிருக்கின்றது. இருக்கின்ற வடிவங்களுக்குள்ளேயே தோற்றங்கள் மாறுகின்றன. பல வேளைகளில் வடிவங்களே அழிகின்றன. எழுத்தின் இந்த மாற்றங்கள் இலங்கை எழுத்தில், உங்கள் எழுத்தில் எவ்வளவு தூரம் வந்திருப்பதாக நினைக்கின்றீர்கள்? (சிறுகதை) 

இன்றை காலகட்டத்தில் படைப்பு முறைமையும் எழுத்து முறைமையும் நிறையவே மாறிவிட்டது. நவீன படைப்பிலக்கியவாதிகளின் உச்சங்களை படிக்கின்றபோது நம்மை நாம் மிக தூரத்தில் நிற்பதான இடைவெளியை உணர்கின்றோம். ஓன்றை நேராக பிரதிபலிக்காமல் பல விவாதங்களுக்குட்படுத்துகின்ற படைப்புக்களும், எழுத்துக்களும் வெற்றி பெற்றுள்ளன

. இருக்கின்ற வடிவங்களுக்குள் நின்று தோற்றங்களை மாற்றுகின்ற அல்லது தோற்றங்களை அழித்து விட்டு புதிய வார்ப்புகளை படைக்கின்ற பரீட்சார்த்த முயற்சிகள எதிர்பார்த்த வெற்றி இலக்கை நோக்கி நகர்வதாகத்தெரிகிறது.

ஜே.ஜே. சில குறிப்புகள்,  நீங்கள் கேட்ட முதல் சட்டகத்திற்குள் வந்து நிற்கிறது. ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டணை வடிவங்களுக்குள் தோற்றங்களை மாற்றுகிறது
.ஜேபி சாணக்கியாவின் கனவுப்புத்தகம்,ராமகிருஷ்ணனின் படைப்புக்கள் இருக்கின்ற வடிவங்களுக்குள் தோற்றங்களை மாற்றுகின்ற வித்தைகளை செய்துள்ளன

சமூகப்பின்புலத்திற்கும் சூழலுக்கும் முக்கியத்துவமளிக்கும் மாற்றங்களை அங்கீகரித்தே ஆக வேண்டும். அதுபின்நவீனத்துவம்,பெண்ணியம்,மார்க்சீயம், அமைப்பியல், பின் அமைப்பியல், சர்ரியலிசம், என பல கோட்பாட்டு மையங்களை பின்புலமாக கொண்டு இருக்கலாம்.

 இலங்கையை பொறுத்தவரை படைப்பாளிகள் வாசிப்பதற்கு நிறையவே சோம்பல்படுகிறார்கள். புதிய முயற்சிகள் வார்ப்புகளில் அவர்களின் கவனத்தை திருப்புவதை சிலர் பாவம் என்று நினைக்கிறார்கள். விழா எடுப்பதும் பொன்னாடை போர்த்துவதும்தான் இலக்கியமாக இங்கு போற்றப்படுகிறது.

 தமிழில் நவீன பரீட்சார்த்த முயற்சிகள் இலங்கை எழுத்தாளர்கள் உள்வாங்க பயப்படுவது போல் தெரிகிறது. புதியவர்களின் எழுத்திலும் ஆழமான வாசிப்பின் போதாமைகளை இனங்காண முடிகிறது. இதனையும்; மீறி தமிழில் வடிவங்கள், தோற்றங்களை மாற்றி எழுதுகின்றவர்கள் நம்பிக்கைத தருகிறார்கள். அம்ரீதா ஏ.எம்.திசோ,அப்துல் ரஸ்ஸாக்,சக்கரவர்த்தி, ரஞ்சகுமார், உமாவரதராஜன், எஸ்.எல்த்தின் சில படைப்புக்களை குறிப்பிட்டுச்சொல்லலாம்.

 பெயர் குறிப்பிட மறந்த பல புதியவர்கள் நவீனங்களை உள்வாங்கி எழுதத்தொடங்கியுள்ளார்கள்.என்னுடைய எழுத்திலும் கணிசமான அளவு மாற்றங்களை செய்துள்ளேன் என்னுடைய கதை சொல்லும் முறையில் மாற்றங்கள் வந்திருக்கின்றன. தோற்றங்கள் வடிவங்களை மாற்றியுள்ளேன்.

 சமூக வாழ்வை நேராகப்பிரதிபலிக்காமல் நக்கலும் நையாண்டியும் கோபமும் ஆவேசமுமாக என்னுடைய அண்மைக்கால எழுத்துக்கள் புதுவடிவம் பெற்றுள்ளன. ஜின், வெண்தாமரை,தேர்தல் கால குறிப்புகள், அரங்கம்,துறவிகளின் அந்தப்புரம், கழுதைகளின் விஜயம் இன்னும் பிரசுரமாகாமல் வைத்திருக்கும் மோட்சம், போன்ற பல கதைகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியும் .

  •  7. உங்கள் 'வேட்டைக்குப் பின்' தொகுப்புப் பற்றி யதீந்திரா எழுதிய விமர்சனம், தொடர்பில் முஸ்லிம் தேசியவாத நண்பர்களும் நீங்களும் கூட அன்றைய நாட்களில் அதிக அசௌகரியப்பட்டிருக்கின்றீர்கள். இந்த நேர்காணலூடாக அந்த அசௌகரியத்தை நிவர்த்தி செய்துவிடுவோமா? 

அது 2005ஆகஸ்ட் 15 தினக்குரலில் நண்பர் யதீந்திரா எழுதியது.. அந்நாட்களில் என்னையும் முஸ்லிம் தேசியவாத நண்பர்களையும் சஞ்சலப்படுத்திய அளவிற்கு பெரிய விஷயமாக கருதவில்லை. சிறுபிள்ளைத்தனமாக விமர்சனங்களை நான் பெரிதும் கவனத்திற்கொள்வதில்லை.

வேட்டைக்குப்பின் நூல் வெளிவந்த சில நாட்களின் பின் வெள்ளவத்தை சில்வா மாவத்தையில் எனது நினைந்தழுதல் சிறுகதை தொகுதிக்கு முன்னுரை வழங்கிய மு.பொ வை சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது.  அவர் முதல் சொன்ன சேதி “ வேட்டைக்குப்பின் மூலம் நீர் எங்கள் சமூகத்தை, போராட்டத்தை சபித்துவிட்டீர் ! ”அதற்குப்பின்தான் யதீந்திராவின் விமர்சனம். வெளிவந்தது..யதீந்திரா தவிர்ந்த வேறு சில விமர்சகர்களும் வேட்டைக்குப்பின் தொகுதிக்கு அந்நாட்களில் எதிர்மறையான குறிப்புகளை எழுதியிருந்தனர்.

வேட்டைக்குப்பின் தொகுப்பில் அதிகமான கவிதைகள் புலிகளால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி சிலாகிக்கப்பட்டிருந்தது. “அறபாத்தின் புலி எதிர்ப்பு கவிதைகளும் இலகுவாக எதிர்ப்புக்கவிதைகள் என்ற அந்தஸ்தை பெற்றுவிடுகின்றது” என்று யதீந்திரா குறிப்பிட்டிருந்தார்.

பலஸ்தீனர்கள்,செர்ப்பியர்கள்,ஆப்கானியர்கள்,காஷ்மீரிகள் ஏன் தமிழ் மக்களும் தங்கள் இனத்தின் விடுதலைக்காகவும் ஆயுத நெருக்குவாரங்களுக்கு எதிராகவும் கவிதை மூலம் குரல் கொடுப்பதை யதீந்திரா ஒர் இன எதிர்ப்பு என்றா பார்ப்பார் ? பரியவில்லை.!

என் போன்ற தேசியவாத நண்பர்களும் ஆயுத வன்முறையால் அல்லாமல் வன்முறையை நியாயப்படுத்தி வக்காலத்து வாங்காமல், பாசிசத்திற்கு முதுகு சொரியாமல் ஒர் இனத்தின் மீது புரியப்பட்ட காட்டுமிராண்டித்தனங்களை இலக்கியத்திள் ஊடாக பதிவு செய்ய முயன்றுள்ளோம். இதை எப்படி மற்றொரு இனக்குழுமத்திற்கு எதிரானதாக சித்தரிக்க முடியும்.

 தமிழ் மக்களினது நியாயமான போராட்டத்தை. எழுத்தாளன் என்ற வகையில் அவர்களின் போராட்டங்களையும் அதனூடாக பெற்ற கசப்பான அனுபவங்களையும் எனது எரி நெரிப்பிலிருந்து கவிதைத்தொகுதியில் கணிசமாக பதிவு செய்துள்ளதை யதீந்திரா படிக்காமல் விட்டது ஆச்சர்யமான விடயமல்ல, ஏனெனில் அவர் அணிந்திருக்கும் கண்ணாடிக்கு மனிதாபிமானத்தை காட்டத்தெரியாது. என்றே நினைக்கின்றேன்.

நினைந்தழுதல் தொகுதியிலும் சில கதைகள் தமிழ் மக்களின் வாழ்வுரிமை குறித்து சிலாகித்து எழுதப்பட்டுள்ளதை அவர் தேடிப்படிப்பது நல்லது.. உண்மையில் புலி எதிர்ப்பு என்பது வேறு. தமிழ் மக்களுக்கான தார்மீக ஆதரவு என்பது வேறு இரண்டையும் யதீந்திரா ஒரே தட்டில் வைத்து பார்த்து தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப முயன்றார்.

 புலிகளை எதிர்ப்பது தமிழ் மக்களின் விடுதலையை எதிர்ப்பது என்று அர்த்தமல்ல. ஒரு பிரதியை இனவாதக்கண்ணோட்டத்துடன் அணுகாமல் இலக்கிய அந்தஸ்துடன் அணுகத்தெரிந்த ஒருவருக்கு யதீந்திரா போல் குழப்பங்கள் ஏற்ட அவகாசமே இல்லை .அந்நாளில் அந்த விமர்சனம். நானும் சில நண்பர்களும் பேசிக்கொண்டதிற்கிணங்க யதீந்திராவுக்கு ஒரு பெரிய விடுதலை வீரன் என்ற பெயரை சூட்ட விரும்பவில்லை?  விவேகமற்ற விமர்சனங்களை ஒதுக்கி விட்டு நமது பணியை திறம்படச்செய்து கொண்டிருந்தால் நேரத்தை கொஞ்சம் சேமிக்கலாம் இல்லையா?     


  • 8.உங்களுடைய எழுத்துப்பதிப்பு செயற்பாடுகள் பற்றி, நண்பர்கள், பதிப்பாளர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்? அவைபற்றி உங்கள் கருத்து?

 சங்கடமான ஆனால் வெளிப்படையான கேள்வி, இதற்குப்பதில் சொல்வது சிலரை மகிழ்ச்சிப்படுத்தலாம் சிலரை ஆத்திரமூட்டலாம்.

 நான் முன்னர் சொன்னது போல் நியாயத்தை சொல்லும் போது முகங்கள் நமக்கு முக்கியமல்ல சொல்லப்படுகின்ற விடமே முக்கியம் பெறுகிறது. என்னுடைய எழுத்தை ஊன்றிப்படிக்கும் நண்பர்கள் நிறையப்பேர் என்னை இன்னும் இது போன்று எழுதுங்கள் என்ற ஆர்வத்தை தருகிறார்கள், குறிப்பாக என்.ஆத்மா,பௌசர்.எஸ்.நழிம்.,எஸ்.எல்.எம், அனார்,பஹீமா ஜஹான் எல்லாவற்றிக்கும் மேலான என் வாழ்க்கைத் துணைவி. திருமணத்திற்குப்பின் எழுதுவது சாத்தியப்படமால் போகுமோ என்று அந்நாட்களில்  அச்சமுற்றிருந்தேன்.

 உண்மையில் திருமணத்திற்குப்பின்தான் எட்டுப்புத்தகங்களை பிரசுரிக்க முடிந்தது. பல நல்ல கதைகளையும் எழுத முடிந்தது. தீவிர இலக்கிய வாசிப்புக்கும் தேடலுக்கும் என்னை உட்படுத்த முனைந்தது. பல வேறு நண்பர்களின் புத்தகங்களையும் பதிப்பிக்க முடிந்தது.சில நண்பர்களின் இலக்கிய அல்லது தத்துவக் கோட்பாடுகளுக்கு இசைவாக படைப்புக்கள் வெளி வெளிவரும் போது பாராட்டுகிறார்கள், பின் அவர்களே அவர்களின் நிகழ்ச்சிக்கு நிரலுக்கு முரண்பட்ட படைப்புக்கள் வரும் போது காட்டமாக விமர்சிக்கவும் செய்கிறார்கள்.

எழுதுவதற்கான கரு மனதில் ஊறி அது படைப்பாக பரிணமிக்கும் வரை நான் படைப்புடன் மட்டும் ஒன்றிப்போகும் ஒருவன். அப்;படைப்பு பிரசுரம் பெற்றபின் அது நல்ல நண்பர்களை பெற்றுத்தருகின்றது சில நண்பர்களை இழக்கவும் செய்கின்றது. என்னுடைய இலக்கிய வாழ்வில் பதிப்புத்துறையில் வரவும் செலவும் ஒரே லயத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கின்றது.

 ஆனால் சில நேரங்களில் கருத்தை கருத்தால் எதிர்கொள்வதை விட மறைமுகமாகவும் நேரடியாகவும் மிரட்டல்களும் வரத்தான் செய்கின்றன. அதற்காக தினமும் செத்துக்கொண்டா வாழ்வது.?  என்னுடைய எழுத்தை விமர்சிக்கும் சில நண்பர்கள் எனக்கு நெருக்குவாரங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்ல அக்கரையிலும் சொல்கிறார்கள். அவர்களை அளவு கடந்து நேசிக்கின்றேன்.

 ஒருவனின் நாடியை பிடித்து அதற்கேற்றவாறு இசைந்து எழுதுவதென்பது என்னளவில் மிகக்கடினமான பணி. அது மனசாட்சியை அடகு வைத்து விட்டு எழுதும் சில எழுத்தாளர்களுக்கு இலகுவாக இருக்கலாம்.. சுதந்திரமாக எழுதுவதற்கு தடையாக இருக்கின்ற நண்பர்களை இழப்பது என்பது பெரிய இழப்பே அல்ல. நியாயத்தை எழுதுவதற்கு தடையாக இருப்பதை தகர்ப்பதும் அல்லது அதனிலிருந்து விடுதலை பெறுவதும் தியாகமும் அல்ல!

நான் செய்கின்ற தொப்பியை ஒரு தலைக்கு மட்டும் அளவெடுத்து இழைவது இல்லை. அது பலரின் தலைக்குப்பொருந்துமாற்போல் செய்கின்றேன். அவரவர் தலைக்கு போட்டுப்பார்த்து இது எனக்குத்ததான் செய்துள்ளீர்கள் என்று சத்தம்போட்டால் நான் என்ன செய்வது ? எனினும் சமாதானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வெடிகுண்டாக என்னுடைய எழுத்துக்கள் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன்.


நன்றி :  தினகரன் வார மஞ்சரி