Saturday 22 October 2011

சிறுகதை - மோட்சம்


நெடுஞ்சாலையிலிருந்து இறங்கி பசுமையான வயற்பரப்பின் குளிர்மைக்குள் கால் புதைத்தார் ஹசரத்.கிராமத்திற்கு செல்லும் குறுக்குப்பாதை இந்த வயற்காடு.சூடு குவிக்கப்பட்ட வயற்பரப்பு அறுணாக்கொடியற்ற குழந்தையின் இடையைப்போல் தோவெனக்கிடந்தது.தூரத்தே மாடுகள் மௌனமாக தலைபுதைத்து மேய்ந்து கொண்டிருந்தன.

“அஸ்ஸலாமு அலைக்கும் அசரத்”

“எதிரே நூவன்னா ஹாஜி”

“வஅலைக்குமுஸ்ஸலாம் எங்கயன் போற ஹாஜி”

“டவுனுக்க அசரத்”

அவர் வார்த்தைகளில் பவ்யம்

“அல்லாட காவல் போய்ட்டு வாங்க”

ஹசரத்தின் ஆசீர்வாதம் பெற்ற நூவன்னா ஹாஜி வகிடெடுத்த வரம்பிலிருந்து சற்று ஒதுங்கி நின்று  ஹசரத் போக வழிவிட்டார்.

ஹசரத் பீலியையும் மேலேகிச்செல்லும் படிக்கட்டுக்களையும் தவிர்த்து ஊருக்குள் நுழைய முடியாது. 
நேற்றிரவு பெய்த மழைக்கு அட்டை நெளியும் மனசுக்குள் கூவிக்கொண்டு மிகக்கவனமாக பாதங்களை பார்த்துக்கொண்டார்.

பீலியைக்கடந்து செல்ல மொத்தம் 26படிகள். ஒரு நாள் ஹசரத்த கணக்கிட்டுக்கொண்டே ஏறிப்பார்த்தார்.முதற்படிக்கட்டில் கால் வைக்கும் போதே பள்ளத்தில்  பீலியில் குளிக்கும் பெண்களின் கும்மாளம் வரவேற்றது.

கதம்பங்களை சுமந்த வந்த காற்று வயல்வெளியெங்கும் பித்துப்பிடித்து அலைந்தது.பல வர்ண சோப்பு, ஷாம்பூக்களின் வாசனை ஹசரத்தின் இதயத்தை தளும்பச்செய்தது.

பீலிக்குள் விழிகளை திருட்டுத்தனமாக எறிந்தார். நிஹாரா சிரித்தபடி நுரைக்க நுரைக்க தலையில் ஷாம்பூ தேய்த்துக்கொண்டு நிற்கிறாள்.இன்னும் உடையாத பனிக்குடம்.அவளிடம் ஹசரத்துக்கு ஒரு இது உண்டு. அவளின் திமிரும் அழகு,துடுக்குப்பேச்சு, பார்க்கப்பார்க்கப் பரவசம் கிளரும் பருவச்சிறுக்கி. மினுங்கும் உடலில் உண்ணிபோல் ஒட்டிக்கிடக்கும் ஈரத்துணிமேல் ஹசரத்துக்கு எரிச்சலாய் வந்தது.

படிக்கட்டுக்களின் இரு மருங்கிலும் கராம்பு, சாதிக்காய், ஈரப்பலா என எண்ணற்ற வாசனை மரங்கள் அடர்ந்து நின்றன. சில மரக்கந்துகளை வெற்றிலைக்கொடிகள் இறுகப்பற்றியபடி மேலேறிச்சென்றன. படியேறிப்போவோர் பீலியில் குளிப்பவர்களை மிக இரகசியமாக ரசித்துப்போக இந்த மரங்கள் தோதாக வாய்த்துவிட்டதில்  பூரித்துப்போகும் இதயங்களுள்  ஹசரத்தும் ஒருவர்.

கராம்பு மரங்கள் காய்த்துத் ததும்பின.  மரக்கந்துகளின் முகங்களில் கிளை கொள்ளா மச்சம். இளவயதுப்பையன்கள் சருகுகள் விலத்தி கராம்பு பொறுக்கிக்கொண்டிருந்தனர். சிலர் மரக்கந்துகளில் ஏறி நின்று கிளைகளை உசுப்பிக்கொண்டிருந்தனர்.

தொலைந்து போன பொருட்களை ஆர்வத்துடன் தேடுவார் போல் கராம்பு பொறுக்கும்  பையன்கள் ஹசரத்தின் சிலமங்கண்டு  கோரசாக ஸலாம் வைத்தனர்.

ஹசரத்தின் மனப்பறவை அடித்துக்கொண்டது. குருபக்தியின் மகோன்னதம்.எல்லையற்ற பரவசத்துடன் தலை தாழ்த்தி பதில் கூறிக்கொண்டார். அவர் முகத்தில் வரவழைத்த சாந்தம் மலர்ந்தது.

மரத்திலிருந்த பையன்கள் இறங்குவதா வேண்டாமா என்ற பதற்றத்தில் கிளைக்கு கிளை தாவி துடிப்பதை உணர்ந்த ஹசரத் கை உயர்த்தி வேண்டாம்  என்பது போல் சைகை செய்தார்.

அவர்கள் ஹசரத்திற்கு மரியாதைக்குறைவாக நடந்து விட்ட குற்ற உணர்வில் சங்கோஜப்பட்டுக்கொண்டிருக்க ஜன்னதுல் பிர்தவ்சின்  நறுமணத்தை அவ்விடத்தில் விட்டு விட்டு ஹசரத் மறைந்து போனார்.


ஹசரத்தின் திருப்பாதம் இந்தக்கிராமத்து கராம்புத்தோட்டங்களில் பதிந்த போது வராத மழை வந்து அவ்வருடம் தோட்டங்கள் செழிப்புற்றன.அவரின் மந்திரங்களுக்காக தோட்டங்கள் தவமிருந்தன.

தோட்டத்தில் ஆரம்பித்த அருள் மழை கடைகள்,வீடுகள் என எங்கும் நீக்கமறப்பொழிந்தது. புழுதியைத்தவிர எதும் தெரியாத பெட்டிக்கடை,  பின்கட்டில் எலிகள் பூனை உள்ளிட்ட பெருச்சாளிகள் வாசம் செய்யும் ஹோட்டல். பழைய இரும்புக்கடை என அவரின் திருக்கரம் பட்ட இசும் தகடுகள் மின்னின.

புதிய கடைகளின் கல்லாப்பெட்டிகளில் ஹசரத் மை தொட்டெழுதிய இசும்கள், செம்புத்தகடுகளில் தலைக்கு மேல் தொங்கும். ஹசரத்தின் காவல் தெய்வங்கள்  உள்ளே நுழையும் கொள்ளையர்களையும், வெள்ளை வானில் வந்து கப்பம் பெறுவோரையும் கடைசி வரை கண்டு கொள்ளவே இல்லை.

மோதின் முற்றி லெப்பை ஆகியது போல் ஹசரத்திற்கும் மோட்சம் கிடைத்து விட்டது.
ஊரின் மையத்தில் கொளுவிருந்து அருள்பாலிக்கும் மௌலானாவாகி விட்டார் ஹசரத். காகம் நிற்க  பனம் பழம் விழுந்த கதையாயிற்று.மத்திசத்தின் வீட்டின் மேல் மாடி ஹசரத்தின் ரூஹ் ஓய்வெடுக்கவும் அருள் வீசவுமென ஒதுக்கப்பட்டது,

கொழும்பில் காலை ஆகாரம் பானும் பருப்பும்;. பகலில் சைவ ஹோட்டலில் வெஜிடேரியன், இரவிலோ ஒரு டீ பன்னுடன் காலம் தள்ளிய ஹசரத்தின் பூட் மெனு, ஒரே நாளில் மாறிப்போய்விட்டது. காலையில்  ஒரு டம்ளரில் முறுகக்காய்ச்சிய பசும்பால், அவித்த முட்டை, வாழைப்பழம். மதியத்தில்  பொறித்த மீன்,வேக வைத்த மரக்கறி, சம்பாச்சோறு, கோழி அல்லது ஆட்டிறைச்சி,இராப்போசனம் இடியப்பம் சவ்வரிசிக்கஞ்சி. ஊர் முழுக்க முறை வைத்து தீனி போட மௌலானாவின் புனித உடலில் தேஜஸ் ஓளிர்ந்தது.

வெயில் படாத முகத்தில் பளீரென சௌந்தர்யம் கூடிற்று.

 “அவகட மொகத்த பாரு சாந்தமாமாபோல என்னா பசுந்து”

சனங்கள் சிலாகித்து வியக்கும்படியான மௌன அழகு ஒரு அபாயம் போல் வளர்ந்து கொண்டு வந்தது.

இளைஞர்கள் அவரைச்சூழ்ந்துகொண்டு பத்வாக் கேட்டபடி வட்டமிட்டிருந்தனர். குதர்க்கமான கேள்விகளுக்கெல்லாம் மௌலானா சலிக்காமல்  பதில் தந்து கொண்டிருந்தார். அவருக்கு சில அந்தரங்க நண்பர்களும் இருந்தனர். அவர்களுடன் இரவில் ஊர் சுற்றுவார். ஆசி வழங்கும் நேரம் தவிர, இளைஞர்களுடன் தேயிலைச்செடிகளுக்குள் மறைந்திருந்து ஓய்வெடுப்பார்.

தேயிலை தோட்டத்தின் அடியில் ஒரு பீலி. சம வேகத்தில் நீர் கொட்டிக்கொண்டிருக்கும். பீலிக்கு லயத்துப்பெண்கள் மட்டுமே குளிக்க வருவார்கள். மாலை நேரங்களில் பீலியை அண்டினாற்போல் மேலிருக்கும் தேயிலைச்செடிகளுக்குள் ஹசரத் சரிந்து கிடக்க அவரண்டையில் இளைஞர்கள்.

லயத்துப்பெண்கள் குறுக்குத்துணி அவிழ்த்து சரிந்து விழும் குளிர் நீரில் மதர்த்த முலைகளை அலசுவதை வியந்தபடி ஹசரத் தேயிலைச்செடிகளின் இடுக்குகள் வழியே கண்னெறிந்து கிடப்பார்.

நீர் விட்டபடி கை விட்டுக்கழுவும் அந்தரங்களை ஹசரத்தின் மனம் ஆலிங்கணம் செய்யும்.

“ஹசரத் நீங்க கஞ்சா குடிக்கிய இது பாவமிலியா?”

கேள்வியில் அடிபட்ட நாகமாய் சீறி எழுவார். தேயிலைச்செடிகள் பலமாக ஆடி ஓயும்.

“தாரேன் சென்ன பாவமின்டு, கஞ்சா ஆலிம்களுக்கு ஹலால். ஷைகுமாருக்கு அது ஞானச்செடி கொஞ்சமா குடிக்கலாம்,மத்தவங்களுக்கு இது ஹராம் தெரிய்மா, ஆதாரம் ஓணுமா “பத்ஹ{ல் முயீன்” என்ட கிதாபுல இரிக்கி, ஏலுமென்டா வேற ஆலிம்சாகிட்டயும் கேளுங்க. அந்தச்செடிய ஒகளப்போல ஆமிகள் தொடப்படா புள்ள விளங்கினா.”

“சரி மௌலானா, எகட அனீஸ் மௌலவி அவங்கட பக்கத்து வூட்டு டீச்சருட்ட சாமத்துல போய்ட்டு வார, இதுவும் அந்தக்கிதாபுல இரிக்கியா?”

 கூட்டத்தில் இருந்த அஸ்வர்தான் கேட்டான்

மௌலானாவின் முகம் இறுகிப் போனது. அடிபட்டவராக சீறி எழுந்தார்.

“ஆர்ரா அது ஹராங்குட்டி வாய்காட்டுர, ஏன்டா அவரு ஒகட வூட்யா வாற. பாயிசா டீச்சர் ஒரு விதவ ஏதாவது ஜின் பிடிச்சிருக்கும் மந்திரிக்கப்போவாராக்கும். “

மௌலானா ஒரு மதிய நேரத்தில் பாயிசா டீச்சரின் வீட்டுக்குள்ளிருந்து வந்தததை தன் வீட்டின் ஜன்னலூடே பார்த்துவிட்ட அஸ்வரின் கேள்வி அவரை தடுமாற வைத்தது. அவன் அதை உள்ளுர ரசித்தபடி உம்மென்றிருந்தான்.

“மௌலானா போன மாசம் கலியானம் முடிச்ச என்ட கிளாஸ் மெய்ட் ரீமா புருசன புடிக்காம விதவையாக வந்திருக்கா இப்ப நானும்  மந்திரிக்கப்போகவா?” கேள்வியை உதடு வரை அடக்கிவிட்டு மெலிதாக சிரித்த சியாமின் பக்கம் மௌலானா திரும்பி என்ன என்பது போல் முறைத்தார்.

அவன் ஒண்டுமில்ல என்பது போல் பலமாக தலையை அசைத்தான்.

மௌலானா பீலியை உற்றுப்பார்த்தார். குளித்துவிட்டுப்போன பெண்களின் அடையாளங்களுடன் அது வெறிச்சோடிக்கிடந்தது.

தளிர் விடும் தேயிலைக்கொழுந்துகளை நொள்ளி வாயில் போட்டு மென்று துப்பினார். ஞானச்செடிகமழ்ந்த அவர் அதரங்களில் தேயிலைச்சாறு கசிந்தது.

அந்தி வெய்யில் மலையடிவாரத்தில் இறங்கிச்சரிந்து கொண்டிருந்தது.மழை உச்சியிலிருந்து விறகுக் கட்டுக்களை சுமந்தபடி பெண்கள் இறங்கிக்கொண்டிருந்தனர்.

மாலை வகுப்பு முடிந்து, ஆண்களும் பெண்களும் ஜாடையாக பேசியபடி வீதியின் இரு மருங்கிலும்  சிரிப்புகளை உதிர விட்டபடி சென்று கொண்டிருந்தனர்.
டியூசன் கொடுத்து விட்டு ரிசானா டீச்சரும் இறங்கிக்கொண்டிருந்தாள்.

கிராமத்தின் இள வட்டங்களின் சௌந்தர்ய தேவதை. அவள் அவர்களை கடந்து சென்ற பின் ரிசானாவின் பின்னழகில் கண்கள் மொய்த்துக்கிடக்க அந்த  அவஸ்தையை அஸ்வர்தான் உடைத்ததான்.

“மௌலானா ரிசானா டீச்சருட பெக்கப்பாருங்க ஒன்டு அள்ளுது,மற்றது அறைக்குது.“ கூட்டம் ஓவென்று சிரித்தது. மலை உச்சியில் மேகங்கள் இறங்கிக்கொண்டிருக்க இருள் கவியத்தொடங்கியது.

பனியின் கரங்கள் பூமியை தீண்ட ஆரம்பித்தன.புற்களின் நுணியில் ஈரம் படர்ந்திருந்தது.மௌலானா எழுந்து நின்றார்.இளைஞர்கள் அவரைச்சூழவும் அரண் அமைத்தது போல் தொடர்ந்தனர்.

“மௌலானா நீங்க இப்ப பள்ளிக்குப்போறதில்ல ஏன்? ”;

தெரு முழுக்க  ஆன்மீகம் கமழ்ந்தது.

“நாங்க முரீது வாங்கினவங்க,இப்ப முரீதும் குடுக்கிய, இபாதத்து சாதாரண ஆக்களுக்குத்தான்.ஞானம் கிடச்சவுடன அல்லாவுடன் சேருதுது எங்கட ஆன்மா.

நாங்க காமராவுக்குள்ள (அறை) இருந்துண்டே கஃபாவுக்குப்போய் தொழுவுற. இது கஷ்புட இல்ம் உள்ளவங்களுக்கு நல்லா விளங்கும்.வலீமாரோட முஷாபஹா செய்யுற. நாயகமவங்க எங்கட ஸலாத்துத்துக்கு புறத்தி செல்லிய”.
2

பழைய மாதம்பயில்தான் ஹசரத் ஞானத்தீட்சைக்கென நேர்ச்சை செய்துவிடப்பட்டிருந்தார். குருகுலத்தின் எல்லையற்ற விதிகளை சகித்தபடி மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டன. தினம் அதிகாலை மூன்று மணிக்கு துயில் கலைதல்,திலாவத், மனப்பயிற்சி,திக்ர்,ஸலவாத்,மொட்டை போட்ட தலையில் நீக்கமற சுற்றப்பட்ட தலைப்பாகை ,தெருக்காற்றுத் தீண்டாத குருகுல வாசம்.அவருக்கு சகிக்கவே இல்லை.

அவரின் குருகுலத்தை அண்டி ஓர் அகன்ற தாமரைக்குளம். இளமையுடன் கன்னிவிட்டிருந்தது.ஆண்களுக்கும் பெண்களுக்குமான வெவ்வேறு படித்துறைகள். மதிய நேரத்தில் சிங்களக்குட்டிகள் குளித்துக்கொண்டிருப்பதை குருகுலத்தின் மேல்மாடியிலிருந்து உற்றுப்பார்த்தால் துலங்கும். ஹசரத்தும் அவரின் தோழர்களும் தினம் ஓய்வு எடுக்கும்  நேரத்தில் கண்டு களிக்கும் அற்புதக்காட்சி.
 
தாமரைக்குளத்திற்கு  திருட்டுத்தனமாக குளிக்கப்போவதென்று தீர்மானித்த ஒரு பகற்பொழுதில் உஸ்தாதுமார்கள் ஜும்ஆராத்திரிக்கு சென்றுவிட்டிருந்தனர்.

வெய்யில் அந்தரித்துக்கொண்டிருந்தது.ஹசரத் என்ற அஸ்லமும், அவரின் தோழர்களும் தாமரைக்குளத்தில் கழுத்துவரை புதைந்து கிடந்தனர்.விழிகள் சிவந்து கன்றிப்போகும் வரை முங்கிக்குளித்தார்கள்.பளிங்கு நீரின் மதர்ப்பில் முகம் பார்த்தபடி சிறு மீன்கள் பாதங்களை சுண்டியிழுக்க சிலிர்த்தபடி நீர்க்குளியல்.

தூரத்தே பெண்களின் படித்துறை.மொட்டை போட்ட இவர்களின் கூத்தில் பெண்களின் கவனம் சிதறியது. கேலியுடன் திரும்பிப்பார்த்து சிரித்துக்கொண்டார்கள். பார்ப்பது பெண்களல்லவா ஆழிக்கூத்தில் குளம் குமுறிக்கொட்டியது.

ஒரு மாதம் கடந்து விட்டது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் உச்சிவெய்யில் குளியல். தாமரைக்குளத்தில் மண் சோறாக்கி திண்பது போல் பாசாங்கு செய்தார்கள். எல்லோரும் சொல்லி வைத்ததாற்போல் படித்துறையில் நின்று தொபீரெனக்குதிப்பார்கள். மணலில் முகம் அழுந்து மட்டும் நீரைக்கிழித்துக்கொண்டு,பின் மேலேகி கெக்கலித்துச்சிரிப்பார்கள்.

”வெள்ளைக்கொக்குகள்.” 

பெண்களின் படித்துறையிலிருந்து பத்மாவதி கூவினாள்.அவளை சைகையால் நையாண்டி செய்தார்கள்.

நள்ளிரவுக்கனவுகளில் காமக்கிளர்ச்சியூட்டும்; தேவதைகளில் ஒருத்தியாக பத்மாவும் வந்து போனாள்.

அதிகாலையில் பிசுபிசுக்கும் சாரத்தை விரல் நுனியில் தூக்கிப்பிடித்தபடி மர்மக்கனவுகளின் இன்ப லாகிரியில் மிதந்தபடி அழுக்கு நீரில் குளிக்கப்போவார்கள்.

அவர்களின் கனவுத்தொழிற்சாலைக்கு தீ வைக்கும் அசுரனாக உஸ்தாத். பகற்பொழுதில் விழித்தும் பார்த்திராத அவர் விழிகள் அன்று அவர்களின் நீர் விளையாடல்களை பார்த்துவிட்டன.

அன்றைய மாலைப்பொழுதே குருகுலத்திலிருந்து அவருக்கு விடுதலை கிடைத்து விட்டது.

“தங்கள் புத்திரன் அஸ்லம் என்பார் குருகுலத்தின் விதிகளை மீறி அதற்கு களங்கம் கற்பித்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் எனவே இங்கு தொடர்ந்தும்  கல்வி கற்க தகுதியற்றவராக கருதப்படுகிறார்.” தந்தி ஊருக்குள் பறந்து வந்து வாப்பாவின் கரத்தில் அமர்ந்து சிறகடித்தது.

 தாமரைக்குளமே உனக்கு நன்றி.தன் விலங்கினை தகர்த்து இளமையின் இன்ப இறக்கைகளை பூட்டிய தாமரைக்குளத்தருகே நின்று விடைபெற்றுக்கொண்டார்.  பத்மா இல்லாத தாமரைக்குளம் சலனமற்றுக்கிடந்தது. அவர் வீட்டின் கரங்கள் அவரை மறுதலித்தன.

 “தலயால தெறிச்ச ஹராங்குட்டி, போற இடத்துல ஒழுங்கா இருந்து மனுசனா வராம,வந்திருக்கான் குரங்கு.”

 வாப்பா அச்சி மரைக்காரின் முறைப்பு. வீடு இன்னொரு குரு குலமாவதற்குள் கொழும்புக்கு வந்து விட்டார்.

பள்ளிவாயலில் துப்பரவாக்கும் பணி. சிறு சம்பளத்தில் மூவேளை உணவு. போதும் என்று உட்கார்ந்து விட்டார்.மோதினற்ற சுபஹ் வேலையில் அதான் ஒலித்தார். குரலின் இனிமையில் பழைய மோதின் இரண்டாவது இடத்திற்கும் இவர் முதற்தரத்திற்குமாக உயர்த்தப்பட்டார்.

இமாமற்ற தருணங்களில் தொழுகை நடாத்தினார். சிறு பிரசங்கமும் செய்து பார்த்தார்.ஓதிப்பார்த்தார்.இசும் கட்டினார். காகம் நிற்க பனம் பழம் விழுந்தது. பணமும், புகழும் உயர ஆன்மீகம் நல்ல கலை. அஸ்திரத்தை கையிலெடுத்த அஸ்லம் அசரத் மௌலானாவாகிப்போனார்.

3

மௌலானாவின் பிரசன்னம் இந்தக்கிராமத்தில் கடந்த நான்கு வருடங்களாக நித்தியம் பெற்றுள்ளது. மத்திசத்தின் வீடே அருள் வழங்கும் ஸ்தலம்.

மத்திசம் அவர் வயதான மனைவி. அந்த வீட்டில் அவருக்கு எந்த தொந்தரவும் இருக்கவில்லை.இந்த வீட்டை தெரிவு செய்ததற்கு மற்றுமோர் காரணம் அங்கிருந்த கருப்பு வெள்ளை டீ .வி.

வாரம் ஒரு தடவை புதன்கிழமை இரவில் 9.30 மணிக்கு அம்பிகா மற்றும் லலிதா ஜுவலரிமார்ட் ஆதரவில் போடும் தமிழ் படங்கள் அவர் கலைப்பசியை போக்கின.

புதன் கிழமைகளில் ஒன்பது மணிக்குப்பின் மௌலாவின் தரிசனங்கள் பெரும்பாலும் சனங்களுக்கு கிடைப்பதில்லை.அவர் தியானமிருப்பதாக கதைகளை உலவவிட்டிருந்தார்.ஜின்களுக்கு இரவில் ஓதிக்கொடுப்பதாக வேறு  வதந்திகளை பரப்பியிருந்தார். ரிமோட் இல்லாத டீவியண்டை அடிக்கொரு தரம் சென்று அதன் குமிழைத்திருகி செனல்களை மாற்றிக்கொள்வார்.


மௌலானா அறைக்குள் கிடந்து உழன்று கொண்டிருந்தார். மனம் நிலையற்று தவித்துக்கொண்டிருந்த சமயம் கதவு தட்டப்பட்டது.

“யாரது?” என்றார்

“அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா” என்றபடி இரு வாலிப நண்பர்கள் அறைக்குள் நுழைந்தனர்.

மௌலானாவிற்கு மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பீறிட்டது.கதைப்பதற்கு ஆள் கிடைத்துவிட்டதில் அவர் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகை புடைத்தெழுந்தது. சுற்றி வைத்த ஞானச்சுருட்டை உதட்டில் பொருத்தி தீ மூட்டினார்.

“இனி என்தயன் செய்தி”

 என்பது போல் சிஷ்யர்களை ஏறிட்டார். அவரின் கேள்விக்கு காத்திருந்தவர்கள் போல்
“மௌலானா ஒகளுக்கு செக்ஸ் சாமி ரஜனீஷ தெரியுமா?” என்றான் ஒருவன்
“அவரு ஒரு தியானம் செல்லித்தந்திருக்கிய. குட்டிகளும், பொடியன்மாரும் இடுப்பளவு தண்ணிக்குள்ள கைகோர்த்து நிருவாணமா நின்டு எந்த கெட்ட நெனப்புமில்லாம தியானம் செய்யனுமாம்”

அவரின் முகம் பிரகாசித்தது.கஞ்சா வாசம் அறையில் சுழன்று உழன்றது. நண்பர்கள் இலேசாக இருமிக்கொள்ள மௌலானா கட்டிலில் ஒருக்களித்து சாய்ந்து கொண்டார்.

கேள்வி கேட்டவனின் பக்கம் திரும்பி  “ஆருடா அவன் ரஜனீசு, புதுசா தியானம் செல்லிக்குடிக்கிய?

“பல வருஷங்களுக்கு முன்னால நாம சியாரத்தக்கட்டி, அதுல ஆம்புளயும் நம்மட பொம்பளயளும், பொடியன்மாரும், குட்டிகளும் மாசா மாசம் கூடி பண்ணுற தியானத்த விட அவன் என்னடா புதுசா நமக்கு செல்லிக்குடுக்கிய?”

“போய்பாருங்கடா  கல்முன கடக்கர பள்ளி, கச்சிமல, கதிர்காமம் இந்த இடத்துல எத்துன கள்ள சோடி, களட்டிகளும் குருத்துகளுமா தியானம் பன்னுதுகள். இது வலீமாரோட பெயருல நடக்குற காம மோட்சம் டோய்?” மௌலானாவின் சிரிப்பு புகைச்சுருளுடன் இணைந்து அறையை மயக்கியது.

கருக்கல் நேரம் வந்தவர்கள் விடைபெற்றுச்செல்ல புதிதாக ஒரு உருவம் அறைக்குள் நுழைந்தது. அது பரிச்சயமான முகம். மௌலானா அவன் முகத்தில் பதற்றத்தையும்,அவரசத்தையும் உணர்ந்தார்.

 “என்ன மவன்?” என்றார் ஆதுரமாய்.

“மௌலானா உம்மாக்கு சரி வகுத்துவலி, துடிக்கிய கொஞ்சம் வந்து மந்திரிக்கனும்.” அவர் மறுப்புச்சொன்னால் அவன் அழுது விடுவான் போலிருந்தது.

மௌலானா வீடுகளுக்கு சென்று அருள்பாலிப்பதில்லை என்ற கொள்ளையை வரித்துக்கொண்டாலும்,சிஷ்யனின் முகத்தில் தெரிந்த கலவரமும் பதற்றமும் அவன் மேல் மௌலானாவுக்கு பிரியத்தைப்போர்த்தின.

“மௌலானா வாகனம் வந்தீக்கிய”

 அவர் முகத்தில் படர்ந்த சிந்தனையின் உக்கிரம் அவனை கிலிகொள்ளச்செய்தது. தஸ்பீஹ்மாலையை கையில் உருட்டியபடி கீழிறங்கி சிஷ்யனைத்தொடர்ந்தார்.

அவர் அறைக்குள் நுழைந்த போது, அவள் வலியால் துடித்துக்கொண்டிருப்பதை மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு அட்டையைப்போல் சுருண்டு இரு கரங்களால்  வயிற்றை அழுந்தப்பற்றியபடி முணங்கிக்கொண்டிருந்தாள்.

கட்டிலில் அலங்கோலமாக உருண்டு துடிக்கும் அவளின் வாளித்த அங்கங்கள் ஆங்காங்கே துருத்திக்கொண்டு மௌலானாவுள் உறங்கும் மிருகத்தின் முகத்தில் நீர் தெளித்தது.

அவள் கணவன் சவூதியில் என்றார்கள். நான்கு வருடங்களாகியும் இதோ வாரன் என்று போக்கு காட்டியபடி இருக்கின்றான் என சிஷ்யன் வரும் போதே முறையிட்டுக்கொண்டு வந்தான்.

அரேபிய மணங்கமழும் அற்புதமான வீடு!

மௌலானா அவளை பார்த்துக்கொண்டே நல்லெண்ணையும், பன்னீரும் கேட்டார். சாம்பிராணி போடச்சொன்னார்.

சிஷ்யன் ஓரு நிமிடத்தில் கேட்ட பொருட்களை கையில் ஏந்தியபடி நின்றான்.வீடு முழுக்க அகில் புகையின் நறுமணங்கமழ்ந்தது.

பல வருடங்கள் ஆண் தொடாத அவளை, தொட்டு நிமிர்த்தி மல்லாக்கச்சரித்தார்.மதர்த்த மார்புகள் எகிறிக்கொண்டு அதிர்ந்தன.சிஷ்யன் உம்மாவின் மார்புகளை முந்தானையால் மூடி மூடி மறைத்துக்கொண்டிருந்தான்.

 மௌலானா அவள் இடையில் இறுக்கிய நாடாவை தளர்த்தி வயிற்றையும், தொப்புளையும் பன்னீரால் கழுவினார். செம்மஞ்சல் மயிரடர்ந்த நாபியின் கீழ் அவர் வில்கள் நர்த்தனம் புரிந்தன.

பரவசம் ததும்பிய அறையில் மீட்டப்படாத வீணை ஒன்றின் இனிய கானம் உச்சஸ்தாயில் ஒலிக்கத்தொடங்கியது.

 கண்மூடி படுத்திருக்கும் அவள் இதழ்களின் இள நகை அறை முசிய பிரகாசித்தது.

19.07.07
அதிகாலை-5.46


Monday 17 October 2011

வீதி விபத்துக்களும் , தெரிந்து கொள்ள வேண்டிய விதி முறைகளும்


     சர்வதேச ரீதியாக விபத்துக்கள் குறைவடைந்து கொண்டு செல்கின்ற வேளை ஆசிய நாடுகளில் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வாகவே கருதப்படுகிறது. இலங்கை போன்ற சிறிய தீவுகளில் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது அதனை விஞ்சிய விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதை புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.


1977ம்ஆண்டு தொடக்கம் 2007ம்ஆண்டு வரையிலான ஆய்வுகளின்படி இலங்கையில் விபத்துக்களில் உயிரிழந்தவர்களின்  தொகையானது 40000.00 ஆகும். இக்காலப்பகுதியில் 370000.00 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த முப்பது வருடத்தில் 1120848.00 வீதி விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கூறினார்.

இலங்கையில் நாளொன்றிற்கு 150 விபத்துக்கள் இடம் பெறுகின்றன. அதில் 5-7மரணங்கள் சம்பவிக்கின்றன. 50க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர்.

உண்மையில் இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் இவ்விபத்துக்கள் பாரிய நெருக்கடியைதோற்றுவிக்கவல்லன. சமூக பொருளாதார சுகாதாரப் பிரச்சினைகளை இவ்விபத்துக்கள் ஏற்படுத்துகின்றன.

75 சதவீதமான விபத்துக்களுக்கு மனிதர்களின் கவனயீனமே காரணமாக அமைந்து விடுகின்றது.

வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கு பல காரணிகள் இனங்காணப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக சில காரணிகளை நோக்கலாம்.


பாதசாரிகள் வீதி ஒழுங்குக்கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடிக்காமை :
பாதசாரிகள் விபத்துக்களை தவிர்ந்து கொள்ளும் பொருட்டு அரசாங்கம் பல ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது.எனினும் பெரும்பாலான பாதசாரிகள் இந்த ஒழுங்குகளை பின்பற்றுவதில்லை. பாதசாரிகள் விபத்துக்களை தவிர்ந்து கொள்வதற்கென முக்கிய இனங்காணப்பட்ட இடங்களில் மஞ்சல் கோடுகளை அமைத்துள்ளது.எனினும் சிவப்பு சமிக்ஞை விளக்குகளுக்கு காத்திருக்காமல் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் இடைவெளிக்குள் நுழைய முற்பட்டு விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதுண்டு.

மேம்பாலம் சுரங்கப்பாதைகளும் மக்கள் செறிவாக வீதியை கடக்கும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் சோம்பல் அவசரம் இலகுவாகவும் வேகமாகவும் காரியங்களை முடிக்க வேண்டும் என்ற பதற்றம் பாதசாரிகளின் நெரிசல் போன்ற இடர்கள் வீதி விபத்துக்களுக்கு காரணிகளாக அமைந்து விடுகின்றன.

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதில் உள்ள முறை கேடுகள்.

முறையான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்குப்பதிலாக இலஞ்சம் ஊழல் முறைகளைப்பின்பற்றி சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ளும் வழிமுறை இன்னும் இலங்கையில் சட்டவிரோதமாக நடைபெற்றுவருகின்றது. நாட்டில் அவ்வப்போது சுற்றிவளைக்கப்படும் போலிக்கச்சேரிகள் இதற்கோர் எடுத்துக்காட்டு.
குறித்த திணைக்களங்களில் இறுக்கமான சட்டங்கள் அமுலில் இருந்தாலும் சமூகவிரோதிகள் சில நுணுக்கங்களை கண்டுபிடித்து  சட்டவிரோதமாக உள் நுழைந்து முறையற்ற சாரதிகளுக்கு  அனுமதிப்பத்திரங்களை வழங்கி வருகின்றனர்.

இத்தகைய சாரதிகளால் பெரும்பாலான வீதி விபத்துக்கள் இடம்பெறுவதுண்டு. வீதியில் பொருத்தப்பட்டிருக்கும் வீதி ஒழுங்குகள் மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த எந்த அறிவுமற்ற இவர்களால் சமூகப்பொருளாத பின்னடைவை தேசம் அடிக்கடி சந்திக்க வேண்டியுள்ளது. 
“இலங்கையில் உள்ள சாரதிகளில் இரண்டு இலட்சம் பேருக்கு சாரதி ஆசனத்திற்கு பின்னால் நிற்பதற்கு கூட தகுதியில்லை” என்ற முன்னால் போக்குவரத்து அமைச்சர் ‘டயஸ் அழகப்பெரும’யின் கூற்று இங்கு கவனிக்கத்தக்கது.

இது நிற்க !


மது போதையில் வாகனம் ஓட்டுவதால் வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதுபோல் கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வாகனங்களை செலுத்துவதாலும் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றது.
இத்தகைய விபத்துக்களின் பின்புலத்தைகண்டறிந்தும் குறித்த சாரதிகள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்காததன் விளைவு அவர்கள் மற்றுமொரு விபத்து நேரக்காணியாக அமைந்து விடுகின்றனர்.
சில போக்குவரத்துப் பொலிசாரின் ஊழல் இலஞ்சம் பெறும் கீழ்த்தரமான நடவடிக்கைகளால் மேசமான சாரதிகளும் இலகுவாக தப்பித்துக்கொள்ளவும் தண்டனைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஏதுவாக அமைந்து விடுகின்றன.

வேகமாக வாகனத்தை செலுத்துதல்

இலங்கையில் வாகனத்தை செலுத்தும் அதி வேக முறைகள் நகரங்களில் பொருத்தப்பட்டிருந்தாலும் பெரும்பாலான சாரதிகள் அவற்றை கவனத்திற்கொள்வதே இல்லை. 
வளர்ச்சியடைந்த நாடுகளில் சாரதிகளின் கவனத்தைக் கவரும் பொருட்டு ‘நியோன்’ விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வாகன வீதி வேகத்தடைகள் பொருத்தப்பட்டிருப்பது போல் இங்கும் அவை நடைமுறைக்கு கொண்டு வரப்படல் வேண்டும்.

இலங்கையில் வேகமாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்காணிக்கவென போக்குவரத்துப்பொலிசாரும் கருவிகளும் போதாது. பொலிசாரின் கண்காணிப்பை தன் சக சாரதிகளுக்கு சமிக்ஞை மூலம் அடையாளப்படுத்தும் சாரதிகளின் துர்நடத்தையும் விபத்துக்களுக்கு தூபம் போடுகின்றன. 
போக்குவரத்துப்பொலிசார்  நிற்கும் இடங்களில் வேகம் குறைத்து மீளவும் அதி வேகமாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்கானிக்கவும் அதிகபட்ச தண்டனைப்பெற்றுக் கொடுக்கவும் இலங்கை போக்குவரத்து சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வரவேண்டும்.

பாதை ஒழுங்கையும் கோடுகளையும் மீறி முந்திச்செல்ல எத்தனிக்கும் வாகனங்களாலும் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதுண்டு.இலஞ்சம் பெறாத அதிகாரிகளால் 80 வீதமான விபத்துக்களை குறைக்க வழியுண்டு.

வாகனங்களின் அதிகரிப்பு:

இலங்கையில் அண்மைக்காலமாக தீவிரமாக பின்பற்றப்படும் தி;றந்த பொருளாதாரக் கொள்கையானது கட்டுப்பாடற்ற வாகனங்களின் இறக்குமதிக்கு வழிகோலியுள்ளது. வீதி அபிவிருத்தி திட்டமிடப்படாத தேசத்தில் அதிகரித்த வாகனப்பாவனையும் விபத்துக்களுக்கு காரணியாக அமைந்து விடுகின்றது.


விபத்துக்கள் மட்டுமன்று கால நேர விரயமும் அதனால் ஏற்படும் பொருளாதாரப்பின்னடைவும் கவனத்திற்கொள்ளப்படவேண்டும். வீதி அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் தொகையை விட விபத்துக்களால் பாதிப்புறும் மக்களின் சிகிச்சைக்காக அரசாங்கம் பெருந்தொகை பணத்தை வருடாந்தம் ஒதுக்குகின்றது என்பது ஈண்டு கவனிக்கத்தக்கது.

வீதி விபத்துக்களில் சிக்குப்படும் நபர்கள் ஆபத்தான கடுமையான காயம் சாதாரண காயம் அல்லது மரணம் போன்ற சம்பவங்களால் பாதிப்புக்குள்ளாவதுண்டு. இதனால் ஏற்படும் பொருளாதாரப்பின்னடைவை விட உளவியல் ரீதியான தாக்கங்களுக்கே அதிகம் முகம் கொடுக்கின்றனர்.

வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்
  • கடுமையான வீதி போக்குவரத்து சட்டங்களை உருவாக்கலும் நடைமுறைப்படுத்தலும்
  • பாடசாலை மட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கள் ஆற்றுப்படுத்தல்
  • பொதுமக்களுக்கு பொலிசாரின் மூலம் விபத்துக்கள் மற்றும் வீதி ஒழுங்குகள் பற்றி அறிவுறுத்தல்
  • இரகசிய கமெராக்கள் மூலம் முறைகேடான சாரதிகளின் நடவடிக்கைகளை கண்காணித்தல்
  • போக்குவரத்து துறையில் நிகழும் இலஞ்சம் ஊழல் நடவடிக்கைகளை முற்றாக ஒழித்தல்



விபத்துக்களின் பின் அரச ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விதி முறைகள்

விபத்துக்களின் பின் அதற்குரிய ந~;டயீட்டுத்தொகையைப்பெற்றுக்கொள்ள சில வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இவற்றில் அனேக விதிமுறைகளை நாம் தெரிந்து வைத்திருக்காததன் காரணமாக உரிய  காலத்தில் இழப்பீட்டுத்தொகையையினைப்பெற முடியாமல் போவண்டு.


தனியார் துறையில் பணிபுரிபவர்கள் விபத்தொன்று சம்பவித்த சில நாழிகைகளில் உரிய நிறுவனத்திற்கு அறிவிப்பதன் மூலம் விடுமுறையினை பெற்றுக்கொள்ளவும் குறித்த நிறுவனத்தின் வைத்திய சலுகைகளைப்பெற்றுக்கொள்ளவும் முடியும்.


விபத்தொன்று சம்பவித்த மறு வினாடியில் அவசியம் பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும்.நமது சொந்த வாகனமாயின் அதற்குரிய ந~;டயீட்டைப்பெறவும் மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்கவும் பொலிசாரின் அறிக்கை மிக முக்கியம்.கவனக்குறைவான சாரதியை தப்பிக்க விடுவதும் அல்லது சமரசம் பேசுவதும் மற்றுமொரு விபத்துக்கு வழிவிடும் செயலாகும் .


அரசாங்க ஊழியர்கள் கடமைக்குச்செல்லும் போதும் கடமை நிமித்தம் வெளியே செல்லும் போதும் விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது.அரசாங்க ஊழியர்களின் தவறுகளால் அல்லாமல் பிறரால் ஏற்படும் விபத்துக்களுக்கு அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையுடன் ந~;டயீடும் பெற்றுக்கொள்ளலாம்.

தாபனக்கோவையின் 12ம்அத்தியாயத்தில்; 09ம்பிரிவில் அவசர விபத்து லீவுக்கான ஏற்பாடுகள் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

1986.11.20 திகதியிடப்பட்ட 352ம் இலக்க சுற்றறிக்கையிலும் இது குறித்து விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

1993.09.21 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையிலும் (23 -93) கடமையில் ஈடுபட்டிருக்கும் போது காயத்திற்குள்ளாகும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ந~;டயீடு வழங்குவது தொடர்பான திருத்திய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேற்படி சுற்றறிக்கையில் -03ம்பிரிவில் காயத்தின் தன்மைக்கேற்ப மருத்துவ சபையின் சிபாரிசுக்கமைவாக பின்வரும் அடிப்படையில் லீவுகள் வழங்கப்பட வேண்டும் என விதந்துரைக்கப்பட்டுள்ளது.
 
வருடமொன்றுவரை சம்பளமுள்ள லீவுகளும் அதன் பின்னர் ஆறு மாதம் அரைச் சம்பள  லீவுகளும்
 
மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஓராண்டு லீவுக்கும் மேலதிகமாக தகைகுறித்தான கடந்த லீவில் பெற்றுக்கொள்ள அனுமதி உண்டு.
ந~;டயீடு,அல்லது ஓய்வூதியங்கள் திட்டத்தின் கீழ் அரச ஊழியர் ஒருவர் காயமடைந்தால் மரணமடையும்,அல்லது நிரந்தர இயலாமைக்கு உட்படும் உத்தியோகத்தர் ஒருவர் 55 வயதிற்கு குறைந்தவராக இருப்பின் அவர் 55 வயதில் இளைப்பாறியதாக கவனத்திற்கொண்டு விபத்தில் சிக்கியவருக்கு ஓய்வூதியக்கணக்கில் அவரது சம்பளம் வைப்பிலிடப்படும்.


காயத்தினால் மரணம் ஏற்பட்டால் ந~;டயீடுகள் தொடர்பாக ஆய்வு செய்யும் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக ஓய்வூதிய பணிப்பாளரினால் மரணமடைந்த அரச உத்தியோகத்தரில் தங்கியிருப்போருக்கு 60 மாதச்சம்பளம் ந~;டயீடாக வழங்கப்படும்.


2011.07.02ம்திகதி அரசாங்க நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.வீ அபேகோன் அவர்களினால் கையொப்பமிட்டு அனுப்பப்பட்;ட சுற்றறிக்கையின் படி அரசாங்க ஊழியர்களின் விபத்து தொடர்பான மேன்முறையீடுகளுக்கென உயர் மட்டக்குழுவொன்று நியமிக்கப்பட்டு சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


அலுவலகர் கடமைக்கு  வரும்போது அல்லது கடமை முடிந்து வீடு திரும்பும் போது விபத்து நேர்ந்திருப்பின் அறிக்கையில் பின்வரும் விடயங்கள் கவனத்திற்கொள்ளப்படவேண்டும்.


  1. அலுவலகர் ஒருவர் சாதாரணமாக வேலைக்கு வரவேண்டிய நேரம் சேவை முடிந்து வீடு செல்ல வேண்டிய நேரம்.
  1. வந்த நேரமும் திரும்பிச்சென்ற நேரமும்.
  1. அலுவலகர் சாதாரணமாக சேவை நிலையத்திற்கு வரும் முகவரி விபத்து நிகழ்ந்த இடத்திற்கு உள்ள தூரம் வந்த விதம் பிரயாண செய்த தூரமும சென்றிருந்த தூரமும்   (சாதாரணமாக பிரயாண வழிக்கு அப்பாற்பட்ட இடமொன்றில் விபத்து நிகழ்ந்திருப்பின் அது பற்றிய மேலதிக விளக்கம் இணைக்கப்படல் வேண்டும்)
  1. முடியுமான சந்தர்ப்பங்களில் அலுவலரின் கூற்றிலும் விபத்தை நேரில் கண்டோரின் கூற்றுக்களிலும் உள்ளடங்கியுள்ள விடயங்கள் பற்றிய அவதானிப்புகள்.
  1. வார இறுதியில் அல்லது அரச விடுமுறை நாட்களில் விபத்த நிகழ்ந்திருப்பின் குறித்த சேவை நிலையத்தில் பணி புரிவதற்கு முன் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கின்றதா என்பது பற்றிய விபரம்.
  1.  மோட்டார் வாகனம் அல்லது மோட்டார் சைக்கிள் அல்லது வேறு வாகனங்களை செலுத்திக் nகhண்டிருக்கைளில் விபத்து நிகழ்ந்திருப்பின் சாரதி அனுமதிப்பத்திரமும். வாகன அனுமதி பத்திரம் மற்றும் காப்புறுதிப்பத்திரம் ஆகியன உள்ளதா என்பது பற்றிய விபரம்.

(உரிய சந்தர்ப்பங்களில் வரவுப்பதிவேட்டுப்பிரதி சாரதி அனுமதிப்பத்திர இன்சுரன்ஸ் லைசன்ஸ் பிரதிகள் இணைத்து அனுப்படல் வேண்டும்)

 திடீர் விபத்துக்களின் போது அலுவலகரின் விண்ணப்பத்தில் அவரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

விபத்து நிகழ்ந்து ஒரு வருட காலத்திற்குள் ந~;டயீட்டு விண்ணப்பத்தினையும் உரிய ஆவணங்களையும் தாபனப்பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்கல் வேண்டும்.

ஒரு வருடத்திற்கு பிந்திய ந~;டயீட்டு விண்ணப்பங்களுடன் தாமதித்தமைக்கான நியாயமான காரணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சின் செயலாளரால் உறுதிப்படுத்தப்பட்டு அனுப்படல் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விபரங்களை நோக்கும் போது அரச அலுவலகர் ஒருவர் விபத்துக்களின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பற்றிய அடிப்படை அறிவைப்பெற்றுக்கொள்ளமுடியும்

விபத்து நடைபெற்றபின் ந~;டயீட்டுப்பணம் கிடைக்காமல் இருப்பதற்கு  ஆவணங்களின் குறைபாடும் முறையாக விண்ணப்பிக்காமையுமே பிரதான காரணியாகும்.

அரச அலுவலகங்களில் மட்டுமல்ல பாடசாலைகளிலும் கடமை தவிர்ந்த ஏனைய புறகிருத்தியப்பணிகளில் ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்படுவதுண்டு.


விளையாட்டுப்போட்டி மேலதிக வகுப்புக்கள் அல்லது பாடசாலை அபிவிருத்திகளுக்கான பணிகள் போன்ற செயற்பாடுகளில் முன் அனுமதி பெற்று செயற்படும் போது நிகழும் விபத்திற்கு ந~;டயீட்டைப்பெற விண்ணப்பிக்க முடியும்.

கல்வி அமைச்சில் அல்லது திணைக்களத்தலைவரின் முன் அனுமதி பெற்று செல்லும் கல்விச்சுற்றுலா களஆய்வுகளின் போது ஏற்படும் விபத்துகளுக்கும் ந~;டயீட்டைப்பெற பின்வரும் ஆவணங்களை; சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

  • சம்பளத்திரட்டுப்பதிவேடுகள்
  • பொலிஸ் நிலைய முறைப்பாட்டுப்பதிவுகள்
  • நேரத்தை அத்தாட்சிப்படுத்தும் சாட்சியங்கள்
பின்வரும் விபத்துக்களால் பாதிப்பு ஏற்பட்டால் கடமை லீவோ ந~;டயீடோ வழங்கப்படமாட்டாது இதற்காக விண்ணப்பிக்கவும் முடியாது.
  • அரச அலுவலரின் கவனயீனத்தினால் நிகழும் விபத்து
  • அரச அலுவலரின் தவறினால் நிகழும் விபத்து
  • சட்ட விதிகளுக்கு முரணான முறையில் ஏற்படும் விபத்து
  • திணைக்கள கட்டளைகள் வீதிப்பிரமாணங்களை மீறும் வகையில் செயற்பட்டதினால் நிகழும் விபத்து
  • மது போதையில் ஏற்பட்ட விபத்து
சட்டவிதிகளுக்கு முரணாக செயற்பட்டு அரசாங்க ஊழியர் அல்லாத ஒருவர் விபத்தில் காயம்பட்டு பாதிக்கப்படும் போது அவர் எந்தத் தரப்பிலிருந்தும் உதவிகளைப் பெறமுடியாத   நிர்க்கதிக் குள்ளாக்கப்டுகிறார்.


எனவே வீதி ஒழுங்கைப் பேணுவதுடன் வாகனங்களைச் செலுத்தும் போதும் சட்டவிதிகளைப் பின்பற்றி ஒழுகினால் பெரும்பாலான விபத்துக்களை தவிர்ந்து கொள்ள முடியும்.

 பிரசுரம்: உண்மை உதயம் மாத இதழ் அக்டோபர் 2011

Saturday 15 October 2011

நேர்முகம் : பகுதி 03

  • ஈழத்துச்சிறுகதையின் இரண்டாவது கட்டப்படைப்பாளிகளில் முக்கியமானவர் ஓட்டமாவடி அறபாத். சிறுகதை,கவிதை,பதிப்பு,சமூகச்செயற்பாடுகள் என்று செயற்பட்டு வருபவர்.எரி நெருப்பிலிருந்த,வேட்டைக்குப்பின் என்ற கவிதைத்தொகுப்புகளையும் நினைந்தழுதல்,ஆண்மரம் போன்ற காத்திரமான சிறுகதைத்தொகுப்புகளையும் தந்திருக்கிறார்.   தன் நிலையை,சமுதாயத்தை,தன் மண்ணின் உள் வெளிப்பக்கங்களை புற விசைகளைப் பொருட்படுத்தாது மண்ணின் பச்சையோடு தன் எழுத்துக்களில் கொண்டு வருபவர்.   முஸ்லிம் சமுதாயம்,முஸ்லிம் தமிழ் இன உறவுகள் முரண்களை தீவிரமாக எதிர்கொண்டு, 90களுக்குப்பிந்திய காலத்தில் இருந்து ,வடகிழக்குச்சூழல்,அரசியல், சமூகவியல்,ஆயதவியல் நிலைமைகளை இவரது கவிதைகள், கதைகள் பேசுகின்றன.                    -வாசுகி சிவகுமார்-

  • 6. சமூகத்தை, வாழ்வை நேராகப் பிரதிபலிப்பதன்றி, இன்றைய படைப்பு முறைமை, எழுத்து முறைமை மாறி வந்து கொண்டிருக்கின்றது. இருக்கின்ற வடிவங்களுக்குள்ளேயே தோற்றங்கள் மாறுகின்றன. பல வேளைகளில் வடிவங்களே அழிகின்றன. எழுத்தின் இந்த மாற்றங்கள் இலங்கை எழுத்தில், உங்கள் எழுத்தில் எவ்வளவு தூரம் வந்திருப்பதாக நினைக்கின்றீர்கள்? (சிறுகதை) 

இன்றை காலகட்டத்தில் படைப்பு முறைமையும் எழுத்து முறைமையும் நிறையவே மாறிவிட்டது. நவீன படைப்பிலக்கியவாதிகளின் உச்சங்களை படிக்கின்றபோது நம்மை நாம் மிக தூரத்தில் நிற்பதான இடைவெளியை உணர்கின்றோம். ஓன்றை நேராக பிரதிபலிக்காமல் பல விவாதங்களுக்குட்படுத்துகின்ற படைப்புக்களும், எழுத்துக்களும் வெற்றி பெற்றுள்ளன

. இருக்கின்ற வடிவங்களுக்குள் நின்று தோற்றங்களை மாற்றுகின்ற அல்லது தோற்றங்களை அழித்து விட்டு புதிய வார்ப்புகளை படைக்கின்ற பரீட்சார்த்த முயற்சிகள எதிர்பார்த்த வெற்றி இலக்கை நோக்கி நகர்வதாகத்தெரிகிறது.

ஜே.ஜே. சில குறிப்புகள்,  நீங்கள் கேட்ட முதல் சட்டகத்திற்குள் வந்து நிற்கிறது. ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டணை வடிவங்களுக்குள் தோற்றங்களை மாற்றுகிறது
.ஜேபி சாணக்கியாவின் கனவுப்புத்தகம்,ராமகிருஷ்ணனின் படைப்புக்கள் இருக்கின்ற வடிவங்களுக்குள் தோற்றங்களை மாற்றுகின்ற வித்தைகளை செய்துள்ளன

சமூகப்பின்புலத்திற்கும் சூழலுக்கும் முக்கியத்துவமளிக்கும் மாற்றங்களை அங்கீகரித்தே ஆக வேண்டும். அதுபின்நவீனத்துவம்,பெண்ணியம்,மார்க்சீயம், அமைப்பியல், பின் அமைப்பியல், சர்ரியலிசம், என பல கோட்பாட்டு மையங்களை பின்புலமாக கொண்டு இருக்கலாம்.

 இலங்கையை பொறுத்தவரை படைப்பாளிகள் வாசிப்பதற்கு நிறையவே சோம்பல்படுகிறார்கள். புதிய முயற்சிகள் வார்ப்புகளில் அவர்களின் கவனத்தை திருப்புவதை சிலர் பாவம் என்று நினைக்கிறார்கள். விழா எடுப்பதும் பொன்னாடை போர்த்துவதும்தான் இலக்கியமாக இங்கு போற்றப்படுகிறது.

 தமிழில் நவீன பரீட்சார்த்த முயற்சிகள் இலங்கை எழுத்தாளர்கள் உள்வாங்க பயப்படுவது போல் தெரிகிறது. புதியவர்களின் எழுத்திலும் ஆழமான வாசிப்பின் போதாமைகளை இனங்காண முடிகிறது. இதனையும்; மீறி தமிழில் வடிவங்கள், தோற்றங்களை மாற்றி எழுதுகின்றவர்கள் நம்பிக்கைத தருகிறார்கள். அம்ரீதா ஏ.எம்.திசோ,அப்துல் ரஸ்ஸாக்,சக்கரவர்த்தி, ரஞ்சகுமார், உமாவரதராஜன், எஸ்.எல்த்தின் சில படைப்புக்களை குறிப்பிட்டுச்சொல்லலாம்.

 பெயர் குறிப்பிட மறந்த பல புதியவர்கள் நவீனங்களை உள்வாங்கி எழுதத்தொடங்கியுள்ளார்கள்.என்னுடைய எழுத்திலும் கணிசமான அளவு மாற்றங்களை செய்துள்ளேன் என்னுடைய கதை சொல்லும் முறையில் மாற்றங்கள் வந்திருக்கின்றன. தோற்றங்கள் வடிவங்களை மாற்றியுள்ளேன்.

 சமூக வாழ்வை நேராகப்பிரதிபலிக்காமல் நக்கலும் நையாண்டியும் கோபமும் ஆவேசமுமாக என்னுடைய அண்மைக்கால எழுத்துக்கள் புதுவடிவம் பெற்றுள்ளன. ஜின், வெண்தாமரை,தேர்தல் கால குறிப்புகள், அரங்கம்,துறவிகளின் அந்தப்புரம், கழுதைகளின் விஜயம் இன்னும் பிரசுரமாகாமல் வைத்திருக்கும் மோட்சம், போன்ற பல கதைகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியும் .

  •  7. உங்கள் 'வேட்டைக்குப் பின்' தொகுப்புப் பற்றி யதீந்திரா எழுதிய விமர்சனம், தொடர்பில் முஸ்லிம் தேசியவாத நண்பர்களும் நீங்களும் கூட அன்றைய நாட்களில் அதிக அசௌகரியப்பட்டிருக்கின்றீர்கள். இந்த நேர்காணலூடாக அந்த அசௌகரியத்தை நிவர்த்தி செய்துவிடுவோமா? 

அது 2005ஆகஸ்ட் 15 தினக்குரலில் நண்பர் யதீந்திரா எழுதியது.. அந்நாட்களில் என்னையும் முஸ்லிம் தேசியவாத நண்பர்களையும் சஞ்சலப்படுத்திய அளவிற்கு பெரிய விஷயமாக கருதவில்லை. சிறுபிள்ளைத்தனமாக விமர்சனங்களை நான் பெரிதும் கவனத்திற்கொள்வதில்லை.

வேட்டைக்குப்பின் நூல் வெளிவந்த சில நாட்களின் பின் வெள்ளவத்தை சில்வா மாவத்தையில் எனது நினைந்தழுதல் சிறுகதை தொகுதிக்கு முன்னுரை வழங்கிய மு.பொ வை சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது.  அவர் முதல் சொன்ன சேதி “ வேட்டைக்குப்பின் மூலம் நீர் எங்கள் சமூகத்தை, போராட்டத்தை சபித்துவிட்டீர் ! ”அதற்குப்பின்தான் யதீந்திராவின் விமர்சனம். வெளிவந்தது..யதீந்திரா தவிர்ந்த வேறு சில விமர்சகர்களும் வேட்டைக்குப்பின் தொகுதிக்கு அந்நாட்களில் எதிர்மறையான குறிப்புகளை எழுதியிருந்தனர்.

வேட்டைக்குப்பின் தொகுப்பில் அதிகமான கவிதைகள் புலிகளால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி சிலாகிக்கப்பட்டிருந்தது. “அறபாத்தின் புலி எதிர்ப்பு கவிதைகளும் இலகுவாக எதிர்ப்புக்கவிதைகள் என்ற அந்தஸ்தை பெற்றுவிடுகின்றது” என்று யதீந்திரா குறிப்பிட்டிருந்தார்.

பலஸ்தீனர்கள்,செர்ப்பியர்கள்,ஆப்கானியர்கள்,காஷ்மீரிகள் ஏன் தமிழ் மக்களும் தங்கள் இனத்தின் விடுதலைக்காகவும் ஆயுத நெருக்குவாரங்களுக்கு எதிராகவும் கவிதை மூலம் குரல் கொடுப்பதை யதீந்திரா ஒர் இன எதிர்ப்பு என்றா பார்ப்பார் ? பரியவில்லை.!

என் போன்ற தேசியவாத நண்பர்களும் ஆயுத வன்முறையால் அல்லாமல் வன்முறையை நியாயப்படுத்தி வக்காலத்து வாங்காமல், பாசிசத்திற்கு முதுகு சொரியாமல் ஒர் இனத்தின் மீது புரியப்பட்ட காட்டுமிராண்டித்தனங்களை இலக்கியத்திள் ஊடாக பதிவு செய்ய முயன்றுள்ளோம். இதை எப்படி மற்றொரு இனக்குழுமத்திற்கு எதிரானதாக சித்தரிக்க முடியும்.

 தமிழ் மக்களினது நியாயமான போராட்டத்தை. எழுத்தாளன் என்ற வகையில் அவர்களின் போராட்டங்களையும் அதனூடாக பெற்ற கசப்பான அனுபவங்களையும் எனது எரி நெரிப்பிலிருந்து கவிதைத்தொகுதியில் கணிசமாக பதிவு செய்துள்ளதை யதீந்திரா படிக்காமல் விட்டது ஆச்சர்யமான விடயமல்ல, ஏனெனில் அவர் அணிந்திருக்கும் கண்ணாடிக்கு மனிதாபிமானத்தை காட்டத்தெரியாது. என்றே நினைக்கின்றேன்.

நினைந்தழுதல் தொகுதியிலும் சில கதைகள் தமிழ் மக்களின் வாழ்வுரிமை குறித்து சிலாகித்து எழுதப்பட்டுள்ளதை அவர் தேடிப்படிப்பது நல்லது.. உண்மையில் புலி எதிர்ப்பு என்பது வேறு. தமிழ் மக்களுக்கான தார்மீக ஆதரவு என்பது வேறு இரண்டையும் யதீந்திரா ஒரே தட்டில் வைத்து பார்த்து தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப முயன்றார்.

 புலிகளை எதிர்ப்பது தமிழ் மக்களின் விடுதலையை எதிர்ப்பது என்று அர்த்தமல்ல. ஒரு பிரதியை இனவாதக்கண்ணோட்டத்துடன் அணுகாமல் இலக்கிய அந்தஸ்துடன் அணுகத்தெரிந்த ஒருவருக்கு யதீந்திரா போல் குழப்பங்கள் ஏற்ட அவகாசமே இல்லை .அந்நாளில் அந்த விமர்சனம். நானும் சில நண்பர்களும் பேசிக்கொண்டதிற்கிணங்க யதீந்திராவுக்கு ஒரு பெரிய விடுதலை வீரன் என்ற பெயரை சூட்ட விரும்பவில்லை?  விவேகமற்ற விமர்சனங்களை ஒதுக்கி விட்டு நமது பணியை திறம்படச்செய்து கொண்டிருந்தால் நேரத்தை கொஞ்சம் சேமிக்கலாம் இல்லையா?     


  • 8.உங்களுடைய எழுத்துப்பதிப்பு செயற்பாடுகள் பற்றி, நண்பர்கள், பதிப்பாளர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்? அவைபற்றி உங்கள் கருத்து?

 சங்கடமான ஆனால் வெளிப்படையான கேள்வி, இதற்குப்பதில் சொல்வது சிலரை மகிழ்ச்சிப்படுத்தலாம் சிலரை ஆத்திரமூட்டலாம்.

 நான் முன்னர் சொன்னது போல் நியாயத்தை சொல்லும் போது முகங்கள் நமக்கு முக்கியமல்ல சொல்லப்படுகின்ற விடமே முக்கியம் பெறுகிறது. என்னுடைய எழுத்தை ஊன்றிப்படிக்கும் நண்பர்கள் நிறையப்பேர் என்னை இன்னும் இது போன்று எழுதுங்கள் என்ற ஆர்வத்தை தருகிறார்கள், குறிப்பாக என்.ஆத்மா,பௌசர்.எஸ்.நழிம்.,எஸ்.எல்.எம், அனார்,பஹீமா ஜஹான் எல்லாவற்றிக்கும் மேலான என் வாழ்க்கைத் துணைவி. திருமணத்திற்குப்பின் எழுதுவது சாத்தியப்படமால் போகுமோ என்று அந்நாட்களில்  அச்சமுற்றிருந்தேன்.

 உண்மையில் திருமணத்திற்குப்பின்தான் எட்டுப்புத்தகங்களை பிரசுரிக்க முடிந்தது. பல நல்ல கதைகளையும் எழுத முடிந்தது. தீவிர இலக்கிய வாசிப்புக்கும் தேடலுக்கும் என்னை உட்படுத்த முனைந்தது. பல வேறு நண்பர்களின் புத்தகங்களையும் பதிப்பிக்க முடிந்தது.சில நண்பர்களின் இலக்கிய அல்லது தத்துவக் கோட்பாடுகளுக்கு இசைவாக படைப்புக்கள் வெளி வெளிவரும் போது பாராட்டுகிறார்கள், பின் அவர்களே அவர்களின் நிகழ்ச்சிக்கு நிரலுக்கு முரண்பட்ட படைப்புக்கள் வரும் போது காட்டமாக விமர்சிக்கவும் செய்கிறார்கள்.

எழுதுவதற்கான கரு மனதில் ஊறி அது படைப்பாக பரிணமிக்கும் வரை நான் படைப்புடன் மட்டும் ஒன்றிப்போகும் ஒருவன். அப்;படைப்பு பிரசுரம் பெற்றபின் அது நல்ல நண்பர்களை பெற்றுத்தருகின்றது சில நண்பர்களை இழக்கவும் செய்கின்றது. என்னுடைய இலக்கிய வாழ்வில் பதிப்புத்துறையில் வரவும் செலவும் ஒரே லயத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கின்றது.

 ஆனால் சில நேரங்களில் கருத்தை கருத்தால் எதிர்கொள்வதை விட மறைமுகமாகவும் நேரடியாகவும் மிரட்டல்களும் வரத்தான் செய்கின்றன. அதற்காக தினமும் செத்துக்கொண்டா வாழ்வது.?  என்னுடைய எழுத்தை விமர்சிக்கும் சில நண்பர்கள் எனக்கு நெருக்குவாரங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்ல அக்கரையிலும் சொல்கிறார்கள். அவர்களை அளவு கடந்து நேசிக்கின்றேன்.

 ஒருவனின் நாடியை பிடித்து அதற்கேற்றவாறு இசைந்து எழுதுவதென்பது என்னளவில் மிகக்கடினமான பணி. அது மனசாட்சியை அடகு வைத்து விட்டு எழுதும் சில எழுத்தாளர்களுக்கு இலகுவாக இருக்கலாம்.. சுதந்திரமாக எழுதுவதற்கு தடையாக இருக்கின்ற நண்பர்களை இழப்பது என்பது பெரிய இழப்பே அல்ல. நியாயத்தை எழுதுவதற்கு தடையாக இருப்பதை தகர்ப்பதும் அல்லது அதனிலிருந்து விடுதலை பெறுவதும் தியாகமும் அல்ல!

நான் செய்கின்ற தொப்பியை ஒரு தலைக்கு மட்டும் அளவெடுத்து இழைவது இல்லை. அது பலரின் தலைக்குப்பொருந்துமாற்போல் செய்கின்றேன். அவரவர் தலைக்கு போட்டுப்பார்த்து இது எனக்குத்ததான் செய்துள்ளீர்கள் என்று சத்தம்போட்டால் நான் என்ன செய்வது ? எனினும் சமாதானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வெடிகுண்டாக என்னுடைய எழுத்துக்கள் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன்.


நன்றி :  தினகரன் வார மஞ்சரி


Saturday 8 October 2011

நேர்முகம் : பகுதி 02


  • ஈழத்துச்சிறுகதையின் இரண்டாவது கட்டப்படைப்பாளிகளில் முக்கியமானவர் ஓட்டமாவடி அறபாத். 
    சிறுகதை,கவிதை,பதிப்பு,சமூகச்செயற்பாடுகள் என்று செயற்பட்டு வருபவர்.     எரி நெருப்பிலிருந்து,   வேட்டைக்குப்பின் என்ற கவிதைத்தொகுப்புகளையும் நினைந்தழுதல்,ஆண்மரம் போன்ற காத்திரமான சிறுகதைத்தொகுப்புகளையும் தந்திருக்கிறார்.   தன் நிலையை,சமுதாயத்தை,தன் மண்ணின் உள் வெளிப்பக்கங்களை புற விசைகளைப் பொருட்படுத்தாது மண்ணின் பச்சையோடு தன் எழுத்துக்களில் கொண்டு வருபவர்.   முஸ்லிம் சமுதாயம்,முஸ்லிம் தமிழ் இன உறவுகள் முரண்களை தீவிரமாக எதிர்கொண்டு, 90களுக்குப்பிந்திய காலத்தில் இருந்து ,வடகிழக்குச்சூழல்,அரசியல், சமூகவியல்,ஆயதவியல் நிலைமைகளை இவரது கவிதைகள், கதைகள் பேசுகின்றன.                    -வாசுகி சிவகுமார்-



4. ஒரு விளிம்பு நிலைச் சமூகம் என்ற வகையில் கிழக்கில் பெரும்பான்மை போலத் தெரியும் சிறுபான்மையான முஸ்லிம் சமூகம் அதன் போலித் தோற்றமான அரசியல் பலம் இந்நிலை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? 

முஸ்லிம்களிள் அரசியல் நிர்ணயம் 1981க்குமுன் நீலம் பச்சை என்றிருந்தது.பெரும்பான்மை சிங்கள அரசியல் கட்சிகளின் அரசியல் நிரலுக்கு முண்டு கொடுக்கக்கூடிய ஒரு சமூகமாகவே அது இருந்தது. 1988இல் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக தன்னை பதிவு செய்து கொண்டதின் பின் 1994 இல்  அது ஏக காலத்தில் 9 ஆசனங்களைப்பெற்று தேசியக்கட்சிகளின் கனவுக்கோட்டையாக மாறியது. முஸ்லிம்களின் வாழ்வுரிமைப்போராட்டத்தை தேசிய சர்வதேச மயமாக்கியதில் முஸ்லிம் காங்கிரசுக்கு கணிசமான பங்குண்டு . அதன் தலைவர் எம்.எச்எம்.அஷ்ரபின் மரணத்துடன் முஸ்லிம்கள் அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளனர்.  அரசியல் பலமும் சிதைவடைந்து விட்டது. 

போலித்தனமான அரசியல் கோஷங்களும்,கிளைவிடும் பல கட்சிகளும்,சுய நல கட்சித்தாவல்களும் இன்றைய முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சூன்யத்தை பறைசாற்ற நல்ல உதாரணங்கள். மேய்ப்பரில்லாத மந்தைகளாக விளிம்பு நிலை முஸ்லிம் மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில் முஸ்லிம மக்களின் அரசியல் எதிர்காலம் மிகப்பயங்கரமானதாக என் முன் விரிகின்றது.

 குர்ஆனில் ஒரு வரியைக்கூட “திக்காமல்” ஓதத்தெரியாதவர்களெல்லாம் முஸ்லிம் அரசியல் பற்றி பேசுவதும் தங்களுக்கு தாங்களே தலைவனென்று குதூகலிப்பதையும் பார்த்து கியாமத் நாள் நெருங்கி விட்டது என்ற அச்சம்தான் மேலோங்குகின்றது.

 சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் மிகைப்படுத்தப்பட் வாய்ச்சவாடல்களும் போலித்தோற்றமும் அபாயகரமானது. உதிரிக்கட்சிகளின் மாய ஜால வித்தைகள் முஸ்லிம்களின் அரசியலை ரொம்பவுமே மலினப்படுத்தி விட்டது.கிழக்கில் பெரும்பான்மை என்ற சுயதம்பட்டம் எல்லாம் எதிர்காலத்தில் பூஜ்ஜியமாக போகின்றது என்பதைக்கூட அறியாத புற்று நோயாளியின் தரத்தில் கிழக்கு முஸ்லிம்களின் அரசில் இருப்பு அடகு வைக்கப்பட்டுள்ளது என்பதை நடக்கின்ற நிகழ்வுகள் நமக்கு சொல்கின்றன.

5. முஸ்லிம் சமூகம் அதன் பெண்கள் இது தொடர்பாக பல்வேறு உள்,வெளிச் சர்ச்சைகள் இருக்கின்றன. முஸ்லிம் பெண்கள் தொடர்பாக அதன் புத்திஜீவிகளையும் கடந்து ஏனையவர்கள் அதிகம் அக்கறை கொள்ளுகின்றார்கள் இந்த அக்கறைகளின் பின்னால் உள்ள அரசியல்,அரசியலின்மை பற்றிய உங்கள் பார்வை? 

முஸ்லிம் சமூகத்தின் பெண்கள் தொடர்பான உள்,வெளிச்சர்ச்சைகளும் புத்திஜீவிகளின் அகன்ற அக்கரையும் அதன் பின் புல அரசியலும் ,அரசியலின்மையும் முஸ்லிம் சமூகத்தின் ஆணாதிக்கச்செயற்பாட்டின் பின் விளைவுகளின் மோசமான எதிரொலி என்பது என் அபிப்பிராயம்.

பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள வாழ்வியல் உரிமைகளை சில நேரங்களில் பெரும்பான்மையான ஆண்கள் வழங்கத் தவறிவிடுகின்றார்கள். பிற்காலத்தில் ஆணாதிக்கச்சிந்தனைகளும் மத அமைப்புக்களும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் பெண்களை பூட்டிவைத்து போஷிக்க முனைந்த போது பெண்களை முஸ்லிம் தேசியம் ஒடுக்குகிறது என்ற கருத்து வலுப்பெற்றது.

இது ஆணின் தகுதியுணர்வின் (ளுநளெந ழக Pசழிசநைவல) மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஒரு வடிவமே அன்றி  பெண்னுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளுக்கும் இஸ்லாத்திற்கும்  கிஞ்சித்தும் தொடர்பில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

குர்ஆன் வழங்கியுள்ள வாழ்வியல் உரிமைகளை தன் சொந்த சமூகத்திற்குள்ளேயே மறுதலிக்கின்ற ஒடுக்குகின்ற தீவிர செயற்பாடுகள் அவளை ஒரு பெண்ணிய விடுதலைக்கு நகர்த்துகின்றது. 

யதார்த்தத்தில் பெண்களுக்கு கல்வி,திருமணம், சமூகச்சீர்திருத்தம், விவாகரத்து உரிமை, மறுமணம் செய்யும் உரிமை, கருத்துச்சுதந்திரம்,போன்ற எண்ணற்ற சுதந்திரங்களை இஸ்லாம் வழங்கியுள்ளது.


புத்திஜீவிகளினதும் மற்றவர்களினதும் பின்னால் ஒழுங்கற்ற அரசியல் மலிந்திருப்பதைப்போல் முஸ்லிம் பெண்களின் உரிமை குறித்த அறியாமையும் தெளிவின்மையும் குவிந்திருந்திருக்கின்றது.

 பெண்ணுடல் சார்ந்த அவர்களின் அரசியல் மற்றும் கொள்கைகள் சித்தாந்தங்கள் அவர்கள் அவாவுகின்ற சட்டகத்திற்குள் அடக்க முடியாத தருணங்களில் முஸ்லிம் சமூகத்தின் பெண் விடுதலை குறித்து உரத்துப்பேசுவதை ஒரு மிகைப்படுதத்தப்பட்ட அரசியல் என்றே கருதுகின்றேன். 

உண்மையில் முஸ்லிம் பெண்கள் தேசிய சர்வதேச ரீதியாக பாதிக்கப்படுவதை இஸ்லாமிய மதத்துடன் ஒப்பிடுவதை இந்த புத்தி ஜீவிகள் நிறுத்திவிட்டு பெண் சுதந்திரம் அவளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்.சிலரின் பெண் மீதான அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளும் விதி முறைகளும், ஆணாதிக்க கடும்போக்கும்,நில சொத்துரிமை ஆதிக்கங்களும் பொதுவான பெண் மீதான அத்துமீறல் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது.


தொடரும்......
நன்றி :  தினகரன் வார மஞ்சரி

Wednesday 5 October 2011

புரிந்து கொள்ளப்படாத பெண்ணுரிமையும்,போராடும் முஸ்லிம் பெண்களும்.


இகபரத்தின் இரட்சகனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம்.. இஸ்லாத்தின் அறிவியல், ஆன்மிக வளர்ச்சியை சகித்துக் கொள்ளத்திராணியற்ற மேற்குலகு இஸ்லாத்திற்கெதிரான சதிகளில் பட்டவர்த்தனமாகவே ஈடுபட்டு வந்தது.

இஸ்லாமிய சமூகத்திற்குள்ளிருந்து மூளைச்சலவை செய்யப்பட்ட ஈமானிய பலஹீனர்களை இனங்கண்டு அவர்களினூடாக கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்தி ஐக்கிய உம்மாவை சிதைக்கும் கைங்கரியங்களை மேற்கின் வல்லூறுகள் கச்சிதமாக செய்து வருகின்றன.

ஸல்மான் ருஷ்டி,தஸ்லீமா நஸ்ரின், ஹெஜ்.ஜி.ரசூல் போன்ற எழுத்தாளர்கள் மூலம் ஹிந்துப் பார்ப்பனீயமும், கிறிஸ்தவ மிஷனரிகளும் ஒருங்கிணைந்து இஸ்லாமிய சித்தாந்தங்களுக்கெதிரான பிரகடனங்களையும் கலகங்களையும் உருவாக்கின.

மேற்கின் தொடர்பூடகங்கள் எரியும் சமவெளியில் வக்கிர எண்ணெய்யூற்றி ஜுவாலை எழுப்பின.

இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ள மகத்தான உரிமைகளை மறுதலித்து அல்லது மூடிமறைத்து விட்டு பெண்ணுரிமைக்கோஷங்கள் முன்னெடுக்கப்பட்டன. கி.பி. (1798-1801) வரையிலான காலப்பகுதியில் முஸ்லிம்களிருலிருந்தே தயார்படுத்தப்பட்ட முதல் நபராக முஹம்மத் ரிபாஅத் அல் தஹ்தாவி  என்பவர் கருதப்படுகின்றார்.
இவர் மூலமே பெண்ணியச்சிந்தனைகள் உள்ளிட்ட இஸ்லாமிய விழுமியங்களை மலினப்படுத்தும் கருத்துக்கள் தோற்றம் பெற்றன. பாரிஸ் நகர நாகரீகத்துடன் இஸ்லாமிய நாகரீக அம்சங்களை ஒப்பு நோக்கிய அல்தஹ்தாவீ இஸ்லாமிய கலை கலாச்சார பரிணாமங்களை காலோசிதமானதல்ல என்ற தர்க்கங்களை முன்வைத்தார்.

இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ள நாகரீகத்தையும் உரிமையையும் மலினப்படுத்திய இவர் பாரிஸ் நகர நாகரீகமே உன்னதமானது என்ற மனப்பதிவை உருவாக்கினார். உலக உச்சங்களை தொடும் கட்டற்ற நாகரீகம் என பாரிஸ் நகரத்து கலாச்சாரத்தை போற்றி எழுதினார்.

பெண்ணை ஒரு மனிதப்பிறவியாக ஏற்காத கிறிஸ்வத உலகம் அவளுக்கு ஆன்மா உண்டா இல்லையா என்ற  வாதப்பிரதிவாதங்களில் கூட இறங்கியது. அவள் ஆணுக்குறிய போகப்பொருள் என்ற எல்லையுடன் பெண்ணின் தகுதியை சுருக்கிக்கொண்டது.

அவள் அலங்கரிக்கவும்,குளிக்கவும் எல்லை போட்டது.ஹிந்து மதமோ தனது மதமாச்சரியங்களுக்குள் அடக்கி எல்லையற்ற ஆச்சாரங்ளை போட்டது. விதவையை மறுமணம் செய்ய தடைவிதித்ததுடன் அவள் ஒரு சபிக்கப்பட்ட பிறவியாக பிரகடனம் செய்தது.

கணவனை இறந்தபின் அவனை எரிக்கும் தீயில் உடன் கட்டை என்ற சதி ஏறச்சொன்னது. பெண் குழந்தை எனில் பிறந்தவுடன் நெல் மணியும் கள்ளிச்சொட்டும் கொடுத்து கொன்றொழித்தது. அறிவியல் வளர்ச்சி கண்ட பின் கருவிலேயே இனங் கண்டு பெண்ணை நசுக்குகின்ற சமூகக் கொடுமையை இன்றை நாகரீக உலகில் தரிசிக்க முடிகிறது.

யதார்த்தத்தில் பெண்ணியம் என்பது அல்லது பெண்ணிய சிந்தனை என்பது என்ன?பெண்ணுடைய இயல்பையும் அவளுடைய விடுதலைக்கான கருத்தையும் இணைத்த சொல்லே இந்த பெண்ணியம்.சமூக சிக்கல்களில் பெண்ணடிமை தொடர்பான கூறுகளையும் அதற்கான தீர்வுகளையும் கருத்தியல் வடிவில் பார்ப்பதும் பெண்ணியம் எனப்படுகிறது.

இந்தப்பெண்ணிய கருத்தியல் வளரும் போது அதன் வளர்ச்சிக்கு மிகத்தடையாக சமூக அமைப்பு இருக்கின்றது. இந்த சமூக அமைப்பில் ஒடுக்க நினைப்பது ஆணாதிக்க உணர்வின் இயல்பாக உள்ளது.
உழைப்புப்பிரிவினையும், தனிச்சொத்துடமையும் சமூகத்தில் உருவானபோது  பெண் குடும்பம் என்ற கூட்டுக்குள் அடக்கப்பட்டாள்.மறுபுறம் மதவியல் கருத்துக்கள் அவளை வழிநடாத்தியது.
மறுபடியும் பெண்களை இழிவாகவும் கவர்ச்சியாகவும் காட்ட திரைப்படங்கள் வந்தன. அதை அனுமதிப்பது ஆணின் வக்கிர உணர்வும் பெண் மீதான அவனின் பெறுமதியற்ற எண்ணங்களுமே!

பாலியல் உணர்வை தூண்டும் கூறுகளை உருவாக்குவதில் பெண்களை பயன்படுத்தும் சினிமாவும்,தொலைக்காட்சி விளம்பரங்களுமே பெண் உணர்வின் மரணத்திடல்கள்.  மேலும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வருகையும் பெண்களின் உரிமைகளை சிந்திக்கும் ஆற்றலை மடடுப்படுத்தியது.
இணையத் தளங்களில் பெண்களுக்கெதிராக கருத்தியல்கள் வடிவமைக்கப்பட்டன. பெண்ணை அழகியல் சார்ந்த அடிமையாகவே மேற்குலகு இனங்காட்டியது.

தங்மாங்கல்யத்திட்டம் (மூன்று வருடங்களுக்கு பெண்களை வேலைக்கமர்த்தி மொத்தமாக பணம் தருவது) தேவதாசி, சாமிக்கு நேர்ச்சை செய்து விடல்  மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் நவீன விபச்சாரத்தை அறிமுகப்படுத்தி பெண்னை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும் விளைவுகள் இன்றும் அமுலில் உள்ளன.

உலகமாயதல் என்ற கோஷத்தின் மூலம்  பெண்கள் “கோல் சென்ரர்களில்” கொத்தடிமைகளாக பாலியல் சுரண்டலுக்குட்பட்டவர்களாக வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
அழகிப்போட்டி,பாலியல் சுற்றுலா,டேட்டிங், போன்ற சீரழிவுகளால் பெண் இனமே சிதைவுண்டு மானம் இழந்து நிற்கிறது. சாதியத்தின் பெயரால் நில ஆக்கிரமிப்பின் பெயரால் முதலில் சுரண்டப்படுவதுபெண்கள்.

காஷ்மீர்,பலஸ்தீனம்,நாகலாந்து,பங்களாதேஷ்,பிலிப்பைன்ஸ்,குர்திஷ்தான்,நேபாளம், இலங்கை போன்ற  விடுதலை போராட்ட நாடுகளில் முதல் இலக்கு பெண்களுக்கெதிரான பாலியல் யுத்தமே!
  
இத்தகைய பெண் மீதான அடக்கு முறை இஸ்லாத்திலும் உண்டு என்ற தப்பபிப்பிராயம் சில ஆங்கிலம் படித்த முஸ்லிம் பெண்களிடமும் படிந்துள்ளதால் முஸ்லிம் பெண்களுக்கு தாங்கள் விடுதலைப் பெற்றுத்தரவந்த இரட்சகர்களாக தங்களை கருதிக்கொண்டு விடுதலைப் போராட்டங்களில் குதித்துள்ளனர்.

இஸ்லாம் பெண்ணை மனித இனத்தின் உன்னத படைப்பு என்று பாராட்டுகின்றது. அவள் ஒரு மகத்துவமான ஜீவன் என்று ஏற்றுக்கொள்வது அவள் மண்ணில் கௌரவமாக வாழும் உரிமையை தந்து விடுகின்றது.

(உங்கள் ) மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காகவே உங்களிலிருந்து  அவன் படைத்தும் உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும்,உண்டு பண்ணியிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும் (அல்குர்ஆன் 30:4)

அவர்கள் (பெண்கள்) உங்களது ஆடையாகும் நீங்கள் அவர்களுக்குறிய ஆடையாகும். (அல்குர்ஆன் 2:187)

இது போன்ற எண்ணற்ற வசனங்கள் மூலம் பெண் ஆணின் தேவைக்காக அன்றி வாழ்வின் உன்னதங்களை அனுபவிக்க படைக்கப்பட்டவள் என்பதை அல்லாஹ் உணர்த்துகின்றான்.
பெண்ணுரிமை பற்றி மகளிர் அமைப்புக்கள் முன் வைக்கும் வெற்றுக்கோஷங்கள் இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ள உரிமைகள் குறித்த தெளிந்த சிந்தனையற்ற விளைவின் முடிவும் இஸ்லாம் குறித்த நுனிப்புல் மேய்தலுமே என்பது துலாம்பரம்.

நல்லறங்கள் செய்யும் போது ஆண் பெண் பாகுபாடின்றி சரிசமனான கூலியை வழங்குவதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது . இது பெண்களின் உரிமையை ஆணுக்கு நிகராக வழங்குகின்ற யார்த்தமாகும்.

இன்னும் அவர்கள் இம்மியளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 4:124)

ஆண் அல்லது பெண்  அவர் விசுவாசம் கொண்டவராக இருக்க, யார் நற்செயலை செய்தாரோ நிச்சயமாக நாம் அவரை நல்ல வாழ்க்கையாக வாழச்செய்வோம் .இன்னும் நிச்சயமாக அவர்களுக்கு அவர்களது கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில்,மிக அழகானதைக்கொண்டு நாம் கொடுப்போம். (அல்குர்ஆன் 16:97)

எவர் ஒரு தீமையைச்செய்கிறாரோ அவர் அதைப்போன்றதையே தவிர (அதற்கதிகமாய்)கூலியாகக்கொடுக்கப்படமாட்டார். இன்னும் எவர் ஆணாயினும் பெண்ணாயினும் அவர் விசுவாசங்கொண்டவராக இருக்கும் நிலையில், நல்ல செயலைச்செய்வாரோ அ(த்தகைய)வர்கள் சுவனபதியில் நுழைந்து விடுவார்கள் அதில் கணக்கின்றியே (அனைத்து சுவனத்து அருட்கொடைகளிலிருந்தும்) அவர்கள் கொடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 40: 40)

மேற்படி வசனங்களும் இதனை நிகர்த்த பல வசனங்களும்  பெண்ணுக்குள்ள சரிசம விகிதாசாரத்தை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன. அவள் செய்கின்ற கூலிக்கு ஆண்மீகமாயினும் சரி உலகியல் விவகாரமானாலும் சரி தக்க கூலியை அவள் பெற்றுக்கொள்கின்றாள். இங்கு மதத்தின் பெயரால் சுரண்டப்படும் அநீதி தடுக்கப்பட்டு தகுந்த வாக்குறுதியை குர்ஆன் வழங்கி விடுகின்றது,

பெண்களை துன்புறுத்துவதையும் அவள் உள்ளுணர்வில் காயமேற்படுத்துவதையும் இஸ்லாம் வன்மையாக கண்டித்து பெண்ணுரிமையை பேணிப்பாதுகாத்து பெண்களின் மானத்தையும் பாதுகாக்கின்றது.

இன்றைய நாகரீக உலகில் கலாச்சாரம் தழைத்தோங்குவதாக மார்தட்டும் நாடுகளில் பெண் ஈவ்டீஸிங் என்ற பெயரில் உயிருடன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகிறாள்.வன்புனர்வுக்குள்ளாக்கப்பட்டு அவளின் தன்மானத்தையே சந்திக்கு இழுத்து வந்து பத்திரிகைகள் தம் அரிப்பை தீர்த்துக்கொள்கின்றன.

மேலும் விசுவாசம் கொண்ட ஆண்களையும் விசுவாசம் கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தைச்செய்ததாகக் கூறி துன்புறுத்துகிறார்களோ அத்தகையவர்கள் நிச்சயமாக பெரும் அவதூறையும்,பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொண்டனர்.
(அல்குர்ஆன் 33: 58)

(ஆகவே) நிச்சயமாக விசுவாசம் கொண்ட ஆண்களையும் ,விசுவாசம் கொண்ட பெண்களையும் (இவ்வாறு) துன்புறுத்திய பின்னர் அவர்கள் (தவ்பாச்செய்து)  மன்னிப்புக்கோரவில்லையோ அத்தகையோர் அவர்களுக்;கு நரக வேதனையுண்டு அவர்களுக்கு (விசுவாசிகளை அவர்கள் கரித்தவாறு) நெருப்பால் கரிக்கும் வேதனையுமுண்டு.   (அல்குர்ஆன் 85: 10)

இது போன்ற வசனங்கள் பெண்ணுக்குள்ள தன் மான வாழ்வுரிமை இயல்புகளில் களங்கம் கற்பிக்க முனையும் தீக்குணமுள்ளோரை கண்டிக்கின்றது.

இது இஸ்லாம் பெண்ணின் மானத்தின் மீது செய்துள்ள காப்புறுதியாகும். உலகில் வேறெந்த மதமும் இத்தகைய காப்புறுதியை வழங்கவில்லை என்பது பெண்ணுரிமைக்கோஷமிடும் முஸ்லிம் வனிதையர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பெண் தன் வாழ்வினை தானே தீர்மானித்துக்கொள்ளும் உரிமையை இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளது. திருமண வயதை அடைந்த பெண்ணுக்கு அவள் தந்தை அல்லது பாதுகாவலர் மணம் பேசும் போது மணமகளின் பூரண மனப்பொருத்தம் பெறப்படுவது முக்கிய நபி வழிகளில் ஒன்று.

விதவைப்பெண்ணிடம் ஒப்புதல் பெறும் வரையிலும் கன்னிப்பெண்ணிடம் அனுமதி பெறும்;வகையிலும் திருமணம் செய்து வைக்கப்படக்கூடாது என்று நபி ஸல் கூறியதும் இறைத்தூதரே (கன்னிப்பெண்ணான) அவளிடம் எப்படி அனுமதி பெறுவது ? என (நபித்தோழர்கள்) கேட்டனர். அவளின் மௌனமே (அனுமதி) என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹ}ரைறா (ரழி )  நூல்கள்: புகாரி, முஸ்லிம் இன்னும் பல..

நிர்ப்பந்தம் செய்து மணம் முடித்து வைக்கப்படுமாயின் அத்திருமணத்தை இரத்து செய்யும் உரிமையையும் இஸ்லாம் மணப்பெண்ணுக்கு வழங்கியுள்ளது. தனது வாழ்வை தானே அமைத்துக்கொள்ளும் இந்த உரிமை அவள் எதிர்கால வாழ்விற்கான நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உரிய சாட்சிகளுடன் இந்த வாழ்க்கை ஒப்பந்தம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. 

 இதை விடுத்து அளவுக்கு மீறிய சுதந்திரத்தின் மூலும் பெண் தன்னை அழித்துக்கொண்டு தவறான பாலியல் சுரண்டல்களுக்கு உட்பட்டு சுரண்டப்படுவதையும் அனுபவித்து விட்டு ஏமாற்றப்படுவதையும் இஸ்லாம் தடுத்து பெண்ணுக்கு தகுந்த காப்புறுதியை வழங்குகின்றது.

தனது திருமணத்தை தனது சுய விருப்பின் பேரில் பாதுகாவலரை புறந்தள்ளிவிட்டு மேற்கொண்ட மேற்கின் பெண்கள் இன்று நிம்மதியற்ற சீரழிந்த சமூகப்பிராணிகளாக ஒதுக்கப்பட்டுள்ளதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அமெரிக்காவில் மட்டும் 30 இலட்சம் பருவப்பெண்கள்  பால்வினை நோயினால் பாதிப்புற்றனர். 14-19 வயது பருவப்பெண்களில் நான்கில் ஒரு பங்கு பெண்கள் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றில் கருப்பின பெண்கள் அதிகமாகவும் மற்றும் வெள்ளை இனப்பெண்கள் 20 வீதமாகவும் பாதிப்புற்றுள்ளதாக நோய் தடுப்பு மையங்களின் கூட்டமைப்பு ஆய்வு தெரிவிக்கின்றது. இத்தகைய பெண்ணுடல் மீதான சுரண்டலை இஸ்லாம் தடைசெய்கின்றது, அவளை தவறான அர்த்தத்தில் பார்ப்பதைபும் பழகுவதையும் அது கண்டித்து  அத்தகைய பார்வைகளை பாவச்செயலென பிரகடனம் செய்கின்றது,

மேலும் திருமணம் செய்யும் முன்பே தன் எதிர்கால வாழ்வின் பாதுகாப்பு நிமித்தம்  கணவன் இறக்கலாம் அல்லது அவளை விவாகரத்து செய்யலாம் இது போன்ற நிகழ்வுகளை எதிர்பார்த்து  அவள் சிரமத்திற்குள்ளாகாமல் இருக்க தனக்கு கணவனாக வருபவனிடம் ஒரு தொகை முற்பணத்தை பெற்றுக்கொள்வாள்.இதற்கு மஹர் என இஸ்லாம் பெயரிட்டு இந்த சமூகக்காப்பீட்டை அவளுக்கு வழங்கியுள்ளது.

அவளை கணவன் தலாக் எனும் விவாக இரத்துச்செய்து விட்டாலும் கொடுத்த மஹரை திருப்பி பெற்றுக்கொள்ள தடை விதிக்கின்றது.

 நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் திருமணக்கொடையைகளை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்து விடுங்கள்… (அல்குர்ஆன் 4: 4)

நீங்கள் ஒரு மனைவி (யை விலக்கி விட்டு அவளு)க்குப்பதிலாக மற்றொரு பெண்ணை (மணந்து கொள்ள) நாடினால் முந்தைய மனைவிக்கு ஒரு (பொருட); குவியலையே கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக்கொள்ளாதீர்கள். அபாண்டமாகவும் பாவமாகவும் அதனை நீங்கள் (திரும்பி ) எடுக்கின்றீர்களா? அதனை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் ? …(அல்குர்ஆன் 4: 20)

இது முன்கூட்டியே பெண்ணால் வாங்கிக்கொள்ளப்படும் ஜீவனாம்சமாகும். மஹர் என்ற மணக்கொடை மூலம் வாழ்க்கைக்குரிய பாதுகாப்புரிமையை இஸ்லாம் மகளிருக்கு வழங்கியுள்ளது.

மட்டுமன்றி மனம் ஒப்பாத வாழ்வை அவள் தொடர்ந்து வாழ நிர்ப்பந்திப்பக்கடவில்லை .கல்லானாலும் கணவன்  புல்லானாலும் புருஷன் என்ற சிறைக்குள் அவளை தள்ளவில்லை.
பிடிக்கவில்லை என்றால் நியாயமான காரணங்களை முன் வைத்து அவள் மணவிலக்;குப்பெறும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. மாமியார் கொடுமை, தீ வைப்பு திட்டமிட்ட கொலைகள் எதுவும் இஸ்லாமிய குடும்பவியலில் சந்திக்கமுடியாத அம்சமாக உள்ளது.

ஆண்களுக்கு தங்கள் மனைவியரை விவாகரத்து செய்யும் உரிமை போல் பெண்ணுக்கும் அந்த உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. இந்த அனுமதிக்கு”குல்உ” என பெயரிட்டுள்ளது.
இன்னும் சற்று அதிகப்படியான உரிமையை இஸ்லாம் பெண் விஷயத்தில் வழங்குகின்றது. கணவனை பிடிக்காத மனைவி அதற்குறிய காரணத்தை சமூகத்தலைவரிடம் சொல்லி  விவகாரத்துப்பெற வேண்டியதில்லை. அவரும் அதை துருவித்துருவி கேட்க வேண்டிய அவசியமுமில்லை.

 இஸ்லாத்தில் பெண்ணுரிமை மறுக்கப்படுகிறது என்ற கோஷமிடும் பெண்களின் சூன்யக்கண்களுக்கு இது ஏன் படவில்லை.

சமூகப்புனரமைப்பில் பெண்ணுக்கு இஸ்லாம் சீர்திருத்தப்பணிகளில் ஈடுபடும் உரிமையயை வழங்கியுள்ளது. ஆண் மட்டுமன்றி அவனுக்கு நிகராக அவளும் சமூகத்தின் இன்ப துன்பங்களில் பங்குபற்றி நண்மையை ஏவி தீமைய தடுத்திட இயங்கும் முழு சுதந்திரத்தையும் அவளுக்கு வழங்கி பெண்மையை கௌரவப்படுத்துகிறது.

“விசுவாசியான ஆண்களும் விசுவாசியான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லதைச்செய்யத்தூண்டுகிறார்கள் தீயதை விட்டும் விலக்குகிறார்கள்.” . (அல்குர்ஆன் 9: 71)

சமூகச்சீர்திருத்தப்பணிகளில் ஆண்கள் மட்டும் ஈடுபட வேண்டும் என அல்லாஹ் விரும்பவில்லை அதில் பெண்களும் அக்கரையுடன் செய்றபட வேண்டும் என ஆசையூட்டுகின்றான்.

இன்றை நாகரீகம் வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்கள் கல்வி கற்கும் உரிமை கூட மறுதலிக்கப்பட்டு அதையும் அவர்கள் போராட்டத்தின் மூலம் பெற வேண்டிய நிலை உள்ளது.  சுpல நாடுகளில் குறிப்பிட்ட வயது அல்லது குறித்த எல்லையுடன் கல்விக்கு தடை விதிக்கப்படுகிறது.

அதிகம் பெண் படிக்கக்ககூடாது என்ற ஆணாதிக்க வக்கிர குணங்களும் சமூகச்சட்டம் என்;ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட போலிச்சட்டங்களும் மதங்களின் பெயரால் கல்விக்கு தடை விதிக்கப்படுவதும் உலகின் செவிகளில் விழாமலில்லை.

இஸ்லாம் பெண்ணுக்கும் கல்வி அவசியம் என வலியுறுத்தி அவளை துறை போக கற்றகச்சொல்கிறது.

கல்வியை கற்பது அனைத்து முஸ்லிம்கள்  (ஆண்,பெண்) மீதும் கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்: பைஹகீ .

கணவனை இழந்த பெண் மறுமணம் செய்யும் உரிமையை இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளது. மேற்கின் நாகரீகம் போல் அவளை வைப்பாட்டியாகவோ, செல்வந்தர்களின் அந்தப்புரத்து நாயகியாகவோ சிதையில் தள்ளுவதையோ தீர்வாக சொல்லாமல் அவளை மறுமணம் செய்ய அனுமதித்து அனுமதிக்கப்பட்ட முறையில் இன்பம் பெற வழி காட்டியது இஸ்லாம்.

பின்வரும் அம்சங்களில் இஸ்லாம் பெண்னுரிமைகளை வழங்கி மகளிரை சிறப்பித்துள்ளது அவையாவன.

1.    கருக்கலைப்பை தடை செய்ததன் மூலம் பெண் சிசுக்கொலை தடை செய்யப்பட்டுள்ளது.

2.    பெண் குழந்தையை போற்றி வளர்க்க வேண்டும் என்ற நபிகளாரின் பொன் மொழிகள்

3.    பெண்ணுக்கு கல்வி மற்றும் பொருளாதார உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன்,அல்குர்ஆனின் அழியா வசனங்கள் ஊடாக உலக அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

4.    பெண் விருப்பத்தின் பேரில் அவள் திருமணம் நடைபெறல்

5.    பெண்ணை இழிவுபடுத்தும் சீதனக்கொடுமைக்கு நிகரான மஹர் எனும் நன்கொடைத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றமை.

6.    கணவனை பிடிக்காவிட்டால் அவனிடமிருந்து விவாகரத்துச்செய்யும் உரிமை

7.    தான் விரும்பும் ஒருவரை மறு மணம் செய்யும் உரிமை

8.    பெண்ணுக்கான சொத்துரிமை பங்கீடு

9.    விதவைகள் ஏளனம் செய்யப்படுவதை விடுத்து அவர்களுக்காக சமூக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளமை.

10.    மாதவிடாய் என்பதை ஒரு இயல்பான நிகழ்வாக ஆக்கயமை

11.    தாய்மைக்கு மதிப்பும் அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளமை

12.    திருமண உறவு தவிர்ந்த பாலியல் உறவுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றமை.

இது போன்ற எண்ண்ற்ற உரிமைகளை இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளதை ஆராயாமல் நுனிப்புல் மேய்ந்து விட்டு இஸ்லாமிய இள நங்கையர் இஸ்லாம் பெண்ணை கொடுமைப்படுத்துகிறது விடுதலை தாருங்கள் எனக்கோஷமெழுப்புவது கதிரவனை சருகு கொண்டு மறைப்பதற்குச் சமன்.

கருப்பைச்சுதந்திரத்தின் ஊடாக தந்தையற்ற வாரிசுகளை சுமக்க ஆவலுறும் பெண்ணினம் இவற்றின் மூலம் விபச்சாரத்திற்கு அனுமதி கேட்கும் விந்தையை இஸ்லாம் அனுமதிக்கவே இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 ஹிஜாப் அணிவது மகளிரின் முன்னேற்றத்திற்கு தடை என்ற மனக்கிளர்ச்சியை ஆங்கிலம் படித்த சில மேற்கின் நாகரீக முஸ்லிம் லேபல் குஞ்சுகள் பிரச்சாரம் செய்கின்றன.
இது பெண்ணின் உயர் பாதுகாப்பு என உலக நாடுகளில் பெண்கள் குரலெழுப்பி மறுக்கப்பட்ட உரிமைகளை மீளப்பெற நீதிமன்ற வாசற்படிகளில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆடைக்குறைப்பில் சுதந்திந்தை காணும் இவர்களின் கனவு பல ஆண்களின் மிருக இச்சைக்கு பெண்ணை பலியாக்கி அவளை வெறும் போகப்பொருளாக மாற்றியுள்ளதை இவர்கள் அறியவில்லையா.

 கவர்ச்சி விளம்பரங்களில் பெண் மலிவுப்பொருளாக சீரழிவதும் கலாச்சார நெறி பிறழ்வின் மையமாக மாறுவதும்தான்  இவர்கள் யாசிக்கும் பெண்ணுரிமைகளா?

இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ள இவ்வுரிமைகளை விட வேறெந்த சிறப்பான உரிமைகளையும் சமூகக்காப்பீடுகளையும் உலகில் தோன்றிய எந்த நாகரீகமும், மத சிந்தனையும் வழங்கிடவில்லை என்பது அறிஞர்களின் ஏகோபித்த முடிவு.

சர்வதேச மகளிர் தினமாக மார்ச் 08இல் மட்டும் கூடி பெண்ணுரிமைக்கோஷமிடும் ஞாபகார்த்த நிகழ்வு இஸ்லாத்தில் கிடையாது. ஏனெனில் அது இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம்.

பெண்ணின் உரிமைகளை மறுப்போரை அது கண்டிப்பதன் மூலம் நடைமுறை வாழ்வில் உரிமைகளை நிலைநாட்டப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கின்றது.

“பெண்ணை இழிவாகக்கருதுவோர் (அதாவது உரிமையளிக்க்படாத நிலையில் வைத்திருப்போர்) அவர்களது முடிவை அல்லாஹ் விமர்சித்து அது கெட்டது எனத்தீர்ப்பளிக்கின்றான்.” (அல்குர்ஆன் 16: 58-59)

பிற்காலத்தில் ஆணாதிக்கச்சிந்தனைகளும் மத அமைப்புக்களும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் பெண்களை பூட்டிவைத்து போஷிக்க முனைந்த போது இஸ்லாமிய அறிவுசூன்யங்களும் இஸ்லாத்திற்கெதிராக காழ்ப்புனர்ச்சி கொண்டோரும் பெண்களை இஸ்லாம் ஒடுக்குகிறது அவர்களுக்கு விடுதலை தாருங்கள் என்ற கோஷத்தை முன் வைத்து பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.

 இதில் முஸ்லிம் பெண்களையும் உள்ளீர்த்து அவர்கள் உடாக இப்பிரசச்hரங்களுக்கு வலுவூட்டப்பார்த்தனர். இது ஆணின் தகுதியுணர்வின் (Sense of Propriety) மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஒரு வடிவமே அன்றி  பெண்னுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளுக்கும் இஸ்லாத்திற்கும்  கிஞ்சித்தும் தொடர்பில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே மேற்கும் அதன் ஊடக வலையமைப்பும் இஸ்லாமிய பெண்களின் உரிமை பற்றி நீலிக்கண்ணீர் வடிப்பதன் நோக்கம் பெண்களின் உயர்வுக்காக அல்ல இஸ்லாத்தின் அபரித வளர்ச்சியை தடுப்பதே அவர்களின் உள்ளாந்த இலக்காகும்.

இதற்கு சில N.G.O க்கள் முஸ்லிம் பெண்களை பணிக்கமர்த்தி கொழுத்த சம்பளமும் வசதியும் வழங்கி அவர்களையே இஸ்லாமிய வடிவங்களுக்கெதிராக அபிப்பிராயம் கூறவும் விமர்சிக்கவும் தூண்டிவிடுகின்றனர்.

பெண்களின் வளமான வாழ்விற்கு உரிமைகளை முழுமையாக வழங்கியுள்ள இஸ்லாத்தின் போதனைகள் இத்தகைய மூளைச்சலவை செய்யப்பட்டு இறக்குமதியாகியுள்ள முஸ்லிம் பெண்களுக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்பதே நமதவா !

பிரசுரம் விடி வெள்ளி






Saturday 1 October 2011

நேர்முகம் : பகுதி 01


  • ஈழத்துச்சிறுகதையின் இரண்டாவது கட்டப்படைப்பாளிகளில் முக்கியமானவர் ஓட்டமாவடி அறபாத். சிறுகதை,கவிதை,பதிப்பு,சமூகச்செயற்பாடுகள் என்று செயற்பட்டு வருபவர்.     எரி நெருப்பிலிருந்து,   வேட்டைக்குப்பின் என்ற கவிதைத்தொகுப்புகளையும் நினைந்தழுதல்,ஆண்மரம் போன்ற காத்திரமான சிறுகதைத்தொகுப்புகளையும் தந்திருக்கிறார்.   தன் நிலையை,சமுதாயத்தை,தன் மண்ணின் உள் வெளிப்பக்கங்களை புற விசைகளைப் பொருட்படுத்தாது மண்ணின் பச்சையோடு தன் எழுத்துக்களில் கொண்டு வருபவர்.   முஸ்லிம் சமுதாயம்,முஸ்லிம் தமிழ் இன உறவுகள் முரண்களை தீவிரமாக எதிர்கொண்டு, 90களுக்குப்பிந்திய காலத்தில் இருந்து ,வடகிழக்குச்சூழல்,அரசியல், சமூகவியல்,ஆயதவியல் நிலைமைகளை இவரது கவிதைகள், கதைகள் பேசுகின்றன.                    -வாசுகி சிவகுமார்-



உங்கள் படைப்புலகத்தை வடிவடைத்த சூழல் பற்றிச் சொல்லுங்கள்  உங்களைப் பாதித்தவர்கள்.... 

நான் பிறந்தது ஓட்டமாவடி என்ற இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில். என்னுடைய குடும்பத்தில் படித்தவர்கள் அதிகம் இல்லாத காலம்.அதிகம் என்று சொல்வதை விட அறவே இல்லை என்று சொல்வது பொருந்தும். விவசாயத் தந்தை வீடே கதி என்று அவருக்கு ஒத்தாசையாக இருந்த தாய். இவர்கள் தவமாய் தவமிருந்து பெற்ற முதல் பிள்ளை நான்.  

பின் 78இல்கிழக்கில் அடித்த சூறாவளி குடும்பச்சூழல் எல்லாம் சேர்ந்து எங்களை ஓட்டமாவடிக்கு வடக்கே உள்ள முள்ளிவெட்டவான் என்ற ஊருக்கு விரட்டியது. 

அங்கு எனது பாட்டனின் கடை ஒன்றிருந்தது. புளியமரத்தடிக்கடை என்றால் சின்னப்புள்ளயும் அறியும். அவ்வளவு பிரபல்யமான கடை. தயிர்வடைக்கும் பாலப்பத்திற்கும் பிரசித்திபெற்ற இடம். இஞ்சி பிளேன்றியை வாய் நிறைய உறிஞ்சியபடி வாய்கொள்ளா யாழ்ப்பாணத்து பாணிச்சுருட்டுடன் மரக்குற்றிகளில் அமர்ந்திருந்து சாவகாசமாக கதையளக்கும் பெரிசுகளின் அடித்தளமே எனக்கு கதை கேட்கும் ஆர்வத்ததை தூண்டியது. வாய் பார்த்த நிற்கும் சிறுவனாக அந்தக்கதைகளுக்காகவே சுருட்டுப்புகையைக்கூட சகித்தபடி சுற்றிச்சுற்றி வருவேன். 

முள்ளிவெட்டவான் வனமும் புல் வெளியும் ஆறும் சூழ்ந்த அற்புதமான இடம். தமிழ்ர்களும் முஸ்லிம்களும் ஒரே மரத்தடியில் படுத்துறங்கி வண்டில் கடடிப்போன காலம் அது. அந்தப்புளியமரத்தடிக்கடையை அதாவது எனது படைப்பூக்கம் விதையூன்றிய மண்ணை பயங்கரவாதம் பறித்துக்கொண்டு எங்களையும் போ வென்று விரட்டி விட்டது.

1984 இல் ஓட்டமாவடியில் எனது மாமா முறையான கபூர்; மௌலவியின் வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன்.வாசிப்பார்வத்தை தூண்டியவர்களில் அவரும் ஒருவர். அவர் அலுமாரிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற நூல்களை ஆசையுடன் வாசிக்கத்தொடங்குவேன். ஓன்றுமே புரியாது. லைலா மஜ்னூ மட்டுமே அக்காலத்தில் இந்த மண்டைக்குள் ஏறியது. 

1985 இல் அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிழங்கை அறபுக்கல்லுரியின் விடுதியில் கொண்டு சேர்த்தார்கள் . தமிழ்நாட்டில் பாக்கியாத் கல்லூரியில் படித்து விட்டு வந்த மௌலவி ஏ.சி.கே.முஹம்மது பாகவி என்பவரின் தூண்டுதல் அங்கு வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியது. வாசிப்பு என்ற பாடத்தை போட்டு வாசிகசாலைக்கு விரட்டி எங்களை வழிகாட்டியவர்.

கல்லூரியில் கிழக்கின் ஒளி என்ற கையெழுத்து சஞ்சிகை வெளிவந்தபோது ஏக காலத்தில் சிறுகதை ஒன்றும் கவிதை ஒன்றும் எழுதினேனன். அதுதான் எனது முதல் ஆக்கம். மௌலவி முஹம்மத் என்னை அழைத்து நீதானா இதை எழுதினாய் என ஊக்கப்படுத்தி விளையும் பயிரை முளையில் தெரியும் என்றார். இந்தியாவுக்கு சென்று வரும் போதெல்லாம் அறிஞர்களின் நூல்களுடன் அவரை சந்திப்பது சந்தோஷமாக விடயம்.

ஆண்டு இறுதிப்பரீடசையில் எல்லோரும் தீவிரமாக தியரிகளை பாடமிட்டுக்கொண்டிருந்த வேளை சாண்டில்யனின் கடல்புறாவை  கள்ளத்தனமாக வாசித்த திகிலனுபவம் இன்னும் நெஞ்சில் வந்து அச்சமூட்டுகிறது. அட்டாளைச்சேனையில் இருக்கும் போது நண்பர் பௌசரின் நட்பு கிடைத்தது. 

அப்போது அவர் அக்கரைப்பற்றில் தடம் என்ற பெயரில் சிறு சஞ்சிகை நடாத்திக்கொண்டிருந்தார். வைரமுத்து மேத்தா அப்துல் ரகுமான் இன்குலாப் ஆகியோரின் கவிதைகளை தேடிப்படித்து அது போன்று எழுதத்தோடங்கினேன். இக்காலத்தில் படித்த சோலைக்கிளியின் எட்டாவது நரகம் புரியவில்லை.

  பிற்காலத்தில் எனது முதல் கவிதை தொகுதி 'எரி நெருப்பிலிருந்து.. தொகுதியில் சோலைக்கிளியின் தாக்கத்தை தவிர்க்க முடியவில்லை.

தினமுரசுக்கு எழுதத்தொடங்கிய காலம் எனது பெயர் பிரசித்தமானது. வாரம் ஒரு கதை எழுதினேன், கவிதையும் தான். எனது படைப்புலகத்தை வடிவமைத்த சூழல் அப்போதுதான் எதேச்iசாயாக நடந்தேறியது எனலாம். 

1994இன் நடுப்பகுதி என நினைக்கின்றேன். எஸ்.எல்.எம் ஹனீபாவை அவரின் எழுவான் பண்ணையில் சந்திக்கச்சென்றிருந்தேன். பலதும் பத்தும் என்று கதைத்து விட்டு இறுதியில் என்னில் பாவுகிறது அவர் பார்வை. அதை அவரின் வார்த்தையில் சொல்வது நல்லது.

“தம்பி அறபாத் இந்த நம்மட ஊருக்க இப்ப உன்னத்தெரியாத ஒரு குட்டியும் இல்ல பொடியனும் இல்ல நானும் பத்து வருஷமா எழுதுறன் என்ன ஒருத்திக்கும் தெரியா” என்றார் குத்தலாக. 

அவர் சொன்னதன் அர்த்தம் எனக்கு உரைக்க நேரமெடுக்கவில்லை. ஜனரஞ்சகப்பத்திரிகையில் சஞ்சிகையில் நான் அக்காலத்தில் எழுதிய கவிதைகள் காதல் பிரிவையும் அதன் இழப்பையும் சொல்லும் கவிதைகள்.இவைகளை இள வயதினர் பாடமிட்டு சொல்லித்திரிவதைதான் அவர் அப்படிக்குத்திக்காட்டினார்.  பிறகு என்னில் அழுத்தமாக பதிகிறது அவர் வார்த்தைகள். இதுகள விட்டுப்போட்டு புதும பித்தன படி என்றார்.

 அதுவரை அப்படி ஒரு எழுத்தானை எனக்கு சத்தியமாக தெரியாது. சுpல தினங்களின் பின் அவர் வீட்டுக்குச்சென்று புதுமைப்பித்தன் சுந்தர ராமாசாமி, ஜெயகாந்தன், லா.ச.ராமாமிர்தம் போன்றோரை எனது வீட்டுக்கு அழைத்து வந்தேன். அதன் பிறகுதான் எனது கண் விடுத்தல் நிகழ்ந்தது.

 எனது படைப்புலகம் எல்லையற்று விரிந்தது .தேடிப்படிக்கும் ஆவல் பல மைல்கள் பயணம் செய்யும் ஆர்வத்தை தந்தது. கைய நிறைய இனிப்பு இருந்தும் இன்னும் வேணும் என அடம்பிடிக்கும் சின்னக்குழந்தையாய் புத்தகங்களும், இலக்கியத்தேடலுமாக எனது பணிகளுக்கு மத்தியில் நேரத்தை ஒதுக்க முடிந்தது

.கொழும்புடன் தொழில் நிமித்தம் தொடர்பு ஏற்பட்ட போது. சரிநிகர் நண்பர்கள் அறிமுகமானார்கள். சிவகுமார். ரஷ்மி,ஷகீப் என்.ஆத்மா, மற்றும் சிராஜ் மஷ்ஹீர் போன்ற நண்பர்களின் தொடர்பு நல்ல படைப்புலகத்தை எனக்கு காட்டியது. குறிப்பாக பௌசர் ஆத்மா இருவரும் எனது கதைகளை வாசித்து அபிப்பிராயங்களை சொல்லி படைப்பின் ஆர்வத்தை தூண்டியவர்கள்.

படைப்புலகத்தை வடிவமைத்த நிஜமான சூழல் 90களுக்குப்பின் எனக்குள் நிகழத்தொடங்கியது எனலாம். 90 களுக்குப்பின் கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட தமிழ் ஆயுதக்குழுக்கள், வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம், இந்திய இராணுவத்தின் வருகை போன்ற கடினமான துன்பங்களை இளைஞனாக இருந்த எனை நிகர்த்த பலரை சினங்கொள்ளச்செய்தது.

 சிலர் பல்லுக்கு பல் காலுக்கு கால் என்று வீராப்பு பேச எங்களது பேனா ஆயுதமானது. கண் முன் நிழ்ந்த பயங்கரவாதங்களுக்கு எதிராக தமிழ் முஸ்லிம் என்ற பாகுபாடின்றி எழுதினேன்.எனது படைப்புலகத்தை வடிவமைத்த சூழல் மிக பயங்கரமானதாக இருந்தது.

எனது அகன்ற வாசிப்பில் என்னை ஆகர்ஷித்தவர்கள் பாத்தித்தவர்கள் பலருண்டு.சு.ரா.புதுமைப்பித்தன்,பாரதி,ஜெயகாந்தன்,தகழி, ராமகிருஷ்ணன், கொஞ்சமாக எழுதினாலும் அதிர்வை ஏற்படுத்திய இமையம்,சக்கரவர்த்தி, ரஞ்சகுமார் ஜே.பி.சாணக்யா போன்றவர்களுடன் பிரான்ஸ்காப்கா,சதத் ஹஸன் மாண்டோ, கே.ஏ.அப்பாஸ், வைக்கம் மு.பஷீர்,மற்றும் பலரை குறிப்பிடலாம். 

2. பெரும்பாலும் இந்தச் சூழலிலிருந்து, சமூகத்துக்குள் இருக்கும் பிரச்சினைகள், முஸ்லிம் மதம், பல்வகைக் கலாசாரம், இறுக்கமான சமூக அமைப்பு, நடைமுறைச் சிக்கல், பெண்ணுடல், பாலியல் துஷ்பிரயோகம், அசியல் ரீதியான பாலியல் வக்கிரங்கள், சமயத் துறவிகளின் உறவுகள் பற்றியெல்லாம் உங்கள் எழுத்துக்கள் பேசுகின்றன.சமுதாயத்திலுள்ள அகமுரண்பாடுகளை அவை விவரணப்படுத்துகின்றன. இந்த விதமான கதை சொல்லல் முறையில் உங்களுக்குள்ள ஈடுபாட்டின் பின்னணி

சாதாரண மனிதனின் பார்வைக்கும் எழுத்தாளனின் சமூகப்பார்வைக்குமிடையே இடைவெளிகள் அதிகம். ஒரு சமூகத்தின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்ப்புச்சொல்வது எழுத்தாளனுக்குரிய பணியன்று. அது ஒரு சமூகவியலாளனின் கரிசனை. உங்களுடைய கேள்வியின் உள்ளார்ந்த நோக்கம் இறுக்கமான மத மற்றும் சமூக ஆசாரங்களை கேள்விக்குட்படுத்தும் என்னுடைய எழுத்து பற்றியே என நினைக்கின்றேன்.

மதத்தை வைத்து பிழைப்பு நடாத்தும் சில துறவிகள்,அல்லது மதத்தின் பெயரால் பிழைப்பு நடாத்தும் சில முல்லாக்கள் இவற்றில் குறு நில மன்னர்களாக இருக்கும் அரசியல் அதிகாரமிக்கவர்கள் இவர்களுடனான எனக்குள்ள பரிச்சயம்,சமூகத்துடனான நெருங்கிய உறவு,அரச சார்பற்ற நிறுவனங்களில் இணைந்து பணியாற்றிய காலங்களில் பெற்ற அனுபவங்கள், பல்வேறு பிரதேசங்களிலும் பெற்றுக்கொண்ட அனுபவங்கள், என் கதை சொல்லும் திறனில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.

அதிகார எல்லைகளுடன் இருக்கின்றவர்களுக்கு அது மத பீடமாயினும் சரி, அரசியல் பீடமாயினும் சரி இரு முகங்கள் உண்டென்பது என்னுடைய அனுபவம். இதில் சில விதிவிலக்குள் இருக்கலாம்.பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் ஒரு முகம் அந்தரங்கத்தில் இன்னொரு முகமும் கொண்ட பலருடன் நான் பழகியுள்ளேன். சில எழுத்தாளர்களும் இதில் அடக்கம்.

சமூகத்தின் மீது படிந்துள்ள அக முரண்பாடுகள், பிறரால் சொல்வதற்கு தயங்கும் மனப்பிறழ்வுகள்,அல்லது எதற்கு வீண் வம்பு என்று கண்டும் காணாதது போல் ஒதுக்கிப்போகும் சமாச்சாரங்கள், அவற்றையே நான் எழுதுகின்றேன்.கேள்விக்குட்படுத்துகின்றேன் புனிதங்கள் உடைபடும் போது தங்களைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் போலி பிரமாண்டம் சரிவதை சகிக்கமுடியாதோர் என்னை ஒரு கலகக்காரனாக பார்க்கின்றனர். 

1997ம்ஆண்டு; இஸ்லாமிய வரலாற்றில் அண்மையில் தோன்றிய ஓர் இயக்கம் பற்றி நான் எழுதிய ஒரு நூலுக்காக வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப்பின் குறித்த அமைப்பினரால் என்னுடைய தலையைச் சீவ 10 இலட்சம் பகிரங்கமாக பரிசு அறிவிக்கப்பட்டதென்றால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது புரிகிறதா? இந்த தலைக்கு 10 இலட்சம் என்று மதிப்பீடு செய்கின்ற அளவிற்கு ஒரு சரக்கும் இல்லை என்பது வேறு விடயம்.

நான் எழுத ஆரம்பிக்கும் சமூக முரண்பாடுகள் குறித்த விமர்சனங்களின் போது எனக்கு முகங்கள் முக்கியமல்ல. முரண்பாடுகளின் தீவிரம் குறித்தே சிந்திக்கின்றேன்.இல்லாத ஒன்றை இருப்பதாக பாவ்லா காட்டும் மதத்தின் பெயரால் பாலியல் சுரண்டல் பெண்னுடல் மீதான அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள்,அரசியலின் பெயரால் புரியும் அக்கிரமங்கள் தங்களுக்கு தாங்களே இட்டுக்கொண்ட போலி சமூக இறுக்கங்கள் எல்லாவற்றையும் தயவு தாட்சயண்மின்றி கேள்விக்குட்படுத்துவதை இலக்காக வைத்தே அண்மைக்கால கதை சொல்லலில் ஈடுபாட்டுடன் உழைத்து வருகின்றேன்.

படைப்பாளி குறைந்த பட்சம் நேர்மையாளனாக சோரம்போகாதவனாக இருக்க வேண்டாமா? சத்தியமான எழுத்தெல்லாம் அருகி விட்டது திருப்திப்படுத்தல்கள் முதுகு சொறிதல்கள் தாங்களே தங்களை மெச்சிக்கொள்ளும் வித்துவச்செருக்கு இதுவே இன்றை இலக்கிய உலகில் முடிசூடிக்கொண்டிருக்கின்றது. நீங்கள் குறிப்பிடும் இந்த சமூக அக முரண்பாடுகளில் நான் அக்கரையுடன் இருப்பதால்தான் என்னவோ அதிகமானவர்களுக்கு “ நான் அவ்வளவு நல்ல பிள்ளை இல்லை” 

3. முஸ்லிம், தமிழ் உறவு தொடர்பாக உதாரணமாகக் கூறப்பட்டுவந்த மட்டக்களப்புப் பிரதேசம் இன்று, கடந்த 20 வருடங்களில் பல்வேறுகொதி நிலைகளைச் கடந்துவந்துவிட்டது. 70களிலும் அதற்கு முன்னரும் இருந்த சமூக, சகவாழ்வு முற்றுமாகச் சிதைக்கப்பட்டு விட்ட கடந்த காலத்தில் பின் கிழக்கின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது? கலைஞர்கள் எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எத்தகைய மனநிலைகளைக் கொண்டிருக்கின்றார்கள்? 

இது ஒரு முக்கியமான கேள்வி தமிழ் முஸ்லிம் மக்கள் சண்டை இல்லாமல் இருக்கின்றார்கள் என்பது சந்தோஷமான சங்கதி. மனங்கள் ஒட்டிக்கொள்ள முடியாத ஒரு போலி சந்தோஷம் என்றே அதை என்னால் அவதானிக்க முடிகிறது. இரு இன மக்களின் மனங்களிலும் கடந்த காலத்தின் காயங்கள் நீரு பூத்த நெருப்பாக அடங்கியிருக்கின்றது.

தமிழ் முஸ்லிம் உறவுக்கு பாலமாக இருந்த மட்டக்களப்பு பிரதேசத்தின் தமிழ் முஸ்லிம் உறவில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டவர்கள் சுய நலம் கொண்ட சில அரசியல் சக்திகளும் இயக்கங்களுமே. குறிப்பாக 90களுக்குப்பின் தமிழ் முஸ்லிம் உறவில் பாரிய விரிசல் விழுந்து விட்டது.

 அது தமிழ் போராட்ட இயக்கங்களாலும் சமூக அக்கரையற்ற சில முஸ்லிம்களாலும் இன்னும் ஆழமாகவே அந்த விரிசல் விழுந்து விட்டது .பிட்டும் தேங்காய்ப்பூவும் என்ற செப்படி வித்தைகள் இனிவரும் காலங்களில் செல்லுபடியாகும் என்ற கனவுகளும் இல்லை எரிர்பார்ப்பும் இல்லை.

சமாதான காலங்களில் கூட சகவாழ்வு மறுக்கப்பட்ட ஒற்றுமையை நிலைநாட்டாத இந்த உறவில் எனக்கு நம்பிக்கை அற்றுப்போய்விட்டது. இரண்டு இனங்களும் ஒன்றுபட்டால் தன்னுடைய நலன்கள் பாதிப்படைந்து விடும் என்பதில் பெரும்பான்மை பேரினவாதம் குறியாக இருக்கின்றது.திட்டமிட்டு அது செயல்படுகின்றது . 20 வருஷத்திற்கு முன்பு இருந்த அந்த இனிமையான கள்ளங்கபடமற்ற உறவில் நிறையவே புள்ளிகள் விழுந்து விட்டன.தலைக்கு மேல் வெள்ளம் போய்க்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் கலைஞர்களும்,எழுத்தாளர்களும்,சமூக ஆர்வலர்களும், இந்த உறவு அறவே செத்துப்போகாமல் இருக்க கோமாவில் இருந்தாலும் பரவாயில்லை உயிர் இருக்கிறதே என்ற நப்பாசையில் இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள் 

N.G.O க்கள் இரு தரப்பினரையும் அழைத்து “வேர்க் சொப்” நடாத்துகின்றது. எல்லோரும் இந்த ஒற்றுமைக்கு உழைக்கின்றார்கள் என்பது  மிகைப்படுத்தல். ஆனால் சில கலைஞர்குள் எழுத்தாளர்கள் வெள்ளை மனதுடன்  இயங்;குகின்றார்கள். உழைக்கின்றார்கள். அவர்கள் பகீரதப்பிரயத்தனத்துடன் ஒன்றை சரிகட்டும் போது சகட்டுமேனிக்கு ஒரு பேரலை வந்து எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக அடித்துக்கொண்டு போய் விடுகிறது. அது அரசியல் என்ற பெயரில் நிலம் என்ற பெயரில் மதம் என்ற பெயரில் இன்னும் எத்தனையோ….

20வருஷத்திற்குப்பின் இங்கிருந்து (ஓட்டமாவடி) வாகனேரி அடர்ந்த வனத்திற்குள் சுமார் 12 கிலோ மீட்டர் கோயில் திருவிழாவுக்கு சென்று அங்கே முற்றத்தில் ஆற்றோரம் படுத்துறங்கி கை வீசி நடந்து வந்த காலங்கள், அங்கிருப்பவர்கள் ஓட்டமாவடிக்கும் ஏறாவூருக்கும் கரத்தை வண்டியில் கந்துரிக்கு வந்து தங்கிப்போவதையும் நினைத்துப்பார்த்து ஆறுதல் அடைவதை தவிர வேறென்ன 

செய்ய முடியும?; அந்த அற்புதங்களை என்னுடைய சிறிய வயதில் என்னுடைய சாச்சாவுடன் (சித்தப்பா) சென்று அனுபவித்தேன் என்பதை நினைக்கையில் எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கின்றது. இன்று செக்கலுக்குள் முஸ்லிம் பிரதேசத்துக்குள் தமிழரோ தமிழ் பகுதிக்குள் முஸ்லிமோ செல்ல முடியாத துர்ப்பாக்கியமும்,துப்பாக்கியும் மிகுந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 

திகரன் வார மஞ்சரி : மார்ச் 16.2008
தொடரும்.....

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...