Monday 18 July 2016

சிறுகதை

ஊர்காவல் படை

    ஊரெங்கும் அமர்க்களம். எதிர்ப்படும் முகங்களெல்லாம் பூரிப்பில் திளைத்திருந்தன. எங்கள் ஊருக்கும் ஊர்காவல் படைவந்து விட்டது. இந்தக் கிராமத்திற்குச் சொந்தமான தினவெடுத்த இளவல்களின் திண்ணிய தோள்களில் துப்பாக்கிகள் பார்க்கப் பார்க்கப் பரவசம் பொங்கிற்று. 

இன்று ஆயுதப் பயிற்சியை முடித்துக் கொண்டதன் பின்னரான சிறப்பு அணிவகுப்புஇ பிரதான வீதியுடாக ஊர்வலம் செல்வதாக அறிவித்திருந்தார்கள். சி.இ.பி. சந்தியிலிருந்து பிரதேசசபை வரைக்குமான வீதியின் இருமருங்கிலும் ஜனசமுத்திரம் ஆண்கள் பெண்கள் குமரிகள் வாண்டுகள் என ஏகத்திற்கும் கூட்டம்.

தனது பிள்ளை இராணுவக் கோலத்தில் பார்க்கப் போகிறோம் என்ற மிதமிஞ்சிய துடிப்பு வயதானவர்களை நிதானமிழக்கச் செய்திருந்தது. அவர்கள் நடுவீதிக்கு வருவதும் தூரத்தே தெரியும் முகாமை வெறிப்பதுமாக அவதிப்பட்டனர்.

ஆர்.டீ.ஓ. அலுவலகத்திற்கு முன்பாகத்தான் மூத்தம்மாவும் நிற்கிறா மாமாவும் அந்த இராணுவ அணிவகுப்பில் நடை போட்டு வரவிருக்கும் கதாநாகனில் ஒருவர். மூத்தம்மாவின் முதுகுக்குப் பின் சாச்சிமார்கள். அவர்களின் பிள்ளைகள் என ஏக குடும்பமும் பிரசன்னமாயிருந்தது.

காத்தான்குடி ஏறாவூரில் இரவிராய் வெட்டிச்சரித்தபின் அடுத்த ஊர் எங்களது கிராமம்தான் என்ற கிலியும் வதந்தியும் ஒருசேர ஊரைப் பிடித்தாட்டியது.

பிரேமதாசாவின் ஆட்சிக்காலம் 90ல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் இராணுவ முகாம்களை போராளிகள் முற்றுகையிட்டனர். 24மணிநேரத்திற்குள் ஆயுதங்களுடன் சரணடைய வேண்டும். சரணடைந்த முஸ்லிம்களை தனியாகப் பிரித்தெடுத்து சுட்டுக்கொன்றனர். எரித்து மகிழ்ந்தனர். கும்புறுமூலை முகாம் மட்டும் பணியமாட்டேன் என அடம்பிடித்தது. எஸ்.ரீ.எப்.பின் தாக்குதலால் அந்தமுகாமிற்கு முன் பல போராளிகள் மாண்டனர்.

விடுவர்களா! ஊர் ஊராய் திரிந்தார்கள். ஒலி பெருக்கிகள் அதிர்ந்தன. கிறவல் வீதி புழுதியை அள்ளிச்சொரிய வாகனங்கள் பறந்தன.

மறத் தமிழர்களே! தமிழ் பேசும் இனிய மக்களே! நமது மண்  எதிரிகளிடம் வீழ்ந்து கொண்டிருக்கின்றது. அறம்காத்த வீரர்கள் மடிகின்றனர். சிங்கள ஆமியின் கொட்டத்தை அடக்கி நமது மண்ணைக் காப்போம் வாருங்கள் அணி திரளுங்கள்.

கூவிக்கூவிக் களைத்த ஒலிபெருக்கியின் பின்னால் இளைஞர்கள் திரண்டார்கள். எங்கே போகிறோம் யாருக்காக போராடப் போகிறோம்? ஏன் போகிறோம் என்ற அடிப்படை அறிவே இல்லாத நமது இளவல்களும் போனார்கள். மூன்று மணி நேரப்பயிற்சி தாக்குப்பிடிக்குமா மடிந்தார்கள்.
ஆயுதக் கவர்ச்சியால் உந்தப்பட்டுச் சென்றவர்கள் சந்தூக்குகளில் அள்ளித் திணிக்கப்பட்டு ஈமயாத்திரை சென்றார்கள். விதியை தடுத்து நிறுத்தவா முடியும்? இப்படித்தான் நாங்கள் ஈழப்போராட்டத்தில் இணைந்துஎம். விரல் கொண்டு எம் கண்களையே குத்திக்கொன்றோம்.

இரு பக்கமும் அடிபடும் மத்தளங்களாய் எமது வாழ்க்கை. 90ல் ஊருக்குள் இரட்சகர்களாய் வந்த ஆமி புலியிலிருந்து விலகியவர்களை தேடித்தேடிக் கொன்றது. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய எமது இளவல்களை ரயர் போட்டெரித்தது.

அது அடிமனசின் நினைவுகளில் கல்வெட்டுக்களாய் பதியப்பட்ட ரணங்கள். எங்களூரின் மனித மாமிசங்கள் எரியும் அவலக் குமுறலை நிர்ப்பந்தமாய் சுவாசித்தபடி ஊமைகளாய் அழுது வெடித்திருந்த காலமது. அவரவர் பங்கிற்கு சளைத்தவரல்ல என்பதை நிரூபிக்க நாம் பலிக்கடாவனோம். வீரதாப பராக்கிரமங்கள் பரிசீலிக்கும் பூமியாக எமது மண் மாறிற்று.

விஞ்ஞான ஆய்வு கூடத்தில் கொத்திச்சிதறப்படும் எலிகளாக தவளையாகஇபாம்பாக போர் தரித்த பூமியில் சிங்கள தமிழ் பேரினவாதத்தால் குதறப்படும் ஆராய்ச்சிப் பிராணிகளாக நாம் மாறியிருந்தோம். எமது உயிர்களின் விசும்பல்கள் யாரின் செவிகளிலும் கேட்காத அநாதைக் காலங்கள்.

ஓர்மம் மிகு சமுதாயச் சிற்பிகள் தோன்றினர். எமது வித்துக்களிலிருந்து வெடித்து வீரத்தளிர்கள் ஆகர்ஷித்தன. நமது மண்ணின் பள்ளிவாயல்கள் வயல் நிலங்கள்  சொத்துக்கள் அனைத்திற்கும் நாம்தான் கேடயங்கள்.

மரணத்தின் எல்லைவரை விரட்டப்பட்டவர்கள் அச்சம் என்ற புற்றுக்குள்ளிருந்து திரள் திரளாய் வெளியே வந்தனர். பிற்காலத்தில் எங்கள் இரட்சகர்கள் பச்சோந்திகளாய் மாறிப் போனது வேறுகதை. எமது பாதுகாப்பை நாமே கையிலெடுத்துக் கொண்டோம்.

எல்லைகளில் ரயர்போட்டு எரித்துவிட்டு இருளுக்குள் புதைத்திருந்து இளவல்கள் காவலிருந்தனர். தீட்டியவாள்களுடன் மின்சாரமற்ற ஊரை இளவல்கள் காத்துநின்றனர். உள்ளூர் ஒழுங்கைகளிலும் அவரவர் முறைவைத்து விழித்திருந்து காவலிருந்தனர். 

இரவும்பகலானது. கொடூரமரணத்தின் வருகையை எதிர்பார்த்தபடி பெண்களும் உறங்க மறுத்தனர். விழித்திருக்கும் இளவல்களுக்கு “இஞ்சிப்பிளேன்டியும்” அவித்த கடலையும் வரும். பந்தம் எரிவதற்கு எண்ணெய் தருவார்கள் இப்படித்தான் நாங்கள் இருளில் பதுங்கியிருந்த மரணத்தை வெளிச்த்திற்கு விரட்டினோம்.

அரசியலில் நிகழ்ந்த மாற்றங்கள் அழுத்தங்கள் இந்தக் கிராமத்தின் தலைவிதியையும் மாற்றியது. உள்ளூர் இளைஞர்களை திரட்டிப்பயிற்சியளிக்கப்போவதாக அரசு அறிவித்ததைத்தொடர்ந்து வீறுகொண்ட இளைஞர் அணி முகாம்களை நோக்கி படையெடுத்தது. வயதுஇ உயரம் கல்வித் தகைமை எதுவும் தேவையில்லை. ஊரைப் பாதுகாக்க வீரமும் உறுதியும் இருந்தால் போதும்.

பின்னொரு காலத்தில் பயிற்சி முடிந்து வீட்டிற்கு வந்த மாமா 303ஐ எப்படி இயக்குவதென்று என்னை அருகில் வைத்து பாடம் நடாத்தினார். தரையில் உருண்டு நிலையெடுத்துஇ அதன் அடிப்பாகத்தை தோளில் அழுத்தி விசையில் விரல் பதித்து நானும் ஆயுதம் இயக்கத் தெரியும் என்ற பீத்தலை என் நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி கர்வப்பட்டது. இந்த 303ன் அனுக்கிரகத்தில்தான்.
“உங்கள் ஊரை நீங்கள் பாதுகாக்கவே உங்களிலிருந்து உங்கள் படை” என்றவர்கள் எங்கள் படைவீரர்களை சிங்களக் கிராமத்தின் எல்லையில் இருக்கும் அவர்களின் இனத்தைப் பாதுகாக்க அழைத்துப் போனார்கள். எங்கள் ஸலாஹுத்தீன்கள் எங்கள் இருப்பின் எதிர்காலத்தின் மீது சிலுவையறைந்தார்கள்  சிலர் அடாச்செயல்கள் மூலம் சாம்பல்கள் பள்ளத்தாக்கின் கதாநாயகர்களானார்கள். இதுவெல்லாம் எமது நிகழ்கால நிஜத்தின் துயரக்கதை.

காடுகளுக்கும் கடலுக்கும் வயல்வெளிகளுக்கும் செல்லத் தடை செய்யப்பட்ட தருணம் அது. மீறிச்செல்பவர்கள் பிணமாக வீடு கொண்டு வரப்பட்ட காலமும் அது. தொழிலற்ற அனேகரின் பிரச்சினைக்கு ஊர்காவற்படை விமோசனம் கொடுத்தது.

இன்று அந்ததிரு விழாவைக்காண ஊரகூடி நிற்கிறது. தூரத்தே இராட்சத பாம்பொன்று அசைவதைப் போன்றுவரும் இராணுவ அணிவகுப்பு மக்களின் மனதில் கிளர்ச்சியை தூண்டியது. ஆறுமாதப் பயிற்சியை முடித்து இந்த ஊரின்மானத்தையும் இருப்பையும் காக்க உயிரை துச்சமெனமதித்துப் புறப்பட்ட அய்யூபிகளாக ஜனங்களின் மனதில் அவர்கள் ஒளிர்ந்தனர்.

மூத்தம்மா முண்டியடித்தபடி வீதியின் எல்லைக்கே வந்து விட்டார்.

“அடகிழவியைப்பாருங்கடி.
மகனப் பாக்குற  குஷியில ரோட்டுல பறக்குறா”

சாச்சிமார்களின் கேலியும் கிண்டலும் ஒழுங்கை நிறைய சிரிப்பலைகள் மகிழ்ச்சிவண்டுகளின் இடைவிடாத ரீங்காரம்.

நிமிர்ந்த நடை. இராணுவச் சீருடை. நெஞ்சிலும் முதுகிலும் உப்பி இருக்கும் குண்டுகள். இடையில் தொங்கும் கூர்வாள்இ தண்ணீர் போத்தல் கையில் இறுக்கிப்பிடித்தபடி ஏ.கே.47 வீதி மருங்கில் திரண்டிருக்கும் சனங்களை அசட்டைசெய்யும் விறைத்த பார்வை யாரும் யாரையும் திரும்பிப் பார்க்கவில்லை. அலட்நடை.
அணிவகுப்பில் மாமாவும் வருகிறார். அவர் இரண்டாவது அணி 303 கையிலிருந்தது. அவரை விடவும் உயரமான ஆயுதம். மாமாவின் அணி நெருங்க நெருங்க மூத்தம்மாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கூர்முக்காட்டை சீர்செய்தபடி சற்றே நகர்ந்து வீதியின் ஓரத்திற்கே வந்துவிட்டா.

“இஞ்செகா அங்கால போகாத. ஆமி ஏசுவான். ஒளுப்பம்தள்ளி நில்லு”

சாச்சியின் குரலை அசட்டை செய்து விட்டு மாமாவை வெறித்தபடி நின்றா. நெஞ்சு துடித்தது. முதுமையின் தளர்ச்சியும் மிதமிஞ்சிய ஆவலும் பொங்க வெப்புசாரத்தில் கரைந்தா. மாமா நெருங்கி வர ஆனந்தக்கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டினார். 

எல்லா வீரர்களையும் போல மாமாவும் விறைத்த பார்வையுடன் நேர்முகம் காட்டி நடந்தார். மூத்தம்மாவால் தாள முடியவில்லை.

“மனெ மம்மனிவா”

ஆங்காரமாய் கத்தினா. அது அவவின் அடித் தொண்டையிலிருந்து வந்தாலும் அடங்கிய சத்தமாய் மாமாவின் குண்டுப் பொதியை தாண்டி அவரின் நெஞ்சை உலுக்கியிருக்க வேண்டும். தலையை திருப்பாமல் இலேசாக ஓரக்கண்ணால் மூத்தம்மாவைப் பார்த்து சிரித்தார்.

இப்போது இராணுவ அணிவகுப்பு சென்ற வீதி வெறிச் சோடிக் கிடக்கிறது. திரும்பவும் மாமாவை காணும் ஆவல்! ஐந்து வருடங்களுக்கு முன்காவலரனுக்குச் சென்ற மாமா இன்னும் வீடுதிரும்பவில்லை. இவ்வழி திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு.

எனினும் இராணுவ அணி தினமும் மூத்தம்மாவின் திசை நாடி வருகிறது. அதில் மாமா இல்லை. மாமாவின் சிரிப்பு விழுந்த இடத்தில் குந்தியபடி மூத்தம்மா அழுதுகொண்டிருந்தா.


நன்றி- மீள்பார்வை



  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...