Saturday 30 May 2020

1.10.2019
சர்வதேச முதியோர் , சிறுவர் தின நிகழ்வில் வாழைச்சேனை கோரளைப் பற்று மத்தி பிரதேச செயலகத்தின் நங்கூரம் – 12வது இதழ் அறிமுகம்
இடம் : Delma அரங்கு , கும்புறுமூலை

9.12.2019 வியாழன் கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் மருதோன்றி 8வது மலர் வெளியீடும் , கலாசார விழாவும் நடைபெற்றது. நிகழ்வில் மருதோன்றி சஞ்சிகைக்கான நயவுரை என்னால் நிகழ்த்தப்பட்டது.கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ச.நவநீதன் முன்னிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் . A.C. அப்கர் அஹமட் அவர்களிடமிருந்து சஞ்சிகையையும் பெற்றுக் கொண்டேன்.



2018 ஆம் ஆண்டு அரச நிறுவனங்களுக்கிடையில் நடைபெற்ற உற்பத்தித்திறன் போட்டியில் கோறளைப்பற்று மத்தி,வாழைச்சேனை பிரதேச செயலகம்,2018 ம் ஆண்டுக்கான விசேட பாராட்டுதலுக்கான (special Commendation)விருதினை பெற்றுக் கொண்டுள்ளது. இதற்கு பங்களிப்புச் செய்த சகல உத்தியோகத்தர்களுக்கும் இன்று 2020.01.01 திகதி பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. உற்பத்தி திறன் வேலைத்திட்டத்தில் பங்களிப்பு செய்த அடியேனுக்கும் பிரதேச செயலாளர் SHM.முஸம்மில் அவர்கள் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார்.


24.01.2020
ஏறாவூர் வாவிக்கரை கலாசார மண்டபத்தில் நடை பெற்ற கவிஞர் அப்துல் ஹலீம் அவர்களின் அடிமன அதிர்வுகள் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நூல் அறிமுகத்தினை நிகழ்த்தினேன். பேராசியர் செ. யோகராசா ஏறாவூர் பிரதேச செயலாளர் திரு. Sm ,அல்அமீன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கவிதை நூல் வெளியீடு என்பதாலோ கவிஞர்களும் தாமதித்தே வந்தனர்.. ஏறாவூர் வாசக வட்டத்தின் நிழல் கூட அங்கு படவில்லை - வாப்பா இந்தியாவுல என்பதால் பிள்ளைகளும் ஆற்றங்கரை பக்கம் ஜன்னல் வைத்த ஜாக்கட்டுக்களில் மெய் மறக்கப் போயிருக்கலாம். அடிவானத்தின் நீல நிறத்தையும், ஏறாவூர் ஆற்றையும் பார்த்த படி நூல் நயவுரை செய்தது. நான் செய்த மகா புண்ணியமே'.
பட உதவி : நடமாடும் தகவல் களஞ்சியம் நஸீர் ஹாஜியார். ( திடீர் மரண விசாரணை அதிகாரி) நன்றி ஹாஜியார்.
2020.02.13 கல்முனை அல் மிஸ்பாஹ் வித்தியாலய அதிபர், மற்றும் தமிழ் பாட ஆசிரியர்களின் அழைப்பின் பேரில் குறித்த பாடசாலைக்கு சென்றிருந்தேன். தரம் - 11 தமிழ்மொழி பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள எனது "மூத்தம்மா" சிறு கதை தொடர்பான விசேட செயலமர்வு தரம் 10-11 மாணவர்களுக்கு நடைபெற்றது
மூத்தம்மா கதைப் பின்புலம் ,உருவாக்கம் மற்றும் அது தொடர்பான விளக்கத்தினையும் , அறிவுரைகளையும் மாணவர்களுக்கு வழங்கினேன்.
இந்நிகழ்வில் தமிழ் பாட ஆசிரியர்களும் பகுதிப்பிரிவு பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




மகிழ்ச்சி - குதூகலம்
பிரதேச செயலக வருடாந்த ஒன்று கூடல் -2020



நூல் விமர்சனம்
 ஓட்டமாவடி அறபாத் 'பல்லிகள் இல்லா சுவரில் மேயும் வண்ணத்துப் பூச்சிகள்" கவிதை நூல் தொடர்பான தனது விரிவான அவதானத்தை வழங்கினார். நளீமின் முன்னைய இரு தொகுதிகளுடன் ஒப்பிட்டுப் பேசியதுடன் கவிஞரின் கூர்மையான பார்வைகள் இயற்கையின் மீதுள்ள நாட்டம் சுயம் இழந்த தலைவர்களின் இழிநிலை சமூகத்தின் மீதுள்ள பச்சாதாபம் இளைஞர்களின் போக்கு தொடர்பான அதிருப்தி என பலவகையான விடயங்களின் மீதான வார்த்தைகளின் கோர்வை நேர்த்தி அழகு என தனது கருத்துரையை வழங்கினார்.
2018.12.15


ராபிததுஸ் ஸஹ்வியீன் ஸஹ்வா பட்டதாரிகள் சங்கம் கடந்த வாரம் நடாத்திய முல்தகுஸ்ஸஹ்வியின் நிகழ்வில் நினைவு மலர் வெளியீடு மற்றும் தாபக வித்துக்கள் கெளரவிப்பும் இடம் பெற்றது. அட்டாளைச்சேனை பென்க்குயிஸ்ட் மண்டபத்தில் நடை பெற்ற இந்நிகழ்வில் காலத்தால் அழிக்க ,மறக்க முடியாத நட்புக்களை சந்தித்தது மிகப் பெரும் சந்தோஷமே!
27.01.2018 

செங்கலடி விஸ்டம் கல்லூரியில் எனது மூத்தம்மா சிறுகதை தொடர்பான விரிவுரை நடாத்தப்பட்டது. மூத்தம்மா கதையில் முஸ்லிம்களின் பண்பாடு கலை கலாச்சாம் கிராமிய வாழ்க்கை தொடர்பான விடயங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தேன். ஓட்டமாவடி . தேசிய கல்லூரியின் தமிழ் பாட ஆசிரியர் கிருஷ்ணா இதனை ஏற்பாடு செய்திருந்தார்.



இலங்கை என்றால் இயற்கை வனப்பு மிக்க ஆறுகளும்..கால்வாய்களும் .பசும் புற்களூம் ..அடர்காடுகளும் செழித்த வனப்பு மிக்க பூமி....என்று எப்பவும் தெரியும்...
ஆனால்...அங்குள்ள மக்கள் பலரும் 19-ம் நூற்றாண்டு வாழ்க்கையையே இந்த நவீன காலத்திலும் வாழ்ந்திருப்பார்கள் போல...என்றுதான் நான் வாசித்த பெரும்பாலான இலங்கை தொடர்பான நூற்கள் எனக்கு உணர்த்தியிருக்கின்றன...
சர்வ சாதாரணமாக தமிழகத்தில் எப்பவோ வந்து விட்ட வசதிகள் கூட அங்கு அப்பவும் வரவில்லையோ..?என்று எண்ணத் தோன்றும்...அதற்கு இந்த நூலும் விதிவிலக்கல்ல...
காடுகள்...சரியான சாலைகள் வசதியின்மை...போக்குவரத்து வசதிகள் பெரிதாக இல்லாமை..இன்னபிற குறைகளுடன்தான் அம்மக்கள் எப்போதும் அல்லுபட்டிருக்கின்றனர்.
இப்போது ஒருவேளை நிலைமை மேம்பட்டிருக்கலாம்.
இயற்கைச் செழிப்பின் பசுமையில்...அம்மக்களுக்கு நிலைபேறான வாழ்வு எக்காலத்திலும் கிட்டியதில்லையோ...? என்று எண்ணத் தோன்றும்...
#ஓட்டமாவடிஅறபாத்தின் இந்த நினைவுகளின் ஊஞ்சலும் இவ்வாறான எண்ணத்தையே என்னுள் ஆரம்பமாக விதைத்தது...போகட்டும்.
காடுகளும்..காட்டினுள் வாழ்ந்த பசுமை வாழ்வுமாக துவங்கும் அறபாத் மெல்ல...மெல்ல...தனது அரபுக் கல்லூரி வாழ்க்கை...அதன் இறுக்கமான ...அதேசமயம் துடிப்பான ஓட்டம் என வேகமெடுக்கிறார்...
பெற்றோர்களைப் பிரிந்து கல்வியின் நிமித்தம் ஊர் ஊராக திரிகிறார்...ஜின்களோடும்...பேய்களோடும் மானசீகமாக கட்டிப் புரள்கிறார்...சாமியாட்டத்தையும் எவ்வித மனத்தடையின்றியும் ரசிக்கிறார்...
இனமுரண்கள் நிறைந்த இலங்கை கிழக்குமாகாண முஸ்லிம்களின் வாழ்க்கையில் புலிகள் ரத்த சாட்சியாக குறுக்கிடுகிறார்கள்...
அறபாத்தின் எழுத்தை வைத்து பார்க்கும் போது...அக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் அரசு என்ற ஒரு அமைப்பே...செயலில் இல்லையோ...என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது...
புலிகளும்...ராணுவமும் ஆளாளுக்கு தாங்கள் நினைத்த பகுதியில் அராஜகம் செய்திருக்கிறார்கள்...எந்த விதியும் இல்லை...எந்த ஒழுங்கும் இல்லை...கேட்பார்யாரும் இல்லை. தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்.
இதில் அமைதிப்படையாக இங்கிருந்து சென்ற இந்திய ராணுவம் வேறு அடடகாசம் புரிகிறது...
மனித உயிர்களுக்கு ஒரு மயிர் அளவேனும் கூட மதிப்பில்லை...
கட்டுப்பாடற்ற ஒரு வன்முறைக் கும்பலின் கைகளில் ஆயுதம் கிடைத்தால் என்னவாகும் ...?என்பதற்கு முதலும் முடிவுமான அகோர சாட்சி புலிகள்தான்.
புலிகளின் அமைப்பில் ஆரம்பக்காலத்தில் நிறைய முஸ்லிம்களும் பங்கெடுத்திருக்கிறார்கள் .அவர்களும் புலிகளின் இயல்பான வெறிக் குணத்தையே பிரதிபலித்திருக்கிறார்கள் என்பதற்கு இந்நூலில் வரும் புகாரியே சாட்சி.
பிரபாகரனுக்கு பிற்காலத்தில் எது நடந்ததோ...அதுவே புகாரிக்கும் முன்பே நடந்தது...கத்தி எடுத்தவன்..............
புலிகளுக்கும் ரணிலுக்கும் சமாதான ஒப்பந்தம் அமுலில் இருந்த காலத்தில் புலிகள் முஸ்லிம்களை ரண வேட்டையாடி இருக்கிறார்கள்.
ராணுவம் கைகட்டி வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்திருக்கிறது. அவர்களூக்குத்தான் புலிகளோடு சண்டையில்லையே...? பிறகு எவன் எப்படிச் செத்தால் அவர்களுக்கு என்ன...?கேட்க நாதியில்லாத அவலம்.
ராணுவமும் புலிகளும் ஆக்ரோசமாக மோதிக்கொண்ட அக்காலங்களில் நூலாசிரியரும் அவரது நண்பர்களும் அவர்கள் பணியாற்றும் அட்டாளைச்சேனை என்ற ஊரிலிருந்து வாகன வசதியின்றி நடந்தே அவரவர் ஊர்களுக்குச் செலலும் சமயம் புலிகளால் மறிக்கப்படவும்...அவர்களை அந்த இக்கட்டான நிலையில் இருந்து ஒரு பாதிரியார் மீட்டு வாகனத்தில் ஏற்றி அவரவர்கள் சொந்த ஊருக்குப் பத்திரமாக அனுப்பி வைத்திருக்கிறார்.கிட்டத்தட்ட அனைவரின் உயிர்களையும் காப்பாற்றி இருக்கிறார்
அவரது பெயர் வண. T.கிங்ஸ்லி றொபர்ட் ...
இந்தப் பெயரை முன்பே எங்கோ படித்திருக்கிறோமே...என்ற ஒரு சந்தேகத்தில் புத்தகத்தை புரட்டினால்...இப்புத்தகமே..அந்த பாதிரியாருக்கத்தான் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது...
இன்றைக்கு ஈஸ்டர் தின கொடிய நிகழ்வுகளை இத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து சஞ்சலம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை....!!
பிரபாகரன் பற்றிய ஆசிரியரின் ஒரு குறிப்போடு முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்...
"அவர் உலகமகா கோழை என்பதற்கு அவரின் சரணடைதலும் இழிவான சாவும் கண்கண்ட சாட்சி. ஒரு வீரன் எதிரியுடன் பொருதி மடிவதுதான் வீரத்திற்கு இலக்கணம் தப்பியோடும் போது சாவைத் தழுவுவது எவ்வளவு அவமானம்...?! (பக் -123)
பட்டு அனுபவித்த ஒரு நொந்த மனத்தில் அல்லாது வேறு எந்த மனத்திலும் இந்த வார்த்தை வராது.
இலங்கை #எங்கள்தேசம் வாராந்திர இதழில் வெளிவந்த இந்த தொடர் கட்டுரை தொகுப்பை அழகுற நூலாக பதிப்பித்திருப்பது #காலச்சுடு நிறுவனம்.
பாராட்டுககள் ஓட்டமாவடி அறபாத்
நன்றி காயல் சுஹைப் முஹ்ம்மது காக்கா 
துயருழந்து ஆடும் நினைவுச் சரடுகள்
அறபாத்தின் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்.
எஸ்.எல்.எம் ஹனீபாவும், அறபாத்தும் துள்ளி அலைந்து திரியும் பதின் பருவத்தை முறையே உசுக்குட்டிப்பருவம் என்றும், குதியான் பருவம் என்றும் குறிப்பிட்டிருப்பர். கிராமமும் அதன் மணமும் பழைய நினைவுகளாக திரண்டெழும் போது உண்டாகும் பேரதிக இன்பம் அவ்விளமையின் உசுப்பையும் குதிப்பையும் மீட்டி மீட்டி பரவசமூட்டுவன. அப்பரவச நினைவின் நதியிலிருந்து பாய்ந்து முன்னகரும் உணர்வுகளின் குவியமாக அறபாத்தின் நீர் ஊஞ்சல் ஆடுகிறது.
எஸ். ராமகிரஷ்ணனின் 'பதின்' என்ற நாவலைப் படித்த பின் உண்டான நினைவுக்கிளர்தலைப் போல, காப்காவின் இளமையின் நினைவுகுறிப்புக்களை வாசித்த பின் உண்டான மன அவத்தை போல அறபாத்தின் நினைவுக்குறிப்புக்களை வாசிக்கும் போதும் மனக்கிளர்ச்சியும் அவத்தையும் ஒருங்கு தோன்றுகிறது. அது அவரது நினைவுக்குறிப்புக்களாக மட்டுமல்லாது அவர் வாழ்ந்த காலத்து மனிதர்களின் நினைவுகளாக, துயரங்களாக, ஏமாற்றங்களாக, துரோகங்களாக நீள்கின்றன.
காடும் வயலும் குளமும் ஆறும் மணக்கும் வட்டுவான் வெளியில் உலாவும் அறபாத் அவ்வெளியில் அலைந்து திரிந்த அழகியலை மனவெளியில் சின்னச் சின்ன சித்திரங்களாக வரைந்து செல்கிறார். ஓட்டமாவடியை அண்டி நீண்டு நெடுத்துச் செல்லும் வயல்வெளிகளுக்கிடையில் சிறுசிறு திட்டுக்களாக அமைந்துகிடக்கும் முஸ்லிம் கிராம வாழ்வியலையும் அழகையும் நினைவுச் சித்திரங்களாகத் தரிசிக்கச்செய்கின்றார்.
இப்பிரதேச மக்களின் வெவ்வேறுபட்ட பொருளாதார, அரசியல், பண்பாட்டு அம்சங்கள் குறித்து முதன்முதலாக இலக்கிய ஆவனமாக்கியவர் வை.அஹமட். அவரது தரிசனம் நாவல் கரையாக்கன் என ஒதுக்கப்பட்ட முஸ்லிம் மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வையும், அவர்களிடையே ஏற்பட்ட செல்வப் பெருக்கத்தால் பள்ளி தலைமைப் பதவிகள் வழங்கப்பட்டு அதிகார ஆசனங்களில் அமர்த்தப்படுதலையும் விபரித்துச் செல்கிறது. இந்நாவலைத் தவிர எஸ்.எல்.எம் ஹனீபாவின் 'மக்கத்துச் சால்வை' இப்பிரதேச மக்களின் மண்வாசனையை வெளிப்படுத்திய மற்றுமொரு படைப்பாக்கமாகும். பாலைக்காட்டு கிராம வாழ்வு, கல்வி, வறுமை, போரவலம் என்பவற்றை வெளிப்படுத்தும் ஜிப்ரி ஹசனின் 'போர்க்குணம் கொண்ட ஆடுகள்' என்ற சிறுகதைத் தொகுதியும குறிப்பிடத்தக்கது. இப்பின்னணியில் ஓட்டமாவடிப் பிரதேச கிராமிய மக்களின் போருக்கு முந்தியதும் போருக்கு பிந்தியதுமான வாழ்வு, தொழில், நம்பிக்கைள் என்பவற்றை அறபாத் மீட்டிக்கொண்டு செல்கிறார். அவ்வகையில் அவரது நினைவுக்குறிப்புக்கள் இப்பிரதேசமக்களின் வரலாற்று எழுதுகையின் ஒரு பதிவாக அமையும்.
போருக்கு முந்திய தமிழ் முஸ்லிம் உறவில் பிணக்குகள் இருந்ததில்லை என எழுதிச்செல்லும் அறபாத் தமிழரது சமயப் பண்பாட்டு அம்சங்களோடு முஸ்லிம்கள் ஒன்றாய்க் கலந்து ஈடுபட்டார்கள் என்கிறார். இப்போதுள்ளது போல அக்கால தமிழ் வேடுவ கிராம மக்களின் திருவிழாக்கள் அமையாது இயற்கையோடு இயைந்த கொண்டாட்டமாக அமைந்தது என்கிறார்.
முஸ்லிம்களிடமும் சமயதூய்மைவாதங்கள் எதுவுமில்லாத பமழமையும் மூடநம்பிக்கைகளும் தேங்கிக் கிடந்தன என்கிறார். அந்நம்பிக்கைகளோடு கலந்து வாழ்ந்த அறபாத் அவை மாற்றப்பட வேண்டும் என்கின்ற சமய தூய்மைவாத சீர்திருத்த சிந்தனையைக் கொண்டிருக்கிறார்.
ஈழப்போராட்ட எழுச்சி கிழக்கில் மிக வீச்சுப் பெற்ற காலத்தில் முந்திக்கொண்டு அவ்வியக்கச் செயற்பாடுகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டவர்கள் முஸ்லிம் இளைஞர்கள். அவர்கள் விடுதலைப்புலிகளின் இயக்க எழுச்சிக்காக தம்மை அர்ப்பணித்தனர். ஊரின் அதிகாரம் அவர்களது துப்பாக்கிகளில் இருந்தது. அவர்கள் கொடுங்கோன்மை மிகு குறுநில மன்னர்கள் போல உலாவினார்கள். புலிகளுக்காகவே தம் மக்களையே கொன்றார்கள், அப்பாவிகளை சித்திரவதை செய்தார்கள், தம் உறவினர்களை காணாமலாக்கினார்கள், பள்ளிச்சிறுவர்களை கூட இயக்கத்தில் இணைத்து ஆயுதக்கலாசாரத்தை பரப்பினார்கள். பின்னர் தாம் விசுவாசித்து பின்தொடர்ந்த புலிகளாலேயே கொல்லப்பட்டார்கள். தப்பியவர்கள் இனந்தெரியாதவர்களால் படுகொலைசெய்யப்பட்டனர். அவ்விளைஞர்களால் பட்டுத்துயர்ந்த பெருந்துன்பம் தொடர்ந்தும் புலிகளால் நிகழ்த்தப்பட்டே வந்தது. கொல்தலாகவும் ஆட்கடத்தலாகவும் கப்பமாகவும்.
புலிகளின் துரோகமும் வஞ்சனையும் தொடங்கிக் கவிவதற்கு முன் இந்திய அமைதிப் படையினரின் கொடுஞ்செயல்களும் கொலைகளும் தாங்கிப்பொறுத்திடவியலாத துயர நினைவுகளாக நீள்கின்றன. இந்நீள் நெருக்கடியில் சிக்கி உழன்றவர் அறபாத். தான் பட்டுத் துயர் கொண்ட அந்நினைவுகளையெல்லாம் மனத்தில் வந்து வந்து விழும் சிறுசிறு அதிர்வுகளாகச் சொல்லி கடந்து செல்கிறார். தாங்கிப்பொறுத்திடவியலாத துயர நினைவுகளாக விபரிக்கிறார்.
வறுமையில் உழன்று, ரயில் பெட்டியெல்லாம் அப்பம் விற்று, பட்டு துயர்கொண்ட வாழ்வும், போர்க்காலச் சிரமங்கள் நிறைந்த நீண்ட பயண அனுபவங்களும், இலக்கிய நண்பர்களின் ஒட்டும் உறவும், சில நல்ல மனிதர்களின் தரிசனமும், தனது பழைய நினைவுச் சுழல்களும்தான் அறபாத்தின் புனைவு வெளியின் ஆதர்சனங்கள். வாழ்வின் இன்ப துன்ப அகல் வெளிகளைக் கடந்த அனுபவ முதிர்ச்சிதான் அறபாத்தின் கதைகளின் உயிராக பரவி நிற்கிறது என்பதை அவரது இந்நினைவூஞ்சலில் ஆடித்தெளியலாம்.
வாசிப்பும், எழுத்தும், பயணங்களும் எனக் கலந்து நகரும் அறபாத்தின் நினைவுக்குறிப்புகளுக்குள் அவரது இலக்கியச் செயற்பாடுகளுக்கு கிடைத்த ஏற்புடைமை 'வேட்டைக்குப் பின்' கவிதை தொகுதி வெளிவந்த பின்னர் ஏற்பட்ட புலி ஆதரவு சார் எதிர்ப்பலைகளால் மறுதலிக்கப்படுகிறது. ஆயினும் எதிர்ப்புக்களையெல்லாம் கடந்து துணிவுடன் எழுதும் ஓர்மம் அறபாத் போன்ற எழுத்தாளர்களுக்கு இயல்பாகவே அமைய வேண்டிய ஒன்றாகும். ஏனனில் அவர் கடந்து ஓடி தப்பி வந்த பாதை அவ்வாறானதாகும்.
அறபாத்தின் பத்திகளை வாசிக்கும் போது அது அவரது நினைவூஞ்சலாக மட்டும் ஆடாது அவரது கால எல்லா மனிதர்களினதும் நினைவுகளாக அசைகிறது. மிகைப்படுத்தல்லில்லாத உணர்ச்சி வேகத்தோடு தன்நினைவுகளை எழுதியிருப்பது மேன்மை
நன்றி:றமீஸ் சாலி முகநூல் பக்கம்
நண்பர் சாளை பஷீர் எனது நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் குறித்து அவர் வலைப்பூ பக்கத்தில் குறிப்பொன்றை எழுதியுள்ளார். நன்றியுடன் அதனை Uகிர்கின்றேன்.



க.பொ.த. சா த  பாடத்திட்டத்தில் “மூத்தம்மா“ சில குறிப்புகள் 
எனது சிறுகதைகள் குறித்த ஆய்வொன்றினை சிறப்புக் கலை மாணிப் பட்டத்திற்கென . யாழ் பல்கலைக்கழக மாணவி றமீஸ் பாத்திமா யுஸ்ரா 2018 இல் சமர்ப்பித்திருந்தார். யாழ் . பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் .பேராசிரியர் ம.இரகுநாதன் அவர்களின் சான்றுப் பத்திரத்துடன் 72 பக்கங்கள் அடங்கிய ஆய்வினை யுஸ்ரா எனக்கு அனுப்பியிருந்தார். மிகுந்த கரிசனையுடன் தொகுக்கப்பட்டு நேர்த்தியாக நூல் வடிவில் இந்த ஆய்வு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி நன்றி யுஸ்ரா.
எனது சிறுகதைகள் குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு பின்வரும் குறிப்புகளையும் நினைவு Uடுத்துகின்றேன்.
1_ இலங்கை தமிழ் சிறுகதைகளில் அரபு மொழிச் செல்வாக்கு ஓட்டமாவடி அறபாத்தின் சிறுகதைகளை துணையாகக் கொண்ட ஆய்வு .ஆய்வாளர் : முகைதீன் ஹஸன் MA. ஆய்வுக்காக சமர்க்கப்பட்டது
2. ஓட்டமாவடி அறபாத்தின் மூத்தம்மா சிறுகதையில் வெளிப்படும் கிழக்கிழங்கை முஸ்லிம்களின் பண்பாட்டுக் கூறுகள் .N.சுபராஜ். தென் .கி. பல்கலைக்கழகம் மொழித் துறை
3. ஓட்டமாவடி அறபாத்தின் மூத்தம்மா சிறுகதை | புலோலியூர் வேல் நந்தகுமார்.
தெரிதல் 17 வது இதழ் .
4. மூத்தம்மா சிறுகதை சில குறிப்புகள்
தாஜஹான் அதிபர் (பொத்துவில்)
5.மூத்தம்மா சிறு கதை ஓர் அறிமுகம். இல.. நிசாந்தன்,ஆசிரியர்,யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 
இவைகள் ஆய்வு நிலை மாணவர்களுக்கு Uயன்படும் என்பதற்காக சமர்ப்பிக்கின்றேன். இது தவிர இன்னும் சில குறிப்புகள் வெளிவந்திருப்பதாக அறிகிறேன். இதுவரை அவைகள் எனது பார்வைக்கு வரவில்லை. தெரிந்தவர்கள் அறியப்படுத்தினால் நன்றியுடன் ஏற்றுக் கொள்வேன்




தொகுப்பு:நினைவுகளில் தொங்கும் நீர்
கதையாளர்: ஓட்டமாவடி அறபாத்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்(இந்தியா)
ஊஞ்சல்.
ஓட்டமாவடி அறபாத் கிழக்கிலங்கையின் முக்கியமான இலக்கியவாதிகளில் ஒருவர். ஆரம்பத்தில் 'எரிநெரிப்பிலிருந்து' என்ற கவிதைத் தொகுதியின் மூலம் கவிஞராக உருவெடுத்து, பின்னர் கவிதைக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர கதைசொல்லியாக மாறியவர். மாகாண தேசிய ரீதியில் பலதரப்பட்ட விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர்.
அவரின் 'நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்' எனும் நினைவுகளின் திரட்டை வாசிக்க கிடைத்தது. தனது குஞ்சும பருவத்திலிருந்து பிரவாகித்த அனுபவங்கள் வாயிலான நினைவுகளின் ஒட்டுமொத்த நினைவுத்திரட்சையை காகிதங்களில் படியவைத்துள்ளார். இவ்நினைவு குறிப்பேட்டில் சாலப் பொருத்தமான முதும் கதையாளர் எஸ் எல்எம் ஹனிபா அவர்கள் பின்னட்டை குறிப்பை கொடுத்திருப்பது இப்புத்தகத்திற்கு மேலும் ஒரு சிறப்பைக் கொடுக்கின்றது.
இலங்கை தமிழ் வாசகர்களுக்கு தாரளமான படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன, அவற்றில் சில படைப்புகள் வாசகங்களை ஏமாற வைக்கின்றன. எழுதியவைகள் எல்லாவற்றையும் அச்சகத்திற்கு ஏற்றும் ஒரு சர்வசாதாரண நிலை காணப்படுகின்றது. எழுத்தாளர்களின் அபரிமிதமான கற்பனை வளர்ச்சியாக நடைமுறை சாத்தியமற்ற கருத்துக்களை கதைக்களமாகவும், வரலாற்றை திரிவுபடுத்தும் புனைவுகளையும், சமத்துவம் என்றும் வளர்ச்சி என்ற பெயரிலும் காமத்தையும் சராமாறியாக நுழைத்து விடுகிறார்கள்.
வாழ்க்கையை சித்தரிக்கும், வாழ்க்கையை அதன் அசலோடு ஒப்புவிக்கும் எழுத்துக்கள் விரல் விட்டு எண்ணுபவையாகவே இருக்கின்றது.
அந்த விரல் விட்டு எண்ணுவதில் தான் நான் இத்தொகுப்பை காண்கின்றேன்.
மனிதனின் வாழ்க்கை எத்தனை நிலைகளை கடந்து வருகின்றது, காடு எவ்வளவோ ரகசியங்களை தன்னுள் பதுக்கி வைத்திருப்பது போல், வாழ்வு முழுவதும் அவலங்களையும் அபத்தங்களையும் துரோகம் ஏமாற்றம் துயரம் மகிழ்ச்சியையும் கொண்டிருக்கின்றது.
நினைவாளனின் வாழ்வின் துளிர்த்து வளர்ந்து காய்ந்து போன நினைவுச் சருகுகளுக்கு மறுபடியும் நீரூற்றும் போது, அதன் ஈரத்திலேயே நான் மீண்டும் மீண்டும் துளிர்த்து நின்றேன்.
சமூக அரசியல் சார்ந்த பத்தி முறை எழுத்துக்களாக ஒவ்வொரு சம்பவங்களையும் சுருக்கமாகவும், வாசகர்கள் எளிமையாக புரிந்து கொள்ளக் கூடியதாகவும், நினைவாளன் சம்பவங்களின்போது உணர்ந்து கொண்ட அதே உணர்வுகளை வாசகர்கள் மனதில் பிரதிபலிக்கக் செய்வதாகவும் இருக்கின்றது. தனக்குரிய வட்டார பேச்சு நடையில் அவர் பேசியிருப்பது அவருக்கு உரிய தனித் தன்மையைக் காட்டுகிறது.
காலத்தால் மருகிப்போன சொற்களை பலவற்றை சமூகத்திற்குள் மீள் செய்து இருக்கின்றார்.
"வாப்புப்பா, வராந்தா, அடுப்படி, உலை, குப்பிலாம்பு, சிம்மினி, அச்சிலம்,துலா, கையிப்பு, லாந்தர், லாம்பெண்ண ...."
நினைவாளன் தன் வாழ்வியல் அனுபவங்களை அடுக்கும் போது பல சிசுக்களை பிரசவித்து இருக்கின்றார், இறந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திலிருந்து கடந்த காலத்திற்கு மாறிமாறி பயணிக்கிறார். தான் சார்ந்த, தன்னைச் சூழ இருந்த இயற்கை, சுற்றுச் சூழல், சமூக கலாச்சார பின்னணி, மற்றும் அரசியல், மதம் சார்ந்த விடயங்களை அச்சுப்பிசகாமல், எந்த பிடிகளும் இல்லாமல் சமூகத்தின் மத்தியில் ஒப்புவித்து இருக்கின்றார்.
கிழக்கிலங்கையின் குறிப்பாக ஓட்டமாவடி பிரதேசத்தில் சமூக வாழ்வியல் அரசியல் ஆகியவற்றின் மூன்று தசாப்தகால ஆவணப் பதிவாக இத்தொகுப்பு இருக்கின்றது.
ஒவ்வொரு சம்பவங்களும் காட்சி விவரிப்புகளும் வெவ்வேறு விதமான உணர்வுகளில் ஏற்ற, இறக்கங்களை உண்டு பண்ணுகின்றது.
இங்கு சந்ததியினர் காணாத புயலையும் போரையும் நம் கண்முன்னே நிறுத்துகிறார்.
அந்த காட்டையும் சுற்றுச்சூழலையும்,
"பரந்து கிடக்கும் வயல் வெளி. வயலையும் குளத்தையும் பிரிக்குமாற் போல் இராட்சத பாம்பாய் படர்ந்து நீளும் குளக்கட்டு, வயலை தாண்டி விழுந்தால் மாந்துறை ஆறு."
"இரவில் பூமியில் அதன் மலர்கள் உதிர்ந்து கிடக்கும், ஆற்றுநீர் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும்."
சம்பவங்களில் அடிக்கடி தொட்டுப் போகின்றார்.
அவரைச் சுற்றியிருந்த காடுகளுக்கிடையிலான பிணைப்பினூடாக, அதை ஒரு ஆசானாகவும் ஏற்றுக்கொள்கிறார்.
"காடுகள் வாழ்க்கையின் குறிக்கோள்களை கற்றுத்தந்தது. காடுகளின் அரவணைப்பில் பல இரவுகள், பகல்கள் தூங்கியிருப்போம்."
அத்துடன் நினைவாளன், நினைவு குறிப்பேட்டில் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னுள்ள வாழ்வியலை அதன் பாணியிலேயே பதிவிடுகிறார்.
"கிடுகு வெயப்பட்ட முகடு, முற்றத்தில் பெரிய மாமரம், சற்று தொலைவில் கிணறு, கிணற்றில் சூழவும் கமுகு மரங்கள், தண்ணீரள்ளத்துலா, கிடுகுவேலி நாலாபக்கமும் நுழைவாயில், வட்டரும் ரொட்டியும் நிறைந்த புளியமரத்தடி தேனீர் கடை"
இந்தச் சந்ததி விரட்டி விட்ட கத்னா ஊர்வலம், விருத்த சேதன அழைப்பு, ஒய்த்தா மாமா, விராத்துக் கத்தம்.
கண்கள் கண்டிராத விசித்திரமாக தும்பு மிட்டாய், கலர் விசிறி, அன்னமினா பழம், இலுப்பைப்பூ கொளுக்கட்டை, உழுவை மீன் திராய்ச் சுண்டல், பொன்னாங்கண்ணி கீரை சுண்டல், கோல்டன் மீன் பாலாணம், முருங்கையுடன் சுங்கான் கருவாட்டுக் கறி...
இவைகளை கண்களால் பார்த்து உதடுகள் வாசிக்கும் போது மனம் ருசிக்கின்றது.
நினைவாளன் தனது நினைவுகளின் ஊடாக வாழ்வின் ஒவ்வொரு நிலையாக கடந்து வருகின்றனர். ஒரு நிலையை கடந்ததும் நினைவுகள் முழுவதும் துரோகம், ஏமாற்றம், துயரம், பிரிவுகள், கொலைகள் என்று ஒரு விதமான மானுடத்தின் மீதான விரக்தியை உண்டு பண்ணுகிறது, இடையில் வரும் அந்த வயோதிபத் தாயின் குரல்
"ஒங்கலுக்கு தேத்தண்ணி தாரத்துக்கு ஒரு சுரங்கச்சீனியும் இல்லையே தங்கம்கள்"
பாதர் ரோபோட் கிங்ஸ்லி போன்றோர்களும் மீண்டும் மானிடத்தின் மீதும் உறவுகள் மீதும் நம்பிக்கையை வளர்க்கிறார்கள்.
முஸ்லிம் சமூகம் எவ்வாறு புலிகள்-இந்திய படைகள்-இலங்கை இராணுவம் இப்படி மும்முனையால் எப்படி நெருக்கப்பட்டது என்பதை கண்ணுற்று, அனுபவித்த கீற்றுகளின் கதறலாக முன்வைக்கிறார்.
அதிலும் மிகவும் விரக்தி அடைந்த நிலையில் ஒரு துரோகத்தை எதிர் கொண்டவராக 'ஓட்டமாவடி வீட்டுக் கதவுகளை புலிக்கொடி போர்த்திய சந்துக்குகள் தட்டி நின்றபோதும், அவர்களது எதிர்களின் மீது கொண்ட பயத்தை போக்க முஸ்லிம் சமூகத்தின் மீது மிலைச்சத்தனத்தை காட்டியதுடன், இயக்கத்திலிருந்த புஹாரி போன்றவர்கள் இயக்கத்திற்காக ஓடோடி ஆட்கள் சேர்ந்தவர்களையும் சுட்டு புதைத்து மாமிச பசியைத் தீர்த்துக் கொண்டார்கள் என்றும்,
பிரபாகரனுக்கு எதிராக தனது குற்றச்சாட்டையும், கண்டனத்தையும் அவரின் படைப்புக்கள் மூலம் அப்பொழுதுகளிலேயே நேரடியாக முன்வைக்கின்றார்.
இந்த முப்பது வருட கால போராட்டம் எதைத்தான் சாதித்தது, ஒரு முதலமைச்சரையும், ஒரு அரை அமைச்சரையும் தவிர என்று யதார்த்தை சொல்லி இருக்கின்றார்.
அவரின் வாழ்க்கையின் படிநிலை ஊடாக கிழக்கிலங்கையிலிருந்து தலைநகரை நோக்கி நகர்கிறது, அப்போதிருந்த பிரயாணத்தின் இடர்பாடுகளையும், அதனோடு சேர்ந்த பத்திரிகை அனுபவங்களையும் விபரிக்கின்றார்.
நினைவேட்டின் ஆரம்பம் இயற்கையையும் வாழ்வியலையும் முன்னிறுத்தி, நமக்கு ஒரு அழகிய கற்பனை கிராமிய வாழ்க்கையை உண்டு பண்ணுகிறது, அதன் அடுத்த பகுதி இரத்தமும் சதையுமாக திளைக்க வைக்கிறது, இறுதி சில அத்தியாயங்கள் சோர்வடைந்து போவதைப் போல இருக்கிறது,
இதற்குக் காரணம் வாசித்த எனது மனநிலையை தான் குற்றம் சாட்டுவேன். எப்போதும் நமது மனம் கற்பனையையும், இரத்த வாடையை நிறைந்த சம்பவங்களை உச்சாக்கொட்டி கேட்க வைப்பதால், இறுதி சம்பவங்கள் மனதில் ஒரு சோர்வு சூழ்நிலையை தோற்றுவிக்கின்றது.
ஓட்டமாவடி அரபாத் நினைவு ஊற்று இத்துடன் முடியவில்லை என்றுதான் நினைக்கின்றேன், அவர் வாழ்வியலின் அனுபவங்களில் சில துளிகளைத்தான் பதிந்திருக்கிறார். ஒருவரின் வாழ்க்கையை சில பக்கங்களில் அடக்கிவிட முடியாது.
'நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்' ஒரு முகக் கண்ணாடி, அவரின் நினைவுகளின் ஊடாக நமது வாழ்க்கையின் கடந்தகாலத்தில் பயணிக்கச் செய்கிறது.

Thanks hanees Mohamed

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...