Thursday 7 November 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


                                                                தொடர் - 50

இப்படி அந்த எதிர்ப்பு நீண்டு செல்கின்றது.
யதீந்திரா போன்ற புலி அபிமானிகளின் பார்வையில் புலிகள் நல்லவர்கள்.அவர்கள் மனம் நோக ஒரு ‘அ’ க்கூட எழுதிவிடக்கூடாது.மற்ற இனத்தின் மீது என்னதான் அத்துமீறல் செய்தாலும் அதனை வாய் பொத்தி கைகட்டி பார்த்திருக்க வேண்டும்.இதனை மீறுபவர்கள் புலி எதிர்ப்பாளர்கள். தேசத்துரோகிகள் .

யதீந்திரா போன்றவர்களிடம் நான் கேட்பது ஒன்றுதான் 30 வருட போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு புலிகள் பெற்றுக்கொடுத்த தீர்வு என்ன?

என்னிடம் இருக்கும் மனப்பதிவு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்ட பின்பும், மனநோயாளியாக மாற்றப்பட்டபின்பும், அங்கவீனர்களாக ஆக்கப்பட்டபின்பும்,சொத்தழிவுகள் ஏற்பட்ட பின்பும், மக்கள் அலைந்துழந்து நிம்மதியிழந்தபின்பும் நீங்கள் பெற்றுக்கொண்டது ஒரு முன்னால் முதலமைச்சர், ஒரு அரை அமைச்சர்.இப்போது ஒரு முதலமைச்சர்.

பேரினவாத்தின் ஓங்கிய கரங்களை மடக்கிவிடமுடியாத இவர்களால் இன்னும் தமிழ் மக்களின் பிரகாசம் ஜொலிக்கின்றது என்ற சிலரின் கனவுகள் பலிக்க நானும் யதீந்திரா போன்றவர்களுடன் இணைந்து பிரார்த்திக்கின்றேன்.அது நிற்க!

நினைவில் மலர்ந்த மலர்கள் உங்கள் விழிகளில் மருந்தாகி ,சில நேரம் விருந்தாகி இதயங்களை தொட்டுச்சென்றிருக்கும். இந்தப்பத்தியை எழுத ஆரம்பித்த போது எங்கே ஆரம்பித்து எப்படி முடிப்பது என்ற அச்சம் எனக்குள் இருந்தது. எழுத ஆரம்பித்த போது விடயங்கள் வெள்ளம் போல் மடை திரண்ட போது எப்படி முடிப்பது என்ற அச்சம் பின்னெழுந்தது யதார்த்தம்.

தோண்டத்தோன்ட நினைவின் பெட்டகத்திற்குள்ளிலிருந்து புதையல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.அதனை தொட ஆரம்பித்தால் முடிவுறாமல் போய்க்கொண்டே இருக்கும். சொல்ல மறந்த கதைகள் எத்தனையோ இடையில் வந்து போய்விட்டன. அவற்றையெல்லாம் சொல்லி விட முடியவில்லை.

இன்னும் பல நூறு கதைகள் ,துரோகம்,ஏமாற்றம்,துயரம், மகிழ்ச்சி என ஊஞ்சலில் ஆட காத்திருக்கின்றன.இந்தப்பத்தியில் வந்த சில திகிலூட்டும் விடயங்களை நிஜமா என வியந்தும்,ஐயமுற்றும் நண்பர்களில் சிலர் கேட்கின்றனர்.எல்லாக்கதைகளும் நிஜத்திலிருந்து பிறந்தவை.கற்பனைக்கு இதில் இடமில்லை. ஒரு சமூகத்தின் கலை கலாசார அரசியல் வரலாற்றினை எனக்குத்தெரிந்த மொழியில் சொல்லியிருக்கின்றேன். எனக்கு  பட்டுக்கோட்டை பிரபாகர் போல் மர்மங்களை சொல்லி பயமுறுத்தும் தைர்யம் கிடையாது.அல்லது நமது ஈழத்தில் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் சில ரமணி சந்திரன்களைப்போல் திகிலூட்டவும் வராது.

என்னுடைய பெரும்பாலான கதைகள் என் அனுபவத்தில் வெளிப்பாடு. அது போர்க்காலமாகட்டும்,அல்லது தனிநபர் அறம், உணர்வுசார் அம்சமாகட்டும்,எதுவாகினும் அதன் பின்புலத்தில் என் மூன்றாவது கண்ணும் நுழைந்திருக்கும்.

வறுமை,அச்சம், உயிர்ப்பயம்,அகதி வாழ்வு, சுகபோகம் என எல்லா வாழ்வையும் அனுபவித்திருக்கின்றேன்.குடிசை கொட்டிலில் ‘டேஸ்ட் கிழங்கு’ம் ‘பாபத் அவியலும்,  ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உயர் ரக உணவும் ருசித்துப் பார்த்திருக்கின்றேன். கஞ்சிக்கே வழியில்லாமல் இளமையில் துடித்தும் இருக்கின்றேன். ஒரே ஆடையில் ஒரு வருடம் பள்ளிக்கூடம் பொது நிகழ்ச்சி என்று கந்தையாயினும் கசக்கி கட்டியிருக்கின்றேன்.விதம் விதமாய் ஆடைகள் அணிந்தும் பார்த்திருக்கின்றேன்.

வீடற்று அலைந்ததும் குதூகலம் நிறைந்த வீட்டில் வாழ்வதும் என இரண்டு தருணங்களை வாழ்வில் இறைவன் எனக்கு தந்திருக்கின்றான். துன்பமும்,இன்பமும் என்னளவில் அல்லாஹ்வின் சோதனை அதில் துவண்டு விடாமல் பின்னயதில் துய்த்துவிடாமல் வாழ்ந்தால் வாழ்க்கை சம நிலையாக ஓடும்.

எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் சத்தியத்தை பேண நினைக்கின்றேன். அதை பின்னபற்றியொழுகவும் செய்கின்றேன். ஆணவம், அகம்பாவம்,வித்துவச்செருக்கற்ற  படைப்பின் மூலம் இந்த சமூகத்திற்கு பல விடயங்களை சொல்லியிருக்கின்றேன்.இது எனது இரட்சகன் எனக்கு தந்த அருட்கொடை.

வாழ்வில் எல்லா நிலைகளிலும் அவனின் இந்த அருட்கொடை மீது அளவில்லா நம்பிக்கை கொண்டுள்ளேன். எழுத்தாளன், திருடனாக.. கொலைகாரனாக, ஏமாற்றுபவனாக..பொய் சொல்பவனாக. போட்டுக்கொடுப்பவனாக….ஊழல்மிகு வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக.. ஏய்த்துப் பிழைப்பவனாக இருப்பதை விட அவன் பிச்சை எடுப்பது மேல் என்பது எனது கொள்கை.

இந்த தொடரை தொடராகப்படித்து என்னை ஊக்கப்படுத்திய ஆலோசனை சொன்ன நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் இதனை பிரசுரித்து உதவிய எங்கள் தேசத்தின் ஆசிரிய குழாத்தினருக்கும்,நான் ஆடிய ஊஞ்சலின் கயிறுகள் அறுந்து விடாமல் என்னை கரை சேர்த்த இறைவனுக்கும் பல கோடி நன்றிகள்.

இனி ஊஞ்ஞல் நிற்கும்.
arafathzua@gmail.com


  

Saturday 19 October 2013

 மாவட்ட கலாசார விழா
ஓவியம்,மற்றும் புகைப்பட கண்காட்சி  எனது பிள்ளைகளுடன்



நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                                                         49

ஒரு மாலைப்பொழுது வெள்ளவத்தை ரோயல் தனியார் வைத்தியசாலை வீதியில் நடந்து கொண்டிருந்தேன். அன்றைய தினம் நான் பணி புரிந்த அலுவலகத்தின் மூலம் கண் சத்திர சிகிச்சை இலவச முகாம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ரோயலில்தான் தியோட்டர் ஏற்பாடு. அந்தப்பணிகளை முடித்து விட்டு திரும்பிய போதுதான் மு.பொன்னம்பலத்தை சந்தித்தேன். எனது நினைந்தழுதல் கதைத்தொகுதிக்கு ஆழமான அழகான நடுநிலையான விமர்சனத்தை தந்தவர். அவரின் முன்னீட்டுடன் அது வெளி வந்தது. 

அந்நாட்களில் என்னை மேலும் சில நல்ல கதைகள் எழுத உற்சாகப்படுத்தியது. முன்னீட்டைப் பெற்றுக்கொள்ள வெள்ளவத்தையில் இருக்கும் அவர் வீட்டிற்கு அடிக்கடி சென்றிருக்கின்றேன்.

வீட்டிலுள்ளவர்களிடம் என்னை பாசமாக அறிமுகப்படுத்திய மனிதர். கள்ளம் கபடமின்றி பழகிக்கொண்டிருந்தவர்.

வேட்டைக்குப்பின் படித்த கடுப்பில் இருந்ததை நான் அறியேன்.
நானே முந்திக்கொண்டு வணக்கம் ஐயா என்றேன்.
பதிலுக்கு வணக்கம் செத்தழிந்து வந்தது.

பின் காட்டமாக என்னை நோக்கி சத்தமிட்டார்.
‘நீர் எங்கட போராட்டத்த சாபமிட்டிருக்கிறீர்,
எங்கள கொச்சப்படுத்தியுள்ளீர். இதன நீர் எழுதியிருக்ககூடாது. விடுதலைப்போராட்டம் சாகாது என்றார். ‘

நான் ஆடிப்போய்விட்டேன். நெஞ்சில் பூத்து நின்ற பூஞ்செடி அனல் காற்றில் கருகி மணப்பதை என் நாசியில் உணர்ந்தேன். சிகரத்தின் உச்சியில் இருந்த மு.பொ. திடீரென என் காலடியில் சிதறி விழுந்து நொறுங்கிப்போவதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவர் சாபமிட்டதாய் என்னை சபித்த அந்தக்கவிதையின் வரிகள் மீண்டும் ‘நியோன் விளக்குகளாய் ‘ கண்ணிலும் எண்ணத்திலும் மின்னத்தொடங்கின. இதில் எங்கே இருக்கிறது தவறு.என் இனத்திற்கு துரோகம் செய்தவர்களை என்னால் எதிர்க்க முடியவில்லை.அடிக்க முடியவில்லை.குறைந்த பட்சம் மனம் வெதும்பி என் ஆதங்கத்தை சொல்வுமா இயலாது?

இதுதான் மு.பொவின் நெஞ்சில் தீயை மூட்டிய கவிதை..

சாபம்.

காற்றின் துவர்ப்பு / நுணி நாவில் கரைகிறது./ விழியழுத உவரலைகள் / நெஞ்சின் மேல் வாரியடித்தன பெருங்குரலாய்.
என்ன செய்தீர் வீரர்காள் என்னினத்தானை / அத்தாங்கு கொண்டள்ளி / சுடு மணலில் கொட்டிய மீன்களென / வெடி குண்டு கொண்டல்லோ / குழியிட்டு மூட வைத்தீர்.
கடலின் அந்தரத்தில் / பிரலாபித்ததெம் ஆத்மா. / சாவெனும் தீ மூட்டி எம்முயிரை கொன்றொழித்தீர் வீரர்காள் / கொன்றொழித்தீர்.

சக மொழி பேசுவோனை / சக தேசத்தானை/ ஏனங்கு குறி வைத்தீர்?

வரி தந்தோம் (தருகிறோம்) / நீவீர் பயந்தொதுங்கி வந்த போது
இடம் தந்தோம். / உயிர் தந்து விடுதலைக்காய் உருக்குலைந்தோம் / எமக்கென நீர் எது தந்தீர் வீரர்காள்?

இதோ / அநீதி இழைக்கப்பட்ட என்னினத்தானின் சாபம்/ உமை நோக்கி எழுகிறது./ நிச்சயம் ஒர் நாள்  அது / உம் விடுதலையை பொசுக்கும்.

2002 ம்ஆண்டு எழுதிய கவிதை யாத்ராவில் பிரசுரம் பெற்றதாக ஞாபகம். தொகுப்பு 2004 ஆகஸ்ட்டில் வெளிவந்தது.

கவிதைத்தொகுதிக்கான விமர்சனங்கள் பரவலாக வெகுஜன  பத்தரிகைகள் மற்றும் இலக்கிய சஞ்சிகைகளில் எதிரும் புதிருமாக வெளி வந்து கொண்டிருந்தன.2005 ஆகஸ்ட் 14 தினக்குரலில் யதீந்திரா என்பவர் ‘ எதிர்ப்புக்கவிதைகள் தொடர்பாக ஓர் அரசியல் புரிதல்’ அறபாத்தின் ‘வேட்டைக்குப்பின் கவிதைத்தொகுதிப்பை முன்னிறுத்தி என்ற தலைப்பில் அரைப்பக்க கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

அதிலிருந்து சில பத்திகள்…

1980க்குப்பின்னர் முக்கியம் பெற்ற சேரன் போன்ற கவிஞர்களும் எதிர்ப்பு இலக்கிய கர்த்தாக்களாக கொண்டாடப்படுகின்றனர். இந்த அடிப்படையில்தான் அறபாத்தின் புலி எதிர்ப்புக்கவிதைகளும் இலகுவாக எதிர்ப்புக்கவிதைகள் என்ற அந்தஸ்தைப்பெற்றுவிடுகின்றன. 

இனி அறபாத்தின் தொகுப்பிற்கு வருவோம்.அறபாத் ஒரு முஸ்லிம சமூகத்தைச்சேர்ந்தவர் என்பதை மனதில் இருத்தியே இந்த தொகுப்பு பற்றிய எனது மனப்பதிவுகளை வெளிப்படுத்த முயல்கிறேன்.

இந்த தொகுப்பில் 37 கவிதைகள் உள்ளன. இரண்டு கவிதைகளை தவிர மற்றைய அனைத்தும் தமிழ் மேலாதிக்கத்தால் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட நெருக்குவாரங்களை சொல்வதாக புனையப்பட்டுள்ளது. ஆனால் அறபாத் தனது தொகுதியை புலிகளால்  ஹீதாக்கப்பட்ட புலிகளுக்கு என சமர்ப்பணம் செய்திருப்பதன் மூலம் அறபாத் பூடகமான ஒரு அரசியலை சொல்லி விட்டார்.

விடுதலைப்புலிகளை முஸ்லிம் சமூகத்தின் பிரதான எதிரிகளாக சித்திரித்து விடுகிறார்………இப்படியே புலிகளுக்கு எதிராக எழுத வேண்டும் என்ற அறபாத்தின் நீண்ட நாள் அடங்கா வெறி ஓரளவு வேட்டைக்குப்பின் மூலம் தணிந்திருக்க கூடும்.

இன்னொரு இனத்தின் பல தியாகங்களால் பரிணமித்த விடுதலை இயக்கத்தை கொச்சைப்படுத்த முயலும்போது ஒரு கவிஞனின் மனசாட்சி இறந்து விட்டது என்பதை அறபாத் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த தொகுப்பிலுள்ள கவிதைகளின் பொது நிலை அரசியல் விடுதலைப்புலிகளை முஸ்லிம் மக்களுக்கு எதிரான அமைப்பு எனும் கருத்து நிலையை முன்னிறுத்தும் நோக்கிலானதாகும்.என்னளவில் நான் இந்த தொகுப்பை முற்றிலுமாக நிராகரிக்கின்றேன்.
இப்படி அந்த எதிர்ப்பு நீண்டு செல்கின்றது.


யதீந்திரா போன்ற புலி அபிமானிகளின் பார்வையில் புலிகள் நல்லவர்கள்.அவர்கள் மனம் நோக ஒரு ‘அ’ க்கூட எழுதிவிடக்கூடாது.மற்ற இனத்தின் மீது என்னதான் அத்துமீறல் செய்தாலும் அதனை வாய் பொத்தி கைகட்டி பார்த்திருக்க வேண்டும்.இதனை மீறுபவர்கள் புலி எதிர்ப்பாளர்கள். தேசத்துரோகிகள் .

யதீந்திரா போன்றவர்களிடம் நான் கேட்பது ஒன்றுதான் 30 வருட போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு புலிகள் பெற்றுக்கொடுத்த தீர்வு என்ன?

என்னிடம் இருக்கும் மனப்பதிவு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டபின்பும், மன நோயாளிகாக மாற்றப்பட்ட பின்பும்,அங்கவீனர்களாக ஆக்கப்பட்டபின்பும், சொத்தழிவுகள் ஏற்பட்ட பின்பும், மக்கள் அலைந்துழந்து நிம்மதியிழந்த பின்பும் நீங்கள் பெற்றுக்கொண்டது ஒரு முன்னால் முதலமைச்சர், ஒரு அரை அமைச்சர்.

பேரினவாத்தின் ஓங்கிய கரங்களை மடக்கிவிடமுடியாத இவர்களால் இன்னும் தமிழ் மக்களின் பிரகாசம் ஜொலிக்கின்றது என்ற சிலரின் கனவுகள் பலிக்க நானும் யதீந்திரா போன்றவர்களுடன் இணைந்து பிரார்த்திக்கின்றேன்.

ஊஞ்சல் இன்னும் ஆடும்...

Monday 30 September 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

தொடர் - 48

அதன் தொடர்ச்சியாக பிறகு தஃலீம் தொகுப்பு குர்ஆனுக்கு எதிரானதா? எழுதினே;.இதுவும் பல பதிப்புக்கள் கண்டது. அனேகரின் வேண்டுகோளுக்கினங்க தப்லீக் அன்றும் இன்றும், தஃலீம் தொகுப்பு குர்ஆனுக்கு எதிரானதா ? இரண்டையும் ஒருங்கே சேர்த்து பிற்காலத்தில் ஒரு தொகுப்பு போட்டேன்.

கவிதை சிறுகதை இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்திக்கொண்டு இலக்கியப்பயணம் செய்வதை விடுத்து ஒரு துறையை மட்டும் தேர்ந்தெடுப்பது என்ற முடிவில் கவிதைக்கு முழுக்குப்போட்டேன். 

இடறி விழுந்தால் ஒரு கவிஞரில்தான் விழ வேண்டும் என்ற நிலையிலுள்ள இலக்கிய வீதியில் நாம் கவிதை எழுதாமல் விடுவதனால் ஈழத்து இலக்கிய உலகு அப்படி ஒன்றும் பெரிய இழப்பை சந்திக்கப்போவதில்லை. எரி நெருப்பிலிருந்து தொகுதிக்குப்பின் எழுதிய கவிதைகளை ஒன்று திரட்டி வேட்டைக்குப்பின்.. கொண்டு வந்தேன். அதற்கு முதல் ‘நினைந்தழுதல்" என்னும் சிறுகதைத்தொகுதி வெளிவந்தது.

 மு.பொன்னம்பலத்தின் முன்னீட்டுடன் வந்த அந்த தொகுதிக்கும்  நல்ல வரவேற்பிருந்தது. ‘தமிழ் நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் விருதும், இலங்கையில் ‘விபவி இலக்கிய விருதும் ‘ இந்த நூலுக்கு கிடைத்தது.

விபவி விருது கிடைத்தது ஒரு சுவாரஸ்யமான கதை. எனது கொழும்பு அலுவலகத்தில் கடமையிலிருந்த ஒரு காலைப்பொழுது அஸ்ரப் சிஹாப்தீன் தொலைபேசியில் வந்தார். ‘அறபாத் உங்களின்ற தொகுதியும் விருதுக்கு தெரிவாகியிருக்கு, இன்டைக்கு விழா ஏன் வரவில்லை எனக்கேட்டார்.எனக்கு தெரியாதே என்றேன். அப்படியானால் உடனே புறப்பட்டு வாருங்கள் என்றார். 

ஜேன் டி சில்வா அரங்கில் அந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. மறைந்த கவிஞர் நண்பர் ஏ.ஜி.எம் ஸதகாவும் அவருடைய கவிதை தொகுதியான போர்க்கால கவிதைகள் தொகுதிக்கு விருதைப்பெற வந்திருந்தார்.சில விருதுகள் இப்படியும் கிடைத்திருக்கின்றன.சில விருதுகள் சிபாரிசு செய்யப்பட்டதின் பின்பும்  வழங்கப்படாமலும் போயிருக்கின்றன.

விபவி மற்றும் சுதந்திர இலக்கிய விழா விருதுகள் பெற்ற ‘நினைந்தழுதல் ‘ சிறுகதைத்தொகுதி இனப்பிரச்சினையின் மையங்கள் குறித்தும் சிறுபான்மையினரின் வாழ்வுரிமை ஸ்த்திரமின்மை குறித்தும் உக்கிரமாக பேசியது

நான் சொல்ல வந்தது வேட்டைக்குப்பின் தொகுதி தொடர்பான அனுபவத்தை. தொகுதியை யாருக்கு சமர்ப்பிக்கலாம் என்று யோசித்துக்கொண்டு சில மாதங்கள் கடத்தியிருக்கின்றேன். புலி எதிர்ப்புக்கவிதைகள் அதில் அதிகம் காணப்படுகின்றன.

புலிகளின் பச்சோந்தித்தனத்தை தோலுரித்துக்காட்டும் இந்த தொகுதியை அவர்களையும் அவர்கள் போராட்டத்தையும் நம்பி மோசம் போன முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களுக்கு இதனை அர்ப்பணம் செய்வது என்று தீர்மானித்தேன்.

 புலிகளால் கொல்லப்பட்ட புலிகளுக்கு, அல்லது முஸ்லிம்களுக்கு, இளைஞர்களுக்கு  என்றெல்லாம் வாக்கியங்களை மாற்றி மாற்றி போட்டுப்பார்த்தேன். திருப்பதியளிக்கவில்லை. அப்படியே கிடப்பில் போட்டு விட்டு சுற்றித்திரிந்தேன். மனசுக்குள் பொறுத்தமான வாக்கியங்கள் பொறியாக ஓடிக்கொண்டு சிக்கமாட்டேன் என்று விடுப்புக்காட்டியது.

ஒரு மாலையில் நண்பர் நழீமை சந்திக்க அவர் அறைக்குசென்றேன். புத்தக வேலைகள் முடிந்துவிட்டதா என்று அக்கரையுடன் விசாரித்தார். எனது அவஸ்தையை சொல்லி  இப்படியெல்லாம் எழுதியிருக்கின்றேன் ஒன்றும் பொருத்தமானதாக தெரியவில்லை என்றேன். ‘புலிகளால் சஹீதாக்கப்பட்ட புலிகளுக்கு.. என்று யோசித்துப்பாருங்கள் என்றார். 

மூடிக்கிடந்த பனிகூட்டம் கரையத்தொடங்கியது. பலமுறை எழுதியும் வாய்விட்டு வாசித்தும் பார்த்தேன். மிகமிகப் பொருத்தமாய் இருந்தது. அடுத்த வாரம் புத்தகம் வந்துவிடும் என்றேன் சந்தோசத்தில்.

நண்பர் சினாஸ் முஹம்மத்தின் கை வண்ணத்தில் நழீமின் ஓவியங்களுடன் புத்தகம் வெளிவந்தது. மிகுந்த அவதானமும், சிரத்தையும் எடுத்து இந்தத்தொகுதியை வெளிக்கொணர்ந்தேன்.

 எரி நெருப்பிலிருந்து கவிதைத்தொகுதி வெளிவந்த போது பாராட்டி தட்டிக்கொடுத்தவர்கள் வேட்டைக்குப்பின் கண்டதும் என்னை பிய்த்துக்குதறி எடுத்தனர்.


ஊஞ்சல் இன்னும் ஆடும்.......

Friday 13 September 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்.

 தொடர்-  47

இலங்கையின் கொடூர யுத்தத்தில் செத்து மடிந்த,அல்லது பாதிப்படைந்த தமிழ் முஸ்லிம்களின் உள்ளக்குமுரல்களின் தொகுப்பாக அந்த தொகுதி வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டது.என்னை இந்த அளவிற்கு எழுத தூண்டிய எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவுக்கு அதனை சமர்ப்பித்திருந்தேன்.

ஏரி நெருப்பிலிருந்து  நூல் வெளியீட்டு விழாவுக்கு இலக்கிய ஜாம்பவான்கள் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர். குறிப்பாக பேராசிரியர் .கா.சிவத்தம்பி ஐயா, செ.யோகராசா,சித்திரலேகா மௌனகுரு போன்ற ஆளுமைகளின் பிரசன்னத்துடன் அந்த விழா ஓட்டமாவடி பாளிகா பெண்கள் கல்லூரியில் 1996 அக்ரோபர் மாதத்தில் நடைபெற்ற இனிய கணங்களை நினைத்துப்பார்க்கின்றேன்.

பின்னர் யாழ்ப்பாணத்திலும் சில இலக்கிய நண்பர்கள் எரி நெருப்பிலிருந்து கவிதைத்தொகுதியை அறிமுகம் செய்தார்கள். நான் கலந்து கொள்ள வில்லை. அதற்குரிய காலமுமாக அது இருக்கவில்லை. அரூஸால் ஏமாற்றப்பட்டவர்கள் பிற்காலத்தில் நிறையப் புத்தகங்களை போட்டிருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.

இப்போது முதல் போட்ட தொகுதியை பார்க்கின்றபோது அச்சுக்கலையும் புத்த ஆக்கப்பணியும் கண்டுள்ள அசுர வளர்ச்சி மலைக்க வைக்கின்றது.கடைசியாக வெளிவந்த (2008) எனது சிறுகதை தொகுதியான ‘உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி ‘ தமிழ்நாட்டில் அடையாளம் பதிப்பகம் போட்டது.
 
ஒரு சதமேனும் எனக்கு செலவில்லாமல் இலாபமாய் வந்த தொகுதி. தொகுதிக்கான தலைப்பை நண்பர்களிடம் கலந்துரையாடியபோது ‘உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருதி ‘ என்று அனார் சொன்னார்.அதுவே பொருத்தமானதாக இருந்தது. அப்படித்தான் டைப்செய்து மெயில் பண்ணினேன்.கடைசியில் ‘குருதி; ‘ ‘குருவி ‘  யாக மறுவி வந்து சேர்ந்து. அதுவும் கதைகளுக்கு பொருந்தி வருகின்றது என்பதால் பேசாமல் விட்டு விட்டோம்.

முதல் தொகுதி போடுவதில் ஏற்பட்ட அனுபவத்தை வைத்துக்கொண்டு பிற்காலத்தில் ஏனைய தொகுதிகளை மிக சிறப்பாகவும் நுணுக்கமாகவும் செய்து முடித்தேன். அச்சுக்கலையின் நெளிவு சுளிவுகளை இலேசில் கற்றக்கொள்ளவும், பிறரின் புத்தகங்ககளை அழகுற அச்சிடவும் இயலுமான அனுபவத்தை இந்த துறை எனக்கு கற்றுத்தந்தது.

எனது இரண்டாவது நூல் ‘தப்லீக் அன்றும் இன்றும் - பாகம் 01 .என் எழுத்துலக வாழ்வில் கசப்பான அனுபவங்களையும் உயிர் அச்சுறுத்தலையும் எதிர் கொள்ள வைத்த  புத்தகம்.

இதனை கொழும்பில் அச்சிட்டேன். அச்சகம் செல்லாமல் ஆலோசனைகளை கொடுத்து ஒரு அறையில் இருந்தபடி மிக இரகசியமாக வெளிவந்த நூல். நூலின் கருத்துக்கள் நடுநிலைமையாக இருந்தாலும் அதனை ஜீரணித்துக்கொள்ளாத ஒரு சிலரின் வன் முறை கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மிக மோசமாக விளைவுகளை ஏற்படுத்தியது.

எனது தலைக்கு பத்து இலட்சங்கள் விலைபேசப்படுகின்ற அளவிற்கு அந்த புத்தகத்தில் எதுவும் இல்லை என்பது நாடறிந்த விடயம்.என்றாலும் கம்பஹா மாவட்டத்தில்  ஒரு ஜீம்ஆப்பள்ளிவாயலுக்கு முன் நின்று கொண்டு ஒருவர் ‘இந்த புத்தகத்தை எழுதியவரின் தலையை கொண்டு வந்தால் பத்து இலட்சம் தருவேன்’ என்ற பகிரங்கமாக கூறும் அளவிற்கு எனது தலைக்குள் என்ன தங்கமா தேங்கி நின்றது.

சிந்தித்துப்பார்க்கையில் இந்த சமூகத்தின் மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கும் பக்குவம் பற்றி இப்போதும் எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. தன்னை ஒருவன் விமர்சிக்கும் போது அதனை உள்வாங்கி சீர்திருத்தம் பெறும் மனப்பாங்கு என்பது எளிதில் வாய்த்து விடுவதில்லை. மேற்படி நூல் மூன்று பதிப்புக்களை கண்டது.குறுகிய காலத்தில் பல்லாயிரம் பிரதிகள் விற்கும் படி என் எதிராளிகளின் பிரச்சாரமே காரணமாயிருந்தது.
 
 
ஊஞ்சல் இன்னும் ஆடும்..



Tuesday 3 September 2013

' குவர்ணிகா ' செவ்வி

01.  உங்களுடைய கதைகளில் எதை முக்கியப்படுத்துறீங்கள்? அல்லது மையப்படுத்துறீங்கள்? அல்லது கவனப்படுத்த முயற்சிக்கிறீங்கள்? மனிதர்களை சம்பவங்களை காலத்தை அரசியலை வாழ்வின் அடிப்படைகளை அல்லது வேறு எதை?

என்னுடைய கதைகளின் முக்கியத்துவம் என்பது நான் வாழ்கின்ற காலமும் மனிதர்களும் சம்பவங்களுமே. இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்த காலப்பகுதியில் எழுத்தின்பால் ஈர்க்கப்பட்டவன் நான்.

ஒடுக்கப்பட்ட மனித குலத்தின் அவலங்களை எழுத்தில் கொண்டுவர வேண்டும் என்ற இலட்சியத்துடன் அக்காலங்களில் ஓர்மமாக இயங்கியவர்களுள் நானுமொருவன். நாம்  வாழ்கின்ற காலம்தான் நமது கதைக்களத்தின் உயிர் நாதம். இதற்கப்பாலுள்ள ஓர் உலகத்தை சிருஷ்டிப்பதென்பது மனசாட்சிக்கு விரோதமானது என்பதை உள்ளுணர்வு அழுத்திச் சொல்கிறது.

 நாம் வாழ்கின்ற காலத்தையும் அதிலுள்ள மனிதர்களையும் எழுதுகின்ற போது சம்பவங்களும் அரசியலும் இயல்பாகவே வந்து விடுகின்றது. உயிர் வாழ உணவின் தேவை போல மனித வாழ்வின் அடிப்படைகளை தீர்மானிப்பது அரசியல்தான். 

கட்சி,இயக்கம், மதம்,மொழி, கொள்கைசார் போராட்டம் என அரசியல் பார்வைகள் வேறுபடலாம். ஆனால் நாம் ஏதோவொரு அரசியல் அனர்த்தத்தில் அல்லுண்டு போகும் பதர்கள்.

வாழ்வின் அடிப்படைகள் இந்த அரசியல் சித்தாந்தம்தான். தீவிர அரசியலை பேரினவாத்தின் அடிவருடிகள் நடாத்துகின்றபோது,  சுய நலன்கள் கோலோச்சும் செயற்பாடுகளை அவதானிக்கும் போது அது  பற்றியும் எழுதியிருக்கின்றேன்.

எனது கூத்தாடிகள், அரங்கம்,கழுதைகளின் விஜயம் ,ஓணான்கள் போன்ற கதைகள் இதற்கு சான்று. மதரீதியான அரசியல் எல்லா சமூகத்திற்குள்ளும் விளிம்பு நிலை மக்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் நடைமுறைக்கு ஒவ்வாத சிந்தனைகள் தோற்றம் பெற்று மக்களின் சிந்திக்கும் அறிவை முடக்கி விட்ட போது துறவிகளின் அந்தப்புரம் எழுதினேன்.

பேரினவாதத்தினதும் பயங்கரவாதத்தினதும் மகா அழிவுகளையும் அது தனிமனிதனிலும் சமூகத்திலும் செலுத்திய தாக்கத்தினை எனது பெரும்பாலான கதைகளில் எழுதியிருக்கின்றேன்.

கடந்த இருபது வருட காலத்தின் அவலங்களை எனது கதைகள் சொல்லுகின்ற போது இரு தசாப்தத்தின் அவலக்குரலாகவே நான் அதைப் பார்க்கின்றேன்.என்னுடைய ஒவ்வொரு கதையின் பின்புலத்திலும் ஓர் அரசியல் இருக்கத்தான் செய்யும். அது பேரினவாத்திற்கு எதிரானதாகவோ, இயக்கம் சார் ஒடுக்கு முறைக்கு எதிரானதாகவோ, தீவிர மத வழிபாட்டிற்கு எதிரானதாகவோ, அல்லது கலாச்சார திணிப்புக்கு எதிரானதாகவோ அதை நீங்கள் பார்க்கலாம்.

இழப்பு, துயரம்,ஏமாற்றம்,மோசடி, அலைந்துழல்தலின்  அவல வாழ்வு, அரசியல் வித்தைக்காரர்களின் சூனியக்கயிற்றின் மாய மந்திரங்களின் நிஜ முகங்களை எல்லாம் எனது கடந்தால கதைகள் பேசியிருக்கின்றன.

பொது பரப்பில் சிந்திக்க விடாதபடிக்கு நான் வாழ்கின்ற காலத்தின் மனசாட்சியுள்ள மனிதர்களின் அவலக்குரல்கள் என்னை கட்டுப்படுத்தியதா என்பது பற்றி சிந்திக்கின்றபோது மௌனமே என் முன் குந்தியிருக்கின்றது. 

எனினும் அண்மைக்காலமாக இந்தத் தளைகளை அறுத்துக்கொண்டு வெளியே வர முயற்சிக்கின்றேன். ‘எழுத்தாளர் ஸ்டீபனின் வாக்கு மூலம்’, ‘மூன்று பூனைகள் பற்றிய ஏழு குறிப்புகள்’  ‘ஏவாளின் தோட்டத்தில் கனிகள் இன்னும் மிச்சமிருக்கின்றன’ போன்ற கதைகள் மேற்சொன்ன பின்புலங்களைத்தாண்டி பொதுப்பரப்பில் எழுதப்பட்ட கதைகளாகவே பார்க்கின்றேன்.

இருந்தாலும் யுத்தத்திற்குப்பின்னராக வாழ்வு கடும் நெருக்கடியும் மன அவஸ்தையும் நிறைந்ததாக மாறிவிட்டது. கதை சொல்லிக்கு வேறு வகையான புதுமையான நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய தருணங்கள் வந்துவிட்டன. இது போர்க்கால இலக்கியத்தை விட காத்திரமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இப்படி சங்கிலித்தொடராக ஏதோவொரு அரசியல் அனர்த்தத்தில் நாம் நிர்ப்பந்தமாக தள்ளப்படுவதை உணர்கிறோமா இல்லையா?

02. நிச்சயமாக. நீங்கள் வாழ்கின்ற காலத்தையும் சூழலையும் மையப்படுத்துகிறீர்கள்.அதேவேளை வாழ்வின் தரிசனங்களும் அதன்வழியாகக் கண்டடைகின்ற மெய்யுமே இலக்கியப் பிரதியை சிறப்பிக்கின்றன. இங்கே புனைவுதான் இலக்கியத்தின் அடிப்படை. சமகாலப் பிரச்சினைகளையும் அதனோடிணைந்த அரசியலையும் அதை முன்னெடுககும் அமைப்புகள்இ மனிதர்களையும் மட்டும் மையப்படுத்தும் எழுத்து காலத்தால் பின்தள்ளப்படும் அபாயமும் உண்டே?

நீங்கள் சொல்வது உண்மைதான். வாழ்வின் தரிசனங்கள் ஊடே கண்டடைகின்ற மெய்யொளி இலக்கியப்புனைவின் சாசுவதம் என்பதை என்னால் மறுதலிக்க முடியாது.  

காலத்தையும்இசூழலையையும் மையப்படுத்தும் எழுத்து என்பது அந்தக்காலத்துடன் ஸ்தம்பித்துவிடும் என்பதற்கு போர்க்காலத்தில் எழுதிய பலர் இன்று சாட்சியாக உள்ளனர். 

அவர்களின் எழுத்துக்கள் சடுதியாக மடைக்கு குறுக்கே பலகை இட்டது போல் நின்று விட்டன. காலத்தை மீறி அவர்களால் பயணம் செய்வது சாத்தியமற்றுப்போனது. இந்த அனர்த்தத்திலிருந்து என்னைப்போன்ற சிலர் மீண்டிருக்கின்றோம் என்பதில் ஓரளவு திருப்தி.

புனைவு என்பது எப்படி சொல்கின்றோம் என்பதை விட எதைப்பற்றிச்சொல்கின்றோம் என்பதில்தான் அதன் வெற்றி தங்கியுள்ளது. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் சிறு நாவல்தான். அதன் புனைவு காலத்தைத்தாண்டியும் வசீகரிக்கும் வல்லமை கொண்டது. இதனை நிகர்த்த பல படைப்புகளை பட்டியலிடலாம்.

03- அதிக அழுத்தமுடைய அரசியல் மயப்பட்ட எழுத்துகளால் நிரம்பியதே ஈழத்து இலக்கியம் என்ற பார்வை ஒரு குற்றச்சாட்டுப் போல வைக்கப்பட்டுள்ளது. இதை மறுக்க முடியாத அளவுக்கு உண்மையும் இது தொடர்பான நிலைமையும் உண்டு. அரசியல் மயம் - அரசியல் நீக்கம் என்பதை இலக்கியத்தில் எப்படி விளங்கிக் கொள்வது? இதன் வரையறைகள் என்ன?

ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த காலம்.கிழக்கிலும்,வடக்கிலும் தென்னிலங்கையிலும் வெவ்வேறு அரசியல் கொள்கைகள் பின்பற்றப்பட்டன. கிழக்கில் முஸ்லிம் சுயாதிக்க சிந்தனையையும், வடக்கில் தமிழீழக் கனவுகளும் தென்னிலங்கையில் ஒரே தேசக்கொள்கையினுடைய அரசியல் சித்தாத்தங்களும் ஒழுங்கமைக்கப்படாத வரிசையில் நடந்தேறின.

கிழக்கு அரசியலின் எழுச்சி என்பது வடக்கின் அடக்குமுறையினால் எழுந்த தீச்சுடராகும்.தென்னிலங்கை அரசியலின் பின் புலமும் எழுச்சியும் வடக்கு, கிழக்கின் மீது எல்லை மீறிய அச்சத்தினாலும், சந்தேகத்தினாலும் கட்டமைக்கப்பட்டதாகும். இந்த சந்தர்ப்பவாத அரசியலின் பின்புலத்திலிருந்துதான் இலக்கியப் பனைவுகளையும் நோக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட தளத்திலிருந்து ஒரு சட்டகத்தின் வடிவத்தை தாண்ட முடியாமல் ஒரு காலகட்ட இலக்கியப்புனைவு இருந்தது. அதுதான் போரியல் இலக்கியமாக அதிக அழுத்தத்துடன் வெளிவந்தது. 
கிழக்கிலிருந்து புனையப்பட்ட பெரும்பாலான இலக்கிய முயற்சிகள் தமிழ் மக்கள் இராணுவ சண்டித்தனங்களுக்கு எதிராகவும் முஸ்லிம் மக்கள், விடுதலைப் புலிகளுக்கெதிராகவும் தங்கள் எழுத்துக்களை பதிவு செய்தனர். வடக்கின் இலக்கியப்புனைவுகள் அனைத்தும் போரியலின் துன்பத்தினை இரு வகையாகப்பதிவு செய்ய முனைந்தது.

இராணுவப்பிரசன்னத்திற்கெதிராகவும்,விடுதலை இயக்கங்களை விமர்சித்தும் இக்கால கட்ட புனைவுகள் பரவலாக்கப்பட்டன. வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்களின் புனைவுகள் தனியான அரசியல் தளத்திலிருந்து இயங்கின.

இப்படித்தான் இலக்கியப்புனைவுகள் அரசியல்மயப்பட்டிருந்தன.
குறித்த அரசியலிருந்து விடுதலையுணர்வு பெற்றிருப்பதாக முற்றாக சொல்ல முடியாவிட்டாலும் இலக்கியத்திலிருந்து இது சற்று நீங்கியுள்ளதாக உணர்கிறேன்.

தற்காலத்தில் புனையப்பட்ட ஈழத்து இலக்கியப்புனைவுகளில் குறிப்படத்தக்க மாற்றங்கள் விரல் விட்டு எண்ணிவிடுமாற்போல் வாழ்வின் மெய்மையைப்பேச விழைகின்றதைப் பார்க்கின்றேன்.

மேற்சொன்ன அரசியல் செல்நெறியின் வரையறைகளை அழுத்தமாக நம்மால் தீர்மானிக்க முடியாது. அது கடந்த கால நேரடி போரியல் அரசியலிருந்து விடுபட்டு மௌனமான சன்னத சூழ்நிலைக்கு நம்மை இட்டுச்சென்றிருக்கின்றது. 

போராட்டங்கள் வேறு வகையான தளத்திற்குமாறியிருக்கின்றன. கருத்துச் சுதந்திரத்தினதும்,இலக்கியப் புனைவுகளினதும் இருப்பு முன்னெப்போதுமில்லாதவாறு மிக ஆபத்தான சுழல்காற்றில் உள்ளீர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

எனவே ஈழத்தைப்பொறுத்தவரை அரசியலை நீக்கிவிட்டு இலக்கியத்தைப்பார்க்க முடியாது. அவரவர் நியாயங்களின் யதார்த்தத்தை மானசீகமாக புரிந்து கொண்டு செயலாற்றுவதுதான் இதன் வரையறை.

04-அரசியல் சார்ந்து அல்லது நெருக்கடி மிக்க சமகாலச் சூழல் சார்ந்து எழுதும் போது ஏற்படுகின்ற விளைவுகள் எப்படியிருக்கின்றன?

அரசியல் அல்லது நெருக்கடிமிக்க சமகாலச்சூழல் சார்ந்து  எழுதும் போது விளைவுகள் குறித்து சிந்திப்பதில்லை. எதிர்வினைகள் இப்படித்தான் இருக்கும் என்று திட்டமிடப்படுவதுமில்லை.

 எனினும் ஒரு படைப்பு அது சார்ந்து சமூகப்பரப்பில் கவனயீர்ப்பு பெறும் போது அது சூழலில் செலுத்தும் செல்வாக்கும்,வசீகரமும் கனதியானது.கவியுவனின் “வாழ்தல் என்பது“இரஞ்சகுமாரின் “மோகவாசல்“இஅமரதாசின் “இயல்பினை அவாவுதல்“,கருணாகரனின் “ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்“,“ஒரு பயணியின் நிகழ்காலக்குறிப்புகள்“,சித்தாந்தனின் “காலத்தின் புன்னகை“,சு.வில்வரெத்தினத்தின் “காலத்துயர்“, அநாமிகனின் எலும்புக்கூட்டின் வாக்குமூலம்“,முல்லை முஸ்ரிபாவின் “இருத்தலுக்கான அழைப்பு“ மற்றும் அறபாத்தின் “ரெயில்வே ஸ்ரேஷன்“,ரஷ்மி போன்றோரின் எழுத்தில் இழையோடும் அரசியலும்,சமகாலச்சூழலும் இந்த சமூகத்தில் எந்த எதிர்வினைகளை ஆற்றியிருக்கின்றது? அல்லது பேசப்பட்டிருக்கின்றது? என்பது முக்கியமான கேள்வி.

வாசித்து ஆறப்போட்டுவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சமூகம் தன்னை தயார்படுத்திக்கொள்கின்றது. எழுத்தாளன் என்னவோ மானசீகமான  போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக இறுப்புமாப்புக் கொள்வதைத்தவிர வேறென்ன ஆறுதல்  உண்டு ?

05. படைப்பாளிகள்,கலைஞர்கள் அநேகமாக அநீதி்க்கெதிராகவும் நீதியைக் கோரியும் அறத்தை வலியுறுத்தியும் எழுதியும் இயங்கியும் வந்திருக்கிறார்கள் வருகிறார்கள். 

ஆனால் அவர்களுடைய இயங்கு முறைக்கு எதிராகவே பொதுச்சூழலில் உள்ள ஊடகங்கள்,கருத்துருவாக்கிகள்,படித்த சமூகத்தினரின் இயங்குமுறை உள்ளது. இதனால் படைப்பாளிகள், கலைஞர் போன்றோருடைய உழைப்பும் நியாயமான கோரிக்கையும் புறக்கணிக்கப்படுகின்றன.

இதேவேளை மக்கள் தொடர்ந்தும் இருளை நோக்கியே தள்ளப்படுகின்றார்கள். இந்த முரண்பாட்டை - இடைவெளியை எப்படித் தீர்ப்பது? பொதுவெளியின் எதிர்மறை இயக்கத்தை எவ்வாறு வழிப்படுத்துவது?

வாழ்வின் அறம் என்பது தனிமனிதனால் தீர்மானிக்கப்பட்டு,சமூக மட்டத்தில் செயற்படுத்தப்படுவதாகும்.அறமுடன் வாழ்தல் என்பது வெறும் தத்துவமாகப்பார்க்கப்படுகின்ற காலத்தில் நாம் வாழ்வது மகா துரதிஷ்டம்.

படைப்பாளிகள் பொதுச்சூழலில் அறத்தை நிலை நிறுத்த இயங்குகின்ற போது படித்தவர்களும் புத்தி ஜீவிகளும் காவலர்களும் படைப்பாளியின் யதார்த்தத்தை புரிந்து கொண்டும் வாழாவிருப்பவர்கள்.
நமக்கென்ன அவர்கள் அதைப்பார்க்கட்டும் என்ற மனோ நிலையின் வெளிப்பாடே அது.

 ஊடகங்களின் நிலை இதைவிடக்கொடுமை.அரச சார்பான ஊடகங்களில் அறத்தை வலியுறுத்தும் எழுத்துக்களுக்கு மதிப்புக்கிடையாது.தனியார் ஊடகங்களோ கடுகு போன்ற விடயத்தையும் விருட்ஷம் போல் பெருப்பித்துக்காட்டிவிடுகின்றன. ஒன்றுமே இல்லாத ஒன்றை ஊதி ஊதிப்பெருப்பித்து வெடிக்க வைப்பதில் ஊடகங்கள் படு கெட்டி.

எனவே படைப்பாளிகளும் கலைஞர்களும் தங்கள் படைப்புக்களை குறிப்பிட்ட சிலரை மையப்படுத்தி எழுதும் போக்கை கைவிடவேண்டும்.மக்களின் இரசணைக்கேற்றவாறு அவர்களால் இலகுவில் புரிந்து கொள்ளுமாற்போல் தங்கள் படைப்புக்களை பொதுஜனப்படுத்தும் உபாயங்களை கண்டடைய வேண்டும். மக்கள் இருளை நோக்கியே தள்ளப்படுகின்றார்கள் என்றால் மக்களிடம் நமது சிந்தனைகள் சரியாக சென்றடையவில்லை என்பதே உண்மை.

எனவே உண்மைக்குப்புறம்பாகவே இன்றைய ஊடக கட்டுமாணம் செயற்பட்டுவருகின்றது.மக்கள் அபின் தின்னிகளாக ஈர்க்கப்பட்டு இதன்பின்னால் அலைகின்றனர். ஊடகங்கள் சொல்வதை தெய்வ வாக்காக ஏற்று வழிபடுகின்றனர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இன்று ஊடகங்கள்தான் வரம் கொடுக்கும் தெய்வம்.

வாழ்வின் அறம் என்பதெல்லாம் விரல் விட்டு எண்ணக்கூடிய பிற்போக்கு சக்திகளின் மார்க்கமாகப்போய்விட்டது.

எதிர்மறை இயக்கத்தை ஆற்றுப்படுத்துவதும் இவழிப்படுத்துவதும்  தனிமனித சிந்தனை மாற்றத்தைப்பொறுத்த விடயம். இதனை கவனமாக செயற்படுத்த வல்ல இயக்கத்தின் அவசியம் தேவைப்படும் தருணத்தில் வாழ்கின்றோம்.

06.அப்படியென்றால், அறம்சார்ந்து, ஜனநாயக அடிப்படைகளை மையப்படுத்திஇ நீதியுணர்வோடு இயங்கும் படைப்பாளிகளும் கலைஞர்களும் சனங்களும் தோற்கடிக்கப்படுகிறார்களா? நீங்கள் சொல்கிற மாதிரி இதற்கான செயலூக்கமுள்ள இயக்கத்தின் தோற்றம் எப்படிச் சாத்தியமாகும்? அதற்கான ஏதுநிலைகள் உள்ளனவா?

நிச்சயமாக நீதி,அறம்,ஜனநாயகம் ஆகிய மூன்று பிரதான அம்சங்களும் செத்துப்போய் பல ஆண்டுகள் கடந்து விட்டன. வாழ்வின் மீதான நம்பிக்கைக் கீற்றுக்கள் ஒவ்வொன்றாக இருளை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்கின்றேன்.

நீதியும் அறமும் நிலை கொண்டுள்ளதாக பறைசாற்றும் அஹிம்சையை வேதமாகக்கொண்ட ஒரு நாட்டில்தானா நாம் வாழ்கிறோம் என்ற ஐயங்கள் அடிக்கடி மனதில் எழுகின்றன.

அறம் சார்ந்து சிந்திப்பவர்கள் தோற்கடிக்கப்படுகின்றார்கள்.அவர்கள் தங்கள் வாழ்க்கையின் வசந்தங்களையும் நம்பிக்கைகையையும் ஒவ்வொன்றாக சாத்திக்கொண்டிருக்கின்றார்கள். வேதாந்திகள் இங்கு இரத்தம் ஒழுகும் வாட்களுடன் நர வேட்டைக்கு அலையும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

படைப்பாளிகளிடமும் போட்டியும் இபொறாமையும் குடி கொண்டு விட்டன.திறமைகளை அங்கீகரிக்கவும் அதை தட்டிக்கொடுப்பதையும் விட்டு விட்டு காலை வாரிவிடுவதிலும்’ஜால்ரா’ போடுவதிலும் கீழ் மட்ட அரசியல் தொண்டனைவிட கேவலமாகி விட்டனர்.

எழுத்தாளனாக ஆகுவதற்கு கொலையும் கொள்ளையும் ஆட்கடத்தலும் செய்தல் இப்போது ‘பெஷனாகி’விட்டது. அன்பும்.அறமும் எழுத்தில் இருப்பதை விட அடக்குமுறைதான் இன்று கோலோச்சுகின்றது.

இந்த இலட்சணத்தில் நல்ல படைப்பாளிகளினதும் கலைஞர்களினதும் காத்திரமான குரல் வெறும் ஒப்பாரியாகத்தான் மாறிப்போய்விட்டது.
    
செயலூக்கம் உள்ள ஓர் இயக்கத்தை வழிநடாத்துவதென்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. தலைக்கு மேல் வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கின்றது. அணையிடல் என்பது முயற்கொம்பு என்று சொல்லாவிட்டாலும், வினைத்திறன்மிக்க சமூக கட்டமைப்பு என்பது பாடசாலைகளிலிருந்து கட்டமைக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

துரதிஷ்டம் நமது பாடசாலைகளும் கல்விக்கூடங்களும் ஏன் சில ஆசிரியர்களும் மயானத்திலிருப்பது போல்லவா இருக்கின்றார்கள்.?

07. நிச்சயமாக. கல்வி மையங்களும் அங்கே உள்ள கற்கை முறையும் ஆசிரியர்களும் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ள ஒரு நிலைமையே இலங்கையில் உண்டென்று கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இலங்கை சந்தித்த நெருக்கடிகளைத் தணிப்பதில் கல்வி மையங்களும் கல்வியியலாளரும் செய்ய வேண்டியிருந்த பங்களிப்புப் போதாதுஇ அந்தச் சூழலில் இருந்து எத்தகைய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளும் முக்கியமான ஆளுமைகளும் இல்லை என்றும் சொல்லப்படுவதுண்டு. 

இதைப்பற்றிய உங்கள் நோக்கு என்ன? உண்மையெனில்இ இத்தகைய கீழ்ச்சரிவு ஏன் நிகழ்ந்தது?

இலங்கையைப்பொறுத்தவரை கல்வி வணிகமயப்படுத்தப்பட்டுள்ளது. கல்விமான்கள் எனப்படுவோர் கைதேர்ந்த வியாபாரிகளாக மாறிவிட்டனர்.

ஒழுக்கம்,மாணவர் மேம்பாட்டுத்திட்டம்,சீரிய சிந்தனை போன்ற எந்த இலக்குமின்றி கல்வித்திட்டங்கள் இயந்திரமயமாகிவிட்டன. ஆளாளுக்கு போட்டிமனப்பான்மையும்.பிரத்தியேக கல்வி புகட்டும் திட்டங்களும் மலிந்துவிட்டன.

ஜவுளிக்கடை விளம்பரம் போல் கல்விக்கும் கண்கவர் விளம்பரங்களும் பதாதைகளும் போலி வாக்குறுதிகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

டியூட்டரிகளின் கலாச்சாரமும்,சீர்கேடும் ஒரு மாணவர் சமூகத்தின் ஒழுக்க மாண்புகளில் பாரிய இடைவெளியை தோற்றுவித்துவிட்டன.இலங்கைத் தேசத்திற்கு பொறுத்தமற்ற கல்வித்திட்டங்கள் வகுப்பறையில் மாணவர்களை தூங்கி வழியச்செய்கின்றன.பெற்றோர்களைக் கொல்வதற்கு இரகசியத்திட்டம் பேசுவதற்குரிய மையங்களாக இந்தக்கல்விச்சூழல் தரம்கெட்டுவிட்டது.

வகுப்பறை கற்றல் என்பது மாணவர்களை செம்மைப்படுத்துவதற்கு பதிலாக அங்கும் ஒரு வகை அரசியல் கலாச்சாரம் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆசிரியரின் இயக்கம் சார் மன நிலைக்கேற்ப மாணவர்கள் குழுமயப்படுத்தப்படுகின்றனர்.

இலங்கை சந்தித்த நெருக்கடிகளில் கல்வியலாளர்கள் பார்வையாளர்களாகவும் சம்பள உயர்வு கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டம் செய்பவர்களாகவும் மட்டுமே இருந்தார்கள்.

ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கவில்லை. மையம் கொண்டிருந்த இனப்பிரச்சினைக்கான தீர்வினையும் கருத்துருவாக்கத்தினையும் அவர்கள் மாணவர் சமூகத்திடம் இலகுவாக கட்டியெழுப்பும் சந்தர்ப்பம் நிறையவே உண்டு. சமய மற்றும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் கட்டியெழுப்பியிருக்கலாம்.

எனினும் அவற்றை அவர்கள் வெறுமனே கோசம் போட்டு கூட்டம் வளர்க்கவே பயன்படுத்தினார்கள்.

ஆசிரியனின் வழிகாட்டலும்,வசீகரமும் மாணவர்களை எப்பொழுதும் வசியப்படுத்தும். வீட்டுக்கு அடங்காத பிள்ளைகள் ஆசிரியனிடம் அன்பாக அடங்கிப்போவதற்கு அவனின் புறகிருத்திச்செயற்பாடுகளே காரணம். துரதிஷ்டமாக சில ஆசிரியனிடம் நல்ல பண்புகள் மருந்துக்கும் இல்லை என்கிற நிலையாகிவிட்டது. 

பாலியல் லஞ்சம் பெறும் புதிய கலாச்சாரத்தை இன்றைய கல்வித்திட்டங்கள் தோற்றுவித்து விட்டன.பிள்ளையின் கல்விக்காக தாய் தன் உடலை விலை பேசும் அளவிற்கு கல்வித்திட்டம் ‘கலவி’த்திட்டமாக வளர்ச்சியடைந்துவிட்டது.

உண்மையில் இந்த நிலையை தோற்றுவித்தது நமது நாட்டின் கல்வித்திட்டமும்இ கல்வியலாளர்களுமே என்றால் மிகையல்ல.

08. இதைக் கட்டுப்படுத்துவதற்கான – மாற்றுவதற்கான வழிகள் என்ன? இதைக் குறித்து படைப்பாளிகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தலாம்?

கல்வித்திட்டத்தில் உள்ள குறைபாடுகளே இதற்குரிய காரணமாகும். 
இலங்கையின் கல்வித்திட்டம் காலத்திற்குப்பொருத்தமானதாக இல்லை.

சில விடயதானங்கள் இலங்கைக்கு பொருந்தி வருவதாகவும் இல்லை. 
மாணவர்கள் தேடிக்கற்கும் தூண்டுதல்கள் இங்கு இல்லை. நேர அட்டவணைக்கு தகுந்த மாதிரி அவர்கள் இயங்குவதற்கு பழகியுள்ளனர்.

அதற்கு அப்பால் சிந்திப்பதற்கும் செயற்படுவதற்கும் மாணவர்களை தூண்டுவதற்குரிய வழிமுறைகள் இருந்தும் அதனை ஆசிரியர்கள் செய்யவில்லை என்பது கசப்பான உண்மை.

மாணவர்களின் ஒழுக்கத்தினையும் கல்வியையும் மேம்படுத்தும்  போதனை முறைகள் மாற்றமடைந்து பரீட்சைக்கு தயார்படுத்தும் முறைகளே நடைமுறையிலுள்ளன. பாடத்திட்டத்தினை எழுதுபவர்களும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக இருக்கும் போது சமூகத்தை எப்படி நிமிர்த்துவது? 

உண்மையில் படைப்பாளிகள் செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளன. படைப்பாளியிடம் நேர் நோக்கு சிந்தனை வேண்டும்.குறைந்த பட்சம் பாடசாலைகள் மட்டத்தில் மாணவர்களுக்கு சில விடயங்களை சொல்லலாம்.

பயிற்சிப்பட்டறைகளை ஒழுங்கு பண்ணலாம்.விளைவுகளை உடனடியாக எதிர்பார்க்காவிட்டாலும் எதிர்காலத்தில் சிந்தனை மற்றும் உளப்பாங்கில் மாற்றமுறும் சமூக அமைப்பை எதிர்பார்க்கலாம

09.  இலங்கைச் சூழலில் எழுத்தாளராக இருப்பதிலுள்ள சவால்கள்,முக்கியத்துவம் அனுபவம் எப்படியாது?

 இலங்கைச்சூழலில் எழுத்தாளனாக இருப்பது ஒரு சவால் நிறைந்த வேதனையாகும். எழுத்தாளனுக்கு அவனுடைய எழுத்துக்களை ‘எடிட்’ அல்லது ‘சென்சார்’ செய்யாமல் வெளியிடுவது என்பது சாகசம். 
எழுத்து என்பது இங்கு உபரியான செயல். எழுத்தாளனின் தொழில் வேறு,உறவுகளும்,தோழமைகளும் வேறு,சூ ழல் பொழுது போக்கு அம்சங்கள் வேறு. இத்துணை தடைகளையும் தாண்டி அவன் எழுத வேண்டும் என்பது மகா கொடுமை.

எழுதியதை அவனே புரூப்பார்த்து ,அச்சிட்டு, வெளியிட்டு,கடை கடையாக ஏறி இறங்கி விற்பனை செய்து அதை காசாகப்புரட்டி எடுக்க வேண்டும்.சமூகத்தின் பார்வையில் படைப்பாளி ஒரு திமிர் பிடித்தவனாக அடையாளப்படுத்தப்படுவதும் உண்டு.

ஒரு நல்ல புத்தகம் 1000 விற்று முடிக்க ஐந்து வருடம் தேவைப்படுகிறது என்ற சுந்தர ராமசாமியின் வார்த்தைகள் எத்துணை சத்தியமானது.

என்னுடைய அனுபவத்தில் எழுத்தாளனாக ஆபத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கின்றேன்.சமூகத்தில் கௌரவத்தையும் பெற்றிருக்கின்றேன். எழுத்துக்கும் வாழ்வுக்குமிடையில் தொடர்பு நிலவும் போது அந்த கௌரவம் தானாக வருகின்றது.

எழுத்துக்கும் படைப்பாளிக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்கும் போது சமூகத்தில் அவனுக்குள்ள முக்கியத்துமும் மங்கிப்போகின்றது. பேசப்படுகின்றவனாக எழுத்தாளன் இருக்க வேண்டுமே தவிர தூற்றப்படுகின்றவனாக அவன் இருக்க கூடாது.

அதற்காக எல்லோருக்கும் முதுகு சொறிந்து சாமரம் வீசி கூனிக்குறுகி கூழுக்கு கூத்தாடியாகி இருப்பது என்று சொல்லவில்லை.சொல்கின்ற விடயத்தில் தெளிவும்இஎழுத்தில் நேர்மையும் இருக்கும் போது எழுத்தாளன் சமூகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றான்.

10. இலங்கையின் கிழக்கிலுள்ள இன்றைய சமூக நிலை மற்றும் அதன் உறவு நிலை எப்படியாக உள்ளன? எதிர்கால நிலை எப்படியாக இருக்கும்?

முக்கியமான தருணத்தில் அவசியமான கேள்வி. கிழக்கின் சமூக நிலை என்பது காலம் காலமாக இந்து –முஸ்லிம் உறவுகளின் அடிப்படையில்  கட்டியெழுப்பட்டது. ஈழப்போர் மையம்கொண்ட போது கிழக்கு முஸ்லிம்கள் அந்தப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளும் அளவிற்கு ஐஸ்வரியம் நிறைந்த பொற்காலத்தில் வாழ்ந்திருந்தோம்.

அதன் பின்னரான மாற்றங்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை.கிழக்கின் இன்றைய தமிழ் முஸ்லிம் உறவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.மாற்றங்கள் என்கிறபோது முழுமையான நம்பிக்கையின் அடிப்படையில் என்று என்னால் அடையாளப்படுத்த முடியாதுள்ளது.

ஆனால் அந்த நம்பிக்கை வளர வேண்டும் என ஆசைப்படுபவர்களில் நான் தீவிரமாக உள்ளேன்.சிங்களப்பேரினவாதத்தின் மற்றுமொரு நில அபகரிப்பு யுத்தத்தின் வஞ்சிப்பிலிருந்து மீண்டெழ இரு தரப்பு உறவுகளும் மிக நெருக்கமாக இருக்கவேண்டிய தருணம் இது.

சில வேலைத்திட்டங்களை சமூக மட்டத்தில் செய்து கொண்டு போகின்றோம். அந்தக்காலம் போல் இன்று எல்லா இடங்களுக்கும் அச்சமின்றி சென்று வர முடிகின்றது. உறவுகளை பலப்படுத்தும் பல செயற்பாடுகளை அரச மட்டத்திலும்இஅரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும் செய்யப்படுகின்றன. இருப்பினும் சிலர் இனவாதத்தீயை மூட்டிவிட்டு குளிர்காய அவ்வப்போது முயற்சிக்கின்றனர்.

எதிர்காலம் கிழக்கில் பல நெருக்கடிகளை தோற்றுவிக்கும் .அது அரச இயந்திரத்தின் ஊடாக இடம் பெற வாய்ப்புண்டு. சிவில் சமூகத்தினராகிய நாம் மிக விழிப்பாக இருக்க வேண்டும். நிதானமிழந்துவிடக்கூடாது. அதற்கான விழிப்பூட்டலும்இ வேலைத்திட்டங்களும் அவசியம்.

கிழக்கு கொஞ்சம் கொஞ்சமாக கறையான் அரிப்பது போல் சுரண்டப்பட்டுவருகின்றது. இரு இனங்களினதும் சுயத்தினை அழிக்கும் கைங்கரியங்கள் மௌனமாக அரங்கேறுகின்றன.களியாட்டங்கள் என்கிற பெயரில் கிழக்கு இளைஞர் யுவதிகளின் சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.இது நாளடைவில் சமூகப்பிரக்ஞையற்ற மந்தைக்கூட்டத்தை உற்பத்தியாக்கும் எண்பது திண்ணம்.

தன் இருப்பு பறி போகும் போது ‘வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல’ பைலாப்பாட்டுக்கு ஆடிக்கொண்டிருக்கவும்,சீரியல்களில் செல்போன்களில் கரைந்திருக்கவும்  ஒரு பரம்பரை உருவாகி கொண்டிருக்கின்றது. விழிப்பூட்டக்கூடியவர்கள் கல்வியலாளர்களும் சிவில் அமைப்புக்களுமே!
கிழக்கின் எதிர்காலத்திற்கு அங்கு வாழும் இரு பிரதான இனங்களும் கைகோர்த்து பயணிக்க வேண்டிய தருணம் இதுதான்.

அரசியல்வாதிகளின் அவ்வப்போதைய சுரணையற்ற அறிக்கைகளுக்குப்பின் மக்கள் செல்வதை தவிர்ந்து கொண்டாலே போதும் எந்தக்கொம்பனாலும் கிழக்கின் உறவுகளை சிதைக்க முடியாது.

11. உங்களின் கதைகளைக் குறித்து தமிழ்ச் சமூகத்தின் மனநிலை எப்படி? முஸ்லிம் சமூகத்தின் மன நிலை எப்படி? இலக்கிய வாசிப்பும் சமூக நிலைப்பட்டுள்ளதாகவே உள்ளது என்பது என்னுடைய அவதானிப்பு.  இதுகுறித்தும் இதன் விளைவுகள் குறித்தும்?

இலக்கிய வாசிப்பு சமூக மயப்பட்டதாக இருக்கின்றது என்பதை முற்றாக என்னால் அங்கீகரிக்கமுடியாது. இலங்கையைப்பொறுத்தவரை குழுநிலையான இலக்கியச்சார்பு நிலை நிறையவே உண்டு.என்னுடைய கதைகளை இரு சமூகத்தினரும் கொண்டாடுகின்றனர் என்பது அனேக நண்பர்களினதும்,இலக்கிய ஆர்வலர்களினதும் உரையாடல்கள் மூலமாக நான் அறிந்து கொண்டவை. முஸ்லிம் வங்குரோத்து அரசியல் குறித்து எழுதிய போது அது சார்ந்தவர்களால் எதிர்ப்புக்கிளம்பியது. புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளை விமர்ச்சித்தபோதும் அந்த தரப்பிலிருந்தும் ஆதரவாளர்களிடமிருந்தும் எதிர்ப்புக்கிளம்பியது. அரச இயந்திரத்தின் எல்லை மீறிய அக்கிரமங்களுக்கு எதிராக எழுதிய போதும் அதனை அண்டி வாழ்பவர்களினால் எதிர்ப்புக்கிளம்பியது.

எல்லாத்தலைகளுக்கும் ஏற்றவாறு தொப்பி செய்வது எழுத்தாளனால் சாத்தியப்படாது. ஒரு புனைவு அது முடிவுறுந்தருணத்தில் பொருத்தமான பல தலைகளை வாசகன் இனங்கண்டு கொள்கின்றான். அதை வாசகன்தான் அளவான தலைக்கு போட்டுப்பார்த்து திருப்தியடைகின்றான். அவரவர் கட்சி சார்ந்து இயக்கம் சார்ந்து கொள்கை சார்ந்து கதையினை  வாசிப்புக்குட்படுத்திப்பார்க்கின்றான்.

நான் ஒரு விடயத்தை எழுதும் போது எதிர் விளைவு குறித்து சிந்திப்பதில்லை. சரியென்று  நியாயமென்று பட்டதை எழுதிவிடுகின்றேன். இது சில நேரங்களில் இரு சமூகத்திற்குள்ளும் சில அதிருப்திகளையும் , ஆதரவினையும் பெற்றுத்தந்திருக்கின்றது. 

ஆதரவு.எதிர்ப்பு இரண்டையும் எதிர்பார்ப்பது எழுத்தாளனின் தகுதியாக இருப்பதில்லை.எதை எப்படி வெளிப்படுத்துகின்றோம் என்பதுதான் முக்கியம். ஒருவருக்கு அந்த விடயம் புரிந்தாலும் எழுத்தாளனின் வெற்றி அதுதான்.

12. இலங்கையில் இன்று எழுத்தாளர்கள் அந்ததச் சமூக நிலைப்பட்டு - இன ரீதியாகஇ சமூக ரீதியாக இயங்க வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவே யதார்த்த நிலை உள்ளது என்ற அபிப்பிராயமுள்ளது. சமூக நிலைப்படாதபோது அவர்கள் மீது கடுமையான எதிர்நிலையான குற்றச்சாட்டுகள் முன்னிறுத்தப்படுகின்றன. இது படைப்பாளிகளையும் படைப்பையும் சுருக்கி, திசைமாற்றிக் கட்டுப்படுத்தும், சிதைக்கும் என்ற அச்சம் பல படைப்பாளிகளிடத்திலே உண்டு. இது குறித்து உங்களுடைய கருத்தென்ன?

இந்தக்கேள்விக்குரிய சில பதில்களை மேலே குறிப்பிட்டிருக்கின்றேன்.இலங்கையில் சமூகங்களுக்கு ஏற்றவாறு எழுத்தாளர்கள் இயங்குவது தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டதாக நீங்கள் உணர்வதை நான் முழுமையாக அங்கீகரிக்கவில்லை.

எழுத்தாளன் சமூகமயப்பட்டவனாக,அல்லது இனத்துவ அடையாளப்படுத்துவனாக இருப்பதை விட உலகமயப்பட்டவனாக இருக்க வேண்டும். நிச்சயமாக சமூக நிலைப்பட்டு இனத்துவரீதியாக எழுத்தாளன் இயங்குகின்ற போது பல உளவியல்இகருத்தியல் எதிர்வினைகளை சமூகம் எதிர்கொள்வதை தவிர்க்க முடியாது.

‘இது நம் ஆள் எழுத்து,அல்லது ‘நம்மடவன்ட படைப்பு’ என்ற அடையாளம் எழுத்தாளனை ஒரு வட்டத்திற்குள் சுருங்கவைத்து விடும்.சுந்தரராமசாமியை,ஜெயகாந்தனை,ஜெயமோகனை,பிரமிளை,முத்து லிங்கத்தை,ஷோபா சக்தியை இன்னும் பலரை நான் படிக்கவும் முடியாது. வைக்கம் முஹம்மது பசீரை, தோப்பில் மீரானை, நுஃமானை,சோலைக்கிளியை, எஸ்.எல்.எம். ஹனீபாவை, பவ்சரை, ரஷ்மியை மற்றும் பலரை நீங்கள் படிக்கவும் முடியாது. இவ்வாறே சிங்கள எழுத்தாளர்களினதும்  ஆக்கங்களை நாம் இருவரும் படிக்கவும் முடியாது.

எழுத்தாளன் சமூக நிலைப்படுவதற்கு அவன் மண் புழு அல்ல.அவன் சூரியன். பிரகாசிக்க வேண்டும். அவன் நிலா. குளிர்விக்க வேண்டும்.அவன் காற்று, இதமாக வருட வேண்டும். அவன் நீரோடை. தாகம் தீர்க்க வேண்டும். இவை எல்லாம் ஒரு சமூகத்திற்கும் இனத்திற்கும் உள்ள விடயம் அல்லவே! 

சிங்கள எழுத்து, இந்து எழுத்து,முஸ்லிம் எழுத்து என்றெல்லாம் எழுத்தில் இனத்தைச் சொருகாமல் இருப்பதுதான் படைப்பாளிக்கு வழங்கும் கௌரவம்.

ஓர் இனத்தின் இருப்புக்குறித்து கரிசனை காட்டுவதும் பொதுத்தளத்தில் மற்றவர்களையும் இணைத்துக்கொண்டு போராடுவதும் எழுத்தாளனின் பணியாகும் . சமூகம் இதனை எதிர்பார்க்கின்றது.


13. ஆனால் ஒரு தொகுதி எழுத்தாளர்கள் இன அடையாளத்தைப் பிரதானப்படுத்தி, அல்லது இன ரீதியான உணர்வுகளுக்கு முக்கியத்துவமளித்தே எழுதுகிறார்கள், இயங்குகிறார்கள். அப்படியல்லாது பொதுத்தளத்தில் இயங்குவோரை அவர்கள் சந்தேகிக்கிறார்கள். அல்லது எதிராளாகப் பார்க்கிறார்கள். அப்படியே பிரகடப்படுத்தியும் விடுகிறார்களே? இன்னும் அழுத்தமாகச் சொன்னால் தரப்புகளின் பிரதிநிதிகளாகத் தொழிற்படுகிறார்களே?

அப்படி அவர்கள் இயங்குவதற்கு கடந்த காலச்சூழல்கள் காரணமாய் அமைந்திருக்கலாம். தான் சார்ந்த சமூகத்தின் அவலக்குரல்களை அவர்களின் குரலாகவே பதிவு செய்வதில் ஆபத்துக்கள் இருப்பதாய் நான் உணரவில்லை.

ஆனால் மற்ற இனத்தின் உரிமைகளையும் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவதாய் அது அமைந்து விடக்கூடாது.ஒருவன் தன் தாய் நாட்டை, தாய் மொழியை, தன் இனத்தை நேசித்தபடி, பொதுத்தளத்தில் இயங்க முற்படும் போது சந்தேகத்திற்குரியவனாக மாறி விடுகின்றான். 

நடுநிலை என்பது இங்கு எதுவும் சாராது இருப்பது என்ற அர்த்தம் அல்ல. நடுநிலை என்பது சொல்ல வேண்டிய விடயத்தை சொல்ல வேண்டிய இடத்தில் தைர்யமாக சொல்வதாகும்.

 இதனை ஓர் படைப்பிலக்கியவாதி சரியாகப்பயன்படுத்தினால் அவன் குழுக்களின் அல்லது தரப்புக்களின் பிரதி நிதியாக தன்னை முத்திரை குத்திக்கொள்ளத் தேவையில்லை. 

எனினும் சில ஆதிக்க மனோபாவமுள்ளவர்கள் இன அடையாளத்தை முதன்மைப்படுத்தி இயங்குவதையும்,பொதுத்தளத்தில் இயங்குவோரை விமர்சிப்பதையும் ஒரு சமூக அந்தஸ்தை அவாவியே செய்து வருகின்றார்கள். அவ்வப்போது எழும் கைதட்டல்கள் அவர்களுக்கு தேவை.

14. உங்களுடைய எழுத்துகளில் ஏற்பட்டுள்ள மாற்றமாக நீங்கள் எதையெல்லாம் உணர்ந்திருக்கிறீங்கள்? அந்த மாற்றங்கள் எப்படி ஏற்பட்டன?
என்னுடைய எழுத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாசிப்புத்தான் காரணம். நல்ல நூல்களின் அறிமுகம் குறிப்பாக எஸ்.எல்.எம்.ஹனீபாவுடனான நெருக்கம்,  நல்ல புத்தகங்களினதும் வாசிப்பினதும் அண்மையில் என்னை கொண்டு சேர்த்தது. வணிக ரீதியான எழுத்துக்களிலிருந்து விடுபட்டு காத்திரமான நல்ல படைப்புக்களை எழுதுவதற்கு தூண்டியவர்களில் எஸ்.எல்.எம்.ஹனீபா முக்கியமானவர்.

தொடர்ச்சியான இயக்கம், வாசிப்பு, நல்ல நண்பர்களின் தோழமை எல்லாம் இணைந்துதான் எழுத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என நம்புகின்றேன்.

மாற்றம் என்பது வெறுமனே ஏற்பட்டுவிடக்கூடிய மாய மந்திரமன்று. மிகக்கடுமையான உழைப்பை வேண்டி நிற்பவை. இப்போது சொல்ல வேண்டிய விடயத்தை தேர்வு செய்து விட்டு அதை எப்படிச்சொல்வதில் என்பதில்தான் கரிசனை செலுத்திவருகின்றேன்.

போரியல் தொடர்பான விடயங்களை முன்பு அதிக அழுத்தம் கொடுத்தாலும் தற்போது வாழ்வின் உன்னதமான வேறு பல முக்கிய விடயங்கள் குறித்து கரிசனை செலுத்தத் தொடங்கியுள்ளேன்.

15. போர்க்காலம், போருக்குப்பிந்திய காலம் என்ற வகையில் சமூக நிலையிலும் இலக்கியத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,அனுபவங்கள் என்ன?


போர்க்காலம் கொலையுதிர் காலம் எனில் போருக்குப்பிந்திய காலம் அதைவிடக்கொடுமையானதாய் போய்விட்டது. உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் போர்க்காலத்தில் வாழ்க்கை இருண்டிருந்தது. போரில் ஈடுபட்டவர்கள் அதனுடன் சம்மந்தப்படாத மூன்றாந்தரப்பை கொன்றழித்து வந்தனர்.

சமூகத்தில் போர் ஏற்படுத்திய வடு என்பது எல்லா இல்லங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தது. மனதளவில் இலங்கையை பீடித்தாட்டிய மரணத்தின் வலிய கரங்களில் யாரும் தப்பிச்செல்ல முடியாத அளவிற்கு  நசிபட்டுக் கிடந்தனர். அந்த வலி,இழப்பு,கதறல்,ஆற்றாமை காலாதி காலமாய் நமது பிடரி நரம்பில் ஊடுபாவாக அழுத்திக் கொண்டிருக்கின்றன. இதைத்தான் இலக்கியம் சொன்னது.

போரியல் இலக்கியம் என்பது ஒட்டுமொத்த வலிகளின் தொகுப்பு. அது ரஜனி திரணகமவின் குரலாக, அல்லது செல்வியின் குரலாகஇ,அமிர்தலிங்கத்தின் குரலாக, குட்டிமணியின் குரலாக, மனம்பேரியின் குரலாக, அஷ்ரபின் குரலாக, அரந்தலாவயின் பிக்குகளின் குரலாக,ஒந்தாச்சி மட ஹாஜிகளின் குரலாக என வலிகள் ஏக காலத்தில் சம அளவில் ஒலித்தன. உயிர்கள் பறிக்கப்படுவதில் ஆளாளுக்கு ஒரு ‘பொலிசி’யை வைத்துக்கொண்டு வேட்டையாடினர். இதனைத்தான இலக்கியம் பதிவு செய்திருக்கின்றது.

போர் முடிவுக்கு வந்தவுடன் போரியல் இலக்கியத்தின்பால் கவனம் செலுத்தியவர்கள் திடீரென காணாமற்போயினர். போரை வைத்து சில எழுத்தாளர்கள் நன்றாக உழைத்தனர். போரின் பெயரால் அவர்களின் பொருளாதாரமும் சமூக கௌரவமும் பாதுகாக்கப்பட்டன. மின் குமிழை அணைத்தது போல் போர் இவர்களின் கற்பனை ஊற்றை அடைத்துவிட்டது.

ஈழத் தமிழர்களை வைத்து இந்திய அரசியல்வாதிகள் சந்தர்ப்ப அரசியல் செய்தது போல் சிலருக்குப் போர் வருமானம் ஈட்டித்தரும் ஒன்றவும்இகீர்த்தியைத்தேடித்தரும் அம்சமாகவும் ஆகிவிட்டது. எனக்கு இந்த இரண்டு அனுபவங்களும் வாய்த்திருந்தது. போரியல் இலக்கியமும்இபோருக்குப்பிந்திய இலக்கியமும் வாலாயப்பட்ட ஒன்றாக இருந்தன.

இலக்கியத்தின் அண்மைக்கால செல் நெறிகள் பல மாற்றங்களை கண்டடைந்துள்ளது. வாசிக்கவேண்டும் என்ற அவா பொது மக்களுக்கும் பிறந்துள்ளது. போரின் வலியை பேசிக்கொண்டு பராக்கிரம வீர தீர சாகசங்களைப்பேசிப்பேசி வீணே கழிப்பதைவிட வாழ்வின் வசந்தகாலத்தினை படைப்புக்கள் இப்போது சொல்லவாரம்பித்து விட்டன.

நமது அரசியல்வாதிகளிடம் மட்டும்தான் மாற்றம் இல்லாத  மாற்றம் நிகழ்ந்துள்ளதே தவிர,மற்றதெல்லாம் மாறிக்கொண்டுதான் இருக்கின்றது. 

16. ஐம்பது ஆண்டுகால ஈழச்சிறுகதைகளை மதிப்பீடு செய்யும்போது உங்கள் அனுபவத்தில் எதை ஒரு படைப்பாளியாகவும் வாசகராகவும் உணர்ந்து கொள்கிறீர்கள்?  
                                                                                                           
சிறுகதைத்துறை குறிப்பிடத்தக்க மாற்றம் கண்டுள்ளது. ஐம்பது ஆண்டுகால சிறுகதைகளை மதிப்பீடு செய்யும் போது கதை சொல்வதில் கையாண்ட உத்தி,உள்ளடக்கம்,கதைக்கான பின்புலம்,மற்றும் கருத்து நிலைகள் மாற்றமடைந்து வந்துள்ளன.

கதைக்கான உள்ளீடுகளும்இமொழியின் அடர்த்தியும் அபரித வளர்ச்சியடைந்துள்ளன. மரபு ரீதியான கதை சொல்லும் கலை அருகி மெல்ல மெல்ல நவீனத்திற்குள் சிறுகதைகள் உள்ளீர்க்கப்பட்டு வந்துள்ளன. 

 கதைகள் பெரும்பாலும் நிலம் சார்ந்தும்,மண் மீட்பு போராகவுமே இருந்துள்ளது. நிலச்சுவான்தாரிகளின் நில அபகரிப்பும் ஒடுக்குமுறையும் கதைகளின் பின் புலமாக இருந்தது.

அந்த நிலை இன்று வேறு வடிவத்தில் மாற்றமடைந்துள்ளது. இலக்கியத்தில் பதியப்பட்ட விடயங்களை பார்க்கின்றபோது தொழிலாளியின் தோட்டங்களையும்,வயலையும் அற்ப கிரயத்திற்கு தட்டிப்பறிக்கும் போடிமாரின் அட்டகாசங்களை விட தற்போதைய நில அபகரிப்பு மிகுந்த ஆபத்தானதும் அதிர்ச்சியானதும்.

போடிமாரின் சுரண்டலை எழுதிய அளவிற்கு சிவப்புச்சால்வைகளின் நிலபறிப்பை இன்னும் நாம் இலக்கியத்தின் ஊடாக சொல்லவில்லை.

ஐம்பது ஆண்டுகால சிறுகதை வரலாற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பது திடீரென ஏற்பட்ட விபத்தல்ல.பல சோதனைகள்இதடைகள்இமுயற்சிகள் அனைத்தையும் தாண்டிஇஇன்றைய நவீன கதை வரை வந்தடைந்துள்ளது.

நமக்கு  வழிகாட்டியவர்களின்  மொழி மீது எனக்கு மையல் உண்டு.அவர்களின் கதைகளில் பேசப்படும் சமூகச் சீர்திருத்தம் அவர்களின் காலத்தில் மிக காத்திரமானது.சாதிய அமைப்புக்கும்,முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகவும் எழுதுவதென்பது அவ்வளவு இலேசுப்பட்டதல்ல. அந்த எழுத்தில் நேர்மைஇ ஓர்மம்  எல்லாவற்றையும் பார்க்கின்றேன்.

17. முஸ்லிம் பெண்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி நிலைகள், சமூக அளவில் அவர்களுடைய இடம் குறித்து?

முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் வகிபாகம் காத்திரமானது. பெண் ஒரு போற்றத்தக்க ஆன்மாவாக கருதப்படுபவள். அதனால்தான் என்னவோ இஸ்லாமிய மார்க்கம் அங்கீகரித்த உரிமைகளைக்கூட சில நேரங்களில் சமூகத்தின் இறுக்கமான கலாச்சார நெறிகள் அனுபவிக்கமுடியாதபடிக்கு பெண்களை தடுத்திருந்தன.

கல்வி இலவசமாக்கப்பட்ட பின்பும், தொழில் நுட்ப புரட்சிக்குப்பின்பும் முஸ்லிம் பெண்கள் சில சமூகத்தளைகளை உடைத்தெறிந்து கண் விடுத்திருக்கின்றார்கள். நிறைய வாசிக்கின்றார்கள்,எழுதுகின்றார்கள்.

எனினும் சிலர் பத்தாம் பசலித்தனமான வறண்ட சிந்தனைகளுடன் சிலர் அதீத கற்பனைகளுடன் சிலர் தன்னைப்பற்றிய மிதமிஞ்சிய இறுமாப்புகளுடன் இலக்கிய உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்துள்ளார்கள்.பரிதாபத்திற்குரிய பலரை இலக்கிய உலகில் பார்க்கின்றேன்.

எனினும். பெண்களின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை வரவேற்கின்றேன்.தனக்கு வழங்கப்பட்டிருக்கும் சமூகப்பொறுப்பை அவர்கள் செவ்வனே நிறைவேற்றி வருகின்றார்கள்.சமூகம் அவர்களை அங்கீகரித்து அரவணைக்கின்றது.

பெண் தமக்குரிய சமூகக்கடமைகளை சுயமாக நிறைவேற்றவும்,தீர்மானம் எடுக்கவுமான மனோ தைர்யத்தை அவர்களுக்கு கற்ற கல்வி வழங்கியுள்ளது.

புதிய பாதையில் முஸ்லிம் பெண்களின் பயணங்கள் தொடர்வதும் எமது அதிர்ஷ்டமே.



Thursday 29 August 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                                           தொடர்- 46

1996ம்ஆண்டில் தினகரன் பத்தரிகையில் ஒரு விளம்பரம்.
‘இளம் எழுத்தாளர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம். 1000 ரூபாய் இருந்தால் போதும் நீங்களும் புத்தகம் போடலாம். ‘

விளம்பரத்தை தந்தவர் அக்காலத்தில் ஜும்ஆ பத்தரிகையின் ஆசிரியர் பலப்பிட்டி அரூஸ் என்பவர். அதனைப்படித்து விட்டு ஆயிரங்களையும் ஆக்கங்களையும் அனுப்பியவர்களில் நானுமொருவன்.அச்சில் நமது படைப்பு தொகுப்பாக வெளிவருவதென்றால் சும்மாவா? திருமணம் முடித்து பல வருடங்கள் கடந்தும் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகள் போல் ஓர் எழுத்தாளின் ஏக்கம் பெரும்பாலும் ‘தொகுதி போடல்’ தானே !

நான் கொழும்பில் இருந்ததால் என்னை சந்திக்க விரும்புவதாக வேறு  அரூஸ் அஞ்சலிட்டிருந்தார். ஒரு சனிக்கிழமை என்று நினைக்கின்றேன். பலப்பிட்டிக்கு பஸ் ஏறிப்போய்விட்டேன்.

தென்னிலங்கைக்கான முதல் விஜயம் அது. சென்ற பின்புதான் அவரிடம் பலர் பணத்தை கட்டி ஏமாந்து நின்றது தெரியவந்தது.எங்கள் கவிதைகளை டைப் செய்து புரூப் பார்க்க மட்டும் தந்தார்.புருப் பார்க்கும் போதே புத்தகம் கையிலிருப்பதான மகிழச்சியில் திளைத்திருக்கின்றோமம் என்பது வேறு விடயம்.

ஜாமிஆ நளீமிய்யாவின் மாணவர்கள் சிலர் கல்வி தொடர்பான நூல்களை தொகுப்பாக கொண்டு வர 6000.00 ரூபாய் வரை கொடுத்திருந்தனர்.இலக்கிய நண்பர்கள் பலரும் பணத்தையும் ஆக்கத்தினையும் கொடுத்திருந்தனர்.நண்பர் மைக்கல் கொலின் திருகோணமலை தற்போது மகுடம் சஞ்சிகை ஆசிரியர்.பஹீமா ஜஹான் போன்றோரும் இதில் அடக்கம்.

பணத்தையும் ஆக்கத்தையும் அனுப்பி விட்டு எங்களுடைய புத்தகம் அச்சில் வரும் செய்தியை நண்பர்களிடம் பீற்றித்திரிந்ததில் வெறும் கேலி மட்டும்தான் ஈற்றில் மிஞ்சியது.

தான் நடாத்தும் ஜும்ஆ பத்திரிகைக்கு ஆயுள் சந்தா திரட்டியுள்ளார். என்பதை பிற்காலத்தில் அறிந்து அதிர்ச்சியடைந்தோம்.ஆயிரம் ரூபாய் இழப்பு என்பது பெரிதல்ல .எம்மை நம்ப வைத்து ஏமாற்றி மோசடி செய்தது மகா தவறு .அதற்காக அரூஸ் இன்று வரை யாரிடமும் வருத்தமோ மன்னிப்போ கேட்டதாக இல்லை.

ஏமாற்றி பிழைப்பவர்களிடமிருந்து அப்படியொரு நல்ல வார்த்தைகளை நாம் எதிர்ப்பார்ப்பதும் கூடாதுதானே. இந்த மோசடி குறித்த எனது ஆதங்கத்தை 1997 ஜுன் 18ம்திகதி சரி நிகரில் இப்படி எழுதித்தீர்;த்தேன் “ புத்தகம் போடலியோ புத்தகம் !”

இப்போதும் சிலர் பதிப்பகம் நடாத்துகின்றோம்,புத்தகம் போடுகிறோம் என்று அப்பாவி எழுத்தாளர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் கறக்கும் இழி தொழிலை கச்சிதமாக செய்து வருகின்றனர்.

‘என்ன சுகமா மச்சான்?’ என்று கேட்பதை விடுத்து நண்பர்களும் தெரிந்தவர்களும் ‘கவிதப் புத்தகம் வந்திட்டா?’ என்று நச்சரிக்கத் தொடங்கிவிட்டனர்.

புத்தகம் போட்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எம்மை ஆட்கொண்டு விட்டது.கையில் பணம் இல்லை.என்ன செய்ய யோசித்துப்பார்த்தேன்.1000 புத்தகம் போட 24000. ரூபாய் கேட்டார்கள். அப்போது நான் கள் எலியாவில் பணி புரிந்து கொண்டிருந்தேன்.

திஹாரியில் இருக்கும் அங்கவீனர் நிலையம் நடாத்தும் அச்சகத்தில் புத்தக வேலைகளை பாரம் கொடுப்பதென்று தீர்மானித்தாயிற்று.கள் எலிய சியாத் மாஸ்ரரின் நண்பர் ஜெம்சீத் ஆசிரியர்தான் திஹாரியில் அச்சகத்திற்குப்பொறுப்பாக இருந்தார்.

சியாத் மாஸ்ரர் மூலம் அச்சகத்தில் புத்தகத்தை கொடுத்து அட்வான்சும் கொடுத்தேன். மிகுதிப்பணம் வேண்டுமே. அக்காலத்தில் சம்பளம் வெறும் 6000.ரூபாய் இக்காலத்தில் அது 60.000.00 ஆயிரத்திற்கு சமன்.

உம்மா எனது பதற்றத்தை பார்த்து விட்டு கழுத்தில் கிடந்த ஒரு மாலையை கழற்றி விற்றுவிட்டு 10000.00 பத்தாயிரம் தந்தார்கள்.புத்தகம் போட்டாயிற்று. இது முதல் பிரசவம். அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அது திருப்தியாக விற்றுத்தீர்ந்தது.

ஊஞ்சல் இன்னும் ஆடும்..

Thursday 15 August 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்.

                                                 தொடர்- 45

எனது எழுத்துலகில் நிறைய சுவாரஸ்யங்கள் உண்டு.
91.06.15ம்திகதி எழுச்சிக்குரல் பத்திரிகையில் ‘மச்சானே அழைத்திடுங்க’ என்ற கவிதை வெளிவந்தபோது ஒரு சம்பவம்.பத்திரிகையை தூக்கிக்கொண்டு ஒரு ஆசிரியர் ஓடிவந்தார்.நான் சைக்கிளை உழத்திக்கொண்டு ஓட்டமாவடி மையவாடிக்கு பக்கத்து தெருவில் போய்க்கொண்டிருந்தேன்.

அவர் மூச்சுவாங்க என்னெதிரே நின்றார்.நான் சைக்கிளை நிற்பாட்டி என்னவென்றேன்.விடுமுறையில் வந்து நின்ற என்னிடம் சுகம் விசாரிப்பார் என்று நினைத்திருந்தேன்.எழுச்சிக்குரலை உயர்த்திப்பிடித்தபடி
‘இந்தக்கவிதய நீங்களா எழுதினது ?’
‘ஓம்’ என்றேன்.
‘என்னத்துக்கு இந்தக்கவிதயெல்லாம். இதெல்லாம் விட்டுப்போட்டு வேலையப்பாருங்க என்றார்.ஒர் ஆசிரியராக இருந்தும் எழுத்தில் தடம் பதிக்க ஆரம்பித்துள்ள என்னை அவர் ஊக்கப்படுத்தவில்லை.நெஞ்செல்லாம் கருகியது.

 முஸ்லிம்களுக்கெதிரான பிரபாகரனின் பாசிசத்தை பகிரங்கமாகவே எதிர்;த்து எழுதியபோது உண்மையில் என் மீது அக்கரையுடன் சிலர் புத்தி சொன்னதுண்டு.இப்படி பகிரங்கமாக சொந்தப்பெயரில் எழுதாமல் புனைப்பெயரிலாவது எழுதுங்களேன் என்று. அவர்களின் அன்பையும், கரிசனையையும் இன்றும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கின்றேன்.அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

அந்த ஆசிரியர் படித்து விட்டு இதயெல்லாம் எழுதாதீங்க என்று புத்தி சொன்ன அந்த நெடுங் கவிதையிலிருந்து சில வரிகள்.

……….. சின்னனவள் சாமத்தில்
உங்களை கேட்டழுதாள்.
‘இத்தா’வுக்குள் ‘இரி’யென்று ஏன் மறந்து போனீங்க?
இருட்டான என் வாழ்வில்
இனி வருமா விடிவெள்ளி?

பிள்ளைகள் அடம் பிடித்தால்
பிடிச்சோறு ஊட்டிட
தொல்லைகள் அதிகரித்தால் / தோளில் கிடத்தி உலாத்திட
ஏந்திழை நான் காத்திருந்தேன்.
கனவுகளை கபனிட்டு
என் நினைவை புதைத்திட
புலி அடித்துக்கொன்றதோ ?

பள்ளிக்குள் துப்பாக்கி / படபடத்து தீ கக்க
நெஞ்செல்லாம் அனல் அடிச்சி  /   எதிர்காலம் சாம்பலாச்சி
பட்ட கடன் தீர்க்க நான்  /  அப்பம் சுட்டு வாழுறன்
பார்ப்பதற்கு யாருண்டு?
பாரினிலே அழுகிறேன்.
கண்மனிகள் இருவரும் பட்டினியால் வாடுவதை
என் விழியால் பார்த்திட்டு /  எப்படி நான் துயில் கொள்வேன்.?
…………………………………………

இரண்டு வருடத்திற்கு முன் அதே ஆசிரியர் என் முன் நிற்கிறார்.எனக்கு ஒரு கவிதை எழுதித்தாங்க நான் ஒரு அமைச்சர வாழ்த்த வேண்டும்.
எனக்கு அழுவதா சிரிப்பதா? தெரியவில்லை.எனக்கு அப்படிக்கவிதை எழுதிப்பழக்கமில்லை என்கிறேன்.நிஜமாகத்தான் சொன்னேன்.

இது வரை யாரையும் வாழ்த்தியும் தூற்றியும் எழுதவே இல்லை.நிச்சயம் அவர் பழி தீர்த்திருக்கின்றேன் என்று நினைத்திருப்பார்.இயலாத ஒன்றை எழுதப்போய் வம்பில் மாட்டுவதை விட இயலாது என்று ஒப்புக்கொள்வது வாத்சல்யம்.

அரசியல்வாதிகளுக்கு சாமரம் வீசுவது  இலேசுப்பட்ட  காரியமா? அதற்கென்று பச்சோந்திக் கவிஞர்கள் நிறையப்பேர் இருக்கின்றார்கள்.

எனது ‘வேட்டைக்குப்பின்…’ கவிதைத்தொகுதிக்குப்பின் கவிதை எழுதுவதை முற்றாக நிறுத்திவிட்டேன். நல்ல கவிதைகளை படிப்பதுடன் நின்றுவிடுவதுண்டு. பிற்காலங்களில் சிறுகதையில் மட்டுமே கவனம் குவித்து வந்தேன்.அதுதான் எனக்கு இலகுவாக வசியப்படுகிறது. (கவிதையை இலகுவான கலை என்பவர்கள் மன்னிக்க வேண்டும் )

வேட்டைக்குப்பின்…என்றவுடன் அந்த தொகுதி தொடர்பான சில அனுபவங்கள் நினைவில் வந்து தொலைக்கின்றன.என்னை புத்தகம் போடும் அளவிற்கு வளர்த்து விட்டது ஒருவரின் துரோகமே என்றால் ஆச்சரியமாக இருக்கும் இல்லையா?



ஊஞ்சல் இன்னும் ஆடும்..

Monday 29 July 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்.

                                                               தொடர்- 44

மலை நாட்டின் பல்கும்புறயில் பணியிலிருந்த போது அயல் கிராமமான கலகெதரயில் உனைஸ் என்ற நண்பர் இருந்தார். ‘கலகெதர உனைஸ்’ என்ற பெயரில் அப்போது எழுதிக் கொண்டிருப்பார்.

ஒரு நாள் மாலையில் போன் பண்ணினார். அவருடன் பேராதனைப்பல்கலைழகத்தில் கருத்தரங்கிற்கு சென்ற நண்பர் இளைய அப்துல்லாஹ்வும் (எம்.என்.அனஸ்) தற்போது இலண்டன் தீபம் தொலைக்காட்சியில் பணி புரிகின்றார். அவரும் போனில் கதைத்தார்.

 எழுத்தாளர்என்று  உன்னுடைய பெயரைச்சொல்லி ஒருவர் அறிமுகமாகி கருத்தரங்கில் கலந்து கொண்டிருக்கின்றார்.கேட்டால் மழுப்புகின்றார்.என்ன செய்ய என்று கேட்டார்கள். ‘விடுங்கப்பா அவர்ர ஆசை அதுவானா சொல்லிட்டுப் போகட்டுமே’ என்றேன். ஆனால் நண்பர்கள் கேட்கவில்லை என்பதை பின்பு தெரிந்து கொண்டேன்.

சில நேரங்களில் நான் எழுதிய கவிதைகளை என்னிடமே தான் எழுதியதாகப் படித்துக் காட்டுவார்கள்.சிரித்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருப்பேன்.

கண்டியில் இருக்கும் போது இப்படியொரு சுவாரஸ்யம் வாய்த்தது.பணி புரிந்த இடத்தில் எனக்குரிய அறையில் தனியாக தூங்குவதில்லை.கூடவே நண்பர்கள் இருவரோ அல்லது அதற்கு மேல் மூவரோ வந்து விடுவார்கள்.குறைந்தது ஒருவராவது வந்துவிடுவர்.

கண்டி குளிருக்கு பிளேன்றீயும், கோப்பியும் குடித்துக் குடித்து கதைத்தபடி இருப்போம்.எத்தனை மணிக்கு தூங்கினாலும் அதான் கேட்டதும் எழும்பி விடுவோம்
.
ஓர் இரவு ஒருவர்தான் தூங்குவதற்கு வந்தார்.நான் கட்டிலை கொடுத்தும் ‘இல்ல நீங்க படுங்க’ என்று விட்டு கட்டிலுக்கு அருகில் தரையில் படுத்துக்கொண்டு கதைத்தபடி இருந்தார்.
‘சேர் நான் ஒரு கவிதை எழுதியிருக்கின்றேன்.அதப்படிக்கிறன் கேளுங்க’ என்றார்.
‘கவிதை எல்லாம் எழுதுவிங்களா ம்; படிங்க’ என்றேன். நான் கவிதை எழுதுபவன் என்றோ கதை எழுதுபவன் என்றோ போகுமிடமெல்லாம் காட்டிக்கொள்வதில்லை.அது என்றைக்கும் எனக்கு உவப்பான  விடயமுமல்ல.

அவர் கவிதை படிக்கப் படிக்க எனக்கு திகைப்பும்,சிரிப்பும்.
சில மாதங்களுக்கு முன் தினமுரசில் நான் எழுதி பிரசுரமான பிரிவின் வலியையும் நட்பின் யாசிப்பையும்  வேண்டி நிற்கும் 
கவிதை.

அந்தக்காலத்தில் தினமுரசில்தான் அதிகமாக எழுதி வந்தேன். வாரம் ஒருமுறை கவிதையோ அல்லது சிறுகதையோ வந்து விடும். தொழில் நிமித்தம் அடிக்கடி ஊர்களை மாற்றிக்கொள்ளவேண்டி ஏற்படும். செல்லும் கிராமங்களிலெல்லாம் கதைக்கான ‘கருக்கட்டி’ விடும்.

நண்பர் பௌசர் போன் பண்ணும்போது கேட்பார். இப்ப நீங்க இந்த ஊருலதானே ?  கத படிச்சன் என்பார்!.

நண்பர் கவிதையை வாசித்து முடித்ததும் ‘எப்படி சேர் கவிதை’ என்றார். ‘ம் நல்லா இருக்கு’ என்றேன்.

‘இத நம்மாளுக்கு எழுதிக்கொடுத்திட்டன் சேர் நாளக்கி ‘வேர்க்அவுட்’; ஆகும்.’ என்றார். அவருடைய தோழியின் நட்பு நமது கவிதையால் தொடரப்போகிறது.அதைப்பிரிப்பானேன் மனசுக்குள் சின்னதாய் ஒரு மின்னல் வெட்டிப்போனது.

‘உங்க ஆளு கவிதையெல்லாம் படிப்பாங்களா? என்றேன். 
‘பேப்பர்லெல்லாம் படிக்கமாட்டா சேர்.புத்தகம் படிப்பா?

‘அப்படியா நீங்க தப்பிட்டிங்க’ என்றேன். ‘என்ன சொல்றீங்க?’ அவர் குரலில் பதற்றம் தொற்றிக்கொண்டது. அதை நீடிக்க நான் விரும்பவில்லை. 

பிறகென்ன இந்தக்கவிதயால உங்க எண்ணம் வேர்க் அவுட் ஆகும் ,தோழரே நிம்மதியா படுங்க’ என்றேன்.

 நெடு நேரமாக ‘பே’ என்று முழித்துக்கொண்டிருந்தார்.எத்தனை மணிக்கு தூங்கினாரோ அறியேன்.

நமது கவிதையை அச்சொட்டாக பாடமிட்டு நம்மிடமே ஒப்புவிக்கும் போது நமக்கு ஏற்படுவது கர்வமா அல்லது மகிழ்ச்சியா என்று புரியவில்லை. ஆனால் நெஞ்சுக்குள் ஒரு புகைமூட்டம் இன்பமாய் பரவத்தொடங்கியது என்னவோ நிஜம்.

பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என்பதற்கான சிலர் எப்படியெல்லாம் திருடி சொந்தச்சரக்கு போல விற்றுவிடுகிறார்கள் என்பதை நினைக்கையில் ஆச்சரியமாக உள்ளது. நிஜவாழ்விலும் திருட்டு,இலக்கியத்திலும் திருட்டு. இப்படி திருடி பிரபல்யம் பெற்ற பல எழுத்தாளர்களை நான் பார்த்துக்கொண்டு வருகின்றேன்.

திருடியது பிடிபட்டவுடன் நான் அதில் எடுக்கவில்லை இதில் எடுத்தேன் என்ற அறிக்கை கூட விடுக்கின்றார்கள். பன்றி இறைச்சியை சாப்பிடும் போதும் நான் ‘பிஸ்மி’தானே சொன்னேன் என்பது போல் இருக்கின்றது அவர்களுடைய வாதங்கள்.

 திருட்டு இலக்கியம் நீண்ட காலத்திற்கு நீடித்து நிற்பதில்லை.சில திருடர்களை இனங்காட்டியிருக்கினறோம். சில திருடர்களை போனால் போகட்டும் போடா என்று விட்டு வைத்திருக்கின்றோம். அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு கிடக்கின்றது என்ற கற்பனையில் பால் குடிக்கும் கள்ளப்பூனைகள்.

சில இலக்கியத்திருடர்களும் கொலைகாரர்களும் இன்றைய தமிழ் இலக்கிய  உலகில் முடி சூடா மன்னர்களாக வலம் வருவது ஆசியாவின் ஆச்சரியங்களில் ஒன்று என்பதை தவிர வேறென்ன சொல்ல முடியும்?

                                                                                                                   ஊஞ்சல் இன்னும் ஆடும்....

Sunday 21 July 2013

நபீலின் ‘காலமில்லாக் காலம்’

னிதனுக்குள்ளிலிருந்து  எழும் அக அழைப்பே கவிதை’என்ற நெரூதாவின் வரிகள் நபீலின் கவிதைகளை படித்து முடித்த  போது தவிர்க்க முடியாமல் நெஞ்சில் கிளர்ந்தது.

கவிதை எழுதுவது என்பது எல்லோருக்கும் வலாயப்பட்ட  கலையல்ல. அதுவும் கவிதையை வசியம் செய்து தான் விரும்பிய வண்ணம் செதுக்குவதும்,அதற்கு அளவான சட்டை போட்டு  அழகு பார்ப்பதும் சாமாண்ய விடயமல்ல.

கவிதை ஒரு சிலருக்குத்தான் இப்படி தொண்டு செய்து காலை நக்கிக்கொண்டு கிடக்கும்.அது நபீலுக்கு வாய்த்திருக்கிறது.

இந்தியாவில் இருந்த போது ரிச்சர்ட் பார்ட்டன் குரங்குகளின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி குரங்குகளின் பின்னால் அலைந்து திரிந்தார். முடிவில் 18 ஒலிக்குறிப்புகளை அவதானித்து பதிவு செய்தார்.அந்த ஒலிகளை அவர் எழுப்பும் போது குரங்குகள் அதற்கு மறு மொழி பகர்ந்ததாக பட்டர்ன் தனது பயணக்குறிப்பில் குறிப்பிடுகின்றார்.

நபீலுக்கும் உயிரினங்களின் மொழி புரிந்திருக்கிறது.அல்லது நபீலின் மொழியை அவைகள் புரிந்து கொண்டு நட்புடன் நெருங்கியிருக்கின்றன என்பதற்கு காலமில்லாக்காலத்தில் பொதிந்திருக்கும் சில கவிதைகள் சாட்சி.
நபீலின் அனேக கவிதைகள் அழகியலை வரமாகப்பெற்ற மொழி நடை கொண்டது.எதிர்பாராத திருப்பத்தில் நிகழக்காத்திருக்கும் ஓர் அதிசயம்போல் வியப்பின் முனைக்கு நம்மை இட்டுச்சென்று அந்தரப்படவைக்கும் இயல்பு கொண்டது.

அவர் கையாளும் மொழியின் மரபும், தொன்மங்களை அவாவி நிற்கும் விந்தையும் அலாதி. முஸ்லிம் தேசத்திற்கே உரிய மொழி நடையும்,கூர்மையும் அவர் கவிதைகளில் ஊடுபாவாக நம்மை இரசிக்க வைக்கின்றன.

இயற்கையின் கண்ணாடியாக நின்று பேசும் நபீலின் கவிதைகள் மடியில் கிடத்தி தலை கோதுகையில் கிறங்கி மூடும் பூனைக்குட்டியின் கண்களைப்போல் ஆசுவாசம் கொள்கிறது.அது நம்மை வேறோர் தளத்திற்கு அழைத்துச்செல்கிறது.

78 கவிதைகளும் அதிகம் பேசுவது தன்னிலையில் நின்றுதான்..
நபீலுடன் எல்லா உயிரினங்களும் பேதமின்றிப்பேசுகின்றன. அரூபங்களும்,உருவங்களும் பேசுகின்றன.அவற்றின் இருப்புக்குறித்து நபீல் நம்மை மிரமிக்க வைக்கின்றார்.
அவர் குருவியோடு இப்படிப்பேசுகின்றார்.

பிடித்துப்பார்க்க ஆசைதான் குருவி உன்
ரோமங்கள் ஒவ்வென்றாய்...
முகமெங்கும் கறுப்படித்து
குதப்புறத்தில் வெள்ளைகுத்தி
பாக்களவு உடல் வளர்த்து
இறக்கை கோதுகிறாய்
உலகத்தோடு உன்னையும் ஒரு வீராங்கணையாக
அர்த்தங்கொள்ளவா பார்க்கிறாய்   பக் : 16

பல்வேறு அர்த்தங்களை தேடிச்செல்லும் தர்க்கம் பொதிந்தது நபீலின் கவிதைகள்.உலகில் உயிரற்ற  எதுமில்லை என்ற உள்ளுணர்வை அவர் இலகுவாக பதித்து விடுகிறார்.

அவர் காற்றை இப்படி கோபித்துக்கொள்கிறார்.
வெளிச்சமணைந்து விடிந்த உலகமாய்
முதுகொடிந்து பொறுக்கிய
என் கடதாசிக்கட்டுகளை
பறவைகளாக மாற்றி விடுகிறாய்
சற்று முன் என் கதவைச்சாத்திய புயலே!  பக் : 30

கூனிப்பெத்தா ஒரு கதை போல் விரியும் சித்திரம்.முதுசொம்களின் மனவோட்டங்களை கவிதைக்குள் நபீல் உயிர்ப்பித்திருப்பது திறமைதான்.
குட்டான் பெட்டி, புழுங்கள் அரிசி போன்ற கவிதைகள் வறுமையின் உயிரற்ற சித்திரங்கள்.

அதிகாரவர்கத்தின் அராஜரகங்களையும்,மன அவசத்தையும் நபீல் இப்படி பாடுகிறார்.

ஊமையாகிக்கத்துகிறோம் ஃசீறி எழுந்த போது கால்கள் பின்னின.
இலை விழுந்து முதுகெலும்பு உடைந்தது.   ‘மண் புடவை ; பக்: 76
 இறந்த பின்னும் வாழ விடாத கொடியவர்களின் அதர்மங்களை நினைத்து நபீல் காட்டமாக விம்மி வெடிக்கிறார்
….சடலமே நீ
மீளவும் முளைப்பாய் என்றா தோண்டி எறியப்பட்டாய் ? பக் : 76

வாழ்வதற்கு ஒரு துண்டு நிலத்தையேனும் விட்டுவைக்காத பாசிசம்,புதைப்பதற்குள்ள உரிமையையும் பறித்தெடுத்து விரட்டியதை மனசாட்சியுள்ளவரால் சகித்துக்கொள்ள முடியாது. நபீலும் நியாயங்களின் மனசாட்சியாய் விம்மிச்சலிக்கின்றார்.

இந்த சமூகத்தின் கையகலாத்தனம் அவர் வார்த்தைகளில் இப்படிக்கொப்பளித்துத்தெறிக்கிறது.

‘…அன்றிரவு விரட்டியதில் மிச்சம் வைக்க முடியவில்லை
அவசரத்திற்கென்று உடுத்திக்கொள்ள
மண் ஃ புடவையாகி மசிந்து கிடக்கிறது’ 

அவர் கவிதைகள் பறவையாகி,கடலாகி,நீராகி,பனியாகி,காற்றாகி, வெயிலாகி, மலர்களாகி, மரங்களாகி, வனமாகி, பூச்சியாகி, பட்டாம்பூச்சியாகி, தும்பியாகி,நம்மை அதனதன் பின்னால் ஓடிஓடி அலையவைக்கின்றன.

கடலின் மேல் அவருக்குள்ள பாந்தமும், பக்தியும், அச்சமும் அவற்றின் இயல்புடன் கவிதைகளில் வீசியடிக்கின்றன. அது வாசகனையும் ஆழிச்சுழியாய் உள்ளிழுத்து சுழற்றிவிடுகிறது.

ஓங்கரிக்கும் கடல்,கடலிறைத்த சொற்கள்,அலையும் பட்டுக்கடல்,கடலில் சுழி ஓடும் நம் சந்திப்பு போன்ற தலைப்புக்களும் சில கவிதைகளில் கடல் பற்றிய புனைவும் கடலின் மீதான காதலை சொல்வன.

‘சிறகு உதிர்ந்த பகலில்’.…
நரி ஊளையிடும் மயானமாகி
பற்றி எரிகிறது கடல்….  பக்: 78


‘தூரிகை வர்ணத்தில்.’.
முற்றுமாய் என்
சிநேகிதங்களைத்தேடுகின்ற
கடற்கரை வெளிச்சம் மறைகிறது. பக்: 79

‘இதற்கு முன் பார்த்ததே இல்லை நானி’ல்

இதோ கிடக்கிறது ஒரு கயிறு
உன் கூந்தலை அள்ளி முடித்துக்கொள் கடலே…. பக்: 98

‘அலையும் பட்டுக்கடலி’ல்
காற்றெழுந்தால் அலையும்  பட்டுக்கடல் ஓசை  செவிகளில் எரிந்து கொண்டு நுழைகிறது.. பக்: 95

 ‘கருமுகிலை விழுங்கிய பறவைகளி’ல்
காற்று விசையில் முகம் உலர்த்தி
பறவைகள் ஃ கருமுகிலை விழுங்கிப்பறக்கின்றன
கரையைக்கடித்துரைக்கிறது கடல்   பக்: 91

‘பித்தத்’தில்
குழம்பித்திரிகின்றன புள்ளினம்
இன்னும் ஒரு கல் விழுந்தால்
தளும்பி விடும் கடல்  பக்: 75

‘வெட்டு முகத்தி’ல்
கடல் மயங்கிய வேளை  கைதான மீன் குஞ்சின்
சலசலப்புக்கேட்கும்.. பக்: 62   

‘வேர்வை’யில்
அரும்பும் வேர்வையில் கிறங்கி
பொங்குகிறது ஒரு மகா கடல் உள்ளே.. பக்: 57

‘மூடிய நிர்வாண’த்தில்…
சோப்புக்கட்டியாகி மாறி
தேய்த்துக்கழுகிறது கடல் .. பக்: 49

‘வானமாகி நானி’ல்…
இன்னும் ஒரு படி குனிந்தது வானம்  கடலைக்குடித்து தாகம் தீர்த்து.. பக்: 43

‘உயிர்ப்புக் கற்களி’ல்…
ததும்பும் கடல் பறவை
அதன் அலகில் துலங்கிற்று   ஈரத்துயர் கசிந்த என் பாடல்  பக்: 40

கடலிறைத்த சொற்களில்…
….பட்டு மேனி கடலிறைத்த சொற்கள்  காற்றடைந்து அந்தரத்தில் மிதக்கின்றேன். பக்: 39

‘தெற்குத்திசை’யில்
…சிற்றலைகளில் புரண்டு விளையாடும்   படலங்களே விரிக 
தென்திசையில் உடல் வளைந்து   பாம்பு போல எழுக… பக்: 34

‘மீன் மாலை’யில்
பருவ முதிர்ச்சியடைந்த கடல் 
 கரைக்கன்னியின் இதழ்கள் கிள்ளும் ஓர் அந்தி மாலை.. பக்: 26

‘ஓங்கரிக்கும் கடலி’ல்
..உன் நிராகரிப்பின் வடுக்கள் செறிக்காமலா
ஓங்கரிக்கிறது கடல்… பக்: 22

‘உச்சத்தி’ல்
தூரத்தை நெருடலுடன் கடந்து  எதிரே விரிந்து
கிடக்கும் அந்த வங்கக்கடல்…  பக்: 19


‘நிலாப்பாலி’ல்
கூந்தலுக்குள்ளே இருட்டி மழை பெய்த
மேகம் கடலோடு புரண்டு படுக்கிறது. பக்: 52

கடல் ஓர் அதிசயம்.அதிசயங்களின் மகா அதிசயம்.விந்தையான பிரபஞ்சத்தின் மர்ம முடிச்சுக்களை தன்னகத்தே வைத்திருந்து மிரமிக்க வைப்பது கடலின் இயல்பு.குமுறுவதும், சீறுவதும் பின் அடங்கிப்போவதும் அதன் பிறவிக்குணம்.

அந்தக்கடலின் ஒவ்வொரு அசைவையும் வொவ்வேறு தருணங்களில் நுணுக்கமாக கையாண்டிருக்கும் நபீல் கடலின் கவிஞன்.

காலச்சுழியில் சில கவிதைகள் அடித்துச் செல்லப்பட்டாலும் பெரும்பாலான கவிதைகள் அலைகளைப்போல் சாசுவதமாய் வாழும் என்பது வாஸ்தவம். இது போதும் நபீலை ஒரு கவிஞனாக வாழ வைக்க.

நபீல் சோலைக்கிளியின் அணைப்பில் வளர்ந்த கவிஞர்.அவரின் தாக்கம் இவர் கவிதைகளையும் தொட்டுப்பார்த்திருக்கின்றது ஒன்றும் மிகையானதும் ஆச்சர்யமானதுமல்ல. நபீலின் கவிதைகள் குறித்து சோலைக்கிளி 

‘…ஒவ்வொரு கவிதையிலும் அரைவாசிப்பாகத்திலாவது கவித்துவம் பொங்கித்தெரிகின்ற நபீலுடைய கவிதைகள் குறைந்தது ஒவ்வொரு மிளகு மாதிரியாவது 'ஆகி’ வந்திருக்கிறது.

வாசித்து முடித்ததும் கடித்தால் உறைப்பும் காரமுமாக இருக்கின்ற மிளகுகளைப்போல வாழுகின்றன. இந்த மிளகுத்தகுதியாவது ஒரு கவிதைக்கு இருந்தாலே போதும்”



25.09.2010







பெண்ணியாவின் 'என் கவிதைக்கு எதிர்த்தல் என்று பெயர் வை '


லஸ்தீன கவி மஹ்மூத் தர்வீசின் கவிதைகளில் மிகைத்து நிற்கும் மூர்க்கம் போல் பெண்ணியாவின் கவிதைத்தொகுதியின் பெயர் அதிர வைக்கின்றது.

1994லிருந்து எழுதத்தொடங்கியவர் பெண்ணியா. சரிநிகரில் அவர் கவிதைகளை படித்த முன் அனுபவம். அதிகம் எழுதாவிட்டாலும் குறித்த காலப்பகுதியில் சில வீச்சான கவிதைகளை எழுதியவர்.

கவிதையின் மொழி ஆளுகை ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே முரண்பட்ட உணர்வுகளால் தனித்து நிற்கிறது. பெண் மொழி என சுயமாய் அடையாளப்படுத்தலுக்கும் இஃதோர் காரணமெனில் மிமையல்ல. 

ஆணின் மொழிக்குள் சிக்குப்படாத பல சூக்கும வலிகளையும், மௌன விசும்பல்களையும் சாசுவதப்படுத்தும் வசீகரம் கொண்டது பெண் மொழி. இரு பாலாருக்குமிடையான பொதுப்பண்புகள் உணர்வுகள் இங்கு விதி விலக்கு.
பெண்ணியாவின் கவிதைகளும் பெண் மனம் சார்ந்த பொதுக்குரலினை பிரதிபலிக்கின்றது.

பெண்களின் உணர்வு மானசீக அந்தரங்க சிக்கல்கள் குறித்து பெண்ணியா அதிக கவிதைகளை எழுதியிருக்கின்றார்.

நேசம் அல்லது நெல்லி மரம்,மாதாராய் பிறந்திட,கல்,வெறுமை,உன் நினைவு,மழை நீர் கண்ணீர்,உதிரும் இலைக்கனவு,ஓர் வானமும் ஓர் அருவமும் போன்ற பல கவிதைகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

பெண்களின் பிரபஞ்சம் தனித்து சஞ்சாரம் செய்யும் சந்தடிகளற்ற மௌனத்துள் புதைந்து போயுள்ள தருணங்களில் கவிதைகள் மூலம் தன் உரிமைகளை நிலை நிறுத்தவும் அதற்கான போராட்டத்தை முன்னனெடுக்குவுமான சமரில் இறங்குவதுண்டு.

பெண்ணியாவும் இவ்வலயமைப்பில் இலகுவாக இணைந்து கொள்கின்றார்.அவர் எதிர் கொண்ட ஆண்களின் முரண்பட்ட முகங்களும்,அடக்குமுறைகளும் பெண்ணியாவின் குரலினிடை வெடித்து வந்திருக்கின்றது.

ஓரு கால கட்டத்தில் சுதந்திரமாக இயங்கும் பெண் கைவிலங்கிடப்பட்டவளாக முடக்கப்படுவதன் மூர்க்கத்தை எதிர்த்து பெண்ணியா ஓர்மத்துடன் குரல் கொடுத்திருக்கின்றார்.

யார் முன்னும்பணிதலின்றி 
 எனது உணர்வுகளோடும் அவாக்களோடும் 
எவ்வகை வாழ்வெனப்புரியாத இது குழப்பமிகு வாழ்வேதாயினும்
வாழ்வேன் ....    வாழ்வேன் ....   வாழ்வேன் .

என்ற சூளுரைத்தலில் பெண்ணியாவின் அஞ்சாமை துலங்கி நிற்கிறது.
பெண்களுக்கெதிரான வன்முறைகள், ஆணாதிக்க அடக்குமுறைகள், கருத்துத்திணிப்புக்கள், அவர்களின் சுயதீனத்திற்கான சவால்கள் அனைத்தும் ஏகத்தில் எல்லை கடந்த மொழி கடந்த இனம் கடந்த அடிப்படை அம்சங்களாகும்.

மிக இலகுவாக ஆனால் ஓர்மத்துடன் இந்த போரட்டத்தில் பெண்ணியாவின் கவிதைகளும்  இணைந்து கொண்டதற்கு மேற்குறித்த காரணிகளே இசைவு எனில் மிகையல்ல.

பெண்ணியா கவிதைகளை வெளியிட ஊடறு பெண்கள் அமைப்பு (சுவிஸ்) பின்புலமாக உதவியிருப்பதுடன் மூன்றாவது மனிதன் பதிப்பகம் அச்சிட்டுள்ளது.சிறந்த வடிவமைப்பு,நேர்த்தியான அச்சு,கண்கவர் கருத்தாழமிக்க அட்டைப்படம் என பார்த்துப்பார்த்து செய்திருக்கின்றார்கள்.

தற்போது எழுத்துக்கு விடுப்பு விட்டிருக்கும் பெண்ணியா இத்தொகுதி மூலம் மீண்டும் முழு வீச்சுடன் கவிதைக்குள் நுழைய வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.

பொத்துவில் பைசாலின் ஆயிரத்தோராவது வேதனையின் காலை

“கவிதை என்றால் என்னவொன்று என்னிடம் கேட்டால் அது என்னவென்று எனக்குத்தெரியாது. கவிதை என்றால் என்ன என்பதை என்னிடம் கேட்காவிட்டால் கவிதை என்ன என்பது எனக்குத்தெரியும் ”
'கால்ட்ரிஜ்'

கவிதை  ஓர் அற்புத அனுப உணர்வு.விழிகளுக்கு வசியப்படாத நுண் உணர்வுகளைக்கண்டடைந்து ஆனந்திக்கும் இயல்பு கவிதைக்கு மட்டுமே வலாயப்பட்டது.தனி மனித வாழ்வில் புதைந்திருக்கும் துயரங்களையும் சமூகத்தின் ஆற்றொனா வலிகளையும் மனதின் அடியாழத்தில் இறாஞ்சி விட்டு துடிக்க வைக்கும் கலை கவிதைக்கே உண்டெனில் மிகையல்ல.

கவிதையை அதன் வேகத்தில் விட்டு விட வேண்டும். மலை முகட்டிலிருந்து விழும் அருவியின் ஆர்ப்பரிப்பை அடக்கினால் பரவசத்திற்கு பதில் அது மரண பயத்தையே தரும்.
கவிதை மன முகட்டிலிருந்து தாண்டவமாடும் தருணங்களில் கவிஞனின் அவஸ்தை சொற்களுக்குள் அடங்கா.அவன் நரம்புகளின் புடைப்பும்,மன அவசமும் கட்டுக்கடங்காமல் திமிறி வெடிக்கின்றது.

முயங்குதலின் உச்சத்தில் கண்களில் பீறிடும் இன்ப அதிர்வின் பரவச ஒளியை மொழிக்குள் இறக்கி வைக்கும் சிறந்த கவிதையில்  கவிஞன் அடைகின்றான்.

அத்தகைய சௌந்தர்ய தருணங்கள் பைசாலுக்கு  இயல்பாகவே வாய்த்திருக்கின்றது.பைசாலின் கவிதைகளின் உச்சமும்,மண்டியும் மனதின் கோடியில் சோகத்தை தூவுகின்றன.துயரம் இழப்பு இன்பத்திலும் ஒரு மின்னலைப்போல் வெட்டிச்செல்லும் வலி என  கவிதை முழுக்க மௌனமான தேம்பல் நம்மை வந்து கவ்விக்கொள்கின்றது.

என் விரிப்பு ஓய்ந்து பூரிக்கிறது
இன்னுமென்ன சொல்ல
வயல் வரம்புக்குள்
கோரி கட்டியிருக்கிறது வாழ்வின் மணி. (ஒரு கோப்பை மண்டி)

என்ற அங்கலாய்ப்பிலும்,

கத்தரித்தோட்ட இலைகளில் காது வைத்து
வாப்பாவின் வியர்வைத்துளிகளின்
ஓசை கேட்கும்.
(முட்டைக்கோதுக்கிராமமும் நான் எனும் கோடையும்)

என்ற ஏக்கத்திலும் பைசாலின் தனித்துவம் கவனம் பெறுகின்றது .வியர்வைத்துளிகளின் ஓசையைக்கேட்கும் அளவிற்கு அவரின் புலன் விழித்திருக்கின்றது.

பாட்டாளி மக்களின் வியர்வைத்துளிகளின் ஓசை திரண்டெழுந்தபோது ஆளும் வர்க்கம் ஒரு புரட்சியை எதிர் கொண்டது.அது சர்வதிகாரத்திற்கும் நிலபிரபுத்துவ அடிமைத்தனத்திற்கும் எதிரான சாவுமணியாக வியர்வைத்துளிகள் சக்தியுள்ளவையாக இருந்தன.

வறுமைமையோடு போராடும் ஒரு தொழிலாழியின் வியர்வையின் இதயத்துடிப்பை கவிஞன் என்ற சக்தியினால் துல்லியமாக உணரவும் பகிரவும் முடிகிறது.

வறுமையைக்கூட அற்;புதமாகவும் எள்ளலாகவும் சொல்லும் வல்லமை பைசாலுக்கு கைகூடியிருக்கின்றது.

என் தேசத்திற்குள் நீ திரி
அங்கு சன்னலுமில்லை கதவுமில்லை.
என்கிறபோது கவிதையின் அதரத்தில் வறுமையாய் ஒரு சிரிப்பு முகிழ்ந்து பின் உதிர்கிறது.

பைசாலின் கவிதைகளின் இன்னுமொரு முக்கிய அம்சம் அவர் பிரயோகிக்கும் மொழி.

மிக அந்தரங்கமானதும் ஆனால் துலாம்பரமானதுமான பயங்கரவாதத்தின் எத்தனங்களை தனக்கேயுரிய இயல்பு மொழியில் பைசால் பதிவு செய்திருக்கின்றார்.

பின்பு
என்னை ஏதும் கேள்
வீட்டில் துப்பாக்கியிருக்கும் இடத்தைச்சொல்கிறேன்.
உன்னைக்கண்டதும் வாலாட்டும்
நாய்க்குட்டியிருக்குமிடத்தை சொல்கிறேன். (நடுக்கம்)

அந்தரங்க நட்புடன் பழகியவர்கள் கையில் துப்பாக்கியுடன் பரிச்சயமானவர்களையே அழித்த வரலாறு நம்முடையது.கரைபடிந்த அவ்வரலாற்றுப்பக்கங்களை நிறைந்த வலியோடு புரட்டிப்பார்த்திருக்கின்றார் பைசால்.

காதலுக்குப்பின் என் அடையாளம்,பற்பசை உறை,உப்பேறிய ஆன்மா,நிறங்களின் சிறகுகள் பறவைகள், பலி,போன்ற கவிதைகளில் வெளிப்படும் அழுத்தமான அரசியல் வெறுமையும் அதன் பின்னணியில் இழையோடும் துரோகமும் ,துயரமும் நம்மை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்கின்றன.

மாடு கட்டச்சென்ற
என் ஊர் ஒன்பது சகோதரர்களை
அறுத்து பெரிய பள்ளிவாயலில் குவித்தார்கள்
கத்தியின் காலம் கத்தியின் காலம்!
(உப்பேறிய ஆன்மா)

பைசால் வேதனையுடன் கத்தியின் துப்பாக்கியின் துரோக காலத்தை உருப்போடுகின்றார்.

என் பத்தினியே ! நீயும் எரிந்திருக்கலாமே
சுhம்பல் மேட்டுக்கு
மகனையும் கூட்டிக்கொண்டு வந்திருப்பேன்
உன் சாம்பலில் கால் பட
கொடுப்பனவு இல்லையெங்களுக்கு  ( ஒருத்தி)

என்கிற போது அபகரிக்கப்பட்ட ஓர் அப்பாவித்தாயின் பிரிவின் ஆற்றாமையால் ஓப்பாரி இடுகின்றது பைசாலின் கவிதைகள்.
இத்தொகுதியில் மிகுதமான கவிதைகள் காதலின் திவ்யத்தையும்,அது கைகூடாத தருணங்களுக்கான ஏக்கத்தையும் சுட்டும்  கவிதைகளாகும்.

பைசால் தன் சம காலத்துக்கவிஞர்களை விட மொழியை இயல்பாக பிரயோகிக்க கற்றிருக்கின்றார்.

மருதாணிப்புள்ளிகள்
அமர்ந்திருக்கும் உன் கரங்களில்
ஈச்சம் பழம் ஏந்திவா
சுவைத்து விட்டு
பள்ளிவாசல் சென்று நான் தொழ ( ஈத் முபாறக் மியுசிக்கல் கார்ட்)

அன்றைய தினத்தில்
எந்தன் புது ஆடை மணத்ததில்லை
உன்னை விட,
எந்த மிட்டாயும் இனித்ததில்லை
உன் பார்வைகளை விட

என்கிற போது பாசத்தின் மீதான அபரித வெளிப்பாடு துலங்குகின்றது.

மௌனத்தை ஆவேசமாய் உடைக்கப்பிரயத்தனமெடுக்கின்றார்.பெண்னின் மௌனம் இலேசில் உடைபடும் கண்ணாடியல்ல என்கிறது அவர் கவிதை.


ஏன் உன் வாய்க்குள்
மௌனத்தை சுருட்டி வைத்திருக்கிறாய்

ஒரு பானை மௌனம் குடித்துப்பிறந்தவள்.

சாதாரண மொழிதான். எனினும் சில கவிதைகள்  கிழக்கு மண்ணிற்குறிய நாட்டாரியலை நினைவுபடுத்துகின்றது. கிழக்கு மண்ணிற்குறிய தனித்துவமான சொற்களை கையாளுவதன் மூலமாகவும் பைசால் கவிதையில் புதிய பாய்ச்சலை நிகழ்த்த முனைந்திருக்கின்றார்.

எனினும் ஏக தளத்தில் சில கவிதைகளை சொல்ல வருவதன் மூலமாக வாசிப்பின் சுவையை சில தருணங்களில் அறுபட வைக்கின்றார்.
கவிதைகளுக்கான பின் புலத்தில் கரிசனைகாட்டிய அளவிற்கு கவிதை வெளிப்பாட்டு முறையில் இன்னும் அக்கறை செலுத்த வேண்டும்.

90க்குபின் முகிழ்ந்த கிழக்கின் இளைய தலைமுறையினர் சோலைக்கிளியின் சாயலின்றி கவிதை எழுதுவதென்பது சாத்தியமற்றது என்பதை நிரூபிக்குமாற்போல் பைசாலின் சில கவிதைகளில் சோலைக்கிளியின் தாக்கம் இருக்கின்றது.

எனினும் பிற்காலத்தில் பைசால் எழுதிய கவிதைகளில் அவர் தனித்துவம்  தெரிகிறது.சுய பரிசோதனையாக தனித்துவமிக்கவிதைகளையும்  தந்திருக்கின்றார்.

நள்ளிரவில் சிறுவன் கொக்குகளை உலர்த்துகின்றான்,நடுக்கம்,இனிக்கும் இயற்கை,உப்பேறிய ஆன்மா, போன்ற கவிதைகளை இதற்கு உதாரணமாய் குறிப்பிடலாம்.

“இலக்கு என்பது எப்போதும் தொடுவானம் போல் கைகள் தொட முடியாத தொலைவில் தெரிகின்றது.ஆனால் கண்களுக்கு மிக நெருக்கமாக இருக்கின்றது.பெரும் கவிஞர்கள் இந்த இலக்கை தொட்டு தழுவியிருக்கின்றார்கள்.உச்சம் கண்டு கொண்டாடியிருக்கின்றார்கள்.”

என அனார் தொகுதியின் பிற்குறிப்பில் குறிப்பிடுவதற்கொப்ப ஓர் இலக்கை மையப்படுத்தி பைசாலின் கவிதைகள் முன்னேறுகின்றன. என்பது அவரின் பின் நாட்களிலான கவிதைகளின் கண் விடுத்தல் காட்டுகின்றது.

ஓட்டு மொத்த கவிதைகளிலும் தேங்கி நிற்கும் வலி,வேதனை,துயரத்தில் புதைந்துள்ள விசும்பல்,நம்மை ஒரு கணம் மௌனமாய் அதிர வைக்கின்றது.இதுதான் பைசால் என்ற வளரிளம் கவிஞனின் கவிதைகளின் பலம் எனில் மிகையல்ல.

11.10.06
இரவு 11.48

Wednesday 10 July 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்.

                                                                          43

 முஸ்லிம் குரல் பத்திரிகை பௌசர் அவர்களின் முயச்சியினால் வந்து கொண்டிருந்தது.

அப்போது இலங்கை அரசிற்கும் புலிகளுக்கு மிடையே சமாதான ஒப்பந்தம் நிகழ்ந்தது. இலங்கை அரசுடன் பேசிக் கோண்டே விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் மீதான மோசமான அடக்குமுறையை பிரயோகித்து வந்த காலம். 

முஸ்லிம் காங்கிரஸ் நோர்வேயுடன் சேர்ந்து கொண்டு விடுதலைப் புலிகளின் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையை மௌனத்துடன் பார்த்து கொண்டிருந்தது.

 முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் அடக்குமுறையை எதிர்து முஸ்லிம் காங்கிரஸால் பேச முடியவில்லை. அந்த காலகட்டதில் முஸ்லிம்களின் குரலாக முஸ்லிம் குரல் பத்திரிகை துணிச்சலுடன் பேசியது.

வாழைச்சேனை பிரதேசத்தில் சமாதான ஒப்பந்த காலகட்டத்தில் முஸ்லிம்களை கடத்தி எரித்து கொள்ளுமளவிற்கு நிலைமை இருந்தது.

இது குறித்து சென்ற பகுதிகளில் விரிவாக எழுதியிருக்கின்றேன். முஸ்லிம் குரல் இந்த அடக்குமுறையை எதிர்த்து துணிச்சலாக குரல் கொடுத்தது. ரஷ்மி. அப்துல் போன்றவர்களுடன் நானும் பத்திரிகைக்கு பங்களித்து வந்திருக்கிறேன்.

கொழும்பில் பத்திரிகைக் காரியாலயம் ஆறு பேருக்கு மேல் முழு நேர பணியாளர்கள், வாடகை, மாதந்த கொடுப்பனவு, அச்சக செலவு என மோசமான நெருக்கடிகளை சந்தித்து பத்திரிகை வந்து கொண்டிருந்தது.

 இரு தடவை என நினைக்கிறேன். பத்திரிகை அச்சிட்ட அச்சகத்திற்கு பணம் கொடுக்க நானும் எனது காரியாலய பணத்தினை கடனாக கொடுத்து உதவி இருக்கிறேன்

முஸ்லிம் குரலை நடத்த முடியாத நிதி நெருக்கடியால் அப்பத்திரிகை நின்று போனது.வார இதழாக வந்து  இரு வார இதழாக வந்து .. இறுதியில் வராமலே போனது.

 இலங்கை முஸ்லிம்களின் பத்திரிகை வரலாற்றில் அப்பத்திரிகைக்கு மறுக்க முடியாத முக்கியத்துவம் உண்டு.

இக்காலகட்டத்தில்தால் அரசிற்கும் புலிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் இடம் மறுக்கப்பட்டது முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லை என கருத்துக்கள் எழுந்தன.

முஸ்லிம்ககளுக்கான தனித்தரப்பை வலியுறுத்தியும் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்கிற அடிப்படையை முன்வைத்தும் கோட்பாட்டு ரிதியாக முஸ்லிம்களுக்குள் இருந்து ஒரு பத்திரிகை வருவது முக்கியம் எனக் கருதியதால் சுயம் பத்திரிகை வந்தது. இப்பத்திரிகையில் நான் அப்துல்,பௌசர், முஹ்சீன்,சிராஜ்.ஆத்மா, பாரிஸ்,ரஷ்மி ஆகியோர் இருந்தோம்.
பொரல்லையில் தமிழ் பத்திரிகை மட்டும்தான் கிடைக்கும்.நூல்கள் கிடைக்காது. 103 பஸ் எடுத்தால் மருதானைக்கு வந்து வாசிகசாலையை தேடலாம் என்ற உதிப்பில் ஒரு சனிக்கிழமை மாலை மருதானைக்கு வந்தேன். 

கொடகே புத்தக நிலையம் என்ற பெயர் பலகையைக்கண்டு மலைத்து உள்ளே சென்றேன்.அனைத்தும் சிங்கள மொழி மூல நூல்கள்.இன்று கொடகே புக் எம்போரியம் சிறந்த தமிழ் நூல்களை தெரிவு செய்து வருடாந்தம் விருது வழங்குவதுடன்,தமிழ் மொழியிலான நூல்களின் தொகுதியையும் விற்பனைக்கு வைத்துள்ளது.

இந்த விருது தெரிவிலும் இலக்கியப்பெருச்சாளிகளின் கை வரிசை நிகழ்வதாக குற்றச்சாட்டும் இருக்கின்றது.

நேரே பொலிஸ் நிலையப் பக்கமாக நடந்து வந்தபோது சிலர் தீவிரமாகவே வாசிப்பில் இருப்பதைக்கண்டு அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.ஆர்வ மேலீட்டால் உள்ளே நுழைந்தேன்.

சுற்றும் முற்றும் பார்க்கவில்லை.யாரும் புத்தகம் படிப்பதைக்கண்டால் போதும் வாசிப்பவனின் மனம் பரபரக்க ஆரம்பித்து விடும்.எதிரே இருக்கும் முகம் தெரியாத சின்னக்குழந்தையுடன் அதன் அம்மாவுக்குத்தெரியாமல் கண்களால்,கைகளால் ஜாடைகாட்டி சிரிப்பதைப்போல் மனம் இறக்கை கட்ட ஆரம்பித்துவிடும்.
அவ்வாறான மன நிலைதான் அந்த பத்திரிகை விரித்துப்பார்க்கும் இடத்தைக்கண்டதும் ஏற்பட்டது.

பத்திரிகைகள் அதை வாசிக்கும் மனிதர்கள் இவர்களை நோட்டமிட்டுக்கொண்டே புத்தக அலுமாரிகள் உள்ளனவா என்று ஆராய்;ந்தேன்.ஒன்றுமில்லை. எல்லோரும் தீவிரமாக வாசிப்பதில் இருந்தார்கள் அதுவும் ஆங்கிலப்பத்திரிகை. என்னை வியப்புடனும் ஆச்சரியத்துடனும் சில விழிகள் பார்த்து விட்டு வாசிப்பதில் ஆர்வமாய் இருந்தன.

முஸ்லிம்கள் செறிந்து வாழும் மருதானை வாசிகசாலையில் தமிழ் பத்திரிகைக்கு தடையா? பத்திரிகைக்கு செய்தி கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் புலனாய்வு செய்யும் பணியில் இறங்கினேன். ஒருவரை அனுகி இங்க  தமிழ் பத்திரிகை இல்லையா? என்றேன். என்னவோ பியர்,பன்றி இறைச்சியைக்கேட்டு விட்ட மகா குற்றவாளியைப்பார்ப்பதைப்போல் என்னை உச்சி முதல் உள்ளங்கால் வரை அதிசயமாகப்பார்த்தார்.அவர் இதழோரம் எள்ளல் துளி எட்டி நின்று வேடிக்கைகாட்டியது.

என்னை நோக்கி காத்திரமாக ஆனால் மிக இரகசியமாக கத்தினார். மொழி முக்கியமல்ல ‘குதிரையின்ர பெயரை சொல்லுங்க கட்டிடுவோம்’ என்றார்.அப்போதுதான் மேலே திரையில் குதிரைகள் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

பந்தயக்குதிரை நிலையத்திற்கு நுழைந்திருக்கின்றேன்  என்பதை நினைக்கையில் மிகுந்த அவமானமாய் இருந்தது. அவர்கள் வாசிக்கவில்லை தேடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதும் புரிந்தது.நானே என் நிலையை எண்ணி சிரித்துக்கொண்டேன்.

பிற்காலங்களில் குதிரைப்பந்தய கசினோக்களை கடந்து செல்கையில் இதழோரம் முகிழும் புன்னகையை கட்டுப்படுத்த முடிவதில்லை. 2000ம்ஆண்டுக்குப்பின் கொழும்பில் நல்ல புத்தகங்களை படித்துப்பயன் பெற்றேன்.என்பது வேறு விடயம்.

நான் எழுதத்தொடங்கி கொஞ்சம் பெயர் அடிபடத்தொடங்கிய காலம்.சொந்தக்கிராமத்தில் அறிமுகம் இல்லை.படித்ததும் வெளியூரில்.படிப்பு முடிந்து வேலையும் வெளியூரில். பெயர் மட்டும்தான் சனங்களுக்குப் பரிச்சயம். அனேகருக்கு ஆளைத்தெரியாது.

இதனை சாதகமாகப் பயன்படுத்தியவர்களும் உண்டு. வில்லங்கமான எழுத்துக்கள் பிரசுரமாகும் போது மட்டும். 

அவர்கள் கழன்றுவிடுவார்கள்.புலிகள் உச்சத்தில் கோலோச்சிய காலத்தில் புலிகளுக்கெதிரான பதிவுகளை புனைப்பெயரில் அன்றி சொந்தப் பெயரிலேயே எழுதியதால் என் எழுத்துக்கு சொந்தம் கொண்டாடிய பலர் ‘கழுவுற நீருல நழுவுற மீனா’கிப்போனார்கள்.


தொடரும்......


  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...