Saturday 19 October 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                                                         49

ஒரு மாலைப்பொழுது வெள்ளவத்தை ரோயல் தனியார் வைத்தியசாலை வீதியில் நடந்து கொண்டிருந்தேன். அன்றைய தினம் நான் பணி புரிந்த அலுவலகத்தின் மூலம் கண் சத்திர சிகிச்சை இலவச முகாம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ரோயலில்தான் தியோட்டர் ஏற்பாடு. அந்தப்பணிகளை முடித்து விட்டு திரும்பிய போதுதான் மு.பொன்னம்பலத்தை சந்தித்தேன். எனது நினைந்தழுதல் கதைத்தொகுதிக்கு ஆழமான அழகான நடுநிலையான விமர்சனத்தை தந்தவர். அவரின் முன்னீட்டுடன் அது வெளி வந்தது. 

அந்நாட்களில் என்னை மேலும் சில நல்ல கதைகள் எழுத உற்சாகப்படுத்தியது. முன்னீட்டைப் பெற்றுக்கொள்ள வெள்ளவத்தையில் இருக்கும் அவர் வீட்டிற்கு அடிக்கடி சென்றிருக்கின்றேன்.

வீட்டிலுள்ளவர்களிடம் என்னை பாசமாக அறிமுகப்படுத்திய மனிதர். கள்ளம் கபடமின்றி பழகிக்கொண்டிருந்தவர்.

வேட்டைக்குப்பின் படித்த கடுப்பில் இருந்ததை நான் அறியேன்.
நானே முந்திக்கொண்டு வணக்கம் ஐயா என்றேன்.
பதிலுக்கு வணக்கம் செத்தழிந்து வந்தது.

பின் காட்டமாக என்னை நோக்கி சத்தமிட்டார்.
‘நீர் எங்கட போராட்டத்த சாபமிட்டிருக்கிறீர்,
எங்கள கொச்சப்படுத்தியுள்ளீர். இதன நீர் எழுதியிருக்ககூடாது. விடுதலைப்போராட்டம் சாகாது என்றார். ‘

நான் ஆடிப்போய்விட்டேன். நெஞ்சில் பூத்து நின்ற பூஞ்செடி அனல் காற்றில் கருகி மணப்பதை என் நாசியில் உணர்ந்தேன். சிகரத்தின் உச்சியில் இருந்த மு.பொ. திடீரென என் காலடியில் சிதறி விழுந்து நொறுங்கிப்போவதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவர் சாபமிட்டதாய் என்னை சபித்த அந்தக்கவிதையின் வரிகள் மீண்டும் ‘நியோன் விளக்குகளாய் ‘ கண்ணிலும் எண்ணத்திலும் மின்னத்தொடங்கின. இதில் எங்கே இருக்கிறது தவறு.என் இனத்திற்கு துரோகம் செய்தவர்களை என்னால் எதிர்க்க முடியவில்லை.அடிக்க முடியவில்லை.குறைந்த பட்சம் மனம் வெதும்பி என் ஆதங்கத்தை சொல்வுமா இயலாது?

இதுதான் மு.பொவின் நெஞ்சில் தீயை மூட்டிய கவிதை..

சாபம்.

காற்றின் துவர்ப்பு / நுணி நாவில் கரைகிறது./ விழியழுத உவரலைகள் / நெஞ்சின் மேல் வாரியடித்தன பெருங்குரலாய்.
என்ன செய்தீர் வீரர்காள் என்னினத்தானை / அத்தாங்கு கொண்டள்ளி / சுடு மணலில் கொட்டிய மீன்களென / வெடி குண்டு கொண்டல்லோ / குழியிட்டு மூட வைத்தீர்.
கடலின் அந்தரத்தில் / பிரலாபித்ததெம் ஆத்மா. / சாவெனும் தீ மூட்டி எம்முயிரை கொன்றொழித்தீர் வீரர்காள் / கொன்றொழித்தீர்.

சக மொழி பேசுவோனை / சக தேசத்தானை/ ஏனங்கு குறி வைத்தீர்?

வரி தந்தோம் (தருகிறோம்) / நீவீர் பயந்தொதுங்கி வந்த போது
இடம் தந்தோம். / உயிர் தந்து விடுதலைக்காய் உருக்குலைந்தோம் / எமக்கென நீர் எது தந்தீர் வீரர்காள்?

இதோ / அநீதி இழைக்கப்பட்ட என்னினத்தானின் சாபம்/ உமை நோக்கி எழுகிறது./ நிச்சயம் ஒர் நாள்  அது / உம் விடுதலையை பொசுக்கும்.

2002 ம்ஆண்டு எழுதிய கவிதை யாத்ராவில் பிரசுரம் பெற்றதாக ஞாபகம். தொகுப்பு 2004 ஆகஸ்ட்டில் வெளிவந்தது.

கவிதைத்தொகுதிக்கான விமர்சனங்கள் பரவலாக வெகுஜன  பத்தரிகைகள் மற்றும் இலக்கிய சஞ்சிகைகளில் எதிரும் புதிருமாக வெளி வந்து கொண்டிருந்தன.2005 ஆகஸ்ட் 14 தினக்குரலில் யதீந்திரா என்பவர் ‘ எதிர்ப்புக்கவிதைகள் தொடர்பாக ஓர் அரசியல் புரிதல்’ அறபாத்தின் ‘வேட்டைக்குப்பின் கவிதைத்தொகுதிப்பை முன்னிறுத்தி என்ற தலைப்பில் அரைப்பக்க கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

அதிலிருந்து சில பத்திகள்…

1980க்குப்பின்னர் முக்கியம் பெற்ற சேரன் போன்ற கவிஞர்களும் எதிர்ப்பு இலக்கிய கர்த்தாக்களாக கொண்டாடப்படுகின்றனர். இந்த அடிப்படையில்தான் அறபாத்தின் புலி எதிர்ப்புக்கவிதைகளும் இலகுவாக எதிர்ப்புக்கவிதைகள் என்ற அந்தஸ்தைப்பெற்றுவிடுகின்றன. 

இனி அறபாத்தின் தொகுப்பிற்கு வருவோம்.அறபாத் ஒரு முஸ்லிம சமூகத்தைச்சேர்ந்தவர் என்பதை மனதில் இருத்தியே இந்த தொகுப்பு பற்றிய எனது மனப்பதிவுகளை வெளிப்படுத்த முயல்கிறேன்.

இந்த தொகுப்பில் 37 கவிதைகள் உள்ளன. இரண்டு கவிதைகளை தவிர மற்றைய அனைத்தும் தமிழ் மேலாதிக்கத்தால் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட நெருக்குவாரங்களை சொல்வதாக புனையப்பட்டுள்ளது. ஆனால் அறபாத் தனது தொகுதியை புலிகளால்  ஹீதாக்கப்பட்ட புலிகளுக்கு என சமர்ப்பணம் செய்திருப்பதன் மூலம் அறபாத் பூடகமான ஒரு அரசியலை சொல்லி விட்டார்.

விடுதலைப்புலிகளை முஸ்லிம் சமூகத்தின் பிரதான எதிரிகளாக சித்திரித்து விடுகிறார்………இப்படியே புலிகளுக்கு எதிராக எழுத வேண்டும் என்ற அறபாத்தின் நீண்ட நாள் அடங்கா வெறி ஓரளவு வேட்டைக்குப்பின் மூலம் தணிந்திருக்க கூடும்.

இன்னொரு இனத்தின் பல தியாகங்களால் பரிணமித்த விடுதலை இயக்கத்தை கொச்சைப்படுத்த முயலும்போது ஒரு கவிஞனின் மனசாட்சி இறந்து விட்டது என்பதை அறபாத் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த தொகுப்பிலுள்ள கவிதைகளின் பொது நிலை அரசியல் விடுதலைப்புலிகளை முஸ்லிம் மக்களுக்கு எதிரான அமைப்பு எனும் கருத்து நிலையை முன்னிறுத்தும் நோக்கிலானதாகும்.என்னளவில் நான் இந்த தொகுப்பை முற்றிலுமாக நிராகரிக்கின்றேன்.
இப்படி அந்த எதிர்ப்பு நீண்டு செல்கின்றது.


யதீந்திரா போன்ற புலி அபிமானிகளின் பார்வையில் புலிகள் நல்லவர்கள்.அவர்கள் மனம் நோக ஒரு ‘அ’ க்கூட எழுதிவிடக்கூடாது.மற்ற இனத்தின் மீது என்னதான் அத்துமீறல் செய்தாலும் அதனை வாய் பொத்தி கைகட்டி பார்த்திருக்க வேண்டும்.இதனை மீறுபவர்கள் புலி எதிர்ப்பாளர்கள். தேசத்துரோகிகள் .

யதீந்திரா போன்றவர்களிடம் நான் கேட்பது ஒன்றுதான் 30 வருட போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு புலிகள் பெற்றுக்கொடுத்த தீர்வு என்ன?

என்னிடம் இருக்கும் மனப்பதிவு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டபின்பும், மன நோயாளிகாக மாற்றப்பட்ட பின்பும்,அங்கவீனர்களாக ஆக்கப்பட்டபின்பும், சொத்தழிவுகள் ஏற்பட்ட பின்பும், மக்கள் அலைந்துழந்து நிம்மதியிழந்த பின்பும் நீங்கள் பெற்றுக்கொண்டது ஒரு முன்னால் முதலமைச்சர், ஒரு அரை அமைச்சர்.

பேரினவாத்தின் ஓங்கிய கரங்களை மடக்கிவிடமுடியாத இவர்களால் இன்னும் தமிழ் மக்களின் பிரகாசம் ஜொலிக்கின்றது என்ற சிலரின் கனவுகள் பலிக்க நானும் யதீந்திரா போன்றவர்களுடன் இணைந்து பிரார்த்திக்கின்றேன்.

ஊஞ்சல் இன்னும் ஆடும்...

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...