Saturday 21 November 2015

மான்புறும் மாற்றுத்திறனாளிகள்

ஊனமுற்றவர்கள் என் பதத்தை விட  “மாற்றுத் திறனாளிகள்“  என் சொல் மிகப்பொருத்தமானது. சில சமயங்களில் அவர்களின் “செயல்திறன்“ பிரமிக்க வைக்கிறது.சாதாரண மனிதர்கள் செய்வதைப் போலவே விரைவாகவும் பிழையின்றியும் அவர்கள் கருமங்கள் ஆற்றும் போது நம்மை ஆச்சர்யப்படுத்த வைக்கிறது.

நம்மை சுற்றிலும் தினந்தோறும் பல மாற்றுத் திறனாளிகளை கடந்துதான் போகிறோம். அவர்களை கிண்டலாகவும் கேலியாகவும் பார்த்த சமூகத்தில் இன்று மாற்றம் ஏறபட்டுள்ளது. ஆனாலும் திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் மாற்றுத் திறனாளிகளின் குறைபாட்டை கேலி ஆக்குகின்றன. மாற்றுத் திறனாளிகளாக பிறந்தது சாபம் என்ற எண்ணம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது குடும்பத்தாரின் கடமை மட்டுமல்ல.சமூகம் மற்றும் அரசாங்கத்தின் கடமையும் கூட. 

"மாற்றுத்திறனாளி" என்பவர் உடலிலோ அல்லது மனதிலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக அவரால் சில செயல்களை செய்யமுடியாமல் போய்விடுகிறது இதனால்  நாம் மாற்றுத்திறனாளி என அழைக்கிறோம். அது பின்வரும் வழிகளில் வகைப்படுத்தப்படுகிறது:
·         மரபனுவினால் பிறப்பிலேயே ஏற்படும் மாற்றங்கள்
·         தாயின் கருவில் இருக்கும் பொழுது அல்லது பிறந்த பின்னர் ஏற்படும் நோய்கள் நோயினாலோ அல்லது விபத்தினாலோ ஏற்படுத்திக்கொண்டது

தெரியாத காரணங்களால் குறைபாடுகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்
உடல் ஊனம்,புலன் குறைபாடு, பார்வைக் குறைபாடு, கேள்விக் குறைபாடு,நுகர்ச்சி மற்றும் சுவைசார் குறைபாடு,மனவளர்ச்சிக் குறைபாடு, உளப்பிறழ்வுக் குறைபாடு

மனவளர்ச்சிக் குறையை பலரும் மன நோய் எனத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் மனவளர்ச்சிக் குறைபாடு வேறு; மன நோய் வேறு. அடையத்தவறிய மனதின் நிலையே மனவளர்ச்சிக் குறை என்பது உளவியலாளர்களின் கருத்தாகும் உளப்பிறழ்ச்சி அல்லது உள நோய் அல்லது மன நோய் என்பது தனிப்பட்ட மனிதரில் உண்டாவதும் வழமையான பண்பாட்டு வளர்ச்சியில் எதிர்பார்க்கப்படாத துன்பத்தை அல்லது இயலாமையை உண்டாக்கும் உளவியல் அல்லது நடத்தைக் கோலம் ஆகும். உளப் பிறழ்ச்சியை அடையாளம் காணலும் அது தொடர்பான புரிதலும் காலத்துக்குக் காலமும் பண்பாட்டுக்குப் பண்பாடும் மாற்றமடைந்து வந்திருக்கிறது.

உடலளவில் பலவீனமாக இருந்தாலும் மனதளவில் தைரியமாக இருப்பவர்கள் தான் மாற்றுத் திறனாளிகள். அனைத்து துறைகளிலும் இவர்கள் திறமையை வெளிக்காட்டுகின்றனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடைக்கின்றன. உடல் குறைபாடு என்ற ஒரே காரணத்தை வைத்து அவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்க இந்த சமூகம் மறுக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் டிச. 3ம்திகதி சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 உலக மக்கள் சனத்தொகையில் 15 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகள். இதில் 80 சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாகவும் உள்ளனர். வளரும் நாடுகளில் உள்ள மாற்றுத் திறனாளியாக உள்ள குழந்தைகளில் 90 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்வதில்லை என "யுனெஸ்கோ' அமைப்பு தெரிவிக்கிறது

சங்கங்களுக்கு பெயரிடும் போது விழிப்புலனற்றோர் ஊனமுற்றோர் என்ற எதிர்மறை செற்பதங்களை பிரயோகிக்காது சார்பான சொற்களையே பயன்படுத்த வேண்டும். விசேடதேவைக்குட்பட்டோர் என்றோ மாற்றுத்திறனாளிகள் என்றோ மாற்றுவலுவுடையோர் என்றோ இவ்அமைப்புகளுக்குப்  பெயரிடுவது பொருத்தமானது. இதனை அரச நிர்வாகமும் ஏனைய அமைப்புகளும் கவனத்திற்கொள்ளல் வேண்டும்.
பொது கட்டடங்களையும் வீதிகளையும் அமைக்கும் 

போது மாற்றுத்திறனாளிகள் எவரது உதவியுமின்றி நடமாடத்தக்க வகையில் அமைக்கப்படுதல் வேண்டும். பொதுகட்டடங்களுக்கு அனுமதி வழங்குவோர் இதனை கருத்தில் கொள்ளுதல் அவசியம். வீதிகளில் விழிப்புலனற்றோர் கடக்கும் சந்தர்ப்பத்தில் ஒலி சமிக்கைகள் மூலம் அவர்களுக்கு உதவும் வழிமுறை. வீதி சட்டத்தில் உள்ளக்கப்படவேண்டும்;.

   
இவற்றை எல்லாம் அரசும் சமூகமும் கவனிக்காதவிடத்து அதற்காக குரல் எழுப்புவதற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ரீதியாக ஒன்றுபட்டு அரசியலில் ஈடுபடுதல் வேண்டும். உள்ளுராட்சி அமைப்புகளிலும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் இவர்கள் பங்குபற்ற வேண்டும். 

இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் இனிவரும் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளையும் வேட்பாளர்களாக நிறுத்துதல் வேண்டும். அரசியல் ஆளுகையில் இவர்களது குரல் அவர்களுக்காக ஒலிக்க வேண்டுமாயின் இது அவசியம். இது தொடர்பாக இவ் அமைப்பினர் கட்சிகளுக்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.

மாற்று திறனாளிகள் தமது அமைப்பின் ஏற்பாட்டில் தற்போதைய தகவல் யுகத்தில் இணையத்தளங்களை உருவாக்கி தமது தேவைகளை சர்வதேசமயப்படுத்தமுடியும். குரல் வழியான சமிக்கைகளை விளங்கும் கணணியை பயிலுதல் இன்றியமையாதது. 

இன்று சர்வதேசத்தில் பயன்படுத்தப்படுவதுபோல் இவர்களுக்கு தேவையான நவீன தொழில்நுட்ப கருவிகளை பெறுவதற்கு முக்கியமாக அரச சார்பற்ற தொண்டார்வு நிறுவனங்கள் உதவ முன்வரவேண்டும். உதாரணமாக நவீன ஒலிப்பதிவு கருவிகளை வழங்கி விழிப்புலனற்றோருக்கு உதவ முடியும்.

மாற்றுத் திறனாளிகளின் பங்களிப்பை ஏற்காமல் நம்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிவிடலாம் என நினைப்பது கனவாகவே முடியும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சமூகத்தின் இரங்கல் பார்வையை பெற்றுக்கொண்டு மாற்றுத் திறனாளிகள் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு.

நாட்டின் முன்னேற்றத்தில் அவர்களின் நியாயமான பங்கேற்பை ஏற்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு சலுகை அளிக்காவிட்டாலும் மாற்றுத் திறனாளிகள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையையும் பறிக்கக் கூடாது.இதுவே வளர்ச்சியடைந்த நாடுகளின் முன்னற்றத்திற்கு ஆரோக்கியமான செயற்பாடாகும்.


கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் 2014ம்ஆண்டு வெளியிடப்பட்ட நங்கூரம் சஞ்சிகைக்கு தொகுத்து எழுதப்பட்டது.





No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...