Thursday, 2 August 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


தொடர் - 20

நிச்சயம் புஹாரி காக்காவை சுட்டுக்கொன்றிருக்கமாட்டார். ஒரு நாள் எங்கள் கடைக்கு வந்த புஹாரி உம்மாவிடம் 'ராத்தா அந்தா மேய்ற சாவலைத்தாவன்' என்றார்.

உம்மாவும் சரி பிடிச்சிக்கொண்டு போ என்றார்.கொண்டையில் சிவப்புப்பூவில் ஓய்யாரமாக இரை தேடிக்கொண்டிருந்த பாணிச்சேவலை நோக்கி மெசின் கண்ணை இயக்கினார். ஒரு  கோழிக்கு இருப்பத்தைந்து குண்டுகள் செலவழித்தும் அவரால் அதைப்பிடிக்கவே முடியவில்லை.சேவல் இவரை விட திறமையாக கெரில்லாப்பயிற்சி எடுத்திருக்க வேண்டும்.நாங்கள்   பெருநாளைக்கு அறுத்துச்சமைக்கும் வரை அது பல கோழிகளுக்கு முட்டை வழங்கிக்கொண்டிருந்தது சுவாரஸ்யமான கதை

.  இவர் எப்படி ஆமியைச்சுடுவார் என்பது எனது நீண்ட கால ஐயம்.நிச்சயம் இவர் காக்காவை அடித்துத்தான் கொன்றிருப்பார்.அல்லது கொல்லும்படி கட்டளையிட்டிருப்பார்.(இவர் வீட்டிலிருக்கும்போது பொறி வெடியில் சிக்கவைத்து சிதறடித்தவர் யாரென இன்று வரைப்புலப்படவில்லை,வினை வினைத்தவன் திணை அறுப்பதில்லை என்பதற்கு கண் கண்ட சாட்சி அவரின் சிதறிக்கிடந்த ஜனாசா)

நாங்கள் பொத்தானை புனானை காடுகளில் காக்காவின் ஜனாசாவைத் தேடினோம்.காடு மறைத்து வைத்துள்ள சடலத்தை நாட்கணக்கில் தேடினோம். குளிப்பாட்டாமல்,கபனிடாமல்,தொழுவிக்காமல் அடக்கம் செய்யப்பட்;ட அவனை இந்தக்காடு மறைத்து வைத்துள்ளதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. முதன் முதலாக காட்டின் மேல் உள்ள வசீகரம் அற்றுப்போனது இப்படித்தான். 

இன்றும் பொத்தானை ஆற்றுக்குப்போகும் போதெல்லாம் தேடிப்பார்க்க மனம் அவாவுகின்றது. கேட்பாரற்று கிடக்கும் மனித எலும்புக்கூடுகளுக்குள் எனது காக்கா இருப்பானோ? எனினும் பறவைகளின் மிருகங்களின் ஒலிகள் காக்காவின் ஒப்பாரியாகவும் வாழ்தலுக்கான இறைஞ்சலாகவும் என்னை அலைகழித்துக்கொண்டே இருக்கின்றது.

ஆயுதக்குழுக்களின் விசாரணை என்றவுடன் இன்னொன்றும் சட்டென்று நினைவில் ஆடுகின்றது.

1988 இன் கடைசிப்பகுதி என நினைக்கின்றேன். நான் கிழக்கிழங்கை அறபுக்கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த காலம். கல்லூரி விடுமுறையில் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று அரட்டை அடிப்பது வழக்கம். இப்போது அரட்டை மன்னர்களை கண்டால் ஓடி ஒளிவது வழக்கம்.
அன்றும் அப்படித்தான் காத்தான்குடி நண்பர் அபுல் ஹசனின் ஊரான காங்கயனோடைக்கு போவதென்று தீர்மானித்தோம்

.காங்கயனோடை ஆறையம்பதிக்கு பக்கத்தில் என்பதால் அடிக்கடி இரு இனங்களுக்கும் முறுகல் நிலை ஏற்படுவதுண்டு.அதைத்தூபம் போட்டு வளர்ப்பவர்கள் ஆயுதக்குழுக்கள்.

 என்னுடன் ஏறாவூர் தோழர்களும் இருந்தனர். விடுமுறை விட்டதும் நேரே ஊருக்குப்போகவில்லை காத்தான்குடியில் இறங்கி பிரதான வீதியில் இருந்து காங்கயனோடை நோக்கி நடந்தோம்.

தோழர் அபுல் ஹசனின் வீட்டுக்கு 200 மீற்றர் இருக்கும்.வழியில் ஒரு ஆயுதக்குழுவின் முகாமிருந்ததை நாம் கவனிக்கவில்லை.தோழர்களும் சொல்லவில்லை.

முஸ்லிம்களிடம் தணகிப்பார்க்கும் வல்லமை கொண்ட ஜனநாயக்குழுக்கள் ஆயுதங்களுடன் நடமாடிய காலம். ஆட்கடத்தல், விசாரணை,கப்பம்,சித்திரவதை எல்லாம் ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு முஸ்லிம்களிடம் செயற்படுத்திய காலம்.

நாங்கள் முகாமை நெருங்கியதும் ஒரு அண்ணர் துப்பாக்கியுடன் ஓடி வந்தார்.
'எங்க போறியள்?'
'எங்கட வூட்ட' தோழர் அபுல்ஹசன் சொன்னார்.

அவர் எப்போதும் ஹாஸ்யமானவர்.அவர் பதிலிலும் அது இழையோடியதை நான் கவனித்தேன்.மாணவர் மன்றங்களில் அவர் பாடுவது குறித்த பாடகனை தற்கொலைக்கு தூண்டுவதாய் இருக்கும்.நாங்கள் அப்படித்தான் அவருக்கு கமென்ட் அடிப்போம்.பிரியாவிடைப்பாட்டில் கூட சோகமில்லாமல் சிரித்துக்கொண்டு பாட அவரால் மட்டுமே சாத்தியம் என்றால் நம்புங்கள்.

'வூட்ட போரண்டா இதால  ஏன் வந்த '?
அண்ணர்தான் மறுபடியும்.
'இதான எங்கட ரோட்டு'
மறுபடியும் அபுல்ஹசன் 
உங்களயெல்லாம் விசாரிக்க வேனும் என்று விட்டு நடங்க உள்ளுக்க என்றார்.

இலோசாக குலை நடுக்கம் ஆரம்பித்தாகிவிட்டது. வீட்டுக்குத்தெரியாமல் விடுமுறையை காத்தான்குடியில் கழிக்க திட்டமிட்டதை நினைக்கையில் மனம் பதைக்கத் தொடங்கியது. ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். 

சுவரில் இரத்தக்கரைகள் படிந்திருந்தன. மனிதக்  கவிச்சியின் துர்நாற்றத்தை நாசி நிறைக்கத் தொடங்கியது. நாங்கள் ஏழுபேர்.அவர்கள் ஒரு ஆறுபேர் இருக்கும் ஆளுக்கொரு துவக்கு.துருவித்துருவி விசாரித்தார்கள். கல்லூரியின் அடையாள அட்டையை காட்டினோம்.நீங்களெல்லாம் ஜிகாத் படை எங்கள நோட்டமிட வந்திருக்கியள் என்றார்கள் முடிவில்.எப்படியெல்லாம் துல்லியமாக மோப்பம் பிடிக்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது நமது நாட்டின் கொலைக்குழுக்களில் பெருமையாக இருந்தது.

'நீதானே அட்டாளைச்சேனையில் நேற்றிரவு நோட்டீஸ் ஒட்டினாய் ? எனை நோக்கி ஒருவன் சுண்டு விரலை நீட்டினான்.

மாலை ஐந்தரைக்கெல்லாம் எங்கள் விடுதியின் இரும்புக்கதவுகள் மூடப்படுவதும் அது மறுநாள் ஏழுரைக்குத்தான் மீளவும் திறக்கப்படுவதையும் தெரிந்தவர்களுக்கு அவன் கேள்வி சிரிப்பைத்தான் சிந்த வைக்கும். ஆனாலும் சிரிக்கவில்லை.சம்சுத்தீன் மௌலானாவின் பார்வைக்குத்தப்பி விடுதிக்குள் இருக்கும் ஒரு சிற்றெறும்பும் முன் கதவால் நழுவ முடியாது என்ற இலட்சணத்தில் நான் நோட்டீஸ் ஒட்டியது என்றால் சும்மாவா சிரிப்பு வரும். 
'இல்லை அண்ண நாங்க யாரும் அப்பிடியானவங்க இல்ல.நாங்க படிக்கிற புள்ளயள்.'

எங்கள் வார்த்தைகள் எங்களுக்கே அன்னியமாகின.சற்றுமுன் போட்ட அட்டகாசமான கூச்சல்களும் கேலியும் அடங்கி உயிர்பிச்சைக்கு மன்றாடும் வார்த்தைகளாக அவை இறைஞ்சுதலாக ஒலித்தன.யாசகத்தனமிக்க வார்த்தைகளில் முழு ஜீவனும் காலடியில் ஒடுங்கி சிறுத்தது.

'அப்ப நீங்க ஓற்றர் படை இல்ல.எல்லாரும் முஸ்லிம் ஆக்கல் என்பதை நாங்க எப்புடி நம்புற காசக்குடுத்தா இதப்போல பல ஐடின்டிகார்ட் எடுக்க ஏலும்'  
ஒருவன் குண்டை தூக்கி தலையில் போட்டான். அது வெடித்துச்சிதற உடல் பயத்தில் வெடவெடத்தது.

'இல்ல அண்ண நாங்க முஸ்லிம் ஆக்கள்தான்.' நான் நடுங்கியபடி கூவினேன்.மேலண்ணத்தில் நாவு ஒட்டிக்கொண்டு அடம்பிடித்தது.வார்த்தைகள் நடுக்கமுடன் வெளிப்பட்டன.

அவன் இதழின் கோடியில் கேலியாய் இளநகை பூத்து மறைந்தது.
'அப்ப சுன்னத்து வச்சிரிக்கா என்டு பார்க்கவேனும்.'
நாங்கள் ஆளையால் மிரட்சியுடன் பார்த்தபடி நின்றோம்.

நாசர் இஞ்ச வா தலைவனின் அழைப்புக்கு வாலைச்சுருட்டிக்கொண்டு காலை நக்கும் நாய்க்குட்டிபோல் நாசர் வந்து அவன் முன் பவ்யமாக நின்றான்.
அவன் கையிலும் ஏ.கே 47 இருந்தது.சுவிங்கத்தை மென்றபடி இருந்தான்.
'இவங்கள செக் பண்ணிப்போட்டு அனுப்பு' தலைவனின் வார்த்தைக்கு மறுப்பேது ? 

'டேய் இஞ்சால வாங்கடா' என்ற சப்தம் ஈயத்தைக்காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது.அவர்கள் தேவல போலிருந்தது.நம்மடவனுக்கு கொம்பு முளைச்சா எப்படி இருக்கும் என்பதற்கு அவன் 'திருக்கவாலன்' நல்ல உதாரணம் மச்சான் என்று பிற்காலத்தில் நாங்கள் நினைத்துப்பார்த்து சிரிப்பதுண்டு.

நாசர் எங்கட சோனக அடையாளச் சின்னத்தை உறுதிப்படுத்தி தலைவனிடம் நல்ல பெயர் வாங்கிக்கொண்டான். பின்னர் எங்களை நோக்கி ஓடுங்கடா இனி இஞ்சாலப்பக்கம் தல வச்சிம் படுக்கப்படாது என்றான். அவமானத்தில் வெட்கித் தலைகுணிந்தபடி வெளியேறினோம். ஏதோ ஒன்றை இழந்து விட்ட அவசத்தில் மனம் பதகளித்துக் கொண்டிருந்தது.


எங்கள் தேசம் : 227                                                                        ஊஞ்சல் இன்னும் ஆடும்..

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.