Tuesday, 8 May 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


                                                               தொடர்- 13

ஆல மரங்களையும் விழுதுகளையும் கண்டவுடன் இலேசான அச்சம் பரவத்தொடங்கிற்று. நான் படித்துக்கொண்டிருந்த ஓட்டமாவடி முஸ்லிம் மஹா வித்தியாலயத்திற்கு முன் (தற்போது பாதிமா பாளிகா பெண்கள் பாடசாலை) பெரியதொரு ஆல மரம். அனீபா காக்காவின் ஐஸ் பழ சைக்கிள் இடைவேளையில் தரித்து நிற்க தோதான இடம்.அனீபாக்கா ஏறாவூரிலிருந்து ஐஸ்பழம் விற்க சைக்கிளில் வந்து போவார். சில மூத்தம்மாக்களின் கச்சான்,வடை வியாபாரமும் ஆலமரத்தின் கீழ் மும்முரமாய் இருக்கும்.

இன்றைய மூத்தம்மாக்கள் கச்சான் வடை விற்பதையெல்லாம் அறியமாட்டார்கள்.பேரப்பிள்ளைகளின் பாதுகாவலர்,பிள்ளைகளின் வீடுகளில் காவல் பார்க்கும் இலவச காவலாளி,வெளியூரில் மாற்றலாகிப்போகும் குடும்பங்களில் சிறைவைக்கப்படும் சிறகிழந்த கிழட்டுக்கிளிகள்.

 இந்த மூத்தம்மாக்களுக்கு பான்கீன்மூனைத் தெரியும் அவரின் உற்ற இலங்கை நண்பர் விமல் வீரவங்சவையும் தெரியும்.கிரிக்கெட் தெரியும்,அப்துல்கலாமை தெரியும். எனது மூத்தம்மாவுக்கு ஆல மர பேய்களையும் மரணத்தின் கட்டியக்காரி குருட்டுப்பக்குளையும் தவிர வேரென்ன தெரியும்.

இந்த ஆலமரத்தைப் பற்றி எனது மூத்தம்மா கதைகதையாக சொல்லுவா.அதன் விழுதுகள் பேய்களின் ஊஞ்சலாம். இரவில் அவைகள் கூட்டாக ஆடிக் கொண்டிருப்பதை பார்த்தவர்கள் மறுநாள் எழுந்திருக்கமாட்டார்களாம்.

நள்ளிரவில் சினிமா பார்த்து விட்டு வந்தவர்கள்; தலைவிரிகோலமாக ஒரு பெண் இந்த ஆலமரத்தில் ஊஞ்சலாடுவதைப் பார்த்து இரத்தம் கக்கிச் செத்ததாகவும் மூத்தம்மா சொன்னா.

எஸ்.ஜே.சூரியாவின் சினிமாவைப் பார்த்துவிட்டு நள்ளிரவில் வருபவர்களுக்கும்,சில தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் கதைகளைப் படிப்பவர்களுக்கும் நவீன பேய்களில் நல்ல பரிச்சயம் இருக்கும் என்பது மகா உண்மை.

இன்னுமொருநாள் இப்படித்ததான் தனியே வந்த ஒருவனிடம் தன் கை வரிசையை காட்டியதாம் பிசாசு. ஆல மரத்தின் அடியில் ஒரு பெண் பிள்ளையை வைத்துக்கொண்டு நின்றாளாம். பிள்ளை அழுது கொண்டிருந்ததாம்.இவர் அருகில் சென்றவுடன் அந்தப்பெண் காக்கா இந்தப்பிள்ளய கொஞ்சம் புடிங்க என்றாளாம். இவருக்கு விசயம் விளங்கிற்று. ஆளும் பேய்களுக்கு பயப்பிடாத ஆசாமி.

அடியேய் ஹராமில புறந்தவளே என்னிட்டயாடி உன்ற திருவிளையாட்ட காட்டுறாய் என்று திட்டி ஆயதுல்குர்சீயை ஓதி அவளுக்கு ஊதியபடி திரும்பிப் பார்க்காமல் வூட்ட வந்து கதவ சாத்தியுள்ளார். மூடிய கதவில் ஓங்கி ஒரு அடி. நீ தப்பிட்டாய்டா மகனே என்று ஆக்ரஷமாய் ஒரு முரட்டு பெண் குரல்.

அது யாருமில்ல மோகினிப்பிசாசு.இந்த ஆலமரத்துலதான் இருக்குதாம். தனிய வார ஆம்புளயலப் புடிச்சி இரத்தம் குடிக்குமாம். அது தார பிள்ளய வாங்கினா ஆள் சரி. 

மூத்தம்மாவுக்கு இப்படிக்கதைகள் அத்துப்படி. ஆல மரத்தை வைத்து நிறையக்கதைகள் என் செவிகளுக்குள் வந்து சேர்ந்தன.ஆலமரங்கள் என் வாழ்க்கையில் மரண பயத்தை விதைத்துச் சென்றமைக்கு மூத்தம்மாவின் பேய்க்கதைகளும் ஒரு காரணம்.

ஆல மரத்தில் வெள்ளைப்புடவையுடன் தலைவிரி கோலமாக பாட்டுப்படித்து, சோகமாய் கம்மிங் பண்ணியபடி நடந்து போகும் ஆவிகளை ?சில சினிமாக்களில் பார்த்திருக்கின்றேன்.

நான் பாடசாலை விட்டதும் ஆல மரத்தை திரும்பிப்பார்க்காமலே வீட்டுக்குச் செல்வேன்.குறிப்பாக மதிய நேரத்தில் அந்தப்பக்கம் தலைகாட்டவே மாட்டேன். இந்தப் பேய்க்கதைகள் மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரும் நம்பிக்கை மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

அறிவு வளர்ச்சியும்,சன்மார்க்கங்களின்பாலுள்ள நாட்டமும் இவைகளை புறந்தள்ளி வீசியிருக்கின்றன. இறந்தவர்களால் உலகில் உயிருடன் உலாவரமுடியாது என்ற பேருண்மையின் ஒளிக்கீற்றுப் பரவப் பரவ அறியாமை என்ற இருள் விலகியே விட்டது.

இப்போது ஆலமரம் நின்ற இடம் சில படித்தவர்களின் செல்லுபடியற்ற செக், திருப்பிச் செலுத்தாத கடன்,சில விதானைகளின் இலஞ்சக்கணக்கு பார்க்கும் தளமாகவும்,  சண்டைகளின் உறைவிடமாகவும்,சில வாலிபர்களின் மாலை நேர தேவியர் தரிசனங்களுக்காகவும் உபயோகப்படுகின்றது என்பது வேறு விடயம். 
லதீப் ஹாஜியாரின் பேக்கரியில் மாலை நேரம் வீசும் மொறுமொறு பாண் வாசத்திற்கு வராத பேய்களா இனியும் வரும்?

சரி அது அப்படியே இருக்கட்டும். 

நான் சாச்சாவுடன் வனத்திற்குள் வந்த கதைக்கு வருகின்றேன். ஆதிவாசிகளின் ஆண்கள் வெற்றுடம்புடன் இடுப்பில் கச்சையுடன் திரிந்தார்கள்.ஓங்கி வளர்ந்த மரங்கள் நகர்வது போல் இருந்தது.பெண்களோவெனில் ரவிக்கை அணியாத மார்புகளை சேலையால் இழுத்து மறைத்தபடி முழங்காலுக்கு சற்று மேல் நோக்கி சேலை கட்டிக்கொண்டிருந்தார்கள்.

பெரும்பாலானவர்கள் காதுகளில் பெரிய வளையங்களையும் மாட்டிக்கொண்டு மூக்குத்தியும் அணிந்திருந்தார்கள். சதா வெற்றிலையை குதப்பிக்கொண்டு புளிச்புளிச்சென துப்பித்திரிந்தார்கள்.

தூர இடங்களிலிருந்து மாட்டுவண்டிகளில் குடும்ப சகிதம் சனங்கள் வந்து குழுமியிருந்தனர்.ஒவ்வொரு குடும்பத்தினரும் தோதான மரங்களில் கூடாரமடித்து தங்கியிருந்தனர்.காட்டின் அமைதியை கெடுக்குமாற் போல் குஞ்சு குருமான்களின் கும்மாளம்.இளவல்கள் ஆற்றில் குதிப்பதும்,மரங்களில் தாவுவதுமாக காடே தன் இயல்பை மீறி அந்தரப்பட்டது.
சாமியாட்டத்திற்குரிய ஆயத்தங்களை பூசாரி செய்து கொண்டிருந்தார். 

அவரைப்பார்க்கவே அச்சமாக இருந்தது.கருத்த ஆஜானுபாகுவான ஆகிருதி.சிவப்பேறிய கண்களால் உருள உருள காட்டையே சுழற்றி வந்தார்.மஞ்சல் நீரால் ஆசீர்வதிக்கப்பட்ட சில ஆடுகளும்,சேவல்களும் அவர் காலடியில் திமிறிக்கொண்டிருந்தன.சாம்பிராணிப் புகை பனிப்புகாரென மேலெழுந்து கரைந்து மறைந்தது.


ஊஞ்சல் இன்னும் ஆடும் .........
எங்கள் தேசம்: 220


No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.