Thursday 19 November 2020

 

நண்பர் நபீலின் முக நூல் பக்கத்தில்

நன்றி நபீல்

மூத்தம்மா இல்லாத காட்டின் அரசன்

"நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்"
-அறபாத்.
அறபாத்தின் கதைகள் புதிய கதையாடல்களை இன்றுள்ள நவீன சாத்தியங்கங்களை உருவாக்க வல்லன; அதன் ஒரு தொடர்பில் ஒரு துணையெழுத்தாகக் கதா விலாசமாக நான் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சலைப் பார்க்கிறேன்.
அறபாத் எப்போதும் என் ஊரைக் கடந்து செல்லுகின்ற போது ஓர் அழைப்பாவது எடுப்பார்; ஓயாத வேலைப்பளுவும் துரத்தும் பேரிரைச்சலும் தொடரான ஒரு காலப் பகுதியில் கொழும்பில் அடிக்கடி அவர் காரியாலயம் சென்று பேசிவிட்டு வருவதை வழக்கப்படுத்தியிருந்தேன்.
கோடை மழையில் பெருக்கெடுத்து ஓடும் நீரில் எண்ணற்ற பொருட்கள் மிதந்து செல்வதைப்போல பல விஷயங்கள் அவர் உரையாடலில் இணைந்து வரும்; எழுத்தாலும் வாழ்க்கையாலும் நிகழ் காலத்தோடு மோதியபடி இருப்பார்; வரலாற்றில் வாழக்கூடிய ஆற்றல்களைப் பெற்றவர்கள் இவ்விதமானவர்களே.
வாழ்க்கைக்கும் அவரின் புனைவிலக்கியத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லாதது போலவே இருக்கிறது; நினைவுகளில் தொங்குவதும் அதுதான்; அறபாத் ஒரு புதிய கதை மொழியை இதன் மூலம் உருவாக்க முயற்சி செய்கிறார்; அது படிமமும் உருவகமும் இணைந்த ஒன்று; கவிதையின் கதை மொழியிலிருந்து உருவான கதை மொழியது; எளிமையான கதை சொல்லலில் அவரது சிறுகதைகள் மாறுபட்ட தளங்களில் இயங்குவதற்குக் காரணமான அம்சங்கள் நீர் ஊஞ்லில் இருந்து வெளிப்படுகின்றன.
இதனைப் படிக்கின்றபோது மிக உடற்சாகமாகவே இருக்கின்றது; ஒவ்வொரு அத்தியாயங்களும் ஒரு சவால் அதை எதிர் கொள்ளும் நிமிடத்தில் மனது கொள்ளும் பரபரப்பும் திகைப்பும் பயமும் சந்தோஷமும் முக்கியமானது.
உம்மா அவவின் மச்சி முறையான ராவியாப் பெரியம்மாவிடம் குர்ஆன் ஓதக் கொண்டு போய் விட்டதிலிருந்து நினைவுகள் அகல விரிகின்றன.
சுன்னத் எனப்படும் விருந்தேசன நிகழ்வில் ஒய்த்தா மாமா வருகின்ற காட்சி, உரலில் இருத்துகின்ற நிகழ்வு என்பன மிகச் சுவராஸ்யம் நிறைந்தது.
அந்தக் கல்யாண வீடு ஒரு சிம்பொனி இசைபோல பல்வேறு எழுச்சிகள் மேல்கீழ் நிலைகள் மௌனங்கள் கொண்டது.
அதை நாம் திரும்பத் திரும்ப வாசிப்பதன் வழியே முழுமையாக உணர முடியும்.
கனவுகளில் ஓடும் பாம்புகளை நிஜ வாழ்விலும் நேரே கண்டு வியக்கும் (பக்கம்: 29 - 34) விநோதச் சூழலை நாமும் அனுபவிப்பதுபோல எழுதுகிறார்.
மஞ்சல் வெயில் பரவியிருக்கும் மதியம்; அந்தப் பனை மரத்தின் அடியில் எழுந்திருக்கும் புற்றினுள் சராசரத்து மறையும் நாகத்தின் பார்வை, அந்தக் கண்கள் இன்னும் நீள்கிறது.
வாப்புப்பாவின் கடைக்கு வன்னியனார் கடை என்றால் பிரசித்தம்; புளிய பரத்தடிக் கடையாகப் பின்னாளில் மருவிற்று என்கிறார்; (பக்.36)
சற்றுத் தொலைவில் பரந்து கிடக்கும் வயல் வெளி, வயலையும் குளத்தையும் பிரிக்குமாற்போல் இராட்சதப் பாம்பாய் படர்ந்து நீளும் குளக்கட்டு வயலைத் தாண்டி விழுந்தால் மாந்துறை ஆறு.
உடல் வளராத அவருக்குள் ஓர் உலகம் உடைந்து சிதறி விடாமல் எப்பொழுதும் உரையாடிக் கொண்டே இருந்திருக்கிறது; உம்மா,வாப்பா, முத்தம்மா, வாப்புப்பா, மாமா, சாச்சா, பிள்ளைகள் இப்படி ஒவ்வொருவராக விழுங்கியபடியே நாட்களைக் கடந்து வந்து இப்பொழுது உயர்ந்து பெரியவரானதும் கொட்டியில் போட்ட ஒடியல் நார்களை அசை போடுகிறார்.
இன்றைய மூத்தம்மாக்கள் கச்சான், வடை, விற்பதையெல்லாம் அறியமாட்டார்கள்; (பக்.51) அந்த ஆலமரத்தைப்பற்றி எனது மூத்தம்மா கதை கதையாகச் சொல்லுவா; அதன் விழுதுகள் பேய்களின் ஊஞ்சலாம்; இரவில் அவைகள் கூட்டாக ஆடிக் கொண்டிருப்பதப் பார்த்தவர்கள் மறுநாள் எழுந்திருக்க மாட்டர்களாம்.
முத்தம்மாவின் உறவும் பிரிவும் நேர்ந்திராது போயிருந்தால் இந்தக் கதை வெளியில் ஒர் அரபாத் இல்லாமலே விட்டிருப்பார்.
சிறுvவயதிலிருந்து முத்தம்மாவுடனேயே வளர்ந்து திரிந்து கொண்டிருந்த ஒரு மனிதனுக்கு மூத்தமாவும் அவர் அணிந்திருந்த கிராமமும் அவனுடைய அவயங்களில் ஒன்றுபோல் ஆகிவிட்டிருந்தது.
இப்படியாகப் பல காலம் கழிந்தது;
பின்பு எப்போதிருந்து என்று தெரியாமல் சிறிது சிறிதாகப் பல புதிய பிரச்சினைகளும் வினோதமான மனக் கவலைகளும் நட்சத்திரமற்ற வான இருளில் பரவியடிக்கும் போர் மூட்டங்களும் அவனுடைய செவியையும் நாசியையும் எட்ட ஆரம்பிக்கின்றன;
அவை தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள சூழலையும் வேறு வேறெனப் பிரித்துக் காட்டும் பிரக்ஞையை￶த் தனக்குள் பலவந்தமாகப் புகுத்துவதைக் கண்டு அந்த மனிதன் குழம்பிப் போகிறான்;
என்னதான் அது என்ற கோபத்துடனும் ஆர்வத்துடனும் தனக்கு அதிர்வைத் தந்த திசையைக்குறி வைத்து எழுதப் புறப்படுகிறான்.
அம் மனிதன், அந்தப் பயணத்தில் காட்டின் எல்லைகளையும் அதற்கப்பாலான கிராமங்களையும் அங்கே குப்பி லாம்புகளின் வெளிச்சத்தில் உலா வருகின்ற ஜின்கள்,பேய்கள், எழும் இனிமையான இரைச்சலிலும் மெளனத்திலும் அங்கங்கே மரங்கள் வெட்டப்பட்ட வெளியில் பால் உதிரும் மணத்திலும் கண்காணாத மூலைகளிலும் நிரம்பி அலைகின்றான்.
அந்த மனிதனன்தான் அறபாத்; அவர் நினைவூஞ்சலில் நம்மையும் உட்கார வைத்து ஆட்டுகிறார்.
கூப்பிடக் குரலற்றுக் காற்ராய் வெளிப்படும் அவர் சாச்சவுடன் வனத்துக்குள் வந்த நினைவுகள் ( பக்: 64)
காட்டின் உருவம் இயல்பான வெளிச்சத்தைக் கொண்டதாகவும் செரிமான ஒலியைப்போல அதன் சப்தத் துகள்கள் அனிச்சையாகவே அவருக்குள் கரைந்து விடுவதாகவும் அதன் அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பானதாகவும் மாறி விடுவதை நானும் அனுபவித்தேன்.
படைப்பாளி என்பவன் கொள்கை பரப்பும் செயலாளி இல்லை; படைப்பாளி எப்பொழுதும் நினைவுகளை அடையாளப் படுத்துபவனாகவே இருக்கிறான்.
அராபாத் அவர் கொள்கையாளி; ஆனால் பாசாங்குகளை இலக்கியத்தில் ஆவணமாக்காதவர்; நினைவுகளில் தொங்கிய நீர் ஊஞ்சலை அறுத்து விடாதவர்.
-நபீல்
Anar Issath Rehana, Aaliya Aaliya and 10 others
1 Comment
Like
Comment
Share

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...