Thursday 19 November 2020

 



எஸ். நளீமின் 

 “பல்லிகள் இல்லா சுவரில் மேயும் வண்ணத்துப் பூச்சிகள்” 

உணர்வின் மொழி

                                                                                -ஓட்டமாவடி அறபாத்

 
‘தலைசிறந்த சொற்களை தலைசிறந்த ஒழுங்கில் கோர்ப்பது கவிதை.’ என்றான் கோல்ட்ரிஜ். ‘குழம்பிய உணர்வுகளின் தெளிந்த வெளிப்பாடு கவிதை’ என்பது ஆடனின் நிலைப்பாடு. 

 

கவிதையை புரிந்து கொள்ளவும் அதனுடன் நெருங்கிப்பழகவும் மனிதனாக வாழ்வது அவசியம்.மனிதன் என்பது சக மனிதனின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு அவனை நேசிப்பது மட்டுமன்றி , பிரபஞ்சத்தில்; உள்ள சகல உயிரினங்களையும் பிரமை கொண்டு அதனை நேசிப்பதுதான் மனிதம்.

 

கலைகளுக்கு இந்த விசாலமான மன விசாரம் உன்னதம் என்பேன்.
ஓவியம்,கவிதை, சிறுகதை,இதழியல் என்ற பல்வகை புலமைகளின் பரிணாம நீட்சியாக எஸ்.நளீமின் பல்லிகள் இல்லா சுவரில் மேயும் வண்ணத்துப் பூச்சிகள் கவிதைத் தொகுதி முகிழ்ந்துள்ளது. கடைசிச் சொட்டு உசிரில்…(2000), இலை துளிர்த்துக் குயில் கூவும் (2008) ஆகிய முன்னிரு கவிதைத் தொகுதிகளும் அவருக்கு விருதுகளைப் பெற்றுக்கொடுத்த தொகுதிகளாகும். பூகோளத்தின் சூட்சுமங்களை நேசிக்கத் தெரிந்த ஒருவரால் மட்டுமே எழுதவல்ல கவிதைகளை பல்லிகள் இல்லா சுவரில் மேயும் வண்ணத்துப்பூச்சிகளில் வாசித்துணராலம்.

 

நளீமின் கவிதைகளை இன்னதென்று விளக்;குவதைவிட வாசித்து உணரத்தான் முடியும். 

 

தான் வாழும் சமூகத்தின் மீதான அபரித காருண்யம், இயற்கையுடனான காதலின் வசீகரம், சமூக ஒழுங்கு மீறப்படும்போதும் சத்தியத்தின் கால்கள் முடக்கப் படும்போதும் அவற்றுக்கெதிரான கோபாவேசம், வன்முறைக்கெதிரான சீற்றம் என அவரின் கவிதைகள் பல்வகை உணர்வுகளின் கொந்தளிப்பாக வெளிப்பட்டுள்ளது.

 

கடந்த காலங்களின் சௌந்தர்யங்களை நினைவூட்டி, உறவுகளின் சிதிலங்களை வேதனையுடன் பேசுகின்றன சில கவிதைகள். அந்த வேதனைகளை கணல்மிகு நினைவுக் குறிப்புகளாக அவர் கவிதையில் சொட்டும் பதகளிப்பு இடையறாத கதறலாக எம் செவிகளில் நுழைந்து மனதை அரிக்கிறது.

 

பல்லிகள் இல்லா சுவரில் மேயும் வண்ணத்துப் பூச்சிகள், கெடூரங்களால் ஆனது, அறைக்கு வந்த வண்ணாத்தி, வசப்படாத வாழ்வைக் கட்டமைத்தல், வசீகரித்த வாழ்வெழிலை, வரைந்துயர்ந்த, மனத்தீ ஆகிய கவிதைகள் நான் மேற் குறித்த உணர்வுகளை சுட்டும் கவிதைகளாகும். 
அதிகாரத்தின் இரும்புப் பிடியில் சாமான்யர்கள் ஏமாற்றப் படுவதும் ஏய்த்துப் பிழைப்பதும் காலங்காலமாய் பின்தொடரும் அவலங்கள். சர்வாதிகாரத்தின் கொடூரங்களுக்கெதிரான நளீமின் சொற்கள் ஓங்கி ஒலிக்கின்றன. சொற்கள் சம்மட்டிகளாகி சம்ஹாரம் செய்கின்றன. ஒப்பாரி ஓங்கிய தீவு, ஒரு கனிமரம்தேடி, இருள் ஒதுங்கும் மூலை, தனித்த குரலும் வால் மனிதர்களும், விலங்கோடு வாழ்வு, அமர்க்களம், அழுகி நாறும் நீ, குறுக்குக் கோழிக்கு கூந்தல் கட்டி போன்ற கவிதைகளில் அவரின் சூரசம்ஹார தொணி சன்னமாய் கேட்கிறது.அதிகாரத்தின் மையலில் அடகு வைக்கப்படும் ஒரு கையறு சமூகத்தின் ஆவேசக்குரலென இக்கவிதைகளை குறிப்பிடவியலும்.

 

இனவாதத்தால் எரியூட்டப்பட்ட வாழ்விலிருந்து மீண்டவர்கள் நாங்கள். இன்றைய தேதிவரை இனவாதத்தின் அகன்ற கோரப் பசிமிகு திறந்த வாய்களுக்கருகேதான் எங்கள் இருப்பு பதகளித்துக் கொண்டிருக்கின்றது. இனவாதத் தீயின் உஸ்ணத்தில் நின்று கொண்டே நிழலை யாசிக்கும் நளீமின் சில கவிதைகள் உரத்துப் பேசுகின்றன.

 

இனவாதம் கோலோட்சும் இந்த தீவில் இனி சௌஜன்யம் என்பது எட்டாக்கனி போலவும் முடவனின் கொம்புத்தேன் கனவு போன்றும் ஆகிவிட்டது. அந்த ஆற்றாமைமிகு துயரங்களை தன் கவிதைகளால் இடித்துக்காட்டுகின்றார். உள்ளத்துள் மிருகம் வளர்த்தல், வசப்படாத வாழ்வைக் கட்டமைத்தல், தீ விதைகள் கவிதைகளில் இந்த ஆதங்கம் சொட்டுகின்றது.

 

இந்த சமூகத்தின் கையறு நிலை கண்டு அவர் கொண்டுள்ள தார்மீகக் கோபம் ஆங்காங்கு கவிதைகளில் நீக்கமற கர்ச்சித்தபடி கூடவே வருகின்றது.

 

….” தேர்தல்கள் தோறும் 
நிறம் பூசிக்கொண்ட
உன் சின்ன விரலிடம் 
வெட்கம் கொள்
வாக்களிக்க நீ பிரஜை
இங்கே வாழ மட்டும் நீ யார்? “

 

என அவர் ஆவேசப்படும்போது அடக்கு முறையின் கொடூர முகத்தில் காறி உமிழ்வதுபோல் அடங்கியிருப்பவனின் தன்மானத்தை கிளறிவிடுவதுபோல பல்முனை உணர்வுத்தளத்தில் நின்று பேசும். இதனை நிகர்த்த பல கவிதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளமை நளீமின் போர்க்குணத்திற்கோர் சத்திய சாட்சிகளாகும்.

 

கவிதை என்பது வெறுமனே தனிமனித அனுபவம் அல்ல, தனிமனித அனுபவமாயினும் அது சமுகம்சார் அனுபவமாகவும் இருக்கும்.
கவிஞன் தன் சமுகம்சார் அனுபவத்தையே தன் அனுபவமாக உய்த்துணர்ந்து எழுதுகின்றான்.

 

நளீமின் கவிதைகள் அகவயப்படுத்தப்பட்ட புறவயக் கவிதைகளெனில் மிகையல்ல. அவர் கவிதைகளைப் புரிந்து கொள்வதற்கு மொழி மட்டும் தெரிந்திருந்தால் போதாது வாசகனின் தயார் நிலையும் மனோ விசாலமும் பிரதானமானது.

 

நளீமின் கவிதை சொல்லும் மொழி தனித்துவமானது. முன்னிரு தொகுதிகளிலும் சோலைக்கிளியின் கவிதை மொழி ஆங்காங்கு தாக்கம் செலுத்தியுள்ளது. தொன்னூறுகளுக்குப் பின் எந்தக் கவிஞனும் சோலைக்கிளியை தவிர்த்துவிட்டு கவிதை எழுத முடியாது என்ற அடிப்படையில் அத்தாக்கத்தினை புரிந்துகொள்வது கடினமல்ல.

 

இத்தொகுதியிலுள்ள சில கவிதைகளில் நளீமின் மொழிப் பாய்ச்சல் வேறொரு தளத்தில் பயணிக்கத் தெடங்கியுள்ளது. அகத்துறிஞ்சல்களால் மொழியை செம்மைப் படுத்திய கவிதைகள் இத்தொகுதியில் விரவிக் கிடக்கின்றன.  பல்லிகள் இல்லா சுவரில் மேயும் வண்ணத்துப் பூச்சிகள், வற்றிக் கிடக்கும் என் மனக் கடல், சட்டத்தில் அடைக்கும் கோடுகள், கொடூரங்களால் ஆனது. இருள் ஒதுங்கும் மூலை போள்ற கவிதைகள் அவரின் மொழிச் செழுமைக்கோர் பருக்கைகளாகும். 

 

அறிவினால் விளங்கிக் கொள்ளப்படும் கவிதைகளைவிட உணர்வினால் புரிந்துகொள்ளப்படும் கவிதைகள் இத்தொகுதியில் விரவிக்கிடக்கின்றன. எல்லா மனிதர்களுக்கும் உள்ளே தகிக்கும் தார்மீக உணர்வை தனித்துவமாக அடையாளம் காட்டுபவன்தான் கலைஞன். மனித வாழ்வோடும் , உறவோடும் கலைகளை நெருக்கமாகக் கொண்டு வரும் போது அது இலகுவில் புரிந்து விடும் என்பது பொதுவான யதார்த்தம்.

 அந்தக் கலைஞயினூடாக சமூகத்தின் கலைப் பெறுமானங்களையும் சொற் சிக்கனத்துடன் பொருள் கனதியுடன் நளீம் தன் கவிதைக@டாக முன்வைக்கின்றார். செறிவான கவிதைகள் மூலம் விரிவான விவாதங்களை எழுப்பும் நளீமின் கவிதைகள் மனோரதிய பேரின்பத்தை தரவல்லது எனில் மிகையல்ல.



16.10.2020


No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...