Thursday 19 November 2020

 

தோழர் அல்சாத்தின் முக நூல் சுவட்டின் பதிவு

நன்றி அல்சாத்

"நினைவில் தொங்கும் நீர் ஊஞ்சல்" எனும் ஓட்டமாவடி அறபாத் இன் பத்தி எழுத்துத் தொகுதியை படிக்க கிடைத்தது. ஆசிரியரைப் பற்றிய ஓர் சிறு குறிப்பை இவ்விடத்தில் பதிந்துவிட்டு நூலைப் பற்றி சொல்வதே பொருத்தமானது என்று நினைக்கிறேன்.

கிழக்கிலங்கை ஓட்டமாவடியைப் பிறப்பிடமாகக்கொண்ட அறபாத் அவர்கள் கலைப்பட்டதாரியும் பயிற்றப்பட்ட மௌலவியும் ஆவார். தற்போது அரசுப் பணி புரிந்து வருகிறார். இவரது முதல் சிறுகதை தொகுதி "நினைந்தழுதல்" க்கு 'விபவி விருதும்' "உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி" சிறுகதைத் தொகுதிக்கு 'இலங்கை அரசின் சாஹித்யமண்டலச் சான்றிதழும்' 'கிழக்கு மாகாண சபையின் விருதையும்' வென்றவர்.
கவிதை, கதை, கட்டுரை என பல துறைகளில் இயங்குபவர்.இதுவரை பதினொரு நூல்களை எழுதியுள்ளார்.
2015 முதல் இலங்கை அரசின் 11ஆம் ஆண்டு தமிழ்ப்பாட நூலில் இவரின் சிறுகதை 'மூத்தம்மா' இடம்பெற்றுள்ளது சிறப்புக்குரியது.
இவ்வாசிரியரின் சிறு வயது பராயம் கொண்டு அவரது வாழ்க்கை அனுபவங்களை மிகவும் அழகாக பதியவிட்டிருக்கிறார் இந்நூலில்.
"எங்கள் தேசம்" நாளிதழில் தொடராக வெளிவந்த 50 பத்தி எழுத்துக்களின் கோர்வையே இந்நூல்.
நிச்சயமாக இந்நூலைப் படிப்பவர் மனதில் தமது உசுக்குட்டிப் பருவ நினைவுகள் ஊஞ்சலாடாமல் இருக்க முடியாது. அந்தளவு மிகவும் அழகாகவும் அவரது வாழ்வில் பெற்றுக் கொண்ட இன்பம், துன்பம், கஷ்டம், நஷ்டம், துரோகம் போன்ற பல விடயங்களையும் மிகவும் லாவகமாக படிப்பவர் மனதை வசியப்படுத்தி ஒன்றித்துப் போக செய்திருக்கிறார்.
பின்னட்டையில் நூல் பற்றியும் ஆசிரியர் பற்றியும்
Slm Hanifa
எழுதியிருக்கிறார்.
இந்தியாவின் புகழ்மிக்க காலச்சுவடு பதிப்பகம் பதிப்பித்திருக்கும் இந்நூல் மிகவும் கவனமாக எழுத்துப் பிழைகள் இன்றி அழகிய முன்னட்டையோடும் சுமார் 160 பக்கங்களில் நூலை தொகுத்திருப்பது சிறப்புக்குரியது.
நான் படித்து சுவைத்த இவரது முதல் நூலே இதுவாகையால் ஏனைய இவரது அனைத்து நூல்களையும் படிக்க ஆவலாயுள்ளேன். இருப்பவர்கள் தந்துதவினால் சிறப்பாக இருக்கும்.
இது போன்ற பல ஆக்கங்களை இனியும் தர வேண்டுமென்ற பிரார்த்தனையோடு ஓட்டமாவடி அறபாத் மௌலவிக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...