Thursday 14 June 2018

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்



Image may contain: Sabarullah Caseem and Arafath Sahwi, people standing, sunglasses and outdoor

அரபாத்தின் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்….என்னை இன்னும் ஆட்டிக் கொண்டிருக்கின்றது.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
நான் புகையிரத நிலையங்களை கடந்து செல்லுகையில் கிழக்கே போகும் ரயில் பாரதிராஜாவும், மடக்கி வைக்கப்பட்ட குடையை நிலத்தில் ஊன்றியவாறு ரயில்வே ஸ்டேஷனில் நரைத்த விஜயகுமார் காத்துக் கிடக்கின்ற பாரதி கண்ணம்மா சேரனும், விடுதலையாகி இன்று வருவார் நாளை வருவார் என்ற திரட்சிமிக்க ஏக்கத்தோடு கண்ணுக்கெட்டிய தொலைவில் வந்து கொண்டிருக்கின்ற ரயிலின் எல்லாப் பெட்டிகளிலும் தினம் தினம் தலை முடி வெளுத்த தபூ ஓடோடிப் போய்த் தேடுகின்ற காலாபாணி (சிறைச்சாலை) ப்ரியதர்ஷனும், சில மைக்ரோ நொடிகள் மூளையின் நியூரான்களை நிரடி விட்டுப் போவது போல “ரயில்வே ஸ்டேஷன்” தந்த ஓட்டமாவடி அரபாத்தும் எப்போதும் அவர்களோடு கூடச் செர்ந்து கொண்டு எனக்கு கை காட்டிச் செல்லுவார்கள்.
அந்த ரயில்வே ஸ்டேஷனை இன்னும் மறக்க முடியமாலிருக்கின்றேன் அரபாத்…….பல தடவைகள் வாசித்த கதைகளுல் அதுவுமொன்று என்பதனைச் சொல்லிக் கொண்டு………………இதோ சீனக் குடா ரயில்வே ஸ்டேஷனை கடந்து செல்ல்லுகின்றேன்…தூரத்தே திருகோணமலையிலிருந்து புறப்பட்ட ரயில் தனது ராட்சத சக்கரங்களால் காதுகளுக்குள்ளே சாக்ஸ் வாசித்துக் கொண்டிருக்கின்றது…….அரபாத்தைப் பற்றி சொல்ல எத்தனிக்கையில் ஏனோ தெரியவில்லை அவரது ரயில்வே ஸ்டேஷன் கதை மனசுக்குள்ளே மஸ்காரா போட்டு மணக்க ஆரம்பித்து விடுகின்றது….
அதே அரபாத்தின் “நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்”……ஐம்பது பத்தி எழுத்துகளின் அல்பம்…..கடந்து போன நினைவுகளினதும் எஞ்சிய ஞாபங்களினதும் எழுத்துத்தட்டு……தனது பத்தி எழுத்துகளில் அரபாத் அனுபவித்தவைகளை நமக்கு எல்லா ரிஸிப்பியிலும் பந்தி வைத்திருக்கின்றார். எங்கள் தேசம் பத்திரிகையில் தொடராக வந்த ஐம்பது பத்தி எழுத்துகளையும் தொகுத்து பத்த வைத்திருக்கின்றது காலச்சுவடு.
கவிதைகளை விட கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை…..அதுவும் தான் கடந்து வந்த பாதையில் எதிர்ப்பட்ட அனுபவங்களை ஒருவர் கற்பனை கலப்படமின்றி நடந்ததை அப்படியே அதே சுவாரஸ்யத்தோடு சொல்லுகின்ற போது ஏற்படுகின்ற உணர்ச்சிகள் கலவைக் குடுவையில் மிதக்கின்ற கால ஐஸ் துண்டங்கள். அப்படித்தான் உணர்ந்தேன் அரபாத்தின் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சலை வாசித்து முடித்த போது……
புத்தி மெல்லத் தெரிகின்ற காற் சட்டைப் பருவத்து நினைவுகளில் தொடங்கி தனது எழுத்துலகம், தனது எழுத்துகள்….யதீந்திரா போன்ற புலிக் காதலர்கள் என்று அரபாத் முடிக்கின்ற போது அரபாத்தின் இத்தனை வருட கால வாழ்வின் செய்திகளின் சாராம்சத்தை ஒரு நுண்ணறிவு கொண்ட வாசகன் மிக இலகுவாக அனுமானித்து விடுவான்.
1978ம் ஆண்டைய சூறாவளியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கிடுகு ஓலை வீடுகள்….புயலால் ஆணி பிடுங்கப்பட்ட களிச்சுவர் மாந்தர்களுக்காக ஹெலகொப்டரிலிருந்து பெய்த பாண் மழை என்று ஆரம்பித்து “எழுத்துக்கும் வாழ்வுக்குமிடையில் சத்தியத்தை பேண நினைக்கின்றேன். அதைப் பின்பற்றி ஒழுகவும் செய்கின்றேன்” என்று ஐம்பதாவது பத்தியில் வாக்கு மூலம் வழங்குகின்ற அரபாத் அதே கடைசிப் பத்தியில் “யதீந்திரா போன்றவர்கிளடம் நான் கேட்பது ஒன்றுதான் 30 வருடப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்குப் பலிகள் பெற்றுக் கொடுத்த தீர்வு என்ன?..........என்னிடம் இருக்கும் மனப்பதிவு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்ட பின்பும், மன நோயாளியாக மாற்றப்பட்ட பின்பும், அங்கவீனர்களாக ஆக்கப்பட்ட பின்பும், சொத்தழிவுகள் ஏற்பட்ட பின்பும், மக்கள் அலைந்துழந்து நிம்மதியிழந்த பின்பும் நீங்கள் பெற்றுக் கொண்டது ஒரு முன்னால் முதலமைச்சர். ஒரு அரை அமைச்சர், இப்போது ஒரு முதலமைச்சர்” என்கின்ற பராக்களில் வருகின்ற வரிகள் மனிதாபிமானத்தையும் மனிதத்தையும் நேசிக்கின்றவர்களுக்கானது.
அந்தத் துயரம் அசாதாரணமானது. அரபாதின் அந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க இங்கே யாருமில்லை. தமிழ் மக்களை பகடைக் காய்களாக்கி தமிழ்த் தேசியம், சுய நிர்யணம் என்கின்ற சொற்களால் அனஸ்தீஷியா போட்டு வேப்பிலை அடித்து ஆடப்படுகின்ற அரசியல் சதுரங்கத்தில் ராஜாக்களாகவும் சாம்ராடுகளாகவும் இன்னும் முடி சூடிக் கொண்டுதானிருக்கின்றார்கள் அவர்களுக்கான அரசியல் தலைவர்கள்.
இளமைக்கால ட்ரக்டர் பயணம் இன்டரெஸ்டிங். பாம்புகளுக்கும் தனக்குமான உறவு பற்றி அரபாத் சொல்லுகின்றார்..ஒரு இடத்தில் தான் பயணிக்கின்ற யாருமற்ற அந்தப்பாதையில் காடுகளால் சூழப்பட்ட ஒரு அமானுஷ்ய இடத்தில் வானத்தை முறைத்துக் கொண்டிருக்கின்ற பனை மரமொன்றிலிருந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கின்ற அந்த கரு நாகம் பற்றி அரபாத் சிலிர்க்கையில் எனக்கு கார்த்தி நடித்த செல்வராகவனின் “ஆயிரத்தில் ஒருவன்” படம்தான் ஓடியது.
அந்தப்படத்தில் கார்த்தி ரீமா சென் மற்றும் ஆன்ட்ரியா மற்றும் ராணுவ வீரர்கள் வியட்நாமுக்கு பக்கத்தில் உள்ள காடொன்றில் கேம்ப் அடித்து தங்கி இருப்பார்கள். அப்போது படை படையாக பாம்புகள் அந்தக் கேம்புக்குள் நுழைந்து வெறித்தனமாக வேட்டை நிகழ்த்தும். கேம்புக்குள்ளே தூங்கிக் கொண்டிருந்த அழகப்பெருமாளுக்கு கரு நாகமொன்று சடாரென்று கொத்தும்…அதே நேரம் ஆன்ட்ரியாவுக்கு முன்னால் இரு கரு நாகங்கள் படமெடுத்து பார்த்துக் கொண்டிருக்கும்….பயந்து போய் விட்டேன்…..அந்த மாதிரி அரபாத்தின் பாம்புக் கனவும் அதே கனவு அடுத்த நிஜமாகுவதும் என்று நரம்புகளில் நில நடுக்கம்…அந்த பாம்புப் பத்தியை படித்த போது கனவும் அக்கனவு நிஜமாவதும் ஒரு “கொயின்ஸ்டென்சோ” என்று மனசு குழம்பிக் காண்டிருந்தது.
போர்க்கால பொஸ்பரசுகள், புலிகளின் கஸ்மோராக்கள், பூசாரி ஆட்டம்……ஆயுதக் குழுக்களின் ஹிப் ஹொப் ஆட்டங்கள்…..கொலையுதிர்கால கொடூரங்கள்…..கொழும்பு குண்டு வெடிப்புகள்….தீவிர வாசிப்பு…கவிதை எழுதி பின்னர் கதைதான் தனக்குப் பொறுத்தமென்று கதைகளுக்குள்ளே ட்ரான்ஸ்ஃபோர்மேசன் ஆகிய தருணங்கள்,…….தனது புத்தகங்கள்…..என்று விமிமித்தணிகின்ற அரபாத்தின் நினைவுகள் பௌசர்………….. பௌசரின் முஸ்லிம் குரல் என்று பேசுகின்ற போது மனசு பாரமாக இருந்தது.
போரின் பொதும், 2002 போர் நிறுத்த்தின் போதும் கிழக்கு முஸ்லிம் சமூகம் எதிர் கொண்ட கந்தக நெடியிலான பிரச்சினைகளில் எதுவும் பேசாது மௌனம் மட்டுமே எனது தாய் மொழி என்றிருந்த முஸ்லிம் காங்கிரஸ் ஒரு புறம்….முஸ்லிம்களுக்கெதிரான புலிகளின் கட்டற்ற வன்முறைகளினால் உண்மையாகவே கொதித்தெழுந்த முஸ்லிம் இளைஞர்கள் மறு புறம்…ஆகக் குறைந்தது ஓரிருவராவது அனலில் நின்று கொண்டிருக்கின்ற அப்பாவி முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்க வேண்டுமென்ற ஐஸியூ அவசரத்தில் பௌசரை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த முஸ்லிம் குரல் பத்திரிகையில் இணைந்து அச்சங்களோடும் திகில்களோடும் சேர்ந்து தான் சார்ந்த சமூகத்துக்காக மட்டுமே செய்த சாகசப் பிரயாணங்கள்……முஸ்லிம் குரல் எதிர் கொண்ட சவால்கள்…முஸ்லிம் சமூகத்துக்குள்ளிருந்து முஸ்லிம் குரலுக்கதெிராக எழுந்த மல்யுத்த முல்லாக்கள்……என்று அரபாத் நிறைய பேசியிருக்கின்றார்…….
எழுத்துலகில் தான் எதிர் கொண்ட மனிதர்கள்…சவால்கள்..அச்சுறுத்தல்கள்..என்று அது ஒரு நெடிய பயணம்……..இலக்கியத் திருட்டு….புத்தகம் போட வேண்டுமென்ற ஒரே லட்சியத்தோடு கனவு கண்டு கொண்டிருக்கின்ற புதிய கவிதை ப்ளஸ் எழுத்தாள வர்க்க்தை இன்னோர் தடிமாட்டுக் கூட்டம் அடிமாட்டு லெவலில் சுரண்டி வாழுகின்ற அசிங்கங்கள் என்று அரபாத் தான் எதிர் கொண்ட கொள்ளவு கூடிய அனுபவங்களை எளிமையாக ஆனால் வலிமையாக கொட்டித் தீர்த்திருக்கின்றார். அரபாத்தின் எளிமையான வசன நடையும் இறுக்கமற்ற வசன லாவகமும் அதற்குள்ளே ஒரு சிறு கதையை வாசிக்கின்ற சுவாரஸ்யமும்தான் இந்த பத்தி எழுத்துகளின் ப்ளஸ் சமாச்சாரங்கள்.
எஸ்.எல்எம். ஹனீபாவின் அலட்டலற்ற எஸ்எம்எஸ் மோடிலான பின் குறிப்பு…அரபாத்தின் அறிமுகக் குறிப்பு என்று தன்னைத்தானே ஆட்டிக் கொண்டிருக்கின்ற இந்த அல்பத்தினை அரபாத் திருகோணமலை மறை மாவட்ட குரு முதல்வர் வண. கிங்ஸ்லி ரொபர்ட் அவர்களுக்கு சமர்ப்பித்துள்ளார். அதற்கான நியாயத்தை மிக நேர்த்தியாக தனது பத்தியொன்றில் நம்மோடு பகிர்ந்திருக்கின்றார். நூறு வீதம் நியாயமானது அரபாத் இந்த அரப்பணம்…சரியான நபருக்கு போய் சேர்ந்திருக்கின்றது.
நான் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சலிலிருந்து மெல்ல இறங்கிய பின்னரும் அதில் உட்கார்ந்து கொண்டு இன்னும் அந்தரத்தில் ஆடிக் கொண்டிருக்கின்றது என் மெல்லிய மனசு.
கிண்ணியா சபருள்ளாஹ்
2018-05-12

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...