Friday 24 November 2017

சிறுகதை - ஒரு மாலையும் சில காகங்களும்


ஒரு மாலையும் சில காகங்களும்


சல்மா ஒரு பூனையைப்போல் பதுங்கியபடி வீட்டுக்குள் நுழைந்த  தருணம் உம்மா மாலை நேரத்தூக்கத்தில் ஆழ்ந்திருந்திருந்தாள்.பக்கத்தில் தங்கை ரேஷ்மாவும் தாயின் வயிற்றுக்குள் ஒடுங்கியபடி தூங்கிக் கொண்டிருந்தாள்.சல்மா குர்ஆனையும் ‘ஸ்காபை’யும் ஒரு சேர சுருட்டி  ‘பிளாஸ்ரிக் பக்கற்’றினுள் எறிந்தாள். அழுக்கடைந்த ஆடைகளை போடும்படி உம்மா வைத்திருந்த ‘பக்கற்’ அது. பரபரவென உள்ளறைக்குள் ஓடினாள். அவசரமாக உடை மாற்றிக் கொண்டாள். சிலமன் கண்டு உம்மா எழும்பினால் தன்னையும் கூடவே படுக்கவைத்து விடுவா  என்ற பயம் அவளை கவ்விக்கொள்ள பதற்றம் வந்து தொற்றிக்கொண்டது. 

அவளுக்கு மாலையில் தூங்குவதென்றால் கசாயம் குடிப்பதைப்போல. உம்மாவை பார்ப்பதும் ஆடைமாற்றுவதிலுமாய் கண்ணாய் இருந்தாள்.   ‘நானா’மார் அறைக்குள் கழற்றிப் போட்ட ஆடைகள் மூளைக்கொன்றாய் தாறுமாறாக வீசிக்கிடந்தன. அதில் தன்னுடையதும் கலந்துள்ளது  என்பது சல்மாவுக்குத் தெரியும். ஒழுங்குபடுத்த வேண்டும் என நினைத்துக் கொண்டாளாயினும் இது தகுந்த நேரமல்ல என உள்ள மனம் கூவியது.டீவியில் ஆன் (on) லைட் எரிந்து கொண்டிருந்தது.ரேஷ்மாவுக்கு உம்மா பொம்மை படம் போட்டுக்காட்டியபடி சோறு ஊட்டியிருப்பதன் அடையாளமாக  சி.டி. பிளேயரும் ஆன் (on) னில் மினுக்கம்  காட்டியது. 

கால்களின் ஓசை கூட நிலத்திற்கு கேட்டுவிடாமல் பதுங்கி பதுங்கி பின் கதவால் நழுவி சல்மா முற்றத்திற்கு வந்தாள்.குப்பைகளை கிளற தினமும் வரும் பூனை வாழை மர மறைவில் உடலை புகுத்தி காத்திருந்தது.

பின் வளவில் காகங்கள் கத்தியபடி பகல் வீசியெறிந்த மீன் கழிவுகளில் குறியாய் இருந்தன. காகங்கள் உச்சஸ்தாயில் கரைந்தால் உம்மா எழும்பி விடுவா. கல்லொன்றை எடுத்து ஓசைப்படாமல் வீசுமாற் போல் காகங்களை நோக்கி ‘பாவ்லா’ செய்தாள். அவை கூட்டமாக கத்திக்கொண்டு மேல் நோக்கிப்பறந்து சென்றன.  

சாத்தப்படாத கதவிடுக்கினுள்; தலையை நீட்டியபடி  அவள் வகுப்புத்தோழி சஹ்ரா நின்றிருந்தாள்.அவள் விழிகளிலும் கள்ளத்தனம் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. ‘உம்மா எங்க’? என்பது போல் சைக்கினையால் கேட்டாள். தூங்குவதாக சல்மா பாவனை காட்டியதும் விழிகளில் மினுக்கம் தெறித்தது.ஓசைப்படாமல் கதவினை சாத்திவிட்டு சல்மா வீட்டின் பின்னால் உள்ள வெற்றுக்காணிக்குள் சென்றாள்.

சஹ்ரா அவள் சைக்கிள் கூடைக்குள் இருந்த புளியங்காய்களை கொடுத்தாள். உப்புக்கல்லும் மிளகாய்த்தூளும் வைத்து சுத்தி அடித்து துகளாகி இருந்தது.  மருதோன்றி மரத்தின் கீழ் அமர்ந்தபடி சாப்பிட்டார்கள்.நாக்கில் மசமசவொன்று புளியேறி உச்சுக்கொட்டியது. 

‘நல்லா இரிக்கிடி ஏது புளியங்கா? ’ 

என்ற சல்மா இன்னுமொரு துண்டை எடுத்து வாயில் போட்டு மெல்லத்தொடங்கினாள்.கருக் புறுக்கென்ற ஓசையுடன் புளியம் துவையள் அவர்களின் கொடுப்புக்குள் ஊறி ஊறி உள்ளிறங்கி;க்கொண்டிருந்தது.

 ‘எங்கட மாமா வயலுக்கு போகக்குள்ள இடையில இருந்த புளியமரத்துல ஆஞ்சயாம், இன்னும் வூட்ட இரிக்கி , நாளைக்கும் கொண்டுவாரன்’ என்றாள் .
சஹ்ரா அவள்  கடை வாயில் எச்சில் ஊறி  நனைந்திருந்து. புறங்;கையால் துடைத்தபடி பொடி கற்களை எடுத்து குருவிகளை நோக்கி எறியத்தொடங்கிளாள்.

எதிர் வீட்டு மாமியின் மதிலில் இரண்டு பூனைகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபோட்டபடி சென்றன. இவர்களை கண்டு கொள்ளவே இல்லை .கீழே கிடந்த ‘பிளாஸ்ரிக்’; போத்தல் ஒன்றினால் ஸஹ்ரா அவைகளை நோக்கி எறிந்து வைத்தாள். அப்போதும் அவைகள் ‘போங்கடி நீங்களும் உங்கட போத்தலும்’  என்பது போல் எதிர்வினைகள் ஏதுமின்றி வீட்டுக்கூறையின் மீது தாவியேறி போய்க்கொண்டிருந்தன. 

‘எறியாதடி உம்மா முழிச்சிறுவா’ 

 மறுபடியும் கல்லொன்றால் பூனைகளை குறிபார்த்த ஸஹ்ராவை அடக்கினாள் சல்மா .

சாவகாசமாக நடந்தபடி தோழியர் வீதியைக்கடந்து அடுத்த தெருவுக்குள் நுழைந்தனர். எதிரே உள்ள வீதியில் ‘நானா’மார் ‘கிரிக்கட்’ விளையாடிக் கொண்டிருந்தார்கள்.உம்மா எழும்பினா தேடுவா என்ற அச்சம் நிழலைப்போல் சல்மாவின் பின்னால் நகரத் தொடங்கியது. வீட்டை விட்டு , சொல்லாம போகக்கூடாது என்ற குரல் பிடரியை அழுத்தியபடி அவளை நெருக்கியபடி இருந்தது. 

எதிரே நானாமார்களும் கண்டு விட்டார்கள் உம்மாவிடம் சொன்னால் இன்றைக்கு செம அடிதான் நினைக்கையில் நெஞ்சுக்குள் புறாக்கள் எழுந்து சிறகடிப்பது போல் தடதடவென அடித்துக்கத் தொடங்கியது. அவர்களைக் கடந்து ஐஸ்கிரீம் வேன் ஒன்று சென்றது. அதன் மியூசிக் சல்மாவை வசீகரிக்கும்.வாப்பா அந்த ஐஸ் கிரீமை திண்ணக்கூடாதென்பார். அடியில் கித்துள் பாணி மிதக்கும் சாம்பல் நிறத்திலானான ஐஸ் கிரீமை வாப்பா வாங்கிக்கொண்டு வருவார்.அதுவும் அலாதியான சுவைதான். உம்மாவுக்கும் அதென்டா நல்ல விருப்பம்.

‘சல்மா அங்கடி நெருப்புக்கோழி’ 

சஹ்ரா எதிர்த்திசையில் கையைநீட்டி கத்தினாள். 

‘ஓம்டி ‘

என்றபடி சல்மாவும் கத்தினாள். சுபைதா மாமியின் வீட்டில் தீக்கோழி இருப்பதாக நானாமார் கதைப்பதுண்டு. அவளுக்கும் அதனை பார்க்கும் ஆவல் உந்துவதும் அடங்குவதுமாய் கடந்த பல நாட்களாக தாப்புக்காட்டியபடிதான் இருந்தது. இப்படி திடீரென அதனைபார்ப்பேன் என கனவிலும் நினைத்திலேன் என வியந்தபடி கோழிக்கும் அவர்களுக்கமாக ஒரு பத்தடி தள்ளி நின்று வியப்புடன் பர்hத்துக்கொண்டிருந்தார்கள். அதன் தாடையில் தணலின் நிறத்தில் சதைகள் வழிந்து தொங்கின. கொக்…. கொக்……. என புறு புறுத்தபடி அது மண்ணைக்கிளறிக்கொண்டு இரை தேடிக்கொண்டிருந்தது.
 ‘உண்மையா நெருப்புத் தணலை விழுங்குமாடி’? 

சஹ்ரா  நம்ப முடியாதவளாய் கேட்டாள்.
’ஓம்டி பெரிய தணலாய் பார்த்து விழுங்குமாம்’.அதற்கு ஒன்டும் செய்யாதாம், நாம ஐஸ் திண்னுற மாதிரி நெருப்ப விழுங்கிப்போட்டு சும்மா இருக்குமாம்’.

 ‘ நீ பார்த்திருக்கியா?’ 

சல்மா இன்னும் நம்ப முடியாதவளாய் துருவத் தொடங்கினாள். 

‘இல்ல எங்கட வாப்பா சென்ன.’ 

கோழி இவர்களை பொருட்படுத்தாமல் கிளறிக்கொண்டிருந்தது.

பஸ்மியாவின் வீட்டை அண்மித்ததும் கேற்றில் நின்று அவளைக்கூப்பிட்டார்கள். பஸ்மினாவும் அவர்களின் வகுப்பில்தான் படிக்கின்றாள். அவள் நேற்று பாடசாலைக்கும் வரவில்லை .
’ஆரது ? ‘ 
என்றபடி பஸ்மியின் ராத்தா எட்டிப்பார்த்தா இவர்களைக் கண்டதும் சிரித்தபடி கேற்றை திறந்து 

‘ உள்ள வாங்க பொண்டுகள்’ என்றா.

வெட்கத்துடன் மருகியபடி இருவரும் உள்ளே சென்றார்கள். பஸ்மியா உள்வீட்டில் ஊஞ்சலில் ஆடியபடி டீ குடித்துக்கொண்டிருந்தாள் இவர்களைக்கண்டதும் எழுந்து வந்து ‘இருங்கடி ‘என்றாள் .பின் குசினிக்குள் குரலை நீட்டி  உம்மா ரெண்டு டீ தாங்க என்று கத்தினாள் .அவள் கடைக்குட்டி என்பதால் கொஞ்சம் செல்லம் அதிகம்  என சல்மாவின் உம்மா சொன்னது உண்மைதான் எனப்பட்டது. அவள் கேட்ட உடன் உம்மா வந்து மண்டபத்தினுள் தலை நீட்டிப் பார்த்தா இவர்களைக் கண்டதும் சிரித்தபடி 
‘ என்ன கூட்டாளியாக் காணல்லண்டு கிளம்பினயாக்கும்’ என்றபடி குசினிக்குள் சென்ற ஐந்து நிமிடத்தில் டீயுடன் வந்தா.

 பஸ்மியின் ராத்தா தலையை வாரிக்கொண்டு கதிரையில் இருந்தா. சற்று நேரத்தில்  கண்ணாடி முன்னால் நின்று கூந்தலை நீவி விட்டபடி அதனை உற்றுப் பார்த்தபடி நின்றா ஊஞ்சலில் இருக்கும் மூவருக்கும் உள்ளறைக்குள் நடக்கும் விடயங்களை துல்லியமாக காணக்கூடியதாக கதவு சற்று அகலத்திறந்து கிடந்தது. 

பஸ்மியின் ராத்தாவின் கூந்தல் அவவின் இடுப்பை விட்டும் நழுவி தரையை தொட்டுவிடுவேன் என போக்குக்காட்டியது. ஆச்சரியத்துடன் அவர்கள் அதனை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.கருகருவென்று மினுங்கியபடி அலை அலையென வசீகரமாய் ஆடிக்கொண்டிருந்தது. ஒரு ஸ்டுடிலில் அமர்ந்தபடி அதனை சடை போடத்தொடங்கினா. அவவின் விரல்கள் மடிவதும் தாழ்வதுமாக … பார்க்கப்ரவசமாகவும் வித்தை போலவும் இருந்தது. பஸ்மியாவோ  அதுவெல்லாம் எனக்கு அலுத்து விட்டது என்பது போல் பிரக்ஞையின்றி ஊஞ்சலி;ல் இருந்தாள் .

 சல்மா தன் கூந்தலை நீவிப்பார்த்துக்கொண்டாள் அது எலி வாலைப் போல அவள் கைக்குள் அடங்காமல் இருந்தது.  இப்படித்தான் நாமும் முடி வளர்க்க வேண்டும் மனசில் அவளுக்கும் நீண்ட கருங்கூந்தல் ஒய்யாரமாக ஆடிக் கொண்டிருந்தது. 

சற்றெக்கெல்லாம் அவள் முதுகின் பரப்பின் மேல் நீண்ட கரு நாகமொன்று படுத்து நெழிவதைப்போல் இருந்தது. கூந்தலை பின்னி முடித்தபின் ராத்தா ஹோலுக்கு வந்து இவர்களுடன்; கதைக்கத்தொடங்கினா. படிப்பு உம்மா வாப்பா எல்லாவற்றையும் கேட்டு விட்டு முற்றத்தில் இறங்கி ஆகாயத்தைப்பார்த்தபடி நின்றா .அவ அப்படி நிற்கையில் கதைகளில் படிக்கும் இளவரசிகளை நினைவூட்டியது. 
பஸ்மியா நேற்று பாசிக்குடாவுக்குப்போனதாக சொன்னாள். தன் பாடப்புத்தகத்தினுள் ஒழித்து வைத்துள்ள மயிலிறகை எடுத்து வந்து காட்டினாள் மூவரும் மிக இரகசியாக தங்களுக்கே  உரிய கவனத்துடன் அதனை பார்த்தார்கள் . 

‘ மூனு நாளைக்குப் பொறகுதான் குட்டி போடுமாம், அதுவரைக்கும் கையாலயும் தொடப்படாது.’ 

 கை வைக்கப் போன சஹ்ராவை இடைவெளியில் தடுத்து நிறுத்தினாள் பஸ்மி.சஹ்ரா முன் சென்ற விரல்களை அவுக்கென இழுத்துக்கொண்டாள். 
‘ மூனு இறகு போட்டா ஆளுக்கொன்று தாரன் என்ன ?’  

என்றபடி புத்தகத்தை மூடிக்கொண்டு போய் உள்ளறைக்குள் பத்திரப்படுத்தி விட்டு வந்தாள் .முற்றத்தில் இறங்கி மூவரும் மாமரத்தை அண்ணாந்து பார்த்தபடி நின்றார்கள் இரண்டு அணில்கள் துரத்தியபடி கிளை விட்டு கிளைதாவி ஓடித்திரிந்தன. வெளவால்கள் வந்து போன தடம் மரத்தில் தெரிந்தது. மாம் பிஞ்சுகளை நறுக்கிவிட்டு பாதியில் கைவிட்டுச்சென்றுள்ள வெளவாலின் மீது ஆத்திரம் வந்தது.குருட்டு வெளவால் மனசுக்குள் திட்டிக்கொண்டார்கள்.

பஸ்மியின்  அயல்  வீட்டில் சத்தமாக பாட்டு வந்தது. சகிக்க முடியவில்லை. பின்பக்கம் மூவரும் சென்றார்கள் .நேற்று பொறுக்கி வந்த சிப்பிகளை பஸ்மி பின் வளவில் ஒரு வாளிக்குள் போட்டு வைத்திருந்தாள். அதனை கவிழ்த்துக் கொட்டி காட்டினாள். பாசிக்குடாவில் இப்போது சிப்பிகள் இல்லை என்பது போல் அவள் கதை தொடர்ந்தது. இருவரும் ஆளாளுக்கு தமக்கு விருப்பமான சிப்பிகளை எடுத்துக் கொண்டனர். பாசிக்குடாவுக்கு  அடுத்த கிழமை போனா இன்னும் கொண்டு தாரன் என பஸ்மி வாக்களித்தாள். 

மதில்களின் மேல் காகங்கள் வரிசையாக குந்தியிருந்தன.நிவாரணம் எடுக்க வந்த ஏழைகளைப்போல்  நிற்கும் காகங்களைப்பார்த்து சிரிப்பாக வந்தது. ஒன்றுக் கொன்று ஏதோ பேசியபடி அவை குந்தியிருக்கும் அழகே அழகு. அதனை விரட்ட மனமின்றி மூவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் .
சல்மா பின் வளவிற்குள் இருந்த குழாயில் தண்ணீர் மொன்று குடித்தாள் . கைகனை குவித்து வாயைவைத்து குடித்ததில் நெஞ்சுப்பகுதி நனைந்திருந்தது. கால்களையும் கழுவிக் கொண்டாள். பின் வளவில் மூவரும் அமர்ந்து விளையாடத் தொடங்கினார்கள்.

சற்றைக்கெல்லாம்  விளையாட்டும் அலுப்புத்தட்டி விட்டது. ஜே மரத்தின் கீழிருந்து அண்ணாந்து பார்த்தார்கள். ஐதாக பழங்கள் தூரத்தில் இருந்தன.சல்மா நீளமான தடியொன்றால் அவற்றை அடித்து விழுத்தினாள். மண்ணில் விழுந்ததை ஊதியபடி வாய்க்குள்வைத்து மென்று துப்பினார்கள்.சல்மாவுக்கு ஒண்ணுக்கு முட்டியது .வீட்ட போகலாம் என அடக்கி;க்கொண்டாள்.மற்றவர்களின் பாத்றூமை பாவிப்பதில் அவளுக்கு கூச்சமாகவும் இருந்தது.பஸ்மியின் பின் வளவு விசாலமானது. தென்னை மா,மாதுளை ,தேசி, விழா,கொய்யா என வளவு கொள்ளா மரங்கள்.நிழல் விழுந்து மணல் குளிர்ச்சியாக இருந்தது. கதையளந்தபடி தோட்டத்தின் மறு முனைவரை சென்று விட்டார்கள். 

அன்னமின்னா மரத்தில் குருவி கூடு கட்டடியிருந்தது. சற்றே அவதானத்துடன் எட்டிப்பார்த்தார்கள். கண் விடுக்காத சிறிய குருவிகள் தலையை எம்பியபடி கத்திக்கொண்டிருந்தன.தாய்க்குருவி இவர்கள் சிலமன் கண்டு உயரப்பறந்து போய் வட்டமிட்டபடி கத்திக்கொண்டிருந்தது. ஒண்டும் செய்திடாதீங்க என்பது போல் அதன் கேவல் .சராலென மூவரும் விலகி பாவம்டி என்றார்கள் .தன் குஞ்சுகளை விட்டு நீங்கிய மறு கணத்தில் தாய் பறவை கூண்டுக்குள் வந்து குந்திக்கொண்டு தலையினை வெளியே நீட்டிப்பார்த்தபடி  படுத்துக்கிடந்தது.

கொக்குகள் தங்கிப்போவதாக விழாமரத்தை சுட்டிக்காட்டினாள் பஸ்மி.கொக்கின் எச்சம் கீழே வெள்ளைத்தீந்தை சிந்திக்கிடப்பதைப்போல் இருந்தது.குமட்டலெடுக்கும் வாடையும் கூடவே உதிர்ந்த வெண் இறகுகளும்.உச்சியில்  குச்சியிலான கூடொன்றும் தெரிந்தது.

வளவு முழுக்க தென்னை ஓசைகளும் சருகுகளும், சுள்ளிகளும்,பறவைகளின் எச்சமும் நீக்கமற இரைந்து கிடந்தன.எல்லாவற்றையும் மிகைத்தபடி பெரும் நிழல் அந்த தோட்டத்தினை போர்த்தியபடி சதா படுத்துக்கிடந்தது.

சல்மாவுக்கு வயிறு கடுப்பெடுத்து முட்டியது.’பஸ்மி பாத்றூம் போகனும். ‘ தயங்கியபடி காதுக்குள் கிசுகிசுத்தாள்.  சஹ்ராவும் எனக்கும் முடுக்குதுடி என்றாள். மூவரும் பாத்றூமை நோக்கி விரைந்து சென்றனர்.

கழுவி சுத்தம் செய்யப்பட்ட பாத்றூமில் பஸ்மியின் ராத்தாவின் கவுனொன்றும் பாவாடையும் ஈரம் சொட்டச்சொட்ட கிடந்தது. இப்பதான் மேல் கழுவியிருக்காப்போல. சல்மா பள பளவொன்று மாபிளின் மேல் கால்களை கவனமாக வைத்து முன்னேறத்தொடங்கினாள். கண்ணுக்குத்தெரியாத நறுமணங்களின் வாசம் மூக்கைத்துளைத்தது. பேஸ்வாஷ்,சிக்னல்,பிரஸ் ,மணக்கும் சோப்புக்கள் , முதுகு தேய்க்கும் பஞ்சு என பொருட்கள் நேர்த்தியாக  அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

‘ டீயேய் என்னடி செய்றாய் வாடி எனக்கும் முடுக்குது’ 

தட தடவென கதவைத்தட்டினாள் சஹ்ரா.

‘இந்தா வாரன் பொறுடி’  என்று விட்டு பேஷனின் மேல் குந்திக்கொண்டாள். வயிறு காலியாகி சாசுவதமாவதை உணர்ந்தாள். 

சற்றைக்கெல்லாம்  உம்மாவின் குரல் காட்டமாய் ஒலித்தது.

 ‘சல்மா நேரம் பெய்த்து ஸ்கூல் போறலியா எழும்பு’.

 தன் இடுப்புக்கீழ் ஈரலிப்பின் சொத சொதப்பு ஊர்ந்து இறங்கியது.  உம்மா அவளன்டை வந்து மோப்பம் பிடிப்பது போல் மூக்கை சுண்டினா. முதுகின் மேல் சுர்ரென்று உறைத்தது. உம்மா பிரம்புடன் நன்றிருந்தா.

 ‘இந்தப்பெரிய கிளட்டுப்பிள்ள  பாயில சூ அடிக்கிறதே வேலயாய்ப்பெய்த்து’.

‘ஒழும்புடி வெளியால கொண்டு போய் எல்லாத்தயும் கழுவிப்போடு’

 முதுகை தேய்த்தபடி ஈரலிப்பான ஆடைகளுடன் பாயை சுருட்டத்தொடங்கினாள்.விடியலின் பிரகாசம் உள்ளறைக்குள் எட்டிப்பார்த்தது. சல்மா கண்களை ஆயாசமாக கசக்கிக்கொண்டு ஜன்னலின் ஊடாக வானத்தைப்பார்த்தாள்

பஸ்மியின் தோட்டத்தில் சற்று  முன் பார்த்த காகங்கள் அவள் மதிலில்  குந்திக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தன.

2017.10.02 
விடி வெள்ளி பத்திரிகை 17.11.2017



No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...