Saturday 8 April 2017

ரெயில்வே ஸ்ரேஷன்.


2000ம்ஆண்டில் எழுதிய சிறுகதை தற்போதுள்ள வாழைச்சேனை புகையி நிலையம் யுத்த காலத்தில்  இப்படித்தான் இருந்தது.முடிந்தவரை அதன் வலிகளை இந்த புகையிரத நினைவுகள் மூலம் கதையாக்கியுள்ளேன்.அன்றைய சரி நிகர் பத்திரிகையில் பிரசுரம் பெற்றபோது வெகுவாகப்பேசப்பட்டது.

ரெயில்வே ஸ்ரேஷன்.


திடுதிப்பென்று வருவாரென்று இவன் எதிர்பார்க்கவில்லை. உம்மாவுக்கும் ஆச்சரியம் தான். மூத்தப்பா நம்ப முடியாதவராய் கண்களை இடுக்கியபடி சாய்மணக்கதிரையில் ஆவென்றிருந்தார். 

ஆங் அஹமது ஐயா, நான் தான் கருணாரட்ண, 

ஓவ் ஸ்ரேஷன் மாஸ்ரர், எப்படி சுகமா?|| 

அவர் குசலம் விசாரித்தும், பளிச்சென்று சிரித்ததும்  இவனுக்கு உறைக்கவில்லை. அவரைக் கண்டதில் அப்படியொரு அதிர்ச்சி. 

வாங்க மாஸ்ரர்|| என்ற உம்மாவின் குரலில் அதீத பரிவும், அன்பும், நெகிழ்வதை அவதானித்தான்.

இவன் கருணாரட்ணாவை விழித்தபடி நின்றான். மனிதர் எப்படி மாறிப் போய்வி;ட்டார். மூப்பும், மரணமும், காலங்களை வென்றபடி தன்பாட்டிற்கு ஓடிக்கொண்டுதானிருக்கின்றன. மூப்பும், நரையும், மேவிய கருணாரட்ணாவை பார்க்கும் போது இனம்புரியா அச்சம் மனசில் ஊறிப்பரவுகின்றது. முதுமையின் ஆக்கிரமிப்பை திண்மையுள்ள எந்தவொரு இளமையும் எதிர்த்திடவியலா கடுமவஸ்தை. இவனையும் அக்கணத்தில் தொற்றிக் கொண்டது. 

தன் மிருதுவான முகத்தில் சுருக்கங்கள் விழுவதான பிரேமை. கருகருவென்ற தாடியும், படியப்படிய வாரியிடப்பட்டு கண்ணாடி முன் நின்று அழகு பார்க்கும் கேசமும் திடீரென வெண் பஞ்சு மேகமாய் காற்றிலாடி திக்கொன்றாய் பறப்பதான உணர்வு. விரிந்த நெஞ்சின் திண்மையும், புஜங்களின் குறுகுறுப்பும் ஒடுங்கிப் போய், மூன்றாவது காலொன்றின் துணையுடன் நிதானித்து நடப்பதான தளர்வு. என்னவாயிற்று இவனுக்கு. இப்படி பேயறைந்தவன் போல் நிற்கிறானே!
 உம்மாவின் பார்வையில் அச்சம் விரவியது. சுதாகரித்துக் கொண்டான். கருணாரட்ணா ஐயா ஓலைப்பாயில் அமர்ந்தபடி சிங்களப் பிரதேசத்திற்கேயுரிய பண்டங்களை பகுத்து உம்மாவின் கையில் கொடுத்தபடி இருந்தார். 

சாபிர் தம்பி இந்தாங்க ஒங்களுக்கு என்றபடி ஒரு பெட்டியை நீட்டினார். இவன் கலைகளை ஆராதிப்பவன். என்ற வகையில் மரத்தினால் செதுக்கப்பட்ட ஓவியமொன்றை  இவனுக்கென கொணர்ந்திருந்தார். பல தடவை நன்றி கூறிக்கொண்டான். இரு மகளிர் நீர்க்குடமேந்தி செல்லும் அற்புதமான கலை வண்ணம். முலையின் முனைவு தொடக்கம் அதரங்களில் தேங்கி நின்ற இளஞ்சிரிப்பு வரை நுணுக்கமாக செதுக்கப்பட்ட சிற்பியின் புத்திசாலித்தனத்தை மெச்சிக் கொண்டான்.

கருணாரட்ணாவின் காலத்தில்தான் ஊருக்குள் சீராக ரெயில் ஓடியது. பிளாட்பாரத்தில் இவனினதும், இவனையொத்த வாண்டுகளினதும், வாழ்க்கை ஓரளவு சீராக ஓடிக்கொண்டிருந்ததும் இவர் காலத்தில்தான். மனசுக்குள் தூர்ந்து கிடக்கும் ரெயில்வே நினைவுகள், இந்த முதியவரால் கிளறப்பட்டுவிட்டது. வறுமையும், பிணியும், மிகுந்த அவலத்தனமான இவ்வாண்டுப்பருவத்தின் காயங்களும், அதனை மீறி நிற்கும் சமூகப்பிணைப்பும் இந்த சிங்களக் கிழவரின் வருகையால் மனக்குளத்தில் எகிறி வந்து மிதக்கத் தொடங்கின.

குடும்பத்தில் இவன் இரண்டாவது. மூத்தவன் தண்டச்சோறுண்டு, இந்திரியம் புடைக்க, கடலைவிற்கும் அயலூர் காரியை இழுத்துக் கொண்டு போய் அவள் ஊரிலேயே குடும்பம் நடத்துவதாக பின்னாளில் தெரிந்து கொண்டான். கழுதையாக பிறந்தாலும் மூத்ததாய் பிறக்கக் கூடாதென்பது இவனவில் மெய்த்துப் போயிற்று. வாப்பாவுக்கோ நிரந்த ஜீவனோபாயமில்லை. கூலிக்கென அங்குமிங்கும் ஆலாய் பறந்தார். அடுக்கடுக்காக தாம்பத்தியத்தில் காட்டிய அக்கரையை ஒரு தொழிலில் காட்டியிருந்தால,; எட்டுப் பிள்ளைகளுக்குப் பதிலாக பெயர் சொல்லிக் கொள்ளும் படி தலை நிமிர்ந்து நின்றிருக்கலாம். 

அவருடைய கனவு யாழ்ப்பாணத்து பாணிச்சுருட்டும், கட்டித்தயிரும், பழம்சோறும், அதப்பிக் கொள்ள வெற்றிலையும், தொட்டுக் கொள்ள உம்மாவுமாக கழிந்து போயிற்று. இதைத்தவிர வேறொரு கனவும், அவருக்குள் விரிந்திருக்காது. ஒரு நாள் கருவாக்கேணிக்கு முருங்கைக்காயும், கருவாடும், விற்கப் போனவர் கண்கள் தோண்டப்பட்டு கைகள் கட்டப்பட்டு இரண்டு நாட்களின் பின் ஒரு சிங்களப் பொலீஸ்காரனால் கண்டெடுத்து முன்றலில் கிடத்தும் வரை அவர் கனவு இப்படித்தான் மலர்ந்திருக்கும். 

வால் முறுக்கும் அந்த வயதில் காய்ந்துலர்ந்து கருவாடென சைக்கிளில் ஏறிச்சென்ற வாப்பா, ஒரு கொத்துக்காற்றூதி கொழுத்துக் கிடப்பதை இவன் பிரமிப்புடனும் மிகுந்த அச்சத்துடனும், பார்த்து நின்றான்.அன்று மயக்கம் போட்டு சரிந்த உம்மா. இத்தாவிலிருத்தி, மூன்று நாட்களின் பின் கண் திறந்தாள். மறு நாள் இவன் தலையில் ஏறிய அப்பச்சட்டி பிளாட்பாரத்தில் இவனை தள்ளிற்று. 


பனிவிசிறும் காலம் முருங்கைப்பூக்கள் முற்றம் முசிய சோளகப்பொறியாய் சொரிந்து கிடக்கும்;. ஆடாதோடை பதிமருந்தின் ஒளடதக் கமறல் நாசியில் கமறும். வெள்ளி நிலாவின் குளிர்ந்த சிரிப்பில் ஊரே கிறங்கிக் கிடக்கும். சூரியன் கதிர்கள் வீசா வைகரையில் இவன் அப்பப்பெட்டியுடன் வெளியேறுவான். வாசலில் உம்மா வந்து நிற்பா. தலை குணிந்து இவனுக்கு ஒரு இச்தருகையில் இவன் கழுத்தில் உம்மாவின் விழிநீர் கரிக்கும்  இவன் மயிர்களும் சிலிர்த்து நெஞ்சு புடைக்கும். இவன் தேயும் வரை படிக்கட்டில் வெறித்து நிற்பாள்உம்மா. அவள் விழிகளின் ஈரம் இவன் பிடரியைக் கவ்வியபடி பின் தொடரும்.

இந்தக் கருணாரட்ணாதான் அன்றைய ஸ்ரேஷன் மாஸ்ரர். ரெயில் வண்டியில் கடலை வியாபாரம், பீடி, சிகரெட், டொபி, விற்போர். கஞ்சியும், டீயும், விற்போர் அப்பம், இடியப்பம், பிட்டு, விற்போர் என ஓர் உணவுச்சாலையே நடமாடித்திரியும். பத்து நிமிஷம் உதய தேவி தரித்து நிற்கும்.அதற்குள் கூவித்திரியும், பொடியன்களும், பெட்டைகளுமாக ரெயில் பெட்டிகள் திணறும்.

”ஆ .....அப்பம் .. பாலப்பம், அம்மா எடுங்க. ஐயா திண்டு பார்த்து காசிதாங்க.”

 அவரவர் தொணியில் கூவித்திரிவர். கண்ணகி கிராமத்திலிருந்து கோமதி வண்டப்பம் கொண்டுவருவாள். அவள் கூவி விற்கும் அழகே தனி அழகு.
 வண்டப்பம், வண்டப்பம், என அவள் கூவிக் கொண்டு வருவாள். தயிர் விற்கும் குத்தூஸ் காக்கா அவளருகில் மெல்ல வந்து ”ஆ என்டப்பம் என்டப்பம்”  என சத்தம் வைப்பார். கோமதிக்கு நெஞ்சில் தேசிப்பழ அளவில் மொட்டு விரியத் தொடங்கிய வயது. சற்று எடுப்பாக இருப்பதால் குத்தூஸிக்கு அவளில் ஒரு கண். 

ரெயில் புறப்பட்டுச் சென்ற பின்பும் பிளாட்பாரம் ,கொப்பிலிருந்து தேனீக்களை கலைத்து விட்டது போல் இரைச்சலில் இருக்கும். அடுத்த ரெயில் வரும்வரை அரட்டைகள் நீளும். ஸ்ரேஷன் மாஸ்ரர் கோமதியை கூப்பிடுவார். 
என்ன கோமதி உன்டப்பம் நல்ல இனிப்போ, 
இஞ்ச ஒன்டு தாரும் திண்டுபாப்பம்.|| 

பொடி வைத்து அவர் பேசுகையில் மூக்கின் கீழ் மச்சம் விழுந்த பையன்கள் களுக்கென சிரிப்பர். அவளுக்கோ இதுவெல்லாம் அத்துப்படி. வியாபாரத்திலும் விண்ணி 
ஓம் ஸேர் அம்மா சீனி போட்டுத்தான் சுட்டவ.

 இந்தாங்க கணக்குல எழுதட்டா,கைக்காசா என்பாளே கருணாரட்ணாவின் முகத்தில் சிக்னலின் மினுமினுப்பு நூர்ந்து விடும்.

 பின்னாளில் இந்தக் கோமதி ஊருக்குள் நெஞ்சு நிறைய குண்டுடன் சீருடையணிந்து யமஹா பைக்கிள் வந்து இறங்கிய போது இவன் பிரமித்துப் போய் உறைந்து போனான். அவள் முகத்தை ஏறிடப்பயமாக இருந்தது. இந்த இறுக்கம் எப்படி இவளில் தொற்றிக்கொண்டது.

அக்காலத்திற்கென ஒரு ஐஸ்வர்யம் இருந்தது. தமிழன் முஸ்லிம் என பாகுபாடு காட்டாத காலம். பொடியன்களுடன் காக்காமாரும் சேர்ந்து போராடித்திரிந்த காலம். காக்காமாரின் வீடுகளில் வீரர்கள் துவக்கை சாத்திவிட்டு நித்திரை செய்த காலம். ஊருக்குள் வண்ணானும் மருத்துவிச்சியும் குடில் போட்டு சேவை புரிந்த காலம். நாசிவன் தீவிலும் கிரான் குளத்திலும் காவடியும், திருவிழாவும், பாhக்கச் சென்ற காக்காமார் கோயில் முற்றத்தில் உறங்கியெழுந்து வெயிலேறிச்சரிய சாவகாசமாக வீடேகிய காலமது.

அந்தக் காலத்தை சபித்த முனிவன் யாரென யோசிக்கையில் மர்மங்கள் விரிகின்றன. அதை சிறை பிடித்த கொடியவன் மூட்டிய தீயில் எரிந்து போன மானசீக உறவுகளின் பிரலாபம் காற்றில் அலைவதான பிரேமை இவனை நெடுநாளாகவே தொற்றிக் கொண்டு வதைக்கிறது. சரித்திரங்களும், வரலாறும், இவன் வளர்ச்சியுடன் திடீரென முத்துப்பெற்றதைப் போல் சகலதும் ஒரு திருப்பத்தில் வந்து ஸ்தம்பித்துவிட்டது.

துயரங்களின் ஓட்டுமொத்த சரிதங்களை சுமந்தபடி- வரலாற்று நதி தன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவனுடன் ரெயில்வேயில் விளையாடி வியாபாரம் செய்தவர்களை ஆயுதம் தூக்க  வைத்ததும் இந்த வரலாறுதான். அந்த ஆயுதங்களால் அவர்களுடன் பிரியமான மனதுடன் உறவாடியவர்களை துன்புறுத்தும்படி தூண்டிய வரலாறு எது. யோசிக்கையில் எல்லாமே குழம்பிக் கொண்டு வந்தது இவனுக்கு. நினைவுகள் நெக்குருகி மயங்குகின்றன.

கருணாரட்ணா மக்கிப்போன கூரையை வெறித்தபடி மூத்தாப்பாவின் சளப்பலில் ஐக்கியமாகியிருந்தார். உம்மா காச்சி வைத்த குரக்கன் கூழ் அவர் முன் ஆறிப்போய் உறைந்திருந்தது. 

தம்பி ஸ்ரேஷன் வரை போய் வருமா|| என்றார். கூழக்குடியுங்கோ ஸேர் போவம் என்று விட்டு இவன் உடைமாற்றத்தொடங்கினான்.

ஜே ஜேவென சனங்கள் வழிந்த ரெயில்வே ஸ்ரேஷன் ஓவென்று வெறிச்சோடிக்கிடந்தது. ஒன்றிரெண்டு நாய்கள் பிளாட்பாரத்தில் படுத்துக்கிடந்தன. இவர்களின் சில மங்கண்டு ஒரு நொண்டி நாயைத் தவிர மற்றெல்லாம் சடுதியாக எழுந்து முறைத்து விட்டு அப்பால் சென்றன. மாடுகளின் தங்குமிடமாய் கென்ரீன்|| இருந்தது. எந்தச்சாதனங்களுமற்று சிக்னல் றூம்|| வயர்களை மட்டும் துறுத்தியபடி பரிதாபமாகத் தெரிந்தது. 

ஸ்ரேஷன் மாஸ்ரரின் அறையிலிருந்த தகவல் கருவிகளும், டெலிபோனும், டிக்கற் ட்றக்கும், காணாமல் போயிருந்தன. மொத்தத்தில் தண்டவாளங்களற்ற ரெயில் பாதையின் தடம் மட்டும் எங்கள் முன் வியாபித்திருந்தது.

பயணிகள் தங்குமிடத்தில் ஒரு பைத்தியக்காரனின் சொத்துக்கள் இறைந்து கிடந்தன. அவன் எந்நேரமும் திரும்பி வரலாம் என்றுமாற் போல் கதவு உடைக்கப்பட்டு படுக்கையாக கிடந்தது. ஜன்னல்கள் மிகுந்த சிரமத்துடன் கழற்றப்பட்டிருந்தன. மேற் கூரையின் முன் பகுதி பெயர்த்தெடுக்கப்பட்டிருந்தது. நீர்த்தாங்கி வெடிப்பு விழ ஆரம்பித்து விட்டது. ஸ்ரோர்ரூமிலிருந்த இரும்புத்தளபாடங்கள், காகிதாகிகள், எதுவுமின்றி ஆவென்று கிடந்தது.

 கருணாரட்ண ஐயா ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவது முகம் இறுகிப்போயிருந்தது. நெஞ்சின் வலி முகத்தில் விழுந்து அவர் விழிகளில் இறங்கி கோடிடுவதை இவன் அவதானித்தான். 

அந்தக் காலத்து ஸ்ரே~னில் நின்றபடி ஏகாந்தமாய் மன உளைச்சலுடன் சுற்றுமுற்றும் பார்த்தபடி நின்றான். ஸ்ரேஷனின் முன் சடைத்து நின்ற வேப்பமரத்தில் வெசாக் கூடுகள் தொங்கின. காற்றிலாடும் அக்கூடுகளின் நர்த்தனம். இவனுக்கு மிகுந்த அச்சத்தை தந்தது. பழுது பார்க்கவென தரித்து நின்ற ரெயில் பெட்டிகளிற் சிலதில் இராணுவம் முகாமிட்டிருந்தது. அந்தப்பெட்டிகள் நிற்கும் தண்டவாளங்கள் மட்டும் காப்பாற்றப்பட்டிருந்தன. 

நீர்த்தாங்கியின் வலப்புறத்தில் ஒரு காட்டு மரம் .கொத்துக் கொத்தாய் காய்த்து கிடக்கும் அக்காலம். இப்போது மனித சஞ்சாரமற்று பட்டுவிடுவேன் பயங்காட்டியபடி உம்மென்றிருந்தது. வாண்டுப் பருவத்தில் கள்ளன் பொலீஸ் விளையாட தோப்புக்குள் இதுவொன்றுதான் தோதான மரம். புளி மாங்காயும், உப்புக்கல்லும், சேர்த்து நாவூற தின்ற பொன்னந்திகள் இவன் முன் பளிச்சிட்டன. நா நீரில் மிதந்தது. 

பிட்டுக்காரி சரஸா மரம் ஏறுவதில் வலு கெட்டி. சரசரவென ஏறுவாள். கட்டை பாவாடையும், சட்டையும், அணிந்து வரும் அவளில் சிக்னல் ராஹலாமிக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. இவளை குவார்ட்சுக்கு கூப்பிடுவதும், கதைப்பதுமாக இருந்தார். 
 அவர் ஏன் சதாபிட்டு திண்னுரார். உடம்பு கட்டியாயிடுமோ என்று குத்தூஸ் காக்கா நக்கலடிப்பார். சரஸா கொப்பிலிருந்த படி கந்துகளை பலம்கொண்ட மட்டும் உசுப்புவாள். மாங்காய் பொலபொலவென உதிர்ந்து சிதறும். அண்ணார்ந்தபடி இவன் கத்துவான்.

 ஏய் சரஸா உண்ட அது தெரியுதுடி மூடிக்க.
 இவன் தலையை குறிவைத்து அவள் எறியும் மாம்பிஞ்சு மட்டும் அதிகம் புளிப்பில்லாமல் இருக்கும். சீ வளிசல் ஹராங்குட்டி உள்ளுக்க எல்லாம் போட்டிருக்கண்டா.|| 

இனி ஒரு நாய்க்கும் பழம் பறிச்சித்தரமாட்டேன்.

 கொல்லென்ற சிரிப்பினிடை அவள் பொய்கோபத்தின் சௌந்தர்ய அழகுடன் எத்துனை அந்திகள் கடந்து போயிற்று. 

கருணாரட்ண மலசலகூடம் வரை எட்டிப்பார்த்துவிட்டு வந்தார். நீர்த்தாங்கியின் நிலவரை உடைக்கப்பட்டு அதற்குள் பொருத்தியிருந்த பம்செட்டை இராணுவம் எடுத்துச் சென்ற தகவலை இவன் தெரியப்படுத்தினான். மோட்டார் ரூமில் பெண்களின் உள்ளாடையும், உடைந்த கண்ணாடி வளையல்களும், சிதறிக்கிடந்தன. சுவர் முசிய குருதியின் சீந்தல். இவனுக்கு சர்வாங்கமும், ஒடுங்கிற்று. கருணாரட்னாவோ தான் அவமானப்பட்டு சிறுத்து விட்ட குற்ற உணர்வில் திணறிக் கொண்டிருந்தார். அழியாத சப்பாத்துத் தடங்களில் அவர் விழிகள் கிடந்து துடித்தன. இவன் இதுவெல்லாம் சகஜம் என்பதாய் சுவர்களை அலசத் தொடங்கினான். 

கரித்துண்டும், கள்ளிப்பாலும்;, கொண்டு சுவர்களில் கிறுக்கிய கிறுக்கல்கள் இன்னும் மனசின் ஆழத்தில் கோணல் பக்கங்களாக உறைந்திருக்கின்றன. இவன் பிரமிப்புடன் அந்த கிறுக்கல்களை பார்த்தபடி நடந்தான். 
சரசு ராஹலாமி காதல் ஒழிக. 
கமலினி அக்பர்|| 
பாலப்பமும் கடலை பருப்பும் தொடர்பை நிறுத்து||
 ஆயி~h நீ நைஸா||
ரயிலப்போல கைரிய்யா நீ ஆத்துப்பக்கம் வாரியா||

இவனுக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. இவனும் புஹாரியும் சேர்ந்து எழுதிய சில கிறுக்கல்களும் சுவரில் அப்படியே சற்று நிறம் மங்கி அழியாமல் துலங்கின. தனது பெயர் முதல் தடவையாக பத்திரிக்கையில் வந்ததைப் போன்ற ஆனந்தப் பரவசம் பால்யத்தின் கிறுக்கல்களில் புளகித்துப் போனான். 

கென்ரீன் நடத்திய சஸரா அக்காவையும் ஸ்ரேஷன் மாஸ்ரரையும் இணைத்து இவன் எழுதிய வாசகங்களும் புறச்சுவரில் நிறம் மங்கித்தெரிந்தன. குறும்பட்டியின் வலிமையை மனதார மெச்சிக் கொண்டான். மாம்பிஞ்சினால் அவை அழிக்கப்பட்டாலும் கூர்ந்து பார்க்கும் ஒருவரால் அதை முழுமையாக படித்துவிடலாம். கருணாரட்ணா இப்போது அதை பார்த்து விடுவாரோ என்ற சங்கடம் திடீரென இவனைக் கவ்விக் கொண்டது.

இவன் கடைசியாக ரெயிலேறிய நாள் நினைவின் நுணியில் துருத்தியது. 83ம் ஆண்டின் துவக்கத்தில் கொழும்புக்கு போகவென சாச்சாவுடன் இந்த ரெயில் ஸ்ரேஷனுக்கு வந்தது தான் நினைவில் நிற்கிறது. அப்போது ஆட்டோக்கள் அதிகம் ஊருக்குள் வராத காலம். ஒன்றிரண்டு வாடகைக் கார்கள். ரெயில்வே வளாகத்தில் தவமிருக்கும். 
இவன் கடைசியாக ஏறிய ரஜனி ரயிலின் சனக் கும்பலும் சிக்குபுக்கும் இன்னும் மூச்சில் முட்டுகிறது. அப்போது கருணாரட்ணா 20வரு~ங்களுக்குப் பின் இந்த கிராமத்தை விட்டும் ஓய்வு பெற்று சென்று விட்டார். இவனும் வியாபாரத்திற்கு முழுக்குப் போட்டு விட்டு படிப்பதில் ஆர்வமாகிய வயது.

வெலிக்கந்தையில் ரயிலுக்கு குண்டு வைத்து, ஏதுமறியா சனங்களின் இனிமையான  கனவுகளையும், உயிர்களையும், தகர்த்த போது தொடர்ந்தும் ரயிலை பார்க்க முடியவில்லை. பின்னர் காகித ஆலைக்கருகில் ஓடிவந்த ரெயிலை மரம் தரித்து தடுத்து ஏதுமறியா தமிழர்களை இந்தியன் சுட்டுப்பொசுக்கிய போது அந்தப் புகையின் கமறலில் ஒருவாரம் ஆகாரம் ஏதுமின்றி இவன் மயங்கிக் கிடந்ததும் இந்த ரெயிலால்தான். அதற்குப் பின் ரெயில்களின் சிக்குபுக்கு சங்கீதத்தை வெறுக்கத்தொடங்கிற்று மனது. இதற்குப் பின் ஊருக்குள் ரெயிலே ஓடவில்லை. ஸ்ரேஷனை மூடிவிட்டு ஊழியர்கள் தத்தம் கிராமங்களுக்கு சென்று விட்டனர். அவர்களின் படி மாதாமாதம் போய்க்கொண்டுதானிருந்தது.

இந்த ரெயில்வேயின் ஒவ்வொரு தூணிலும், சுவரிலும், இளமைக்காலத்தின் இனிய நினைவுகள் உறிஞ்சப்பட்டு உறைந்திருக்கின்றன. முடிவுறாத்துயரங்கள் இவனளவில் பொய்த்துப் போகவில்லை. சிந்தனையின் இடைவிடாத சங்கிலிகளை கோர்த்தபடி காலங்கள் கடந்து விட்டன. எதிலும் சிக்கிக் கொள்ளாமல் ஒவ்வொரு ஸ்தலத்திலும் உராய்ந்தபடி நினைவுப் பெருவெளியில் கணீரென்ற ஓசையெழுப்பியபடி அவை நீள்கின்றன. இறைக்க இறைக்க ஊறும் எண்ணெய்க்குதமென,அதன் ஊற்றுக்கள் கணக்கிறது. ஊற்றுக்களின் அடர்த்தியும், வீச்சமும், அச்சம் தரும் வீர்யத்துடன் பீறிட்டெலுகின்றன.

 இந்த வேட்கை இனி ஓய்வதற்கில்லை. கல்வெட்டுக்களென அவை மனசில் கவிழ்ந்து போயிற்று. கல்யாண மண்டபமாய் களிப்புற்றிருந்த ரெயில்வே ஸ்ரேஷன் சுடுகாடாய் ஆழ்ந்த மவுனத்துள் சிதிலமாகி சிதைவடைந்து நிற்பதை இவன் வெகுநேரமாக விம்மலுடன் பார்த்தபடி நின்றான்.


                                சரி நிகர் 2000-06-03.
                                 .  

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...