Monday, 21 January 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                              தொடர் : 32

ரணிலும்,பிரபாகரனும் சமாதானம் செய்து கொண்ட பின் வெடிச்சத்தங்கள் தற்காலிகமாக ஓய்ந்திருந்தன. இலங்கை ஆமியுடன்தான் சண்டையை நிறுத்தினார்கள் புலிகள். கிழக்கு முஸ்லிம்களோ இக்காலத்தில்தான் அதிகம் இழப்புகளை எதிர்கொண்டனர். ஆட்கடத்தல்,கப்பம் பெறல், கொலை கொள்ளை, என புலிகள் சமாதானத்தை முஸ்லிம்களுக்கெதிரான போராயுதமாக பயன்படுத்திக்கொண்டனர்.

 வாழைச்சேனையிலிருந்து கல்குடா கல்மடு என்ற இடத்திற்கு சமையலுக்குச்சென்ற இரு முஸ்லிம்களை (ஹயாத்து முஹம்மது ஐனுதீன் முஹம்மட், ஹயாத்து முஹம்மது ஜனுஸ்தீன் ஆகிய இருவரும் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த சகோதரர்கள்) கொலை செய்து ( 2002 ஜீன் 27ம்திகதி ) ஜனாசாவை இராணுவம் பொலிசார் முன்னிலையில் எரித்து சாம்பராக்கிய நெஞ்சை உறைய வைத்த கொடூர நிகழ்வும் இக்காலத்தில் தான் இடம் பெற்றது.

அன்றைய தினத்தில் மட்டும் 12 முஸ்லிம்கள் புலிகளின் கிரனைட் வீச்சினால் ஷஹீதாக்கப்பட்டு இலட்சக்கணக்கான சொத்துக்களும் வாழைச்சேனை பசாரும் எரித்து சாம்பராக்கப்பட்டன. அனைத்தையும் இலங்கை இராணுவம் மௌனமாக பார்த்துக்கொண்டுதான் இருந்தது.

ஏனெனில் பிரச்சினை இரானுவத்திற்கும்,பொலிசுக்கும் அல்ல. முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும்தான். எனவே முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்டபோது மௌன சாட்சிகளாக மனசாட்சியையும் மனிதத்தையும் குழி தோண்டிப்புதைத்து விட்டு அரச படைகள் கைகட்டி நின்றன.

சமாதான காலத்தில் புலிகளிடம் இரானுவத்தினதும் பொலிசாரினதும் தன்மானங்கள் சரணடைந்து கிடந்தன. இந்த சமாதான காலத்தில்தான் எனது சின்ன மகனுக்கு சுகயீனம் ஏற்பட்டது. விஷேட  வைத்தியர்கள் எமதூருக்கு  வருகை தராத காலம்.ஏன் தனியார் மருத்துவமனைகளும் இல்லை.

மருத்துவக்கல்லூரியில் படித்து முறைப்படி பட்டம் பெற்ற மருத்துவர்கள் இல்லாத காலம்.ஆனானப்பட்ட வைத்தியர்களிடம் மருந்து கலக்கியவர்களெல்லாம் வைத்தியர்களாக வலம் வந்து மக்களை சுரண்டிப்பிழைத்த காலம். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு “மோதின் முத்தி லெப்பை ஆகிய கதை” அப்படித்தான் ஓடலி முத்தி டொக்டர் ஆகியது.(ஓடலி என்பது மருந்து கலக்கும் நபரை குறிக்கும் )  இந்த முத்தின கேஸ்களிடமிருந்து தப்பிப்பிழைத்து மட்டக்களப்புக்கு சென்று வைத்தியரிடத்தில் மகனைக்காட்டிவிட்டு  திரும்பிக்கொண்டிருந்தேன். ஆட்டோவில்தான் கொண்டு சென்றோம்.கும்புறுமூளை இராணுவச்சாவடியில் நிறுத்தினார்கள்.

மகன் எனது மடியில் தலைவைத்து மனைவியின் மடியில் கால் நீட்டி நல்ல தூக்கம். அருகில் வந்த இராணுவ வீரனுக்கு நாங்களும் புலிகள்தான் இறங்கி நடக்கச்சொன்னான். பிள்ளை நன்றாக தூங்குவதை பார்க்கின்றான் .நான் மகனுக்கு சுகமில்லை என்று சிங்களத்தில் கதைத்தேன்.பரவாயில்லை இறங்கி நடவுங்கள் என்றான்.

கோபத்தை அடக்கிக்கொண்டு மகளை எழுப்பிப்பார்த்தேன். பிள்ளை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அடிமனத்தில் அன்று நிலவிய வெறுப்பும் வேதனையும் சொல்லில் மாளாது. இராணுவம் என்பது மனிதாபிமானத்தினால் களிம்பு பூசப்படும் தருணத்தில் இது நினைவுத்தடத்தில் நின்று கைகட்டிச்சிரிக்கின்றது. 

இப்படி சித்திரவதைகளை அனுபவித்த வந்தாறுமூளை,கும்புறுமூளை இரானுவச்சாவடிகளை தற்போது கடந்து செல்லும் போது மனதில் அந்த வடுக்கள் வந்து முள்ளாக குத்துகின்றது.
எங்கள் தேசம் 237

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.