Friday, 4 January 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


தொடர் : 31

கடந்த முப்பதாவது பத்திகளில் ஒரு வரலாற்றுப்பதிவு போல் நினைவுகளைத் தொகுத்திருந்தேன்.நினைவுத்தடங்களில் அவ்வப்போது விடுபட்டுப்போன சில குறிப்புகளை சேர்க்கமுடியவில்லை.சில நினைவுகள் என் வாழ்க்கையின் முக்கிய பதிவுகளாகியுள்ளன.சம்பவங்கள் நடைபெற்ற இடங்களை சில நேரங்களில் அடிக்கடி கடக்க வேண்டியுள்ளது.அப்போது கடந்த காலங்களின் நிழல்கள் என்னைப் பின்தொடர்வதை உணர்கின்றேன்.நண்பர்களுடன் அவற்றினை பகிரும் போது வலியும்,சமயங்களில் சுகமும் மேவுகின்றது.

காத்தான்குடிக்கு செல்லும் போது மஞ்சந்தொடுவாய் பள்ளிவாயலில் சுடப்பட்டுக்கிடந்த சுகைப் ஹாபிழும்,ஏறாவூருக்கு செல்லும்போது நண்பர் ஜாபிரும்,மருதமுனைக்குச்செல்லும் போது அடைக்கலம் தந்த நினைவுகளும் பல்கும்புறவில் அந்த கருப்பு நாய்,கல்கமுவியில்
குளித்து முங்கிய தாமரைக்குளம், இக்கரிகொல்லாவயில் என்னை நோக்கி வந்த அசாவும் என ஒவ்வொரு கிராமங்களிலும் ஒரு நினைவுத்தடம் அழியாமல் நிற்கிறது.

அவ்வாறே தேற்றாத்தீவும். அண்மையில் தேற்றாத்தீவுக்குச்சென்றிருந்தேன். 91இல் அடைக்கலம் தந்த அதே சேர்ச்சிக்கு முன் நண்பர் சக்கரவர்த்தியின் வீடு. அவரின் அப்பாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவென அவர் கனடாவிலிருந்து வந்திருந்தார்.அவர் வருகைகைய கேள்வியுற்று நானும் எஸ்.எல்.எம்.ஹனீபாவும் ஒரு மாலைப்பொழுதில் அங்கு சென்றோம்.ஒளி குடித்துக்களைத்திருந்த கருக்கலில் அவர் வாசலில் நின்றோம்.சக்கரவர்த்தி 90 களில் எனக்கு அறிமுகமான எழுத்தாளர்.நெஞ்சுரம் மிக்கவர்.

புலிகளினால் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு பயளிற்சியளிக்கப்பட்ட முதல் குழந்தைப்போராளி.பின்பு புலிகளுக்கெதிராக தன் பேனாவால் போராடியவர்.பாசிசத்திற்கு எப்போதும் தலைவணங்காத அவரின் எழுத்துதான் என்னை அவருடன் நெருக்கமாக்கியது.90களில் ஆரம்பித்த எழுத்தின் வழி உறவு 2012 நவம்பர் மாதம் 8ம் திகதி மாலை அவரை சந்திக்கும் முதல் சந்திப்பு வரை எதுவும் பேசிக்கொள்ளாத ஆத்மார்த்த நட்பு.பார்த்திராத நேசம்.

மிக எளிமையான மனிதர்.பந்தா இல்லாத பாசமான குடும்பம். மதுரைக்காரியை திருமணம் முடித்து இரு பிள்ளைகள்.ஒரு மகள் ,மகன். மகள் கனடாவில் என்ன படிக்கிறா என்றேன். ஆமிக்கு என்றார். எஸ்.எல்.எம்மும் நானும் ஏக காலத்தில் அதிர்ச்சியில் என்னவென்று கத்தினோம்.

நீங்கள் நினைக்கும்  ஆமியல்ல அங்கு. அங்கெல்லாம் ஆமியில் சேர்வதற்கு கடும் பிரயத்தனம் எடுக்க வேண்டும். மனதாபிமானத்திற்கு பெயர் போன இடங்களில் கனடாவும் ஒன்று. அங்குள்ளவர்கள் ஆமியை ஒரு விஷேட கற்கையாக தெரிவு செய்து கற்று அதில் பட்டம் பெறுகின்றார்கள். 

சக்கரவர்த்தியின் ஏன்ட அல்லாஹ்வே  .. .என்ற கதைதான் அவரைப்பார்க்க இத்துனை தூரம் எம்மை அழைத்து வந்துள்ளது. யுத்தத்தின் இரண்டாம் பாகம் தொகுதியிலுள்ள இந்தக்கதையை நிகர்த்த பல கதைகள் எழுதப்படாலும் சக்கரவர்த்தியின் கதையிலுள்ள உயிரோட்டமும் உயிர்க்கசிவும் வேறு கதைகளில் நான் அவதானிக்கவில்லை. யுத்த சந்நியாசம் யுத்தத்தை திண்போம் கவிதைத்தொகுதிகளிலும் அவரின் ஆக்ரோசத்தை தரிசிக்கலாம். ‘இந்த உலகத்தில் அனைவரும் உன்னை சரி என்று சொன்னாலும் நான் மட்டும் தனித்து நின்று உன்னை எதிர்ப்பேன்’ என்று பிரபாகரனைப்பார்த்து சவால் விட்ட சக்கரவர்த்தியின் ஓர்மைக்குமுன் நாம் எம்மாத்திரம்.

அதுவல்ல விடயம் சக்கரவர்த்தியின் மகள் ஆமிக்கு படிக்கின்றா என்றவுடன்  நாங்கள் அதிர்ந்ததை கண்ட அங்கிருந்த ஒரு குரல் நாம நினைக்கிற,நமக்கு இங்கு பரிச்சயமான,காக்கி உடையைக்கண்டாலே குலை நடுங்குற அல்லது குடியைக்கெடுக்குமோ என்று அஞ்சிக்கொண்டு பதுங்கி ஓட வைக்கும் ஆமியல்ல அவையள்  என்றது. ஆம் ஆமி என்றால் நம்மிடம் இருக்கும் மனப்பதிவு வேறு. 

யுத்த காலத்தில் கும்புறுமூளையில் பெரிய இராணுவ முகாம் இருந்தது. இந்த இரானுவ செக் பொயின்றில் வானகத்தில் வருபவர்கள் இறங்கி பதிவு செய்து கொண்டுதான் போக வேண்டும். தனி வாகனம் என்றாலும் இதுதான் சட்டம். ஆண்கள் பெண்கள்.குழந்தைகள் வயோதிபர்கள் நோயாளிகள் விதிவிலக்கல்ல. கர்ப்பிணிகளும் வாகனத்திலிருந்து இறங்கி  நடந்து போவதை பார்த்திருக்கின்றேன்.

எங்கள் தேசம் 236                                                                                                     ஊஞ்சல் இன்னும் ஆடும்….


No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.