Tuesday, 4 April 2017

ஆசையில் ஓர் கடிதம்

மக்கத்துச்சால்வையார் 99 களில் எனக்கு எழுதிய கடிதம். சுவையும் பதிவும் நறுமணமும் கமழும் அவரின் எழுத்தின் தீரா பித்தன் என்ற வகையில் இக்கடிதம் முக்கியம் பெறுகின்றது.அன்புள்ள அறபாத்

இன்று காலையில் இருபத்தி ஏழு சென்றிகளில் ஏறி இறங்கி ஊரை வந்தடைந்தேன். சுபஹ் தொழுத கையோடு கடைக்கு வந்து விட்டேன். உன்னோடு கழித்த இரண்டு பொழுதுகளும் மனதுக்கு ரொம்ப சந்தோஷம்.

எல்லோரும் என்னிடம் கேட்பது போல் நீயும் கேட்கிறாய் கதை சொல்வதை விட்டுவிட்டு கதையை எழுதலாமே என்கிறாய் எல்லோருக்கும் சொல்லும் பதிலை உனக்கு சொல்ல முடியாது. என்னை சுற்றி எவ்வளோ பிரச்சினைகள்.
எழுத்து என்பது மாவலி போல் நுங்கும் நுரையுமாக பிரவாகித்து பொங்கி வர வேண்டும் பேனாவும் நாமும் அதில் அள்ளுண்டு போக வேண்டும் அங்குதான் கதை மிளிரும் நாமோ இருநூறு அடியில் குழாய்க்கிணறு தோண்டி சிரட்டையில் அள்ளிய நீரில் நீச்சல் அடிக்கப்பார்க்கிறோம்.


என்னை விட்டா எவன்டா என்று குஸ்தி போடுகிறோம். எழுத்துக்கு தவமிருந்தவர்கள் பலரையும் நான் அறிவேன். இன்று பொன்னாடை பொற்கிழி காப்பியக்கோ என்று அரசியல்வாதிகளின் பதவிகளுக்கும் கடைக்கண் பார்வைகளுக்கும் தவமிருக்கும் இழி நிலையை காண்கிறோம்.

பட்டங்களும்,அங்கீகாரங்களும் வரும்போது வரட்டும். அதற்காக அலைய வேண்டாம். நமது முன்னோடிகள் பலரையும் ஏற்றுக்கொள்ள மறுத்த இவர்கள் நம்மை மட்டும் அணைத்துக்கொள்வார்கள் என்று எண்ணுவது மகா முட்டாள்தனம்.தளைய சிங்கம் எஸ்.பொ,அ.யேசுராசா போன்றவர்களுக்கு இன்றுவரை உரிய இடம் கிட்டவில்லை. இவற்றையெல்லாம் கடந்து நீ வரவேண்டும் என்பதுதான் எனது ஆசை.தமிழின் முக்கியமான படைப்பாளிகள் பலரையும் நான் காட்டியது மட்டுமல்ல நீயாகவும் சிலரை கண்டடைந்து இருப்பதை அறிந்து மகிழ்கிறேன். 

இன்று நமக்குள்ள ஒரே கலைஞன் உமாதான் ‘அரசனின் வருகையை’ அவன் எப்படி எழுதிப்போட்டான் பார்த்தாயா? கதையை படித்ததும் எனக்கு ஒரே பயம் அவன் பாதுகாப்பு ? என்ன நடக்கிறது என்ற பொறுத்திருந்து பார்ப்பம்.
அறபிகளுக்கு சமைத்த ஆட்டுக்கறி பிரியாணி வெகு ஜோர். அந்த சமையல் காரரின் கையைப்பிடித்து கொஞ்ம் வேண்டும் போல் இருந்தது. எழுத்துக்கலையும் சமையல் கலை போன்றதுதான் எல்லாம் செட்டாக வந்து அமைய வேண்டும். அந்த நாட்களில் எனது குருநாதர் எஸ்.பொ மாமியின் சமையல் பற்றி சுவாரஸ்யமாக பிரஸ்தாபிப்பார். அவர் வரும் நாளில் நாங்கள் பல்லுக்குத்தி பிரட்டல் போடுவோம் சமையல் என்பது பாகத்திலில்லை ‘பண்’ணில் என்பார். அவள் பெரிய பண்ணைக்காரி என்போமோ ‘பண்’ என்ற சொல்லுக்குள் ஏராளம் சுவைகள் உண்டு.உன்னுடைய ‘ஸ்ரேஷன் கதை’ சரியாக வந்திருக்கிறது அந்தக்கதை பற்றி நிறையப்பேசலாம் .நமது மொழியை சரியாகப்பிடித்து விட்டாய். இதுதான் சரியான பாட்டை.பயணம் சிறப்பாகட்டும். 

மெய்தான் என்னைப்பற்றி லா.ச.ராமாமிர்தம் ‘சங்குபுஷ்பம்’ என்று ஒரு கதை இருக்கின்றார் தினமணிக்கதிரில் பிரசுரமாகி இருக்கிறது. நண்பர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் நீண்ட நாட்களுக்குப்பிறகு நேற்று அனுப்பி இருக்கிறார். இந்த சிவகுமார் பற்றி நேரில் உன்னிடம் பேச வேண்டும் . லாசரா சங்குப்புஷ்பம் கதையில் என்னுடைய உரையாடலை அப்படியே பதிவு செய்கிறார். 
உங்கள் நாட்டு இலக்கியம் எப்படி இருக்கிறது ? 
உரை நடையைக் காட்டிலும் கவிதை நன்றாக இருக்கிறது
அங்கே புதுக்கவிதை மிகப்செழிப்படைந்திருக்கிறது.
அப்படியா?லாசரா
இதோ பாருங்கள் ஒரு புதுக்கவிதை 
‘துப்பாக்கியை தூக்கிவிட்ட ஒரு குழந்தையின் வாயில் கவிஞன் தன்னுடைய வார்த்தைகளை வைக்கிறான்” 
‘என் விரோதிகளை என் நண்பர்களை 
எனக்கு காட்டுவார்கள் 
அப்போது நான் சுடுவேன் ‘

இதில் பாருங்க அந்தப்பிள்ளக்கு தன் விரோதிகள் யார் என்று கூட தெரியாது. ஆனால் துப்பாக்கியை தூக்கிவிட்டது இதை விடப் பரிதாபம் என்ன வேண்டும் .எங்க நிலையே இப்படித்தான் இருக்கிறது. நண்பர் கூட யார் என்று அறியோம் இந்தக்கவிதையில் அதுவும் சூசகமாக உணர்த்தப்பட்டிருக்கிறது இவ்வாறு அந்தக்கதை எங்கள் இருவரின் உரையாடலின் உள்ளடக்கத்தைப் பதிவு செய்து கொண்டு செல்கிறது ஊருக்கு வரும்போது அதைப்படித்துப்பார்க்கலாம்.
மாளிகாகந்தையில் நீங்கள் இருக்கும் இடம் ரொம்ப அழகானது. அடேயப்பா சிங்கள கலாச்சார நிலையத்தை சுற்றிலும் எவ்வளவு மரங்கள். அன்று காலையில் நானும் நீஞ்களும் நடந்து பொரல்லை வீதியை அடைந்த நேரம் மனதுக்கு எவ்வளவு மலர்ச்சி எவ்வளவு பரவசம். நான் அறிந்தவரை மரங்களில்லாத பகுதி என்றால் நமது மக்கள் வாழும் பகுதிதான்;. நமக்கு மரங்களுடனான இடைவெளி கூடிப்போனது.மகான் வைக்கம் முஹம்மது பஷீர் ‘மரங்கள்’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். ஊருக்கு வரும் நாளில் படித்து ப்பார்க்கலாம்.

நேற்றிரவு தூங்கும் போது உன்னிடம் ஏரரளம் கதைகள் சொன்னேன் அதில் ஒன்று ரெண்டாவது எழுதப்பாரேன். கதை சொல்லிச்சொல்லி எனது காலம் போய்விட்டது.மாமியின் தேவைகளின் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. ‘சின்னப்பணிக்கனயாவது இந்த ஜன்மத்தில் எழுதி முடிப்பேனா நான் அறியேன்.

நௌபலுக்கு அவன் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்து கொடுத்து விட்டேன் . மாமியோ மற்றப்பிள்ளைகளோ திருமண நிகழ்வில் கலந்து கொள்ள மறுத்து விட்டார்கள். தந்தை என்ற வகையில் என்னால் செய்யக்கூடியது அதுதான். உன்னைக்கூட அழைக்க முடியவி;ல்லை. கொஞ்ச காலம் போனால் எல்லாம் சரிப்பட்டுவிடும். நான் எனது தாய் தந்தையருக்கு செய்ததை எனது பிள்ளைகள் அச்சொட்டாக அப்படியே எனக்கு செய்திருக்கிறார்கள். இதில் மனம் நோக எதுவும் இல்லை இது இப்படித்தான் நடக்கும் என்று நபி (ஸல் ) அவர்கள் எப்போதோ சொல்லி விட்டார்கள்.
நவ்பலின் பிள்ளைகள் அவருக்கு கண் குளிர்ச்சியாக அமைய வேண்டும் நானும் பிரார்த்திக்கின்றேன் நீங்களும் பிரார்த்தியுங்கள்.

இப்பொழுது எங்களின் கடைக்குட்;டி மாஜிதாவும் காதலில் விழுந்திருக்கிறாள் பொடியன் ரொம் நல்ல பையன் என்று கேள்வி .மாஜிதாவைவிடவும் பல மடங்கு நல்ல பையன் என்று கேள்வி. எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் எதில் ஒற்றுமை இல்லையோ இந்த விடயத்தில் மாமாவும் பிள்ளகைளும் நல்ல ஒற்றுமை. காதலே நீ வாழ்க!

மெய்தான் நமது ஈழத்து இலக்கிய உலகில் மீண்டும் காப்பிய காலம் மலர்ந்திருக்கிறது. நண்பர் ஜின்னா சரிபுத்தீன் அவர்கள் தமிழ் நாட்டு நாவலான மஹ்ஜபீனை காவியமாக்கி இருக்கின்றார்.

1960களின் கடைசிக்கூறில் முஸ்லிம் முரசில் சிந்து நதிக்கரையினிலே நாவலாக எழுதப்பட்டு பின்பு நூலாக வந்து இன்று காப்பியமாகி முப்பரிமாணமடைந்திருக்கிறது. இன்னும் படிக்கவில்லை என்றாவது படித்து நானும் அதைப்பற்றி நாலு வரி எழுத வேண்டும என்று எண்ணியிருக்கின்றேன். என்னிடம் இருக்கும் புத்தகங்களை எனது வாழ்நாளில் நிச்சயமாகப் படித்து முடிக்கவும் முடியாது. இருந்தாலும் புத்தகங்களை வாங்கி அலுமாரியில் அடுக்குவதில் பெரும் பைத்தியமாகவே இருக்கிறேன்.

ஊருக்கு வரும்போது என்னுடைய எக்ஸ்பேர்ட் சச்சியின் ‘நுகம்’ மற்றும் கண்மணி குலசேகரத்தின் ‘ஆதண்டாள் கோயில் குதிரை’ இரு தொகுதிகளையும் மறக்காமல் எடுத்து வாருங்கள். கடந்து பத்து வருடங்களில் தமிழி;ல் வெளிவந்த சிறுகதைத்தொகுதிகளில் இவ்விரு தொகுதிகளுக்கும் ;சிறப்பான இடமுண்டு. அதில் வரும் ‘பீ ‘ கதை எப்படி?
கடிதம் நீண்டு போகிறது இந்த இடத்தில் ‘பிரேக்’ போடுகிறேன் வரும் போது பூபாலசிங்கம் புத்தக கடைக்கும் ஒரு நடை போய் வாருங்கள். இரண்டு நாட்களாக நாவுக்கு ருசியாக சமைத்து போட் அந்த சமையல்காரருக்காகப் பிரார்த்திக்றேன் 
இவ்வண்ணம் 
எஸ்.எல்.எம் மாமா

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.