Thursday 27 February 2014

சிறுகதை
எழுத்தாளர் ஸ்டீபனின் வாக்கு மூலம்.


‘……. என்னை நீங்கள் நம்ப வேண்டும்.இந்த ஆக்கங்களை நான்தான் எழுதினேன்.நான் பல்கலைக்கழக இறுதிப்பரீட்சையில் காப்பியடித்து வெளியேற்றப்பட்ட கதை மட்டும் கற்பனை அல்ல. மற்றதெல்லாம் என் கற்பனையின் வடிவம்தான்.என் அப்பா கள்ள மரம் அறுக்கச்சென்ற போது புலிகளால் கடத்திக்கொல்லப்பட்ட கதை மட்டும் கொஞ்சம் மாற்றிக்காட்டியுள்ளேன்.நான் அப்பாவை ஒரு கடத்தல்காரனாக அடையாளப்படுத்துவது எனது தொழிலுக்கு அப்பழுக்கற்ற அவமானத்தை தேடித்தந்து விடும் என்பதால் அதிலும் சில மாற்றங்களை செய்துள்ளேன். தயவு செய்து நீங்கள் என்னை நம்பித்தான் ஆக வேண்டும் இம்முறை சாஹித்ய மண்டலப்பரிசும்,சால்வையும் எனக்கு தருவதுதான் பொருத்தம்.

 கனவில் சைத்தானைக்கண்டு வாய் உனாவும் கிறுக்குப் பிடித்த சிறுவனாய் எழுத்தாளர் ஸ்டீபன் ஆணைக் குழு முன் கெஞ்சிக் கொண்டிருந்தார்.அரசாங்கம் இவ்வருடம் சாஹித்ய மண்டலப் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களை உறுதிப்படுத்தும்  பணியை  தேசிய புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தது. 

இவ்வருடம் விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல் புலனாய்வுப்பிரிவின் தலைமையகத்திற்கு வந்த சேர்ந்த போது அதிகாலை 4.35 மணி, அப்போது எழுத்தாளர் ஸ்டீபன் புதுக்கடையில் ஒரு ‘பாஸ் பூட்’ சென்றரில் ‘அரேபிய நாண் ரொட்டி’யும் ‘சிக்கன் டெவலும்’ சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

அரச இலக்கிய விருதுக்கு படைப்பாளிகளை தெரிவு செய்யும் போது பின்பற்றப்படவேண்டிய சுற்று நிரூபத்தை புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி படித்து முடித்து விட்டு,சுழல் கதிரையின் இருக்கையை சற்று பின்நகர்த்தி சாய்ந்து கொண்டே கண்களை மூடிக்கொண்டார்.சுற்று நிரூபத்தின் கட்டளைப்பிரமாணப்படி படைப்பாளிகளின் தகுதிகளையும் பின்புலங்களையும் ஆராயத் தொடங்கினார்.அவருக்கு எங்கேயோ பொறி தட்டியது.

‘கப்டன் லால்’

 அவரின் காட்டமான குரல் நான்காம் மாடியையும் தாண்டி ஞானவிமல வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர்களின் காதுகளையும் அடைத்தது.

கப்டன் லால் பதறியடித்தபடி அவர் முன் சலூட் அடித்து விறைத்து நின்றார்.இந்த ஐந்து பேரில் இருவர் மட்டும்தான் விருதுக்கு தகுதியானவர்கள்.மற்றவர்களின் பின் புலம் படு மோசமாக இருக்கின்றது. இவர்களை சிபாரிசு செய்தவர்களை உடனே விசாரனைக்கு அழைப்பு விடுங்கள். படபடவென உத்தரவுகளை பிறப்பித்தார். தலைமை அதிகாரிக்கு மீண்டும் ஒரு சலூட் வைத்தார் கப்டன் லால்.

‘கப்டன் லால்’

 திரும்பிச் சென்ற லால் “சேர் “ என்று அவர் பக்கம் திரும்பினார்.அதே விறைப்பு அவரிடம் கழன்றுவிடாமல் அப்படியே இருந்தது.

இவர்களை விசாரிக்க ஒரு சுயாதீன விசாரனைக்கமிட்டியை நியமியுங்கள்.ஓய்வு பெற்ற குதிரைப்படை அதிகாரி ஜெனரல் கருனாரத்ன அத்து கோரளை அவர்களை கமிட்டியின் தலைவராக நான் சிபாரிவு செய்கின்றேன் .அவருக்கு முறைப்படி கடிதம் அனுப்புங்கள். மற்றவர்கள்; நிச்சயம் ஓய்வு பெற்ற தமிழ் அதிபர்.ஒருவர் இருக்கவேண்டும்.பேராசியர்கள் இருவர் உட்பட கமிட்டி உறுப்பினர்கள் ஆறு பேருக்கு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

‘ஒகே சேர். லால் மறுபடியும் ஒரு சலூட் அடித்து விட்டு வெளியேறிச்சென்றார்.

பேராசிரியர் நீலகண்டன் பகலுணவுக்கு வீடு வந்த போது, மனைவியின் முகத்தில் சவக்களையை கவனித்தார்.பகலுணவு மேசையில் மூடிவைக்கப்பட்டிருந்தது. 

“என்ன பேயறஞ்சவ போல நிற்காய்?” அவர் வார்த்தையில் நையாண்டி நெகிழ்ந்து தாழ்ந்தது. 

‘பேயல்ல அதுக்கு மேல’ என்று விட்டு அவள் கடிதத்தை அவர் கையில் திணித்தாள்.

பேராசிரியர் நீல கண்டன் கோபால ஐயர் அவர்கள்
இல 78ஃ2
செட்டித்தெரு
யாழ்ப்பாணம்
ஐயா!

விசாரணைக்கான அழைப்பு

பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பிலுள்ள அரச இலக்கிய விருது வழங்கும் நிறுவனத்தின் 2ம்சுற்று நிரூபனத்தின் 18ம்பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுமைகளை தெரிவு செய்யும் இலங்கைப்பிரஜை ஒருவரின் தகுதியினை உறுதி செய்யும் முகமாக நியமிக்கப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழு முன் தங்களை விசாரணை செய்ய தீர்மாணிக்கப்பட்டுள்ளதால் 2012.11.05ம் திகதி காலை 10.45 மணிக்கு ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இடம்: கொள்ளுப்பிட்டி விது~h  ஹோட்டல் கேட்போர் கூடம்
குறிப்பு: விசாரணைக்காலத்தில் பல்கலைக்கழகத்தின் கடமை விடுமுறைக்கு சிபாரிசு செய்வதுடன் ,தங்குமிடம் உணவு மற்றும் பயணக்கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.
ஓப்பம்
ஜெனரல் கருணாரத்தன அத்துகோரளை
தலைவர் விருதுகள் மற்றும் தகமைகளை ஒழுங்குபடுத்தும் சுயாதீன ஆணைக்குழு

பிரதிகள்

யாழ் அரச அதிபர்
யாழ் கட்டளைத்தளபதி
புலனாய்ப்பிரிவு வன்னி தலைமையகம்.   

பேராசியர் கடிதத்தை வெறித்தபடி இருந்தார். தனக்கு கூஜா  தூக்கி கோரஸ் பாடியவர்களை விருதுக்கு தெரிவு செய்தது. எவ்வளவு வினையை தேடித்தந்து விட்டது.என்பதை நினைக்கையில் அவருக்கு அவர் மேலேயே வெறுப்புத்தட்டிற்று.

‘இஞ்சாருங்கோ முதலிரவில என்னயே உத்துப்பார்த்தபடி நின்டதப்போல அந்தக்கடிதத்த உத்துப்பார்த்துட்டு நிற்காம வந்து சாப்பிடுங்கோ’ , இவளுக்கு நக்கலுக்கும் எள்ளலுக்கும் காலம் நேரம் தெரிவதில்லை மனசுக்குள் கறுவிக்கொண்டார் . 

‘விசாரணைக்குச்சென்றவர் யாரேனும் திரும்பி வந்திரிக்கினமோ’
போராசியர் மண்டையை குடைந்ததில் ஈற்றில் பூஜ்ஜியமே விடையாக கிடைத்தது. மட்டக்களப்பு,திருகோணமலையில் இருக்கும் நண்பர்களான பேராசிரியர்களை டெலிபோனில் கூப்பிட்டு விசாரணை பற்றி சொன்னார். அவர்களும் தங்களுக்கும் கடிதம் வந்திருப்பதாகவும் ஆனால் திகதிகளிலும்,நேரத்திலும் மாற்றம் இருப்பதாகவும், விசாரணைக்கு முகம் கொடுக்க சித்தமாக இருக்கின்றோம் எனவும் ஆறுதல் சொன்னார்கள்

அவர் தப்பிக்க முடியாத பொறிக்குள் அகப்பட்டிருப்தை உணர்ந்தார். சாக்குப்போக்குச்சொல்லி தட்டிக்கழித்துவிட முடியாது.சரியாக 4.11.2005 மாலை புலனாய்வுப்பிரிவு வந்து பயண ஏற்பாடுகள் நடைபெறுகின்றதா என்று கவனித்துவிட்டு செல்லும்.

01  ஸ்டீபனுக்கு நாய்களை பிடிக்காது. அதற்கு அவர் பல காரணங்களை கண்டு பிடித்து தன்னுடைய ‘எலும்புக்கூட்டின் பிரலாபம்’ நாவலில் எழுதியிருந்தார்.

1. நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகமிருப்பதால் குற்றவாளிகளை இலகுவில் கண்டுபிடித்து       விடுகிறது. (குற்றவாளிகளை கண்டு பிடிப்பவர்களை ஸ்டீபனுக்கு பிடிக்காது)

2. நாய்களுக்கு நினைவாற்றல் அதிகமுண்டு.

3. நாய்கள் நன்றி உள்ளது.யாரோ எப்போது வீசிய இறைச்சி துண்டையும் நினைவிலிருத்தி ஆளைக்கண்டதும் வாலை ஆட்டி நன்றியாய் குழையும். (ஸ்டீபனோ ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் குழுவின் ஆயுட்காலத் தலைவர்)

4. நாய்கள் கிளர்ச்சியின் போது நீண்ட நேரம் வால் பிணைந்து இன்பத்தில் திளைப்பது.      

5. புதை குழிகளை தோண்டி கழிவுகளையும் பிணங்களையும் தோண்டி வீசுவதால் அவசரமாக புதைத்து விட்டுப்போகும் கழிவுகளை அதிகாரிகளுக்கு காட்டிக்கொடுப்பது.

2010 ம்ஆண்டில்  புதை குழி காப்பியம்  நாவலை புக்கர் பரிசுக்கு அனுப்பியிருந்தார்.அவரின் நாவலை விட முள்ளிவாய்க்கால் நாவலை கன்சுல் மில்லத் தாஜுல் அதீப் மகா காப்பியமாக மாற்றிவிட்டார்.அவருக்கே புக்கர் பரிசை குழு பரிந்துரைத்தது.ஸ்டீபனின் புதை குழி காப்பியத்திற்கு தகுதிச்சான்றிதழ் கூட கிடைக்கவில்லை.புதை குழி காப்பியத்தில் வரும் ராசியான பாத்திரங்களில் தன்னை ஒரு கடத்தல்காரனாகவும், கப்பம் பெறும் பாதாள உலக சிற்றரசனாகவும்  வரும் ‘ரோனால்ட்’ பாத்திரமாக உருவாக்கியிருந்தார்.

அவர் செய்த மகா தவறு அந்தப்பாத்திரத்தில் அவரின் மனைவியின் செல்லப்பிராணியான ‘ரோமி ‘ என்ற நாய்க்குட்டியை உயிருடன் விட்டது.கடைசியில் அதுதான் அவருக்கு காதுக்குள் நுழைந்த ஓணானாகிவிட்டது.

02

பேராரிசியர் நீலகண்டன்  விசாரனைக்குழுவின் முன் அமர்ந்திருந்தார்.மட்டக்களப்பிலிருந்து பேராசியர் சகாவும்,திருகோணமலையிலிருந்து தமிழ்சங்கத்தலைவர் மகாலிங்கமும் வந்திருந்தனர். 
‘வேறு திகதிகளில் என்றுதானே என்னட்ட சொன்னவங்கள் இப்ப வந்து கல்லுளி மங்கனா நிற்கிறானுகள்’
நீலகண்டன் மனசுக்குள் கறுவிக்கொண்டார். ஆட்களை இடைவெளிவிட்டு ஆளையால் பேசிக்கொள்ள வழியின்றி உட்காரவைத்திருந்தனர்.
ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்த போது சுப நேரம் சரியாக காலை 10..55 

‘மிஸ்டர் மகாலிங்கம் உங்களிடம் எத்தனை புத்தகங்கள் தெரிவுக்கு வந்தன.?’
சம்பிரதாயபூர்வமான விசாரிப்புக்கள் ஏதுமின்றி நேரிடையாக தலைவர் மகாலிங்கத்ததை நோக்கி விரலை நீட்டினார்.தமிழ் பாடசாலை ஒன்றின் ஓய்வு பெற்ற அதிபர் மொழி பெயர்க்க ஆரம்பித்தார்.

‘7 புத்தகங்கள்’
‘எல்லாவற்றையும் படித்தீர்களா?’
‘ஓம் சேர்.’
‘நீங்கள் எந்த துறையில் அதிகம் ஈடுபட்டனீங்கள்’
‘நான் நாவல் எழுதுறதுல’
‘அப்ப ஏன் கவிதைய சிபாரிசு செய்தனீங்க?;
‘அது வந்து அது கொஞ்சம் நல்லா தெரிஞ்சுது சேர்’
‘தெரிஞ்சா எழுத்துன்ற உண்மைத்தன்மைய நீர் கவனிக்கவில்லையா? ’
‘………………………….’
மௌனம் ஆணைக்குழுவினருக்கும் அவருக்குமிடையே அவசத்துடன் உட்கார்ந்திருந்தது.

மிஸ்டர் அத்யமேன் அந்தக் கவிதை புத்தகத்தின்ற பெயரென்ன ? ஆணைக்குழுவின் தலைவர் பேராசியர் அதியமானின் பக்கம் திரும்பினார். அதியமான் ஆணைக்குழுவிற்கு தலைமை தாங்கும் தகுதி பெற்ற இரண்டாம் நிலை அதிகாரியாக கடமையேற்றுள்ளார். அவர் பைலை திறந்து படித்து விட்டு ‘சிறகிழந்த பறவை’  என்றார். 

‘அதை யார் எழுதினது ? மீண்டும் தலைவரின் குரல் காட்டமாக…
‘கமிலா ஸ்மித் ‘ என்ற பெண் எழுதியிருக்கின்றா.
‘ஆள் எப்படி?

‘நல்ல வடிவென்று இல்ல,கொஞ்சம் பழசு தட்டுன உடம்பு, ரெண்டு கலியாணம். இப்ப மூனு பேரோட சாட் பண்ணுறதாக தகவல் திரட்டியிருக்கம்”
‘நான் அத கேக்கல்ல ஐசே அவட பொலிற்றிக்கல் பேக்ரவுண்ட் ? ‘
‘அவக்கெண்டு தனியா பொலிசு இல்ல.தண்ணியக்கண்டா கால் நனைக்கிற கட்சி ’
‘அவட நூல் பற்றி எதிர்வினைகள் ஏதும்’ ? தலைவர்
‘ஆம் வந்துள்ளது ‘பேராசிரியர் அதியமான்
‘வாசியுங்கள்’ தலைவர்

தலைவர்,
விருதுகள் மற்றும் தகமைகளை ஒழுங்குபடுத்தும் சுயாதீன ஆணைக்குழு
காலி வீதி,கொள்ளுப்பிட்டி

‘கமிலா ஸ்மித்’ என்ற பெண் எழுத்தாளரின் கவிதைத் தொகுதி இந்த ஆண்டுக்கான இலக்கிய விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதை பத்திரிகை வாயிலாக அறிந்தேன். ‘சிறகிழந்த பறவை’   கவிதை தொகுதி நமது ஜனநாயத்திற்கும் பௌத்த மத ஆசாரத்திற்கும் ஆப்புவைக்கும் கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது.

இளைஞர்களை சிற்றின்பத்திற்கு தூண்டி கொள்ளுப்பிட்டி ஹிக்கடுவ கடற்கரை ஓரங்களில் பித்துப்பிடித்து அலைய வைக்கின்றது.இது சட்டப்படி விபச்சாரம் என்பதை அனுமதித்து நமது நிழல் வகை உடல் வேட்கை முதலீட்டுக்கான வாய்ப்பினை தட்டிப்பறிக்கும் செயலாகும்.வயாக்கராவை தடைவிதித்து விட்டு சிறகிழந்த பறவை பெண்ணுக்கு விருது வழங்குவது நமது அரசாங்கத்தின் அடிப்படைக்கொள்கைக்கும் அரசியலமைப்புக்கும் முரணாக அமைவதை சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

தவிர மேற்படி கவிதைத்தொகுதியில் அப்பட்டமாக முஸ்லிம் இனத்திலிருந்து காத்திரமாக எழுதி வரும் கவிஞர் திருமதி யாஸ்மினின் கவிதைகளை பெயர்த்தெடுத்து தான் எழுதியதாக பம்பாத்து காட்டியுள்ளார். இதன் மூலம்  தெரிவுக்குழுவை ஏமாற்றி அரசாங்கத்திற்கெதிராக மறைமுகமான சதியினையும் செய்துள்ளார்.

உலகில் வாழ் முஸ்லிம் சமூகத்தின் குர்ஆன் சுவர்க்கம் பற்றியும் புனித இறைத்தூதுவர்களான அமரர்களை வர்ணிக்கும் வசனங்களையும் கமீலா ஸ்மித் சிற்றின்பத்திற்கான அழைப்பாக தனது தொகுதியில் மாற்றி எழுதி மோசடி செய்திருக்கின்றார். இத்தகைய காரணங்களால் இவ்வருடம் அரச இலக்கிய விருதுக்கு இவரின் கவிதை நூலை தெரிவு செய்ததை நான் ஆட்சேபிக்கின்றேன். இதற்கு தடையுத்தரவைக்கோரும் மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன்.

 (வழக்கு எண் :  CBI 456/2012 ) இத்துடன் மனுவின் பிரதி ஒன்றையும் திருமதி யாஸ்மினின் கவிதைகள் சிலவற்றையும் இணைத்துள்ளேன். இவற்றினை ஆராய்ந்து இந்த தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

இப்படிக்கு
ஆர்.பி.தயாநிதி
குறுமன் வெளி
மட்டக்களப்பு

“மகாலிங்கம் இப்ப நீர் என்ன சொல்கிறீர் ? “ தலைவர்
‘ இது எதிர்கட்சிகளின் சதி சேர்.’ 
‘நான் அவ கவிதைகளைத்தான் பார்த்தேன் வேறொன்றுமறியேன்.’
;ஆல் ரைட் யு கன் கோ ;

03

ஸ்டீபனுக்கு தன் தொழிலை செய்யமுடியாத அளவிற்கு கெடுபிடிகள் வந்து விட்டன.மோப்ப நாய்களின் தொல்லை அவரை சுதந்திரமாக சுவாசிக்க முடியாமல் செய்து விட்டது. மாதமொரு நாவல் திட்டத்தை ஆரம்பித்தார்.ரமணி சந்திரன் பட்டுக்கோட்டை பிரபாகர்,ராஜே~;குமார் போன்றவர்களின் எழுத்துக்களை விழுந்து விழுந்து படித்தார்.

இப்படி அவர் பரீட்சைக்கும் படித்திருந்தால் அவமானப்பட்டு வெளியேறியிருக்க முடியாதே! அந்த அவமானங்களை நினைக்க நினைக்க நெஞ்சம் கொதித்தது.தன்னை பல்துறை ஆட்டக்காரனாக ‘டீபில்டப்’ செய்து கொள்ள கடும்பிரயத்தனங்கள் செய்தார். கெட்ட ஆவிகளின் சகவாசம் மட்டுமே மர்ம நாவல்களுக்கு பொருந்தி வரும் என்று யாரோ அவருக்கு சொல்லியிருக்க வேண்டும்.

‘ஆவிகளை வசப்படுத்துவது எப்படி ?’ ‘ஜின்களின் காட்டில் ’  ‘சாத்தானின் தனிமை,’ போன்ற நூல்களை படித்தார். அவரும் இப்லீசும் ஒரே தட்டில் உணவு உண்ணும் அளவிற்கு கெட்ட ஆவிகளை வசியப்படுத்தினார். பின்பு நாடகங்களை இயக்கிப்பார்த்தார். அவருக்குப்பொருத்தமாக பாத்திரங்களில் யாரும் இதுவரை நடிக்கவில்லை என்பதை தனது மனைவியின் நாய்க்குட்டி மூலம் துப்பறிந்து கொண்டார். சமகாலத்தில் நடித்துக்கொண்டிருப்பவர்கள் தன்னை விஞ்ச முடியாத அளவிற்கு நடிக்க வேண்டும். நடிப்பின் உச்சத்தை தொட வேண்டும் என்றெல்லாம் அலைவரிசைகளில் வந்து தாப்புக்காட்டினார்.
உவர் விளையும் பூமியில் அவர் முதல் நாடகத்தை அரங்கேற்றினார்.மக்கள் பரவசப்பட்டுப் போயினர். ஸ்டீபன் நாடகாசிரியர், ஸ்டீபன் இலக்கியவாதி, நாவலாசிரியர்.நெறியாளர். கதை வசனம் இசை இயக்கம்  பாதாள உலகம்,ஆட்கடத்தல்,கப்பம்,ஆட்கொலை அனைத்துக்கும் கூப்பிடு ஸ்டீபனை என்ற அளவிற்கு அவர் பெரிய ஆளாக வளர்ந்து விட்டார்.

4

மட்டக்களப்பிலிருந்து கலாநிதி சகா ஆணைக்குழு முன் தலை குணிந்து வீற்றிருந்தார்.

‘உங்களுடைய பெயர்.? ‘ தலைவர்
‘சிற்றம்பலம் சகா இரத்தினம்’
‘ எந்த பல்கலைகழகத்தில் என்ன துறையில் கலா நிதிப்பட்டம் பெற்றீர்கள்? ‘ தலைவர்
‘……………………….!’
‘ சொல்லுங்கள் மிஸ்டர் சகா ’
அது வந்து எனக்கு சும்மா ஒரு சொசைட்டியால என்ர எழுத்து வன்மய பாராட்டி கௌரவமா தந்தவங்க, ரவுடித்தனம் பண்ணுர அரசியல்வாதிக்கெல்லாம் கலாநிதி கொடுக்கேக்க,கொலைகாரனெல்லாம் எழுத்தாளர் பட்டம் அவதாரம் எடுத்திருக்க  சீர்திருத்தப் புறப்பட்ட எழுத்தாளனுக்கு தந்தா என்ன குறச்சல்,மற்றது சேர் தங்களின்ற பெயரில,மனைவியின்ற பெயரில,பிள்ளையின்ற பெயரிலெல்லாம் இலக்கியம், சஞ்சிகை என்ற லேபல்ல யாவாரம் பண்ணுர கூட்டத்த விட்டுப்போட்டு எங்கள கூப்பிட்டு கேள்வி கேக்குறது அவ்வளவு நல்லாயில்ல. 

சகாவுக்கு பதட்டத்தில் மூச்சிரைத்தது.நெஞ்சு மேலும் கீழுமாக தாண்டவமாடியது. கைக்குட்டையால் நெற்றி கழுத்து முகமெல்லாம் ஒற்றிக்கொண்டார். அவருக்கு தண்ணீர் போத்தலொன்று ஏற்கனேவே வழங்கப்பட்டிருந்தது. அதன் கழுத்தை திருகி அண்ணாந்தபடி வாயில் ஊற்றினார். ‘சளக் சளக் ‘ என நீர் தொண்டைக்குள் இறங்கி அவர் நெஞ்சை குளிர்த்தது.

‘மிஸ்டர் சபா ரிலாக்ஸ் பிளீஸ் ‘
 தலைவர் சற்று தணிந்து ஆறுதல் படுத்தினார். அவர் குரலில் பதுங்கியிருந்த மென்மையான பூனைக்குட்டி, சகாவின் நெஞ்சு ரோமங்களை தன் நுணி நாவால் நக்கிவிட்டது.
‘ ஒகே சேர். தேங்யூ’
மேலே சொல்லுங்கள் மிஸ்டர் சகா
தலைவர் ஊக்கப்படுத்தினார்.

கலாநிதி சகா இரத்தினம் தன் மனக்குமுறல்களை கொட்டித்தீர்க்க ஆயத்தமானார். நெடுநாளாய் அடைகாத்து தற்போதுதான் கண்விழித்து உலகை தகர்க்கப்புறப்பட்ட ‘டைனோசராய் ‘ அவர் நெஞ்சம் திமிறியது. 

 நான் இன்னும் சில விடயங்களை சொல்ல வேண்டும்.இலக்கிய அமைப்புக்களை விருது வழங்கும் சங்கங்களை சிலர் தாங்களே உருவாக்கி போ~pத்தும் வருகின்றனர். தலைவர் செயலாளர் எல்லாமே அவங்கள்தான். வருடா வருடம் விருதும் பரிசும் அவர்களுக்கு செல்லுமாற்போல் ஒரு தெரிவுக்குழுவையும் அமைத்து விடுகின்றனர்.

இலக்கிய உலகில் முதுகு சொறிபவனுக்கும்,கூஜாதூக்குபவனுக்கும்தான் காலம். அரசியல்வாதிகளின் கடாட்சம் கிடைத்து விட்டால் போதும் வருடாவருடம் விருதும் பொற்கிழியும் அவன் காலடியில் வந்து சேரும்.
வெளியீட்டகங்;களின் நிலை அதை விடக்கொடுமை சார்.எழுத்தாளனின் கடைசிச்சொட்டு இரத்ததையும் உறிஞ்சி எடுத்து தங்களுடைய பதிப்பகத்தின் பெயரில் எழுத்தாளனுடைய படைப்புக்களை வெளியிட்டு சாதனை படைத்ததாக பட்டியல் போடுகின்றனர்.

எழுத்தாளனின் பெயர் கூட யானைக்கு மேல் சுண்டெலி இருப்பதைப்போல சின்னதாய் ஒரு மூளையில் இருக்கும். பதிப்பாளரின் பெயரோ அரசியல்வாதியின் போஸ்டர் போல புத்தகத்தில். நீங்க இதெயெல்லாம் கண்டு கொள்ளவே மாட்டீர்களா? நான் ஒர்; பெண்ணுடைய புத்தகத்தை பரிந்துரை செய்தமைக்காக இந்த வயதான காலத்தில் உட்கார வைத்து கேள்வி கேட்பது நியாயமல்ல.

இதோ பாருங்கள் ஒரு வெளியீட்டகத்தின் புத்தக வெளியீட்டு விழாச்செலவுகள்.எழுத்தாளன் இந்தச்செலவவை ஏற்பது ஒரு சர்வதிகாரத்தனம்தானே.

 இலங்கையை ரணகளமாக்கிய புலிகளையும் அல்கைதாவையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் உங்களின்ர ஊடகங்கள் இவையள என்ன செய்யப்போகின்றன. ஒரு புத்தகத்தில் ஒன்பது புத்தகம் போடவும்,மற்றவனின் புலமைகளை திருடி வியாபாரமாக்கவும் சிந்திக்க தெரிஞ்ச கூட்டத்த விட்டுப்போட்டு எங்கள புடிச்சி கேள்வி கேட்பதில் என்ன நியாமுண்டு.

இஞ்சப்பாருங்க ஐயா ஒரு புத்தக வெளியீட்டு விழாச்செலவுகள எழுத்தாளனின் தலயில எப்படி அரைச்சி மெழுகியிருக்கினம். பேராசிரியர் சகா தன் நாட்குறிப்பேட்டிலிருந்து ஒரு தாளை உருவி வாசிக்கத்தொடங்கினார்.

எழுத்தாளர், கோகுலக்கண்ணண் அவர்கள்

எமது பதிப்பகத்தின் மூலம் தங்களின் நூலை வெளியிட்டதில் மகி;ழ்ச்சியடைவீர்கள் என்று நினைக்கின்றோம். வெளியீட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் நூல் வெளியீட்டுச்செலவுகளையும், மீதிப்புத்தகங்களையும் அனுப்பி வைக்கின்றோம். கீழ்காணும் தொகையை இக்கடிதம் கிடைத்து இரண்டு வாரத்திற்குள் தந்துதவுமாறு தங்களை அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.


நூலாசிரியருக்கு நூலை வெளியிட முன் தொலைபேசியில் பேசிய செலவு                                                                                                                                                            350.00
அவரின் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சொக்லேட் வாங்கிச்சென்றது 105.00
கணிணி தட்டெழுத்துச்செலவு                                                                               3500.00
முதலாவது புரூப் பிரின்ட் அவுட்                                                                              1075.00
இரண்டாவது புரூப் செலவு                                                                                       1075.00
அச்சுச்செலவு                                                                                                                         8500.00
அச்சகத்திலிருந்து புத்தகங்களை கொழும்பு பஸ்ஸில் ஏற்றி விட்டதில் கண்டக்டருக்கு                                                                                                                 200.00
ஆட்டோ செலவு                                                                                                                 350.00
வெளியீட்டு விழாவுக்காக பிரமுகர்களை சந்திக்க சென்ற செலவு       2050.00
கல்முனை மற்றும் காத்தான்குடி கடற்கரையில் இருந்தபடி வெளியீட்டு விழா தொடர்பாக அளவளாவியதில் டேஸ்ட் கிழங்கும், பாபத் அவியலும் தின்ற செலவு                                                                                                                               375.00
ஒரு போசன் ஈரல் பொறியல் (பதிப்பாசிரியர் பாபத் உண்பதில்லை)      240.00
வெளியீட்டு விழா தொடர்பான பத்திரிகை அறிக்கை விளம்பரம்              1023.00
வெளியீட்டு விளம்பர நிகழ்ச்சி தொலைக்காட்சிக்கு செலுத்தியது         2045.00
அழைப்பிதழ் செலவு                                                                                                       4500.00
சிற்றுண்டி                                                                                                                         3450.00
மண்டப வாடகை                                                                                                         2000.00
சவுன்ட் ஸ்டம்                                                                                                                 1500.00
வீடியோ , மற்றும் புகைப்பட செலவு                                                                   7505.00
மொத்தச்செலவு :                                                                                                        39843.00
புத்தக விற்பனை மூலம்                                                                                       15000.00
மீதி                                                                                                                                   24843.00

இவ்வண்ணம்
ஆமைகள் வெளியீட்டகம்


‘மிஸ்டர் சகா நீங்கள் இந்த விசாரணையை திசை திருப்ப எத்தனிப்பதை நான் கண்டிக்கின்றேன்.’  தலைவர்.

‘இல்லை சேர் என்னை மன்னிக்க வேண்டும். விருதுக்கு தெரிவு செய்யுமாறு எங்கள தெரிவு செய்தவர்கள விட்டுப்போட்டு எங்களப்போட்டு இந்தப்பாடு படுத்துறது நல்லமில்ல. நாங்க அப்படி என்ன தேசத்துரோகமா செஞ்சிட்டம்.? ‘

‘யாரோ எழுதிய காலத்திற்குப்பொருந்தாத கற்பனைக்கதைகளை செய்யுளாக்கி,கதையாக்கி,நாவலாக்கி, ‘உள்ளால நக்கி கிணாவி’ வருடா வருடம் விருதும் பொற்கிழியும் பெறும் பம்பாத்துகளை விசாரிக்க இந்த அரசாங்கம் ஒரு குழுவை நியமிக்காதது வேதனைக்குரியது. புற்றுமண்ணையெல்லாம் பொன் என்று சான்றிதழ் வழங்குவதும், கௌரவிப்பதும் நிறுத்தப்படாவிட்டால் என்னைப்போன்றவர்களும் இப்படித்தான் நூல்களை  தெரிவு செய்ய வேண்டி ஏற்படும் சேர்.’

 ‘நீங்கள் போகலாம் சகா.’ தலைவர்

பேராசியர் சகா உணர்ச்சி மேலீட்டால் தள்ளாடி நடந்து போனார்.பேராசிரியர் சிற்றம்பலம் ஓடி வந்து கைத்தாங்கலாக அவரை அழைத்துப்போய் இருக்கையில் உட்கார வைத்து மறுபடியும் நீh அருந்தக்கொடுத்தார்.

5
ஸ்டீபன் நடித்து அண்மையில் வெளிவந்த திரைக்காவியத்திற்கு பாதுகாப்புத்தரப்பில் நல்ல வரவேற்பிருந்தது.புலனாய்வுத்துறைக்கும் மிகுந்த சந்தோ~ம். ஸ்டீபன் தன்னை தானே மகா எழுத்தாளனாக நினைத்துக்கொண்டு இலக்கிய வண்டியை இழுத்துக்கொண்டு போவதான மாயலோகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்.

அவர் புகழின் உச்சங்களை தொட ஆரம்பித்தார்.இணையத்தளங்களில் அவரைப்பற்றி பேசி மகிழ்ந்தனர்.அவர் ஏக காலத்தில் வில்லனாகவும்,கதாநாயகனாகவும் நடித்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் புதை குழியில் இம்சை அரசன் கதையை திருடியதாக வேறு பிரபல இயக்குநர் சுதா ராஜ் அவர் மீது புலமைச்சொத்து மோசடி வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.

சட்டக்கல்லூரியில் படித்துப்பட்டம் பெறாத பல வக்கீல்கள் உள்ள  இந்த ஊரில் அவருக்குப்பரிந்து பேச பலர் முன் வந்தனர். ஸ்டீபனுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல அவர் விட்டெறிந்த கறுப்புப்பணத்தில் வளர்ந்தவர்கள் முன் வந்தனர்.அசத்தியம் வெல்ல சத்தியம் தோற்றது போல் பின்வாங்கியது.அது ஸ்டீபனின் வாழ்வில் மறக்கவியலா காவியத்தை எழுதிவிட்டுச்சென்றது
.
5-1

 தமிழ் சங்கத்தலைவர் மகாலிங்கத்தின் முறை வருவதற்கு முன் பேராசியர் அதியமான் ஆணைனக்குழு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஈமெயில் குறிப்பொன்றை வாசிக்கப்போவதாக அறிவித்தார்.ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வறைக்குள் சென்று வர   பத்து நிமிடங்களை எடுத்துக்கொண்டார்.  பேராசியர் சகா இன்னும் ஆசுவாசப்படவில்லை.கொதித்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள்  அவரை அமைதிப்படுத்திக்கொண்டிருந்தனர். 
                                                                                                                                                                                                                                               
2012 ம்ஆண்டிற்கான அரச இலக்கிய விருது வழங்கல் தொடர்பாக…..

2012 பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி இவ்வாண்டிற்கான இலக்கிய விருதுக்கு எழுத்தாளர் என தன்னை தானே அழைத்துக்கொள்ளும் ஸ்டீபன் என்பவரின் பெயரும் சிபாரிசு செய்யப்பட்டிருப்பதை நான் ஆட்சேபிக்கின்றேன்.ஏனெனின் இவர் இலக்கியம் தொடர்பான அடிப்படை அறிவை பெற்றிராதவர். வேறு துறைகளில் கைதேர்ந்தவர்.இந்தப்பூனையுமா பால் குடிக்கும் என்று நினைக்குமளவிற்கு இவரின் நிழல் உலகம் வியாபகமானது.

விருதுகளின் முகத்தில் கரி பூசும் இத்தகைய இலக்கிய தெரிவுக்கு எதிராக எனது கடுமையான ஆட்சேபனையை தெரிவிக்க விருமபுகின்றேன்.ஸ்டீபன் என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நபர் நரபலியிடும் கும்பலின் எடுபிடியாய் தொழில் பார்த்தவர். அவ்வப்போது பத்திரிகைகளின் இடைவெளிகளை அடைக்கும் மணிக்கவிதைகளை எழுதியவர். தனது அதிகார வர்க்கத்தின் செல்வாக்கைப்பயன்படுத்தி மணிக்கவிதைகளையும் போஸ்ட்கார்ட் கதைகளையும் தொகுப்பாக கொணர்ந்தவர்.

வன்னி மக்களின் துயரங்களைப்பாடி கவிதை உலகில் கொடி கட்டிப்பறக்கலாம் என்று சொந்தக்குரலினையே இழந்து பரிதாபமாக காட்சி தரும் குயில்களைப்போல் இந்த ஸ்டீபன் தொடர்பற்ற விவாதங்களை தன் கதைக்களமாக்கியவர்.பெரிய எழுத்தாளர்களின் எழுத்துக்களை திருடி தன் பெயரில் பத்தி  எழுத்து எழுதுபவர்களின் முதுகு சொறிந்து அவர்களின் அம்பாக இருப்பவர்.

அவ்வப்போது ஏறி வந்த ஏணிகளை எட்டி உதைத்து வானத்தைப்பார்த்து துப்பி அது தன் முகத்தில் விழுவதைக்கூட அமிர்தமாக நினைத்து வழித்தெடுக்கும் ஓர் அற்பனுக்கு விருது வழங்கி விருதின் கௌரவத்தையும் தனித்துவத்தையும் தாரை வார்ப்பதை நான் எதிர்க்கின்றேன்.

தவிர, ஸ்டீபனி;டம் இருக்கும் தனிச்சிறப்பு என்னவென்றால் ஆங்கில இலக்கியத்திலிருந்து திருடியதை தன் பெயரில் அப்படியே மாற்றி எழுதுவது.தானே எழுதியது போல் மாயை தோற்றுவிப்பது. இலக்கிய உலகின் புலனாய்வாளர்களால் அவரின் இலக்கியத்திருட்டு வெளிச்சத்திற்கு வரும் போது அப்படியில்ல இப்படி என சொதப்புவது. (பார்க்க இத்துடன் அப்பாஸின் கவிதைகளையும்,ஸ்டீபனின் கவிதைகளையும் ஒப்பாய்வு செய்த எனது குறிப்புகளை இணைத்துள்ளேன். ) 

விருதுகள்,சால்வைகளுக்காக ஸ்டீபன் பின்வழியால் நுழைந்து பேராசியர்களையும்,இலக்கிய செம்மல்களையும்,அரசியல் பெருந்தகைகளையும் வால் பிடிக்கும் குணம் கொண்டவர்; வக்கிர புத்தியுள்ள ஒருவருக்கு இந்த விருதை வழங்கி அரசாங்கத்தின் முகத்தில் சேற்றைப்பூச வேண்டாமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

தன்னைத்தானே இலக்கிய வேந்தன் என அழைத்துக்கொள்ளும் இவரின் இலக்கியத்தகிடுதத்தங்களை மிக விரைவில் ஜனாதிபதிக்கு அறிக்கையிட எண்ணியுள்ளேன். மிக தூய தமிழில் தமிழ் பேசும் மக்களின் முன்னிலையில் தமிழ் மொழியில் உரையாற்றும் ஜனாதிபதி அவர்களின் தமிழ் அறிவை கொச்சைப்படுத்து போல் உள்ளது இவருக்கு வழங்கும் விருது. எனவே இதனை உடனே இரத்துச்செய்து அவ்விருதை தகுதியான ஒருவருக்கு வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். 

இவ்வண்ணம்
தூயவன்-துறைநீலாவணை

6

ஸ்டீபன் அடிபட்ட சிறுத்தையின் சீற்றத்திலிருந்தார்.தனக்கு இவ்வருடம் கிடைக்க வேண்டிய விருதை தட்டிப்பறிக்க நினைக்கும் சதிகாரர்களை என்ன செய்யலாம் என சிந்தித்ததில் வாரமொரு எழுதும்  க்ரைம் நாவலைக்கூட இடை நிறுத்தியிருந்தார். விருதுக்கு எதிராக ஆணைக்குழுவிற்கு பிட்டிசன் அடித்தவர்களுக்கு வேறு பெயர்களில்  மொட்டைக்கடிதங்களும் கொலை மிரட்டல்களும் விட்டுப்பார்த்தார்.யாரும் அவரைக்கண்டு மிரள்வதாக தெரியவில்லை.பேஸ் புக்கிலும் வேறு பெயர்களில் உலா வந்து நல்ல பிள்ளைபோலவும் புத்திமான் போலவும் பில்டப்பண்ணிப்பார்த்தார்.

தவளையை மோப்பம் பிடிக்கும் பாம்பைப்போல் அவரை இலகுவில் அடையாளம் கண்டு கொள்ளும் வாசகர்கள் இடக்கு மடக்காக கேள்வி கேட்டு ஆளை அசர வைத்தனர்.ஸ்டீபன் இரண்டாம் கட்ட விசாரணைக்காக ஆயத்தமாக வேண்டும்.அதனை நினைக்க நினைக்க அவர் நெஞ்சான் கூடு விரிந்து ஒடுங்கியது.

7

தமிழ் சங்கத்தலைவர் மகாலிங்கம் ஆணைக்குழு முன் நின்றிருந்தார். நெற்றியை மறைத்து திருநீரால் கோடிட்டிருந்தார்.தமிழ் புலமையும் இலக்கிய அறிவுமிக்க ஆசான். சில பல்கலைக்கழக விரிவுரையாளர்,திறனாய்வாளர்கள் பலரையும் விடவும் மகாலிங்கம் இலக்கியத்தில் சமர்த்து.

 அவர் இத்தகைய விசாரணைக்கு வருவது இதுதான் முதற்தடைவ. தோளில் கிடந்த சால்வையால் வியர்வையை ஒற்றியபடி பதற்றத்துடன் உட்கார்ந்திருந்தார்.இதற்கு முன் விடுதலைப்புலிகளின் விசாரணை ஒன்றிற்கு சென்றிருக்கின்றார்.நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் “போர்க்கால கவிதைகளில் பஸ்தீன கவிதைகள் ஈழத்துபோரியல் சூழலுக்கு பொருந்திவரும் ஒத்த தன்மை கொண்டது. இரண்டும் நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புக்குரலாக ஒலிக்கின்றது” என்று பேசிவிட்டார்.

இதனை ஒற்றர்கள் தவறாக விளங்கி பலஸ்தீன போராட்டத்தை மகாலிங்கத்தார் போற்றுகின்றார் எனில் நமது போராட்டத்தை இகழ்கின்றார் என்றுதானே அர்த்தம். உளவுத்துறை மூலம் அவர் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அன்றைய வெளியீட்டு விழா பேச்சை அவர் எழுதிக்கொண்டு போனது அவர் மீது சுமத்தப்படவிருந்த  துரோகி பட்டத்தை காப்பாற்றிவிட்டது.மிகுந்த பிரயத்தனமெடுத்து அவர் இரண்டு கவிதைகளையும் ஒப்பாய்வு செய்து விளங்கப்படுத்தி அன்றிரவே விடுதலையானார்.அன்று விட்டவர்தான் மேடைகளில் போரியல் இலக்கியம் தொடர்பாக திருவாய் மலர்வதில்லை என்று .


பகலுணவுக்குப்பின்தான் அவர் மீதான விசாரணை ஆரம்பமானது.

தலைவர்

 மிஸ்டர் மகாலிங்கம். நீங்கள் ஏன் ஸ்டீபனின் புதை குழி நாவலை தெரிவு செய்தீர்கள். அதற்கு நீங்கள் 95 மார்க் போட்டுள்ளீர்கள். ஆணைக்குழுவிற்கு அவர் எழுத்து தொடர்பான நிறைய  அறிக்கைகள் வந்துள்ள நிலையில் நீங்கள் என்ன சொல்கின்றீர்கள். தலைவர் இப்படிக்கேட்டதும் வெலவெலத்துப்போனார் மகாலிங்கம்.பதற்றத்தில் அவர் நாக்குழறினார். 
நீங்கள் ‘டென்சன்’ ஆகாம சொல்லுங்க மகாலிங்கம். மொழி பெயர்ப்பாளர்.

‘அது வந்து……… மகாலிங்கம்
‘ப்ளீஸ் கமோன் மேன்’     தலைவர்

அவர் ஸ்டீபன் ஒரு மகாமேதை.புதைகுழி இரகசியம் நாவல் அவர் எழுதிய இலக்கியத்தரமிக்க படைப்பு. ஒரு கொலை செய்து அதிலிருந்து தப்பிக்கும் உபாயங்களை புனித வேத நூல்களிருந்து மேற்கோள் காட்டியிருப்பது நாவல் உலகில்  கையாளப்பட்ட நவீன யுத்தி.இது போன்றே தீர்க்கதரிசிகளின் வாழ்விருந்தும் சான்றுகளை முன் வைத்துள்ளார்.

உண்மையில் புதைகுழியின் இரகசியம் நாவல் ஈழத்து நாவல் வரிசை என்று  சகட்டு மேனிக்கு வக்காலத்து வாங்குவதை விட உலகத்தரம் வாய்ந்த அற்புதமான படைப்பு.ஓரான் பாமூக்கின் என் பெயர் சிவப்பு நாவலில் விபரிக்கப்படும் குகைவாசிகளின் நாயைப்போல் அவர் தன்னையும் ஒரு நாயாக,கருப்பாக,கொலைகாரனாக உருமாற்றி அற்புதமாக படைத்திருக்கின்றார். இவ்வளவு யதார்த்தமாக வேறு யாரும் நாவல் எழுதியதாக எனக்கு தெரியவில்லை.அதனாற்தான் அவரின் நாவலுக்கு 95 மார்க்க போட்டேன்.

ஸ்டீபனின் நாவலை பின்வருமாறு வகைப்படுத்தலாம் 
சமூகத்தளத்தில் புனிதராக அரிதாரம் பூசுவதிலுள்ள உள்ளாந்த வேக்காடு
எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையிலுள்ள மயான பீதி
மதத்திற்கும் அதன் மீது படிந்துள்ள  இறையியலுக்கும் உள்ள முரண்பாடு
அதிகார வர்க்கத்தினரை வசீகரிப்பதிலுள்ள நடை முறைச்சிக்கல்கள்.

இத்தகைய தத்துவார்த்த பார்வையினை அவர் வெகு இலாவகமாக கையாண்டிருப்பதால்தான் அவரின் நாவலை நான் சிபாரிசு செய்தேன் ஐயா !
ஆணைக்குழுவின் தலைவரும் ,சக உறுப்பினர்களும் ஆளையால் பார்த்துக் கொண்டனர்.அர்த்தம் பொதிந்த வார்த்தைகளில் மௌனம் குடியிருந்தது.அது மகாலிங்கத்தை விடுவிக்குமாறு ஏக காலத்தில் கூவியது.

மகாலிங்கம் தலை தப்பிய தம்பிரான் புண்ணியம் என்பது போல் தாவியோடி இருக்கையில் அமர்ந்தார்.

தீர்ப்பு நாளை வழங்கப்படுவதற்கு முன் ஒத்திவைக்கப்பட்ட ஸ்டீபன் மீதான விசாரணைக்கு அவர் முகம் கொடுக்க வேண்டும்.அந்த விசாரணையை புலனாய்வுப்பிரிவு மேற்கொள்ளும். கமிசன் என்ற கடமையில் முத்தாய்ப்பாக அறிக்கையினை புலனாய்வுத்தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டியது ஜெனரல் அத்துகோரளையின் பணியாகும்.

அவர் பின்வரும் வகையில் அறிக்கையினை தயார் செய்ய குறிப்புகளை எடுத்திருந்தார்.


இலக்கிய விருதினை மீளாய்வு செய்யும் ஜெனரல் அத்துகோரளை குழு அறிக்கை 

பிரதம அதிகாரி
புலனாய்வுப்பிரிவு

ஐயா
தங்களால்  நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவராகிய நான் அரச இலக்கிய விழா விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுத்தவர்களை விசாரித்தேன்.பல்வேறு சுவையான தகவல்களை எனது அறிக்கையில் தங்களுக்கு இணைத்துள்ளேன். தமிழ் இலக்கிய உலகு பிய்த்துப்போட்டு சொதி ஊற்றிய பராட்டாவாக ஊறிக்கிடக்கிறது.

சுயமாக எழுதும் ஆற்றல் பலருக்கு இல்லாமல் இருப்பதை விசாரணைகள் மூலம் தெரிந்து கொண்டேன்.சும்மா ஊதி ஊதி  பெருக்க வைக்கும் பலூனைப்போல் ஒவ்வொரு  துறையிலும் நூல்களும்,திறனாய்வுகளும் வந்து கொண்டே இருக்கின்றன.அரிப்பெடுக்கும் போது சொறிந்து கொள்ள பேஸ் புக்கில் வேறு கவிதைகள் அனல் பறக்க,ஆளாளுக்கு திறமையின் அடிப்படையில் புளக்குகளும் திறக்கப்பட்டுள்ளன.

காத்திரமானவைகள் விரல் விட்டு எண்ணிவிடலாம்.மற்றவையெல்லாம் சுய புராணம் பாடும் தரித்திரர்களின் பக்கங்களாகவே இருக்கின்றன.தந்திரங்கள் நிறைந்த தமிழ் இலக்கிய உலகு போல் வேறெங்கும் நான்  கண்டறியேன்.ஒவ்வொரு வரும் ஒரு தீவாக இயங்குகின்றார்கள்.ஒரு புத்தகம் போட்டவுடன் அவருக்கு வந்து குவியும் முதுகு சொறியும் வாழ்த்துக்களால் தன்னை ஒரு உலக மகா இலக்கிய கர்த்தாவாக கற்பனித்துக்கொள்கின்றனர். விளைவு எழுத்திலும் அடக்கமில்லை பேச்சிலும் அடக்கமில்லை.

காற்றிலேறி விண்ணைத்தொடும் புகழின் உச்சியில் இருப்பதாக கற்பனை உலகில் சஞ்சரிக்கும் இவர்களைப்பற்றி வெளி உலகத்தின் யதார்த்தமான கணிப்பீடுகள் சென்றவடைதில்லை.இவர்களை கைது செய்து சிறையிலடைத்து புனர்வாழ்வு அளிக்க வேண்டுமென்று சிபாரிசு செய்கின்றோம்.

தரமிக்க இலக்கிய நூல்களை படிக்க கொடுத்து இவர்களை மாயலோகத்திலிருந்து மீட்க வேண்டிய பணி , பொறுப்பு வாய்ந்த அரசு அதிகாரி என்ற வகையில் தங்கள் மீதுள்ள தார்மீக கடமைடயாகும்.

கவிதை ,நாவல்,காப்பியம்,சிறுகதை,திறனாய்வு என்று எல்லாவற்றிலும் மிகைப்படுத்தல்களே இங்கு நாறிக்கிடக்கிறது. விமர்சனங்கள் ஆளை உசுப்பேற்றிவிட்டு கிளைகளை தறிக்கும் வேலையை செய்கின்றன.முருங்கை மரத்தில் ஏறி நின்று யானையை கட்டலாம் என எழுத்தாளன் நினைக்கின்ற அளவிற்கு தன்னைப்பற்றி மிதமிஞ்சிய கற்பனையில் ஆழ்ந்து விட்டார்கள்.

 குழு மனப்பான்மை,அரசியலாக்கப்பட்ட இலக்கிய சந்தை தனிநபர் துதி பாடும் குழுக்கள்.இரகசியமாக பரிமாறப்படும் விருதுகள்,மனைவி பிள்ளையின் பெயரால் ஆரம்பிக்கப்படும் சஞ்சிகைகள்,என குமட்டலெடுக்கும் தமிழ் இலக்கிய உலகில் விரல் விட்டு எழுதும் சிலரே இனங்காணப்பட்டனர்.

தேசத்தின் மதிப்புமிகு அவர்களை இந்த அரசின் விருதுகளும் பட்டங்களும் சென்றடைவதில்லை என்பது அவர்களுக்கு பெரிதான கவலையை அளிப்பதில்லை.இந்த இலட்சணத்தில் மேற்குலகில் காலாவதியாகிப்போன  பின் நவீனத்துவ பைத்தியங்களின் அட்காசங்கள்,புதிதாக எழுத வந்த பெண்டிர் சிலரின் குமட்டல்கள் என நாற்றத்திற்கு மேல் நாற்றமாக தமிழ் இலக்கிய உலகு கவிச்சியடிக்கிறது.  ‘தன்னை விஞ்ச யாருண்டு? ‘ என அவர்களின் மார்புகள் மேலெழும்போது பரிதாப்படுவதா கோபப்படுவதா என தெரியவில்லை. 

இஸ்லாமிய வரலாற்றில் பேசப்படும் ஹசனுல் பன்னா,சையது குதுபு,எட்வர்ட் சையத் போன்று தன்னையும் நினைத்துக்கொண்டு கனவுலகில் மிதப்பவர்களின் நிழல்களில் கெட்ட ஆவிகள் உலாவுவதை பார்த்தவர்கள் இந்த ஆணைக்குழுவில் சாட்சி சொன்னார்கள்.அபத்தம் என்னவென்றால் பெரும்பாலானவர்கள் வேதாந்திகளாக இருப்பதுதான்.சுய விமர்சனங்களை எதிர் கொள்ளும் ஆற்றல்,தன்னைப்பற்றி எழும் காத்திரமான விமர்சனங்களை தாங்கும் மனோபலம் இவர்களுக்கு இல்லாமல் போனதுதான் இந்த ஆணைக்குழு அமைப்பதற்கான பிரதான காரணமாகும் என நான் கருதுகின்றேன்.

சரி இந்த அறிக்கையின் பிரதான பாத்திரமான ஸ்டீபன் என்பவருக்கும்,இன்னும் சிலருக்கும் இவ்வாண்டு  பரிந்துரைக்கப்பட்ட விருது பற்றிய சர்ச்சையாகும்.

 இதனை என் சுய அறிவுக்கு எட்டிய வகையில் மிகச்சரியாகவும்,நேர்மையாகவும் செய்துள்ளேன்.என் வயதை நிகர்த்த பேராசியர்கள், அறிஞர்களை அழைத்து விசாரித்ததில் அவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்ற  அதே வேளை ஒத்துழைப்பு நல்கியதற்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

பின்வரும் அடைவுகளை என் விசாரணை மூலம் கண்டடைந்துள்ளேன். இந்த அடிப்படையில் ஸ்டீபன் என்பவர் மட்டும் (ஏனையவர்களில் கமீலா ஸ்மித்தை தவிர பாராட்டுச்சான்றிதழ் வழங்க சிபாரிசு செய்கின்றேன்.) அரச விருதுக்கு தகுதியானவர் அல்ல என பின்வரும் முடிவுகளின் படி அறிக்கை இடுகின்றேன். 

ஸ்டீபன் ஒரு அரிதாரம் பூசிய மனிதர்
ஸ்டீபன் சுயமாக எழுதும் ஆற்றல் அற்ற பிரதிக்காரர்.
ஸ்டீபன் ஒரு மனநோயாளி 
சமூக குற்றங்களை நியாயப்படுத்த  புனித வேதங்களை தவறாக கையாளும் வேதாந்தி
தன்னை பரிசுத்தவனாக நியாயப்படுத்த பிறர் மீது சேறு மழை பொழியும் குரூர யுக்தியுள்ளவர்.
தன்னை சர்வதேச பயங்கரவாத அமைப்புகளினூடாக வெளிப்படுத்தியவர்.
நமது நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளை சரி கண்டவர்.

ஓப்பம்
ஜெனரல் கருனாரத்ன அத்து கோரளை
தலைவர் விருதுகள் மற்றும் தகமைகளை ஒழுங்குபடுத்தும் சுயாதீன ஆணைக்குழு
8

புலனாய்வுப்பிரிவின் மேல் தளத்தில் ஸ்டீபன் இரண்டாவது முறையாக அழைக்கப்பட்டிருந்தார்.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தலைவரின் மேசையில் மூடப்பட்டுக்கிடந்தது. உறையின் வாய் கிழக்கப்பட்டு அந்த அறிக்கை பல முறை படிக்கப்பட்டு சில வார்த்தைகளில் சிவப்பு மையால் அடிக்கோடிடப்பட்டிருந்தது. 

ஸ்டீபன் இம்முறை அரச இலக்கிய விருது உங்களுக்கு வழங்க முடியாதென்று நான் நியமித்த குழு சிபாரிசு செய்துள்ளது.அதற்குரிய காரணங்களும் வலுவாக இருக்கின்றன.

“என்னை விட சிறந்த எழுத்தாளனை நீங்கள் இந்த தமிழ் கூறும் நல்லுலகில் கண்டுபிடித்து விருது வழங்க முடியாது. இந்த விருதைப்பெற நானே ஏகத்திற்கும்; தகுதியானவன்.எனக்கே நடுவர்களும் மார்க் போட்டுள்ளார்கள்”. மறுபடியும் ஸ்டீபன் புலம்பத் தொடங்கினார்.

‘மன்னிக்க வேண்டும் உங்களை தெரிவு செய்த நடுவர்கள் அது பிழை என்று சாட்சி பகர்ந்திருக்கின்றார்கள். ‘ 

‘இதோ அந்த அறிக்கை ‘ என தலைவர் வாய் கிழிக்கப்பட்டு மேசையில் கிடந்த கவரை தூக்கி ஸ்டீபனுக்கு முன் எறிந்தார்.

அவர் அரசியல் அதிகார மையத்தினால் ஏமாற்றப்பட்டதை நினைத்து ஆத்திரப்பட்டார். உடம்பு கிடந்து தகித்தது.

எழுத்தாளர் மையமும்,அதிகார வர்க்கமும் தன்னை கறி வேப்பிலையாகப்பயன்படுத்தி வீசியதை நினைக்க அவருக்கு வெஞ்சினத்தை அடக்கமுடியவில்லை .”துரோகிகள் “ என மனசுக்குள் கறுவிக்கொண்டார்.

புலனாய்வுப்பிரிவின் தலைவர் அவர்களே ! அப்படி யென்றால் என் நாவலுடன் போட்டியிட்ட சாணக்கியனின் நாவலுக்கும் பரிசும் ,விருதும் வழங்கக்கூடாது. அதுவும் என்னைப்போல் எழுதித்தள்ளியதுதான்.அதில் இலக்கியத்தின் பெயரால் காமம் செய்வது எப்படி என்று விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது.

“இதோ பாருங்கள் “
புத்தகத்திலிருந்து சில பந்திகள்  அடங்கிய கடதாசியை நீட்டினார்
சிருங்கார  இரவு

1- சிங்காரிகளை வளைத்துப்போட சில உத்திகள்
1. தொலைபேசியில் மணிக்கணக்காகப்பேசுவது
2. மற்றவர்களின் குறைகளை இயலுமானவரை அவள் வெறுப்பது போல் போட்டு வைப்பது.
3.சக எழுத்தாளர்களின் படைப்புக்களை நகல் எடுத்தது என்று நிரூபிப்பது.இதற்கு கண்டிப்பாக ஐரோப்பிய இலக்கியங்களை படிக்க வேண்டும். அவ்வப்போது காலச்சுவடு, சொல் புதிது.உயிர்மை,கசடதபர சஞ்சிகைகள் படித்தால் போதும்.
4. தன்னைப்பற்றி அவளுக்குள் நல்ல இமேஜை வளர்க்க அவளின்  படைப்புக்களை அற்புதம் என்று புகழ்வது.கொஞ்சம் இப்படியும் வந்திருந்தால் சூப்பர் என நமது புலமையை விதைப்பது.
5. கொஞ்சம் அவளை நம்மிடம் கொண்டு வர வாத்சல்யநாயனாரின் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்வது.

இது இலக்கியத்தின் பெயரால் நடைபெறும் பெண்களை களிப்பேற்றி கை கழுவும் வித்தை.

இது போன்ற நூலுக்கு விருது வங்குவது கூடுமென்றால் எனது புதைகுழியின் இரகசியம் நாவலுக்கும் வழங்கத்தானே வேண்டும்.ஸ்டீபன் வாதாடிக்கொண்டிருந்தார்.

அவரின் உள்ளக்கிடக்கைகளில் இவ்வருடத்திற்கான இலக்கிய விருது ஒரு பட்டாம்பூச்சியாக பறக்கவாரம்பித்து இன்றுடன் மூன்று மாதங்களாகின்றது.அது சிறகை விரிப்பதும் பறப்பதுமாக அவருக்கு போக்குக்காட்டிக்கொண்டிருந்தது.

8

“….இவ்வாண்டிற்கான இலக்கிய விருதுக்கு உமர் கையாமின் ‘ஞான மூலிகை’ மொழி பெயர்ப்பு நூல் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதனை உரைநடையிலிருந்து புதுக்கவிதை வடிமாக்கிய இலக்கிய வேந்தர்,தமிழ் கூறும் நல்லுலகில் வசன கவிதைக்கொரு இலக்கணம் அமைத்த  ‘சம்சுல் மில்லத் ‘ கவிஞர் கிள்ளி வளவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.சிறுகதைக்கு….. 

மேற்கொண்டு இன்றைய பத்திரிகையைப் படிக்க ஸ்டீபனால் முடியவில்லை.அவர் வானத்தை வெறித்தபடி முற்றத்தில் அமர்ந்திருந்தார் .மேசை முழுக்க இரவு எழுதி முடித்த “பேயாட்சியில் எலும்புக்கூடுகள”; நாவலின் பிரதிகள் அங்குமிங்கும் சிதறிக்கிடந்தன.புகைந்து பாதியில் நெருப்புணைந்த சிகரெட் துண்டுகளைக்கூட மனைவியால் அகற்ற முடியவில்லை.கேட்டால் மனைவி என்றால் சிகரெட் துண்டு பொறுக்கும் முனிசிபாலிட்டி வேலைக்காரியா என்பாள். 

ஸ்டீபன் தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருந்தார்.அவர் மனம் அவமானத்தால் சிறுத்தது.நம்பிக் கழுத்தறுத்து விட்ட சக எழுத்தாளர்கள் பற்றி யோசிக்கத்தொடங்கினார்.அவரால் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை ”தயவு செய்து என்னை நம்புங்கள் , இவ்வாண்டிற்கான இலக்கிய விருது எனக்குத்தான் தரப்பட வேண்டும்” என அவர் வாய் அடிக்கடி அரற்றிக்கொண்டிருந்தது.

படித்துக்கொண்டிருந்த பத்திரிகையை கை நீளும் மட்டும் வீசியெறிந்தார்.வீட்டை விட்டு வெளியே வேகமாக நடக்கத்தொடங்கினார்.அவரின் முதுகுக்குப்பின் பல நாய்கள் வேகமாக குரைக்கும் சத்தம் கேட்டது. அவர் மனைவியின் செல்லப்பிராணியான ‘ரோமி’யின் ஊளையிடல் அவரை இன்னும் ஆத்திரமூட்டியது.. 

அவரை ஏவி விட்ட கவிஞர்களும்,எழுத்தாளர்களும் அவர் முன் தோன்றி தோன்றித் மறைந்தவர்களாய்… 

அந்த வீதியில் மிஸ்டர் ஸ்டீபன் ஏகாந்தனாய்  தன்னை கடந்து செல்பவர்களையும் மறந்த நிலையில் நடந்து கொண்டிருந்தார். 
2013.02.16





No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...