Monday, 15 October 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்தொடர்- 25

நோன்பு காலத்தில் சாமத்தில் எழுப்ப வரும் பாவாமார்களை அச்சமூட்ட அக்காலத்தில் சில இளைஞர்கள் இருந்தனர்.சில்மிசம் செய்வதே இவர்களின் தொழில்.சில பாவாமார்களுக்கு நள்ளிரவில் நடமாடுவது அச்சம் என்பதை இவர்கள் எப்படியோ கண்டு பிடித்து  விடுவர்.ஆளரவமற்ற தெருக்களில் இந்த இளைஞர் கூட்டம் வெள்ளைத்துணியால் தங்களை முழுமையாக போர்த்தியபடி  நள்ளிரவில் மறைந்திருப்பர்.

ரபானை தட்டிக்கொண்டு வரும் பாவாமார்களின் முன் இவர்கள் திடீரென எழும்பியவுடன் ரபானை வீசி விட்டு விழுந்தடித்து ஓடிய பாவாமார்களின் கதைகள் அனந்தம். நோன்பு முடியும் வரை இந்தக்கதைகள் சுவாரஸ்யமாக தெருக்களில் பேசப்படும்.

2011 இல் முஸ்லிம் கிராமங்களில் கிறீஸ் மனிதனின் நடமாட்டம் பாவாமார்களின் பிரசன்னத்தை சற்று குறைத்து விட்டது.கிறீஸ் மனிதனின் பெயரால் பல தில்லுமுல்லுகள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

பாவாவையும்,அப்துலையும் சுட்டுக்கொன்ற பின் இந்திய இராணுவம் பசாருக்கு வந்து காதர் டெக்ஸ்சின் முன் வராந்தாவில் சதா தைத்தபடி இருக்கும்  சீனட்டி டைலரையும் சுட்டுக்கொன்றது.   

அவர் ஜீவிதமே சாரம் மூட்டுவதிலும் பொலிதீன் தைப்பதிலும் போய்க்கொண்டிருந்தது. அவரையும் தையல் மெசினில் இருக்க சுட்டுக்கொன்றார்கள்.

வெறிபிடித்த மிருகங்களைப்போல் இந்திய இராணுவம் அந்நாட்களில் நடந்து கொண்டது. சொந்த தேசத்தின் மக்களை வேட்டையாடும் அந்திய படையை தடுக்கவியலா கையகலாத்தனத்தில் இலங்கை இராணுவமும் பொலிசும் முகாம்களுக்குள் முடங்கப்பட்டிருந்தனர்.

91 இலும் இப்படியொரு திகிலை எதிர்கொண்டது நினைவில் ஆடுகிறது.
கிழக்கில் பொலிஸ் நிலையங்களையும் இராணுவ முகாம்களையும் ஏக காலத்தில் புலிகள் முற்றுகையிட்டனர்.நிராயுதபாணியாக்கிவிட்டு பொலிசாரை சரணடையச் செய்தனர்.சரணடைந்த சிங்கள மற்றும் முஸ்லிம் பொலிசாரின் கதைகள் இன்னும் எந்த ஆணைக்குழுவிலும் கணக்குக் காட்டவில்லை.

முஸ்லிம் பொலிசாரில் சிலர் தப்பி வர, சிலருக்கு என்ன நடந்திருக்கும் என்பது சர்வதேசத்தின் ஊகத்திற்கு விட்டுவிடுவோம்.புலிகள் மனித குலத்திற்கு ஏதாவது நல்லது செய்திருப்பார்களா என்று நினைத்துப்பார்க்கின்றேன்.தமிழ் மக்களுக்கும் செய்யவில்லை,முஸ்லிம் மக்களுக்கும் செய்யவில்லை.இந்த நாட்டிற்கும் அப்பாவிகளுக்கும் தீயதைத்தவிர எதையும் செய்யவில்லை என்பதே மகா உண்மை.30 வருட போராட்டத்திற்கு அவர்கள் பெற்றுக்கொண்டது ஒரு முதலமைச்சர் ஒரு பிரதி அமைச்சர்.

முற்றுகை கலவரத்தில் நாடே கொதித்துக்கொண்டிருந்தது. நான் அட்டாளைச்சேனை விடுதியில் இருந்த காலம். எங்களுக்கு உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு இரண்டு நாட்களாக கடைகள் திறக்கவில்லை. விடுதியில் 100க்கு மேற்பட்ட மாணவர்களை சமாளிப்பதில் நிருவாகம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியது. தலையை பிய்த்துக்கொள்வதைத்தவிர இரண்டு நாட்களும் வேறொன்றும் செய்ய முடியவில்லை.

வாகனங்கள் ஓடவில்லை. வெளிமாவட்டங்களில் இருந்து சாமான்கள் கொண்டு வரும் லொறிகளும் வரவில்லை.அம்பாறைக்கு சென்று சாமான்கள் வாங்கி வரவும் எவ்வித முகாந்திரமுமில்லை. மூன்று நாட்களின் பின் விடுமுறை வழங்குவதென்ற தீர்மானத்திற்கு நிருவாகம் வந்தது. தென்னிலங்கை,மலைநாட்டு நண்பர்கள் அம்பாறை வழியாக ஊருக்குப் போவதென்று தீர்மானித்தாயிற்று.அவர்களை இரண்டு ட்ரக்டரில் ஏற்றி அம்பாறை டவுணில் கொண்டு போய் விட்டார்கள்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் விசிக்கும் எங்களுக்கு ஆபத்து காத்திருந்தது. கல்முனைக்கு  ஒரு வேனில் அடைப்பட்டு பதினைந்து பேர் புறப்பட்டுச் சென்றோம். காத்தான்குடி.ஏறாவூர், வாழைச்சேனை,மீராவோடை ஓட்டடாவடி என பல ஊர்களும் ஐக்கியப்பட்டு கல்முனையில் வந்து இறங்கினோம்.கல்முனை வெறிச்சோடிக் கிடந்தது.

மட்டக்களப்புக்கு வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. அங்கிருந்து மருதமுனைக்கு நடப்பதென்று முடிவாயிற்று. மருதமுனையிலிருந்து வாகனங்கள் கிடைக்கவில்லை. அன்றிரவு மருதமுனை எங்களை வரவேற்று பள்ளியில் உறங்குவதற்கு இடமும் ,உணவும் தந்து உபசரித்தது.அங்கும் இரவில் பதற்றம் நிலவியது எந்நேரமும் புலிகள் ஊருக்குள் ஊடுருவக்கூடும் என்ற அச்சம்.

இராணுவம் முன்னேறி வந்து கொண்டிருப்பதாக தகவல்.வந்தது. களுவாஞ்சிக்குடி இராணுவத்தின் கையில் விழுந்து விட்டதாக இரவில் பேசிக்கொண்டார்கள்.

மறுநாள் காலை சுபஹ் தொழுது விட்டு புறப்படுவதென்று தீர்மானித்தாயிற்று.காலையில்  களநிலையை கவனித்து வர நீலாவணை வரைக்கும் பள்ளி நிருவாகிகளில் ஒருவர் போய் பார்த்து விட்டு வந்தார்.

புலிகளின் நடமாட்டம் இல்லை. இருந்தாலும் சண்டை நடப்பது இப்ப ராணுவத்திற்கும் அவங்களுக்கும்தான் நம்மல ஒண்டும் செய்யமாட்டாங்க..நீங்க கவனமா போங்க தம்பியள் என்று வழியனுப்பி வைத்தார்கள்.

மூட்டை முடிச்சுக்களுடன் நடந்தோம்.அறுபது மைல்களை நடக்கவேண்டும் என்பதெல்லாம் அந்த வயதில் பெரும் சுமையாக அழுத்தவில்லை. ஊருக்குப்போக வேண்டும் என்பதே குறிக்கோள். இடையில் பதுங்கியிருந்த ஆபத்துக்களை சிந்தித்துப்பார்க்காத  பருவம்.

பெரிய நீலாவணை தாண்டியதும் மனிதர்களின் நடமாட்டத்தைக் காணவில்லை. ஆமியும் இல்லை புலியும் இல்லை சண்டையும் இல்லை.மௌனத்துள் புதைந்திருந்தன எல்லைகள். சண்டை நடந்து ஓய்ந்து களைத்துக் கிடந்தன கிராமங்கள்.வீதிகளில் ஷெல்கள் குத்திய பள்ளங்கள்.சாமான்கள் சிதறிக்கிடந்த கடைகள் திறந்தபடி ஆவென்று தெரிந்தன.

வீடுகளும் திறந்தபடி மின்விசிறிகள் சுழன்றபடி, தொலைக்காட்சிகள் சனல்கள் ஓடியபடி மக்கள் மட்டும் இல்லை.தெருவில் சில உயிரற்ற உடல்கள் கிடந்தன.பெரும்பாலும் ஆண்களுடையது. எங்களுடன் வந்த காத்தான்குடி தோழர் இம்தியாஸ்தான் மிகச்சிறிய வயதினர்.இந்தப் பேரழிவுகளைக்கண்டு அவர் ஓப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டார் .அவரை சமாதானப்படுத்தி நடந்தோம்.

வழியில் ஒரேயொரு கிராமத்தில் களுவாஞ்சிக்குடிக்கு அப்பால் சில தமிழ் சனங்கள் பாதையில் நின்று எங்களை வழிமறித்து கதை கேட்டனர்.தண்ணீர் தந்தனர்.

ஒரு வயோதிகத்தாயின் குரல் என் பின்னால் விழுந்தது. ஓங்களுக்கு தேத்தண்ணி தாரதுக்கு ஒரு சுரங்கச்சீனியும் இல்லயே தங்கம்காள்…

அந்தக்குரலின் மனிதத்துவத்தைத்தான் எரித்து சாம்பராக்கி புலிகளும் அவர்களின் அருவருடிகளும் குளிர்காய்ந்தனர்.என் செவிகளில் அந்தக்குரல் இன்னும் இதமாகவும் , ஏக்கமாகவும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

களுவாஞ்சிக்குடியிலிருந்து ஒரு மைல் தொலைவில் முதல் படையை சந்தித்தோம். மேஜர் மஜீத் என்பது இன்னும் நினைவில் உள்ளது. அவர்தான் இராணுவத்தை வழிநடத்தி முன்னேறிக்கொண்டு வந்தார்.கூட்டமாக எங்களைக்  கண்டதும் இராணுவம் அரண்டு போனது. துவக்குகள் எமை நோக்கி உயர்ந்தன.கைகளை உயர்த்தியபடி ஏறாவூர் ஜாபிர்தான் சென்றார்.அவர் ஆமியுடன் கதைத்தார்.பின்பு கைகளை கீழே விடும்படி கட்டளை வந்தது.

 மேஜர் மஜீத் அருகே வந்து ஆறுதலாக கதைத்து  வழியில் கவனமாக போங்கள் இனிப்பயமில்லை என்றார்.வழியில் சைக்கிள் கடைகள் திறந்து கிடக்கின்றன. ஆபத்துக்கு பாவமில்லை.இன்னும் பல மைல்கள் நீங்கள் போக வேண்டும். ஐசக்கிள்களை எடுத்துக்கொண்டு போங்கள் என்றனர்.

களுவாஞ்சிக்குடியில் சைக்கிள்கள் நிறைந்து கிடந்தன. சைக்கிளை மட்டுமல்ல ஒரு துளியளவு மண்ணைக்கூட கொண்டு செல்வதில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.கடைசிவரை நடப்பதென்று முடிவெடுத்தாயிற்று. நாய் வேசம் போட்டால் குரைத்துத்தானே ஆகவேண்டும்.

உச்சிவெயில்,மரண பயம், ஆள் அரவற்ற வீதிகள் மேலே சுழன்றபடி கண்கானிக்கும் ஹெலிகள்.தாழப்பறப்பதும்,மேலேகுவதுமாக ஹெலிகள் அச்சத்தை தந்தன. அச்சத்தில் நடந்தோம் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு.

அது நடந்தது விட்டது.  

எங்கள் தேசம்  -231                                                      ஊஞ்சல் இன்னும் ஆடும்..........

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.