Sunday 14 August 2011


மர்ம மனிதனும் முஸ்லிம்களும்

-மௌலவி எம்.ஐ.எம்.நௌபர் (காஷிபி)-

புனிதமிகு றமழான் மாதத்தின் நடுப்பகுதியை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இலங்கை வாழ் மக்கள் அனைவரையும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தையும் ‘மர்ம மனிதன்’ எனும் பிரச்சனை ஆட்கொண்டுள்ளது. வரிப்பத்தான் சேனை, இறக்காமம் தொடக்கம் மலையகம் உள்ளடங்கலாக யாழ்ப்பாணம் வரை குறித்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து மக்களின் அன்றாட வாழ்க்கையை, இயல்பு நிலையை பாதித்துள்ளது.
மர்ம மனிதனின் தாக்குதல்களால், தாக்குதல் முயற்சிகளால் மக்கள் அனைவரும் குறிப்பாக பெண்கள் பீதியடைந்துள்ளதுடன் எல்லைப்புறக் கிராமங்களில் இருந்து பாதுகாப்புக் கருதி பெண்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும் உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.
இது எல்லாவற்றுக்கும் மேலாக முஸ்லிம்களுக்கு மிக முக்கியமான, வணக்கம் மற்றும் இன்னபிற தேவைகளுக்கும் அடிக்கடி இரவு வேளைகளில் வெளியில் செல்லவேண்டிய சங்கைமிகு றமழான் மாதத்தில் இப்பிரச்சினை தோன்றியுள்ளது. சகல முஸ்லிம்களையும் அச்சத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளதுடன் குறித்த பிரச்சினை முஸ்லிம்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டதோ என்ற வலுவான சந்தேகத்தையும் எம் எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இது போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பில் இஸ்லாத்தின் தூய மூலாதாரங்களான அல்குர்ஆனில் இருந்தும் அஸ்ஸுன்னாவிலிருந்தும் சில விடயங்களை சுருக்கமாக நோக்குவது சாலவும் பொருத்தமாகும்.
1.இஸ்லாத்தின் பார்வையில் பேய், பிசாசு, பூதம்:   
குறித்த பிரச்சனையின் ஆரம்பத்தின் போது பலராலும் கரிய நிறத்தில் ‘பேய்’ உலாவுவதாகவும் ‘கிறிஸ் பூதம்’ நடமாடுவதாகவுமே பலரும் செய்திகளைப் பரப்பியதன் காரணமாக இது பற்றிய இஸ்லாத்தின் வழிகாட்டலை முதலில் தெரிந்து கொள்வோம்.
வல்ல அழ்ழாஹ்வின் படைப்புகளில் மனிதன், மலக்கு, ஜின்கள் என்ற மூன்று இனத்தாருமே பகுத்தறிவு உள்ள படைப்பினங்களாகும். இதில் மனிதர்களிலும் ஜின்களிலும் உள்ள கெட்டவர்களை ஷைத்தான்கள் என்றும் குறிப்பிடுவர். இது தவிர பேய் என்றோ பிசாசு என்றோ பூதங்கள் என்றோ தனியான படைப்புகள் எதுவும் இல்லை என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை தொடர்பான துணை அம்சங்களில் ஒன்றாகும்.
அத்துடன் இறந்தவர்களின் ஆத்மாக்கள்தான் இது போன்ற ‘ஆவி’ வடிவங்களில் உலாவுவதான கதைகளையும் முஸ்லிம்களான நாம் நம்பிவிடக்கூடாது. இது தொடர்பில் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது ”என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தைதான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.” (அல்குர்ஆன் 23:99,100)
மேற்படி வசனம் மரணித்தவர்கள் இவ்வுலகிற்கு வரமுடியாமல் மறுமை வரை ஒரு தடுப்பு இருக்கிறது என தெளிவாக வலியுறுத்த, கரிய ஆவி உலாவுகிறது, கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சுகிறது என்பது போன்ற எமது நம்பிக்கைக்கு மாற்றமான கற்பனைகளை நம்புவதோ மக்கள் மத்தியில் பரப்புவதோ அல்லது பிறர் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக உருவாக்கி உலாவ விடுவதோ இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட அம்சங்களாகும். இவைகள் முஸ்லிம்களான எமக்கு ஆகுமானதல்ல.
மேலும், ஆங்காங்கே இது தொடர்பில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டவர்கள் மனிதர்களாகவே இருப்பதும் இத்தகைய செய்திகள் பொய்யானவை என்பதை உறுதி செய்கிறது. இதன் காரணமாகவே ஆரம்பத்தில் கரிய பேய் எனவும் கிறீஸ் பூதம் எனவும் பரவிய செய்திகள் இப்போது ‘மர்ம மனிதன்’ என மாற்றம் பெற்றுள்ளது.
2.விஷமத்தனமான வதந்திகள்:
மர்ம மனிதர்களின் பிரச்சனை ஒரு புறம் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்ற அதேவேளை மறுபுறத்தே அது தொடர்பிலான நிரூபிக்கப்படாத ஊர்ஜிதமில்லாத ஊகங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உலாவவிடப்பட்டுள்ள கதைகள் அடிவயிற்றில் புளியைக் கரைக்கின்றன.
நாட்டின் பிரபல்யமான அரசியல்வாதியொருவருக்கு விசித்திர வியாதி ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான பரிகாரத்திற்காக வேண்டி ஆயிரம்! (சில செய்திகளின்படி பத்தாயிரம்!) பெண்களின் இரத்தம் தேவை என சாத்திரக்காரர்கள் கூறியுள்ளதால் தேசிய ரீதியில் இரத்தம் பெறும் நடவடிக்கை இது என்று வதந்திகள் பரவவிடப்பட்டுள்ளன.
இல்லை இல்லை கேரளாவின் தலை நகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி இந்துக் கோயிலில் காணப்பட்டது போன்று பெரியளவிலான புதையல் ஒன்று வணக்கஸ்தலம் ஒன்றில் காணப்படுவதாகவும் அப்புதையலை எடுக்க ஆயிரம் பெண்களை பலிகொடுக்க வேண்டும் என்பதால் இவ்வாறு நாடளாவிய ரீதியில் ‘பெண்கள் தாக்கப்படுகிறார்கள்’ என்றும் குறித்த சம்பவத்திற்கு அரசியல், மத, இன, சாயங்கள் பூசி ஆதாயம் தேட முற்படுபவர்களது செயற்பாடுகள் மரத்தால் விழுந்த மக்களை மாடேறி மிதித்தது போன்ற இக்கட்டான நிலமைக்கு ஆளாக்கியுள்ளன.
இது போன்ற ஆதாரமில்லாத ஆதாய நோக்கத்திற்காக பரப்பப்படும் வதந்திகள் தொடர்பில் இஸ்லாம் எமக்கு பின்வருமாறு போதிக்கிறது.
“இறை விசுவாசிகளே! தீயவன் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்தால் அதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 49:06)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“தான் கேள்விப்பட்டதையெல்லாம் பேசுவதே ஒரு மனிதன் பொய்யன் என்பதற்கு போதுமான சான்றாகும்.” (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (றழி), நூல்: முஸ்லிம்)
மேற்படி வஹியின் வழிகாட்டல்கள் ஒரு முஸ்லிம் உறுதியில்லாத செய்திகளை பரப்புவதில் உள்ள பாராதூரத்தை எமக்கு உணர்த்துகின்றன.
இது போன்ற தகாத செயல்களை பொதுவாகவே இஸ்லாம் கண்டித்திருப்பதுடன் குறிப்பாக றமழான் மாதத்தில் முஸ்லிம்களாகிய நாம் இத்தகைய செயல்களை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளவேண்டும் என வலியுறுத்துவதுடன் இத்தகைய செயல்கள் நாம் அழ்ழாஹ்வுக்காக நோற்கும் நோன்புக்கும் கூட பங்கம் ஏற்படுத்திவிடும், களங்கம் கற்பித்துவிடும் என எச்சரிக்கையும் செய்வதை கீழ்வரும் நபிமொழியினூடாக நாம் புரிந்து கொள்ளக் கடமைப் பட்டுள்ளோம்.
“பொய்யான பேச்சையும் செயலையும் விட்டுவிடாதவர் (வெறுமனே நோன்பிற்காக) தனது உணவையும் பானத்தையும் விட்டுவிடுவதில் அழ்ழாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை.” (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (றழி), நூல்: புஹாரி)
3.பொறுப்புணர்வு:
இஸ்லாம் முஸ்லிம்கள் அனைவரும் சுய, குடும்ப, சமூக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தும் ஒரு மார்க்கமாகும். அதிலும் குறிப்பாக இது போன்றதொரு அனர்த்த காலத்தில், அச்ச சூழலில் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
“நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் உங்கள் பொறுப்பு பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளர் அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். ஆண்மகன் குடும்பத்தில் பொறுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். பெண் தனது கணவன் வீட்டில் பொறுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். வேலைக்காரர் தனது எஜமானனின் சொத்தில் பொறுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்.” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர், நூல்: புஹாரி)
மேற்படி ஹதீஸ் முஸ்லிம்கள் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன் ஒவ்வொருவருடைய பொறுப்புகள் தொடர்பாக உதாரணங்களையும் கூறியுள்ளது. இந்தவகையில் சகலரும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயற்படுவது அவசியமாகும்.
பள்ளிவாயில்களில் இராக்கால வணக்கத்தை பதினொரு ரக்அத்துகளுக்கு மேற்படாமல் உரிய நேரத்தில் முடித்துக் கொள்வதும் பயான் நிகழ்ச்சிகளை அளவுக்கதிகமாக நீட்டி காலதாமதம் ஏற்படாமல் நடந்துகொள்வதும் உலமா பெருமக்களின் பொறுப்பாகும். குறிப்பாக அதிக பாதுகாப்பு வசதிகள் இல்லாத கிராமப்புறங்களில் இது அவசியமாகும்.
அவ்வாறே ஊர்த்தலைவர்கள், பள்ளிவாயில் நிர்வாகிகள் என சகலரும் இணைந்து தத்தமது பகுதிகளில் தேவை ஏற்படின் விழிப்புக்குழுக்களை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வதும் வரவேற்கத்தக்கதே. எல்லோரும் ‘மர்ம மனிதனைப் பிடிக்கிறேன்’ என வீதிகளில் இரவு வேளைகளில் சுற்றித்திரியாமல் இதற்காக நியமிக்கப்பட்ட இளைஞர் குழுக்கள் காவலில் ஈடுபட ஏனையவர்கள் தேவையின்றி வெளியில் செல்லாமல் தங்களின் வீடுகளில் தங்கியிருப்பதே உசிதமாகும்.
இது தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகளும் மக்களால் விமர்சிக்கப்படுவது போல் அல்லாமல் இவ்விடயத்தில் தங்களது பொறுப்புப்பை உணர்ந்து செயற்படுவது அவசியமாகும். இதில் இவர்கள் தவறிழைப்பதாகக் கருதப்படும் பட்சத்தில் ஊர்வாசிகள் அனைவரும் வீதியில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபடுவதோ பாதுகாப்பு உத்தியோகத்தர்களை, வாகனங்களை தாக்குவதோ இன்றிருக்கும் சூழலில், அச்சநிலையில், பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவது இன்றியமையாதது என்றாகிவிட்ட சூழலில் அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.
அத்துடன் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யத் தவறும் சந்தர்ப்பங்களில் ஊர்த்தலைமைகள், பள்ளிவாயில் நிர்வாகிகள், குறிப்பாக மக்களின் வாக்குகளை வாங்கி கதிரைகளில் அமர்ந்து விட்டு மக்கள் பாதுகாப்பில் அக்கறையின்றி இருக்கும் அரசியல்வாதிகள் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி உரிய நடவடிக்கைகள் எடுத்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சுமூக நிலையை உருவாக்க, தக்க வைக்க ஆவன செய்யவேண்டும்.
இல்லையேல் வீணான கலவரங்களையும் கடையடைப்புகளையும் அதனால் எமது சமூகத்திற்கு ஏற்படும் பாரிய பொருளாதார நஷ்டங்களையும் தவிர்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிடும்.
எனவே, இவ்விடயத்தில் ஊர்த்தலைமைகள் மற்றும் அரசியல்வாதிகள் அசிரத்தை காட்டாமல் பொறுப்புணர்வுடன் செயற்படுவதுடன் நாளை மறுமையில் இது தொடர்பில் அழ்ழாஹ் எம்மை விசாரிப்பான் என்ற இறை அச்சத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
4.பெண்கள் ஜாக்கிரதை:
மர்ம மனிதனின் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் அதிகளவில் பெண்களையே பாதித்திருப்பதால் எமது சமுதாயப் பெண்கள் மிக விழிப்புடனும் ஜாக்கிரதையாகவும் இருப்பது அவசியமாகும். தூய இஸ்லாத்தின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப பெண்கள் தேவையின்றி வெளியே போவதையும் மஹ்ரம் இன்றி தூர இடங்களுக்குச் செல்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் பாதுகாப்பான சூழல் இன்றி இராக்கால வணக்கங்களுக்காக பள்ளிவாயில்களுக்கோ அல்லது ஏனைய வீடுகளுக்கோ செல்வதை தவிர்த்து தங்களது வீடுகளிலேயே வணக்கங்களை நிறை வேற்றுவதே சிறந்ததாகும். இது தொடர்பில் நபி (ஸல்) அவர்களது வழிகாட்டல்கள் பின்வருமாறு அமைந்துள்ளன:
“இரவில் பெண்கள் பள்ளிவாயல்களுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களை அனுமதியுங்கள்.” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (றழி), நூல்: புஹாரி).
இந்த நபி மொழி பெண்கள் பள்ளிவாயிலுக்கு செல்வதாக இருந்தாலும் கணவனிடம் அனுமதிபெற்றே செல்ல வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதுடன், “அவர்களது விடுகளே அவர்களுக்கு சிறந்ததாகும்.” அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (றழி), நூல்: அபூதாவுத்)என்ற குறித்த ஹதீஸின் மற்றுமொரு அறிவிப்பு பெண்கள் தங்களது வீடுகளிலே தொழுவதுதான் சிறந்தது என்பதையும் விளக்குகிறது.
5.விழிப்புணர்வும் வீரமும்:   
ஒரு முஸ்லிம் எப்போதும் விழிப்புணர்வுடனும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் எப்போதும் வலியுறுத்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு விசுவாசி ஒரு பொந்தில் இருந்து இரு முறை (விச ஜந்துகளால்) தீண்டப்படமாட்டான்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (றழி), நூல்: புஹாரி).
சாதாரண அஜாக்கிரதையினால் ஏற்படும் தீங்குகளைத் தவிர முஸ்லிம்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதையும் மீண்டும் மீண்டும் ஒரே முறையில் ஏமாறவோ அநீதியிழைக்கப்படவோ கூடாது என்பதை நபி (ஸல்) அவர்கள் ‘ஒரு விசுவாசி’ என விசுவாசத்துடன் தொடர்புபடுத்தி விளக்கியுள்ளார்கள்.
அத்துடன் முஸ்லிம்கள் எப்பொழுதும் குறிப்பாக இது போன்ற அச்ச சூழ்நிலைகளின் போது தைரியமாகவும் மன உறுதியுடனும் இருக்கவேண்டும் என்பது நபி (ஸல்) அவர்களது வாழ்வில் இருந்து நாம் பெற வேண்டிய பாடமாகும். “நபி (ஸல்) அவர்கள் மிக அழகானவர்களாகவும் மிக வீரம் மிக்கவராகவும் மிக கொடை வள்ளலாகவும் இருந்தார்கள்.
ஒரு முறை மதீனாவில் அச்ச சூழ்நிலை ஏற்பட்டபோது அபூ தல்ஹா (றழி) அவர்களின் ‘மந்தூப்’ எனும் குதிரையை இரவல் வாங்கிக் கொண்டு ஏனையவர்களை முந்திக்கொண்டு சென்று (என்ன, ஏது என்று பார்த்து) வந்தார்கள். வந்தவர் ‘(பயப்படும் படி) எதனையும் காணவில்லை என (மக்களை அமைதிப்படுத்திக்) கூறினார்கள். மேலும் குதிரை மிக வேகமாக ஓடுகிறது என (அபூ தல்ஹா (றழி) அவர்களின் குதிரையையும் பாராட்டினார்கள்.” (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (றழி), நூல் :புஹாரி) (இரு அறிவிப்புகளின் இணைப்பு)
இத்தகைய வீரவேங்கையான தூதரை ஏற்றுக் கொண்டு பின்பற்றும் நாங்கள் எச்சந்தர்ப்பத்திலும் வீண் பீதியடையாமல் தைரியத்தை இழக்காது வீர உணர்வுடன் செயற்படுவது கடமையாகும்.
எனவே, இவ்வனர்த்த காலத்தில், அச்ச சூழலில் இஸ்லாம் கூறும் போதனைகளைக் கடைப்பிடிப்பதனூடாக அழ்ழாஹ்வின் உதவியையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ளும் நன்மக்களாக வாழ எல்லாம் வல்ல அழ்ழாஹ் எம் அனைவருக்கும் அருள் புரிவானாக!


--

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...