Monday, 11 July 2011

பின் தொடரும் பிரபலங்களின் நிழல்.

விதை மழை பெருக்கெடுத்து ஓடுவதை கண்டு என்னை அச்சம் வந்து கவ்வுகிறது.
இடறி விழுகிற போது ஒரு கவிஞன் காலடியில் கிடந்து துடிக்கின்ற அளவிற்கு கவிஞர்களின் அட்டகாசம் இலங்கையை ஆட்டிப்படைக்கின்றது.
இளம் கவிஞர்களில் சிலர் விமர்சனங்களை கண்டு அச்சப்படுகின்றதை பார்க்கின்ற போது எதிரே வரும் மரணத்தைக்கண்டு விட்ட அச்சம் அவர்களின் முகத்தில் தெரிகிறது.
அதனால்தான் என்னவோ ஆளாளுக்கு தற்போது முதுகு சொரியும் விமர்சனப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
புதிதாக எழுத வருகின்றவர்களின் வாசிப்பறிவை அளவீடு செய்தல் மிகச்சிரமமாகவுள்ளது.கொழும்பில் நான் வேலைப்பார்த்த காலங்களில் ஒரு கவிதாயினி (இப்படித்தான் தன்னை சொல்லிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவர்.) அவர் எழுதிய கவிதைகளுடன் என்னை சந்திக்க வருவார். அதை புத்தகமாக போட, படாத பாடுபட்டார். என்னிடம் அதற்கு ஒரு உரையும் எழுதும் படி நடையாய் நடந்தார்.
பிரபலத்தின் கையெழுத்து எனும் முத்திரை பெரிய காரியம் அல்லவா?

அவர் கவிதைகளைப்படித்து விட்டு எனக்கு அவர் மேல் பரிதாபமே ஏற்பட்டது. இதற்கு எப்படி நான் உரை எழுதுவது. முதலில் அவர் எழுதியவைகளில் கவிதை எது ? துணுக்குகள் எது? என்பதில் ஆரம்பித்தது வில்லங்கம்.
நான் அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். நீங்கள் ஈழத்தில் அல்லது ஈழத்திற்கு அப்பால் யாருடைய கவிதைகளை அதிகம் விரும்பி வாசிப்பீர்கள் என்றேன்.
அவர் 'பே' என்று விழித்தபடி என்னை பரிதாபமாக பார்த்தார். நான் இன்னும் சரியாக யாரையும் படிக்கவில்லை சேர் என்றா. தினகரன்,மித்திரனில் வரும் கவிதைகளை படிக்கின்றேன் என்றா. அவவின் மேல் கழிவிரக்கம் சுரந்தது.
முருகையன்,சு.வில்வரத்தினம்,சேரன்,ஜெயபாலன், நுஃமான்,சன்முகம், சிவலிங்கம்,போன்ற தலைமுறையினரையும் கேட்டுப்பார்த்தேன். சோலைக்கிளி ,ரஷ்மி,நளீம்,முல்லை முஸ்ரிபா, அம்ரிதா,நபீல், சலனி, அனார். பஹீமா,அம்பை,ஆழியாள்,சிவரமணி இன்னும் எத்தனையோ பெயர்களை கேட்டுப் பார்த்தேன்.


பாழாய் போன என்னிடம் கவிதைகளை காவிக்கொண்டு வந்திருக்கின்ற அசடே குறைந்தது எனது கவிதைகளையாவது படித்தாயா என்றேன்.
முள்ளிவாய்க்காலில் பிரபாகரனின் உயிரற்ற உடலைப்பார்த்து மிரண்டு நின்ற கருணா அம்மான் போல் கவிதாயினியின் முகம் அச்சத்தில் உறையக்கண்டேன். அந்தப்பெயர்களை தான் முதன் முதலில் கேள்விப்படுவதாக வேறு வாக்கு மூலம் தந்தார்.
இலக்கியப் பத்தி எழுத்துக்களில் , மேடைகளில் இப்படி பட்டியல் போட்டு பேய்க்காட்டுவது ஒன்றும் புதிதல்லவே.
அப்படியென்றால் அம்மணீ நீங்கள் நல்ல கவிதைகளை எழுதும் திறனை இழப்பதற்கு இது ஒன்றே போதும் என்றேன்.
கையிலிருந்த கவிதை கட்டுக்களைக்காட்டி இது நல்ல கவிதைகள் இல்லையா சேர்? என்றா. விம்மி வெடிக்கும் போல் இருந்தது அவர் வட்ட விழிகள்.
இதிலே நல்ல கவிதைகள் இருக்கலாம். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளாவது தேடிப்படிக்கக்கூடாதா? வெள்ளவத்தையில் இயங்கும் தமிழ் சங்கத்தில் நிறைய புத்தகங்கள் இருக்கும் படியுங்கள் என்றேன்.
( ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்யும் திட்டத்தின் கீழ், கொள்வனவு செய்யப்பட்ட எனது நூல்களும்,என்னைப்போன்ற ஏமாளிகளின் நூல்களும் 10 வருடங்கள் கடந்தும் தமிழ் சங்கத்தில் கடன் சுமையுடன் இருக்கும் தானே?)
என்னை விட்டபாடில்லை. மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டுமாம்.
கவிதாயினியின் கவிதைகளைப்படித்து அவவின் தலைக்கு வலிக்காமல் குட்டியாகி விட்டது.
வாங்கிக்கொண்டு போனவர்தான் . என் அலுவலகப் பக்கமே தலை நீட்டவில்லை.
சில வருடங்களின் பின் கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற புத்தக விழாவில் அம்மணியின் புத்தகமும் வெளியிடப்பட்டது. ஆனால் என்னிடம் அவர் தவமிருந்து பெற்ற குட்டு இல்லாமல்.
அதை உலகக்கவிதைகளின் தரத்திற்கு பதவியுயர்வு கொடுத்து உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்து ஒரு பிரபலம் எழுதிய முன்னுரையுடன் அம்மணியின் புத்தகக்கனவு நனவாகிவிட்டது.
இனி அவர் ஈழத்தில் தவிர்க்க முடியாத கவிதை அரசியாக,இலக்கிய மேடைகளில் கொலுவிருக்கும் மரியாதைக்குரிய இராணியாக முடிசூடிக்கொள்ள முடியும்.
இப்படித்தான் பேச்சு வாக்கில் சகோதரி பாயிசா அலி சொன்னார்.
ஒரு இளம் கவிதாயினி தனது புத்தகத்தை அவவுக்கு அனுப்பிவிட்டு அதைப்பற்றி
நன்றாக எழுதுமாறு நயமாக வேண்டிக் கொண்டாராம்.
நல்லதை மட்டும் சொல்ல வேண்டும் என்று புதிதாக எழுத வரும் சிலர் நினைக்கிறார்கள். அதனால் அவர்களின் இலக்கிய வளர்ச்சி பாதிப்படைவது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போகிறது. ஆற்றுப்படுத்த வேண்டிய மூத்த எழுத்தாளர் சிலர் சகட்டு மேனிக்கு அவர்களை உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்து சூடம் ஏற்றி கொண்டாடுவதால் புதியவர்களும் தங்களை விட்டால் இலக்கியம் வளர்ப்பது யாரென்று மார் தட்டும் அளவிற்கு மாயைகளில் மயங்கிக்கிடக்கின்றனர்.
புத்தகங்களுக்கு முகஸ்துதிக்காக வழங்கப்படும் முன்னுரைகள்,மதிப்புரைகள் ஒர் இளம் எழுத்தாளின் வளர்ச்சிக்கு வெட்டும் பாரிய புதை குழி.
நாஞ்சில் நாடன் இது பற்றி ஆழமான, சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கின்றார்.

...........முன்னுரைகளின் நம்பகத்தன்மைகளை விவாதப் பொருளாக்கும் முயற்ச்சி இந்த கட்டுரை. அணிந்துரை, வாழ்த்துரை, நூன்முகம், பின்னுரைகளையும் ஒரு விரிந்த தளத்தில் முன்னுரை என்றே கொள்ளலாம். நண்பர், சீடர், கைத்தடி, எடுபிடி, முகவர், தக்கார், போஷகர் என்ற வரையறைகளுக்கு உட்பட்டு எழுதப்பெறும் முன்னுரை பலவற்றில், முன்னுரையில் மேற்க்கோளாகக் காட்டப்பட்டவை தாண்டி, புத்தகத்தில் எதுவும் இருப்பதில்லை. கவிஞர், விமர்சகர் க.மோகனரங்கன் முன்னுரை எழுதுவது முறைவாசல் தெளிப்பது போன்று ஆகிவிட்டது என்றார் ஒருமுறை.
புகழ்பெற்ற சினிமா பிரமுகர் ஒருவர் முன்னுரைக்கு பதினைந்தாயிரம் வாங்குகிறார் என்றும், அதை முன்பணமாக கொடுத்துவிட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் முன்னுரையை அவர்தான் எழுதுவார் என்பது உத்திரவாதம் இல்லை. அவரது அலுவலகம் அதைச் செய்துவிடும். வேறு பலருக்கு அவர்தம் பெயர்தாங்கி வரும் படைப்புகளையே அலுவலகங்கள் தாம் எழுதுகின்றன என்கிறார்கள். இதில் தெரியவருவது என்னவெனில் அவருக்கு இணையாக எழுத வல்லவர் கனபேர் இருக்கின்றார்கள் என்பதுதான். என்றாலும் பிரபலத்தின் கையெழுத்து எனும் முத்திரை பெரிய காரியம் அல்லவா
தொடர்ந்து படிக்க அவர் இணையத்திற்குள் நுழைந்து பாருங்கள்.

http://nanjilnadan.wordpress.com/

Monday, 4 July 2011

அன்புள்ள பீமா........

காலையில் பிள்ளைகளை நேரத்திற்குப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்ற 'டென்ஷ'னில் சுஹா ஆலாய் பறந்து கொண்டு கட்டளைகள் இட்டபடி சமையலறைக்குள் குதித்துக்கொண்டிருக்கின்றாள் .நான் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற பரபரப்புக்கு மத்தியில் குளியலறையில் தண்ணீரை வழிய விட்டு குளிர்ந்து நிற்கிறேன் . வீட்டுத்தொலைபேசி அலறித்துடிக்கிறது.
யாரது காலையில் என்றபடி அவள்தான் சென்று 'ரிசீவரை' காதில் பொருத்தியவுடன் 'என்ன மாமா 'என்கிறாள்.
முறுவல் பூத்த முகத்தின் மஞ்சளிப்பு எனக்கு நன்றாகத் துலங்குகின்றது.
'குளிக்கிறாக' ! என்றவுடன் அங்கிருந்து அடுத்த கேள்விக்கு
'இப்ப பெய்த்திடுவாக' என்கிறாள்.
எப்ப மாமா என்ற ஆச்சரியங்களை மேவிய அவள் கேள்வியில் வியப்பின் உச்சம் தெரிகிறது. 'ஆ..சரி மாமா வந்தவுடன் சொல்லுறன்'.தொலைபேசி மறுமுனையில் துண்டிக்கப்பட்டதும் ரிசீவரை வைத்து விட்டு குளியலறைக்குள் பார்வை விழுகிறது.
கண்ணாடிகளினூடே எஸ்.எல்.எம்.மாமா என்கிறாள்.என்னவாம் என்றேன்.இந்நியாவுக்கு கப்பலில போகப்போறாகளாம்.
தனியாகவா இல்ல மாமியும் கூட?
'இல்ல யோகராசா சேரும் இன்னும் பலரும்.மற்றத நீங்க வந்து கேளுங்க'' என்றபடி பிள்ளைகளை விரட்டத்தொடங்கினாள்.
போகிற போக்கில் இன்னொரு தகவலும். 'ஏதாவது நேர்ச்சை இருந்தா தரட்டாம் அப்படியே அவ்லியாக்கள்ற கையில கொடுத்திட்டு வருவாகளாம் என்றவளின் எகத்தாளச்சிரிப்பு சமையலைறைக்குள் நிறைந்து ததும்புகிறது.
நிச்சயம் ஆப்தீன் காக்காவுக்கும் இந்த தகவலை. சொல்ல வேண்டும்.
நான் இந்தக் கடிதத்தை எந்த அவ்லியாவுக்கு சமர்ப்பிப்பது என்பதில் குழம்பித்தான் போனேன்.
கூடவே சில நேர்ச்சைகளும் என்னிடம் உண்டு .இந்தியாவுக்கு கொடுத்தனுப்ப வேண்டும்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எல்லா குப்பைகளையும் தேடினேன். சுப்ஹான மெளலீது, முஹ்யித்தீன் மெளலிது,மீரான் சாஹிபு மெளலிது,தலைப்பாத்திஹா,ஸலாதுன்னாரியா,சைதூன் கிஸ்ஸா,வெள்ளாட்டி மசாலா, சீராப்புராணம், யாகுத்பா, ஒடுக்கத்துப்புதன்,பராஅத்,கந்தூரி, கத்தம்,பாதிஹா,தாயத்து,மந்திரம், நூல் கட்டுதல்,ராதிபுகள்,நூறு மசாலா,தீன் சாயம் பூசிய இலக்கிய இதிகாசங்கள் இன்னும் பல.. தினுசுகளையும் சேர்த்து அனுப்புகின்றேன்
ஒன்பது அடுக்கு கப்பலில் இதெல்லாம் கொண்டு போய் என் குருநாதர் எஸ்.எல்.எம். எங்க கொட்டுவார்.? இலக்கி மேடைகளில் கொட்டும் பொய் புரளிகளையும், அரசியல் மேடையில் அள்ளி வீசும் கள்ளத்தனங்களையும் கேட்டுப்பழகிய நமக்கு அமெரிக்கா கொட்டும் கோதுமையை விட கொஞ்சம் மிஞ்சிய இந்தக்குப்பைகளை கொட்டவா கஷ்டம் வரப்போகிறது. இருந்தாலும் கொடுத்தனுப்பத்தானே வேண்டும்.

'கடலோரம் வாழும் பீமாவுக்கும்,பைத்தியங்களை சங்கிலியால் கட்டிப்போடும் நாகூர் ஆண்டகைக்கும். இன்னும் பிற ஏகப்பட்ட அவ்லியாக்களுக்கும்........
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!
மேற்படி பொதிகளை உங்கள் மண்ணுக்கே மீளவும் திருப்பி அனுப்புவதில் கொஞ்சம் சங்கடம்தான்.என்ன செய்ய மார்க்கம் என்ற பெயரில் இங்கு கொண்டு வந்தவைகளை மீளவும் திருப்பி அனுப்புவதில் கொஞ்சம் திருப்தியும்தான்.
எங்கள் ஆலிம்சாக்களின் வயிறு எரிய எரிய இதை 9 அடுக்கு கப்பலில் கீழ் அறையில் போட்டு அனுப்புகின்றேன்.
கடலில் இவைகள் விழுந்து கடல் நஞ்சாகாமல் இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் காப்பாற்றுவானாக !
இந்த புராணங்களை தயவு செய்து அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
எனக்கு சில ஐயங்கள் உண்டு எப்பவும் தீர்க்க முடியாத அகல முடியாத ஐயங்கள்.
ஏகப்பட்ட கபுறடிகள் உங்கள் பெயரால் தீன் குலத்தவரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதிக்கும்,நடிகர் நடிகையர்க்கும் இரசிகர் மன்றம் திறப்பது போல் உங்கள் பெயரால் பல கபுறுகள் திறந்து வைக்கப்பட்டு கூத்தும் கும்மாளமுமாய் இஸ்லாமியர் வாழ்வு கொடி கட்டிப்பறக்கிறது.
படைத்தல், காத்தல்,பாதுகாத்தல் மூன்று செயல்களுக்கும் அல்லாஹ் தானே பொறுப்பென்று அறுதியிட்டுக்கூற, நாங்களோ மூன்றிக்கும் வெவ்வேறு அவ்லியாக்களையல்லவா நாடிப்போகிறோம்.
கடலில் வந்த சுனாமியை முஹ்யித்தீன் அப்துல்காதர் ஏன் தடுக்கவில்லை என்ற ஐயத்துடன் ஆயிரக்கணக்கான மனித உயிர்களை கடல் காவு கொள்கிறதே அதையும் அவர் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கின்றாரா?
இந்தியாவிலிருந்து உங்கள் பெயரால் வந்தவைகளை அனுப்பும் காலம் கனிந்து விட்டது.
இராமர் பாலத்தையாவது முஹ்யித்தீன் ஆண்டவர் பாதுகாக்கத்தவறிவிட்டார் என்பது என் வலுவான குற்றச்சாட்டு.இலங்கைக்கு கப்பல் விட்டதனால் தமிழினப்போராளிகளின் நெஞ்சங்கள் கருகித்தீய்கின்றன.
நீங்களோ அவரோ (முஹ்யித்தீன்ஆண்டவர்) சீமான் போன்ற பெருந்ததலைவர்கள் தற்கொலை செய்யப்போவதை தடுத்திருக்கலாம்.
ஜெயலலிதா அம்மாவுக்கு சீமான் விடுத்திருக்கும் காலக்கெடு முடிவதற்குள் உங்களால் முடிந்தால் முஹ்யித்தீன் ஆண்டவரிடம் சொல்லி புதையுண்டு கிடக்கும் பாலத்தை இந்து சமுத்திரத்தின் மேற்தளத்திற்கு கொண்டு வர ஆவண செய்யுங்கள்.
என்னதான் போராடினாலும் கடவுளின் பாலத்தில் தற்கொலை செய்ய சீமானும் நெடுமாறனும் துணியவா போகிறார்கள்?
தமிழ் சினிமா பெண்களின் தொப்புளில் கோழிக்குஞ்சு மட்டும் தான் பொறிக்கவில்லை. உங்கள் கபுறடிகளுக்கு நேர்ச்சை செய்ய வரும் பெண்களின் தொப்புளில் வயிற்றில் மற்றும் பிற அங்கத்தில் மந்திரிக்கின்றோம் என்ற பெயரில் லெப்பைக்கூட்டம் நடாத்தும் காம லீலைகள். இவர்களின் கைகளை இன்னும் நீங்கள் சுத்தமாக வைத்திருப்பது ஏன் என்பது என் ஐயங்களில் ஒன்று.
உங்களின் பெயரால் இருக்கும் கபுறடிகளைச்சூழவும் கள்ள ஜோடிகள் தங்க லொட்ஜீம்,அருகில் கருக்கலைப்பு நிலையங்களும் முளைத்திருப்பது உங்கள் கராமத்துக்களில் ஒன்று தானோ?
மார்க்கத்தின் பெயரால் உங்களை காட்டி பயமுறுத்தி பிழைப்பு நடாத்தும் புரோகிதக்கும்பலை விரட்டினால் இஸ்லாம் சுத்தமாகி விடும். என்ன செய்ய அந்த சக்திதான் உங்களுக்கு இல்லையே!
ஒன்பது அடுக்குக்கப்பலில் இனி உங்களை நாடி வரும் அறியாமைக்கூட்டமும் நிச்சயம் சேர்ந்து வரும் .உங்களுக்கும் இனி 'நல்ல காலம் பொறந்திருக்கு' என்று தூத்துக்குடியில் வந்திறங்கி நானும் பாடத்தான் போகிறேன். என்னுடன் குத்தாட்டம் போட நயனை பிரபுதேவா விடவா போகிறார்?
கடலோரம் வாழும் பீமாவே !
முடிந்தால் தமிழ் இலக்கிய விழாவிற்கு வரும் அவருக்கு உங்கள் புண்ணியத்தில் ஒரு பயணப்பையை அன்பளிப்பாக கொடுக்க பேராசிரியர் ஹாஜி கே.எம்.காதர் மொஹிதீன் அவர்களுக்கு சிபாரிசு செய்யுங்கள்.சிபாரிசு இல்லை என்றால் பொன்னாடை ஏது?பட்டங்கள் ஏது? பொற்கிழிகள் ஏது ?
தயவு செய்து அவருக்கு இலக்கியச்செம்மல், அல்லது வேந்தர்,போன்ற பட்டங்களை வழங்கிவிடாதீர்கள்.அதை தாங்கும் சக்தி அவருக்குக்கிடையவே கிடையாது.
அன்புடன்
அறபாத்.

Monday, 6 June 2011

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

ஆசிரியர் 
அஷ்ஷெய்க் .எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி
ஸ்லாத்தின் பெயரால் உலகில் பல்வேறு பிரிவுகள் பல்கிப்பெருகியுள்ள இத்தருனத்தில் காலத்தின் தேவை உணர்ந்து எழுதப்பட்ட ஆய்வு நூல்.
நூலாசிரியர் ஏற்கனவே தமிழ்கூறும் உலகிற்கு ஆய்வு நூல்களைத் தந்து இஸ்லாமிய வாசகரிடையே பிரபல்யம் மிக்கவர். 'ஸலவாத் ஓதுவோம் வாருங்கள்',  'ஷாபி மத்ஹபின் சட்டங்களை அவமதிக்கலாமா?'   'யாரிந்த போராக்கள் '  போன்ற ஆசிரியரின் நூல்கள் வாசகரிடையே அதிகம் பேசப்பட்டது.

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் என்ற நூலில் மொத்தம் நாற்பத்தி ஆறு தலைப்புக்களில்  பல உட்பிரிவுகள் ஆராயப்பட்டுள்ளன.  இருநூற்றி நாற்பது பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலை தமிழ்நாட்டில் முன்னணி புத்தக நிலையமான சாஜிதா புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது.

இஸ்லாத்தின் பெயரால் தோன்றியுள்ள முக்கியமான வழி கெட்ட இயக்கங்களானகாதியானிகள்,ஹவாரிஜீன்கள்,ஷீஆக்கள்,அஷ்அரீய்யாக்கள், ஜஹ்மீய்யாக்கள்,  முஃதஸிலாக்கள், போராக்கள். போன்ற பிரிவுகள் இந்நூலில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியே அதன் தோற்றம்,இயக்கம்,செயற்பாடுகள் தொடர்பான புள்ளி விபரங்களுடன் மிகத்துல்லியமாக ஆராயப்பட்டுள்ளன. குறிப்பாக ஷீஆக்கள் நிறுவன மயப்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றனர். இராஜதந்திர முயற்சியின் ஊடாக அவர்களின் அரசியல் மற்றும் கொள்கை பரப்பும் பிரச்சார முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நூலில் ஷீயாக்களின் இரட்டை வேடத்தை தோலுரித்துக்காட்ட பல் வேறு சான்றாதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அல்குர்ஆன்  அஸ்சுன்னாவை மையப்படுத்திய முக்கிய ஆதாரங்களுடன், ஷீயாக்களின் தகிடுத்தத்தங்களை வெளிச்சமிட்டுக்காட்டும் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருப்பது நூலுக்கு கணம் சேர்க்கும் முயற்சியாகும்.

 இஸ்லாமிய வரலாற்றுச்சான்றாதாரங்களும், ஆசிரியரின் ஆய்வு நிலை முயற்சியும் நூலின் வாசிப்புக்கு வலிமை சேர்க்கின்றன.
ஏனைய வழிகெட்ட அமைப்புக்கள்,பிரிவுகளை விட, ஷீயா என்பது  சர்வதேச வலைப்பின்னலைக்கொண்ட பிரிவாகும். கிராமங்கள் தோறும் கலாச்சாரப்புரட்சி ,இஸ்லாமிய அட்சி, அமெரிக்க எதிர்ப்புணர்வுக்கொள்ளை,இஸ்ரேலுக்கெதிரான அறிக்கைகள். போன்ற சில சில்லறை விடயங்களை கையில் எடுத்துக்கொண்டு முஸ்லிம்களை மூளைச்சலவை செய்வதில் ஷீயாக்கள் கைதேர்ந்தவர்கள்.இவர்களின் இந்த தீராத விளையாட்டுக்களை நூலாசிரியர் மிக தெளிவான சான்றுகளுடன் இந்நூலில் முன்வைக்கின்றார்.

இந்நூலின் மற்றொரு சிறப்பம்சம், சாதாரண வாசிப்பறிவும், தேடலும் உள்ளவர்களும் வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய மொழியாகும். வழிகெட்ட பிரிவுகளை இனங்காட்டி சாதாரண பொது வாசகனும்,தீவீர வாசகனும் புரிந்து கொள்ளும் மொழி மிக முக்கியமானது. இதனை நூலாசிரியர் கச்சிதமாகவே செய்துள்ளார்.

மொழியின் இறுக்கம் தளர்கின்ற பொது  ,கருத்துக்கள் அதிக வாசகரிடையே ஆதிக்கம் செலுத்துகின்றது. அது நுலூக்கு கிடைக்கும்  மகத்தான வெற்றி.
சில இயங்கங்களின் பொது வேலைத்திட்டங்களிலும்,ஏகாதிபத்திய எதிர்ப்புக்கொள்கை கூச்சலிலும் மயங்கும் படித்த பாமர முஸ்லிம்கள் மிக எளிதாகவே வழிகெட்ட இயக்கங்களின் நடவடிக்களை நியாயப்படுத்த முனைகின்றனர். அவர்களுக்கு கூஜா தூக்கி நல்லவர்கள் என்ற 'லேபலை' வேறு குத்திவிடுகின்றனர்.
உண்மையில் இத்தகைய ஆய்வு நூல்கள் மூலம்  போலி லேபல்கள் கிழிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
ஒரு ஆவணப்படத்தொகுப்பைப்போல் இந்த ஆய்வு  நூல் கடின உழைப்பின் பின் நமது கரங்களை அலங்கரிக்கின்ற போது முழுத்தகவல்களையும் ஒரு சேரப்படித்த திருப்தியை நூல் தருகின்றது.
அவசியம்  படித்து பாதுகாக்க வேண்டிய தொகுப்பு.

Tuesday, 31 May 2011

பிச்சை வேண்டாம்... நாயைப்பிடி.

நாட்டில் அமுலுக்கு வரும் அதிரடி சட்டங்களால் பிரஜைகள் பாதிக்கப்படுவது குறித்து கதிரையில் ஒட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு அக்கரை கிடையாது. 

தனியார் துறையினருக்கான உத்தேச ஓய்வூதியத்திட்டத்திற்கு எதிராக தேசத்தில் எழுந்த பிரமாண்டமான எதிர்ப்பை பார்க்கின்ற போது மக்களின் கலகத்திற்கு முன் ஆட்சியாளர் அடிபணிவதைத்தவிர வேறொன்றும் செய்ய முடியாத நிலை.!

ஒரு சட்டத்தை அமுல்படுத்தும் போது நாட்டு மக்களின் கருத்துக்களும், துறைசார் அறிஞர்களின் ஆலோசனையும் பெறப்படவேண்டும்.

அது தொடர்பான அறிவார்ந்த விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். அரசியல் ஆதாயங்களுக்காக மக்களின் அபிலாசைகள்,விருப்பு வெறுப்புக்கள் எதனையும் கரிசனை கொள்ளாது எடுத்தேன் கவிழ்த்தேன் என சட்டங்களை அமுல்படுத்துவதும் பின் வாபஸ் பெறுவதும் நல்லாட்சிக்கு அழகான விடயமல்ல.
( நல்லாட்சியே கனவாகிப்போன தேசத்தில் ஒரு கதைக்கு சொல்கிறேன்)

முட்டாள்தனமான சட்டப்பிரகடனங்களுக்கு உதாரணமாக தனியார் துறையினரின் உத்தேச ஓய்வூதியத்திட்டத்தைக்குறிப்பிடலாம். அது வந்த வேகத்தில் திரும்பி விட்டது.

கமெராக்களுக்கு முன் அமர்ந்து கொண்டு "அசடு வழிய" இதனை மறுபரிசீலனை செய்கிறோம் என அரசாங்க அமைச்சர்கள் பேசிய போது பாவமாக இருந்தது.

இப்படித்தான் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப்பயிற்சியின் நிலையும்.இத்திட்டத்திற்கும் கல்வி சமூகத்திடமிருந்து பலத்த எதிர்ப்புக்கிளம்பியுள்ளது.

அத்திட்டத்தின் கதி நீதி மன்றங்களில் இழுபடும் போது, மற்றுமொரு குண்டை தூக்கிப்போட்டு உடைத்துள்ளது அராசங்கம்.

அதிபர்களுக்கும் இராணுவப்பயிற்சி வழங்கப்படவேண்டும். அதற்கு சொல்லும் காரணம் ஓடும் மாணவர்களை துரத்திப்பிடிக்க மதில் ஏறிப்பாய இந்தப்பயிற்சி உதவுமாம்.

ஏற்கனவே சில அதிபர்கள் இடிஅமீ்ன்களாக,ஹிட்லராக,முசோலினியாக இருக்கின்ற நிலையில் இராணுவப்பயிற்சியும் வந்து விட்டால் பாடசாலைகள் 'பட்டலந்த முகாம்'களாக மாறுவதைத் தவிர வோறொன்றும் நடக்காது.

இந்த நாட்டில் அமைச்சர்கள் சொல்லும் நகைச்சுவைகளுக்கு பஞ்சமே கிடையாது.

அதில் ஒன்றுதான் உயர் கல்வி அமைச்சரின்  கல்வியை இராணுவ மயப்படுத்தும் புரட்சித்திட்டங்கள்.

மற்றது பான்கீன் மூனை சுட்டுத்தள்ள  கையில் துப்பாக்கியுடன் களனி மீன் சந்தையில் அலைந்து திரியும் கலாநிதி மேர்வின் சில்வா.

இன்னுமொரு மகா ஜோக் பான்கின் மூனின் கொடும்பாவியை எரித்து உண்ணாவிரதமிருந்து ஐக்கியநாடுகள் சபையில் இருண்ட முகத்துடன்  2600 வது புத்ததத்வ ஜெயந்தி அறிக்கை வாசித்து சிவப்புச்சட்டையாகி மஞ்சள் நிறத்திற்கு மாறிய வீரரான வம்ச.

அறிக்கைகள் இடல்,போராட்டம், எதிர்ப்பு அணிகள், சட்ட அமுலாக்கம், அல்லது அறிமுகம் எதிலும் அரசாங்கமும் நிதானமில்லை.அமைச்சர்களும் நிதானமில்லை.எடுத்தேன் கவிழ்த்தேன் என துள்ளுவதும் பின் அள்ளுவதும் வெட்கம் கெட்ட செயல்.

இப்போது "பிச்சை வேண்டாம் நாயைப்பிடி" என்றிருக்கின்றது அதிகார இயந்திரத்தின் நிலை.

Wednesday, 27 April 2011

மறைந்திருக்கும் குருவியின் மறையாத குரல்

இலக்கியத்தளத்தை காலம் நிச்சயித்து வந்திருக்கின்ற காலத்தில்,காலத்தின் பெறுமானத்தை இலக்கியங்கள் விம்பங்களாக்கி விடுகின்றன.காலத்திக் மகா பிரதிநிதியாக இயங்குபவன் இலக்கியக்காரன். அவன் உணர்வும், உவகையும் இலக்கியடமும் தாகமும் கொண்ட உயிரி.

மண் புழுவொன்று மண்ணைத்துளைத்துக்கொண்டு உள் நுழைந்து செல்வது போல மானுட தாகத்தால் உணர்வு பொங்க வாழ்வின் குறுக்கு முகத்தில் பயணிப்பவன் இலக்கியக்காரன்.

அத்தகைய பயணிப்பின் பிரதிபலிப்புத்தான் படைப்பு.படைப்புக்களில் சிறுகதை ஒரு மகா வடிவம். இது தனக்கென புதிய புதிய வடிவத்தைத்தேடித்தேடி திளைக்கிறது.

பழைய கதை மரபுகளை உடைத்துக்கொண்டு கதையின் கட்டுமானங்கள்,நுட்பம் இழையோடும் மொழியாட்சி,கருயுதி என வடிவமற்ற வடிவமாய் கதை வெளி விரிவு பெறுவதனை தமிழ் மொழிச்சிறுகதைப்பரப்பிலும் கானுகிறோம்.

கதை சொல்லி முக்கியமான ஆளுமையாக நம் மன் முகம் காட்டுகிறான்.நமது முஸ்லிம் கதை சொல்லிகளில் இத்தகைய நவீன பரப்புக்குள் இயங்குகின்ற சிலரில் சிலாகிக்கத்தக்கவராக மேற்கிளம்புகிறவர் ஓட்டமாவடி அறபாத்.

அறபாத் எண்பதுகளுக்குப்பின்னரான எழுத்துத்தளத்தில் முனைப்போடு வெளிப்படுபவர்.கவிதை,கதை,விமர்சனம்,ஆன்மீகம், என பல தளங்களில் செயற்படுபவர்."எரி நெருப்பிலிருந்து",    "வேட்டைக்குப்பின்" ,இவர் கவிதையில் ஓய்ந்து விட்டாரோ என ஊகிக்கத்தக்தெனினும்,கதை சொல்லலி்ல் அறபாத் புதிய குரலோடு பரிமளிக்கின்றார். 'நினைந்தழுதல்', "ஆண்மரம்' , திரட்டுக்களின் வழியே உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி யாக புதிய தொனியுடன் வெளிக்கிளம்புகிறார் அறபாத்.

அறபாத்தின் எழுத்து வீச்சார்ந்தது.உணர்வு பொங்கிப் பிரவகிப்பது.சொல் நுட்பத்தால் வாசகரை இழுக்கும் மந்திரம் மிகுந்தது,யதார்த்தமானது: தொய்வற்ற நகர்ச்சித்தனம் உடையது. இத்தகைய கட்டிறுக்க மொழியூடாக அறபாத் சொல்ல முற்படும் கதைப்பொருள் நமது சமூகத்தின் பிரதி விம்பமாக இருக்கின்றது. எனவேதான் அறபாத் முஸ்லிம் கதைப்பரப்பில் நவீன கதை சொல்லியாக தெரிபடுபவர்களில் முக்கியமானவராக நமது கவனிப்பை ஈர்க்கின்றார்.

உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி- அடையாளம் பதிப்பகத்தால் அடையாளம் காணப்பட்டது.முஸ்லிம் சமூக முன்னோடி வாப்பிச்சி மரிக்காயருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூலில்  'கழுதைகளில் விஜயம்' முதலாக 'ஏவாளின் தோட்டத்தில் கனிகள் இன்னும மிச்சமிருக்கின்றன.' வரையான 32 கதைப்பிரதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே வாசிக்கப்பட்ட கதைகள் இதனுள் அடங்கினும் மீள வாசிக்கின்ற போது மேலும் புதிய வாசிப்புத்தளம் விரிவடைகின்றது என்ற வகையிலும் இப்பிரதிகள் அவதானத்திற்குட்படுகின்றன.

உள்நிலை அரசியல் சின்னத்தனங்கள்,வன்முறையின் கொடூரமான அடையாளங்கள்.பெண்ணிலை வாழ்க்கை ,சமூக வாழ்வின் அன்றாட அவலங்களின்  கோலம், அன்பி்ன் அடைய முடியாத ஆழம், கனவுகள் ,ஏக்கங்கள்,பரவசங்கள் என சமூக வாழ்வின் கதைப்பொருள்கள் அமைகின்றன.

 ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் உடைந்த கண்ணாடியாய்த்தான் இருக்கிறது.அந்தக்கண்ணாடியில் ஏதோ ஒரு விதத்தில் அவனது இயக்கம் மறைந்திருக்கிறது என்பதானாலோ என்னவோ அறபாத்தின் கதை மாந்தர்களும் உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவியான நமது வாசிப்பில் வெளிப்படுகிறார்கள்.

அறபாத் தேர்ந்த வாசிப்புடையவர்.தீராத தேடலுடையவர்,நுட்பம் மிக்க இலக்கிப்பார்வை மிக்கவர். என்பதனை அவரது கதகளை தொகுத்து வாசிக்கும் போது இனங்கான முடிகிறது என்பதனால் நமது முஸ்லிம் கதைப்பரப்பில் இன்னுமு புதிய பாய்ச்சல்களை அறபாத் ஏற்படுத்துவார் என நம்பிக்கை கொள்வது வீணாகப்போவதில்லை.

-மர்யம்.

நன்றி : விடி வெள்ளி மார்ச் 31

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...