எனக்குள் கவிழ்கிறது
இருள்.
பொண்ணி வண்டு முட்டையுள்
மூர்ச்சித்துக்கிடப்பதான வலி.
மரவட்டையைப்போல்
எனது தேசம்
மிகச்சுருங்கிற்று.
காலாற நடக்கையில்
ஒரு முரட்டுக்குரல்.
என் கனவைக்குதறிப்போடும்.
அதிஷ்டலாபச்சீட்டில்
மறைந்திருக்கும்
வெற்றி எண்களைப்போல்
வாழ்க்கை
எப்போதாகிலும்
ஒரு ஓரத்தில் துளிர்த்து
பின் மறைகிறது.
சொல்வதற்கும்>எழுதுவதற்கும்
இங்கு ஏதுமற்ற அந்தரம்.
மரணத்தின் இடைவிடாத
உக்கிரப்பார்வை
''விடுதலை""களின் பெயர் கூவி
தினம் எமை அழைக்கிறது.
சுவாசிப்பதற்கான காற்று காட்டுமே
என் தேசத்தில்
சுதந்திரமாக தெரிகிறது எனக்கு.
அதுவும் நீ வரமாட்டாய் என
நிச்சயித்து நான் தூங்கும்
பகலில் மட்டும்.
25-09-2001 - கீறல் - நிந்தவூர்.
விழியழுத உவரலைகள்
நெஞ்சின் மேல் வாரியடித்தன பெருங்குரலாய்.
என் செய்தீர் வீரர்காள் என்னினத்தானை?
அத்தாங்கு கொண்டள்ளி
சுடு மணலில் கொட்டிய மீன்களென
வெடி குண்டு கொண்டல்லோ
குழியிட்டு மூட வைத்தீர்.
கடலின் அந்தரத்தில்
பிரலாபித்ததெம் ஆத்மா.
சாவென்னும் தீ மூட்டி எம்முயிரை கொன்றொழித்தீர் வீரர்காள்
கொன்றொழித்தீர்.
சக மொழி பேசுவோனை,
சக தேசத்தானை
ஏனங்கு குறிவைத்தீர்?
வரி தந்தோம் (தருகிறோம்)
நீவீர் பயந்தொதுங்கி வந்த போது
இடம் தந்தோம்.
உயிர் தந்து விடுதலைக்காய் உருக்குலைந்தோம்.
எமக்கென நீர் எது தந்தீர்
வீரர்காள்?
இதோ
அநீதி இழைக்கப்பட்ட
என்னினத்தானின் சாபம்
உமை நோக்கி எழுகிறது. நிச்சயம் ஓர் நாள் அது
உங்கள் விடுதலையை பொசுக்கும்.
கீறல் 01,2002
ஆறிக்கிடந்தது.
என்னுடன் நீ
பரிமாறிக்கொள்ளும்
ஓராயிரம் கனவுகளும்
விழிகளுள் நொருங்கிச்சிதறின.
தேனீர்க்குவளையின் விளிம்பினிடை
நமது எல்லைகள் விரியும்,
சுதந்திர நினைவின் எதிரொலி நம் விழிகளில் கசியும்.
காலம் முகிழாக்கனவுகளும்
வெகுளித்தனகளுமற்ற ஓர் உள்ளுலகில்
நாம் வாசமிருந்தோம்.
நம் சிநேகிதம்
இப்படித்தான் நித்யம் பெற்றது.
நேற்று முன்னிரவு
என் விரல் தழுவிய
உன் விரல்களின் மென்னுரசல்
இன்னுமென் உள்ளங்கையில் சுடுகிறது.
ஊர் செம்மண் தரையில் கை கோர்த்து
நடக்கையில்- நீ
ஒரு கவிதை போலச்சிரித்து வந்தாய் என்னுடன்.
காலங்கள் நெடுகவும்
இப்படி சிரித்துத்திரிவாய்
என்ற என் கணிப்பீட்டின் மீது
அவர்கள் துப்பாக்கி கொண்டு
அழித்து விட்டு சென்றனர்.
என் பிரிய நண்பனே
குறைந்தபட்சம்
நீ எதற்காக என்றேனும் அறிவாயா?
2000-10-14 - மூன்றாவது மனிதன் - 2000
இதுவல்ல என்னிலம்
உதிரமும், சதையுமாகி
குருவிச்சிரமமாய்
புனரமைத்த வீடு என்னது.
என் மனையோ மழலையின்
சிரிப்புத்ததும்பினது
சொந்தங்களினதும், நண்பரினதும்
சகவாசம் சுமந்த தலைவாசல் என்னது.
அதனுள் என் பேடையுடன் இரவிலும்,பனி விசிறும் மாலையிலும்
முயங்கிக்கிடந்தேன் தனிமையில்.
என் வீட்டை என்ன செய்திருக்கிறாய்
கொடியவனே
என் கவிதைகள் மூச்சுத்திணறி சாகும் வரை
தீ-நாக்கால்
துளாவினாய் என் கூரையின் மேல்
நான் துடித்து நின்றேன்.
நான் பார்த்திருக்க
என் சதையும், உதிரமும்
கரைந்தோடி உறைந்திற்றேன் காலடியில்.
என் புறாக்களின்
மாடத்தை நீ-தகர்த்தெறிந்தாய்
உன் - சாமாதானப்போரால்.
உருகி வழிந்து தரையுடன் உறைந்திருக்கும்
மெழுகுவர்த்தி சிதைவென
இதோ என்னிலம்.
கழுதைகள் சயனிக்கவும், நாய்கள் புணரவுமான
மயானமாக்கினாய்
என் வீட்டை.
என் பூவலில்
நீ - கடித்துண்ட மனிதரின்
எலும்புகளை வீசிச்சென்றாய்.
பார்
என் வீட்டை
பெருவெளியில்
மழை கரைகிறது.
வெய்யிலில் கருகிறது.
உன் நண்பர்களின் சப்பாத்தொலியிலும்
எக்காளச்சிரிப்பிலும் சிறுத்து நிற்கிறது என் வீடு.
இனி எப்போதுமுள்ள
என் வாழ்க்கையைப்போல.
2000-06-08 சரிநிகர் 99
மழைத்துளி
துவானம் முகத்தில் அறைய
கண் விழித்தேன்
ஒரு பூனைக்குட்டியாய்
என் மனசுக்குள்
நீ சுருண்டு கிடந்தாய்
கனவு கலைந்த பின்பும்.
துக்கவிதை வீசிற்று
தூர்ந்து விட்ட உயிரின் சிறகசைப்பில்
துயரம் குமட்டும் தேச நிகழ்வில்
ஒரு சொட்டுப்போல வாழ்வு துளிர்த்தது.
குமையுமிந்த கனவுத்திடலில்
நீர்க்காகமென வாழ்வின் தலை
மரணக்குளத்தில் எகிறி வந்து அச்சமூட்டும்.
பச்சோந்திகளின் தேசமிது
காற்றுலவாத
அறையினுள் தினம் சிறைபட்டு போகிறதெம்
விடுதலை.
சவர்க்கார குமிழியென
ஒரு கணப்பொழுதின் வர்ணமுட்டையாய்
இன்றின் பகற்பொழுதில்
சிரித்துலாவிய வசந்தம்
இரவில் மட்டுமிங்கு மரணத்தை போர்த்திற்று.
மூளையின் தகிப்பில்
உருகிற்று என் விழிகள்
வெண்ணுடுக்களுதிர்ந்த சாமமொன்றில்
என்னிமைக்கூண்டில் சிறைப்பட்டன கனவுகள்.
பின்னவும் நான் பார்த்திருக்க உயிரறுந்த
பல உடல்கள் ஸுஜுதில் கிடந்தன பள்ளியில்.
மூசாப்பு மூடிய மனத்திலிருந்து
அப்பள்ளியில் படித்த துர்க்கவிதை
இன்னும் தான் மூக்கில் கரைகிறது.
எதையும் மறப்பதற்கில்லை நண்பனே
இந்த அகதிக்குடில் எரியுமட்டும்.
சரிநிகர் 2000-03-27
சட்டமியற்ற கைகள் உயர்த்துவாய்
இருக்கின்ற சட்டங்களோ இருக்கமாயுள்ள
இக்கனத்தில்,
இன்னுமின்னும் குரல்வளையை நெரிக்கும்
உன் கைதூக்கல்.
நீ-வியர்க்காமல் பயணிக்க
குளிர் ஊர்தியுண்டு
வானிலும் பறந்தேகுவாய்
தங்குமிடம்,வாகனம்,பெட்ரோல்,டெலிபோன்,
போனேசசென
உன் பை நிரம்பும் எம் வரிப்பணத்தில்.
உன் மெய் காக்க படையுண்டு
ஏவலரும் இன்னும் சில அடியாலும்
உனக்குண்டு
உன் குழந்தைகளோ கடல் தாண்டி அறிவுண்ணும்
உனக்கென்ன குறையுண்டு தலைவா
இரவிரவாய் விலையுர
நீ உயர்த்தும் கைகள்
உனக்கு வாக்குப்போட்ட
எம் கழுத்தையல்லோ நெரிக்கிறது.
2000-05-05 யாத்ரா-2001
பிறர் அஞ்சுதற்குறிய
கொடூரனுமல்ல நான்.
எனினும்
நாடு நிசியில்
வஞ்சித்தென்
கழுத்தை எனறுத்தீர்.?
என் துவிச்சக்கரவண்டியே
சந்தூக்கானது.
முன்னர் எரித்தவரின்
அபயக்குரல் அடங்கு முன்
என் கழுத்தை
எனறுத்தீர் சொல்லுங்கள்.
பொங்கலுக்கா பலி எடுத்தீர்
ஈழத்தர்ச்சணைக்கா எனை எடுத்தீர்.?
கத்தியை செருகி என்
பிடரியை அறுக்கையில்
கதறிய என் ஓலத்தை
தேசிய கீதமாக்கவா
திட்டமிட்டீர்.?
அறுபத்தைந்து வருஷங்கள்
வாழ்ந்தவொரு கிழவன் நான்
ஒரு கோழியைக்கூட
திருகத்தெரியா வயோதிபனை
கதறக்கதற அறுத்தனையோ
வீரர்காள்.?
இளம்பிறையை எரித்துண்ட
கல்மடுக்கிராமமே
இனி உன்னில் யுகாந்திரமாய்
அலையுமென் அபயக்குரல்.
அது உன் பிச்சலத்தின் ஆணிவேரை
உசுப்புமொரு நாள்.
அப்போதுணர்வாய்
துண்டிக்கப்படுகையில்
என் வலியை!