சொல்வதற்கு வெட்கமில்லை.
அண்மையில் நடந்து முடிந்த உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அளவுக்கதிமாகவே இருந்தது.சக்தி தொலைக்காட்சியின் கனவு மெய்ப்பட வேண்டும் பாடலில் பித்துப்பிடித்து ஆடிக்கத்திய வபாவின் குரலிலும் அந்த நம்பிக்கை கேட்கத்தான் செய்தது.எங்கும் நீக்கமற மறைந்திருக்கும் அரசியல் இரும்புக்கரங்கள் விளையாட்டிலும் விளையாடி விட்டன.
இலங்கை கிரிக்கட் அணி மட்டும்தான் உலகில் இனவாதத்தால் கட்டியெழுப்பட்ட அணி என்று நினைக்கின்றேன்.சிங்கள தேசியவாதம் மலிந்த வக்கிரக் குழுவினரின் வழிநடத்தலால் திறமைக்கு முதன்மை என்பது போய் இனத்திற்கே முன்னுரிமை என்ற நிலை அங்கு.முத்தையா முரளீதரனைத்தவிர.
உலக நாடுகளில் அவுஸ்திரேலியா,நியுசிலாந்து உள்ளிட்ட மேற்குலக நாடுகள் திறமையான முஸ்லிம்களை இனங்கண்டு கிரிக்கட் அணியில் இணைத்துள்ளதைப்பார்க்கும் போது இலங்கையில் ஊறியுள்ள இனவாதத்தின் வக்கிரத்தை அளவிட முடிகிறது.
உண்மையில் நடந்து முடிந்த உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை வென்றிருந்தால் அதை இந்தியாவுக்கெதிரான போரில் ஜெயித்தது போல் ஒரு பிரமை கட்டமைக்கப்பட்டிருக்கும்.
இங்கு தமிழர்களை தோற்கடித்த இரண்டாவது வெற்றிப்பிரகடனம் கூட செய்யப்பட்டிருக்கலாம். போரிலும், விளையாட்டிலும் தீராத விளையாட்டுப்பிள்ளை என்ற இறுமாப்பு அரச தலைவர்களின் மனங்களில் குடி கொண்டு ஆட்டிப்படைத்திருக்கும் என்பது நிச்சயம்.
திறமை என்பது மங்கி, இந்த நாட்டின் வெற்றியை தீர்மானிப்பது, உழைப்பது எல்லாம் சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற எழுதப்படாத விதி நீண்ட காலமாக கிரிக்கட்டில் நிலவுகிறது. இதை மாற்றாத வரை பாகிஸ்தானுக்கு கொடி பிடிக்கின்ற கூட்டத்தை திருத்துவது மகா கஸ்டம்.
இலங்கை அணி வென்றால் கெத்தாராம விளையாட்டரங்கிற்கு அருகாமையில் உள்ள முஸ்லிம்களை ஒரு கை பார்ப்போம் என்று கறுவிச்சென்ற சிலருக்கு இரத்தக்களரியைக்காணாதது வருத்தம்தான்.
பாகிஸ்தானும் இலங்கையும் விளையாடியபோது அவர்கள் பாகிஸ்தானை ஆதரித்தமைக்கான அச்சுறுத்தல் அது.
(இலங்கையின் வளங்களை பகிர்ந்து கொண்டு விளையாட்டில் மட்டும் பாகிஸ்தானை ஆதரிப்பதை எதிர்ப்பவன் நான். )
இந்த ஆதரவுக்கு என்ன பின்னணி என்பதை திலங்க சுமதிபால போன்ற இனவாதிகள் அறிந்து அவற்றை நீக்க வேண்டும்.
இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட இலங்கை அணிக்கு நாட்டு மக்களும் அரசாங்கமும் அளித்த மகத்தான வரவேற்பு, இலங்கை அணி்க்கு நிச்சயம் மனவலிமையை கொடுத்திருக்கும். அது வரவேற்கத்தக்கது.
இலங்கை கிரிக்கட் அணி இனிவரும் காலங்களில் இனத்துவத்துடன் நோக்கப்படாமலிருக்க பல்லினத்தவர்களிலும் திறமையுள்ளவர்கள் இனங்காணப்பட்டு உள்வாங்கப்படவேண்டும். அதிலிருக்கும் மோசமாக அரசியல் விசமிகள் களையப்படவேண்டும். நாடு தேசியம் என்ற எல்லைகளுக்குள் விளையாட்டை தக்கவைப்பதுதான் எதிர்காலத்தில் அணியின் வளர்ச்சிக்கு வளம் சேர்க்கும்.
கடைசியாக இலங்கை அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவி முழு நாடே சோகத்தில் உறைந்திருக்க சக்தி தொலைக்காட்சி மட்டும் பழைய விளம்பரங்களை போட்டு நாம் வெல்வோம் என படம் காட்டியதை பார்த்தவர்கள் ஆடித்தான் போனோம். இது சக்திக்கு ரொம்ப ஓவராகத் தெரியல்ல????