Wednesday, 28 September 2011

சிறுகதை: ஜின்




        வீட்டுக்கு அடங்காத “தல தெறிச்ச“ பிள்ளைகளை வேதம் படிக்கவென வலுக்கட்டாயமாக மதரசாவுக்கு சேர்த்துவிடும் ஒரு காலமிருந்தது. ஆகம நியதிகளை கற்று ஞானதீட்சைபெறும் இளங்குருக்கள் பழைய சேஷ்டைகளை துறந்து ரொம்ப அடக்கமாக நடந்து கொள்வர் .

      1985 இன் முற்பகுதி குதியான் பருவத்தில் பனை மரம் , நாவல் மரம், மாமரம் எனப்பாய்ந்து திரிந்த அலியை அவனது வாப்பாவான முஹம்மது முத்து மரிக்கார், மதரசாவுக்கென நேர்ச்சை செய்து பிரகடனப்படுத்திவிட்டார்.  
குடும்பங்கள் கூடி மகிழ்ச்சியில் திளைத்து, நார்சா கொடுத்து , லெப்பை வந்து பாதிஹா ஓதி மாப்பிள்ளை அழைத்துப்போவது போல், அலியை மதரசாவுக்கு அழைத்துப்போனார் மரிக்கார் .
 
       முன் பனி உறையும்  குளிர்காலம் . வைகரையின் சௌந்தர்யங்களை துளைத்துக்கொண்டு,ஊளையிட்டபடி மூச்சிரைத்து வந்து நிற்கும் மட்டக்களப்பு உதய தேவியில், அலி வாப்பா சகிதம் ஏறிக்கொண்டான்.
முழங்கால் தழைய தைக்கப்பட்ட ஜிப்பா, தலைப்பாகை, தொப்பி புது லேஞ்சு , முதன் முதலில் வாங்கிய அண்டவெயர், ஒரு பீங்கான், தேனீர்க் குவளை, பெட்ஷீட் , துவாய், ஒன்றிரெண்டு சந்தண சோப், ஐந்து பார்சோப், பென்குயின் நீலத்திரவப்போத்தல், அலியின் உம்மா விடிய விடிய விழித்திருந்து சுட்ட முறுக்கு,பலகாரம், கொக்கச்சி, சீனி மா அய்ட்டங்கள்  அனைத்தும் மரிக்காரின் கையில்.

         அலியின் தோளிலோ, புத்தம் புதிய ரவல் பேக் பச்சைக்கலரில் ஊறப்போட்ட ரவல் பேக்கின் தோல் மணம் மூக்கைப்பிசைந்தது. பேக்கின் சிப் வந்து முடியும் நுணியில் தொங்கும் ஒரு சின்னப்பபூட்டு. சாவி ரவல் பேக்கின் வெளியறைக்குள் பத்திரமாகக்கிடந்தது.

        மதரசாவுக்குச்செல்வதென்றால் வாட்ச் வாங்கித்தரவேணும் என்ற பிடிவாதத்தின் பயனாக கிடைத்த “மெண்டியா“ மணிக்கட்டில் உருண்டு திரண்டு சிமிட்டிக்கொண்டிருந்தது.அடிக்கொருதரம் அதை திருப்பித்திருப்பி மணிக்கட்டில் இருக்குமாறு சரிபார்த்துக்கொண்டான் . புத்தம் புதிய தோள் சப்பாத்து . வாப்பா காத்தான்குடியில் இறக்கி தயிர்வடையும் டீயும் வாங்கித்தந்தார் .

        இலங்கையில் பெயர் பெற்ற மதரசாவுக்குள் கால் பதிக்கையில் நெஞ்சுக்கூடு பதகளித்தது. கருகருவென்ற அடர்ந்த தாடிகள், முழங்கால் தொடும் நீண்ட ஜிப்பாக்கள் பச்சை நிற பாம்புகள் போல் தோளில் வழிந்து கிடக்கும்  பச்சைத்தலைப்பாகை.

    உஸ்தாதின் முன் அலி நிற்கிறான்.அலிக்குப்பின்னால் வாப்பா கூனிக்குறுகி மரியாதை கலந்த அச்சத்துடன் ஒடுங்கி நிற்கிறார். காலில் விழவும் தயார் என்ற பவ்யம்.

     “ தம்பி நல்லா ஓதுவியா “  உஸ்தாதின் குரல் தடித்து அவனில் தெறித்து அறை  முழக்க வெடித்தது.

“ இப்புடி வா “

அவரருகில் சைக்கினை செய்ய, மகுடிக்கு மயங்கிய நாகமென உஸ்தாதின் காலடியில் நின்றான். அவரின் வியர்வையுடன் மசிந்து ஜன்னதுல் பிர்தவ்ஸின் திவ்வியம் நாசி  விடைத்து , கல்பு நிறைகிறது.

அறையை நோட்டமிடுகிறான். சுவரோரமாய் ஒரு கருங்காலிக்கட்டில் மேசை, நாற்காலி மேசை நிறைய தினுசான புத்தகங்கள் . காகிதங்கள்.அலியின் தொண்டைக்குள் புளியாணம் உறைக்கிறது.

“ ஓம் அசரத் “

“ ஆ நல்ல பொடியன் ஆகிரத்துல உனக்கும் அல்லாகுத்தஆலா சிபாரிசுக்கு சங்க செய்வான் “

“ எங்க அல்ஹம்த ஓது பாப்பம் “ 

அஊதுவில் தொடங்கி,வலல்லாழ்ழீன் ஆமீனில் முடிக்கிறான் .உடுத்தியிருந்த வெள்ளைச்சாரன் பிருஷ்டத்தில் ஒட்டிக்கொண்டு, திமிர் காட்டியது. உஸ்தாத் மூக்குப்பொடி உருஞ்சிக்கொள்ள குணிந்த தருணம் பார்த்து,  பிரயாசைப்பட்டு அதைபிய்தெத்தெடுத்தான்.
அசிங்கமாகஅங்கயெல்லாம் கையப்போடக்கூடாது என்பது போல் வாப்பா கண்களால் எச்சரித்துக் கொண்டிருந்தார் .

உஸ்தாத் சாய்வு நாற்காலியின் முனையைத்தருகியபடி ஆழ்ந்து சிந்தித்தார் .பின் அலியை நோக்கி கனிவாக இள நகை பூத்தார்.

“ நல்லம் , அர்கானுல் ஈமான் சொல்லு “ என்றார் .

ஒரு வாரத்திற்கு முன் விடுமுறையில் வந்திருந்த அலியின் ஊர்க்காரன் அசன், இதே மதரசாவில்தான் ஓதுகிறான் . கேள்விகளின் ரகம் அதற்கான பதில்கள் எல்லாவற்றையும் விலாவாரியாக சொல்லிக்கொடுத்திருந்தான். அர்கானுல் ஈமான் ஒப்பிவிக்கப்பட்டது.

உஸ்தாதின் முகம் பூரிப்பில் மலர்ந்தது. 

“ ம் மரிக்காரு பொடியன் நல்ல கெட்டிதான். “

     வாய்விட்டு புகழ அலி கால் பாவாது மிதந்தான். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட தெய்வக்குழந்தையாகிய திமிர் நெஞ்சுக்குள் பரவியது. வாப்பா பூரிப்பில் திளைப்பதை முகம் உணர்த்தியது. உஸ்தாதின் அறையே ஒரு விந்தையான உலகமாய் விரிந்தது .அலியின் விழிகள் வியந்து வியந்து அறை முசிய வலம் வந்து, ஈற்றில் அந்தக்கருங்காலிக்கட்டிலில் முட்டி நின்றது.

    அலியின் உம்மாவுக்கு மூத்தாப்பா சீதனமாய் கொடுத்த கருங்காலிப்பெட்டகத்தின் நினைவு .மனசின் மேலெழுந்து, கல்பை அடைத்தது.அதற்கு ஏக சொந்தக்காரியான உம்மாவின் நினைவு , அவட மீன் கரியின் ரசம், என ஒவ்வொன்றாய் சங்கிலித்தொடராக அலியின் நினைவுச்சந்தைக்குள் இரைச்சல் கொடுத்தன.தொண்டைக்குள் காலையில் வாப்பா வாங்கித்தந்த தயிர் வடை  மகா வளையமாக குறுக்கே கிடந்தது .

உஸ்தாது எதிரே மங்கலாகத்தெரிந்தார். அவரண்டையில் வாப்பா ஒரு புள்ளியாக நின்றார். அறையில் சற்றைக்கு முன் பார்த்த எந்தப்பொருளும் இல்லை. வெறும் கட்டாந்தரை இவன் மட்டும் ஏகனாய் நின்றான்.உம்மா வந்து மார்போடு அணைத்து தலைக்குள் விரல் புதைத்து  கோதி விடுகிறா.அவவின் மெத்தென்ற மார்பில் முகம் புதைத்து  விசும்புகின்றான்.

“ என்னடாம்பி குழர்றாய் “

   உஸ்தாதின் குரலில் இழையோடிய இதம் வெப்பிசாரமாய்  வெடித்து, கேவலாய் எழுந்தது. வாப்பா சங்கடத்தில் நெழிந்தார்.

“ மனெ இப்ப என்னத்திற்கு குழர்றாய். அடுத்த மாசம் லீவாம் அச்சுப்பெருநாள் லீவு, இடையில நானும் உம்மாவும் வருவம் நம்மட ஊருப்புள்ளயளும் இருக்காங்க பயப்பிடாம இரு தம்பி “

    தலை தடவி வாஞ்சையுடன் அணைத்தபடி வாப்பா தழுதழுத்து விடைபெற்றுச்சென்றார் . அவர் குரலும் கம்மியதை அலி கவனிக்கவே செய்தான்.

    தனியனாய் அறையில் நின்றவனை உஸ்தாத் ஏற இறங்கப்பார்த்து விட்டு, மேசையில் உறங்கிக்கிடந்த பெல்லை அழுத்தினார்.ஒரு இளவல் ஓடி வந்து ஸலாம் சொன்னார் .

“ இந்தப்புள்ளக்கு கீழ றூம கொண்டு போய் காட்டிட்டு , இப்ப சேர்த்திருக்க முதலாம் வகுப்புல வுடு. “


 இளவலின் பின்னால் பலியாடு போல் சென்றான். அறைக்குள் நிலவிய மனப்புழக்கம் இளகியது.முற்றத்தில் இறங்கி விடுதியை நோட்டமிட்டான்.பிரமாண்டமான இரு மாடிக்கட்டடம்  “ப“ வரிசையில் மண்டபங்களும், வகுப்பறைகளும் நடுவே முற்ற வெளி சூழவும் தென்னை, பலா, மா மரங்கள். சமையறை மட்டும் காவி படிந்து  பார்ப்பதற்கு அசூசையாய் தோற்றம் தந்தது.

     இளவல் வழி நெடுகவும் ,அலியை புலன்விசாரணை செய்து கொண்டு போனார் . கடைசியாக வூட்டுல எத்தின பொம்புளப்புள்ளயல் என்ற கேள்விக்கு ரெண்டு என்றவுடன் , விடுதி வாசல்  வந்தது. 
பெரிய ஹோல் வரிசையாக ஆனால் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சின்னச்சின்ன மரத்திலானான கபேட்டுக்கள், அருகில் சுருட்டி அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பாய்கள்.
தாறுமாறாக கொடியில் தொங்கும் வர்ணத்துணிகளான  ஆடைகள். தண்ணீர் போத்தல்கள்,விடுதிக்குறிய இலட்சணங்களுடன் அந்த ஹோல் ஒழுங்கற்ற காட்சி தந்தது. இவனுக்குறிய கபேட்டில் கொண்டு வந்த சாமான்களை அடுக்கு மட்டும் இளவல் கூடவே நின்றார்.

      அதென்ன பேக்குல தின்னுற சாமானா எனக்கேட்டுவிட்டு முறுக்கு வளையங்களை கையிலெடுத்து கடிக்கத்தொடங்கினார்.

“ராத்தமாரு எத்தினையாம் ஆண்டு படிக்கிற“

  சீனிமாவை வாயில் போட்டபடி மீண்டும் வேதாளம் ஏறியது.

“ ஒருவர் ஏ.எல். இளயவ ஜி.சி என்றான். “

 கடைவாயில் படிந்திருந்த துகள்களை தலைப்பாகையால் துடைத்தபடி “உங்களப்போல மாநிறமா அவங்களும் “ என்று விட்டு, அசடாக சிரித்தார். மிஸ்வாக்கு ஏறிய பல்லிடுக்கில் சீனிமா அப்பிக்கிடந்தது.அலி எதுவும் பேசாமல் சாமான்களை அடுக்கினான் .

“ என்னயும் தேவையென்றா ஆரும் கரச்சல் கொடுத்தா எங்கிட்ட சொல்லுங்க “

       கொண்டு வந்த பெட்லொக்கை கபேட்டில் மாட்டி மூடி விட்டு, வகுப்பு எங்க என்றான். இளவல் சிரித்தபடி அலியை வகுப்பறைக்கு கூட்டிச்சென்றார் . ஏலவே வந்திருந்த புதிய பையன்களுடன் அலியும் வகுப்பில் விடப்பட்டான்.

       அருகருகே பல வகுப்புகள். தினுசான பார்வைகளுடன் பையன்கள். அயல் வகுப்பில் பாடம் நடாத்தும் உஸ்தாதின் குரல் சுவரில் மோதி எல்லா வகுப்புகளுக்கும் தாவியது. அப்படியொரு வெண்கலக்குரல்.அலி மிரண்டபடி வகுப்புக்குள் நுழைகிறான் .பாடம் நடாத்திக்கொண்டிருந்த உஸ்தாத் இயல்பான கேள்விகளை கேட்டு விட்டு அமரச்சொன்னார்.

ஐந்தாக பிரிக்கப்பட்டிருந்த நீண்ட கட்டடத்தில் அலியின் வகுப்பு இடமிருந்து வலமாக மூன்றாவது இருந்தது. ஆங்கிலத்தில் B-3 என்று இடது பக்க மூலையில் பொறிக்கப்பட்டிருந்தது.வலது பக்கம் திறந்து விடப்பட்ட ஜன்னல்களின் வழியே குளிர்காற்று இறங்கி வந்தது. ஜன்னலுக்கு அப்பால் நெஞ்சுயர மதில். 
மதிலை ஒட்டினாற் போல் அகன்ற தாமரைக்குளம் ஆங்காங்கே தண்ணீரின் மினுப்பு மினுப்புத்தெரிய,குளத்தை மூடிக்கொண்டு தாமரைகளே கிடந்தன.மிதமான அலைகளுக்கு மேலும் கீழும் வழுவி இறங்கும் அகன்ற தாமரைப்பூக்களில் வண்டுகள் குந்த தருணம் பார்த்து சுற்றிச்சுற்றி வளையவந்தன.
குளத்தின் நுணியில் மலைத்தொடர்.அதன் அடியில் அடர்ந்திருக்கும் தென்னந்தோப்புகள். விளைச்சலுக்கு தயாராக நிற்கும் நெற்கதிர்கள்  என அந்த இடமே சௌந்தர்ய வியப்பையும், புலன்களில் சிலிர்ப்பையும் தந்தது.

“ என்னடாம்பி ஒங்கட ஊருல குளம் கிளம் ஒன்டுமில்லப்போல “.

பாடம் நடாத்திக்கொண்டிருந்த உஸ்தாதின் நக்கலில் முகம் நாணி கரும்பலகையை நோக்கினான் .


        இடைவேளையின்போது ஊர்  பிள்ளைகள் இவனை சூழ்ந்து கொண்டார்கள். கென்ரீனுக்கு அழைத்துப்போனார்கள்.குரக்கன் கூழ் 5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வாங்கித்தந்தார்கள்.

        கென்ரீனில் கடன் சொல்லி  பெரியநானாக்கள் திண்பண்டங்கள் வாங்கிப்போனார்கள்.போகும் வழியில் இவனில் ஒரு முறைப்பு வைத்துவிட்டே சிலர் சென்றனர்.

        மாலை ஐந்து மணிக்குப்பிறகு காலாற உலாவரவும், விளையாடவும் அனுமதியிருந்தது. பேச்சுவாக்கில் இரவில் மதரசாவில் சின்னப்பிள்ளைகள் தூங்கும் ஹோலில் ஜின்களின் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை செய்து விட்டு கமுக்கெனச்சிரித்தார்கள்.

       அலியின் கால்கள் நடுங்கத்தொடங்கின.ஜின்களின் அட்டகாசம் குறித்து ஒவ்வொருவரும் திகிலூட்டும் கதைகளை சொன்னார்கள்.இரவில் வந்து வுழூச்செய்வது, சாமத்தில் ஒண்ணுக்குப்போகையில் லைட்டை அணைத்து விடல்,பள்ளியில் வந்து தொழல், வழில் தூங்குபவர்களை தூக்கி விளாசல் அல்லது அமுக்கல் என ஏகப்பட்ட ஜின்களின் அட்டகாசங்களை சொல்லிச்சொல்லி கிலியூட்டினார்கள்.

       ஜின் வாசிலாத்து பண்ணும் மந்திரங்கள் தனக்குத்தெரியும் என்டு அசன் எடுப்புக்காட்டினான்.அலிக்கு இரவில் மூத்தம்h சொல்லும் பேய்க்கதைகளுடன் ,ஜின்களும் கூட்டுச்சேர்ந்து அச்சமூட்டின . 

பள்ளியில்  அசன் பச்சை தலைப்பாகையுடன் ஜின் தொழுது கொண்டிருந்ததை தான் கண்டதாக வேறு கதையளந்தான் .நெடுநெடுவென்று வளர்ந்த உருவம் ,முகட்டை தொட்டு விடுமளவிற்கு அதன் கைகள் உயர்ந்ததையும் அசன் விஸ்தாரமாய் சொல்லிக்கொண்டிருக்கையில் இரவு வந்து விட்டது.

இருள் இறங்கி பூமியைத்தழுவ, அச்சம் கவ்வத்தொடங்கியது. தாமரைக்குளத்தின் விரிந்த மலர்களில் ஜின்கள் பதுங்கி இருக்குமோ என்ற ஜன்னி .மஃரிபு நேரத்தில் குளத்தைப்பார்ப்பதை தவிர்ந்து கொண்டான் .

யாருக்கும்  அஞ்சாத இரவு  வெகு உல்லாசமாக பூமியை தனக்குள் உறிஞ்சிக்கொண்டது. விடுதியில் படுக்கை அறை தனித்தனியே இல்லை ஒற்றை மண்டபத்தில் பாயை விரித்து படுத்துக்கொள்ள வேண்டும். குறுக்காக பெஞ்சு இருக்கும் அருகில் தூங்குபவரின் மேல் கை கால் படாமல் ஒரு பாதுகாப்பு .பெரியவர்களுக்கு மேல் மாடியில் படுக்கை.

       அலி ஜின் நடமாட்டம் கம்மியாக இருக்கும் என ஊகித்து ஒரு மூளையில் பாயை விரித்தான். வண்ணாரவெட்டைக்குள் “கல்பன் புல்“ பிடுங்கி ,  காய வைத்து மூத்தம்மா பின்னித்தந்த வர்ணப்பாய் .மடமடவென்று தரையில் இருக்கமாட்டேன் என அடம்பிடித்தது.

அலி தலையை வைத்து அழுத்திப்படுத்துக்கொண்டான். இந்த இடத்தை தேர்வு செய்ததற்கு இரு காரணங்கள். ஒன்று இது மூளை ஜின்கள் மூளை முடுக்கெல்லாம் வராது. பெரிய உஸ்தாதின் பின் வழி தலைவாசல் இரண்டாவது காரணம்.

வெகு நேரமாய் தூக்கம் வராமல் அவதி;ப்பட்டான். புது இடம், முதன் முதலாக உம்மாவின் மூச்சுக்காற்றுப்படாத இரவு. ராத்தாமார்களின் சண்டைகளற்று உம்மென்று இவனை முறைத்தபடி இருக்கும் நைட் லாம்பு.எல்லாவற்றையும் மீறி மிகைத்து நிற்கும் ஜின்களின் அட்டகாசம் என அலியின்  உறக்கம் நி;த்தியமாய்  உறைந்திருந்தது.

எத்தனை மணிக்கு தூங்கினான் என்பது தெரியாது .கண் விழித்தபோது சலனங்களற்று நிர்த்தாட்சண்யமாய் தெரிந்தது இருள். இருள் பதுங்கிய இடங்களைத்தேடித்தேடி விரட்டிக்கொண்டிருந்தது நைட் லாம்பு. அயலண்டை குளத்திலிருந்து தவளைகளின் சலக்புலக் ஓலிகள்.வெகு தொலைவில் ஊளையிடும் நாய்கள். அவனைச்சூழவும் குறட்டை ஒலிகள் .

அலியால் தன் கை கால்களை அசைக்க முடியவில்லை. மரத்துப்போய் விட்டதா அவன் மேல் கணதியாக ஏதோவென்று கவிழ்ந்திருப்பதை சடுதியாக உணர்ந்தான் .உடம்பை அசைக்கவே முடியாத அழுத்தமான பிடிக்குள் தான் இறுக்கப்படுவதை அறிந்தும் அவனால் ஒர் இம்மியளவும் நகர முடியவில்லை 


ஜின்தான் சந்தேகமில்லை. ஆயதுல் குர்ஷியை ஓதினால் ஜின் விலகிவிடும் மாலையில் அசன் சொன்னது பொறி தட்டியது .அவசரமாக ஓதினான் .உதடுகள் பிரிய மறுத்தன. ஜின்னின் சூடான மூச்சுக்காற்று கழுத்தை தீய்த்தது. பயத்தில் உறைந்து தரையோடு தரையாக நைந்திருந்தான்.

தன் மேல் கவிழ்ந்திருக்கும் ஜின்னின் அழுங்குப்பிடி இறுகியது உடல் அதிர, வீறிட்டுக்கத்தினான். சப்தம் அடி வயிற்றுக்குள் உறைந்து அடங்கிப்போனது.

தன்னை பிடித்திருந்த ஜின் எப்போது விலகிப்போனது என்று தெரியாது .உடல் இலேசாகிக்கிடந்தது. வியர்வையில் நனைந்து தெப்பமாயிருந்தான்.

 நெஞ்சுக்கு மேல் தூக்கிவிடப்பட்ட சாரனை இறக்கி விட்டு துடைத்துக்கொண்ட பின்பும், அசூசையான வாசத்தை நுகர்ந்தான். ஜின்னின் செய்கை அருவருப்பாகவுமிருந்தது.

ஜின்னை பார்க்க வேண்டும் போல் உணர்வு தட்டியது. இலேசாக ஒருக்களித்து மிக ஜாக்கிரதையாக கண்னிமைகளைப்பிரித்தான் .பயத்தில் உடல் வெடவெடத்தது. நெடுநெடுவென்ற உருவம் அடர்ந்த தாடி, கட்டம் போட்ட ஜிப்பா, தலையில் சுற்றிய பச்சைத்தலைப்பாகை ஜின் அசைந்தசைந்து பெரிய உஸ்தாதின் அறைக்குள் நுழைவதை பார்த்துக்கொண்டே இருந்தான். மண்ணில் கால் பாவாது ஜின் நடக்குமென்று அசன் கூறியது சுத்தப்பொய் என்பது உறுதியாயிற்று .

வியர்வையில் தெப்பமாகிக்கிடந்த உடம்பில் திடீரென ஜன்னதுல் பிர்தவ்ஸின் நறுமணம் கமழ்ந்தது.ஓங்காரம் வருவது போல் மனம் அவதிப்பட்டது. சடுதியாக எழுந்தவன் தன் மேல் வீசிக்கொண்டிருக்கும் ஜன்னதுல் பிர்தவ்சை துடைக்கத்தொடங்கினான் .

புதைந்திருக்கும் இருள் நாளைய இரவு பற்றி, அவனை பயமுறுத்திக்கொண்டிருந்தது.துடைக்கத்துடைக்க தன் மேல் படிந்திருக்கும் பிர்தவ்ஸின் காரம் உடல் முழுக்க திகுதிகுவென எரியத்தொடங்கியது. அடிவயிற்றில் புதைந்திருந்த கேவல் வெடிக்க வீறிட்டு கத்தினான் ஜின்... ஜின்...


பிரசுரம் முஸ்லிம் குரல்
 2005.04.17 

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...