Monday, 19 January 2015

சிறுகதை

முற்றுகை


கந்தளாயில் கால்  புதைத்தபோது இலேசான பனி மூட்டம் ஊரை மூடிக்கிடந்தது.நள்ளிரவின் மவுனத்தை உசுப்பியபடி மனிதக்குரல்களின் அவலமே மிகைத்து நி;ன்றது.வீதியின் இரு மருங்கிலும் வெட்டிச்சாய்க்கப்பட்ட வாழைகளாய் மூதூர்,தோப்பூர் கிராமங்கள் சரிந்து கிடந்தன.பாடசாலை பள்ளி முற்றம்,கடைத்தெருவென ஹோவென்ற இரைச்சலுடன் மனிதக்கடல் அலையலையாய் தகித்துக்கொண்டிருந்தது.

மைதானத்தின் பற்றைகளுக்குள்ளிலிருந்து மழலைகளின் அழுகுரல்கள் உயரப்பறந்து காற்றிலாடின. சீதளக்காற்றின் ஊசிக்கரங்கள் பிஞ்சுகளை சீண்டவிடாமல் மார்புடன் அணைத்துக்கொண்ட அன்னையரின் பிரலாபம் மனங்களை கரைத்தது.

போரின் பெயரால் துரத்தியடிக்கப்பட்ட கிராமங்கள் கால் பதியும் தெருவெல்லாம் சிதறிக்கிடந்தன.மதகுடைத்த வெள்ளம் போல் தன் சொந்தங்களை தேடியலையும் மனிதர்களின் பதற்றமும் பரிதவிப்பும் ராக்குருவிபோல் அலைந்து திரிந்தது.

ராகிலா தன்  எட்டு மாதக்குழந்தையையும், கணவனையும் தேடி அலையும் பிச்சி. 69 இடைத்தங்கள் முகாம்களில் அவள் ஏறி இறங்கி ஒரு தபசி போல் அலைந்து திரிந்தாள். வாரிவிடப்படாத புழுதி அடர்ந்த பரட்டைத்தலையும்,அழுக்கடைந்த தேகமும், உருக்குலைந்த அவள் தோற்றமும் அழகியான அவளை ஒரு பைத்தியம் போலாக்கியிருந்தது.

அத்தாரிக்  முகாம் டீ பிரிவின் தூணுக்கு தன்முதுகை முட்டுக்கொடுத்தபடி ராகிலா உட்காந்திருக்கின்றாள். புதிய ஆடைகள், மருத்துவ சேவைகள், சமைத்த உணவு, உளவள ஆலோசனை எதுவும் அவள் இருப்பை தகர்த்துவிடவில்லை.அர்ஷை ஊடுருவிச் செல்லுமோ என மனங்கொள்ளுமளவிற்கு அவள் விழிகள் ஆகாயத்தில் குத்திட்டு நின்றன.

பால் முட்டிய இளமார்புகளில் வலி எடுத்தது.உஹது மலைபோல் தன் நெஞ்சில் கணக்கும் முலைகளின் ரணம் தினம் அடர்ந்து கொண்டிருந்தது.

“ பால பீச்சி வெளியால உடு புள்ள, மார்புல நோவு குறயும்” ஒரு அனுபவக்காரியின் நச்சரிப்பில் தன் மகள் குடித்துப்பெருக்கும் பால், அகதிகள் தரித்த மண்ணில் விழுந்து ஊறியது.

“ஓ..என் மகள் “ நினைக்க நினைக்க அவள் நெஞ்சு கேவியது.

ராகிலா தன் நினைவின் நுனியில்  அந்த துயர நாளை இழுத்து வந்து பார்;த்தாள்.

“முஸ்லிம் ஆக்கள் எல்லாம் ஒரு மணி நேரத்துள்ள ஊர விட்டு வெளியேறவும். நாங்க ஆமியோட சண்ட புடிக்கப்போறம்,”

  அறிவித்தல் தெருவெங்கும் இடி முழக்கமாய் விழுந்து செவிகளில் தீப்பிழம்பாய் உருகியது.பூர்வீக மண்னை, வியர்வை சிந்தி உழைத்த சொத்துக்களை, சிறுகச்சிறுக கட்டிய வீடுகளை,தன்மானத்தை பிறந்து தவழ்ந்து மூச்சுடன் கலந்திருக்கும் இந்தக்கிராமத்து மரங்களில் வாசம் செய்யும் காற்றை, ஒரே மணி நேரத்தில் கழற்றி விட்டு செல்ல வேண்டும். காலில் பட்ட தூசியை துடைத்தபடி வீட்டுக்குள் நுழைவது போல் இத்துனை ஆணி வேர்களையும் பிடுங்கி எறிந்து விட்டு இலகுவில் எப்படி செல்வது?

 திசையறியா இலக்குகளை நோக்கி விழும் ஷெல்கள்; கிராமத்திற்குள் விழுந்து வெடித்தன. வீடுகளை அது சல்லடை போட்டது. மக்கள் பள்ளிவாயல் மதரசாக்களில் உயிரை பாதுகாக்க அடைக்கலம் தேடினர்.

பல ஜனாஸாக்கள் அடக்கம்செய்யப்படாமல்  உப்பிப்பெருத்து அழுகிக்கிடந்தன.காகங்கள் வட்டமிடும் திக்கில் ஜனாஸாக்கள் கிடப்பதாக பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். ஒரு பானைக்கஞ்சி குழந்தைகள் மட்டும் உள்ளங்கைளில் நக்கிக்கொள்ளும் படி இருந்தது. கடைகளை திறந்து உணவு எடுக்க முடியாத முற்றுகைக்குள் ஊர் மூச்சுத்திணறியது.

தொழிலுக்குச்சென்றவர்கள்,அக்கரை சென்றவர்கள், ஆடுமாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றவர்கள் ,வண்டில் மாட்டுடன் வனத்திற்குச்சென்றவர்கள் இந்த அறிவித்தலால் ஊருக்குள் திரும்ப முடியாத பரிதாபத்திற்குள் கிராமம் தகித்துக்கொண்டிருந்தது.

ஊரின் மானம் காத்த திணவெடுத்த இளைஞர்கள் இனங்கானப்பட்டு அவர்கள் முழங்காலில் நிற்க வைத்து சுடப்பட்டார்கள். பெற்றவரின் முன்னிலையில் தவமிருந்து பெற்ற குருத்துக்கள் கருக, சிலர் நெஞ்சு வெடித்து சாய்ந்தார்கள். உம்மாவினதும்,, பி;ள்ளையினதும் ஜனாஸாக்கள் அருகருகே அமைதிகொண்டன.

ஒரு வீட்டுப்பி;ள்ளைகளாய் உறவு கொண்டு, ஒரேபாயில் படுத்துறங்கி, ஒரே தட்டில் சோறுண்ட தோழர்கள், தனது கரங்களில் துப்பாக்கிகளுடன் வந்தனர். அவர்களின் புன்னகை பூத்த முகங்களில் மரண வெறி இருந்தது. வன்மம் படர்ந்த விழிகள் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன.

சேர்ந்து விளையாடிய நண்பர்களை அவர்கள்தான் காட்டிக்கொடுத்தார்கள். இறுகப்பற்றிய கரங்களுடன் உலா வந்தவர்கள், பின் புறத்தே சேர்த்து வைத்து இறுகக்கட்டிய கரங்களுடன் எங்கள் இளவல்களை பலி பீடத்திற்கு சாய்த்துக்கொண்டு போனார்கள். நடக்க மறுத்தவர்களை “நடடா சோனி” என தூசித்தபடி இழுத்துக்கொண்டு போனார்கள்

புல் வெளியை நோக்கி விரட்டப்படும் ஆட்டு மந்தைகளைப்போல் அப்பாவி சனங்களையும் விரட்டினார்கள். சரளைக்கற்கள் விரவிக்கிடக்கும் காட்டுப்பாதை,முற்கள் கீறிக்கிழித்த பாதங்களிலிருந்து இரத்தம் சொட்டச்சொட்ட நடந்தது ஊர். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு மலை இடுக்கில் உருகி ஒடும் அக்கினி நதியென மனித வெள்ளம் பிரவகித்தது. கபட நாடக அரங்கில் பலியிடப்போவதை அறியா மந்தைகளாய் அவர்கள் களைத்து விழுந்து தவழ்ந்து விடாகித்த நாவுக்கு  ஒரு சொட்டு நீரின்றி நடந்தனர்.

தன் சிசுவை சுமந்திருக்கும் மனைவியை தோளில் காவியபடி செல்லும் கணவர்கள்,வயதான தாயையும் பிள்ளைகளையும்  தூக்கியும் நடாத்தியும் நகர்த்திச்செல்லும் பெரியவர்கள், நோயாளிகளை இருவர் சுமந்து செல்ல கிராந்தி மலை நடுக்கமுற்றது.
தண்ணீர் கேட்டழுத குழந்தைகளின் அழுகுரல் வனாந்திரத்தை உறையச்செய்தது.

“உம்மா தன்னி,” 
குரல்கள் வறண்டு நீருக்கு ஏங்கின.

“தம்பிமார எங்கட புள்ளயளுக்கு ஒழுப்பம் தண்ணி குடுங்க சீதேவியாள். வெயில் தாங்க முடியாம கத்துதுகள்.”

 உலர்ந்த உதடுகள் யாசகம் கேட்டன.

 “டேய் வாய மூடுங்கடா “ பதிலுக்கு அவர்கள் கத்தினர்.

ராகிலா கால் துவண்டு சரிய ஓடினாள். அறிவித்தல் விடுத்து ஒரு மணி நேரம் முடிந்து விட்டது. வயலுக்கு சென்ற கணவன் வீடேகவில்லை.அவள் மனப்பறவை நடுக்கமுற்றது. 
இந்தப்பிரளயத்தில் ஒரு சருகாகவேனும் அவன் அடித்து வரப்படாதா ?. அவள் கால் விரல் நுணியில் நின்று எம்பி எம்பி பார்த்தாள்.அவள் விழிகளுள் சுமைகள் ஏறிய தோள்களே தெரிந்தன.

 ராகிலா அறிவித்தலை தொடர்ந்து வீதிக்கு வந்தாள். வீட்டில் உம்மாவும் வாப்பாவும் மகளும். கணவன் குறித்து அறிவதற்காக வந்தவள், பக்கத்தில் விழுந்து வெடித்த ஷெல்லில் அதிர்ந்து அரபுக்கல்லூரிக்கு ஓடினாள். அங்கிருந்துதான் அவர்களை துப்பாக்கி மனிதர்கள் சாய்த்துக்கொண்டு போனார்கள். தொட்டிலில் உறங்கிய மகளை வாப்பாவும் உம்மாவும் தூக்கிக்கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை அவள் மனத்தில் உறைந்திருந்தது.

 அந்திம நேரத்தில்  அவர்களிடம் மன்றாடி தோற்றுப்போனாள்.

“தம்பிமாரே என்ர பச்ச மண் தொட்டிலில, எடுத்து வாரன் வுடுங்க ராசா “காலில் விழாக்குறையாக அழுது மன்றாடிப்பார்த்தாள். கரையவில்லை.

அவள் சிறு வயதில் தோழியருடன் விறகு பொறுக்கி விளையாடிய காடு, நாவற்பழமும், இலந்தையும் இலுப்பைப்பூவும் தந்து அவளை கிளர்ச்சியூட்டிய காடு. மருங்கப்பழம் உசுப்பிய மரக்கந்துகள் அவளை வாஞ்சையுடன் பார்த்தபடி சும்மா நின்றன. துப்பாக்கிகள் முன் அவைகளால் என்னதான் செய்ய முடியும்.?

ராகிலா மரணத்தை போர்த்திக்கொண்டு கடும் வனத்தை தாண்டினாள். நீருக்கு அழுது களைத்த குழந்தைகள் தாய்மாரின் தோளில் சரிந்து கிடந்தனர்.பரிதாபத்தில் நீர் புகட்டியவர்கள்,  துப்பாக்கியால் அடித்து தூசித்;து விரட்டப்பட்டனர். மேய்ச்சல் தரையில் நின்ற மாடுகள் தலை நிமிர்த்தி பார்த்து விட்டு மவுனமாக அசைபோட்டன. 

யார் வீட்டு நாயோ தன் எஜமானைத்தேடி கூட்டத்தில்  அலைந்து சென்றது.சரிந்து விழுந்த அதன் நாவு வறட்சியில் உலர்ந்திருந்தது. தனது மோப்ப சக்தி தோற்று விட்ட வெட்க உணர்வில் அது ஒரிடம் நில்லாமல் சகட்டு மேனிக்கு ஓடித்திரிந்தது. 

2

ராகிலா தன் தாயை கண்டு பிடித்து விட்டாள்.அகதி முகாமிற்கு வந்து ஒரு வாரத்திற்குப்பின் முள்ளிப்பொத்தானை முகாம் ஒன்றில் உணர்வற்றுக்கிடந்த தாயை அவள் கட்டிக்கொண்டு கதறியபோது தமிழீழக்கனவுகள் தீப்பிடித்து எரிந்தன.

தனது தோழி ஒருத்தி முகாமிற்குள் உடை மாற்ற எத்தனிக்கும் அவஸ்தையை கவனித்தபடி வெறித்திருக்கின்றாள். ஒரு கூடாரத்திற்குள் மூன்று குடும்பங்கள். வயது வந்த  குமரிகள்,இளைஞர்கள்,வாப்பா,உம்மா அவளை வெட்கம் பிடுங்கித்தின்றது.

இரவில் ஆண்கள் பள்ளிவாயல், கடை முற்றம் என தன் படுக்கையை பகிர்ந்து கொள்ள பெண்களோவெனில்  நேர் வரிசையாக முகாமிற்குள் தூங்கியும் விழித்தும் இரவுகளை கடத்தினர்.

ராகிலாவுக்கு பொறுக்க முடியவில்லை. கால் வீசி நடக்கும் உள்வீடு, துள்ளிக்குதித்தாட விசாலித்த  முற்றம் காற்றை வடிகட்டி அனுப்பும் சுகந்தரும் மரங்கள், ஊரில்  ஆன்மீகத்தை அள்ளி வீசும் மினாராக்கள், மடியில் தவழும் குழந்தை, வெற்றிலை சொதப்பிய வாயுடன் அருகில் உரசியபடி  ; குறும்பு வெய்யும் கணவன், நிலாப்பொழியும் இரவுகளில் அவள் ரசித்துப்பார்த்த வானம் எல்லாமே இந்த இருண்ட கூடாரத்திற்குள்  கரும்புள்ளிகளாக ஓடிக்கொண்டிருந்தன.

என்.ஜீ.ஓக்கள் ஓடி ஓடி செய்தன. முழு சமூகமும் காலடியில் வந்து சேவகம் செய்தது. ராகிலாவின் வாப்பாவையும் குழந்தையையும் யாருமே அவளுக்கு தேடித்தரவில்லை.அவர்கள் ஒரு முகாமிலுமில்லை. பொல்ஹகவெல, வாழைச்சேனை,நீர் கொழும்பு, பெரியமுள்ள, பஸ்யால என எல்லா மினி முகாம்களையும் விசாரித்தாகி விட்டது. முலை அழுத்தும் பாலை பீச்சி விட்டபடி ராகிலா தினம் தெருவை வெறித்திருக்கின்றாள்.

என்.ஜீ.ஓக்களின் வாகனம் முகாமிற்கு வரும்போதெல்லாம் அவள் மண்ணில் கால்பாவாது அவ்விடம் விரைவாள். 
“சேர் என்ட புள்ளட தகவல் தெரியுமா, வாப்பா எங்க விசாரிச்சிங்களா?

 அவர்களால் என்ன செய்யமுடியும். கனிவு ததும்ப ஆறுதல் சொல்வார்கள் “இன்னும் விசாரிச்சிக்கிட்டுதான் இருக்கம் சிஸ்டர்.’

 “சில ஆட்கள் இன்னும் மூதூருக்க அகப்பட்டிருக்கினம்.  இப்ப அங்க போக அனுமதியில்ல. சந்தர்ப்பம் கிடச்சா உங்கட வாப்பாவ அங்க தேடிப்பாக்கலாம். “

குறிப்பு புத்தகத்தில் வாப்பாவின் பெயர் பி;ள்ளையின் பெயர், வீட்டு விலாசம் எல்லாவற்றையும் குறித்துக்கொள்வார்கள்.

“ஊருல வாப்பா இருப்பாக, அவக எத்துண காண்டம் தப்பி புழச்சவங்க,அவனுகள் கடத்திப்போன ஒரு தரம் காலால உதச்சிப்போட்டு இரால்குளி சேத்துக்குள்ள விடிய விடிய கிடந்து வந்த வீரன், மூதூர் கடலுக்குள்ள படகு கவிழ்ந்தபோது நீச்சலடிச்சு கர சேர்ந்த அவங்க,  அவகட பேத்திய சும்மாவா வுடுவாங்க” அவள் மனம் கூவியது. மனத்தின்  உள்ளறையில் எறும்பூறும் குறுகுறுப்பு.

மூன்று வாரத்தில் அவள் காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது. “மூதூருக்கு பஸ் போட்டிருக்கி போர ஆக்கள் காலயில வாங்க” அறிவித்தல் கேட்டவுடன்  இன்றைய இரவை சபித்தபடி விழித்துக்கழித்தாள். இரவு நகர மறுத்து தன்னை சீண்டிப்பார்ப்பதாக நினைத்து ஆத்திரமுற்றாள்.நிலவும், வெண் உடுக்களும் சிதறிக்கிடக்கும் வானம் அவள் நெஞ்சில் தீ மூட்டியது. சுருக்கா விடியனும்.


3

அவள் ஊருக்குள் கால் வைத்த போது தலைகீழாக புரட்டப்பட்ட லூத் நபியின் வரலாற்றுக்கிராமமாய் கோரமாய் தெரிந்தது ஊர். சாம்பூரை இரானுவம் கைப்பற்றியபின் சூறையாடப்பட்ட மூதூர் ஒரு மூளி போல கிடந்தது. உடைக்கப்பட்ட கடைகள் வாய் பிழந்து கிடந்தன.குறிப்பிட்ட கடைகள் மட்டுமே இலக்கு வைத்து தகர்க்கப்பட்டிருந்தன. இலக்ரோனிக்கடைகள், புடவைக்கடைகள், நகைக்கடைகள், சைக்கிள் கடைகள்.

 விடுமுறையில் திரும்பும் வீரர்களின் கரங்களை  புதிய வாட்ச்,கைச்செயின் அலங்கரிக்க அவர்களின் கழுத்துகளிலோ தங்க மாலைகள் மின்னின. 

வெறி பிடித்த குரங்குகள் தூக்கனாங் குருவிக் கூட்டை பிய்த்தெறிந்ததைப் போல்  அவள் அழகிய கிராமம் சிதறிக்கிடந்தது. 

ஷெல் குத்திய வீடுகளும், கடைகளும் சிதிலமாகிக்கிடந்தன.மின்சாரமற்ற தெரு மரணத்தை போர்த்தியபடி பயமுறுத்தியது. வீடுகளில் மனிதர்கள் இல்லை.  ஊரை துர் நாற்றம் ஆக்கிரமித்திருந்தது.  அடக்கம் செய்ய இயலுமான உப்பிப்பெருத்த ஜனாஸாக்களை ஊரார் தேடித்தேடி அடக்கம் செய்தனர். மழை விட்டும் தூவானம் ஓயவில்லை என்பது போல் இடை வெளி விட்டு தூரத்தே ஷெல்கள் விழுந்து குமுறிக்கொண்டிருந்தன.

அவளுக்கு வயிற்றை குமட்டிக்கொண்டு வந்தது. அறபுக்கல்லூரிக்கு ஓடினாள். அங்கு வாப்பா இல்லை. ஏவி விட்ட வேட்டை நாயைப்போல் எல்லாத்தெருக்களிலும் பள்ளிவாயல் பாடசாலைகள் என குறிவைத்து ஓடினாள். 

அவள் வீட்டு முற்றத்தை காணும் வரை ஓடினாள்;. இளமையும்,இனிய கனவும் சௌந்தர்யங்களுடன் மிகைத்த தாம்பத்தயமும்  மலர்ந்து சுகந்தம் தந்த வீடு. ஒரு பக்கம் கருகிக்கிடந்தது. ஷெல் உரசிய தென்னையும், மாவும் கரிபிடித்து வாடி நின்றன. இனி பிழைக்கும் முகாந்திரமில்லை. 

அவள் பிரியமாக நிரூற்றி பசளையிட்டு வளர்த்த மாமரம், மூன்று மாதம் மசக்கையாக வாழ்ந்த காலத்தில் மாம்பிஞ்சுகளை தந்து பூளியூட்டிய மாமரம் இளமையை இழந்து கருக்கிடக்கிறது. ஓட்டுத்துண்டுகள், செங்கற்கள், மரத்துண்டுகள், உடைந்த கண்ணாடிச்சில்லுகள், முற்றம் முழுக்க சிதறிக்கிடந்தன.

மாலை மங்கிய ஊர் இருளை இழுத்து போர்த்திக்கொண்டது. ஒரோயொரு பள்ளியிலிருந்து மெலிதான பாங்கொலி காற்றில் மிதந்து அவளைக்கடந்து சென்றது. காடேகும் பறவைகள் கீச்சிட்டபடி  பறந்து கொண்டிருந்தன . அவள் வீட்டுக்கோழி ஒன்று செக்களுக்கு பழக்கப்பட்டு கருகிய மாமரத்தின் அடியில் வந்து ஒண்டிக்கிடந்தது.


கிணற்று நீர் தூசடைந்து கிடந்தது. பூமிக்குள் புதைந்து கிடக்கும் மகளின் பொம்மையின் கால் வெளியே துருத்திக்கொண்டு கிடந்தது.பாய்ந்து சென்று அதை உருவி எடுத்தாள். வீட்டுக்குள் செல்ல மனம் தகித்தது. ஆவல் உந்த எட்டிப்பார்த்தாள். மண்;டபத்தின் நடுவே கட்டப்பட்ட தொட்டிலின் கயிறு படிக்கட்டில் தெறித்துக்கிடந்தது.

இடிபாடுகளிடை வாப்பாவின் சாரம் மக்கித்தெரிந்தது.புழுக்கள் நெளியும் சுவரோரம் துர்நாற்றம் கசிந்து வந்தது.

ராகிலா ஓங்காரித்தபடி முற்றத்தில் பாய்ந்து விழுந்தாள். வாசற்படியில் மகளின் உடைந்த கொலுசுகள் சிதறிக்கிடந்தன. 

பொம்மையை  மடியிலமர்த்தி கொளுசுகளை மிக கவனமான பொறுக்கத்தொடங்கினாள்.அவள் அரவங்கண்டு வீட்டுக்குள்ளிலிருந்த நாயொன்று கடைவாயை நக்கியபடி மிரட்சியுடன் வெளியே பாய்ந்தது. 


ராகிலா உடைந்த கொலுசுகளை பொம்மையின் மட்கிப்போன கால்களில் வைத்து அழுத்திப்பார்த்தாள். பின் அதை தன் மார்போடு இறுக்கி அணைத்துக்கொண்டு ரவிக்கையின் கொக்கிகளை விடுவித்தாள். 

அவள் விழிகள் பொம்மையில் நிலை குத்தி நின்றன.



ஓட்டமாவடி அறபாத்
26.07.07
பகல் 1.46

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...