Friday, 6 January 2012

சிறுகதை: முள் வேலி



“என்னத்தெரியுமா ஸேர்” ?

குரல் வந்த திக்கில் திரும்பினான். சாண்டில்யனின் நாவல்களில் சித்திரிக்கப்படும்  அரசிளங்குமரியின் அழகினை நிகர்த்த ஒருத்தி எதிரே நின்றிருந்தாள்.

 அவளை கூர்ந்து பார்த்தவனின் விழிகள் ஒரு நொடிப்பொழுதில் சலனத்துள் அமிழ்ந்து பின் மீண்டன. அதிர்ச்சியுடன் அவளில் மொய்த்த விழிகளை பிய்த்தெடுத்து “தெரியாதே” என்றான்.

அவள் முகத்தில் ஏமாற்ற மேகங்கள் கருக்கட்டின.

தன்னை சுதாகரித்தபடி  “நான்தான் சங்கரப்பிள்ளையின்ர கடக்குட்டி பத்மப்பிரியா. நீங்க அப்ப சின்ன வயசில  என்னோட விளயாடக்குள்ள பத்மா என்டுதான் கூப்பிடுவீங்க மறந்துட்டிங்களா “?

அவன் மனசின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தன.மேகம் உடைந்து திடுதிடுவென மழைகொட்டவாரம்பித்தது. நினைவின் ஓரங்களில் அவனின் பாட்டனின் கடையும்,பத்மாவின் நினைவும் பிம்பங்களாய் விழுந்து பெரு வெள்ளமாய் பெருக்கெடுத்தன. ஒரு மரக்கிளையில் சாவகாசமாக அமர்ந்து கொண்டு தன் அலகினைக்கோதியபடி ஓய்வெடுக்கும் ஜோடிப்புறாக்கள் போல்   ஒன்றன்பின் ஒன்றாய் நினைவுகளும்..

 “நீ பத்மா எப்புடி இந்தக்கோலத்தில “ ? அவன் நிஜத்தில் பிரமை பிடித்தவன் போல் பதகளிக்கத்தொடங்கினான். கருப்பு அபாயா, தலையில் சுற்றப்பட்ட துப்பட்டா இடுப்பில் ஒரு குழந்தை அவளின் அலைபாயும் விழிகள் போல் அந்தக்குழந்தையின் துறுதுறுக் கண்கள்.

 ஓவசியரின் ஆட்டு மந்தைகளை ஓட்டிச்சென்ற துடுக்கான குட்டியா இவள்.  பருவத்தின் வனப்பில் பூத்துக்கிடக்கும் அழகின் வனத்தை அள்ளிப்போர்த்தியிருக்கும் அபாயா ஒரு காப்பரண் போல்  அவளைச் சுற்றியிருந்தது. 
 
துயர சாகரத்தில் அடிபட்டு வாழ்க்கைக்கரையில் தத்தளிக்கும் ஒர் அபலைத்தனம் அவளில் கருவளையமெனப் படர்ந்திருந்ததை உளவியல் ஆலோசகனான அவன் மிக எளிதில் புரிந்து கொண்டான்.

“நான் இஸ்லாம் மதத்துக்கு வந்து இப்ப ரெண்டு வருஷம் ஸேர். கலியாணம் கட்டிட்டன். இந்தப்புள்ளயும் இங்க வந்து கிடச்சது. அந்த அல்லாதான் என்ன இஞ்ச கொண்டு வந்து சேர்த்தான்.”

 இடுப்பில் இருந்து திமிறிக்கொண்டிருக்கும் குழந்தை அவளைப்போலவே மூக்கும் முழியுமாக..

“உன்ர அவரு இப்ப என்ன செய்யுறாரு ” ?

“நான் வாண்டு ஒரு வருஷத்தால அவர ஆரோ சுட்டுப்போட்டானுகள்.. காட்டுக்கு மரம் வெட்டப்பபோனவரு, மய்யத்தா வந்தாரு ”

 அவள் மார்புகள் துயரம் தாழாமல் பொங்கிச்சரிந்தன. குரல் அடைத்திருந்தது.

இருபத்தைந்து வருஷத்திற்கு முன் சங்கரப்பிள்ளையும் அவர் குடும்பமும் இவனின் பாட்டனின் வாடிக்கு அடுத்தவாடியில் வசித்து வந்தனர்.  ஆடு மேய்ப்பதும் பராமரிப்பதும் பத்மா குடும்பத்தின் பரம்பரைத்தொழில் அப்போது இவன் சிறுவனாயிருந்தான்.
 
கிராமத்தில் ஒரு வாத்தியாரை வைத்துக்கொண்டு பாடம் நடத்திய காலத்தில் கொட்டகை வாசலில் மணலில் உட்கார்ந்தபடி படித்தது நினைவில் முட்டியது.பிஞ்சுப்புளியங்காயும் உப்புக்கல்லும் மறைத்து வைத்திருக்கும் அவள் இவனுடன் உரசியபடி  சண்டை போட்டபடி ஆரவாரத்துடன் வருவாள்.

அந்தப்பள்ளிக்கூட வாத்தியார் காலை பத்தரை மணிக்கெல்லாம் மினுமினுத்தவெளி வெட்டைக்கு கிளம்பி விடுவார். அவருக்கு அங்கு ஐந்து ஏக்கர் வயலும், சில ஆடுகளும் இருந்தன. நாங்கள் அரை மணி நேரத்திற்குள் பாடசாலையிலிருந்து நேரே ஆற்றுக்குக்கிளம்பிப்போய் மதியம் சாய்ந்தபிறகு வீட்டிற்கு செல்வோம்.
 
படித்துக்களைத்த எங்களை வீடு அமைதியாக வரவேற்று உள்ளிழுத்துக்கொள்ளும். பத்மா என்னுடன்தான் வீட்டில் சாப்பிடுவாள். அவளை வெளித்திண்ணையில் உட்காரவைத்து உம்மா சோறு போடுவா.

முதலாழிமார் கட்டிவரும் கிழமைச்சாமான்களிலும், சேனையில் விளையும் கிழங்குகளின் தயவிலும் பத்மா குடும்பத்தின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. 
 
தவிர சங்கரப்பிள்ளை நல்ல வேட்டைக்காரர் கட்டுத்துவக்கால் மான் சுட காட்டுக்குப்புறப்படும் போதே, முஸ்லிம் ஆக்கள் உண்ண வேண்டும் என்பதற்காக தக்பீர் சொல்லி அறுக்க முஸ்லிம் ஒருவரையும் கூடவே அழைத்துப்போவார்.

புறைவாடிக்கருகில்  இறைச்சியை காய வைத்து தேக்க இலையில் பார்சல் பண்ணி எதுவும் எதிர்பார்க்காமல் இவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைப்பார். உம்மா பதிலுக்கு அரிசி மூடையை அனுப்பி வைப்பா. எருமை மாட்டுத்தயிரை புதுச்சட்டியில் பத்மா காவிக்கொண்டு  கிழமைக்கு ஒரு தடவையேனும் வீட்டுக்கு  பத்மா வந்து போவாள்.

அவன் கடையிலிருக்கும் நேரங்கள் தவிர்த்து ஆற்றிலும் குளத்திலும் அலைந்து திரிவான்.சிறு கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு ஓடைக்கரையில்  விறால் மீன் வெட்டித்திரிவதும்,பனம்பழம் பொறுக்குவதும் வயல் வெளிகளில் காடைக்குருவி அடிப்பதுமாக அவர்களின் பொழுதுகள் இனிக்கும். 
 
பத்மாவுக்கு ஒர் அண்ணனும் இருந்தான் அவனும் இவர்களுடன் சேர்ந்து கொள்வான். மரமேறுவதில் விண்ணன். வாப்பாவுக்கு இவனில் கடுப்பு அதிகம். படிக்காம என்னத்துக்காம் இந்த தமிழ்க்குட்டியோட கூத்தடிக்கான் என்று உம்மாவிடம் கத்துவார். உம்மா செல்லமாக தலையை வருடிக்கொண்டு சொல்லுவா.

“அவள் பொட்டப்புள்ள அவளோட ஆத்துலயும் காட்டுலயும் சுத்தாம ஒழுங்கா இருந்து படிங்க மகன் .”

பத்மா ஆற்றுக்குள் மிதக்கும் தருணங்களில் இவன் வேண்டுமென்றே ஆற்றில் பாய்வான். காமம் கிளைவிடத்தொடங்கிய பருவம் .அவளும்தான் இந்தா அந்தா வெடித்து விடுவேன் என்று பயமுறுத்தும்  தோரணையில் பருவத்தின் விளிம்பில் நின்று கொண்டு வினோதம் காட்டினாள்.

“உன்ட அப்பா அம்மா மற்ற குடும்பமெல்லாம் எங்க பத்மா”?


“இப்ப நான் பத்மா இல்ல ஸேர் சாரா.”

அவன் வெட்கத்துடன் நாக்கை கடித்துக்கொண்டான். பேச்சு சுவாரஸ்யத்தில் அவள் புதியபெயரைக்கூட கேட்க மறந்த தனது கவனயீனத்தை நொந்து கொண்டான்.

அதைப்புரிந்து கொண்ட அவளின் இதழோரம்  இளநகைப்பூத்து பின் மறைந்தது.

அது வெயிலும் மழையும் ஏக காலத்தில் அடிப்பது போலிருந்தது.

 “எல்லாரும் அந்தப்பழய இடத்துலதான் இருக்காங்க… குழப்பம் வாரதுக்கு முதல் இந்தப்புள்ளயோட அப்பா மாடு வாங்க அங்க வாரவரு. அப்பதான் நாங்க ஒருத்தர ஒருத்தர் விரும்பினம், அப்பாவுக்கு தெரியாம ஓடிவந்திட்டன். இஞ்ச பள்ளியில கலிமா சொல்லித்தந்து முஸ்லிமாகி நல்லாத்ததான் வச்சிருந்தாரு. அவர சுட்டத்துக்குப்பிறகு அவர்ர தம்பி என்னக் கலியானம் முடிச்சாரு அதுவும் ….”

  வார்த்தைகளின் உயிர் நசுங்க அவள் அதரங்கள் நடுங்கத்தொடங்கின. இடுப்பிலிருந்த குழந்தை நழுவி நழுவி துடித்துக்கொண்டிருந்தது. இவனை பார்த்து விரல் சூப்பியபடி சிரித்தது. மூக்கின் ஓரம் சளியோடி உறைந்திருந்தது. 
 
சூழல் இருண்ட மவுனத்தில் உறைந்திருந்தது. பள்ளி;க்கிணற்றில் நீர் மொள்ளச்செல்லும் சிறுவர்கள் இவர்களை ஆச்சர்யமாகப்பார்த்தபடி சென்றனர் வெயில் கொதிப்பில் பூமி தகித்துக்கொண்டிருந்தது.ஆடுகள் வீட்டுக்கூரையிலும் மரங்களின் அடியிலும் அசைபோட்டபடி நின்றிருந்தன.

சங்கரப்பிள்ளையின் பின்னால் பாவாடையும் சட்டையுமாக இரட்டைச்சடை முன் புரள துள்ளித்திரியும் அந்தப்பத்மாதான் அவனுக்குள் தவிர்க்க முடியாமல் வந்து விழுந்தாள்.

 “ஏன் சாரா என்னவோ சொல்ல வந்தாய் ? ”

“இல்ல ஸேர்  ஒண்டுமில்ல” அவள் குரல் அடைத்திருந்தது. விழிகளில் நீர் மணிகள் சுரந்து ஒரு சொட்டு கன்னத்தில் சிதறியது. ஸ்காபின் நுனியால் அதை துடைத்துக்கொண்டாள்.அவள் கட்டுடல் அதிர்ந்து நடுங்கியதை இவன் கவனிக்கவே செய்தான்.  

“என்ன விசயமென்டாலும் பயப்பிடாம சொல்லு என்னால முடிஞ்சத செய்யிரன்.”

ஒரு கலகக்காரியாக துடுக்கான சின்னப்பெண்ணாக துள்ளித்திரிந்;த அவள் ஓவென்று உடைந்து அழுகையில் அவன் மனம் நொருங்கிச்சரிந்தது. அவளை தேற்றுவதற்கு வார்த்தைகளின்றி தவித்தான்.
 
“.சாரா அழாத கண்ணத்துரச்சிப்போட்டு சொல்லு.”

“நான் இஸ்லாத்துல வரக்கே எல்லாத்தையும் எல்லாரையும் உட்டுப்போட்டுதான் வந்தனான். ஆரயும் நான் கணக்கெடுக்கல்ல, அவர மட்டும்தான் தெரியும், நம்பி வந்தனான். அவரு போன பிறகு அவர்ர குடும்பம் என்ன பார்த்திருக்கனும்.

 அவங்களும் என்ன வேண்டாதவளாப்பார்த்தாங்க, கடைசியில ஒரு குடிகாரனுக்கிட்;ட என்ன ஒப்புக்கொடுத்து பாதுகாப்புத்தேடும்படியா ஆயிட்டு. இப்ப ஒரு பிச்சக்காரியா நடுத்தெருவுல நிக்கன்.” அவள் விம்மி விம்மி  கேவிக்கொண்டிருந்தாள். வார்த்தைகள் உயிரற்று அவள் காலடியில் சிதறின.

 “இப்ப அவனுக்கும் நான்தான் சோறு போடனும், இந்த ஊருக்க பிச்ச எடுத்தா அப்பாவுக்கு தெரிஞ்சிரும்,  மானம் போயிரும் தாங்க மாட்டாரு முஸ்லிம் ஆக்கள்ள இருந்த மரியாதையும் இல்லாம போயிடும்., அதனாலதான் வெளியூருல போய் பிச்ச எடுக்கன். ”

அவள் விழிகளின் மடை பெருக்கெடுத்தது.

“ஏன் சாரா அவருக்கு சம்பாதித்து உன்ன காப்பாத்த ஏலாதா?”

“அத ஏன் கேக்குரிங்க ஸேர் “

“அந்தாளு மரம் ஏறக்க விழுந்து காலுடைஞ்சி போச்சி,இது நடந்து ஒரு வருஷமிருக்கும். அந்த நேரம் இவரயும் புள்ளகளயும் காப்பாத்த பிச்ச எடுத்து சோறு போட்டன் அந்த திமிறுதான், கால் நல்லா வந்த பிறகும் கொழுப்பேறிப்போய் வூட்டுல கிடக்கார் . இந்த மனுசனுக்கும் நான்தான்  பிச்ச எடுத்து  தினமும் நூறு ரூவா கொடுக்கனும் இல்லாட்டி அடியும் உதயும்தான்”

“காசு குடுக்காட்டி தாண்டியடியில போய் கடனுக்கு தண்ணிவாங்கி குடுக்கனும் பள்ளி ஆக்கள்ட்ட செல்லவும் பயம். தெரிஞ்சா அடிச்சே சாகடிச்சிருவாரு”

அவள் குடிசை நிற்கும் திசையில் விழிகளை எறிந்தான்.புதிதாக காணித்துண்டுகள் பெற்றுகுடியேறியவர்களின் குடிசைகளின் மத்தியில் சாராவின் குடிசை உருக்குலைந்து பரிதாபமாகத்தெரிந்தது. சுழன்றடிக்கும் கச்சான் காற்று கிடுகுகளை ஆங்காங்கு இழுத்து வீசி தலை விரிகோலமாக அந்தக்குடிசையை கலைத்துவிட்டிருந்தது.

சகலதும் கணவன் என நம்பி வந்தவளின் வாழ்க்கையை பிச்சைக்கோலத்தில் பார்க்கையில் மனம் நடுங்கத்தொடங்கியது.

வாளிப்பான அவள் உடலின் மீது மொய்க்கும்இலையான்களின் தொல்லையிலிருந்தும் அவள் தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தன் வயிற்றுக்கும் பிள்ளைகளின் வயிற்றுக்கும் குடிகாரக்கணவனின் வயிற்றுக்கும் கஞ்சி ஊற்ற வேண்டும். கரும்புத்தோட்டம் போல் சரசரவென நிற்கும் சாராவின் திரட்சியான தோற்றம் அவனுக்குள் திகிலை ஊட்டியது.

“ஏன் சாரா நீ கைத்தொழில் தெரிஞ்சவள்தானே தெருத்தெருவா அலையாம அத செஞ்சி மானத்தோட வாழன்.”

“அதுக்கும் நாதியில்லையே ஸேர். அந்தா குடிலுக்குள்ள முடங்கிக்கிடக்கிறானே பாவி அவன் வுடனுமே”

அவன் பேச்சற்று சற்று நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற மன அவசம் தொற்றிக்கொண்டது. 
 
சமூர்த்தி ஊடாக சுயதொழிலுக்கான சிபாரிசை செய்யலாம்.. அவன் சிந்தனையின் ஆழத்தில் அமிழ்ந்து போகும் தருணத்தில் அவர்;களைத்தாண்டி பதற்றத்துடன ஒர் உருவம் சாராவின் குடிசைக்குள் நுழைவதைக்கண்டான்.

சாராவின் கண்களில் மருட்சியும் கிலியும் நிழலாடியது. அவள் நகங்களை கடிக்கத்தொடங்கினாள்.

“ஏன்ன சாரா ஏன் உன்ர முகம் மாறிட்டு அவன் யாரு. ஏன் அவனக்கண்டதும் நீ பயந்து நடுங்குறாய் கடன்காரனா ? “

“இவன் என்ட புருஷன்ட கூட்டாளி, இடுப்புல மறச்சி வச்சி தண்ணி வாங்கிட்டு போறான் .ஒவ்வொரு நாளும் வருவான் இரண்டு பேரும் குடிப்பானுகள். அவனுகளுக்கு நான் மீன் பொரிச்சி கொடுக்கனும். தேத்தண்ணி ஊத்திக்கொடுக்கனும். அவனுக்கிட்ட நிறைய கடன் வேற பட்டிருக்காரு. குடிச்சிட்டு அவன் என்ன படுத்துறபாடு நான் குடிலுக்கு வெளியில வந்து நிற்பன். இல்லாட்டி அவன் போரவரைக்கும் அக்கம் பக்கத்துல போய் கதச்சிருப்பன்.

 எனக்கு நரகம் மேல் ஸேர். நான்  சட்டியில இருந்து அடுப்பில உழுந்த பாவி”

 அவள் நடுக்கத்துடன் கேவத்தொடங்கினாள். அழுதழுது அவள் முகம் வீங்கிப்போய் இருந்தது. தன் குழந்தையை நெஞ்சுடன் இறுக அணைத்தபடி அவள் நடுங்குவதை பார்க்கத்திராணியற்ற அவன் வானத்தை வெறித்தபடி வெதும்பிக்கொண்டு நின்றான். பிரிக்கமுடியா மௌனம் அவர்களிடை குத்துக்கல்லாக அமர்ந்திருந்தது.


2009.06.23.

பிரசுரம் : வாழை மடல்
வாழைச்சேனை மத்தி பிரதேச சாஹித்ய மலர் 2009

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...