Saturday, 30 May 2020

துயருழந்து ஆடும் நினைவுச் சரடுகள்
அறபாத்தின் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்.
எஸ்.எல்.எம் ஹனீபாவும், அறபாத்தும் துள்ளி அலைந்து திரியும் பதின் பருவத்தை முறையே உசுக்குட்டிப்பருவம் என்றும், குதியான் பருவம் என்றும் குறிப்பிட்டிருப்பர். கிராமமும் அதன் மணமும் பழைய நினைவுகளாக திரண்டெழும் போது உண்டாகும் பேரதிக இன்பம் அவ்விளமையின் உசுப்பையும் குதிப்பையும் மீட்டி மீட்டி பரவசமூட்டுவன. அப்பரவச நினைவின் நதியிலிருந்து பாய்ந்து முன்னகரும் உணர்வுகளின் குவியமாக அறபாத்தின் நீர் ஊஞ்சல் ஆடுகிறது.
எஸ். ராமகிரஷ்ணனின் 'பதின்' என்ற நாவலைப் படித்த பின் உண்டான நினைவுக்கிளர்தலைப் போல, காப்காவின் இளமையின் நினைவுகுறிப்புக்களை வாசித்த பின் உண்டான மன அவத்தை போல அறபாத்தின் நினைவுக்குறிப்புக்களை வாசிக்கும் போதும் மனக்கிளர்ச்சியும் அவத்தையும் ஒருங்கு தோன்றுகிறது. அது அவரது நினைவுக்குறிப்புக்களாக மட்டுமல்லாது அவர் வாழ்ந்த காலத்து மனிதர்களின் நினைவுகளாக, துயரங்களாக, ஏமாற்றங்களாக, துரோகங்களாக நீள்கின்றன.
காடும் வயலும் குளமும் ஆறும் மணக்கும் வட்டுவான் வெளியில் உலாவும் அறபாத் அவ்வெளியில் அலைந்து திரிந்த அழகியலை மனவெளியில் சின்னச் சின்ன சித்திரங்களாக வரைந்து செல்கிறார். ஓட்டமாவடியை அண்டி நீண்டு நெடுத்துச் செல்லும் வயல்வெளிகளுக்கிடையில் சிறுசிறு திட்டுக்களாக அமைந்துகிடக்கும் முஸ்லிம் கிராம வாழ்வியலையும் அழகையும் நினைவுச் சித்திரங்களாகத் தரிசிக்கச்செய்கின்றார்.
இப்பிரதேச மக்களின் வெவ்வேறுபட்ட பொருளாதார, அரசியல், பண்பாட்டு அம்சங்கள் குறித்து முதன்முதலாக இலக்கிய ஆவனமாக்கியவர் வை.அஹமட். அவரது தரிசனம் நாவல் கரையாக்கன் என ஒதுக்கப்பட்ட முஸ்லிம் மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வையும், அவர்களிடையே ஏற்பட்ட செல்வப் பெருக்கத்தால் பள்ளி தலைமைப் பதவிகள் வழங்கப்பட்டு அதிகார ஆசனங்களில் அமர்த்தப்படுதலையும் விபரித்துச் செல்கிறது. இந்நாவலைத் தவிர எஸ்.எல்.எம் ஹனீபாவின் 'மக்கத்துச் சால்வை' இப்பிரதேச மக்களின் மண்வாசனையை வெளிப்படுத்திய மற்றுமொரு படைப்பாக்கமாகும். பாலைக்காட்டு கிராம வாழ்வு, கல்வி, வறுமை, போரவலம் என்பவற்றை வெளிப்படுத்தும் ஜிப்ரி ஹசனின் 'போர்க்குணம் கொண்ட ஆடுகள்' என்ற சிறுகதைத் தொகுதியும குறிப்பிடத்தக்கது. இப்பின்னணியில் ஓட்டமாவடிப் பிரதேச கிராமிய மக்களின் போருக்கு முந்தியதும் போருக்கு பிந்தியதுமான வாழ்வு, தொழில், நம்பிக்கைள் என்பவற்றை அறபாத் மீட்டிக்கொண்டு செல்கிறார். அவ்வகையில் அவரது நினைவுக்குறிப்புக்கள் இப்பிரதேசமக்களின் வரலாற்று எழுதுகையின் ஒரு பதிவாக அமையும்.
போருக்கு முந்திய தமிழ் முஸ்லிம் உறவில் பிணக்குகள் இருந்ததில்லை என எழுதிச்செல்லும் அறபாத் தமிழரது சமயப் பண்பாட்டு அம்சங்களோடு முஸ்லிம்கள் ஒன்றாய்க் கலந்து ஈடுபட்டார்கள் என்கிறார். இப்போதுள்ளது போல அக்கால தமிழ் வேடுவ கிராம மக்களின் திருவிழாக்கள் அமையாது இயற்கையோடு இயைந்த கொண்டாட்டமாக அமைந்தது என்கிறார்.
முஸ்லிம்களிடமும் சமயதூய்மைவாதங்கள் எதுவுமில்லாத பமழமையும் மூடநம்பிக்கைகளும் தேங்கிக் கிடந்தன என்கிறார். அந்நம்பிக்கைகளோடு கலந்து வாழ்ந்த அறபாத் அவை மாற்றப்பட வேண்டும் என்கின்ற சமய தூய்மைவாத சீர்திருத்த சிந்தனையைக் கொண்டிருக்கிறார்.
ஈழப்போராட்ட எழுச்சி கிழக்கில் மிக வீச்சுப் பெற்ற காலத்தில் முந்திக்கொண்டு அவ்வியக்கச் செயற்பாடுகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டவர்கள் முஸ்லிம் இளைஞர்கள். அவர்கள் விடுதலைப்புலிகளின் இயக்க எழுச்சிக்காக தம்மை அர்ப்பணித்தனர். ஊரின் அதிகாரம் அவர்களது துப்பாக்கிகளில் இருந்தது. அவர்கள் கொடுங்கோன்மை மிகு குறுநில மன்னர்கள் போல உலாவினார்கள். புலிகளுக்காகவே தம் மக்களையே கொன்றார்கள், அப்பாவிகளை சித்திரவதை செய்தார்கள், தம் உறவினர்களை காணாமலாக்கினார்கள், பள்ளிச்சிறுவர்களை கூட இயக்கத்தில் இணைத்து ஆயுதக்கலாசாரத்தை பரப்பினார்கள். பின்னர் தாம் விசுவாசித்து பின்தொடர்ந்த புலிகளாலேயே கொல்லப்பட்டார்கள். தப்பியவர்கள் இனந்தெரியாதவர்களால் படுகொலைசெய்யப்பட்டனர். அவ்விளைஞர்களால் பட்டுத்துயர்ந்த பெருந்துன்பம் தொடர்ந்தும் புலிகளால் நிகழ்த்தப்பட்டே வந்தது. கொல்தலாகவும் ஆட்கடத்தலாகவும் கப்பமாகவும்.
புலிகளின் துரோகமும் வஞ்சனையும் தொடங்கிக் கவிவதற்கு முன் இந்திய அமைதிப் படையினரின் கொடுஞ்செயல்களும் கொலைகளும் தாங்கிப்பொறுத்திடவியலாத துயர நினைவுகளாக நீள்கின்றன. இந்நீள் நெருக்கடியில் சிக்கி உழன்றவர் அறபாத். தான் பட்டுத் துயர் கொண்ட அந்நினைவுகளையெல்லாம் மனத்தில் வந்து வந்து விழும் சிறுசிறு அதிர்வுகளாகச் சொல்லி கடந்து செல்கிறார். தாங்கிப்பொறுத்திடவியலாத துயர நினைவுகளாக விபரிக்கிறார்.
வறுமையில் உழன்று, ரயில் பெட்டியெல்லாம் அப்பம் விற்று, பட்டு துயர்கொண்ட வாழ்வும், போர்க்காலச் சிரமங்கள் நிறைந்த நீண்ட பயண அனுபவங்களும், இலக்கிய நண்பர்களின் ஒட்டும் உறவும், சில நல்ல மனிதர்களின் தரிசனமும், தனது பழைய நினைவுச் சுழல்களும்தான் அறபாத்தின் புனைவு வெளியின் ஆதர்சனங்கள். வாழ்வின் இன்ப துன்ப அகல் வெளிகளைக் கடந்த அனுபவ முதிர்ச்சிதான் அறபாத்தின் கதைகளின் உயிராக பரவி நிற்கிறது என்பதை அவரது இந்நினைவூஞ்சலில் ஆடித்தெளியலாம்.
வாசிப்பும், எழுத்தும், பயணங்களும் எனக் கலந்து நகரும் அறபாத்தின் நினைவுக்குறிப்புகளுக்குள் அவரது இலக்கியச் செயற்பாடுகளுக்கு கிடைத்த ஏற்புடைமை 'வேட்டைக்குப் பின்' கவிதை தொகுதி வெளிவந்த பின்னர் ஏற்பட்ட புலி ஆதரவு சார் எதிர்ப்பலைகளால் மறுதலிக்கப்படுகிறது. ஆயினும் எதிர்ப்புக்களையெல்லாம் கடந்து துணிவுடன் எழுதும் ஓர்மம் அறபாத் போன்ற எழுத்தாளர்களுக்கு இயல்பாகவே அமைய வேண்டிய ஒன்றாகும். ஏனனில் அவர் கடந்து ஓடி தப்பி வந்த பாதை அவ்வாறானதாகும்.
அறபாத்தின் பத்திகளை வாசிக்கும் போது அது அவரது நினைவூஞ்சலாக மட்டும் ஆடாது அவரது கால எல்லா மனிதர்களினதும் நினைவுகளாக அசைகிறது. மிகைப்படுத்தல்லில்லாத உணர்ச்சி வேகத்தோடு தன்நினைவுகளை எழுதியிருப்பது மேன்மை
நன்றி:றமீஸ் சாலி முகநூல் பக்கம்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...