Monday, 22 April 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                                                       தொடர் : 37
ப்போது பாதைகளும் சரி பஸ்வண்டிகளும் சரி நினைத்துப்பார்க்க முடியாத அபிவிருத்தி கண்டுள்ளன. பஸ்சில் ஏறி இருந்தால் விமானத்தில் இருப்பது போல் குலுங்காமல் நசியாமல் வியர்வை,தூசி எதுவுமின்றி போக வேண்டிய இடத்திற்கு கொண்டு போய் சேர்த்து விடுகின்றது. அதிகரித்த வேகமும்,முந்திச்செல்ல வேண்டும் என்ற வெறியும் இந்த பஸ்களில் இருப்பவர்களை சில நேரம் ‘போக வேண்டிய இடத்திற்கு’ வலுக்கட்டாயமாக கொண்டு போய் சேர்த்து விடுவதும் உண்டு.

குளு குளு குமர் பிள்ளைகள் சாரதியின் கடைக்கண் பார்வைக்கு தெரியுமாற்போல் இருந்து விட்டால் போதும் நம்பாடு சம்பல்தான்.வீதியில் பஸ் ‘ஒடுது’ என்பதை விட  ‘பறக்குது’  என்பதுதான் நிஜம்.

காதுகளை மட்டும் துவம்சம் செய்த அந்தக்கால பஸ் வண்டிகள் போல் அன்றி, கண்களையும் துவம்சம் செய்யும் திரைப்படங்களை போட்டுக் கொண்டு இந்தக்கால பஸ்கள் பறக்கின்றன. இருக்கைகக்கு முன் சாப்பிட எழுத என சிறிய இழுப்பறைகள்.குடி தண்ணீர் வைக்க வாகான துளையல்கள். ‘ஹெட்போன்’, அளவான வெளிச்சம். சௌகரியமான இருக்கைகள்.தங்கு தடையற்ற பயணங்கள்.இனிமையாக இருக்கின்றன.

ஆறு ஏழு மணித்தியாலயங்கள் இந்த முஸ்லிம்கள் இஸ்லாத்தை ஒடும் பஸ்சினுள் அழகாக சொல்லியிருந்தால் இத்துனை பிரச்சினைகள் வந்திருக்காது.எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக ஆகி விட்டனர்.

இந்தப்பயணங்களில் இராணுவ ‘செக்பொயின்றுகள்’ வாழ்வில் பல முக்கிய படிப்பினைகளை கற்றுத்தந்தன.

எதிரியின் மீதான அச்சத்தை மறைக்கவே அப்பாவிகள் துன்புறுத்தப்பட்டனர்.ஒர் இனத்தின் மீதுள்ள வெறுப்பு அவர்களை இம்சைப்படுத்த இந்த ‘செக்பொயின்றுகள்’ உதவின. பிரபாகரன் முஸ்லிம்களை கொன்றழித்ததும், வாழ்விடங்களிலிருந்து கோவணத்துடன் விரட்டியடித்ததும் இந்தக் கோழைத்தனத்தினால்தான்.கடவுளை வழிபடும் புனித ஸ்தலங்களில் புகுந்து நர வேட்டையாடியதும், அப்பாவிகளை குறிவைத்து தகர்த்ததும் இந்தக்கோழைத்தனத்தினால்தான்.

அவர் உலக மகா கோழை என்பதற்கு அவரின் சரணடைதலும் இழிவான சாவும் கண்கண்ட சாட்சி. ஒரு வீரன் எதிரியுடன் பொருதி மடிவதுதான் வீரத்திற்கு இலக்கணம். தப்பியோடும் போது சாவைத்தழுவுவது எவ்வளவு அவமானம்.

தற்போது மனநோய் பிடித்த ‘பொது பள சேனா’கும்பல் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ‘காவிப்பயங்கரவாத’த்திற்கும் இந்தக் கோழைத்தனம்தான் காரணம்.

பொருளாதார, பண்பாட்டு,ஆன்மீக ரீதியாக முஸ்லிம்களை வெல்ல முடியாத கோழைகள் தன்னுடைய இயலாமையை மறைக்கவும்,அதனை வஞ்சம் தீர்த்துக்கொள்ளவுமே முஸ்லிம்கள் மீது இனச்சுத்திகரிப்பு போரை முடுக்கிவிட்டுள்ளனர்.

இவ்வளவு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் குண்டுகள் வெடித்துக் கொண்டுதான் இருந்தன.

புலிகள் சாதாரண பஸ்லில் குண்டு கொண்டு செல்ல அவர்களுக்கென்ன பைத்தியமா? பெரும் புள்ளிகளின் பாதுகாப்பில் அவர்கள் வளர்ந்து வந்தனர். புலனாய்வுப்பிரிவின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு சாகசங்கள் செய்வதற்கு மேலிடத்திலிருந்து சில சலுகைககள் அவர்களுக்கு கிடைத்தன.

சலுகைகள் வழங்கியவர்கள் இந்த நாட்டை பெருந்தொகைப்பணத்திற்கு காட்டிக்கொடுத்தார்கள். 

அவர்களில் சிலர் இந்த நாட்டின் பாதுகாப்புப்படைகளின் அதிகாரிகளாகவும், வீரர்களாகவும் இருந்தது அதிர்ச்சியாக இருந்தது. 

எல்லாத்தரப்பிலிருந்தும் காட்டிக்கொடுப்புக்கள் துரோகங்கள் சர்வசாதரணமாக அரங்கேறிக்கொண்டிருந்த காலம்.

இக்காலத்தில்தான் நான் அதிகமாக எழுதியதும்,வாசித்ததும்.எழுத்தின் ருசி சரியாகப் புலன்களுக்குள் அமுதமாய் ஊறிய தருணங்கள் அவை.வாழ்வின் அலைதலின் உன்னதமாக ரகசியங்களை சரியாகப்படம் பிடித்து எழுதிய காலங்கள் அவை. வாசிப்பதும், சிந்திப்பதும்,கதைக்கான கருத்தரிப்பதும் பயணங்களில் என்றாகிப் போனது.

என்னுடைய நண்பர் ஒருவர் பயணங்களில் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வருவார். ஆனால் ஒரு பக்கமோ இரண்டு பக்கங்களோ வாசிப்பதற்கிடையில் தூக்கம் அவரை மிகைத்து விடும். விரித்து வைத்த புத்தகப்பக்கங்கள் காற்றிலாடி அல்லல்பட, அவர் இறங்க வேண்டிய இடத்தில் மட்டும் விழிப்புத்தட்டி விடும்.

நான் விடாமல் வாசிப்பேன். அதனால்தான் என்னவோ சீக்கிரமாகவே கண்களுக்கு மூக்குக்கண்ணாடியின் அவசியம் வந்துவிட்டது. ரெயில் பயணங்கள் மிகவும் பிடிக்கும் .வாசிக்க எழுந்து நடந்து காலாற,பின்னோக்கி ஓடும் மரங்களை,கட்டடங்களை ,மனிதர்களை பார்த்து இரசிக்க ரெயில் பயணங்களில் ஜன்னலோர இருக்கைகளைப் பிடித்துக்கொள்வேன்.

எங்களுர் பஸ் வண்டிகளில் ஜன்னலோர இருக்கைக்காக முன் கூட்டியே பதிவு செய்து பின்னர் என்னை ஏமாற்றிய நடத்துனர்கள் மீது வரும் கோபத்தை மிதித்து விட்டு, வேறு பஸ்சில் பயணித்திருக்கின்றேன்.வாசிப்பதற்கும் கற்பனைக்கும் எனக்கு பிடித்தமான இடம் ஜன்னலோரம்தான்.

இப்போது பயணங்களில் எதனையும் வாசிக்க முடியாதபடிக்கு ‘அதிரடி’ப்பாடல்கள் ஆக்கரமித்துக்கொண்டன.சிந்திக்கவும் இரசிக்கவும் இயலாத பயணங்கள்.இரைச்சல் தவிர வேரெதனையும் கிரகிக்க முடியாதபடிக்கு இன்றைய பயணங்கள் சபிக்கப்பட்டதாக மாறிப்போயிற்று.

இந்த வாசிப்புப்பழக்கம் ஒரு விசித்திர அனுபவத்தை கொழும்புக்கு வேலைக்கு வந்த புதிதில் எனக்கு கற்றுத்தந்தது.



                                                                                                                                                    ஊஞ்சல் இன்னும் ஆடும்...

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...