36
இப்படி ஒரு பத்து வருடத்தை கொழும்புக்கும் ஊருக்குமாக கடத்தியிருக்கின்றேன் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக உள்ளது.சில நேரங்களில் பஸ் நடத்துனருக்கும் எமக்குமிடையே பிணக்குகள் ஏற்படுவதுண்டு.
இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் ஊர்பஸ்களில் ஆசனம் புக் பண்ணினாலும் சீட் தரமாட்டார்கள். அல்லது குறித்த சீட் கிடைக்காது. ‘ஏஜென்சிப்பார்ட்டி’ அல்லது ‘பிரபல்யங்கள்’ வந்துவிட்டால் நமக்கு பின் சீட் அவர்களுக்கு முன் சீட். அல்லது நடுவில் ‘ஸ்டூலை’ வைத்து இதில இருங்க என்பார்கள்.
கழுத்தும் முட்டுக்கால்களும் இடுப்பும் வலிக்க வலிக்க அமர்ந்து கொண்டு வர வேண்டும்.போதாக்குறைக்கு நடத்துனரும் அவர் ஆத்ம நண்பர்களும் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்குமாக தாவித்தாவி வரும்போது நடுவில் அமர்ந்திருப்பவர்கள் எழுந்து நின்றால்தான் அவர்களால் தாவ முடியும்.
எங்கள் ஊர் பஸ்களில் அக்காலம் ஓர் இராணுவ ஆட்சியே நடைபெற்று வந்தது.எதிர்த்து நின்றால் ‘எல்லாரும் உங்களப்போல ஊருக்குப்போகத்தானே வேண்டும்,நெருக்குப்படாமல் போறதென்றா தனி வேன் புடிச்சித்தான் போகனும்’ என்று அடக்கி விடுவார்கள்.
ஓட்டுநரின் தோள்களைத்தவிர மற்ற எல்லா இடங்களிலும் பயணிகளை திணித்துக்கொண்டு பைலாப்பாடல்களுடன் பஸ் ஓடித்தான் இருக்கின்றது.
சுpல நேரங்களில் நான் இறங்கி வேறு பஸ்சில் பயணம் செய்திருக்கின்றேன். அல்லது அன்று ஊருக்குப்போகாமலும் நின்றிருக்கின்றேன். (மீதி சில்லரைகளையும் சிலர் தருவதில்லை) ஏறாவூர் காத்தான்குடி பஸ்களில் நாம் ஏறினாலும் அவர்களிடம் வந்து எங்களுர் ஆட்களை நீங்கள் ஏற்றக்கூடாது என்று சிலர் சண்டைக்கு நிற்பதுண்டு.
ஊர் பஸ்சில் இடமில்லை என்பதற்காக ஊரை தாண்டிப்போகும் ஒரு பஸ்சில் ஏறுவதற்கும் அக்காலம் அச்சமாக இருந்தது.நெருக்குவாரங்கள் எல்லாத்திக்கிலிருந்தும் இம்சைப்படுத்தின.
இப்படித்தான் ஒரு வெள்ளி மாலை ஊர் பஸ்சில் இருக்கை இல்லை. பக்கத்து ஊர் பஸ்சில் இருக்கை இருந்தது.போய் அமர்ந்து கொண்டேன். என்னுடன் வேறு சிலரும் வந்து சேர்ந்து கொண்டனர்.சற்றைக்கெல்லாம் பாதாள உலக நாயகர்கள் வந்து ‘உங்கள இதில ஏறச்சொன்னது யாரென்றனர்?’ நாங்களாகவே ஏறினோம்,மற்ற பஸ்சில் சீட் இல்ல என்றோம்.
இப்படித்தான் ஆமிக்கும் பாதாள உலகத்திற்கும் ஏன் பஸ் நடத்துநர்களின் கோபத்திற்கும் தப்பி ஊருக்கும் கொழும்புக்குமாக அலைந்தது நினைவில் நிற்கிறது.
இதில் இன்னுமொரு வேடிக்கை.மட்டக்களப்பு பாதையில் செல்லும் பஸ் வண்டிகளை ‘பார்க்கிங்’ பண்ணுவதற்கு தூர இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக ‘சென்ரல் ரோட்டில்’தான் ‘பார்க்’; செய்வார்கள்.
சரியாக ஏழு மணிக்கெல்லாம் பொலிஸ் ஜீப் வந்து விடும். நாங்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டிருப்போம்.ரைவரிடம் காணிக்கை பெற்றுக் கொண்டு திரும்புவார்கள். பிறகு ‘பாதாள லோக’ வரும். அவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
இல்லை என்றால் பஸ்சை இந்த இடத்தில் நிற்பாட்டி வைக்க முடியாது. அந்தக்காலத்தில் பஸ் வைத்திருந்தவர்கள் பல கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்தனர்.பயணிகளான நாங்களும் இதில் சிக்குப்பட்டு மன உலைச்சலுக்குள்ளானோம்.
93.95 காலப்பபகுதிகளில் ஒரோயொரு ‘ரோசா பஸ்’ மட்டும் ஓடியது. சிறிய பஸ்.அதில் ஒரு கிழமைக்கு முன் புக் பண்ணி காசு கொடுக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் குறித்த திகதியில் பயணம் செய்ய முடியா விட்டால் கட்டிய பணத்தை திரும்பத் தரமாட்டார்கள். மனம் வெதும்பி இருக்கின்றோம்.ஆனால் அந்த சீட் காலியாகப்போகாது ஆட்களை ஏற்றிக்கொண்டுதான் போவார்கள்
.இன்று நிதர்சனமாகப்பார்க்கின்றேன்.அப்படி பகல் கொள்ளையடித்தவர்கள் காலியாகிப்போய் நிற்கிறார்கள்.மனங்களில் வெதும்பிய அனல் அவர்களின் வாழ்வை சுட்டுப்போட்டுள்ளது.
இப்போது நினைத்துப்பார்க்கின்றேன். அவர்களும் இல்லை .இந்தப்பஸ்களும் காணாமல் போய்விட்டது. மக்களின் மனங்களில் நெருப்பைக்கொட்டியவர்கள் நீடித்து வாழ்வதில்லை என்பதற்கு பிரபாகரனைப் போல் பலர் கண் சாட்சியாக உள்ளனர்.
எங்கள் தேசம்: 242 ஊஞ்சல் இன்னும் ஆடும்........
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.