Monday, 26 September 2011

சிறுகதை- வாப்பாவின் சைக்கிள்


  (01)

வேகமாக வீசிக்கொண்டிருந்த காற்று, போகிற போக்கில் சருகுகளையும் கூழங்களையும் பலாத்காரமாக வாயில் திணித்து விட்டுப்போனது.விழிகள் எரிச்சலடைந்து கடுத்தன.சைக்கிள் மிதிக்க முடியவில்லை. இந்தப்பேய்க்காற்றுடன் மல்லுக்கட்டி முழங்கால் சில்லுகள் விண்ணென்று தெறித்தன. “பெடல்” வேறு  மரமரவென்று கடித்தது.

“கிறீஸ்” வைத்து பல மாதங்கள் இருக்கும். வாப்பா இருந்த போது கடைசியாக செயின் காக்காவின் சைக்கிள் கடையில் “சேர்விஸ்” போட்டதாக ஞாபகம்.கச்சான் காற்றை எதிர்த்து சைக்கிள் மிதிக்க மிகுந்த ஓர்மமும் தெம்பும் தேவை.

உள் நாக்கு வரண்டு நீருக்கு ஏங்கியது. பனை மரமொன்றில் சைக்கிளை சாத்திவிட்டு குளத்தில் இறங்கினேன். கைகளை குவித்து நீரையள்ளி அடர்ந்திருந்த கூழங்களை ஊதிவிட்டு மளமளவென்று குடித்தபோது உள்ளம் ஆசுவாசம் கொண்டது.

பனை மரத்தினடியில் குந்த மனம் ஒப்பவில்லை. சைக்கிள் மட்டும் இருக்கட்டும்;. ஓலைகள் காற்றில் வேகமாக தலை சிலுப்பி கூத்தாடின. சில மரங்களில் நொங்கு முற்றியிருந்தது. சற்றுத்தள்ளி மரமொன்றின் நிழலில் ஒதுங்கிக்கொள்கின்றேன். குளத்தில் குளித்து விட்டு வரும் காற்று என்னில் ஈரத்தை அப்பி விட்டுப்போனது. உடல் குளிர்ச்சியில் மிதக்கத்தொடங்கியது.

மாந்துறை ஆற்றில் குளிக்கச்சென்ற ஒரு குடும்பம் உதிர்த்து விட்டுப் போன சிரிப்பும் கூச்சலும் பொட்டல் வெளியெங்கும் சுற்றித்திரிந்தது. குட்டை ஒன்றில் சில எருமை மாடுகள் தமது கணத்த உடம்பை அமிழ்;த்தி அசைபோட்டபடி படுத்திருந்தன. சேற்றினை அள்ளி வீசும் வால் சொடுக்கில் அருகில் நின்ற வெண்ணிற கொக்குகள் பறந்து போயின.

எதிரே இருக்கும் சைக்கிளில் என் பார்வை விழுகிறது. இது வாப்பாவின் சைக்கிள். ஐம்பது வருடமாக அவர் வாழ்வின் மூச்சில் உயிராகி ஒன்றித்திருந்த இரும்புக்காற்று.

உறுதியாக போக்குகள் கறல் பிடிக்கத்தொடங்கியிருந்தது. உம்மாவையும் நான்கு பிள்ளைகளையும்  காடு மேடெல்லாம் ஏற்றி இறக்கிய இந்த சைக்கிள் அந்திம காலத்தில் மூத்தவனான எனக்கு கை கொடுத்திருக்கின்றது. எனது வறுமைச்சுமையின் பாதியை வாப்பாவே வந்து தன் முதுகில் தாங்குவதான ப்ரேமை இந்த சைக்கிளை தொடும் போதெல்லாம் தவிர்க்கமுடியாமல் வந்து படுத்துகிறது.

வாப்பா பொத்தானையில் கொச்சிக்காளை செய்த காலத்தில் இதை வாங்கியதாக சொல்வார்.ஓட்டமாவடியிலிருந்து பொத்தானை காட்டுக்கு மாட்டு வண்டிச்சவாரி மட்டும் தோதான நாட்களில்; வாப்பா இந்த சைக்கிளை உழத்திக்கொண்டு  சென்ற போது  ஊரே கூடி வந்து வேடிக்கை பார்த்த கதையை அவர் சொல்லும் போது வியப்புடனும் ஆச்சரியத்துடனும் வாப்பாவை பார்த்திருப்போம்.

குரங்காட்டிகள், குறிசொல்வோர். ஆடு மாடு மேய்ப்பவர் எல்லோரும் எட்ட நின்று தொட்டுப்பார்த்து மகிழ்ந்ததை சொல்லும் போது வாப்பாவின் முகத்தில் காருண்யம் பூத்து மறைவதையும் நாங்கள் பார்த்திருந்தோம்.

ஏறாவூர் தியோட்டரில்  உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸ் ஆனவுடன்  12 மைல்கள் உழத்தியபடி எம்.ஜி.ஆரின் கை அசைவை பார்த்துவிட்டு வந்ததை வாப்பா பெருiயுடன் சொல்லும்  தருணங்களில் சுருக்கம் விழுந்த உம்மாவின் முகம் வெட்கிச்சிவப்பதையும் பருவ வயதினரான நாங்கள் களிப்பாக பார்த்திருப்போம்.

சைக்கிள் வாங்கிய புதிதில் உம்மாவுக்கும் இதில் ஏறி ஊரையே சுற்ற வேண்டும் என்ற அடங்கா ஆசை ஊறியது. வாப்பாவிடம் சொன்னபோது ஊர் அடங்கிய முதலாம் சாமத்தில் உம்மாவை முன் பாரில் ஏற்றிக்கொண்டு ஊரின் கிறவல் வீதிகளில் வலம் வந்திருக்கின்றார்.

யார் கண்ணிலும் படாமல்தான் இந்த உலா நிகழ்ந்தது. ஆனாலும் என்ன கோழிக் கள்ளன் ~ரீபின் கண்களில் இந்தக்காட்சி துலாம்பரமாயிட்டு.
சவுறா பீவின் கோழிக்கூட்டைத்திறந்து ஈரச்சாக்கால் இரண்டு கோழிகளை அமுக்கிக்கொண்டு இவன் வீதிக்கு இறங்கும் தருணம் உம்மாவுடன் வரும் வாப்பாவும் கோழியுடன் வரும் ~ரீபும் ஆளையாள் பார்த்துக்கொண்டனர்.

“டேய் ~ரிவு  மாமிர கோழியிலயா கை வச்சிருக்காய் இர்ரா வாரன்”

 வாப்பாவின் சத்தத்தில்  உம்மா முக்காட்டை இழுத்து மூடியதும் அவன் கோழிச்சாக்கை வீசியதும் ஏக காலத்தில் நடந்தேறியது. வாப்பா சொல்வார்  அன்று சவுறா மாமியின் இரண்டு கோழிகளின் குட்டித்தூக்கம் மட்டும் தான் கலைந்தது.

தலைப்பிள்ளையான எனது வருகைக்கு உதவிய இந்த சைக்கிளில் எப்போதும் எனக்கு வாஞ்சை இருந்தது. அர்த்த சாமத்தில் உம்மா இடுப்பு வலியால் துடித்த போது கொலனிக்குள் இருக்கும் கஸ்ஸா மருத்துவிச்சியை வாப்பா பின் கரியலி;ல் ஏற்றிக் கொண்டு திரும்பும் போது சுபஹ் தொழுகைக்கு பாங்கு சொல்ல லெப்பை மாமா பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். எனக்குப்பின் அந்தப்பாக்கியம் யாருக்கும் வாய்க்கவில்லை. தம்பி தங்கைகளின் வருகைகள் ஆஸ்பத்திரியில் நிகழ்ந்துவிட்டன.

அந்திம கால வாப்பாவைப்போல சைக்கிள் சோர்வுடன் பனைமரத்தில் சாய்ந்திருந்தது. ஓராயிரம் கதைகளை தனக்குள் கமுக்கமாக வைத்துக்கொண்டு சாய்ந்திருக்கும் அதன் ‘ரிம்கள்’ மட்டும் சற்று ‘கரல்’ பிடிக்க ஆரம்பித்தன.

தேக்க மர சேனைக்குள் கள்ள மரம் வெட்டி ஊருக்குள் அதை ஏற்றி வந்த இந்த சைக்கிள், பொத்தானைக்காட்டுக்குள் புலிகளால் சுடப்பட்டுக்கிடந்த மையத்துக்களையும் காவிக்கொண்டு ஊருக்குள் சேர்த்திருக்கிறது.

மம்முகாசின்ட மகன் அனிவா இந்தியன் ஆமிக்கு இளநி கொடுத்தானென்று  துரிசடியில் அவர்கள் சுட்டுவிட்டுப்போன பச்சை இரத்தம் உலரு முன்பே வாப்பா சைக்கிளின் பின் கரியலில் வைத்து தள்ளிக்கொண்டு வந்திருந்தார்.

கொச்சிக்காளைக்குப்போனவர் மிளகாய் மூடைக்குப்பதிலாக  இரத்தம் ஒழுக மையத்தை கொணர்ந்த போது ஊர் அவரையும் இந்த சைக்கிளையும் பெருமையாக பேசிற்று.

அனிவாவின் இளம் மனைவி முற்றத்தில் கிடந்து மண்ணைவாரி வானத்தை நோக்கி ‘பதுவா’ செய்தது இன்னும் என் நெஞ்சுக்குள் பாவுகிறது.

மாலையில் கிணற்றடியில் சைக்கிளை வாப்பா கழுவியபோது கரியலில் படிந்திருந்த இரத்தக்கறைகளை கண்டு பயத்தால் அழுதிருக்கின்றேன். சவர்க்காரம் போட்டு தும்பால் தேய்த்துக்கழுவிய பின்பும் வாப்பா சைக்கிளை உள்ளே எடுக்காமல் வெளி விறாந்தைக்குள் சாத்தினார்.

நான் ஒரு மாத காலமாக அந்த சைக்கிளில் ஏறுவதற்கு அடம்பிடிக்கவில்லை என்பது உம்மாவுக்கு மகிழ்ச்சி.

ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்த சிறுவன் என்னைக்கண்டதும் அருகில் வருகிறான். 20 ஆடுகள் இருக்கலாம் செவிகள் நீண்ட வெள்ளாடுகள் மிக எடுப்பாக நின்றன. பாடசாலைக்காலத்தில் நான் விழுந்து விழுந்து நேசித்தவளும் இப்படித்தான். நண்பிகள் புடை சூழ வரும்போது எல்லோர் தோளையும் விஞ்சி அவள் கழுத்தும் சிரிப்பும் வெட்டிக்காட்டும். ஓரடி உசத்தியும் எடுப்பும்.

அவளிடமும் பருவத்தில் ஒரு சைக்கிள் இருந்தது.பெண்கள் சைக்கிள் விட சங்கோஜமான அக்காலத்தில் அவள் முதல் தரமாக அதை ஓட்டிக்கொண்டு வந்த போது கிராமமே வியப்பில் மூழ்கியது. எல்லாப்பெண்களையும் விஞ்சும் சாகசக்காரியாக அவளின் பிம்பமே பேசப்பட்டது. நட்பின் உச்சத்தில் இருந்த காலத்தில் அந்த சைக்கிளில் மைதானம் முழுக்க சுற்றிப்பார்த்திருக்கின்றேன்.

வாப்பாவின் சைக்கிளின் உறுதியான இருப்பு என்னை உறுத்துகிறது.

முள்ளிவெட்டவான் முட்காடுகளில் இதன் கரியலில் இருந்து நான் பயணித்த பயணங்கள் நினைவின் முட்களாக நெஞ்சை அடைக்கிறது.

இயக்கப்பொடியன்கள் அடர்ந்த காட்டின் வழி ஓட்டிச்சென்று உணவுப்பொதிகளை தன் சகாக்களுக்கு கொடுத்து விட்டு வருவதற்கு வாப்பா மறுப்பேதும் சொல்லமாட்டார். மறுப்புகள் எடுபடாது என்பது தெரிந்தபின்பும் என்னத்தப்பேச என்றிருக்கும் வாப்பாவின் தோரணை.

 சைக்கிள அவர் யாருக்கும் ஓடக்கொடுக்கமாட்டார் என்ற அவரின் ‘பொலிசி’ தெரிந்தவர்கள் கேட்கவேமாட்டார்கள்.

(2)

இரவுக்காட்சி முடிந்து  ஏறாவ+ரிலிருந்து வாப்பா நண்பர்களுடன் வருகிறார்.ஆளுக்கொரு சைக்கிள் வெகு உல்லாசமாக பார்த்த படத்தின் நகைச்சுவைகளை சொல்லிச்சிரித்தபடி வீதியை அடைத்தபடி வருகிறார்கள்.

 சித்தான்டியை தாண்டும் போது வாப்பாவின் முதுகில் அனல்காற்று தொடுகிறது. சைக்கிள் நகர மாட்டேன் என்கிற அளவிற்கு கணதியின் வலி . பெடல் மறமறக்க மிதிக்கிறார். பின் கரியலில் இருக்கும் ஆசாமியை திரும்பிபார்க்கும் ஆவல் உந்த முகத்தை வலப்பக்கமாக திருப்புகிறார்.

‘ம்… பின்னால் பார்க்கம மிதிடா’

 குரலின் தீட்சண்யம் அவரை கட்டிப்போடுகிறது. ஆகிருதியான நீள் நிழல் சைக்கிள் பக்கவாட்டில் விழுந்து தொடர்வதை கவனித்தபடியே மிதிக்கிறார். நண்பர்கள் அவரை தாண்டிச்சென்றுவிட்டனர். நிலவின் குளிர்ச்சி வீதி முழுக்க சொரிந்திருந்தது. சாராயத்தவறணைக்கருகில் ஒர் ஆலமரம் விழுது பரப்பி தலை சிலுப்பி நின்றது.

வாப்பா வியர்வையில் குளித்தபடி ஆலமரத்தை கடக்கும் தருணம் சைக்கிளின் பாரம் விர்ரெனக்குறைகிறது. கால்கள் இலேசாக பெடலை உழத்தின. ஆலமரத்தின் கந்துகள் காற்று வீசாத நள்ளிரவில் தலைவிரித்து ஆடியதை  வாப்பா திரும்பிப் பார்க்காமலே சைக்கிளை வேகமாக மிதிக்கத்தொடங்கினார்.

சாமத்தில் தனியாகப்போகும் சைக்கிளின், மாட்டு வண்டிலின் பின்னால் பேய்கள் ஏறி சஞ்சரிப்பதாகவும் இந்த சைக்கிளில் பல பேய்களை தான் ஏற்றி வந்துள்ளதாகவும் வாப்பா வீறாப்புடன் கதை சொல்வார். பேய்கள் இரும்புக்கும் வலாயப்படாத காலம் அது. நாங்கள் தாய்ப்பறவையின சிறகினுள் ஒடுங்கிக்கிடக்கும் குஞ்சுகள் போல் உம்மாவின் விலாவை உரசியபடி வாய் பிழந்து கதைகள் கேட்டிருந்தோம்.

(03)

குட்டையில் கிடந்த எருமை மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாய் எழுந்து மேற்குப்பக்கம் செல்கின்றன.குளித்து விட்டு வரும் அந்தக்குடும்பம் மறுபடியும் சிரிப்பையும் கும்மாளத்தையும் காடு முழுக்க தூவியபடி வந்தது. குளத்தில் நாரைகள் விழுந்து எழும்பிய போது அதன் சொண்டுகளில் மீன்கள் துடித்தன.

பிற்காலத்தில் வாப்பாவின் மனச்சுமைகளை இந்த சைக்கிள் சுமக்க முடியாமல் நைந்து போனது போல் ‘சீட் கு~ன்’ பிய்ந்து போய் பரிதாபமாக தெரிந்தது. வேலை முடிந்து வீட்டுக்குப்போய் முதல் வேலையாக இதைக்கழுவி மினுக்கம் கொடுக்க வேண்டும்.

சில சாமான்களை புதிதாக வாங்கிப்போட வேண்டும். சைக்கிளின் மகிழ்ச்சி வாப்பாவுக்கு செய்யும் முதல் மரியாதை .பனை மரத்தில் சாய்ந்திருக்கும் அது என்னை பரிதாபமாக பார்த்துக்கொண்டிருப்பதான பிரேமை .மனம் சுருக்கென்றது.

‘எனக்கு உம்மாவோட வாழ ஏலாடா மக்காள்’

‘ஏன் வாப்பா ?..’

‘அவட கக்கிசாரம் புறுபுறுப்பும் பொறுக்கேலா எந்த ஆம்புளயும் தாங்கமாட்டான், புகைச்சலுக்க இருந்தாலும் எரிச்சலுக்க வாழ ஏலுமா செல்லுங்க ? ’

‘கொஞ்சம் சமாளித்துப்போங்களன் வாப்பா’

‘இல்ல மக்காள் பொம்;புள வாய்ச்சாதான் வாழ்க்க ருசிக்கும் இல்லாட்டி நரகம்தான்டா, இம்புட்டு நாளும் நரகத்தலதான் வாழ்ந்திட்டன். அதெல்லாம் ஒங்களுக்காக,இனி நீங்க தலெயெடுத்திட்டிங்க ஒங்களுக்கும் கண்ணு விடுத்திட்டு, நீங்களாச்சும் நல்ல குணமுள்ளவள தேடிமுடிங்கடா இது என்ர ஒஸியத்து.’

வாப்பாவின் குரல் உடைந்திருந்தது. அப்போதும் இந்த சைக்கிள் அவர் காலடியில்தான் கிடந்தது.

‘நான் என்னத்த குற வச்ச அவ இப்பிடி நடக்கலாமா’?

உம்மா வாப்பாவுக்கு செய்யும் ஆக்கிணைகள் நினைவில் எழுந்தன. வாப்பாவின் அந்திமம் இயலாமற்போன போது அவரை வார்த்தைகளால் சித்திரவதை செய்து கொன்ற மனைவியாக அவ மாறியிருந்தா. ஆகாதவன் பொண்டாட்டி கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்பது இங்கு தலை கீழாக மாறிப்போயிற்று.

அவரின் யௌவனப்பருவத்தில் உம்மாவை ஆட்டிப்படைத்ததும் ஏனோ சுறுக்கென்று நினைவில் வந்து முட்டியது. தேத்தண்ணியில சீனி குறைய, அல்லது இனிப்புக்கூடிட்டு,கரி ஆக்கின, சரியில்ல இப்படி எத்தனையோ சில்லறைத்தனமான விடயங்களுக்கெல்லாம்  மோட்டுக்கும் தரைக்குமாக குதித்து தாண்டவமாடியவர்தானே.

ஒரு தடவை உப்புக்கொஞ்சம் கூடிட்டு என்றதற்காக சாப்பிட்ட தாலாப்பீங்கானை தூக்கி உம்மாவின் மூஞ்சியில விட்டெறிந்தார். அது அவவின் தலைக்குமேலால் பறந்து சுவரில் முட்டி டங் என்ற கடுர சத்தத்துடள் விழுந்த போது வாப்பாவின் முகம் இறுகிக்கிடந்ததை அச்சத்துடன் பார்த்திருந்தோம். படலையைத்தாண்டி உம்மா வானத்தைப்பார்க்க இவர் கிழமைச்சாமான் கட்டிக்கொண்டு வேலைக்குப் போகவேண்டும் என்ற நிலை இருந்தது.

அந்த அராஜரகங்களுக்கான பழிவாங்கும் படலமாக உம்மாவின் ஆக்கிணைகள் அவரின் அந்திமத்தில் நடந்தேறியுள்ளதாக நினைக்கத்தோன்றுகிறது. பல் பிடுங்கப்பட்ட நாகம் போல் வாப்பாவின் நாடி நரம்புகள் ஆடிப்போன  தருணத்தில் உம்மா வஞ்சம் தீர்த்துக்கொண்டிருப்பதான ஆறுதலை தந்திருக்கலாம்.

 அப்போதும் அவர் கோபப்படவில்லை. சைக்கிள் சவாரியை விடவுமி;ல்லை. வீட்டிலிருந்து மேற்கு மூலையிலிருக்கும் தைக்காப்பள்ளிக்கும் வீட்டிக்கும் மூன்று நிமிடப்பயணம்தான். வாப்பாவோவெனில் சைக்கிளில்தான் செல்வார். மழைக்காலங்களிலும் ஒரு கையால் குடை பிடித்தபடி, நடுங்கும் கரங்களால்; ‘கெண்டிலை’ப்பிடித்தபடி அவர் சைக்கிளில் வரும்போது அச்சம் கவ்வும். ஆனால் விழமாட்டார்.

அவரின் செல்வாக்கை தூக்கி நிறுத்த இந்த சைக்கிள்தான் தோதாகப்பட்டிருக்கலாம். சில சமயங்களில் கத்தா மரத்தடியில் சாத்திவிட்டு அதனிடம் பேசிக்கொண்டுமிருப்பார்.

 அவர்களின் நீள் தூரப்பயணங்கள், எதிர்கொண்ட ஆபத்துக்கள் குறித்தெல்லாம் சைக்கிளுடன் அவர் பேசுவார். சர்வமும் சத்தியம் என்பது போல் அந்த ரெலி சைக்கிள் மௌனமாக கேட்டுக்கொண்டிருக்கும். பணிவுள்ள அடிமையாக வாப்பாவின் பேச்சில் கட்டுண்டு கிடக்கும் சைக்கிளின் இருப்பு எனக்குள் பேரானந்தத்தை தூவும.;

பனை மரத்தில் சாய்ந்து ஓய்வெடுக்கும் சைக்கிளை தூக்கி நிமிர்த்துகிறேன். இரும்புகளின் குளிர்ச்சி ஜில்லென்று கையில் பாவுகிறது. ஒரு என்.ஜீ.ஓவில் வெளிக்களப்பணியாளனான எனக்கு இந்த சைக்கிள் உபயோகம் வார்த்தைகளில் மாளாது.

வாப்பாவே சின்ன வயதில் கூட வரும் பாதுகாப்புணர்வு நெஞ்சில் ஊறியிருக்கும். வாஞ்சையுடன் அதை தள்ளி  பக்குவமாக வீதிக்கு ஏற்றுகிறேன்.

நான் அலுவலகத்தில் நுழைந்தபோது ரஜீவன்தான் முதலில் என்னைக்கண்டான். மேலதிகாரிகளின் வாகனங்கள் தரிப்பிடங்களில் நின்றன. அஞ்ஞனா ரிசப்சனில் ஜெகஜோதியாக சிரித்தபடி என்னை வரவேற்றாள்.

 சைக்கிள் சாவியை விரலிடுக்கில் வைத்து சுழற்றியவாறே எனது மேசையில் வந்தமர்ந்தேன். சற்று நேரத்தில் மேலதிகாரியின் அழைப்பு வர அறைக்குச்சென்று அன்றைய களப்பணிகள் பற்றி கலந்துரையாடினேன் .அவர் அறிக்கைகளை படித்தபின்  என்னை நிமிர்ந்து பார்த்தார்.அவர் இதழ்யோரம் இளநகை முகிழ்ந்தது.

‘ஒரு குட் நிவுஸ்’ என்றார். மலர்ந்த இதழ்கள் மகிழ்ச்சியில் விரிந்தன.

என்ன என்பது போல் என் புருவங்கள் உயர்ந்தன

‘இனி நீங்க அந்த பழய சைக்கிள் ஓடத்தேவையில்ல.நாங்க மொட்பைக் தாரதாக முடிவெடுத்திருக்கம். நாளயண்டக்கி பங்~ன், அவசியம் வந்து உங்கட பைக் எடுத்திருங்க.’

‘தாங்கஸ்’ என்ற வார்த்தைகள் மெலிதாக என்னிடமிருந்து வெளிப்பட்டன அவர் வினோதமாக பார்ப்பதை தவிர்க்குமாற் போல் அவசரமாக வெளியேறினேன். அஞ்ஞானா ஏற்கனவே விடயம் தெரிந்திருப்பாள்.

‘அப்ப இனி இந்த கரள் பிடிச்ச இரும்புக்கு லீவு என்ன, பேரீச்சம் பழம் வாங்கி தாங்க யாகூப் என்றாள்,

ரஜீவனோ ஒரு படி மேலே போய்

‘இனி மரமஞ்சள் குடிக்கிற வேலயும் இல்ல’என்றான்.

நெஞ்சுக்கு இதமான உறவை இழந்துவிட்ட பரிதவிப்பில் மனம் பதைபதைத்தது. வாப்பாவின் சைக்கிள் இல்லாத வீட்டின் தனிமை என்னை அச்சமூட்டத்தொடங்கியது. வெளியே வந்து சைக்கிளை திரும்பி பார்க்கிறேன். உம்மாவால் கைவிடப்பட்டு அந்திமத்தில் பரிதவித்த வாப்பாவைப்போல் அது சாத்திய இடத்தில் அப்படியே நின்றது.


06.06.09 பிரசுரம் அம்பலம் , சஞ்சிகை 2010 ஜனவரி

Sunday, 4 September 2011

ஜெயமோகன் அஞ்சல்





அன்பும் மதிப்புமிகு ஜெயமோகனுக்கு,
உங்களின் யானை டாக்டர் படித்தேன். மனசு மத்தாளமானது.உங்களைக்காண வந்த எஸ்.எல்.எம்.ஹனீபா மூலம் கிட்டியது.

ஒட்டமாவடி அறபாத்

ஊமைச்செந்நாய்க்கு நிகரான படைப்பு.இன்றைய தமிழ்ச் சூழலில் ஜெயமோகன் என்கின்ற உங்களால் மட்டும்தான் இவ்வாறு எழுத முடியும். இது முகஸ்துதியோ புகழ்ச்சியோ அல்ல,சத்தியம்.உங்களைக்கண்டு வந்த எஸ்.எல்.எம்.என்னிடம் ஜெயமோகன் என்கின்ற புத்தனைக்கண்டு வந்தேன் என்றார்.புத்தனின் மறு பெயர் ஈரம்.யானை டாக்டரின் ஒவ்வொரு பத்தியிலும் அந்த ஈரம் சொட்டுகிறது.

இலங்கையில் 6200 யானைகள் வாழ்ந்தாலும் எங்கள் காடு 2200 யானைகளுக்கே போதுமானது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்லி வருகிறார்கள்.

புலிகளுடனான சண்டைமுடிவுக்கு வந்த வேளை,  யானைகளுடனான சண்டை ஆரம்பம்.எங்கள் வாழ்விடங்களிலிருந்து 2 கிலோ மீற்றர் தூரத்தில் யானைகளின் குடியிருப்பு. எங்களுர் மக்களுக்கு யானைகளுடன் தீராப்பகை.ஒவ்வொரு வருடமும் யானைகள் பலரின் உயிரைப் பறித்து விடும். இந்தச்சூழலில் யானை டாக்டர் கதை எங்களை எவ்வாறு பாதித்திருக்கும் என நான் சொல்லத்தேவையில்லை.

இலங்கையில் எழுத்தாளர்கள் என்று கோலம் போடுபவர்களின் அடியேனும் ஒருவன். மூன்று  சிறு கதைத்தொகுதிகளைக் கொண்டு வந்திருக்கின்றேன்.அதில் அடையாளம் பதிப்பகம் ” உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி “ என்ற தொகுதியைக் கொண்டு வந்திருக்கின்றது. அந்தத் தொகுதியிலிருந்து இரண்டு கதைகளை உங்களுக்கு அனுப்புமாறு எஸ்.எல்.எம் வேண்டிக்கொண்டார்.உங்கள் பார்வைக்கு அனுப்புகின்றேன்.
உங்களைக்காண இன்ஷா அல்லாஹ் பார்வதிபுரம் வருவேன்.
அன்புடன்
அறபாத்- இலஙகை


அன்புள்ள அறபாத்

 ஜெயமோகன் பதில்

நான் ஆபிதீனின் பக்கங்களில் உங்கள் கதைகளையும் கடிதங்களையும் ஏற்கனவே வாசித்திருக்கிறேன்.  தொகுப்பு வாசித்ததில்லை. அடையாளம் சாதிக் நல்ல நண்பர்தான். பெரும்பாலான நூல்களை அனுப்பித் தருவார். இந்நூலையும் அனுப்பச் சொல்கிறேன்.

உங்கள் கதைகளில் உள்ள சாதாரண மனிதனின் வாழ்வுக்கான ஏக்கத்தை மிகுந்த நெருக்கத்துடன் உணர்ந்தேன். குறிப்பாக ரெயில்வே ஸ்டேஷன் கதையில் சரசரவென வந்துமறையும் முகங்கள். காலம் ஒரு ரயில் போல ஜன்னல்முழுக்க முகங்களுடன் ஓவென அலறி இரும்புப்பேரொலியுடன் கடந்து மறைந்ததைக் காட்டிய கதை அது.

ஒரு எழுத்தாளன் அவன் கைக்குள் சிக்கக்கூடிய ஒரு வாழ்க்கைக்குள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் காட்ட முயலவேண்டும் என நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் அளவும் அகலமும் அல்ல அது எதைச்சுட்டி நிற்கிறது என்பதே நல்லகதைகளை அடையாளப்படுத்துகிறது.

வீடு போர்த்திய இருள் கதையும் என்னைத் தனிப்பட்டமுறையில் பாதித்தது.  காலம் இதழில் நான் அக்கதையை வாசித்திருக்கிறேன். கிட்டத்தட்ட அதே தளத்தில் ஒருகதை ‘அம்மன் மரம்’எழுதியிருக்கிறேன்.

நாம் சந்திக்கும்போது சிறுகதை பற்றி இன்னும் நிறையப் பேசமுடியுமென நினைக்கிறேன்.  தொடர்ந்து உங்கள் படைப்புகளை வாசிக்கவேண்டும்
எழுதுகிறேன்
ஜெ




அன்புமிகு ஜெயமோகன்
உங்கள் கடிதம் என்னை உற்சாகப்படுத்தியது.ஒரு கட்டத்தில் வாழ்க்கை வெறுத்துப்போய்விடுகிறது. எழுதி என்ன செய்ய என்று மனம் அலுத்துக்கொள்ளும்.உங்களைப்போன்ற சிகரங்களின் எழுத்துக்கள் அதை மீண்டும் புத்துயிரூட்டும். நெரிசல்மிகு வாழ்க்கையில் வாசிப்பும் எழுத்தும்தான் புனித ஜிஹாத் என்பேன்.நான் அந்தப் புனித யுத்தத்தைத்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக நடாத்திக்கொண்டிருக்கின்றேன்.

என்னுடைய கதைகள் பற்றிய தங்கள் மதிப்பீடு மிகுந்த மன எழுச்சியைத்தருகிறது.என்னைப்போன்றவர்களின் படைப்புக்களை நீங்கள் வாசிப்பதற்கு அவகாசம் கிடைக்காது என்பது என் எண்ணமாக இருந்தது,

நேற்று என் தோட்டத்தில் இருந்த போது மாமரத்திலிருந்து நழுவி என் கையில் விழுந்த புழு ஒரு கைக்குழந்தையாகத் தவழ்ந்தது. என்ன ஒரு  உயிர்ப்பான வார்த்தைகள். உங்களின் யானை டாக்டரைப்படித்த பின் நான் இப்படித்தான் புழுக்களைப் பார்க்க ஆரம்பித்துள்ளேன். இன்னும் அந்தக்காட்டிலிருந்து மீளவும் என் கிராமத்திற்கு வரமுடியவில்லை.

இலங்கையில் தற்போது புழக்கத்தில் இருக்கும் 1000 ரூபா நோட்டில் யானையுடன் ஒரு பாகனும் இருப்பார்கள். அது எங்கள் ஊருக்குப்பக்கத்திலுள்ள கிராமத்து  முஸ்லிம் ஒருவரால் தலதா மாளிகைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட யானை. பாகன் தலையில் குல்லாய் போட்டிருப்பார் .கிடைத்தால்  பாருங்கள் புரியும்.
நூற்றாண்டுகள் கடந்தாலும் மஹிந்த அரசு அந்த வரலாற்றைப்பேணி வருவதற்கு காரணம் அது அவர்களின் பவுத்த மதத்தின் அடையாளம் என்பதால்.
அன்புடன்
அறபாத்.




 ஜெயமோகன் பதில்



அன்புள்ள அறபாத்
உங்கள் மனநிலை எனக்குப்புரிகிறது.
எழுத்தாளனுக்குச் சோர்வு புறச்சூழல்களினால் ஏற்படும். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குமேல் அது நீடித்தால் அது அவனுடைய பிழை. நீண்டகாலத்துக்கு நீடித்தால் அவனுடைய குற்றம்.

எழுத்துத்திறன் என்பது ஒரு இயற்கைக் கொடை. அல்லா உங்களுக்கு அதை ஒரு காரணத்துக்காகவே அருளியிருப்பான். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதற்கான விளக்கத்தை அல்லாவிடம் கோர உரிமை கிடையாது.

ஆக, முடிந்தவரை தீவிரத்துடன் ,உத்வேகத்துடன் எழுதிக்கொண்டிருப்பதே முக்கியமானது. அத்துடன் நம் கடமை முடிகிறது. எழுதுங்கள்.
ஜெ

Thursday, 18 August 2011

செல்லனின் ஆண் மக்கள்.



1990களில் முஸ்லிம்கள் உயிர் வாழ்வதற்கான உத்தரவாதமற்ற நிலை இருந்தது. 
ஆட்கள்கடத்தப்படுதல்,கப்பம்பெறல்,உயிர் அச்சுறுத்தல்,பொருளாதார அழிப்பு என பல்முனை தாக்குதல்களை எதிர்கொண்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் வாழ்ந்தது.

ஒட்டமாவடியில் இருந்து 12 மைல் தொலைவில் எனது பாட்டனின் பூர்வீக தோட்டம் இருந்தது. சுற்றி வர வயல் , மாந்தோப்பு ,கடை ,ஆட்டுப்பட்டி என விசாலமான இடம்.

90க்குப் பின் வசந்த காலங்கள் உதிர ஆரம்பித்து விட்டன.தமிழ் முஸ்லிம் உறவில் பாரிய விரிசல்களையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் விடுதலைப்புலிகளும், அவர்களின் ஊது குழலாய் செயற்பட்ட அரசியல்வாதிகளும்.
அவர்கள் போட்ட விதை இன்றும் தழைத்து வியாபித்துள்ளது வேதனையிலும் வேதனை.

ஒன்றாய் கூடி வாழ்ந்த முஸ்லிம் மக்களை புலிகள் விரட்டியடித்த போது ஊமையாய் இரத்தக்கண்ணீர் வடித்து நின்ற தமிழ் சமூகத்தின் கண்ணீர் கசகசப்பில் முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த மண்ணிலிருந்து வேருடன் பிடுங்கி எறியப்பட்டனர். 
பூர்வீகமாக வாழ்ந்த இடங்களை விட்டு, சொத்துக்களைத்துறந்து உடுத்திருந்த ஆடைகளுடன் வந்தவர்களில் எங்கள் குடும்பமும் அடங்கும்.

வயல், தோட்டம் ,கடை ,கால் நடை எல்லாவற்றையும் புலிகளுக்குத் தாரைவார்த்து விட்டு வந்துவிட்டோம். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தோம். இருக்க இடமின்றி, தொழிலின்றி ஏன் ஒரு பிடி சோறின்றியும் அலைந்தோம்.

கடவுள் இருப்பதற்கான மிகச்சிறந்த சான்றாக முள்ளிவாய்க்காலை நினைத்துப்பார்க்கின்றேன்.அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கு புலிகளின் சாவு ஒரு சரித்திரச்சான்று.

சுமார் இருபது வருடங்களுக்குப்பின் வந்த சுதந்திரத்தை சுவாசிப்போம் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால் கனவல்ல நிஜம். அந்த நாள் வந்தது.  நான் விளையாடிய என்னைத்தூக்கி வளர்த்த மண்ணில் கால் புதைத்து நிற்கின்றேன்.

பரந்த விசாலமான எங்கள் தோட்டத்தில் பல என்.ஜி.ஓக்களின் புண்ணியத்தில் முளைத்த வீடுகள். 'சோலர்'மின்சார வசதிகள். செப்பனிடப்பட்ட வீதிகள். எங்கள் இடம் என்பதற்கான அடையாளமற்ற நிலை.
இருந்தும் பரவசம். ஒவ்வொரு திடலாக ஏறிப்பார்க்கின்றேன். புளியமரம் வானளாவ உயர்ந்து கிளைபரப்பி ஏகத்திற்கும் நானே என்பது போல் நிற்கிறது.

கிணற்றடியில் நின்ற தோடைமரங்களில் இலை தெரியா காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. கிணறு தூர்ந்து போய் அடியில் ஒரு சொட்டு நீர் பளபளத்துத்தெரிந்தது.


செல்லனின் மக்கள் காணியைச்சூழவும் புதிய கல்வீடுகளில் வசித்திருப்பது தெரிந்தது. சிலரை அடையாளம் காண  முடிந்தது. சிலருக்கு என்னையும் அடையாளம் காண முடிந்தது.

செல்லர் செத்து விட்டார் என்றார்கள். சர்வசாதரமாக அம்மக்கள் இரண்டு மூன்று மனைவிகளை வைத்திருப்பர். செல்லருக்கும் மூன்று மனைவிகள்.

நான் மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு வரும்  போது செல்லன் நேர்மையான வேட்டைக்காரன், மந்திரவாதி. குலத்தலைவர் என மதிப்புப்பெற்றவர். 

எனது வாப்பாவின் தோழர்களில் மிக முக்கியமானவர். அவரின் பி்ள்ளைகளையும் அப்படித்தான் யோக்கியமாக வளர்த்து விட்டிருக்கின்றார். பிள்ளைகளில் சிலர் அப்பாவை அடியொட்டி பெண்களை எடுத்திருந்தனர். ஒரே வளவுக்குள் அதெப்படி சக்களத்திகள் சண்டை இல்லாமல் வாழ்ந்தார்கள் என்பது நினைத்துப்பார்க்கையில் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது

இழந்து போன நாங்கள் வாழ்ந்த மண் எங்கள் கைகளுக்கு திரும்ப வராது என்று நிராசையடைந்திருந்தோம். ஏனெனில் எங்கள் கடையில் தான் புலிகளின் "சென்றி பொயின்ட் "ஒன்று இருந்தது.மூன்று ஏக்கர் தோட்டத்தையும் அவர்கள்தான் பங்கு போட்டு என்.ஜீ.ஓக்களுக்கு கொடுத்திருந்தார்கள்.
எனினும் அவர்கள் கையகப்படுத்திய சிறு இடத்தில் அதனைச்சூழவும் யாரையும் குடியேற அனுமதிக்க வில்லை.பாதுகாப்புக்காரணங்களை காட்டி மக்களை அண்ட விடாமல் தடுத்திருக்கின்றார்கள்.

டவுனுக்கு வரும் செல்லனின் மக்கள் கதைகதையாய் சொன்னார்கள்.வயலை தங்கராசா செய்து கொண்டிருந்தார். புலிகளின் ஆளுகைக்குட்பட்ட அந்த மண்ணிலிருந்து வருடா வருடம் வயல் செய்கை பண்ணுவதற்கான அனுமதியை அவர் வாப்பாவிடம் பெற்றுச்செல்வார். குத்தகையும் வந்து விடும்.


புலிகள் விட்டுச்சென்ற இடத்தை பலர் ஆக்கிரமிக்க வந்தபோது இது முஸ்லிம் ஆக்களின்ற நிலம். இதையாவது நாங்க காப்பாத்தி அவர்களின்ற கைககளில் கொடுக்க வேண்டும்.என்று விரட்டியவர்கள் சூதுவாதறியா அப்பாவிகளான அவர்கள்தான்.

நாங்கள் எங்கள் நிலத்தை பார்க்கச்சென்ற போது கடை அத்திவாரம் மட்டும் இருந்தது.யுத்தமும் இனவாதமும் சப்பித்துப்பிய மீதமுள்ள எலும்புத்துண்டாக கட்டடங்களின் எச்சங்கள்.
என்னைக்கண்ட மாத்திரத்தில் தங்கராசா ஓடி வந்தான் கூடவே அவன் நாயும்.
'வந்திட்டிகளா காக்கா ! '
வார்த்தைகள் தளுதளுத்து அதரத்தில் துடித்து நின்றன.

'இத மட்டும்தான் காப்பாத்த முடிஞ்சுது , இதயும் சுருட்டிப்போக எத்தின பேரு! விடுவமா எங்கட அப்பாட ஆச இத எத்துன வருசமானாலும் உங்கட கையில ஒப்படைக்கனும்.... இப்பதான் நிம்மதி..

ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் என எங்களைச்சுற்றி பெருங்கூட்டமே கூடி நின்றது.எல்லோர் முகத்திலும் ஆச்சரியம்,புதுமை! தங்கராசா அறிமுகப்படுத்தினான்.

ஆடைகளும் உடலும்தான் அழுக்கு.. மனமோ பாற்போன்ற வெண்மை,தூய்மை இந்த மனங்களிலா இனவாத நஞ்சை விதைத்தார்கள் அதனாலென்ன தோற்றுப்போனது வினை விதைத்தவன்தானே..

வயற்பரப்பையும் எஞ்சிய தோட்டத்தின் விசாலத்தையும் பார்த்தபடி நிற்கின்றேன். செல்லனின் மக்களிலும் அந்த அப்பாவி சனங்களிலும் ஒரு கோடி மதிப்பு பல்கிப்பெருகி வழிகிறது.

உண்மையில் இது மனிதர்களும் மகாத்மாக்களும் வாழும் மண்.நான் இனி இந்த மண்ணில் வந்து புரள வேண்டும் .இவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுக்க வேண்டும். மீண்டும் என் குளத்தின் நுரைகளில் கால் புதைய ஆக்காண்டிகளின் அட்டகாசங்களை கேட்டபடி உலா வர வேண்டும்.

எனினும் ஏதோவொன்று நெஞ்சுக்குள் வந்து பாரமாக அழுத்துகிறது.அது அவநம்பிக்கையா?நிராசையா? பூ விலங்கினை அகற்ற முடியா அவசத்தில் ஆதி மண்ணின் புழுதியை மட்டும் அப்பிக்கொண்டு வீடு  திரும்புகின்றேன்.





Sunday, 14 August 2011


மர்ம மனிதனும் முஸ்லிம்களும்

-மௌலவி எம்.ஐ.எம்.நௌபர் (காஷிபி)-

Saturday, 23 July 2011

காத்திருந்த மரணப்பொறி.....

னக்கு ஒரேயொரு பெரியம்மா. அவவின் பெயர் வெள்ளையும்மா .ஆள் பொது நிறம்.பெரியப்பா ஒர் அப்பாவி.மூத்தது பெண் இரண்டாவது ஆண். பெயர் ஹயாத்து முஹம்மது. குடும்பத்தில் உள்ளவர்கள் 'அயாத்தமது' என்று கூப்பிடுவார்கள். நான் 'அயாத்து காக்கா' என்பேன். பெரியப்பாவை போல் அவனும் ஒர் அப்பாவி. படிப்பு ஏறவில்லை. வயலுக்கு குருவிக்காவலுக்கு அனுப்பி விட்டார்கள்.
'கிடச்சிமடுக்கண்டத்தில் தாய் மாமனின் வயலுக்குள் விழும் குருவிகளை விரட்டும் தொழில் அவனுடையது.
எதற்கும் பயந்த அப்பாவி முகக்களை. சனத்திரளுக்குள் வரமாட்டான்.அவ்வளவு கூச்ச சுபாவம். அதைவிடப்பயம் காக்கி ஆடைகளைக்கண்டால்.
நான் சொல்வேன் 'காக்கா காக்கி சட்டயக்கண்டா ஓடாதீங்க. சந்தேகம் வரும் சுட்டுப்போடுவானுகள்' அதற்கு ஒரு வெகுளிச்சிரிப்பு பதிலாக வரும். 'நம்மளச்சுட ஆருக்கு தைரியம் வரும் ' என்பது போல் இருக்கும் அந்தச்சிரிப்பு.
புலிகள் துள்ளித்திரிந்த காலம்.ஆட்சியென்றால் அப்படியொரு ஆட்சி.எங்கள் ஊரில் ஏரியா பொறுப்பாளராக புஹாரி. சீர் திருத்தவாதியாக... ஹீரோவாக.. அவர் கையில் எப்பவும் ஒரு "மெசின் கண்" ஒரு கோழியை சுடுவதற்கும் முப்பது குண்டுகளை அநாயாசமாக பொரிந்து தள்ளும் மாவீரர்.
உம்மா ஆசையாக வளர்த்த ஒரு பாணிச்சேவலை முப்பதுக்கும் மேற்பட்ட குண்டு களை செலவழித்து சுட்டுக்கொன்றது என் மனக்கண்ணில் நிற்கிறது.
முள்ளிவெட்டவான் கடையின் பின் வளவில் தீனி பொறுக்கிக்கொண்டிருந்த சேவலையொத்த பல சேவல்கள் அவரின் துப்பாக்கிக்கு இரையாகியிருந்த காலம் அது.
பொத்தானையில் அஹமது காக்காவின் கடை,முள்ளிவெட்டவானில் வன்னியனாரின் கடை,(எனது வாப்பாவின் வாப்பா) முக்கர் கல்லி்ல் அப்துல் ஹமீதின் கடை, புணாணையில் டாப்பரின் கடை என சிதறிக்கிடந்த கடைகளில் முஸ்லிம்களும் தமிழர்களும் கூடிக்குலாவி மகிழ்ந்திருந்த அது ஒரு பொற் காலம்.
பொத்தானைக்கண்டத்திற்கு பொறுப்பாக தியாகு நியமிக்கப்பட்டிருந்தான். அந்தப்போராளி தூங்குவது அஹமது காக்காவின் கடை பெஞ்சில்.வயல் வெட்டுக்காலங்களில் வரி வசூலிப்பது,சின்னச்சின்ன சண்டைசச்சரவுகளில் மூக்கை நுழைத்து சமாதான தூதுவனாய் கருமமாற்றுவது,இன்னும் சில அதிகாரங்களை வைத்துக்கொண்டு தியாகு கூடவே சிறு படையையும் வழிநடாத்திக்கொண்டிருந்தான்.
அவனுடன் கிருஷ்ணன் என்ற போராளியும் முக்கிய நபராக இருந்தான் இந்தியாவிலும்,பலஸ்தீனத்திலும் கெரில்லா பயிற்சி எடுத்தவன்.இந்திய அமைதிகாக்கும் படையினருடன் பொருதி குடல் தொங்க அதை அள்ளிச்சொருகிக்கொண்டு தப்பி ஓடியவன் என்ற பெருமையும் அவனுக்கு உண்டு. அது ஒரு சாகச நிகழ்வு என்பது போல் கடைகளில் கூடி நிற்கும் கூட்டம் கதைத்து மாய்ந்தது.
தியாகுவுக்கும் அவனுக்கும் பூவை ஒருத்தி்யின் காதலைப்பெறுவதில் வந்து விட்டது சனியன்.ஆளையால் அடித்துக்கொள்ளவில்லை. பொருமிக்கொண்டு அலைந்தது சுற்று வட்டாத்திற்கும் தெரியும்.
ஒரு நாள் பனி அடர்ந்திருந்த அதிகாலை நேரம் அயாத்து காக்கா அஹமது காக்காவின் கடைக்கு வந்து சேர்ந்தான்.இரவெல்லாம் நித்திரை முழித்த அயர்வு.தேயிலைப்பொடி வாங்கி வர மாமாதான் அனுப்பியிருந்தார்.
காக்கா செல்லும் போது கடை மூடியிருந்தது.கடையைச்சுற்றி சனக்கூட்டம் முண்டியடித்துக்கொண்டு முன்னேறியது.அயாத்து காக்கா பயத்தில் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்தான். பக்கத்து வயல் மில்லக்காரன் கூட்டத்திலிருந்து அயாத்து காக்காவை நோக்கி முன்னேறி வருகிறார். 'தம்பி அயாத்தமது இஞ்செ நிக்காத வாடிக்குப்போ, அவன் தியாகுவ யாரோ வெட்டிப்போட்டு துவக்கையும் பறிச்சிட்டு பெய்த்தானுகளாம். அவனுகள் வந்து ரவுண்டப் பண்னுரதுக்கு முதல் வாடிக்குப்போய் மாமாவேட இரி'
வயற்காரன் வார்த்தைகளை முடிக்கவில்லை புழுதியை வாரி இரைத்தபடி ஜீப்புகளும், வேன்களும் வந்து சேர்ந்து விட்டன. வந்த வேகத்தில் வேடிக்கை பார்த்தவர்களை பிடித்த வைத்து விசாரிக்கத்தொடங்கினர். தூரத்தில் நின்றவர்களையும் கையசைத்து கூப்பிடனர். அயாத்து காக்காவை நோக்கி பல கரங்கள் ஆவேசத்துடன் அருகே வாவென அசைந்தன.
புலிக்கோடிட்ட சீருடைகள். காக்காவின் கண்களில் காக்கியின் நிறம் தைத்தது. கால்கள் பரபரக்க வயலை நோக்கி ஓடத்தொடங்கினான்.அவனை விரட்டிச்சென்ற போராளிகள் வயற்பரப்பில் மத்தியில் பிடித்து விட்டனர்.
'ஏனடா ஓடினாய் என்பதற்கும் பயத்தில்தான் ஓடினேன் என்று பதில் சொல்லத்திராணியற்ற அவன் சிறு நெஞ்சு அச்சத்தால் துடித்துத்துடித்து எம்பியது.
அவன் அணிந்திருந்த 'சேர்ட்டி'னால் கரங்களிரண்டையும் முதுகுப்பின்னால் இழுத்து வைத்து கட்டியிருந்தனர்.
தியாகுவின் கழுத்தை வெட்டி துவக்கை பறித்த எதிராளியை பிடித்து விட்ட வெற்றிப்பெருமிதம் அவர்கள் கண்களில் துலங்கியது.அவனை ஜீப்பில் அள்ளிக்கொண்டு போயினர்.
ஆறாம் கட்டை புலிகளின் முகாமிற்கு பெரியம்மா நடை நடையாக அலைந்து திரிந்தா. புஹாரி கையை விரித்து விட்டார். 'நாங்கள் செய்யவில்லை' தமிழ்ச்செல்வன் ஊடகங்களுக்கு காட்டும் புலி முகம் போல் புஹாரியும் சொல்லிவிட்டார். நாங்கள் பிடிக்கவில்லை.
பெரியம்மா முந்தானையை விரித்து வானத்தை நோக்கி அழுத விழியுடன் பார்த்த பார்வை.
புஹாரி இந்திய அமைதி காக்கும் படையினரிடம் சரணடைந்ததும்,ஊருக்குள் மகிழ்ச்சியாக ,சுதந்திரமாக சுற்றியதும்,பின் அரேபிய தீபத்தில் வேலை பார்த்ததும் பெரியம்மாவை கடவுளிடம் பிடிப்பைக்கொடுக்காமல் தள்ளியிருக்கச்செய்தது என்னவோ உண்மைதான்.
முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் பரிதாபகரமாக மடிவதற்கு சில மாதங்களுக்கு முன்...
பெரியம்மா முகத்தில் மகிழச்சிப்பொங்கிப்பூரிக்க ஓடிவந்தா....
என்னவென்றேன் . முகத்தில் இனம் புரியா குதூகலம்.
மேலே கையை விரித்த அவவின் விழிகள் ஆனந்தத்தால் நனைந்திருந்தன.
பெரியம்மாவின் ஈர விழிகளையும் அன்று அவ அழுத அழுகையும் தவிர்க்க முயன்றேன் முடியவில்லை.பதினைந்து வருடங்கள் ஓடி விட்ட பின்பும் அது நெஞ்சில் தீயாக எரிகிறது என்ன ஒரு தீட்சண்யப்பார்வை.
"தம்பி புஹாரிட வூட்டுக்கதவுல குண்டு வச்சி அவன அழிச்சிட்டானுகள்,பொத்தான ஆத்துக்குள்ள உன்ட காக்காவ அடிச்சிக்கொன்று மையத்தயும் என்ட கண்ணுல காட்டாம புதச்சானே அன்டக்கி கேட்ட துஆ இப்ப பலிச்சிரி்ச்சிடா என்ட மகனே!'
அதிர்ச்சியில் நான் உறைந்து நின்றேன்.

Monday, 11 July 2011

பின் தொடரும் பிரபலங்களின் நிழல்.

விதை மழை பெருக்கெடுத்து ஓடுவதை கண்டு என்னை அச்சம் வந்து கவ்வுகிறது.
இடறி விழுகிற போது ஒரு கவிஞன் காலடியில் கிடந்து துடிக்கின்ற அளவிற்கு கவிஞர்களின் அட்டகாசம் இலங்கையை ஆட்டிப்படைக்கின்றது.
இளம் கவிஞர்களில் சிலர் விமர்சனங்களை கண்டு அச்சப்படுகின்றதை பார்க்கின்ற போது எதிரே வரும் மரணத்தைக்கண்டு விட்ட அச்சம் அவர்களின் முகத்தில் தெரிகிறது.
அதனால்தான் என்னவோ ஆளாளுக்கு தற்போது முதுகு சொரியும் விமர்சனப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
புதிதாக எழுத வருகின்றவர்களின் வாசிப்பறிவை அளவீடு செய்தல் மிகச்சிரமமாகவுள்ளது.கொழும்பில் நான் வேலைப்பார்த்த காலங்களில் ஒரு கவிதாயினி (இப்படித்தான் தன்னை சொல்லிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவர்.) அவர் எழுதிய கவிதைகளுடன் என்னை சந்திக்க வருவார். அதை புத்தகமாக போட, படாத பாடுபட்டார். என்னிடம் அதற்கு ஒரு உரையும் எழுதும் படி நடையாய் நடந்தார்.
பிரபலத்தின் கையெழுத்து எனும் முத்திரை பெரிய காரியம் அல்லவா?

அவர் கவிதைகளைப்படித்து விட்டு எனக்கு அவர் மேல் பரிதாபமே ஏற்பட்டது. இதற்கு எப்படி நான் உரை எழுதுவது. முதலில் அவர் எழுதியவைகளில் கவிதை எது ? துணுக்குகள் எது? என்பதில் ஆரம்பித்தது வில்லங்கம்.
நான் அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். நீங்கள் ஈழத்தில் அல்லது ஈழத்திற்கு அப்பால் யாருடைய கவிதைகளை அதிகம் விரும்பி வாசிப்பீர்கள் என்றேன்.
அவர் 'பே' என்று விழித்தபடி என்னை பரிதாபமாக பார்த்தார். நான் இன்னும் சரியாக யாரையும் படிக்கவில்லை சேர் என்றா. தினகரன்,மித்திரனில் வரும் கவிதைகளை படிக்கின்றேன் என்றா. அவவின் மேல் கழிவிரக்கம் சுரந்தது.
முருகையன்,சு.வில்வரத்தினம்,சேரன்,ஜெயபாலன், நுஃமான்,சன்முகம், சிவலிங்கம்,போன்ற தலைமுறையினரையும் கேட்டுப்பார்த்தேன். சோலைக்கிளி ,ரஷ்மி,நளீம்,முல்லை முஸ்ரிபா, அம்ரிதா,நபீல், சலனி, அனார். பஹீமா,அம்பை,ஆழியாள்,சிவரமணி இன்னும் எத்தனையோ பெயர்களை கேட்டுப் பார்த்தேன்.


பாழாய் போன என்னிடம் கவிதைகளை காவிக்கொண்டு வந்திருக்கின்ற அசடே குறைந்தது எனது கவிதைகளையாவது படித்தாயா என்றேன்.
முள்ளிவாய்க்காலில் பிரபாகரனின் உயிரற்ற உடலைப்பார்த்து மிரண்டு நின்ற கருணா அம்மான் போல் கவிதாயினியின் முகம் அச்சத்தில் உறையக்கண்டேன். அந்தப்பெயர்களை தான் முதன் முதலில் கேள்விப்படுவதாக வேறு வாக்கு மூலம் தந்தார்.
இலக்கியப் பத்தி எழுத்துக்களில் , மேடைகளில் இப்படி பட்டியல் போட்டு பேய்க்காட்டுவது ஒன்றும் புதிதல்லவே.
அப்படியென்றால் அம்மணீ நீங்கள் நல்ல கவிதைகளை எழுதும் திறனை இழப்பதற்கு இது ஒன்றே போதும் என்றேன்.
கையிலிருந்த கவிதை கட்டுக்களைக்காட்டி இது நல்ல கவிதைகள் இல்லையா சேர்? என்றா. விம்மி வெடிக்கும் போல் இருந்தது அவர் வட்ட விழிகள்.
இதிலே நல்ல கவிதைகள் இருக்கலாம். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளாவது தேடிப்படிக்கக்கூடாதா? வெள்ளவத்தையில் இயங்கும் தமிழ் சங்கத்தில் நிறைய புத்தகங்கள் இருக்கும் படியுங்கள் என்றேன்.
( ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்யும் திட்டத்தின் கீழ், கொள்வனவு செய்யப்பட்ட எனது நூல்களும்,என்னைப்போன்ற ஏமாளிகளின் நூல்களும் 10 வருடங்கள் கடந்தும் தமிழ் சங்கத்தில் கடன் சுமையுடன் இருக்கும் தானே?)
என்னை விட்டபாடில்லை. மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டுமாம்.
கவிதாயினியின் கவிதைகளைப்படித்து அவவின் தலைக்கு வலிக்காமல் குட்டியாகி விட்டது.
வாங்கிக்கொண்டு போனவர்தான் . என் அலுவலகப் பக்கமே தலை நீட்டவில்லை.
சில வருடங்களின் பின் கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற புத்தக விழாவில் அம்மணியின் புத்தகமும் வெளியிடப்பட்டது. ஆனால் என்னிடம் அவர் தவமிருந்து பெற்ற குட்டு இல்லாமல்.
அதை உலகக்கவிதைகளின் தரத்திற்கு பதவியுயர்வு கொடுத்து உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்து ஒரு பிரபலம் எழுதிய முன்னுரையுடன் அம்மணியின் புத்தகக்கனவு நனவாகிவிட்டது.
இனி அவர் ஈழத்தில் தவிர்க்க முடியாத கவிதை அரசியாக,இலக்கிய மேடைகளில் கொலுவிருக்கும் மரியாதைக்குரிய இராணியாக முடிசூடிக்கொள்ள முடியும்.
இப்படித்தான் பேச்சு வாக்கில் சகோதரி பாயிசா அலி சொன்னார்.
ஒரு இளம் கவிதாயினி தனது புத்தகத்தை அவவுக்கு அனுப்பிவிட்டு அதைப்பற்றி
நன்றாக எழுதுமாறு நயமாக வேண்டிக் கொண்டாராம்.
நல்லதை மட்டும் சொல்ல வேண்டும் என்று புதிதாக எழுத வரும் சிலர் நினைக்கிறார்கள். அதனால் அவர்களின் இலக்கிய வளர்ச்சி பாதிப்படைவது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போகிறது. ஆற்றுப்படுத்த வேண்டிய மூத்த எழுத்தாளர் சிலர் சகட்டு மேனிக்கு அவர்களை உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்து சூடம் ஏற்றி கொண்டாடுவதால் புதியவர்களும் தங்களை விட்டால் இலக்கியம் வளர்ப்பது யாரென்று மார் தட்டும் அளவிற்கு மாயைகளில் மயங்கிக்கிடக்கின்றனர்.
புத்தகங்களுக்கு முகஸ்துதிக்காக வழங்கப்படும் முன்னுரைகள்,மதிப்புரைகள் ஒர் இளம் எழுத்தாளின் வளர்ச்சிக்கு வெட்டும் பாரிய புதை குழி.
நாஞ்சில் நாடன் இது பற்றி ஆழமான, சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கின்றார்.

...........முன்னுரைகளின் நம்பகத்தன்மைகளை விவாதப் பொருளாக்கும் முயற்ச்சி இந்த கட்டுரை. அணிந்துரை, வாழ்த்துரை, நூன்முகம், பின்னுரைகளையும் ஒரு விரிந்த தளத்தில் முன்னுரை என்றே கொள்ளலாம். நண்பர், சீடர், கைத்தடி, எடுபிடி, முகவர், தக்கார், போஷகர் என்ற வரையறைகளுக்கு உட்பட்டு எழுதப்பெறும் முன்னுரை பலவற்றில், முன்னுரையில் மேற்க்கோளாகக் காட்டப்பட்டவை தாண்டி, புத்தகத்தில் எதுவும் இருப்பதில்லை. கவிஞர், விமர்சகர் க.மோகனரங்கன் முன்னுரை எழுதுவது முறைவாசல் தெளிப்பது போன்று ஆகிவிட்டது என்றார் ஒருமுறை.
புகழ்பெற்ற சினிமா பிரமுகர் ஒருவர் முன்னுரைக்கு பதினைந்தாயிரம் வாங்குகிறார் என்றும், அதை முன்பணமாக கொடுத்துவிட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் முன்னுரையை அவர்தான் எழுதுவார் என்பது உத்திரவாதம் இல்லை. அவரது அலுவலகம் அதைச் செய்துவிடும். வேறு பலருக்கு அவர்தம் பெயர்தாங்கி வரும் படைப்புகளையே அலுவலகங்கள் தாம் எழுதுகின்றன என்கிறார்கள். இதில் தெரியவருவது என்னவெனில் அவருக்கு இணையாக எழுத வல்லவர் கனபேர் இருக்கின்றார்கள் என்பதுதான். என்றாலும் பிரபலத்தின் கையெழுத்து எனும் முத்திரை பெரிய காரியம் அல்லவா
தொடர்ந்து படிக்க அவர் இணையத்திற்குள் நுழைந்து பாருங்கள்.

http://nanjilnadan.wordpress.com/

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...