Thursday, 18 August 2011

செல்லனின் ஆண் மக்கள்.



1990களில் முஸ்லிம்கள் உயிர் வாழ்வதற்கான உத்தரவாதமற்ற நிலை இருந்தது. 
ஆட்கள்கடத்தப்படுதல்,கப்பம்பெறல்,உயிர் அச்சுறுத்தல்,பொருளாதார அழிப்பு என பல்முனை தாக்குதல்களை எதிர்கொண்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் வாழ்ந்தது.

ஒட்டமாவடியில் இருந்து 12 மைல் தொலைவில் எனது பாட்டனின் பூர்வீக தோட்டம் இருந்தது. சுற்றி வர வயல் , மாந்தோப்பு ,கடை ,ஆட்டுப்பட்டி என விசாலமான இடம்.

90க்குப் பின் வசந்த காலங்கள் உதிர ஆரம்பித்து விட்டன.தமிழ் முஸ்லிம் உறவில் பாரிய விரிசல்களையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் விடுதலைப்புலிகளும், அவர்களின் ஊது குழலாய் செயற்பட்ட அரசியல்வாதிகளும்.
அவர்கள் போட்ட விதை இன்றும் தழைத்து வியாபித்துள்ளது வேதனையிலும் வேதனை.

ஒன்றாய் கூடி வாழ்ந்த முஸ்லிம் மக்களை புலிகள் விரட்டியடித்த போது ஊமையாய் இரத்தக்கண்ணீர் வடித்து நின்ற தமிழ் சமூகத்தின் கண்ணீர் கசகசப்பில் முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த மண்ணிலிருந்து வேருடன் பிடுங்கி எறியப்பட்டனர். 
பூர்வீகமாக வாழ்ந்த இடங்களை விட்டு, சொத்துக்களைத்துறந்து உடுத்திருந்த ஆடைகளுடன் வந்தவர்களில் எங்கள் குடும்பமும் அடங்கும்.

வயல், தோட்டம் ,கடை ,கால் நடை எல்லாவற்றையும் புலிகளுக்குத் தாரைவார்த்து விட்டு வந்துவிட்டோம். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தோம். இருக்க இடமின்றி, தொழிலின்றி ஏன் ஒரு பிடி சோறின்றியும் அலைந்தோம்.

கடவுள் இருப்பதற்கான மிகச்சிறந்த சான்றாக முள்ளிவாய்க்காலை நினைத்துப்பார்க்கின்றேன்.அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கு புலிகளின் சாவு ஒரு சரித்திரச்சான்று.

சுமார் இருபது வருடங்களுக்குப்பின் வந்த சுதந்திரத்தை சுவாசிப்போம் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால் கனவல்ல நிஜம். அந்த நாள் வந்தது.  நான் விளையாடிய என்னைத்தூக்கி வளர்த்த மண்ணில் கால் புதைத்து நிற்கின்றேன்.

பரந்த விசாலமான எங்கள் தோட்டத்தில் பல என்.ஜி.ஓக்களின் புண்ணியத்தில் முளைத்த வீடுகள். 'சோலர்'மின்சார வசதிகள். செப்பனிடப்பட்ட வீதிகள். எங்கள் இடம் என்பதற்கான அடையாளமற்ற நிலை.
இருந்தும் பரவசம். ஒவ்வொரு திடலாக ஏறிப்பார்க்கின்றேன். புளியமரம் வானளாவ உயர்ந்து கிளைபரப்பி ஏகத்திற்கும் நானே என்பது போல் நிற்கிறது.

கிணற்றடியில் நின்ற தோடைமரங்களில் இலை தெரியா காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. கிணறு தூர்ந்து போய் அடியில் ஒரு சொட்டு நீர் பளபளத்துத்தெரிந்தது.


செல்லனின் மக்கள் காணியைச்சூழவும் புதிய கல்வீடுகளில் வசித்திருப்பது தெரிந்தது. சிலரை அடையாளம் காண  முடிந்தது. சிலருக்கு என்னையும் அடையாளம் காண முடிந்தது.

செல்லர் செத்து விட்டார் என்றார்கள். சர்வசாதரமாக அம்மக்கள் இரண்டு மூன்று மனைவிகளை வைத்திருப்பர். செல்லருக்கும் மூன்று மனைவிகள்.

நான் மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு வரும்  போது செல்லன் நேர்மையான வேட்டைக்காரன், மந்திரவாதி. குலத்தலைவர் என மதிப்புப்பெற்றவர். 

எனது வாப்பாவின் தோழர்களில் மிக முக்கியமானவர். அவரின் பி்ள்ளைகளையும் அப்படித்தான் யோக்கியமாக வளர்த்து விட்டிருக்கின்றார். பிள்ளைகளில் சிலர் அப்பாவை அடியொட்டி பெண்களை எடுத்திருந்தனர். ஒரே வளவுக்குள் அதெப்படி சக்களத்திகள் சண்டை இல்லாமல் வாழ்ந்தார்கள் என்பது நினைத்துப்பார்க்கையில் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது

இழந்து போன நாங்கள் வாழ்ந்த மண் எங்கள் கைகளுக்கு திரும்ப வராது என்று நிராசையடைந்திருந்தோம். ஏனெனில் எங்கள் கடையில் தான் புலிகளின் "சென்றி பொயின்ட் "ஒன்று இருந்தது.மூன்று ஏக்கர் தோட்டத்தையும் அவர்கள்தான் பங்கு போட்டு என்.ஜீ.ஓக்களுக்கு கொடுத்திருந்தார்கள்.
எனினும் அவர்கள் கையகப்படுத்திய சிறு இடத்தில் அதனைச்சூழவும் யாரையும் குடியேற அனுமதிக்க வில்லை.பாதுகாப்புக்காரணங்களை காட்டி மக்களை அண்ட விடாமல் தடுத்திருக்கின்றார்கள்.

டவுனுக்கு வரும் செல்லனின் மக்கள் கதைகதையாய் சொன்னார்கள்.வயலை தங்கராசா செய்து கொண்டிருந்தார். புலிகளின் ஆளுகைக்குட்பட்ட அந்த மண்ணிலிருந்து வருடா வருடம் வயல் செய்கை பண்ணுவதற்கான அனுமதியை அவர் வாப்பாவிடம் பெற்றுச்செல்வார். குத்தகையும் வந்து விடும்.


புலிகள் விட்டுச்சென்ற இடத்தை பலர் ஆக்கிரமிக்க வந்தபோது இது முஸ்லிம் ஆக்களின்ற நிலம். இதையாவது நாங்க காப்பாத்தி அவர்களின்ற கைககளில் கொடுக்க வேண்டும்.என்று விரட்டியவர்கள் சூதுவாதறியா அப்பாவிகளான அவர்கள்தான்.

நாங்கள் எங்கள் நிலத்தை பார்க்கச்சென்ற போது கடை அத்திவாரம் மட்டும் இருந்தது.யுத்தமும் இனவாதமும் சப்பித்துப்பிய மீதமுள்ள எலும்புத்துண்டாக கட்டடங்களின் எச்சங்கள்.
என்னைக்கண்ட மாத்திரத்தில் தங்கராசா ஓடி வந்தான் கூடவே அவன் நாயும்.
'வந்திட்டிகளா காக்கா ! '
வார்த்தைகள் தளுதளுத்து அதரத்தில் துடித்து நின்றன.

'இத மட்டும்தான் காப்பாத்த முடிஞ்சுது , இதயும் சுருட்டிப்போக எத்தின பேரு! விடுவமா எங்கட அப்பாட ஆச இத எத்துன வருசமானாலும் உங்கட கையில ஒப்படைக்கனும்.... இப்பதான் நிம்மதி..

ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் என எங்களைச்சுற்றி பெருங்கூட்டமே கூடி நின்றது.எல்லோர் முகத்திலும் ஆச்சரியம்,புதுமை! தங்கராசா அறிமுகப்படுத்தினான்.

ஆடைகளும் உடலும்தான் அழுக்கு.. மனமோ பாற்போன்ற வெண்மை,தூய்மை இந்த மனங்களிலா இனவாத நஞ்சை விதைத்தார்கள் அதனாலென்ன தோற்றுப்போனது வினை விதைத்தவன்தானே..

வயற்பரப்பையும் எஞ்சிய தோட்டத்தின் விசாலத்தையும் பார்த்தபடி நிற்கின்றேன். செல்லனின் மக்களிலும் அந்த அப்பாவி சனங்களிலும் ஒரு கோடி மதிப்பு பல்கிப்பெருகி வழிகிறது.

உண்மையில் இது மனிதர்களும் மகாத்மாக்களும் வாழும் மண்.நான் இனி இந்த மண்ணில் வந்து புரள வேண்டும் .இவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுக்க வேண்டும். மீண்டும் என் குளத்தின் நுரைகளில் கால் புதைய ஆக்காண்டிகளின் அட்டகாசங்களை கேட்டபடி உலா வர வேண்டும்.

எனினும் ஏதோவொன்று நெஞ்சுக்குள் வந்து பாரமாக அழுத்துகிறது.அது அவநம்பிக்கையா?நிராசையா? பூ விலங்கினை அகற்ற முடியா அவசத்தில் ஆதி மண்ணின் புழுதியை மட்டும் அப்பிக்கொண்டு வீடு  திரும்புகின்றேன்.





3 comments:

  1. எனக்கும் ஞாபகம் இருக்கிறது, அந்த மரங்களை பார்க்கும் போது ஏதும் அறியா வயதில் புளிம் பழம், கூலாம் பழம் சாப்பிட்ட ஞாபகம் வருகிறது.

    கூலாம் பழ மரம் இப்போதும் இருக்கிறதோ தெரியாது

    ReplyDelete
  2. கதையை வாசித்த முடித்த போது என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கி விட்டன காலத்தால் அழியாத நினைவுகளை புரட்டியமைக்கு நன்றிகள் , நாங்கள் பிறப்பதற்கு முன்போ அல்லது எங்களது சிறு வயதிலோ இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்று இருக்கலாம் ஆனாலும் நானும் உங்களது உணர்வுகளோடு ஒன்றித்து விட்டேன்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும். அன்பின் அறபாத். இது போன்ற உங்கள் கதைகளை படிக்கும் போது, என் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீராவது விழும். இதே போன்று எனக்குள் ஆயிரம் கதைகள். உங்கள் கதைகளின் தொடராக அனைத்தையும் மீட்டிப் பார்ப்பேன். என் மரணித்த தாயை நான் மறுபடியும் சந்திக்கிறேன். என் கடந்த கால நினைவுகள் ஊடே. (நம் மண் வாசனை மறவாது, அதே தொனியுடன் எழுதுவது, நேரில் வந்து ஒருவர் சொல்லிவிட்டு செல்வது போல் இருக்கிறது.) நன்றி

    ReplyDelete

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...